யானையின் காதுகளை கொண்ட அரசன் குஜராத்தியில் எனக்கு மிகவும் பிடித்த சிறுவர் கதை. முதலில் அதை என் தாயிடம்தான் கேட்டேன். பிறகு அதன் பல்வேறு வடிவங்களை கேட்டிருக்கிறேன். தற்போது ஒன்றைக் கிஜுபாய் பதேகாவின் குழந்தைகளுக்கான சிறுகதைகளிலும் படித்துக் கொண்டிருக்கிறேன். பதேகாவின் தொகுதி உலகின் பல நாட்டுப்புறக் கதைகளை கொண்ட தொகுதி. அதிலிருக்கும் அரசனின் கழுதைக் காதுகள் கதையிலிருந்து அரசனின் யானைக் காதுகள் கதையும் தோன்றியிருக்கலாம்.
காட்டில் தொலைந்து பசியில் ஒரு குருவியின் கழுத்தை முறித்து உண்ட ஓர் அரசனின் கதை அது. அதனால் கிடைத்த சாபத்தில் அரசனுக்கு மிகப் பெரிய யானையின் காதுகள் உண்டாகி விடுகின்றன. அரண்மனையில் மிச்ச நாட்கள் முழுவதையும் வெவ்வேறு துணிகள் மற்றும் துண்டுகள் கொண்டு குடிமக்களின் பார்வையிலிருந்து தன் காதுகளை மறைப்பதில் கழிக்கிறான். ஆனால் நீண்டு வளர்ந்து விட்ட முடியையும் தாடியையும் வெட்ட முடிதிருத்துபவனை அழைக்க வேண்டிய நேரம் வருகிறது.
அரசனின் காதுகளைப் பார்த்து முடி திருத்துபவன் அதிர்ச்சி அடைகிறான். அதிகமாக வளர்ந்த அவனது காதுகள் பற்றிய தகவல் கசிந்து விடும் அபாயம் நேர்கிறது. சக்தி வாய்ந்த அரசன் பணிவான அந்த முடி திருத்துபவனை மிரட்டி காதை பற்றி எவரிடமும் பேசக் கூடாதென தடை விதித்து விடுகிறான். ஆனால் முடி திருத்துபவர்கள் இயல்பிலேயே அதிகம் பேசுபவர்கள். ரகசியம் பாதுகாக்கத் தெரியாதவர்கள். எனவே அரசனின் முடி திருத்துபவன், ரகசியத்தை காக்க முடியாமல் சென்று காட்டிலுள்ள ஒரு மரத்திடம் ரகசியமாக சொல்லி விடுகிறான்.
அந்த மரம் ஒரு மரவெட்டியை எதிர்கொண்டதும் அரசனின் யானைக் காதுகள் பற்றி பாட்டு பாடுகிறது. மந்திரம் நிறைந்த அந்த மரத்தை மரவெட்டி தண்டோரா செய்பவன் ஒருவனுக்கு விற்று விடுகிறான். அவன் அந்த மரத்தை வைத்து ஒரு தண்டோரா செய்கிறான். அந்த தண்டோரா வாசிக்கும் ஒவ்வொரு நேரமும் அதே பாடலை திரும்பத் திரும்பப் பாடுகிறது. தெருக்களில் அந்த தண்டோரா வாசிப்பவன் நேராக அரசனுக்கு முன் இழுத்துச் செல்லப்படுகிறான். என்னுடைய நினைவின்படி, தனக்கான சாபத்திலிருந்து விமோசனம் அடைய பறவைகள் சரணாலயம் ஒன்றை அமைக்க வேண்டுமென அந்த அரசன் தெரிந்து கொள்வதாக இருக்கும்.



