“நர்க் ஹை யே [இது நரகம்].”

தனது கிராமத்தில் ஓடும் நதியான, தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடுத்தப்பட்ட, புத்த நாலாவைப் பற்றி காஷ்மீரா பாய் இவ்வாறு கூறுகிறார். தனது வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில், அது சட்லஜ் ஆற்றில் கலப்பதாக கூறுகிறார்.

நாற்பதுகளில் இருக்கும் காஷ்மீரா பாய், ஒரு காலத்தில், அந்த சுத்தமான நதியை, குடிநீருக்காக மக்கள் நம்பியிருந்ததை நினைவு கூருகிறார். லூதியானாவில் உள்ள கூம்கலன் கிராமத்தில் துவங்கும் புத்த நாலா, பாய் கிராமமான வாலிபூர் கலனுக்கு அடுத்துள்ள சட்லஜுடன் இணைவதற்கு முன்பு, 14 கிலோமீட்டர்கள் லூதியானா வழியாக பாய்கிறது.

“அசின் டான் நர்க் விச் பைதே ஹான் [நாங்கள் நரகத்தில் வாழ்கிறோம்]. வெள்ளம் ஏற்படும் போதெல்லாம், சாக்கடை எங்கள் வீடுகளுக்குள் நுழைகிறது,” என்று கூறுகிறார். "பாத்திரங்களில் வைத்திருக்கும் நீர்,  ஒரே இரவில் மஞ்சளாக மாறும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: லூதியானாவின்  கூம் கலன் கிராமத்தில் துவங்கும் புத்த நாலா, லூதியானா வழியாக 14 கி.மீ தூரம் பயணித்து, வாலிபூர் கலன் கிராமத்தில், சட்லஜில் கலக்கிறது. வலது: 'வெள்ளம் ஏற்படும் போதெல்லாம், இந்த சாக்கடை எங்கள் வீடுகளுக்குள் நுழைகிறது,' என்கிறார் வாலிபூர் காலன் வாசியான காஷ்மீரா பாய்

ஆகஸ்ட் 24, 2024 அன்று, மாசுபட்ட தண்ணீரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அரசு காட்டும் அக்கறையின்மையை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான மக்கள், லூதியானாவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'காலே பானி டா மோர்ச்சா' (தண்ணீர் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டம்) என்ற வாசகம் ஏந்தி நடந்த இந்த போராட்டத்தில் சட்லஜ் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

‘புத்த தரியாவை [நதி] விட்டுவிடுங்கள்! சட்லஜை விட்டு விடுங்கள்.’

புத்த நாலாவில் மாசுபட்டிற்கு எதிரான இந்த போராட்டமும் புதிதல்ல, அதை சுத்தம் செய்வதற்கான திட்டங்களும் புதிதல்ல. சுமார் முப்பது வருடங்களாக நடந்து வரும் இந்த போரட்டங்களால் எந்த பலனும் இல்லை. முதல் திட்டமான, சுத்தமான நதி சட்லஜ் செயல் திட்டம் - 1996ல் தொடங்கப்பட்டது; ஜமால்பூர், பட்டியான் மற்றும் பல்லோக் கிராமங்களில் மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) அமைக்கப்பட்டன.

2020ல், பஞ்சாப் அரசாங்கம், புத்த நாலாவிற்கு ரூ.650 கோடி மதிப்பிலான இரண்டாண்டு புத்துயிர் திட்டத்தை அமைத்தது. முதல்வர் பகவந்த் மான், முந்தைய அரசாங்கத்தை குற்றம் சாட்டி, ஜமால்பூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய எஸ்டிபி மற்றும் புத்த நாலாவை புத்துயிர் பெற வைப்பதற்காக ரூ.315 கோடி மதிப்பிலான பிற திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

ஒருவருக்கொருவர் பழி சொல்வார்களே தவிர, பிரச்சினையை தீர்க்க அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ எதுவும் செய்யவில்லை என்கிறார் காஷ்மீரா பாய். லூதியானாவில் உள்ள ஆர்வலர்கள் பஞ்சாப் அரசாங்கத்தின் பார்வைக்கு இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறார்கள். ஆனால் கோடிகளை செலவழித்த பிறகும், நாலா மாசுபடுவதால், மக்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

60 வயதான மல்கீத் கவுர், மான்சா மாவட்டத்தில் உள்ள அகமத்பூரில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். “அசுத்தமான நீரும், தொழிற்சாலைக் கழிவுகளுமே, நம்மைப் தாக்கும் பல நோய்களுக்குக் காரணம். தண்ணீர் என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. எங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: காலே பானி டா மோர்ச்சா (நீர் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டம்) கண்டன ஊர்வலம், ஆகஸ்ட் 24, 2024 அன்று நிகழ்ந்தது. புத்த நாலா, லூதியானா வழியாகச் சென்று சட்லஜ் நதியுடன் கலக்கும் ஒரு பருவகால நீரோடை. வலது: ராஜஸ்தானைச் சேர்ந்த ஆர்வலர்களும் கண்டன ஊர்வலத்தில் பங்கேற்றனர்

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: 'நல் ஹை லேகின் ஜல் நஹி' (எங்களிடம் குழாய் உள்ளது, ஆனால் தண்ணீர் இல்லை) என்ற வாசகத்தை  ஏந்திய ஒரு ஆர்வலர். வலது: மல்கீத் கவுர் (இடமிருந்து நான்காவது) மான்சா மாவட்டத்தில் உள்ள அகமதுபூரில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். 'அசுத்தமான நீரும், தொழிற்சாலைக் கழிவுகளுமே, நம்மைப் தாக்கும் பல நோய்களுக்குக் காரணம். தண்ணீர் என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. சுத்தமான தண்ணீரை எங்களுக்கு கிடைக்க வேண்டும்,' என்று அவர் கூறுகிறார்

வாலிபூர் கலனில், முழு கிராமமும் நிலத்தடி நீரை நம்பியிருப்பதாக, காஷ்மீர் பாய் கூறுகிறார். ஆழ்துளைகள் 300 அடிக்கும் கீழே செல்கிறது. அதை தோண்டுவதற்கு ரூ. 35,000 - ரூ.40,000 வரை செலவாகிறது என்கிறார். ஆனால் அது கூட அவர்களுக்கு சுத்தமான தண்ணீரை உறுதி செய்வதில்லை என்று அவர் மேலும் கூறுகிறார். கிராமத்தில் உள்ள வசதி படைத்த குடும்பங்கள்,  குடிநீருக்காக தங்கள் வீடுகளில் தண்ணீர் ஃபில்டர்கள் வைத்துள்ளனர். ஆனால் அதையும் தொடர்ந்து சர்வீஸ் செய்யவேண்டிய நிலை உள்ளது.

அதே கிராமத்தைச் சேர்ந்த, பால்ஜீத் கவுர், 50, ஹெபடைடிஸ் சி நோய்க்கு தன் மகனை இழந்துள்ளார். "எனது இரண்டு மகன்களும் ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்," என்று கவுர் கூறுகிறார். இங்கும், அருகிலுள்ள கிராமங்களிலும் இதே போல, பல நோயாளிகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

"நாம் இன்னும் இதை உணரவில்லை என்றால், நம் அடுத்த தலைமுறையினருக்கு தரமான வாழ்க்கை கிடைக்காது என்பதால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்," என்று பதிண்டாவில் உள்ள கோனியானா மண்டியைச் சேர்ந்த 45 வயதான ராஜ்விந்தர் கவுர் கூறுகிறார். “சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் இப்போது புற்றுநோயாளிகள் உள்ளனர். சட்லஜ் நீரை மாசுபடுத்தும் இந்த தொழிற்சாலைகளை மூட வேண்டும். இந்தத் தொழிற்சாலைகள் மூடப்பட்டால் மட்டுமே நம் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

"ஏ சாடி ஹோண்ட் டி லடாய் ஹை [இது எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம்]" என்கிறார், லூதியானாவில் கேல் பானி டா மோர்ச்சாவில் பங்கேற்ற ஆர்வலர் பிபி ஜீவன்ஜோத் கவுர். "இது அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுவதற்கான போராட்டம்."

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: பால்ஜீத் கவுர், ஹெபடைடிஸ் சி நோய்க்கு தன் மகன்களில் ஒருவரை இழந்தார். வலது: 'நாங்கள் இன்னும் உணரவில்லை என்றால், எங்கள் அடுத்த தலைமுறையினர் தரமான  வாழ்க்கை வாழ வாய்ப்பில்லை என்பதால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்,' என்கிறார் பதிண்டாவில் உள்ள கோனியானா மண்டியைச் சேர்ந்த ராஜ்விந்தர் கவுர் (பிங்க் நிற துப்பட்டா அணிந்தவர்)

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

இடது: 'ஆவோ பஞ்சாப் தே தரியவான் தே செஹ்ரி காலே பர்தூஷன் நு ரோகியே' (பஞ்சாப் நதிகளில் கலந்துள்ள விஷ மாசுபாட்டைத் தடுப்போம்) என்று வாசகங்களை ஏந்திய பேரணி பங்கேற்பாளர்கள். வலது: விவசாய நிபுணர், தேவீந்தர் ஷர்மா போராட்டத்தில் பேசுகையில், 'தொழிற்சாலைகள் 40 ஆண்டுகளாக நம் நதிகளை மாசுபடுத்தி வருகிறது. ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை,' என்றார்

அமந்தீப் சிங் பெயின்ஸ், இயக்கத்தின் முன்னணியில் உள்ள ஆர்வலர். அவர் கூறும்போது, ​​“பிரச்சனைக்கான மூல காரணத்தை யாரும் கவனிப்பதில்லை. மாசுபாட்டை சுத்தம் செய்ய திட்டங்களை கொண்டு வரும் அரசாங்கம், தொழிற்சாலைகளை ஏன் நீர் ஆதாரத்தில் கழிவுகளை கொட்ட அனுமதிக்கிறது? மாசுபாடுகள் தரியாவிற்குள் [நதியில்] கலக்கவே கூடாது.”

"சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்," என்கிறார், லூதியானாவைச் சேர்ந்த இந்த வழக்கறிஞர்.

லூதியானாவில் கிட்டத்தட்ட 2,000 தொழிற்துறை மின்முலாம் ஆலைகளும் மற்றும் 300 சாயமிடும் ஆலைகளும் உள்ளன. புத்த நாலாவில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டிற்கு இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபர் பதிஷ் ஜிண்டால், பாரியிடம் கூறுகையில் “பஞ்சாப் விஷம் உடைமை மற்றும் விற்பனை விதிகள், 2014-ன் படி, நிர்வாகம் எந்த நச்சு இரசாயனங்கள் விற்பனை மற்றும் கொள்முதல் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் எந்த நிர்வாகத்திடமும் அத்தகைய பதிவுகள் இல்லை,” என்கிறார்.

தொழிற்சாலைகள் நீர் சுத்திகரிப்பு செயல்முறையான ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜை (ZLD) பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். "சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள் எதுவும் புத்த நாலாவில் கலக்கக் கூடாது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

விவசாய நிபுணரான தேவிந்தர் ஷர்மா, மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் முழுமையாக மூட வேண்டும் என்று கோருகிறார். பாரியிடம் பேசிய அவர், “40 ஆண்டுகளாக தொழிற்சாலைகள் நம் நதிகளை மாசுபடுத்தி வருகின்றன. ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை நாம் ஏன் ஏற்க வேண்டும்? வெறும் முதலீட்டிற்காகவா? அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.”

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

மாசுபட்ட நீரால் (வலது) பாதிக்கப்பட்ட வாலிபூர் கலன் கிராமத்திலிருந்து (இடமிருந்து வலமாக) நரங் சிங், தேவிந்தர் சிங், ஜக்ஜீவன் சிங், விசாகா சிங் க்ரேவால்

PHOTO • Arshdeep Arshi
PHOTO • Arshdeep Arshi

லூதியானாவில் கிட்டத்தட்ட 2,000 தொழில்துறை மின்முலாம் ஆலைகள் மற்றும் 300 சாயமிடும் ஆலைகள் உள்ளன. மாசுபாட்டிற்கு இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். லூதியானா மாவட்டத்தில் உள்ள கவுன்ஸ்பூர் கிராமத்தின் (வலது) வழியாக புத்த நாலா பாய்கிறது

புத்தா நாலாவிற்குள் சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள்/நீர் உட்பட எந்த திரவத்தையும் கலக்கக்கூடாது என்று சாயமிடும் தொழிற்சாலைகளுக்கு தெளிவான உத்தரவுகள் இருந்ததை ஆர்வலர்கள் வெளிப்படுத்தினர். என்ஜிடி விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் PPCB, 10 - 11 ஆண்டுகளாக இது குறித்து மௌனம் காத்தது ஏன் என்று ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

"திரிபுராவில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை தடை செய்ய முடியும் என்றால், பஞ்சாப்பில் ஏன் முடியாது?" என பஞ்சாபின் ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

*****

புத்த நாலாவின் தெளிவான நீர், லூதியானா மற்றும் கிராமங்களை கடந்து கீழ்நோக்கி செல்லும் போது கருமையான நீரோடையாக மாறுகிறது. இது சட்லஜுடன் இணையும் போது, மேலும் இருளுகிறது. இந்த க்ரீஸ் திரவம், ராஜஸ்தான் வரை சென்று, பாகிஸ்தானைக் கடந்து அரபிக்கடலுக்குள் பாய்கிறது. இரண்டு ஆறுகள் சந்திக்கும் ஹரிகே பட்டனில் (பாரேஜ்) பியாஸ் நதிக்கும் சட்லஜ் நதிக்கும் உள்ள வித்தியாசத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாகக் காட்டுகிறது.

PHOTO • Courtesy: Trolley Times
PHOTO • Courtesy: Trolley Times

பிரச்சனைக்கான மூல காரணத்தை கவனிக்காமல், அரசாங்கம் தூய்மைப்படுத்தும் திட்டங்களை மட்டும் கொண்டு வருகிறது. அதே வேளையில் தொழிற்சாலைகளை கழிவுகளை வெளியேற்ற அனுமதிக்கிறது என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர். வலது: சட்லஜுக்குள் நுழையும் புத்த நாலா (2022 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்)

ஆகஸ்ட் 13, 2024 அன்று (இதன் நகல் பாரியிடம் உள்ளது), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) புத்த நாலாவில் மாசுபாட்டின் நிலை குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு (NGT) பதிலளித்தது. நகரத்தில் உள்ள மூன்று பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (CETP) "சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அமைத்திருக்கும் சுற்றுச்சூழல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கழிவுகள் அகற்றல் நிபந்தனைக்கு இணங்கவில்லை" என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

"சுற்றுச்சூழல் மாசுக்கு இழப்பீடு விதிப்பது உட்பட தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு ஆகஸ்ட் 12, 2024 அன்று பிபிசிபிக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதாக சிபிசிபி மேலும் என்ஜிடியிடம் தெரிவித்தது. இதையொட்டி புத்த நாலா நீர், பாசனத்திற்கு தகுதியற்றது என்று பிபிசிபி முந்தைய அறிக்கையில் ஒப்புக்கொண்டது. "விவசாயத்திற்குத் தகுதியற்ற நீர், குடிப்பதற்கு மட்டும் எப்படி தகுதியாக இருக்க முடியும்?" என ஆர்வலர்கள் வாதிட்டனர்.

ஒரு கூட்டறிக்கையில், கண்டன ஊர்வல ஏற்பாட்டாளர்கள், செப்டம்பர் 15 அன்று புத்த நாலாவை அடைக்கும் திட்டத்தை அறிவித்தனர், பின்னர் அது அக்டோபர் 1, 2024 க்கு மாற்றிவைக்கப்பட்டது. இந்த இறுதி எச்சரிக்கைக்குப் பிறகு, செப்டம்பர் 25 அன்று, பிபிசிபி மூன்று சிஈடிபி-களில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் புத்த நாலாவிற்குள் செல்வதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இருப்பினும், அறிக்கைகளின்படி, அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

நீரோடையை அடைப்பதற்குப் பதிலாக, ஆர்வலர்கள் அக்டோபர் 1 ஆம் தேதி லூதியானாவில் உள்ள ஃபெரோஸ்பூர் சாலையில் உள்ளிருப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்து, டிசம்பர் 3, 2024க்குள் செயல்படுமாறு அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தனர்.

“எப்போதாவது ஒருவர் வந்து புத்த நாலாவிலிருந்து, நீர் மாதிரிகளை எடுக்கிறார், ஆனால் ஹொண்டா குச் நஹின் [எதுவும் நடப்பதில்லை]. ஒன்று, இந்த மாசுபாட்டை தடை செய்ய வேண்டும் அல்லது நம் அடுத்த தலைமுறை வாழ சுத்தமான தண்ணீர் வழங்கப்பட வேண்டும்,” என்று அரசாங்க ஆய்வுகள் மற்றும் வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்துள்ள, பல்ஜீத் கவுர் கூறுகிறார்.

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Arshdeep Arshi

ಅರ್ಷ್‌ದೀಪ್ ಅರ್ಶಿ ಚಂಡೀಗಢ ಮೂಲದ ಸ್ವತಂತ್ರ ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು ಅನುವಾದಕರು. ಇವರು ನ್ಯೂಸ್ 18 ಪಂಜಾಬ್ ಮತ್ತು ಹಿಂದೂಸ್ತಾನ್ ಟೈಮ್ಸ್‌ನೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದಾರೆ. ಅವರು ಪಟಿಯಾಲಾದ ಪಂಜಾಬಿ ವಿಶ್ವವಿದ್ಯಾಲಯದಿಂದ ಇಂಗ್ಲಿಷ್ ಸಾಹಿತ್ಯದಲ್ಲಿ ಎಂ ಫಿಲ್ ಪಡೆದಿದ್ದಾರೆ.

Other stories by Arshdeep Arshi
Editor : Priti David

ಪ್ರೀತಿ ಡೇವಿಡ್ ಅವರು ಪರಿಯ ಕಾರ್ಯನಿರ್ವಾಹಕ ಸಂಪಾದಕರು. ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು ಶಿಕ್ಷಕರಾದ ಅವರು ಪರಿ ಎಜುಕೇಷನ್ ವಿಭಾಗದ ಮುಖ್ಯಸ್ಥರೂ ಹೌದು. ಅಲ್ಲದೆ ಅವರು ಗ್ರಾಮೀಣ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ತರಗತಿ ಮತ್ತು ಪಠ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಆಳವಡಿಸಲು ಶಾಲೆಗಳು ಮತ್ತು ಕಾಲೇಜುಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ ಮತ್ತು ನಮ್ಮ ಕಾಲದ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ದಾಖಲಿಸುವ ಸಲುವಾಗಿ ಯುವಜನರೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Priti David
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam