“இந்த [உச்ச நீதிமன்ற] உத்தரவு எங்களுக்கு எதிரான வன்முறையை அதிகரிக்கவே செய்யும்!”
சரோஜா சுவாமி சொல்வதைக் கேளுங்கள். ஏப்ரல் 2ஆம் தேதி மும்பையில் ஆக்ரோஷத்துடன் போராட திரண்ட தலித்துகளின், பழங்குடியினரின், நாடெங்கும் போராடிய லட்சக்கணக்கானவர்களின் கோபத்தை அவர் பிரதிபலிக்கிறார்.
“குதிரையேற்றம் செய்ததற்காக தலித் சிறுவன் கொல்லப்படும் காலத்தில் தான் இப்போதும் நாம் வாழ்கிறோம்,” என்கிறார் மத்திய மும்பையின் தாதரில் உள்ள கொட்வால் உத்யானிலிருந்து சிவாஜி பூங்கா அருகே சைத்யா பூமி நோக்கி போராட்டக்காரர்களை நடத்திச் செல்லும் 58 வயதாகும் அரசியல் செயற்பாட்டாளர் சுவாமி.
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989ன் கீழுள்ள சில விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் மார்ச் 20 ம் தேதி அளித்த தீர்ப்பால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக அரசு ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டால் நியமன அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பிறகே அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
மேலும், குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்லது அற்பமானவை என்பதை தீர்மானிக்க ஒரு காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்த நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறை வழக்குகள் சுமார் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக என்சிஆர்பி தரவுகள் காண்பிக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்படும் விகிதம் என்பது மிக குறைவாக 2-3 சதவீதம் மட்டுமே உள்ளன.
“இதுபோன்ற காலத்தில் எப்படி இத்தகையை உத்தரவை அளிக்க முடியும்?” என கேட்கிறார் சுவாமி. “பட்டியல் இனத்தினர் என்பதற்காக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர், எங்கள் சாதி காரணமாக வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. கிராமத்தில் பொது கிணற்றைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு பாகுபாட்டை அன்றாடம் சந்திக்கிறோம்.”
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளின் பின்னணியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான கருத்து வேறுபாடுகளும் காரணமாகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) கருத்துப்படி, பட்டியல் இனத்தினருக்கு எதிரான குற்றங்கள் / வன்கொடுமைகள் 2015ஆம் ஆண்டில் 38,670 லிருந்து 2016ஆம் ஆண்டில் 40,801 ஆக (5.5 சதவீதம்) உயர்ந்துள்ளது. பட்டியல் பழங்குடியினருக்கு எதிராகவும் இதேபோன்று 4.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படுபவர்களின் விகிதமும் 2-3 சதவீதமாக இருப்பதும் பட்டியல் இனத்தினர், பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதியை இன்னும் கூர்மைப்படுத்துகிறது.
2016 அக்டோபர் மாதம், “இன்றும்கூட நம் தலித் சகோதரர்களை குறிவைத்து நடத்தப்படும் நிகழ்வுகளை நினைத்து அவமானத்தில் தலைகுனிவதாக” பிரதமர் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் அவரது அரசின் கீழ் இதுபோன்ற சம்பவங்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன.
தாதரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாந்தூப் புறநகரில் வசிக்கும் சரோஜா பேசுகையில், மோடி அரசின் கீழ் பட்டியல் இனத்தவர்களின் நிலை மோசமடைந்து வருகிறது. “ரோஹித் வெமுலாவின் குற்றம் என்ன?” என அவர் கேட்கிறார். “உனா போராட்டம் ஏன் நிகழ்ந்தது? பட்டியல் இனத்தவர்களும் மனிதர்கள்தான்.”
முனைவர் பட்டம் படித்து வந்த இளம் தலித் மாணவருக்கு நிதியுதவியை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் ரத்து செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் 2016 ஜனவரி மாதம் ரோஹித் வெமுலா வழக்காக வெடித்தது. தலித்துகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கு எதிராக வளாகத்திலேயே இடதுசாரி அமைப்பின் செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சரோஜாவைப் போன்று பாந்தூப்பின் வணிகவியல் மாணவியான 16 வயது மனிஷா வாங்கடேவும் கொந்தளித்துள்ளார். அவர் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் தேசத்திற்கு அளித்த அரசியலமைப்பு அச்சுறுத்தலில் உள்ளது என்கிறார். “நாங்கள் அரசியலமைப்பை பின்பற்றி இருந்தால் சம்பாஜி பிடே [கொரேகான் பீமா வன்முறையால் அறியப்பட்டவர்] சிறைக்குச் சென்றிருக்க வேண்டும்,” என்கிறார் அவர். “இதுபோன்ற தீய சக்திகளை மோடி அரசு ஊக்கமளிக்கிறது. அம்பேத்கரை பேருக்கு பாராட்டுகிறவர்கள், அவர் இயற்றிய அரசியலமைப்பை அவமதிக்கின்றனர். அரசியலமைப்பு வீழ்ந்துவிடவில்லை ஆனால் அரசுதான் இதைச் செய்கிறது.”
அவர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் தலித்துகள் மீதான தாக்குதல் மோசமடைந்து வருகிறது. 2016 ஜூலை மாதம் குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா நகரில் நான்கு தலித் இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக கசையால் அடிக்கப்பட்டது தேசிய அளவில் போராட்டங்களைத் தூண்டியது. இறந்த கால்நடைகளின் தோலை உரித்ததுதான் அவர்கள் செய்த குற்றம்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் கோரேகான் பீமாவில் ஆதிக்க சாதியினர் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தி மூன்று மாதங்களே ஆகின்றன. ஆங்கிலேய இராணுவத்தில் 1818ஆம் ஆண்டு இருந்த மஹர் வீரர்கள் உயர்சாதியினரான பெஷ்வா தலைமையிலான மராத்தா படையை வீழ்த்திய நிகழ்வை தலித்துகள் அங்கு பெருந்திரளாக திரண்டு ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.
அனைத்து வன்முறைச் சம்பவங்களும், இழைக்கப்பட்ட அநீதிகளும் மும்பையில் போராட்டம் நடத்தியவர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்துள்ளன. சைத்யா பூமியை அடைந்தபோது தலைவர்கள் பாடல்களைப் பாடி, முழக்கங்களை எழுப்பி உரையாற்றினர். அவர்களில் ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் சுதாகர் சுரத்கர் மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.
வன்கொடுமை சட்டம் குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் சுராத்கர். “காவல்துறையினரும் புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் திருப்தி தருவதில்லை. இந்த அமைப்பில் ஒவ்வொருவரும் தங்களது பணிகளை தட்டிக் கழிக்கின்றனர்.”
மும்பை பேரணியில் பெருந்திரளாக மக்கள் கூடவில்லை. எனினும் இந்தியாவின் வடமாநிலங்களில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. நாடெங்கும் அன்று நிகழ்ந்த பல்வேறு போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்: மத்திய பிரதேசத்தில் ஐந்து பேர், உத்தர பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் தலா ஒருவர். குஜராத்திலும், பஞ்சாபிலும்கூட வன்முறை வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் 1,700 கலவர தடுப்பு காவல்துறையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். தலித்துகள், பழங்குடிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமுள்ள மாநிலங்களில் போராட்டமும் தீவிரமாக நடைபெற்றன.
தாதரில் நில அபகரிப்பிற்கு எதிரான செயற்பாட்டாளர் சந்தா திவாரி பழங்குடியினரை கொண்ட சிறு நட்பு படையுடன் ராய்காடிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரோஹாவிலிருந்து பேரணியாக புறப்பட்டனர். “எங்கள் பணத்தை செலவிட்டு, சொந்தமாக உணவு தயாரித்து, தண்ணீரையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளோம்,” என்கிறார் அவர். “ஜோ ஹிட்லர் கி சால் சலேகா, வோ ஹிட்லர் கி மவுத் மரேகா” என முழக்கமிட்டபடி சென்றனர். “இன்றிரவு ரயில் பிடித்து வீட்டிற்குச் செல்வோம். பெருந்திரள் கூடாவிட்டாலும் பங்கேற்க வேண்டியதும், தகவலை தெரிவிக்க வேண்டியது முக்கியமானது. எங்கள் தலித் சகோதர, சகோதரிகளுடன் ஒன்றிணைகிறோம்.”
வன உரிமைச் சட்டம் 2006 குறிப்பிட்டு அவர் சொல்கிறார், “நமக்கு பலனளிக்கும் சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.” பல தசாப்தங்களாக நிலத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியினருக்கு நிலத்தை சொந்தமாக்க சட்டம் வழிவகுக்கிறது. “நமக்கு பலனளிக்கும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் அவை நீர்த்துப் போகின்றன.”
200 போராட்டக்காரர்களில் சுனில் ஜாதவ் என்பவரை தவிர, கிட்டதட்ட ஒவ்வொருவரும் ஏதேனும் குழு அல்லது அமைப்பில் இருக்கின்றனர். 47 வயதாகும் அவர் தாதரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவி மும்பையில் வசிக்கிறார். செய்தித்தாள்களில் போராட்டம் குறித்த செய்திகளை படித்துவிட்டு பங்கேற்க வந்துள்ளார். “நான் சியானில் காவலாளியாக இருக்கிறேன்,” என்கிறார் அவர். “இரவு நேரப் பணியில் இருக்கிறேன். பேரணி முடிந்த பின்பு நேரடியாக பணிக்குச் சென்றுவிடுவேன்.” உச்ச நீதிமன்ற உத்தரவின் நுணுக்கங்களை சுனில் புரிந்துகொள்ளாமல் போராட்டத்தில் எப்படி பங்கேற்க முடிந்தது. அவருக்கு தெரிந்ததை சோகமான புன்முறுவலுடன் சொல்கிறார், “தலித்துகள் நல்ல நிலையில் இல்லை. என் மக்கள், நான் போக வேண்டும் என்று எண்ணினேன்.”
தமிழில்: சவிதா