இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா சேறும், சகதியுமாகச் சறுக்குகிறது. அந்தப் பூங்காவே நடப்பதற்கு ஆபத்தானதாக இருக்கிறது. சக்குபாய் கிஷோர் கீழே விழுந்து, அவரின் காலில் அடிபட்டு விட்டது. ஓரிரு பற்கள் மட்டுமே மிஞ்சியிருக்கும் பொக்கைவாய் நிறைய அவர் சிரித்தபடியே, ''என்னோட தேவர் (கடவுள்) உடைய பாதங்களைத் தொடுறதுக்காக இங்கே வந்திருக்கேன். என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் இங்க வந்துட்டே இருப்பேன். என் கையும், காலும் ஓயுற வரை வருவேன். என் கண்ணு தெரியுற வரை, நான் இங்கே வந்துட்டே இருப்பேன்.' என்கிறார்.
சக்குபாய் மட்டுமல்ல அங்கே கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கடவுள் டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர். சக்குபாய் அவர்கள் நவ் பௌத்த தலித் ஆவார். ஜல்கான் மாவட்டத்தின் புஷாவல் கிராமத்தில் இருந்து எழுபது வயதிலும் அம்பேத்கரின் நினைவுநாள் அன்று அஞ்சலி செலுத்த டிசம்பர் ஆறு, புதன்கிழமை அன்று சக்குபாய் வந்துவிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைச் செதுக்கிய தலைமை சிற்பியான அம்பேத்கர் தாதரில் உள்ள சைத்ய பூமியில் 1956-ல் புதைக்கப்பட்டார். அங்கும், அதற்கு அருகில் உள்ள சிவாஜி பூங்காவிலும் அவரின் நினைவு நாளன்று ஆயிரக்கணக்கான தலித் சமூக மக்கள் பெருவெள்ளமென ஒன்று கூடுகிறார்கள். அம்பேத்கர் இந்தியாவின் தலைசிறந்த சீர்த்திருத்தவாதிகளில், தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அயராமல் குரல் கொடுத்த அந்த உயர்ந்த ஆளுமைக்குத் தங்களுடைய மரியாதையைச் செலுத்த மக்கள் இங்கே ஒன்று கூடுகிறார்கள். இந்த இடத்திற்குப் பேருந்துகள், தொடர்வண்டிகளில் பயணித்து வருகிறார்கள். இன்னும் பலர் நெடுந்தூரம் நடந்தே நினைவிடத்தை வந்தடைகிறார்கள். மும்பை, மகாராஷ்டிராவின் கிராமங்கள், நகரங்கள் ஏன் பிற மாநிலங்களில் இருந்து கூட நாட்கணக்கில் பயணித்து மக்கள் வருகிறார்கள். அவர்களின் கண்களில் அம்பேத்கரின் மீதான மரியாதை, நன்றியுணர்வு, அன்பு ஒளிர்கிறது.












