பொதுத்துறை நிறுவனமான ஹரியானா சாலை போக்குவரத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, சொகுசான ஓய்வு வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். “ஆனால் எனக்குள் ஆர்வம் இருந்தது,” என்கிறார் 73 வயதாகும் அவர்.

அந்த ஆர்வம்தான், தந்தை குகான் ராம் யாதவ் பால்யகாலத்தில் அவருக்குக் கற்றுக் கொடுத்த கயிற்றுக் கட்டில் மற்றும் சணல் முக்காலி செய்யும் கலையை செய்ய வைத்தது.

அவரின் கற்றல் அரை நூற்றாண்டுக்கு முன் தொடங்கியது. அப்போது அவருக்கு 15 வயது. மூன்று சகோதரர்களுடன் அமர்ந்து, தந்தை வீட்டுக்கு என செய்யும் கயிற்றுக்கட்டில்களை வேடிக்கை பார்த்திருக்கிறார். அவரின் தந்தைக்கு 125 ஏக்கர் நிலம் இருக்கிறது. கோடை மாதங்களை கட்டில்கள் செய்ய செலவழிக்கீறார். அதற்கு பிறகு கோதுமை அறுவடைக்காலம். கையால் செய்யப்பட்ட சணல், பருத்தி கயிறு மற்றும் குங்கிலிய மரம் மற்றும் ஷீஷ மரம் ஆகியவற்றை பயன்படுத்தினார். மாடுகளும் மற்றவர்களும் அதிக நேரம் இருக்கும் பைதக் என்கிற திறந்த அறைதான் அவர் பணி செய்யும் அறை.

பகத் ராம் தன் தந்தையை ஆகச் சிறந்த வல்லுநர் என நினைவுகூருகிறார். கருவிகளை கவனமாக தேர்ந்தெடுப்பார் அவர். “என் தந்தை கயிற்றுக் கட்டில் செய்ய கற்கும்படி என்னை ஊக்குவித்தார். “வா, இதைக் கற்றுக் கொள். பின்னால் இது உனக்கு உதவும்,” என்பார் அவர்,” என நினைவுகூருகிறார் பகத் ராம்.

ஆனால் சிறுவர்களாக அவர்கள், அந்த வேலை கடினம் என்பதால், அதைக் கேட்காமல் ஓடிச் சென்று கால்பந்து, ஹாக்கி அல்லது கபடி விளையாடுவார்கள். “தந்தை எங்களை திட்டுவார். அடிக்கவும் செய்வார். ஆனால் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம்,” என்கிறார் அவர். “வேலை பெறுவதில்தான் அதிக ஆர்வம் காட்டினோம். தந்தை மீதான பயத்தால்தான் இந்த திறனை கற்றுக் கொண்டோம். செய்ய முடியாமல் தடைபட்டு நிற்கும்போது வடிவத்தை உருவாக்க கயிற்றை எப்படி நகர்த்த வேண்டுமென அவரிடம் கேட்போம்.”

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது: பகத் ராம் யாதவ், தான் செய்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். வலது: ஹரியானா சாலைப் போக்குவரத்து துறையில் பணியாற்றியதற்காக கொடுக்கப்பட்ட மோதிரத்தை அவர் இன்னும் அணிந்திருக்கிறார்

வருமானம் ஈட்டுவதற்கான காலம் வந்தபோது, ராஜஸ்தானின் ஒரு தனியார் பேருந்து சேவையில் நடத்துநராக முதலில் பணிக்கு சேர்ந்தார் பகத் ராம். பிறகு 1982ம் ஆண்டில் ஹரியானா சாலைப் போக்குவரத்தில் குமாஸ்தாவானார். “தவறான விஷயங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது” என்கிற கொள்கையை ஏற்றிருந்ததாக அவர் சொல்கிறார். அவருக்கு அதனால் மூன்று விருதுகள் கிடைத்தன. அப்போது கொடுக்கப்பட்ட மோதிரங்களை பெருமையுடன் அவர் அணிந்திருக்கிறார். டிசம்பர் 2009-ல் அவர் தன் 58 வயதில் ஓய்வு பெற்றார். குடும்ப நிலத்தில் தன் பங்கான 10 ஏக்கர் நிலத்தில் கொஞ்ச காலத்துக்கு பருத்தி விவசாயம் பார்த்திருந்த அவருக்கு அது மிகவும் கடினமாக இருந்தது. 2012ம் ஆண்டில் அவர் பதின்வயதில் செய்த அக்கலைக்கு திரும்பி வந்தார்.

அகிர் சமூகத்தை (பிற்படுத்தப்பட்ட சமூகம்) சேர்ந்த பகத் ராம்தான், கிராமத்தில் கயிற்றுக் கட்டில் செய்யும் ஒரே நபர்.

*****

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்திலுள்ள தனா குர்து கிராமத்தில் வசிக்கும் பகத் ராமுக்கு அன்றாட வழக்கம் ஒன்று இருக்கிறது. தினசரி காலை 6 மணிக்கு எழுந்து, இரண்டு பைகளை நிரப்புவார். ஒன்றில் கம்பு, இன்னொன்றில் சப்பாத்திகள். பிறகு அவர் வயலுக்கு சென்று, கம்பு தானியத்தை புறாக்களுக்கு தூவுவார். சப்பாத்திகளை எறும்புகளுக்கும், நாய்களுக்கும் பூனைகளுக்கும் கொடுப்பார்.

“அதற்குப் பிறகு என் ஹூக்காவை தயார் செய்து கொண்டு, காலை 9 மணிக்கு என் வேலை செய்யத் தொடங்குவேன்,” என்கிறார் பகத். அவசர ஆர்டர் இல்லையெனில் நண்பகல் வரை வேலை பார்ப்பார். “பிறகு இன்னொரு மணி நேரத்துக்கு, ஐந்து மணி வரை வேலை செய்வேன்.” அறைக்குள், அவர் தயாரித்த கயிற்றுக் கட்டில் ஒன்றில் அமர்ந்திருக்க, ஜன்னல்களிலிருந்து வெளிச்சம் வருகிறது. ஹூக்கா அவருக்கு அருகே வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது இளைப்பாற புகையிழுக்கிறார்.

ஜூலை மாதத்தின் ஒரு குளிர் காலையில் நாம் சந்தித்தபோது, மடி மீது வைத்து ஒரு முக்காலியை கவனமாக உருவாக்கிக் கொண்டிருந்தார் பகத் ராம். “இதை ஒருநாளில் என்னால் முடித்து விட முடியும்,” என்கிறார் அவர் நம்பிக்கையுடன். பயிற்சி பெற்ற துல்லியத்துடன் அசையும் அவரது கைகள், ஷீஷாம் மரச் சட்டகத்தின் மேல் இருக்கும் நூல்களை சரியான வகையில் நேராகவும் குறுக்காகவும் ஒதுக்குகின்றன.

வயதின் காரணமாக வேகம் குறைந்து வருவதாக கூறுகிறார் அவர். “கயிற்றுக் கட்டில் செய்யும் வேலையை முதன்முதலாக நான் செய்யத் தொடங்கியபோது என் கைகளும் உடலும் திறனுடன் செயல்பட்டன. இப்போது இரண்டு, மூன்று மணி நேரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக என்னால் வேலை பார்க்க முடியவில்லை.”

ஒரு பக்கத்தை செய்து முடித்த பிறகு, ஸ்டூலை திருப்பி மீண்டும் வேலையைத் தொடர்கிறார். வடிவம் இருபக்கங்களிலும் தலைகீழாக சரியாக வருவதை உறுதி செய்கிறார். “ஒரு முக்காலியில் இரு பக்கங்களும் நிரப்ப வேண்டும். அதுதான் அதிக உழைப்பையும் உறுதியையும் அதற்குக் கொடுக்கும். ஆனால் பெரும்பாலான கலைஞர்கள் அதை செய்வதில்லை,” என விளக்குகிறார்.

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது: ஒவ்வொரு முக்காலியும் குறைந்தபட்சம் இரு வண்ண கயிறுகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ‘இத்தகைய வண்ணமய முக்காலிகளை சந்தையில் நீங்கள் காண முடியாது,’ என்கிறார் பகத் ராம். வலது: ஒரு முக்காலிக்கு இரு பக்கங்களும் நிரப்பும் சில கலைஞர்களுள் பகத் ராமும் ஒருவர் ஆவார்

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது: முக்காலி செய்யும் பகத்ராம், ஷீஷாம் மரச் சட்டகத்தின் மேலுள்ள நூல்களை குறுக்காகவும் கிடைமட்டமாகவும் ஒழுங்குபடுத்துகிறார். வலது: ஒரு பக்கத்தை முடித்தவுடன், அடுத்த பக்கத்தையும் செய்யும் வகையில் அதை திருப்புகிறார் அவர்

ஒவ்வொரு முறையும் ஒரு பக்கத்தில் குறுக்கு நெசவு முடித்ததும், குட்டி அல்லது தொக்னா - கை போல இருக்கும் கருவி - கொண்டு நூலை ஒழுங்குபடுத்துகிறார். தொக்னா வின் தக் தக் தக் சத்தம் குங்க்ரூ வின் (சிறிய மணிகள்) சன் சன் சன் என்ற சத்தத்துடன் சேர்ந்து இசைத்தொகுப்பை உருவாக்குகிறது.

செதுக்கப்பட்ட மலருடன் தொக்னா வை இருபது ஆண்டுகளுக்கு முன் கிராமத்தை சேர்ந்த ஒரு கலைஞரை கொண்டு அவர் உருவாக்கினார். குங்க்ரூ க்கள் கருவிக்கு அவர் கூடுதலாக சேர்த்த விஷயங்கள். பள்ளிக்கு செல்லும் இரு பேரன்களிடம் ஸ்டூல்களை கொண்டு வரச் சொல்லி, சாய்ந்து தன் ரகசியத்தை காட்ட விழைகிறார். ரகசியமாக அவர், ஐந்து குங்க்ரூ க்களை அவர் தயாரிக்கும் ஒவ்வொரு முக்காலியிலும் நெய்கிறார். பெரும்பாலும் அவை பித்தளை அல்லது வெள்ளியில் செய்யப்பட்டவை. “பால்யகாலத்திலிருந்து குங்க்ரூ சத்தம் எனக்கு பிடிக்கும்,” என்கிறார் பகத் ராம்.

ஒவ்வொரு முக்காலியும் குறைந்தபட்சம் இரு வண்ண கயிறுகள் கொண்டு செய்யப்படுகிறது. “இத்தகைய வண்ணமய முக்காலிகளை சந்தையில் நீங்கள் காண முடியாது,” என்கிறார் அவர்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்ட மஹுவா டவுனில் ஒருவரிடம் அவர் கயிறுகள் வாங்குகிறார். ஒரு கிலோ கயிறு, தபால் செலவு உட்பட ரூ.330 ஆகிறது. ஐந்திலிருந்து ஏழு குவிண்டால் கயிறுகளை பல வண்ணங்களில் வாங்குகிறார் அவர்.

சில கயிறு பொட்டலங்கள், அவருக்கு பின்னால் இருக்கும் மேஜையின் மீது கிடக்கின்றன. எழும்போது, அவர் சேகரித்து வைத்திருக்கும் வண்ண கயிறுகள் மொத்தத்தையும் காட்டுகிறார்.

ஒன்றை கையில் கொடுத்து அதன் மென்மையை உணரச் சொல்கிறார். எதில் செய்யப்பட்ட கயிறு என தெரியவில்லை என்றாலும் அது அறுந்து போகாது என நிச்சயமாக சொல்கிறார் அவர். அதற்கு உதாரணமும் கொண்டிருக்கிறார். ஒருமுறை அவரது கயிற்றுக் கட்டில் மற்றும் முக்காலிகளின் தரத்தை குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர். எனவே அவற்றிலுள்ள கயிறுகளை வெறுங்கையில் அறுத்துக் காட்டும்படி அவருக்கு சவால் விட்டிருக்கிறார் பகத். ஒருமுறை அல்ல, இருமுறை பகத்தின் நம்பிக்கை சரியென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த முறை, சோனு பெல்வான் என்கிற காவலர் வந்து முயன்று பார்த்து, தோல்வி அடைந்தார்.

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

குட்டி (இடது) மற்றும் தொக்னா (வலது) ஆகிய இரு கருவிகளை பகத் ராம் பயன்படுத்துகிறார். தொக்னாவிலுள்ள மணிகள் பகத் ராமால் சேர்க்கப்பட்டவை

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது மற்றும் வலது: பகத் ராம் யாதவ், தனது வண்ணமய கயிறுகளை காட்டுகிறார்

கயிற்றுக்கட்டில் தயாரிப்பில், கயிறின் தரம் முக்கியம். கட்டிலின் அடித்தளமே அதுதான். தேவையான உறுதியையும் நீடித்த உழைப்பையும் அது தர வேண்டும். அதன் தரத்தில் சிறு குறைபாடு இருந்தாலும், அசெளகரியம் நேரும். அறுந்து கூட போகும்.

பகத் ராமை பொறுத்தவரை, கயிறின் வலிமை மட்டும் முக்கியமல்ல - நிபுணத்துவமும் முக்கியம். பந்தயத்தில் ஜெயித்ததற்கு என்ன வேண்டுமென ஒரு காவலர் கேட்டதற்கு, “உங்களின் தோல்வியை நீங்கள் ஏற்றுக் கொண்டதே போதுமானது,” என்றார் பகத். ஆனால் அதிகாரி, அவருக்கு இரண்டு பெரிய கொஹானா ஜிலேபி கொடுத்ததாக நினைவுகூரும் பகத் சிரித்தபடி, கைகளை விரித்து அவற்றின் அளவை காட்டுகிறார்.

அந்த நாளில் அந்த உண்மையை தெரிந்து கொண்டது காவலர் மட்டுமல்ல, பகத் ராமும்தான். கைவினைப் பொருள் கண்காட்சிக்கு வரும் முதிய பெண்கள், அத்தகைய உயரம் குறைந்த முக்காலிகளில் உட்காருவதால் மூட்டு வலி வருவதாக கண்டறிந்தனர். “1.5 அடி உயர முக்காலிகளை செய்யும்படி அவர்கள் கேட்டனர்,” என்கிறார் பகத் ராம், இரும்பு சட்டகம் கொண்டு அவர் தயாரிக்கும் உயர முக்காலிகளை காட்டி.

மழை பெய்யத் தொடங்குகிறது. அவரது மனைவி கிருஷ்ணா தேவி உடனே முற்றத்திலிருந்து முக்காலிகளை உள்ளே கொண்டு வருகிறார். 70 வயதாகும் அவர் ஐந்து வருடங்களுக்கு முன் வரை கம்பளங்களை நெய்து கொண்டிருந்தார். வீட்டு வேலைகள் பார்த்தும் கால்நடைகளை பராமரித்தும் அவர் நேரம் கழிக்கிறார்.

பகத் ராமின் மகன்களான ஜஸ்வந்த் குமார் மற்றும் சுனேஹரா சிங் ஆகியோர், அவரை பின்பற்றவில்லை. சுனேஹரா தட்டெழுத்தாளராக ஹிசார் மாவட்ட நீதிமன்றத்திலும் ஜஸ்வந்த் குடும்ப நிலத்தில் விவசாயம் பார்த்தும் வருமானம் ஈட்டுகின்றனர். “இந்தக் கலையைக் கொண்டு மட்டும் பிழைக்க முடியாது. மாதந்தோறும் 25,000 ரூபாய் ஓய்வூதியம் நான் பெறுவதால்தான் வாழ்க்கை ஓடுகிறது,” என்கிறார் அவர்.

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது மற்றும் வலது: பகத் ராம் தயாரித்த முக்காலிகள்

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது: பகத் ராம் யாதவ், தன் மனைவி கிருஷ்ணா தேவி, இளைய மகன் சுனேஹரா சிங் மற்றும் பேரன்கள் மனீத் மற்றும் இஷான் ஆகியோருடன். வலது: சுனேஹரா, முக்காலிக்கு இறுதிக்கட்ட வேலைகளை செய்கிறார்

*****

முக்காலிகளின் விலைகளை ரூ.2,500-3000-க்குள் பகத் ராம் நிர்ணயிக்கிறார். நுட்பமாக செய்வதால் விலை அதிகமாக இருப்பதாக சொல்கிறார் அவர். “ஒவ்வொரு விஷயமும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. முக்காலியின் கால் கூட எட்டு கிமீ தொலைவில் இருக்கும் ஹன்ஸியிலிருந்து வாங்குகிறோம். அதை நாங்கள் பேடி , மொட்ட பேட் அல்லது தத் என்று அழைக்கிறோம். பிறகு அவற்றை செதுக்கிவிட்டு, வாடிக்கையாளர்களிடம் காட்டுகிறோம். அவர்கள் ஒப்புக் கொண்டதும், மேற்பூச்சு செய்வோம்,” என்கிறார் அவர்.

இதே நேர்த்திதான் கயிற்றுக்கட்டில்களுக்கும் அளிக்கப்படுகிறது. ஒற்றை நிற கட்டில்கள் செய்ய மூன்று, நான்கு நாட்கள் ஆகும். வண்ணங்கள் கொண்ட கட்டில் செய்ய 15 நாட்கள் ஆகும்.

உள்ளே உள்ள மரச்சட்டகத்துக்குள் ஓரடி இடைவெளி விட, இரு பக்கங்களிலும் கயிறுகளை விட்டு, இரண்டு அல்லது மூன்று முடிச்சுகளை இரு பக்கம் போடுகிறார் பகத் ராம். பிறகு அவர் கயிறுகளை நீளவாக்காக கட்டுகிறார். போலவே குண்டா என்கிற கருவி கொண்டு, கட்டிலை வலிப்படுத்தும் வகையில் குண்டி என்ற வகையில் கயிறு கட்டுகிறார்.

“இவ்வகை கயிறு கட்டுதல், கயிறுகள் தளர்வதை கட்டிலில் தடுக்கிறது,” என விளக்குகிறார் பகத் ராம்.

கிடைமட்ட கயிறுகள் கட்டப்பட்ட பிறகு, வண்ணக் கயிறுகளை குறுக்காக கட்டி வடிவங்களை உருவாக்குகிறார். இந்தக் கயிறுகளும் அதே குண்டி வகையில் பக்கவாட்டில் கட்டப்படுகிறது. 10-லிருந்து 15 கிலோ வரையிலான கயிறுகள், ஒரு கயிற்றுக் கட்டில் செய்ய பயன்படுகிறது.

வண்ணக் கயிறு கட்டப்படும் ஒவ்வொரு முறையும் இரு முனைகளையும் ஒன்றாக வைத்து ஊசி நூல் கொண்டு தைக்கிறார். ஒரு கயிறு முடியும் இடத்தில், அதே வண்ண நூல் கொண்டு தைக்கிறார். “ஒரு முடிச்சு மட்டும் போட்டால், உறுத்தும்,” என்கிறார் அவர்.

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது: கயிற்றுக் கட்டில்களை தயாரிக்கவென பிரத்யேக கயிறு கட்டும் உத்தி பயன்படுத்துகிறார் பகத் ராம். வலது: வண்ணக் கயிறு கட்டப்படும் ஒவ்வொரு முறையும் இரு முனைகளையும் ஒன்றாக வைத்து ஊசி நூல் கொண்டு தைக்கிறார்

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது: குண்டி எனப்படும் கயிறு முடியும் உத்தி, கட்டில் வலுப்பட செய்யப்படுகிறது. வலது: பகத் ராமின் கருவிகள்

கயிற்றுக் கட்டில் வடிவமைப்பதற்கான அவரது ஊக்கம், பழங்கால வீடுகளின் சிற்பங்கள், ஊர் சுவர்களிலுள்ள ஓவியங்கள், உறவினர்களை பார்க்க செல்லும் போது ஹரியானாவின் பிற பகுதிகளில் தென்படும் ஓவியங்கள் போன்றவற்றில்தான் கிடைக்கிறது. “என் செல்பேசியில் நான் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவற்றை நான் செய்யும் கயிற்றுக் கட்டில்களில் கொண்டு வருகிறேன்,” என்னும் பகத் ராம், ஸ்வஸ்திகா மற்றும் சவுபார் விளையாட்டு பலகை வடிவங்களை கொண்ட ஒரு கயிற்றுக் கட்டில் புகைப்படத்தை செல்பேசியில் காட்டுகிறார். கயிற்றுக் கட்டிலோ சணல் முக்காலியோ செய்யப்பட்ட பிறகு, அதன் பக்கவாட்டு நீளக் கட்டைகளும் பக்கவாட்டு அகலக் கட்டைகளும் குங்கிலிய மரத்திலும் கால்கள் ஷீஷாம் மரத்திலும் செய்யப்பட்டு சிறு பித்தளைத் துண்டுகளால் அலங்கரிக்கப்படுகிறது.

பகத் ராம் தயாரிக்கும் கயிற்றுக் கட்டில்களின் அளவுகளைப் பொறுத்து - 8 X 6 அடி, 10 X 8 அடி, 10 X 10 அடி - ரூ.25,000 தொடங்கி ரூ.30,000 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு கயிற்றுக்கட்டிலுக்கும் முக்காலிக்கும் தினக்கூலியாக ரூ.500 நிர்ணயித்திருக்கீறார். 5,000 முதல் 15,000 ரூபாய் வரை மாத வருமானம் வருகிறது. “இது அரசாங்க விலை அல்ல; என் விலை,” என்கிறார் பகத் ராம்.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கைவினைப் பொருட்கள் பட்டியலில் கயிற்றுக் கட்டில்களையும் இடம்பெற வைப்பதை அவர் லட்சியமாகக் கொண்டிருக்கிறார். “உள்ளூர் செய்தி தொலைக்காட்சி ஒன்றில், இது குறித்து பிரதமர் மோடிக்கு காணொளி வாயிலாக நான் கோரிக்கையும் வைத்திருக்கிறேன்,” என்கிறார் அவர், பெருமையுடன் செல்பேசியில் அக்காணொளியை நமக்குக் காட்டி.

200 கிமீ தள்ளி ஃபரிதாபாத்தில் நடக்கும் சுரஜ்குண்ட் மேளாவில் நடக்கும் வருடாந்திர பொருட்காட்சியில் தன் கைவினைப் பொருட்களை இரண்டு முறை காட்சிப்படுத்தி இருக்கிறார் அவர். முதல் முறையாக 2018ம் ஆண்டில் சென்றபோது அவரிடம் கைவினைக் கலைஞருக்கான அட்டை இல்லை. காவல்துறை அவரை அகற்ற முனைந்தது. ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. துணை தலைமை காவல் கண்காணிப்பாளர்களுக்காக இரண்டு கயிற்றுக் கட்டில்களை ஒரு உதவி ஆய்வாளர் கேட்டார். அதற்கு பிறகு எவரும் அவருக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. “அனைவரும் ‘மாமா டிஎஸ்பிகளுடன் எல்லாம் பழக்கம்’ எனக் கூறினர்,” என்கிறார் பகது புன்னகையுடன்.

கைவினைக் கலைஞருக்கான அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கையில் ஜவுளி அமைச்சகத்தால், அக்கலை கைவினைத் தொழிலளாக அங்கீகரிக்கப்படவில்லை எனக் கண்டறிந்தார். ரெவாரியின் உள்ளூர் அதிகாரிகள், கம்பள நெசவாளர் போல புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க கூறினர்.

2019ம் ஆண்டில் அவர் எடுத்த அடையாள அட்டை இதுதான். பலரும் கயிற்றுக் கட்டில்களுக்காக பொருட்காட்சியில் அவரை பாராட்டியபோதும், அவர் செய்த பொருளுக்கு பரிசு பெற போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. “எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏனெனில் என் கலையையும் காட்டி விருது பெற விரும்பினேன்,” என்கிறார் பகத் ராம்.

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது மற்றும் வலது: முக்காலி மீது அலங்காரங்கள்

PHOTO • Naveen Macro
PHOTO • Naveen Macro

இடது: ஒரு கயிற்றுக் கட்டில் தயாரிக்க பகத் ராமுக்கு 15 நாட்கள் ஆகிறது. வலது: அளவை பொறுத்து அவற்றுக்கான விலை ரூ.25,000-லிருந்து 30,000 வரை நிர்ணயிக்கப்படுகிறது

*****

அவர் மறக்கமுடியாத ஆர்டர் ஒன்று இருக்கீறது. 12 X 6.5 அடிக்கான மிகப் பெரிய கயிற்றுக் கட்டில் ஒரு வருட காலம் நடந்த விவசாயப் போராட்டங்களுக்காக 2021ம் ஆண்டுசெய்யப்பட்டது. (விவசாயப் போராட்டங்கள் பற்றிய செய்திகளுக்கு ). விவசாயிகள் போராட்டத்தை கயிற்றுக் கட்டிலில் நெய்யும்படி பகத் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

500 கிலோ எடை கொண்ட அந்த கட்டிலுக்கென 1,50,000 ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டது. “பெரிதாக இருந்ததால் முற்றத்தில் அதை வைத்து வேலை செய்ய வேண்டியிருந்தது,” என்கிறார் பகத். தஸ்வீர் சிங் அஹ்லவாத்தால் ஆர்டர் செய்யப்பட்ட இக்கட்டில், அஹ்லவாத் குழுமத்தால் 76 கிலோமீட்டர் பகத்தின் கிராமத்திலிருந்து பயணித்து திகால் சுங்கச் சாவடியை அடைந்தது.

அவரின் கைவினைக் கலை டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா போன்ற இடங்களுக்கும் பயணித்துள்ளது.

“இது ஒரு பேரார்வம். அனைவருக்கும் இது இருக்காது,” என்கிறார் பகத் ராம், ஹரியானாவின் கால்நடை விவசாயி ஒருவர் 35,000 ரூபாய்க்கு கயிற்றுக் கட்டில் வாங்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்து. “அவர் வெறும் கால்நடை விவசாயிதான் என தெரிந்ததும் பணத்தை திரும்பக் கொடுக்க முனைந்தேன். அவர் ஏற்கவில்லை. ஒரு லட்சம் ரூபாயாக இருந்திருந்தாலும் வாங்கியிருப்பேனென அவர் சொன்னார்.”

2019ம் ஆண்டில் இரண்டாம் முறை சென்றதற்குப் பிறகு வருடாந்திர பொருட்காட்சிக்கு போவதை அவர் நிறுத்திவிட்டார். ஏனெனில் போதுமான வருமானம் அவருக்குக் கிடைக்கவில்லை. சொந்த ஊரிலேயே போதுமான அளவு வேலைகள் இருந்தன. புது ஆர்டர்களுடன் அவரது செல்பேசி அடித்துக் கொண்டே இருக்கிறது. “எப்போதும் ஒருவர், கயிற்றுக் கட்டிலோ முக்காலியோ வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்,” என்கிறார் பகத் ராம் பெருமையுடன்.

இக்கட்டுரை மிருணாளின் முகர்ஜி அறக்கட்டளையின் மானியப் பணியின் ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Sanskriti Talwar

ಸಂಸ್ಕೃತಿ ತಲ್ವಾರ್ ನವದೆಹಲಿ ಮೂಲದ ಸ್ವತಂತ್ರ ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು 2023ರ ಪರಿ ಎಂಎಂಎಫ್ ಫೆಲೋ.

Other stories by Sanskriti Talwar
Photographs : Naveen Macro

ನವೀನ್ ಮ್ಯಾಕ್ರೋ ದೆಹಲಿ ಮೂಲದ ಸ್ವತಂತ್ರ ಫೋಟೋ ಜರ್ನಲಿಸ್ಟ್ ಮತ್ತು ಸಾಕ್ಷ್ಯಚಿತ್ರ ನಿರ್ಮಾಪಕ ಮತ್ತು 2023ರ ಪರಿ ಎಂಎಂಎಫ್ ಫೆಲೋ.

Other stories by Naveen Macro
Editor : Sarbajaya Bhattacharya

ಸರ್ಬಜಯ ಭಟ್ಟಾಚಾರ್ಯ ಅವರು ಪರಿಯ ಹಿರಿಯ ಸಹಾಯಕ ಸಂಪಾದಕರು. ಅವರು ಅನುಭವಿ ಬಾಂಗ್ಲಾ ಅನುವಾದಕರು. ಕೊಲ್ಕತ್ತಾ ಮೂಲದ ಅವರು ನಗರದ ಇತಿಹಾಸ ಮತ್ತು ಪ್ರಯಾಣ ಸಾಹಿತ್ಯದಲ್ಲಿ ಆಸಕ್ತಿ ಹೊಂದಿದ್ದಾರೆ.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan