மன்னரின் சகாவாகவும் உதவியாளராகவும் ஆலோசகராகவும் அவரிருந்த காலம் ஒன்று இருந்தது. காதல் மற்றும் உணவு பற்றியக் கதைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். நீதிமன்றத்தின் உயிர் அவர். என்ன தவறு அவர் செய்தார்? எப்போது அவை எல்லாம் நடந்தது? மன்னனுடனான உறவு திடுமென திசைமாறிப்போனதை இருட்டுச் சிறையிலிருந்து சிந்தித்திக் கொண்டிருக்கிறான் விதூஷகன். மன்னருக்கு ஏன் கோபம் வந்தது? அவனுக்கு அவர் விளக்கம் தர வேண்டாமா? இருவரின் உறவும் முறிந்துவிட்டதா? அவனுடைய அதிர்ஷ்டம் தலைகீழாக திரும்பி விட்டதை நினைத்து சிரிக்கும் நிலையில் அவனில்லை.
தலைநகரத்தில் சூழல் பெருமளவு மாறிவிட்டது. பிளாட்டோவின் குடியரசோ ஓசனியாவோ இந்தியாவோ, எந்த இடம் என்பது பிரச்சினை இல்லை. எல்லா வகைப் புன்னகைகள எல்லா இடங்களிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும் என்கிற மன்னரின் உத்தரவுதான் பிரச்சினை. கிண்டல், நகைச்சுவைகள், கேலி, தொடர்கள், பொம்மைப்படங்கள், வேடிக்கைப் பாடல்களும் புத்திசாலித்தனமான சொல்லாடல்களும் கூட தடை செய்யப்பட்டுவிட்டன.
அரசு அங்கீகரித்த வரலாறுகள், தலைவர்களின் சுயசரிதைகள் ஆகியவற்றைத் தாண்டி, சரியான கடவுளரையும் சான்றிதழளிக்கப்பட்ட தேசபக்தி நாயகர்களையும் பற்றிய (புன்னகைப் போலீஸால் தணிக்கை செய்யப்பட்ட) காவியங்கள் மட்டுமே விரும்பத்தக்கவை. மனதை ஊக்குவிக்கிற, லட்சியங்களை தூண்டி விடுகிற எதுவும் அனுமதிக்கப்படாது. சிரிப்பு என்பது முட்டாள்களுக்கானது. நீதிமன்றங்களிலிருந்தும் தியேட்டர்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் தொலைக்காட்சியிலிருந்தும் புகைப்படங்களிலிருந்தும் குழந்தைகளின் முகங்களிலிருந்தும் புன்னகைகள் அழிக்கப்பட வேண்டும்.



