“ஆவோ ஆவோ அப்னா பவிஷ்யாவனி, சுனோ அப்னி ஆகே கி கஹானி…” அவரின் குரல் மந்திர உச்சாடனம் போல, ஜுஹு கடற்கரையில் மாலை நேர நெரிசலில் கேட்கிறது. சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் 27 வயது உதய் குமார், மக்களை வரும்படி அழைத்துக் கொண்டிருக்கிறார்.

அவர் ஒரு ஜோசியரோ, கைரேகை பார்ப்பவரோ, கிளி ஜோசியம் பார்ப்பவரோ இல்லை. ஆனாலும் அவர் அங்கு, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு நான்கடி உயர மடக்கு மேஜையின் மீது இருக்கும் மர்மமான ஒரு கறுப்புப் பெட்டி மேல் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ஓரடி நீள ரோபாவுக்கருகே நின்று கொண்டிருக்கிறார். “இதற்கு பெயர் ஜோதிஷ் கம்ப்யூட்டர் லைவ் ஸ்டோரி,” என்கிறார் அவர் செய்தியாளருக்கு ரோபாட்டை அறிமுகப்படுத்தியபடி.

அந்த இயந்திரம் மனிதர்களின் அதிர்வுகளை ஆராயும் என அவர் குறிப்பிட்டு அந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஹெட்ஃபோன்களை அவரிடம் சென்று ஆவலுடன் நிற்கும் வாடிக்கையாளரிடம் கொடுக்கிறார். சற்று நேரம் கழித்து, ஒரு பெண்ணின் குரல் இந்தியில் பேசுகிறது. எதிர்காலம் கொண்டிருக்கும் ரகசியங்களை சொல்கிறது. இவை யாவும் வெறும் 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் பிகாரின் கெந்தா குக்கிராமத்திலிருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்து வந்த மாமா ராம் சந்தரிடமிருந்து (நகரத்தில் அவரது பெயர் ராஜு) பெற்ற அந்த தொழில்நுட்ப அற்புதத்துக்கு உதய்தான் தற்போதைய ஒரே பராமரிப்பாளர். அவரது மாமா வீடு வரும் ஒவ்வொரு முறையும் நகரத்தின் கதைகளையும் கொண்டு வருவார். “எதிர்காலத்தை சொல்லும் ஒரு அதிசயப் பொருள் இருப்பதாக மாமா எங்களிடம் சொன்னார். அதை வைத்துக் கொண்டு வருமானம் ஈட்டப் போவதாகவும் அவர் சொன்னார். பலரும் அதை நகைச்சுவை என எண்ணி சிரித்தனர். நான் பரவசமடைந்தேன்,” என நினைவுகூருகிறார் உதய். 11 வயதிலிருந்து அவருக்கு நகர வாழ்க்கையின் அற்புதங்களையும் இயந்திரத்தையும் ராஜு அறிமுகப்படுத்தினார்.

PHOTO • Aakanksha
PHOTO • Aakanksha

’ஜோதிஷ் கம்யூட்டர் லைவ் ஸ்டோரி’ என உதய் குமார் அழைக்கும் எதிர்காலத்தை கணிக்கும் ரோபாட்டுடன் கடற்கரையில் அவர்

சொந்தமான சில பிகா நிலத்தில் பாடுபடும் உதயின் பெற்றோர் அடிக்கடி பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்ததால், 4ம் வகுப்பில் கல்வியை கைவிட்டார் உதய். பிகாரின் வெஷாலே மாவட்டத்திலிருந்து மும்பையில் இருந்த மாமா ராஜுவை சென்று சேரும்போது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கத்தையும் உதய் கொண்டிருந்தார். அப்போது அவர் பதின்வயதுகளில் இருந்தார். அவர் சொல்கையில், “இந்த இயந்திரத்தை பார்க்க விரும்பினேன், மும்பையையும் பார்க்க விரும்பினேன்,” என்கிறார் உதய்.

அவருடைய மாமா பயன்படுத்தும் இயந்திரம், சென்னை மற்றும் கேரளாவை சேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. 90களின் பிற்பகுதிகளில்  மும்பைக்கு அந்த இயந்திரம் வந்து சேர்ந்தது. அதை செய்த கலைஞர்களில் ஒருவரை ராஜு மாமா சந்தித்து, அந்த இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வியபாரம் தெரிந்து கொண்டார்.

“கிட்டத்தட்ட 20-25 பேர் இந்த வேலையை செய்தனர்,” என்கிறார் உதய். “அவர்களில் பெரும்பான்மையானோர் தெற்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள். பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து கொஞ்ச பேர்தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே இயந்திரத்தைதான் வைத்திருந்தனர்.”

ராஜுவை போல அவர்கள் அனைவரும் நகரத்தை இந்த இயந்திரத்துடன் சுற்றி கடைசியாக ஜுகு கடற்கரையை அடைந்தனர். நகரம் முழுக்க சற்றிய மாமாவுடன் உதயும் சென்றார். மாமாவின் வருமானத்தின் நான்கில் ஒரு பகுதி, இயந்திரத்தின் வாடகைக்கு சென்று விடும். இயந்திரத்தின் விலை அதிகம். உதயின் மாமா வியாபாரம் தொடங்கியபோது அதன் விலை கிட்டத்தட்ட ரூ.40,000. ஆனால் அவர் இறுதியில் அதை வாங்கி விட்டார்.

PHOTO • Aakanksha
PHOTO • Aakanksha

மும்பை நகரத்தை இயந்திரத்துடன் சுற்றுகிறார் உதய். எனினும் ஜுஹு கடற்கரைக்கென சிறப்பு இடம் அவருள் இருக்கிறது

இத்தகைய இயந்திரம் செய்யக் கூடிய உத்திகளை உதயால் கற்றுக் கொள்ள முடியவில்லை. பல வருடங்களுக்கு முன் ராஜு மறைந்த பிறகு, எதிர்காலம் சொல்லும் இந்த இயந்திரத்தை உதய் வைத்துக் கொண்டார். அவருடைய கற்பனையை ஒரு காலத்தில் பீடித்திருந்த ஒரு பாரம்பரியத்தை தான் தொடருவதாக உதய் நினைத்துக் கொண்டார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு எதிர்காலம் தெரிந்து கொள்ள மக்கள் 20 ரூபாய் கொடுத்தனர். கடந்த நான்கு வருடங்களில் அது ரூ.30 ஆக உயர்ந்து விட்டது. கோவிட் தொற்று இந்த வியாபாரத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. “பலர் இந்த வியாபாரத்தை காலப்போக்கில் கைவிட்டனர்,” என்கிறார் உதய். தொற்றுக்கு பிறகு இந்த மாய இயந்திரத்தை வைத்திருக்கும் ஒரே நபர் அவர்தான்.

இயந்திரம் கொடுக்கும் வருமானத்தைக் கொண்டு மட்டுமே பிழைப்பது உதய்க்கும் சிரமமாகத்தான் இருக்கிறது. அவரது மனைவியும் ஐந்து வயது மகனும் கிராமத்தில் வசிக்கின்றனர். மகனை மும்பையில் படிக்க அவர் விரும்புகிறார். காலை நேரத்தில் அவர் பல வேலைகளை செய்கிறார். எழுத்தர் வேலை தொடங்கி, கையேடுகள் விற்பது வரை பல வேலைகள். எந்த வேலை கிடைத்தாலும் செய்யத் தயாராக இருக்கிறார் அவர். “எனக்கு காலை வேலை ஏதும் கிடைக்காதபோது, இங்கு நான் ரோபாட்டுடன் நின்று, குடும்பத்துக்கு அனுப்புவதற்கான வருமானம் ஈட்டுகிறேன்,” என்கிறார் அவர்.

மாலை 4 மணி தொடங்கி, நள்ளிரவு வரை ஜுஹு கடற்கரையில் உதய் நிற்கிறார். வேறு இடமெனில் அபராதம் விதிக்கப்படும் என பயப்படுகிறார் அவர். இயந்திரத்தை தூக்கிக் கொண்டு செல்வதும் கஷ்டம். வார இறுதி நாட்களில் அவரது வியாபாரம் நன்றாக போகும். ஆவலுடன் வரும் பலரின் வானியல் செய்திகளை அவர் தெரியப்படுத்துவார். அந்த நாட்களின்போது அவரின் வருமானம் ரூ.300-500 இருக்கும். இந்த வருமானம் எல்லாம் சேர்ந்து மாதத்துக்கு ரூ. 7,000-10,000 ரூபாய் கிடைக்கும்.

PHOTO • Aakanksha
PHOTO • Aakanksha

மாமாவிடமிருந்து உதய்குமார் இயந்திரம் பெற்றிருக்கிறார். மும்பை மீதான ஆவலும் இயந்திரம் மீதான விருப்பமும்தான் பதின்வயதில் அவரை மும்பைக்கு வரவைத்தன

”கிராமத்தில் ஜோதிடர்களைக் கூட நம்புவார்கள். இயந்திரங்களை நம்ப மாட்டார்கள். எனவே அங்கு நல்ல வருமானம் இருப்பதில்லை,” என்கிறார் உதய், கிராமத்தில் வசிக்கும் சக பிகாரிகளை கொண்டு வர முடியாததை குறித்து. மும்பைதான் அவரது வணிகத்துக்கான மையம் என சொல்கிறார். எதிர்காலம் சொல்லும் இயந்திரம் ஆச்சரியம் அளிப்பதாக இருந்தாலும் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டாலும் அவருக்கு ஓரளவு வருமானத்தை அது கொடுத்து விடுகிறது.

“சிலருக்கு வேடிக்கையாக இருக்கும். சிரிப்பார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். சமீபத்தில் நம்பிக்கையின்றி சிரித்த ஒருவரை, அவரது நண்பர் வலியுறுத்தி கேட்க வைத்த பிறகு, அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு வயிற்றுப் பிரச்சினை இருப்பதை ரோபாட் கண்டறிந்து, கவலைப்பட வேண்டாமென சொன்னதாக கூறினார். உண்மையில் அவ்வப்போது வயிற்றுப் பிரச்சினை வரும் என சொன்னார். அவரைப் போன்ற பலரை நான் சந்தித்திருக்கிறேன்,” என்கிறார் உதய். “நம்ப விரும்புபவர்கள், நம்பிக் கொள்ளலாம்.”

“இயந்திரம் எப்போதும் கைவிட்டதில்லை,” என்கிறார் உதய் கர்வத்துடன், தன் இயந்திரத்தின் சூட்சுமம் குறித்து.

எப்போதாவது வேலை பார்க்காமல் அது நின்று போயிருக்கிறதா?

நின்றுபோனால் அதை சரிபார்த்து, ஒயர்களை இணைக்க டவுனில் ஒரு மெக்கானிக் இருப்பதாக சொல்கிறார் உதய்.

“அது சொல்வதை நான் நம்புகிறேன். என் வேலை பார்ப்பதற்கான நம்பிக்கையை அது அளிக்கிறது,” என்கிறார் உதய். எனினும் தன் வாழ்க்கையின் எதிர்காலத்தை பற்றி இயந்திரம் சொல்ல வைப்பதற்கு தயங்குகிறார். “உள்ளே மாயம் இருக்கிறது. என்னை பற்றி இயந்திரம் சொல்வது இன்னுமே எனக்கு பரவசம் அளிக்கிறது. அதை நம்புங்கள் என நான் சொல்ல மாட்டேன். நீங்களே கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்கிறார் சிரித்தபடி.

PHOTO • Aakanksha

எதிர்காலத்தை சொல்லும் அந்த இயந்திரத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள், சந்தேகத்துடன் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்

PHOTO • Aakanksha

‘கிராமத்தில் ஜோதிடர்களைத்தான் மக்கள் நம்புவார்கள், இயந்திரங்களை அல்ல. அதனால் அங்கு வருமானம் கிடைப்பதில்லை,’ என்கிறார் உதய். மும்பைதான் அவரது வணிகத்துக்கான மையம்

PHOTO • Aakanksha

இயந்திரத்தின் உச்சரிப்பு சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்; சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்னும் உதய் ஒருபோதும் இயந்திரம் தவறாக சொன்னதில்லை என்கிறார்

PHOTO • Aakanksha

இயந்திரத்தை மட்டும் கொண்டு அவரால் பிழைக்க முடியாது. காலையில் கிடைக்கும் வேலைகளை செய்கிறார். மாலை ஆனால் கடற்கரையில் இயந்திரத்துடன் நிற்கிறார்

PHOTO • Aakanksha

ஒரு வாடிக்கையாளர் ரூ.30-க்கு எதிர்காலத்தை தெரிந்து கொள்கிறார்

PHOTO • Aakanksha

கோவிட் தொற்றுக்காலத்தில் அவரின் வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு அவர் வியாபாரத்தைத் தொடர்ந்தார்

PHOTO • Aakanksha

தன்னை பற்றி இயந்திரம் சொல்வதை பற்றி பரவசம் கொள்கிறார் உதய். ‘அதை நான் நம்புகிறேன்,’ என்கிறார் அவர்

தமிழில்: ராஜசங்கீதன்

Aakanksha

ಆಕಾಂಕ್ಷಾ ಅವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ವರದಿಗಾರರು ಮತ್ತು ಛಾಯಾಗ್ರಾಹಕರು. ಎಜುಕೇಷನ್ ತಂಡದೊಂದಿಗೆ ಕಂಟೆಂಟ್ ಎಡಿಟರ್ ಆಗಿರುವ ಅವರು ಗ್ರಾಮೀಣ ಪ್ರದೇಶದ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ತಮ್ಮ ಸುತ್ತಲಿನ ವಿಷಯಗಳನ್ನು ದಾಖಲಿಸಲು ತರಬೇತಿ ನೀಡುತ್ತಾರೆ.

Other stories by Aakanksha
Editor : Pratishtha Pandya

ಪ್ರತಿಷ್ಠಾ ಪಾಂಡ್ಯ ಅವರು ಪರಿಯ ಹಿರಿಯ ಸಂಪಾದಕರು, ಇಲ್ಲಿ ಅವರು ಪರಿಯ ಸೃಜನಶೀಲ ಬರವಣಿಗೆ ವಿಭಾಗವನ್ನು ಮುನ್ನಡೆಸುತ್ತಾರೆ. ಅವರು ಪರಿಭಾಷಾ ತಂಡದ ಸದಸ್ಯರೂ ಹೌದು ಮತ್ತು ಗುಜರಾತಿ ಭಾಷೆಯಲ್ಲಿ ಲೇಖನಗಳನ್ನು ಅನುವಾದಿಸುತ್ತಾರೆ ಮತ್ತು ಸಂಪಾದಿಸುತ್ತಾರೆ. ಪ್ರತಿಷ್ಠಾ ಗುಜರಾತಿ ಮತ್ತು ಇಂಗ್ಲಿಷ್ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುವ ಕವಿಯಾಗಿಯೂ ಗುರುತಿಸಿಕೊಂಡಿದ್ದು ಅವರ ಹಲವು ಕವಿತೆಗಳು ಮಾಧ್ಯಮಗಳಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿವೆ.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan