கடைசியாக அப்துல் குமார் மக்ரே பட்டு நெசவு செய்து 30 வருடங்கள் ஆகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்ஸுக்கும் கீழே செல்லும் கொடுமையான குளிர்காலங்களை தாக்குப் பிடிக்க உதவும் கம்பளித் துணியை நெய்யும் கடைசி நெசவாளர்களில் அவரும் ஒருவர்.

“ஒரு நாளில் 11 மீட்டர் துணி வரை நான் நெய்திருக்கிறேன்,” என நினைவுகூருகிறார் 82 வயதாகும் அவர். கிட்டத்தட்ட பார்வை முழுமையாக இழந்துவிட்டார். கவனமாக அறையைக் கடக்க, சுவரைப் பிடித்துக் கொண்டு அவர் நடக்கிறார். “50 வயதாக இருக்கும்போது, அதிக நெசவு காரணமாக என் கண் பார்வை மங்கியது.”

ஹப்பா கதூன் சிகரம் தெரியும் பந்திப்போர் மாவட்டத்தின் தவார் கிராமத்தில் அப்துல் வாழ்கிறார். 4,253 பேர் (கணக்கெடுப்பு 2011) அங்கு வாழ்கின்றனர். தற்போது பட்டு நெய்பவர் எவரும் இல்லை என்னும் அவர், “பத்தாண்டுகளுக்கு முன் வரை, குளிர்கால மாதங்களில் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் கோடைகாலத்திலும் வசந்தகாலத்திலும் விற்பதற்கான துணிகள் நெய்யப்பட்டன,” என்கிறார்.

ஃபெரான் ( பாரம்பரியமாக மேலே அணியப்படும் ஆடை), துபாதி (போர்வை), உறைகள் போன்றவற்றை ஸ்ரீநகரிலும் பிற மாநிலங்களிலும் விற்பதற்காக அப்துலும் அவரது குடும்பத்தினரும் தயாரிப்பார்கள்.

அக்கலையின்பால் அப்துல் கொண்டிருக்கும் நேசத்தை தாண்டி, அதில் பிழைப்பது என்பது இந்தக் காலத்தில் சுலபமில்லை. மூலப்பொருளான கம்பளி, நேரடியாக கிடைப்பதில்லை. அப்துல் போன்ற நெசவாளர்கள் செம்மறிகளை வளர்த்தார்கள். பட்டு நெசவுக்காக விலங்குகளை வளர்த்தனர். 20 வருடங்களுக்கு முன்பு, 40லிருந்து 45 செம்மறிகள் குடும்பத்திடம் இருந்தபோது, கம்பளி பெறுவது சுலபமாகவும் மலிவாகவும் இருந்தது என்கிறார் அவர். “நல்ல லாபமும் எங்களுக்குக் கிடைத்தது,” என நினைவுகூருகிறார். தற்போது குடும்பத்துக்கு மொத்தமே ஆறு செம்மறி ஆடுகள்தான் இருக்கின்றன.

Left: Abdul Kumar Magray at his home in Dawar
PHOTO • Ufaq Fatima
Right: Dawar village is situated within view of the Habba Khatoon peak in the Gurez valley
PHOTO • Ufaq Fatima

இடது: தவாரிலுள்ள வீட்டில் அப்துல் குமார் மக்ரே வலது: குரேஸ் பள்ளத்தாக்கின் ஹப்பா கதூன் சிகரம் தெரியும் இடத்தில் தவார் கிராமம் இருக்கிறது

Left: Sibling duo Ghulam and Abdul Qadir Lone are among the very few active weavers in Achura Chowrwan village.
PHOTO • Ufaq Fatima
Right: Habibullah Sheikh, pattu artisan from Dangi Thal, at home with his grandsons
PHOTO • Ufaq Fatima

இடது: சகோதரர்களான குலாம் மற்றும் அப்துல் காதிர் லோன் ஆகியோர் அசுரா சவுரான் கிராமத்தில் மிஞ்சியிருக்கும் சில நேசவாளர்கள் ஆவர். வலது: வீட்டில் பேரன்களுடன் தங்கி தலை சேர்ந்த பட்டு கைவினைஞரான ஹபிபுல்லா ஷேக்

பந்திப்போர் மாவட்டத்தின் துலாய்ல் பள்ளத்தாக்கிலுள்ள தந்தி தல் கிராமத்தை சேர்ந்த ஹபிபுல்லா ஷேக்கும் அவரது குடும்பத்தினரும் பட்டு வணிகத்தை விட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் சொல்கையில், “முன்பு, செம்மறி வளர்க்கும் பண்பாடு இருந்தது. ஒவ்வொரு குடும்பத்திடமும் 15-20 செம்மறிகள் இருக்கும். குடும்பத்துடன் தரைதளத்தில் அவை வசிக்கும்,” என்கிறார்.

ஆனால் அது மாறிவிட்டது என்கிறார் 70 வயது குலாம் காதிர் லோன். பந்திப்போர் மாவட்டத்தின் அச்சுரா சவ்ர்வான் (ஷா பொரா என்றும் அழைக்கப்படுகிறது) கிராமத்தில் இருக்கும் சில நெசவாளர்களில் அவரும் ஒருவர். “குரேஸ்ஸில் இருக்கும் காலநிலை கடந்த பத்தாண்டுகளில் மாறிவிட்டது. குளிர்காலங்கள் கடுமையாகி விட்டன. செம்மறிகளுக்கு பிரதான தீவனமாக இருக்கும் புற்களின் வளர்ச்சியை அது பாதித்தது. பெரிய மந்தைகளை வளர்க்கும் பழக்கத்தை மக்கள் நிறுத்திவிட்டனர்.”

*****

கிட்டத்தட்ட 25 வயதாக இருக்கும்போது முதன்முறையாக பட்டு நெய்யத் தொடங்கினார் அப்துல் குமார். “என் தந்தைக்கு உதவுவேன். காலப்போக்கில் தொழிலைக் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர். கைவினைத் தொழில், பாரம்பரியமாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கையளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரின் மூன்று மகன்களில் எவரும் அத்தொழில் செய்ய விரும்பவில்லை. “முன்பு தேவைப்பட்ட அதே அளவு உழைப்பு பட்டுக்கு வேண்டும். ஆனால் லாபம் ஒன்றும் கிடைக்காது,” என அவர் விளக்குகிறார்.

நெசவுத் தொழிலை அப்துல் தொடங்கியபோது, ஒரு மீட்டர் பட்டு ரூ.100-க்கு விற்றது. காலப்போக்கில் விலை அதிகரித்தது. இப்போது ஒரு மீட்டர் ரூ.7,000. இறுதிப் பொருளின் விலை அதிகமாக இருந்தாலும் நெசவாளர்களுக்கு கிடைக்கும் லாபம் சொற்பம்தான். செம்மறி வளர்ப்பதற்கான வருடாந்திர செலவு, வருடாந்திர பட்டு விற்பனையை விட தொடர்ந்து அதிகமாகதான் இருந்து வருகிறது.

”பட்டு நெய்வதென்பது நுட்பமான கலை. ஒரு நூல் தவறாக வைத்துவிட்டாலும் மொத்த துணியும் நாசமாகி விடும். புதிதாகத்தான் தொடங்க வேண்டியிருக்கும்,” என்கிறார் அப்துல். “(ஆனால்) அதற்கான கடின உழைப்பில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் அத்துணி கொடுக்கும் கதகதப்பு, குரேஸ் போன்ற குளிர்ப்பகுதியில் ஒப்பிட முடியாதது.”

A wooden spindle (chakku) and a hand-operated loom (waan) are two essential instruments for pattu artisans
PHOTO • Ufaq Fatima
A wooden spindle (chakku) and a hand-operated loom (waan) are two essential instruments for pattu artisans
PHOTO • Courtesy: Ufaq Fatima

நூல் சுற்றும் ஒரு மரக்கோல் (சக்கு) மற்றும் கைத்தறி (வான்) ஆகிய இரண்டும் பட்டு கைவினைஞர்களுக்கு அத்தியாவசியக் கருவிகள்

The villages of Achura Chowrwan (left) and Baduab (right) in Kashmir’s Gurez valley. Clothes made from the woolen pattu fabric are known to stand the harsh winters experienced here
PHOTO • Ufaq Fatima
The villages of Achura Chowrwan (left) and Baduab (right) in Kashmir’s Gurez valley. Clothes made from the woolen pattu fabric are known to stand the harsh winters experienced here
PHOTO • Ufaq Fatima

காஷ்மீர் குரேஸின் பள்ளத்தாக்கிலுள்ள அச்சுரா சவ்ர்வான் (இடது) மற்றும் படுவாப் (வலது) கிராமங்கள். கம்பளி பட்டு துணியில் உருவாக்கப்படும் ஆடைகள், இங்கு நேரும் கடும் குளிர்காலங்களை தாக்குப்பிடிக்க வல்லவை

கையளவு இருக்கும் சக்கு என அழைக்கப்படும் நூல் சுற்றும் மரக்கோலை கொண்டு கைவினைஞர்கள் கம்பளியை நூலாக்குவார்கள். சக்கு என்பது இரு முனைகள் கொண்ட ஒரு சிறு பிணைப்புக் கோல் ஆகும். அதில் உருவாக்கப்படும் நூல் பிறகு தறியின் உதவியுடன் துணியாக நெய்யப்படுகிறது. தறி உள்ளூர் மொழியில் வான் என அழைக்கப்படுகிறது.

பட்டு தயாரிக்கும் வேலையை ஒருவரால் செய்ய முடியாது. எப்போதும் மொத்தக் குடும்பமும் தயாரிப்பில் பங்களிக்கும். பொதுவாக ஆண்கள் செம்மறிகளிலிருந்து கம்பளி எடுப்பார்கள். பெண்கள் கம்பளியை தறியில் சுற்றுவார்கள். “அவர்கள்தான் கடினமான பகுதியை செய்வார்கள். அவையன்றி வீட்டு வேலைகளையும் செய்வார்கள்,” என்கிறார் அன்வர் லோன். தறியில் வழக்கமாக குடும்பத்தின் ஆண்கள்தான் வேலை செய்வார்கள்.

85 வயது ஸூனி பேகம் தர்த் ஷின் சமூகத்தை சேர்ந்தவர். பட்டு நெய்யக்கூடிய சில பெண்களில் அவரும் ஒருவர். “எனக்கு தெரிந்த ஒரே கைவினைக் கலை அதுதான்,” என்கிறார் அவர் உள்ளூரின் ஷினா மொழியில். அவரின் மகனான 36 வயது விவசாயி இஸ்தியாக் லோன், நமக்கு மொழிபெயர்த்து சொல்கிறார்.

“பட்டு வணிகம் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் நான் கோயீ (பெண்களுக்கான தலைத் துணி) போன்ற விஷயங்களை சில மாதங்களுக்கு ஒரு முறை செய்கிறேன். பேரனை மடியில் வைத்தபடி, ஷினா மொழியில் பஷ் என அழைக்கப்படும் செம்மறி கம்பளியை சக்கு வைத்து நூலாக சுற்றும் முறையை செய்து காட்டுகிறார் ஸூனி. “என் தாயிடமிருந்து இக்கலையை நான் கற்றுக் கொண்டேன். இது மொத்த முறையும் செய்ய எனக்கு பிடிக்கும்,” என்கிறார் அவர். “என் கைகளால் முடியும் வரை இதை நான் செய்ய விரும்புகிறேன்.”

குரேஸ் பள்ளத்தாக்கை சேர்ந்த பட்டு நெசவாளர்கள் தர்த் - ஷின் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஜம்மு காஷ்மீரில் அச்சமூகம் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டுள்ளது. பள்ளத்தாக்குக்கு கிட்டத்தட்ட பக்கவாட்டில் இருக்கும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டால் பிரிக்கப்பட்டிருக்கும் இச்சமூகம் பட்டு பாரம்பரியத்தில் இணைந்திருக்கிறது. அதன் தேவை சரிந்ததற்கும், அரசின் ஆதரவின்மைக்காகவும் வருத்தம் கொண்டிருக்கின்றனர்.

Left: Zooni Begum with her grandson at her home in Baduab.
PHOTO • Ufaq Fatima
Right. She shows us a khoyeeh, a traditional headgear for women, made by her
PHOTO • Ufaq Fatima

இடது: ஸூனி பேகம் பேரனுடன் படுவாப் வீட்டில். வலது: அவர் தயாரித்த, பெண்கள் தலையில் அணியும் கோயீயை காட்டுகிறார்

Zooni Begum demonstrates how a chakku is used to spin loose wool into thread
PHOTO • Ufaq Fatima
Zooni Begum demonstrates how a chakku is used to spin loose wool into thread
PHOTO • Ufaq Fatima

கம்பளியை நூலாக எப்படி சக்குவில் சுற்றுவதென செய்து காட்டுகிறார் ஸூனி பேகம்

*****

தவாரின் கிழக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் படுவாப் கிராமத்தில் 90 வயதுகளிலிருக்கும் நெசவாளர் அன்வர் லோன் வசிக்கிறார். 15 வருடங்களுக்கு முன் அவர் செய்த பட்டுப் போர்வை கிடக்கிறது. “எட்டு மணிக்கு என் வேலையைத் தொடங்கி மாலை நான்கு மணிக்கு முடிப்பேன். வயதான பிறகு, மூன்று, நான்கு மணி நேரங்கள்தான் நெய்ய முடிகிறது.” ஒரு மீட்டர் துணி நெய்ய அன்வருக்கு ஒரு முழு நாள் ஆகிவிடும்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு பட்டு விற்க அன்வர் தொடங்கினார். “குரேஸிலும் வெளியிலும் தேவை இருந்ததால் என்னுடைய வணிகம் கொழித்தது. குரேஸுக்கு வந்த பல வெளிநாட்டவருக்கு நான் பட்டு விற்றிருக்கிறேன்.”

அச்சுரா சவ்ர்வான் (அல்லது ஷா பொரா) கிராமத்தில், பலர் பட்டு வணிகத்தை கைவிட்டுவிட்டனர். ஆனால் சகோதரர்களான 70 வயது குலாம் காதிர் லோனும் 71 வயது அப்துல் காதிர் லோனும் இன்னும் தொழிலை செய்து வருகின்றனர். குளிர்காலத்தின் உச்சியில், காஷ்மீரின் பிற பகுதிகளிலிருந்து பள்ளத்தாக்கு துண்டிக்கப்பட்டாலும் பெரும்பாலான குடும்பங்கள், இடம்பெயர்ந்து சென்றாலும், அவர்கள் அங்கேயே தங்கி நெசவு வேலையை செய்வார்கள்.

“நான் நெய்யத் தொடங்கிய சரியான வயதை சொல்ல முடியவில்லை. ஆனால் மிக இளம் வயதில் தொடங்கினேன்,” என்கிறார் குலாம். “நெசவில் நாங்கள் சர்க்கானா மற்றும் சாஷ்ம் இ புல்புல் போன்ற பல நெசவுகளை செய்தோம்.”

சர்க்கானா என்பது கட்டங்கள் இருக்கும் பாணி. சாஷ்ம் இ புல்புல் நுட்பமாக நெய்யப்பட்டு புல்புல் பறவையின் கண் போல் இருப்பதாக சொல்லப்படும் பாணி. கவனமாக நெய்யப்படும் இந்த பட்டு நெசவுகள், இயந்திரம் உருவாக்கும் துணியை விட கடினமானவை.

Left: Anwar Lone showing the woven blanket he made 15 years ago.
PHOTO • Ufaq Fatima
Right: Abdul Qadir with a charkhana patterned fabric
PHOTO • Ufaq Fatima

இடது: 15 வருடங்களுக்கு முன் தைக்கப்பட்ட போர்வையை அன்வர் லோன் காட்டுகிறார். வலது: சர்க்கானா பாணி துணியுடன் அப்துல் காதிர்

Left: Ghulam Qadir wears a charkhana patterned pheran, a gown-like upper garment.
PHOTO • Ufaq Fatima
Right: The intricate chashm-e-bulbul weave is said to resemble the eye of a bulbul bird. It is usually used to make blankets
PHOTO • Ufaq Fatima

இடது: சர்க்கானா பாணி பெரானை காதிர் உடுத்தியிருக்கிறார். நுட்பமான சஷ்ம் இ புல்புல் நெசவு புல்புல் பறவையின் கண்ணை போல் இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக போர்வைகள் தயாரிக்க இது பயன்படுகிறது

"உடைகளின் பாணி காலப்போக்கில் வெகுவாக மாறியிருக்கிறது," என்கிறார் குலாம். "ஆனால் பட்டு 30 வருடங்களுக்கு முன் இருந்தது போலவே இருக்கிறது." வருடத்துக்கு ஒருமுறை வாங்கும் உள்ளூர்வாசிகளை கொண்டு இந்த காலத்தில் லாபமீட்ட முடிவதில்லை என்கின்றனர் அந்த சகோதரர்கள்.

இக்கலையை கற்க தேவைப்படும் தீவிர கவனமும் பொறுமையும் இளையோரிடம் இல்லை என்கிறார் அப்துல் காதிர். "அடுத்த 10 வருடங்களில் பட்டு வழக்கொழிந்து விடுமென நினைக்கிறேன்" என்கிறார் அப்துல். "அதற்கு புதிய நம்பிக்கையும் புதிது படைக்கும் விருப்பமும் இருக்க வேண்டும். அதற்கு அரசாங்கத்தின் தலையீடு இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.

அப்துல் குமாரின் மகன் ரெஹ்மான், தவார் மார்க்கெட்டில் மளிகைக் கடை வைத்திருக்கிறார். நெசவில் பிழைக்க முடியாது என்கிறார் அவர். "லாபத்தை தாண்டிய உழைப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது."

குரேஸ் எல்லையருகே இருக்கும் தூரப்பகுதி. அதிகாரிகளின் கவனம் அரிதாகவே கிடைக்கும். ஆனால் புது யோசனைகள், அழிந்து கொண்டிருக்கும் இக்கலைக்கு புத்துயிர்ப்பு கொடுக்கலாம். இப்பகுதி மக்களுக்கு மீண்டும் நிலையான வருமானம் கொடுக்கும் வாய்ப்பையும் அது கொடுக்கலாம்.

தமிழில்: ராஜசங்கீதன்

Ufaq Fatima

ಉಫಾಕ್ ಫಾತಿಮಾ ಕಾಶ್ಮೀರ ಮೂಲದ ಸಾಕ್ಷ್ಯಚಿತ್ರ ಛಾಯಾಗ್ರಾಹಕ ಮತ್ತು ಬರಹಗಾರ.

Other stories by Ufaq Fatima
Editor : Swadesha Sharma

ಸ್ವದೇಶ ಶರ್ಮಾ ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದಲ್ಲಿ ಸಂಶೋಧಕ ಮತ್ತು ವಿಷಯ ಸಂಪಾದಕರಾಗಿದ್ದಾರೆ. ಪರಿ ಗ್ರಂಥಾಲಯಕ್ಕಾಗಿ ಸಂಪನ್ಮೂಲಗಳನ್ನು ಸಂಗ್ರಹಿಸಲು ಅವರು ಸ್ವಯಂಸೇವಕರೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Swadesha Sharma
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan