“என் 21 ஆண்டுகால விவசாய அனுபவத்தில் இதுபோன்ற ஒரு நெருக்கடியை நான் சந்தித்தது கிடையாது“ என்கிறார் சித்தர்காடு கிராம தர்பூசணி விவசாயி ஏ. சுரேஷ் குமார். இப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளைப் போன்றே 40 வயதான சுரேஷ் குமாரும் பட்டத்தின் தொடக்கத்தில் நெல் பயிரிடுகிறார். குளிர் காலத்தில் தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்திலும், 1,859 பேர் வசிக்கும் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் சித்தாமூர் வட்டாரத்தில் நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து 18.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் அவற்றில் தர்பூசணி பயிரிடுகிறார்.

“தர்பூசணி 65 முதல் 70 நாட்களில் தயாராகிவிடும். அறுவடை முடிந்து பழங்களை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவற்றை அனுப்ப தயாராக இருந்தோம். மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அறிவித்துவிட்டனர்” என்கிறார் அவர். “இப்போது அவை அழுகும் நிலையில் உள்ளன. சாதாரணமாக ஒரு டன்னுக்கு ரூ. 10,000 வரை வியாபாரிகள் கொடுப்பார்கள், ஆனால் இந்தாண்டு ரூ. 2000க்கு மேல் தரக் கூட யாரும் முன்வரவில்லை.”

தமிழ்நாட்டில் தமிழ் மாதங்களான மார்கழி, தையில் தான் தர்பூசணி பயிரிடப்படுகின்றன. அதாவது டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம். இப்பருவ காலத்தில் தான் இப்பகுதியில் தர்பூசணி நன்கு விளையும். கடுமையான வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும். 6.93 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் 162.74 ஆயிரம் மெட்ரிக் டன் பழங்களை உற்பத்தி செய்து நாட்டின் தர்பூசணி அதிகம் விளைவிக்கும் மாநிலங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை தமிழ்நாடு பெறுகிறது.

“எனது வயலில் பல  இடங்களில் தர்பூசணி பயிரிட்டுள்ளேன். அவற்றை இரண்டு வார இடைவேளையில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு தயாரான பிறகு சில நாட்கள் விட்டால் கூட பழங்கள் அழுகிவிடும்” என்கிறார் குமார் (கவர் படத்தில் மேலே உள்ளவர்). “ஊரடங்கு பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, முதல் அறுவடை தயாரானபோது, (மார்ச் மாதம் கடைசி வாரம்), பழங்களை வாங்க வியாபாரிகளும், பழங்களை எடுத்துச் செல்ல லாரி ஓட்டுநர்கள் முன்வரவில்லை.”

சித்தாமூர் தொகுதியில் குறைந்தது 50 தர்பூசணி விவசாயிகள் இருக்கக்கூடும் என்கிறார் குமார். அவற்றை அறுவடை செய்யாமல் அழுகவிட வேண்டும் அல்லது மிக குறைந்த  விலைக்கு விற்க வேண்டும்.

Left: In Kokkaranthangal village, watermelons ready for harvest on M. Sekar's farm, which he leased by pawning off jewellery. Right: A. Suresh Kumar's fields in Chitharkadu village; there were no buyers or truck drivers to move his first harvest in the  last week of March
PHOTO • Rekha Sekar
Left: In Kokkaranthangal village, watermelons ready for harvest on M. Sekar's farm, which he leased by pawning off jewellery. Right: A. Suresh Kumar's fields in Chitharkadu village; there were no buyers or truck drivers to move his first harvest in the  last week of March
PHOTO • S Senthil Kumar

இடது: கொக்கரத்தாங்கல் கிராமத்தில் எம். சேகர் பண்ணையில் தர்பூசணிகள் அறுவடைக்கு தயாராகிவிட்டன. அவர் ஏற்கனவே நகைகளை அடகு வைத்து தான் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தர்பூசணி பயிரிட்டு இருந்தார். வலது: சித்தர்காடு கிராமத்தில் ஏ. சுரேஷ் குமாரின் வயலில் மார்ச் கடைசி வாரத்தில் விளைந்த தர்பூசணிகளை வாங்குவதற்கு வியாபாரிகளும், பழங்களை எடுத்துச் செல்வதற்கு லாரிகளும் கிடைக்கவில்லை

ஏற்கனவே கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சித்தர்காடு கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொக்கரத்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் 45 வயதாகும் எம். சேகரும் அவர்களில் ஒருவர். “என் மூன்று மகள்களின் நகைகளை அடகு வைத்து தான் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தர்பூசணி பயிரிட்டேன். அறுவடைக்கு தயாராக இருக்கும்போது வாங்குவதற்கு வியாபாரிகள் இல்லை. மற்ற பயிர்களைப் போன்று இவற்றை விட்டுவைக்க முடியாது. பறித்து வேறு இடத்திற்கு அனுப்பி வைக்காவிட்டால் அனைத்தும் அழுகிவிடும் ” என்றார் அவர்.

குமார், சேகர் இருவருமே கந்துவட்டி காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி நிலத்தில் முதலீடு செய்துள்ளனர். நிலத்தை குத்தகை எடுத்தது, விதைகளை வாங்கியது, விவசாய தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுத்தது என இருவரும் தலா ரூ. 6-7 லட்சம் வரை தங்களின் நிலத்தில் முதலீடு செய்துள்ளனர். சேகர் மூன்று ஆண்டுகளாகவும், குமார் 19 ஆண்டுகளாகவும் தர்பூசணி விவசாயம் செய்து வருகின்றனர்.

“என் மகளின் கல்வி, எதிர்காலத்திற்கு உதவும் என்ற நோக்கத்தில் தர்பூசணி விவசாயத்தை செய்து வருகிறேன். இப்போது என்னிடம் அவர்களின் நகை கூட இல்லை. வழக்கமாக அனைத்து செலவீனங்களும் போக ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். இந்தாண்டு முதலீட்டில் சிறுதொகை அளவு தான் கிடைத்துள்ளது, இதில் லாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்கிறார் சேகர்.

“பழங்கள் அழுகிப் போவதை நான் விரும்பவில்லை, ஏற்கனவே கடுமையான இழப்புதான், இருந்தாலும் பரவாயில்லை என்று தான் குறைந்த விலைக்கு விற்க சம்மதிக்கிறேன்” என்கிறார் கொக்கரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தர்பூசணி விவசாயியான 41 வயதாகும் எம். முருகவேல். இவர் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தர்பூசணி பயிரிட்டுள்ளார். “இதே நிலை நீடித்தால் நிலைமை என்னவாகும் எனத் தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் என்னைப் போலவே பல விவசாயிகள் நிலத்தில் முதலீடு செய்துவிட்டு வியாபாரிகள் கிடைக்காததால் தர்பூசணிகளை அழுகவிட்டு வருகின்றனர் ” என்கிறார் முருகவேல்.

A farmer near Trichy with his watermelons loaded onto a truck. A few trucks are picking up the fruits now, but farmers are getting extemely low prices
PHOTO • Dept of Agriculture-Tamil Nadu
A farmer near Trichy with his watermelons loaded onto a truck. A few trucks are picking up the fruits now, but farmers are getting extemely low prices
PHOTO • Dept of Agriculture-Tamil Nadu

திருச்சி அருகே விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த தர்பூசணிகளை லாரியில் ஏற்றினார். இப்போது சில லாரிகள் வருகின்றன. ஆனால் மிக சொற்ப விலையே விவசாயிகளுக்குக் கிடைக்கிறது

“ஊரடங்கின் முதல் இரண்டு நாட்கள் போக்குவரத்து இல்லை. நாங்கள் விவசாயிகளை கண்டறிந்து வருகிறோம். விரைவிலேயே மாநிலத்தின் அனைத்து சந்தைகளுக்கும் பழங்களை கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறோம். முடிந்தால் அண்டை மாநிலங்களுக்கு கூட அனுப்பி வைக்க முயற்சிக்கிறோம்” என்கிறார் வேளாண் உற்பத்தி ஆணையரும், வேளாண்மைத் துறையின் (தமிழ்நாடு) முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி.

பேடி அளிக்கும் தரவுகளின்படி, மார்ச் 27 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை சித்தாமூர் வட்டாரத்திலிருந்து 978 மெட்ரிக் டன் தர்பூசணி தமிழ்நாட்டின் பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. “ எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம், இந்த நெருக்கடியான நேரத்தில் தர்பூசணி விற்பனை இந்த அளவிற்கு சரிந்துள்ளதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை” என்கிறார் அவர்.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பை ஈடுகட்ட மாநில அரசு எதுவும் நிவாரணம் அளிக்குமா? “இப்போது வரை நாங்கள் அறுவடை செய்யப்பட்ட பழங்களை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கும் போக்குவரத்து பணிகளின் மீது கவனம் செலுத்தி வருகிறோம். நிவாரணம் அளிப்பது என்பது அரசியல் முடிவு என்பதால் இதுபற்றி பின்னர் ஆராயப்படும். இந்த நெருக்கடியிலிருந்து விவசாயிகளை மீட்பதில் நாங்கள் இயன்றவற்றை செய்து வருகிறோம்” என்று பதிலளிக்கிறார் பேடி.

குறைந்த அளவிலான லாரிகளே பழங்களை ஏற்றுவதற்கு வருவதாக சித்தாமூர் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ சில பழங்களை மட்டும் எடுத்துச் செல்வதால் மற்றவை அழுகி வருகின்றன. வாங்கிய பழங்களுக்கும் மிக குறைவான பணம் தான் கிடைக்கிறது. நகரங்களில் மக்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார் சுரேஷ் குமார்.

தமிழில்: சவிதா

Sibi Arasu

Sibi Arasu is an independent journalist based in Bengaluru. @sibi123

यांचे इतर लिखाण Sibi Arasu
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

यांचे इतर लिखाण Savitha