"எங்களால் மூச்சுவிட முடியாது” என்கின்றனர், அந்தப் பணியாளர்கள்.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் இவர்கள், வேலைசெய்கின்றனர். வியர்வையால் அனைவரின் முகக்கவசமும் நனைந்துபோகின்றன. நெல்குவியலிலிருந்து கிளம்பும் தூசினால் அவர்களின் உடம்பு முழுவதிலும் நமைச்சலை ஏற்படுத்துகிறது; தொடர்ச்சியாக மூக்கு ஒழுகும்படியும் செய்கிறது; இருமலையும் உண்டாக்குகிறது.
பத்து மணி நேரத்தில் 3,200 கோணிப்பைகளை அவர்கள் சுமைவாகனங்களில் ஏற்றவேண்டும்; அதற்கு முன் கோணியில் நெல்லை நிரப்பி, அதை எடைபோட்டு, தைத்து, வண்டிவரை சுமந்துசெல்லவேண்டும். இதற்குள் அவர்கள்தான் எத்தனை முகக்கவசங்களை மாற்றமுடியும்? எத்தனை முறைதான் அவர்களால் கையையும் முகத்தையும் கழுவமுடியும்? எத்தனை தடவைதான் அவர்கள் முகத்தை மூடிக்கொண்டே இருக்கமுடியும்?
ஒரு நிமிடத்துக்கு 213 கி.கி. அதாவது 128 டன் நெல்லை 43-44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 48 தொழிலாளர்கள் சேர்ந்து மூட்டைகட்டி அனுப்பவேண்டும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் இந்தப் பணி, மதியம் 1 மணிக்கு முடிவடையும். குறைந்தது 9 மணி முதல் நான்கு மணி நேரமாவது கடுமையான வெயிலிலும் ஈரப்பதமில்லாத சூழலிலும் அவர்கள் வேலைசெய்தாகவேண்டும்.
முகக்கவசம் அணிவதும் நபர்களுக்கு இடையே இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் உகந்ததே என்றாலும், நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும்போது அது செய்ய இயலாததாகவும் இருக்கிறது. படத்தில் காட்டப்படுவது, கங்கல் மண்டலத்தில் உள்ள கங்கல் கிராமத்தின் கொள்முதல் நிலையம் ஆகும். தெலுங்கானா முழுவதும் இப்படி 7ஆயிரம் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன என்று மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி கடந்த ஏப்ரலில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
இந்த வேலைக்காக அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும்? குழுவுக்கு 12 பேர் என்கிறபடி நான்கு குழுக்களாக அவர்கள் பணியாற்றுகிறார்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு சராசரியாக 900 ரூபாய் கிடைக்கும். ஆனால், ஒருநாள் விட்டு ஒரு நாள்தான் இந்த வேலை கிடைக்கும்! ஒன்றரை மாத கொள்முதல் காலத்தில் ஒவ்வொரு பணியாளருக்கும் 23 நாள் வேலை அதாவது 20,750 ரூபாய் ஊதியம் கிடைக்கும்.
இந்த ஆண்டு குறுவை போக நெல் கொள்முதல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. கோவிட்-19 பொதுமுடக்கக் காலமான மார்ச் 23 முதல் மே 31வரை இந்தக் கொள்முதலும் தொடர்ந்தது.
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்