“எங்களைப் போன்ற முதியவர்களுக்கு யார் ஓய்வூதியம் கொடுப்பார்? யாரும் கொடுக்க மாட்டார்,” என தேர்தல் பேரணியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் முதியவர் சத்தமாக புகார் செய்கிறார். “மாமா, உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அம்மாவுக்கும் மாதம் 6,000 ரூபாய் கிடைக்கும்,” என்கிறார் வேட்பாளர். கவனித்துக் கொண்டிருக்கும் முதியவர் தன் தலைப்பாகையை உயர்த்தி, வேட்பாளர் பேசி முடித்ததும் அவரது தலையில் அணிவித்து ஆசிர்வதிக்கிறார். வட மாநிலத்தில் மதிப்புக்குரிய செய்கை அது.

தீபேந்தர் ஹூடாதான் வேட்பாளர். 2024ம் ஆண்டு தேர்தலுக்காக அவரது தொகுதியான ரோஹ்தக்கில் பிரசாரம் செய்கிறார். மக்கள் அவரது பேச்சை கவனித்தனர். சிலர் கேள்விகள் கேட்டனர். தங்களின் மனங்களில் என்ன இருக்கிறது என்பதையும் சொன்னார்கள்.

(தகவல்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீபேந்தர் ஹூடா, 7,83,578 வாக்குகள் பெற்று அங்கு வெற்றி பெற்றிருக்கிறார். முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.)

*****

“விவசாயியின் நிலத்தை சீர்திருத்தம் என்கிற பெயரில் பறிக்க முயற்சிக்கும் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?” தேர்தல் நக்கவிருந்த மே 25-க்கு பல நாட்களுக்கு முன்பே மே மாத தொடக்கத்தில் பாரியிடம் கிருஷண் கேட்டார். ரோஹ்தாக் மாவட்டத்தின் கலனார் ஒன்றியத்திலுள்ள நிகானா கிராமத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். அறுவடைக் காலம். கோதுமை அறுவடை முடிந்தது. அடுத்து நெல் பயிரிட நிலத்தை பண்படுத்தும் விவசாயிகள் மழைக்காலத்துக்கு காத்திருக்கின்றனர். வானத்தில் ஒரு மேகம் இல்லை. சாலையின் தூசும் நிலத்தை எரிப்பதால் எழும் புகையும் காற்றுடன் வீசுகிறது.

வெயில் 42 டிகிரி செல்சியஸ்ஸை தொட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் சூடும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாற்பது வயதுகளின் தொடக்கத்தில் இருக்கும் கிருஷண் ஓர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். பக்கத்து வீட்டில் வேலை பார்க்கிறார். அன்றாடக் கூலியாக 500 ரூபாய் பெறும் அவரது வேலை ஒரு வாரம் இருக்கும். பிற கூலி வேலைகளை செய்யும் அவர், ஒரு சிறு கடையையும் நடத்திக் கொண்டிருக்கிறார். ரோஹ்தாக் மாவட்டத்தின் இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாய வேலைகளையும் கட்டுமான தள வேலைகளையும் நூறு நாள் வேலைத் திட்ட வேலைகளையும் வாழ்வாதாரத்துக்கு சார்ந்திருக்கின்றனர்.

PHOTO • Amir Malik
PHOTO • Amir Malik

கிருஷன் (இடது) நிகானாவை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர் ஆவார். ‘விவசாயி நிலத்தை சீர்திருத்தம் என்கிற பெயரில் பறிக்க முயலும் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?’ என்கிறார் அவர். ரோஹ்தாக் மாவட்டத்தின் இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயத் தொழில், கட்டுமான வேலை, நூறு நாள் வேலையை சார்ந்திருக்கிறார்கள்

அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சந்திப்பை அடைந்தோம். “விவசாயிகளும் தொழிலாளர்களும் சிரமத்தில் இருக்கின்றனர்,” என்னும் அவர், “சாம, தான, பேத, தண்டம் என நான்கு பக்கங்களிலிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்,” என்கிறார். ஆட்சிக்கான நான்கு பாணிகளாக, அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியன் குறிப்பிடும் பொறுமை, பணம் முதலியவற்றை கொடுக்கும் தானம், தண்டனை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றைதான் கிருஷண் குறிப்பிடுகிறார்.

ஆனால் கிருஷண் குறிப்பிடும் சாணக்கியர், தற்போதும் இருப்பவர்!

”ஆளும் பாஜக, தில்லி எல்லையில் இறந்த 700 விவசாயிகளுக்கு பொறுப்பேற்கவில்லை,” என அவர் 2020-ல் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயப் போராட்டங்களை சுட்டிக்காட்டி, பாஜகவுக்கு கண்டனம் தெரிவிக்கிறார் அவர்.

“லக்கிம்பூர் கெரியில் டெனி (பாஜக தலைவரின் மகன்), விவசாயிகளின் மீது வாகனம் ஏற்றியது நினைவில் இருக்கிறதா? கொலைபுரிவதில் அவர்கள் கஞ்சத்தனம் காட்டுவதில்லை.” உத்தரப்பிரதேசத்தில் 2021ம் ஆண்டு நடந்த சம்பவம் அவரின் மனதில் இருக்கிறது.

பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் ப்ரிஜ் பூஷன் சிங் விஷயத்திலும் அவரை போன்ற பலருக்கும் பாஜக நடந்துகொண்ட விதத்தில் அதிருப்தி இருக்கிறது. “கடந்த வருடத்தில் சாஷி மாலிக் போன்ற பல முன்னணி மல்யுத்த வீரர்கள் பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தினர். மைனர் உள்ளிட்ட பல பெண்களுக்கு பாலியல்ரீதியாக அச்சுறுத்தல் ஏற்படுத்திய ப்ரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரினர்,” என்கிறார் அவர்.

2014ம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைப்பதாக பாஜக வாக்குறுதி கொடுத்தது. “அந்த வாக்குறுதிகள் என்னவாயிற்று?” எனக் கேட்கிறார் கிருஷண். “ஸ்விட்சர்லாந்திலிருந்து கறுப்பு பணம் கொண்டு வந்து, எங்கள் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னார்கள். இறுதியில் ரேஷன் பொருட்களும் பட்டினியும் மட்டும்தான் கிடைத்தது.”

PHOTO • Amir Malik
PHOTO • Amir Malik

ஹரியானாவின் ரோஹ்தாக் மாவட்டத்தின் நிகானாவை சேர்ந்த பாப்லி (இடது) 42 வயது தொழிலாளர் ஆவார். அவர் சொல்கையில், ‘பத்தாண்டுகளுக்கு முன் வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லைதான். எனினும் இந்தளவுக்கு கடினமாகவும் இருக்கவில்லை,’ என்கிறார். 2024 தேர்தலில் வாக்களிக்கக் கோரும் சர்வதேச சாம்பியன் நீரஜ் சோப்ராவின் பதாகை (வலது)

அவரது வீட்டில், அப்போதுதான் காலை உணவை சமைத்து முடித்திருந்தார் அவரது மைத்துனி பாப்லி. கல்லீரல் நோய்க்கு கணவரை ஆறு ஆண்டுகளுக்கு முன் பறிகொடுத்தவர் அவர். அப்போதிருந்து 42 வயது பாப்லி, நூறு நாள் வேலை பார்த்து வருகிறார்.

”மாத வருமானம் அரிதாகத்தான் முழுமையாக கிடைக்கிறது. கிடைத்தாலும், சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. சரியான நேரத்தில் கிடைத்தால், குடும்பத்தை நடத்த முடியாத அளவுக்கு குறைவாக இருக்கிறது,” என்கிறார் அவர். மார்ச் 2024-ல் ஏழு நாட்களுக்கு அவர் வேலை பார்த்தார். ரூ.2,345 இன்னும் அவருக்கு வந்து சேரவில்லை.

கடந்த நான்கு வருடங்களில் ஹரியானாவின் நூறு நாள் வேலை திட்ட வேலைகள் பெரும் சரிவை கண்டிருக்கிறது. 2020-21ல் நூறு நாள் வேலைத் திட்ட சட்டம் அளித்திருந்த உறுதியின்படி மாநிலத்தின் 14,000 குடும்பங்களுக்கும் மேல் வேலைகள் கிடைத்தன. அந்த எண்ணிக்கை 2023-24ல் 3,447 ஆக சரிந்தது. 2023ம் ஆண்டில் வெறும் 479 குடும்பங்களுக்குதான் ரோஹ்தாக் மாவட்டத்தில் வேலைகள் கிடைத்தன. 2021-22ல் அந்த எண்ணிக்கை 1,030 ஆக இருந்தது.

”பத்தாண்டுகளுக்கு முன் வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லைதான். எனினும் இந்தளவுக்கு கடினமாகவும் இருக்கவில்லை,” என்கிறார் பாப்லி

PHOTO • Amir Malik
PHOTO • Amir Malik

கேசு பிரஜபதி (வலது), விலைவாசி உயர்வு இந்த தேர்தலில் முக்கியமான பிரச்சினை என்கிறார். அரசாங்க பள்ளியில் சமையலராக இருக்கும் ராம்ரதி (வலது), போதுமான அளவு வருமானம் ஈட்ட முடியவில்லை

நிகானாவிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கஹ்னாரில், கேசு பிரஜபதியை பொறுத்தவரை இந்த தேர்தலில் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. 44 வயதாகும் கேசு, வீடுகளிலும் கட்டடங்களிலும் தரை டைல்கள் ஒட்டும் வேலையை செய்கிறார். உப்பு, சர்க்கரை விலைகளை கொண்டு அவர் விலைவாசி உயர்வை கணிக்கிறார். அன்றாடக் கூலியும் ரோஹ்தாக்கின் பவான் நிர்மான் காரிகர் மஸ்தூர் சங்க உறுப்பினருமான அவர் சொல்கையில், பத்தாண்டுகளுக்கு முன் ஒரு லிட்டர் பால ரூ.30-ரூ.35 இருந்ததாக சொல்கிறார். இப்போது அதன் விலை ரூ.70. ஒரு கிலோ உப்பு அப்போது ரூ.16 ஆக இருந்திருக்கிறது. இப்போது ரூ.27 ஆகியிருக்கிறது.

“உணவு எங்கள் உரிமை. அரசாங்கத்துக்கு நாங்கள் அடிபணிய வேண்டும் என்பது போல் இருக்கிறது.” மஞ்சள் நிற குடும்ப அட்டை கொண்டவருக்கு ஐந்து கிலோ கோதுமையும் ஒரு கிலோ சர்க்கரையும் சமையல் எண்ணெயும் கிடைக்கும். பிங்க் நிற அட்டை கொண்டவர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ கோதுமை கிடைக்கும். “முன்பு, அரசாங்கம் மண்ணெண்ணெயை குடும்ப அட்டைக்கு தரும். அதை நிறுத்திவிட்டார்கள். எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவது சிரமமாக இருக்கிறது. சுண்டலும் உப்பும் கூட முன்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்,” என்கிறார் அவர். இப்போது அவை கொடுக்கப்படுவதில்லை.

உப்பு கொடுக்கப்படாததால், “குறைந்தபட்சம் நாங்கள் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய தேவை கிடையாது,” என்கிறார் அவர்.

ஒன்றியத்திலும் ஹரியானாவிலும் ’இரட்டை எஞ்சின்’ அரசாங்கம் கொண்டிருக்கும் பாஜக, கஹ்னாரின் அரசுப் பள்ளியில் சமையலராக இருக்கும் ராம்ரதி போன்றவர்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. 48 வயது ராம்ரதி அரசுப் பள்ளியில் மதிய உணவு தயாரிக்கிறார். “இந்த சூட்டில், ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. ஒரு மாதத்தில் நான் 6,000 ரொட்டிகள் செய்கிறேன்.” மாத வருமானமாக ரூ.7000 பெறுகிறார் அவர். உழைப்பில் பாதிக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என நினைக்கிறார் அவர். விலைவாசி உயர்வு, ஆறு பேர் கொண்ட அவரின் குடும்பத்தை நடத்துவதில் சிரமத்தை தருகிறது. வீட்டு வேலையை அவர் இதில் சேர்க்கவில்லை. “சூரியனை விட அதிக நேரம் நான் உழைக்கிறேன்,” என்கிறார் அவர்.

PHOTO • Amir Malik

கடந்த நான்கு வருடங்களில் ஹரியானாவின் நூறு நாள் வேலை திட்ட வேலைகள் பெரும் சரிவை கண்டிருக்கிறது. 2020-21ல் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 1,030 குடும்பங்களுக்கு வேலைகள் இருந்த நிலையில் தற்போது வெறும் 479 குடும்பங்களுக்குதான் வேலைகள் இருக்கிறது. இடதிலிருந்து வலது: தொழிலாளர்கள் ஹரிஷ் குமார், கலா, பவன் குமார், ஹரி சந்த், நிர்மலா, சந்தோஷ் மற்றும் புஷ்பா

“ராமர் கோவிலுக்கு நான் வாக்களிக்க மாட்டேன். காஷ்மீர் பிரச்சினைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்கிறார் ஹரிஷ் குமார். பாஜக பெருமை கொள்ளும் ராமர் கோவில் கட்டுமானமும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தும் அன்றாடக் கூலியின் வாழ்க்கையில் எந்த விளைவையும் கொடுக்கவில்லை.

கஹ்னாரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மக்ரெளலி கலனில் சாலைக் கட்டுமானப் பணியில் ஹரிஷ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஹரிஷும் இன்னும் சில ஆண்களும் பெண்களும் கொளுத்தும் வெயிலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, கனரக வாகனங்கள் கடந்து செல்கின்றன. கனமான கான்க்ரீட் கற்களை தூக்கி அடுத்தவருக்கு கொடுக்கிறார்கள். ஆண்களும் சாலை உருவாக்க வேலையில் இணைந்திருக்கின்றனர்.

கலானார் தாலுகாவின் சம்பல் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். நாளொன்றுக்கு அவர் 500 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். “எங்களின் அன்றாட ஊதியம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இல்லை. வேறு வழியின்றி உடலுழைப்பை மட்டும் விற்று வாழ்பவர்கள்தான் தொழிலாளர்கள்.”

PHOTO • Amir Malik
PHOTO • Amir Malik

ரோஹ்தாக் தாலுகாவின் மக்ரெளலி கலானில், பெண் தினக்கூலிகள் சாலைப் பணிகளுக்காக கான்க்ரீட் கற்களை தூக்குகின்றனர். நிர்மலா (வலது), மற்றவர்களை போல, கொளுத்தும் வெயிலில் வேலை பார்க்கிறார்

PHOTO • Amir Malik
PHOTO • Amir Malik

ஹரிஷும் பவனும் (சிவப்பு சட்டை) ட்ராக்டரிலிருந்து சிமெண்ட்டை தூக்குகின்றனர். கஹ்னாரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மக்ரெளலி கலனில் அவர்கள் சாலை கட்டுமானத்தில் பணிபுரிகின்றனர்

மதிய உணவை முடித்ததும் அவர், கான்க்ரீட் கலக்க விரைகிறார். இந்தியாவிலுள்ள பல தொழிலாளர்களை போல அவரும் குறைந்த ஊதியத்துக்கு இந்த கடும் வானிலையில் அதிகம் உழைக்கிறார். “முதல் நாள் வேலையின்போது, சம்பாதித்தால் மக்கள் மதிப்பார்கள் என எண்ணினேன். இப்போது வரை அந்த ஒரு துளி மரியாதை எனக்கு கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.

“உயர்ந்த ஊதியம் மட்டும் எங்களின் கோரிக்கை அல்ல. சமத்துவமும் எங்களுக்கு வேண்டும்.”

ஒரு நூற்றாண்டுக்கு முன், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான மைல்கல்லை கண்ட இடம், கலானார் தாலுகா. மகாத்மா காந்தியும் அபுல் கலாம் ஆசாத்தும் கலானார் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்கள். நவம்பர் 8, 1920ல் ரோஹ்தாக்கில் நடத்தப்பட்ட கூட்டத்தில், ஒத்துழையாமை இயக்கத்தை ஊக்குவிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மைல்கல்லாக அது மாறியது.

2024ம் ஆண்டில் ரோஹ்தாக்கின் மக்கள் மீண்டும் அவர்களது நாட்டின் ஜனநாயகத்திலும் அவர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றம் நேர காத்திருக்கிறார்கள்.

தமிழில் : ராஜசங்கீதன்

Amir Malik

ಅಮೀರ್ ಮಲಿಕ್ ಸ್ವತಂತ್ರ ಪತ್ರಕರ್ತ ಮತ್ತು 2022 ರ ಪರಿ ಫೆಲೋ.

Other stories by Amir Malik
Editor : Medha Kale

ಪುಣೆಯ ನಿವಾಸಿಯಾದ ಮೇಧ ಕಾಳೆ, ಮಹಿಳೆ ಮತ್ತು ಆರೋಗ್ಯವನ್ನು ಕುರಿತ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ ಸಕ್ರಿಯರಾಗಿದ್ದಾರೆ. ಇವರು ಪರಿಯ ಅನುವಾದಕರೂ ಹೌದು.

Other stories by Medha Kale
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan