தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள குடும்பத்தினர் தொடர்ந்து அழைப்பதாக சோமா கடலி சொல்கிறார். “நான் நன்றாகவே இருப்பேன்,” என அந்த 85 வயதுக்காரர் அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.
அகோலே தாலுகாவின் வராங்குஷி கிராமத்தை சேர்ந்த விவசாயியான அவர், மகாராஷ்டிராவின் அகமது நகரின் அகோலேவிலிருந்து லோனி வரையிலான விவசாயிகளின் மூன்று நாட்கள் (ஏப்ரல் 26-28) நடைபயணத்தில் பங்கேற்க வந்திருக்கிறார். “என் மொத்த வாழ்க்கையையும் வயல்களில்தான் கழித்தேன்,” என்கிறார் அவர் வயதானாலும் அங்கிருக்க வேண்டிய அவசியத்தை விளக்கி.
2.5 லட்ச ரூபாய் கடனில் இருக்கும் அவர் சொல்கையில், “70 வருடங்கள் செய்தும் விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாமலிருப்பேன் என நான் நினைத்ததில்லை.” மகாதேவ் கோலி ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த கடலிக்கு அவரது கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. தற்காலத்தில் வானிலை அடைந்திருக்கும் நிச்சயமற்றதன்மையை முன்னெப்போதும் பார்த்ததில்லை என்கிறார் அவர்.
“எனக்கு மூட்டு வலி இருக்கிறது. நடந்தால் மூட்டு வலிக்கும். காலையில் விழிக்க வேண்டுமென தோன்றாது. ஆனாலும் நானும் நடப்பேன்,” என்கிறார் அவர்.
ஏப்ரல் 26, 2023 அன்று அகோலேவிலிருந்து தொடங்கிய மூன்று நாள் போராட்ட ஊர்வலத்தில் பங்குபெறவிருக்கும் 8,000 விவசாயிகளில் கடலியும் ஒருவர். ஊர்வலம் சங்கம்னெர் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது விவசாயிகள் நிறைந்த லாரிகளும் பேருந்துகளும் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து இந்திய விவசாய சங்கத்தின் (AIKS) கணக்குப்படி, அதே நாளின் மாலை ஊர்வலம் அங்கு எட்டும்போது 15,000 பேர் கொண்ட ஊர்வலமாக ஆகியிருக்கும்.
அனைத்து இந்திய விவசாய சங்கத்தின் தலைவரான டாக்டர் அஷோக் தவாலே மற்றும் பிற நிர்வாகிகள் தலைமை தாங்கிய பெரும் பொதுக் கூட்டம் மாலை 4 மணிக்கு அகோலேவில் நடந்து முடிந்த பிறகு நடைபயணம் தொடங்கியது. விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மூன்று நாட்களும் ஊர்வலத்தில் பங்கு பெறவிருக்கும் மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்தான் முதல் பேச்சாளர். முன்னணி பொருளாதார அறிஞர் டாக்டர். ஆர்.ராம்குமார் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க (AIDWA) பொதுச் செயலாளர் மரியம் தவாலே ஆகியோரும் கூட்டத்தில் பேசினர்.
“வாக்குறுதிகள் எங்களுக்கு அலுத்து போய்விட்டது,” என்கிறார் AIKS-ன் பொதுச் செயலாளரான அஜித் நவாலே. அந்த அமைப்புதான் போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறது. “வாக்குறுதிகள் அமல்படுத்தப்பட வேண்டும்.”
ஊர்வலம் ஏப்ரல் 28ம் தேதி லோனியிலிருக்கும் மகாராஷ்டிராவின் வருவாய்த்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணா விகே பாடிலின் வீட்டில் முடிவடையும். 39 டிகிரி செல்சியஸை தொடும் கடுமையான வெயிலிலும் கூட பல மூத்த குடிமக்கள் போராட்டத்தில் இணைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் இருக்கும் விரக்தியையும் கோபத்தையும் காட்டுவதாக இருக்கிறது.
'வாக்குறுதிகள் எங்களுக்கு அலுத்து போய்விட்டது,' என்கிறார் போராட்டங்களை ஒருங்கிணைத்த AIKS-ன் பொதுச் செயலாளர் அஜித் நவாலே. 'வாக்குறுதிகள் அமல்படுத்தப்பட வேண்டும்'
வருவாய்த்துறை
அமைச்சரின் வீடு நோக்கி தீர்க்கமாக அணிவகுத்து செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின்
காட்சி மாநில அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. வருவாய், பழங்குடி மற்றும் தொழிலாளர்
துறைகளை சேர்ந்த மூன்று அமைச்சர்கள், கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரவிருக்கின்றனர்.
ஆனால் பார்தி மங்கா போன்றோரை ஏய்த்துவிட முடியாது. ”இது எங்களின் உரிமைகளுக்கானது. எங்களின் பேரக் குழந்தைகளுக்கானது,” என்கிறார் எழுபது வயதுகளில் இருக்கும் விவசாயியான அவர். பால்கர் மாவட்ட இபத்படா கிராமத்திலிருந்து 200 கிலோமீட்டர் பயணித்து விவசாயப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்.
மங்காவின் குடும்பத்தினர் வர்லி சமூகத்தை சேர்ந்தவர்கள். இரண்டு ஏக்கர் நிலத்தில் அவர்கள் பல தலைமுறைகளாக விவசாயம் பார்த்து வருகின்றனர். ஆனால் அந்த நிலம், வனநிலமாக வரையறுக்கப்பட்டு அவர்களுக்கான உரிமை அங்கு இல்லாமலாக்கப்பட்டது. “நான் இறப்பதற்கு முன், என் குடும்பம் அந்த நிலத்துக்கு உரிமை கொள்வதை நான் பார்த்துவிட வேண்டும்,” என்கிறார் அவர்.
மூன்று நாட்களுக்கு எத்தனை ரொட்டிகளை கட்டி வந்தார் என்பதை அவர் மறந்து விட்டார். “அவசரமாக நான் உணவு கட்டினேன்,” என விளக்குகிறார். உரிமைகளுக்காக மீண்டும் ஊர்வலம் செல்லும் விவசாயிகளில் தானும் ஒருவர் என்பது மட்டுமே அவருக்கு உறுதியாக தெரிந்திருந்தது.
ஆயிரக்கணக்கான
விவசாயிகள் இங்கு திரண்டிருப்பது புதிதொன்றுமில்லை. பெரும்பாலும் பழங்குடி விவசாயிகள்
நிறைந்திருந்து 2018ம் ஆண்டில் நாசிக் முதல் மும்பை வரை நடந்த விவசாய நெடும்பயணம் தொடங்கி, அரசுடன் விவசாயிகள் ஒரு தொடர் போராட்டத்தில் இருக்கின்றனர்.
(வாசிக்க:
The march goes on…
)
அதிகரித்து
வரும் இடுபொருள் செலவுகள், சரியும் பயிர் விலைகள் மற்றும் கால நிலை மாற்றம் ஆகியவை
சேர்ந்து அதிகரித்து வரும் பயிர்க் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய விவசாயிகள் விரும்புகின்றனர்.
விளைச்சல் காலம் முடிந்தபிறகும் அவர்களால் லாபத்தை எடுக்க முடிவதில்லை. கடந்த இரு மழைக்காலங்களிலும்
இருந்த அதிக மழைப்பொழிவினால் ஏற்பட்ட
பயிர் இழப்பு
க்கான நிவாரணத்தை அவர்கள் கோருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மாநில அரசாங்கம் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.
மகாராஷ்டிராவின் பழங்குடி மாவட்டங்களில் வன உரிமை சட்டம் சரியாக செயல்படுத்தப்பட வேண்டுமென ஆதிவாசி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
கோவிட் தொற்று பரவலுக்கு பிறகு ஒரு லிட்டர் பாலை 17 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும் பால் விவசாயிகளின் நஷ்டங்களை ஈடுகட்டவும் அரசாங்கம் தலையிட வேண்டுமென விவசாய செயற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர்.
அகோலே
தாலுகாவின் ஷெல்வ்ஹிரே கிராமத்தில் விவசாயியான குல்சந்த் ஜாங்க்ளே மற்றும் அவரது மனைவி
கவுசாபாய் ஆகியோர் அவர்களின் நிலத்தை விற்க வேண்டி வந்திருக்கிறது. எழுபது வயதுகளில்
அந்த தம்பதி, விவசாயக் கூலி வேலை செய்கின்றனர். மகனை விவசாயத்திலிருந்து வெளியேற்றியிருக்கின்றனர்.
“புனேவில் அவர் தொழிலாளராக பணிபுரிகிறார்,” என பாரியிடம் சொல்கிறார் ஜாங்க்ளே. “விவசாயத்தை
விட்டு போகும்படி அவரிடம் சொன்னேன். அதற்கு எதிர்காலம் இல்லை.”
ஜாங்க்ளே நிலத்தை விற்றபிறகு, அவரும் கவுசாபாயும் மாடுகளை வளர்த்து பால் விற்கின்றனர். “கோவிட் தொற்றுக்கு பிறகு பிழைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் அவர்.
ஊர்வலத்துக்கு
வர வேண்டுமென உறுதி கொண்ட அவர், “போராட்டத்தில் பங்குபெறவென என் தினக்கூலியை மூன்று
நாட்களுக்கு உதறிவிட்டேன். இந்த வெயிலில் என் வயதில் மூன்று நாட்கள் நடந்தபிறகு உடனடியாக
வேலைக்கு செல்ல முடியாது. ஐந்து நாட்கள் ஊதியம் போனதாக வைத்துக் கொள்ளுங்கள்,” என்கிறார்.
ஆனால்
அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானோரை போல அவரும் தன் குரல் கேட்கப்பட வேண்டுமென விரும்புகிறார்.
“ஆயிரக்கணக்கான விவசாயிகள் தோளோடு தோள் சேர்ந்து ஊர்வலம் செல்வதை பார்க்கையில், உங்களை
பற்றி உங்களுக்கே நல்லவிதமாக தோன்றும். நம்பிக்கை தோன்றும். அரிதாகதான் இத்தகைய அனுபவம்
எங்களுக்கு நேரும்,” என்கிறார்.
பின்குறிப்பு:
ஊர்வலத்தின் இரண்டாம் நாளான ஏப்ரல் 27, 2023 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாடில், தொழிலாளர் துறை அமைச்சர் சுரேஷ் காடே மற்றும் பழங்குடி மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஜய்குமார் காவிட் ஆகிய மூன்று அமைச்சர்களையும் சங்கம்னெரில் விவசாயத் தலைவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் பற்றி விரிவாக உரையாட மகாராஷ்டிர அரசாங்கம் அவசரமாக அனுப்பி வைத்தது.
தீர்வு காணுவதற்கான பெரும் அழுத்தத்திலும் பழங்குடி விவசாயிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட 15,000 பேர் லோனியிலுள்ள வருவாய்த்துறை அமைச்சர் வீட்டை நோக்கி செல்லும் ஆபத்தாலும், கிட்டத்தட்ட எல்லா கோரிக்கைகளையும் அவர்கள் மூன்று மணி நேரத்தில் ஏற்றுக் கொண்டனர். போராட்டம் தொடங்கிய ஒருநாளிலேயே தீர்வு எட்டப்பட்டதால் அனைத்து இந்திய விவசாய சங்கமும் (AIKS) பிற அமைப்புகளும் போராட்ட ஊர்வலத்தை நிறுத்தியிருக்கின்றன.
தமிழில் : ராஜசங்கீதன்