பிப்ரவரி 28, 2023 மாலை 6 மணி. அழகான கோல்தோதா கிராமத்தில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியதும் 35 வயது ராம்சந்திர தோதாகே நீண்ட இரவுக்கு தயாராகிறார். அவர் அதிக ஆற்றல் கொண்ட ‘கமாண்டர்’ டார்ச் லைட்டை பரிசோதித்துக் கொள்கிறார். படுக்கைகளை தயார் செய்கிறார்.

அவர்களின் சிறிய வீட்டில், மனைவி ஜெயஸ்ரீ இரவுணவான பருப்பு மற்றும் காய்கறி கூட்டு செய்கிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் 70 வயது தாதாஜி தோதாகேயும் இரவுக்கு தயாராகிறார். அவரின் மனைவி, தங்களின் நிலத்தில் விளைவித்த மணம் கொண்ட அரிசி வகையை கொண்டு சோறும் சப்பாத்திகளும் தயாரிக்கிறார்.

“கிட்டத்தட்ட நாங்கள் தயாராகிவிட்டோம்,” என்கிறார் 35 வயதுக்காரர். “எங்களின் உணவு தயாரானதும் கிளம்பிவிடுவோம்.” ஜெயஸ்ரீயும் ஷாகுபாயும் எங்களுக்கான இரவுணவை கட்டிக் கொடுப்பார்கள் என்கிறார்.

மனா (பட்டியல் பழங்குடி) சமூகத்தை சேர்ந்த தோதாகேகளின் இரு தலைமுறைகளை சேர்ந்த தாதாஜியும் ராம்சந்திராவும்தான் என்னை இன்று பார்த்துக் கொள்ளப் போகிறவர்கள். தாதாஜி பாபாசாகெப் அம்பேத்கரை பின்பற்றுபவர். விவசாயியும் கூட. தந்தையின் அண்ணனான பிகாஜி, விவசாயம் பார்க்க முடியாதளவுக்கு ஆரோக்கியம் குன்றியிருப்பதால், குடும்பத்தின் ஐந்து ஏக்கர் நிலத்தை ராம்சந்திரா பார்த்துக் கொள்கிறார். கிராமத்துக்கும் காவல்துறைக்கும் இணைப்பாக இருக்கும் ‘காவலர் தலைவர்’ பதவியில் முன்பு இருந்தவர் பிகாஜி.

சில மைல்கள் தொலைவில் இருக்கும் ராம்சந்திராவின் நிலத்தில், ஜக்லி என அவர்கள் குறிப்பிடும் இரவுரோந்து செல்ல, நாக்பூர் மாவட்டத்தின் பிவாபூர் தாலுகா கிராமத்தில் நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்தோம். வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதுதான் பணி அது. ராம்சந்திராவின் மூத்த மகனான, ஒன்பது வயது அஷுடோஷும் எழுவர் கொண்ட எங்களின் குழுவில் ஒருவர்.

Left to right: Dadaji, Jayashree, Ramchandra, his aunt Shashikala and mother Anjanabai outside their home in Kholdoda village
PHOTO • Jaideep Hardikar

இடதிலிருந்து வலதுக்கு: தாதாஜி, ஜெயஸ்ரீ, ராம்சந்திரா, அத்தை ஷஷிகலா மற்றும் தாய் அஞ்சனாபாய் ஆகியோர் கோல்தோதா கிராமத்து வீட்டுக்கு வெளியே

நகரத்திலிருந்து வருபவர்களுக்கு சாகசம் போல் தெரியலாம். ஆனால் என்னை கவனித்து கொள்பவர்களுக்கு, அது வருடம் முழுக்க நடக்கும் ஓர் அன்றாட நிகழ்வு. அவர்கள் குறுவை சாகுபடிக்காக போட்டிருந்த மிளகாய், துவரை, கோதுமை, உளுந்து ஆகியவை விளைச்சலை நெருங்கிக் கொண்டிருந்தன. அதுவரை பயிர் காக்கப்பட வேண்டும்.

தாதாஜியின் நிலம் மறுபக்கத்தில் இருக்கிறது. ஆனால் இரவை நாங்கள் ராம்சந்திராவின் நிலத்தில் கழிக்கவிருக்கிறோம். இரவுணவையும் அங்கேயே, அநேகமாக தீமூட்டி சுற்றியமர்ந்து எடுத்துக் கொள்வோம். குளிர் அதிகமாக இருந்தது. 14 டிகிரி செல்சியஸ் அளவு இருந்தது. 2022ன் டிசம்பரும் 2023ன் ஜனவரியும் வழக்கத்தில் இல்லாத அதீத குளிரோடு இருந்ததாக ராம்சந்திரா கூறுகிறார். இரவின் தட்பவெப்பம் 6-7 டிகிரி வரை குறைந்திருக்கிறது.

இரவுரோந்து பார்க்க, ஒரு குடும்ப உறுப்பினரேனும் நிலத்தில் இரவு நேரம் இருக்க வேண்டும். தொடர்ந்து இது போல் இரவுக்குளிரை பொருட்படுத்தாது பணிபுரிவதால், பல கிராமவாசிகளுக்கு ஆரோக்கியம் குன்றியது. தூக்கமின்மை, அழுத்தம் மற்றும் குளிர் ஆகியவை காய்ச்சலையும் தலைவலியையும் தருவதாக அவர்களது பிரச்சினைகளை பட்டியலிடுகிறார் ராமச்சந்திரா.

கிளம்புவதற்கு முன், மனைவியை அழைத்து கழுத்து பெல்ட் கேட்கிறார் தாதாஜி. “மருத்துவர் இதை எப்போதும் அணிந்திருக்கும்படி சொல்லியிருக்கிறார்,” என விளக்குகிறார்.

ஏன், கழுத்தை தாங்க பெல்ட் தேவைப்படுகிறதா எனக் கேட்டேன்.

“நாம் பேச முழு இரவு இருக்கிறது. பொறுத்திருங்கள்.”

சிறு சிரிப்புடன் ராம்சந்திரா உண்மையை சொல்லிவிட்டார்: “இவர் 8 அடி உயரத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் விழுந்துவிட்டார். அதிர்ஷ்டமிருந்தது இவருக்கு. இல்லையென்றால் இன்று நம்முடன் இருந்திருக்க மாட்டார்.”

Dadaji Dodake, 70, wears a cervical support after he fell from the perch of his farm while keeping a night vigil
PHOTO • Jaideep Hardikar

இரவு ரோந்து பார்க்கும்போது கீழே விழுந்ததிலிருந்து கழுத்தை தாங்க பெல்ட் அணியும் 70 வயது தாதாஜி தோதாகே

*****

நாக்பூரிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிவாப்பூர் தாலுகாவிலுள்ள அலெசூர் கிராமப் பஞ்சாயத்தின் ஒரு பகுதிதான் கோல்தோதா. அதன் எல்லையில், சந்திரப்பூர் மாவட்ட சிமூர் தாலுகாவின் காடுகள் இருக்கின்றன. அவை ததோபா அந்தாரி புலிகள் காப்பகத்தின் (TATR) வட மேற்கு விளிம்பில் இருக்கின்றன.

மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதியிலுள்ள விதர்பாவின் காட்டுப் பகுதி கிராமங்களை போல், கோல்தோதாவிலும் வனவிலங்குகளின் தொந்தரவு இருக்கிறது. கிராமவாசிகளின் பயிரும் கால்நடைகளும் பறிபோகின்றன. பெரும்பாலான நிலங்கள் வேலிகளை கொண்டிருந்தாலும் இரவுரோந்து தேவையாக இருக்கிறது.

நாள் முழுக்க, மக்கள் வழக்கமான விவசாய வேலையை பார்க்கின்றனர். இரவில், குறிப்பாக விளைச்சல் காலத்தில், ஒவ்வொரு குடும்பமும் விவசாய நிலத்துக்கு மாறி, வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காக்கும் வேலையை பார்க்கின்றனர். ஆகஸ்டிலிருந்து மார்ச் வரை விவசாயம் நடக்கையில் இது நடக்கிறது. பிற நேரங்களிலும் நடப்பதுண்டு.

நாளின் தொடக்கத்தில் நான் கோல்தோதாவுக்கு வந்தபோது, அச்சம் தரும் வகையில் அமைதி நிலவியது. ஒருவர் கூட எந்த நிலத்திலும் கண்ணில் படவில்லை. எல்லா நிலங்களும் நைலான் புடவைகளால் சுற்றி வேலி கட்டப்பட்டிருந்தது. மாலை 4 மணி. கிராமத்தின் சந்துகளில் கூட எவரும் இல்லை. கைவிடப்பட்ட தோற்றம் நிலவியது. அங்குமிங்குமாக சில நாய்கள் மட்டும்.

”பிற்பகல் 2 மணியிலிருந்து 4.30 மணி வரை அனைவரும் தூங்குவார்கள். ஏனெனில் இரவில் தூங்க முடியுமா என எங்களுக்கு தெரியாது,” என்கிறார் தாதாஜி அவரது வீட்டை நான் அடைந்து ஏன் கிராமம் அமைதியாக இருக்கிறது எனக் கேட்டதற்கு.

“அவர்கள் (விவசாயிகள்) நிலங்களை சுற்றி வந்து நாள் முழுக்க கண்காணிக்கின்றனர். 24 மணி நேர வேலை போன்றது அது,” என்கிறார்

Monkeys frequent the forest patch that connects Kholdoda village, which is a part of Alesur gram panchayat
PHOTO • Jaideep Hardikar
Monkeys frequent the forest patch that connects Kholdoda village, which is a part of Alesur gram panchayat
PHOTO • Jaideep Hardikar

அலெசுர் கிராமப்பஞ்சாயத்தின் பகுதியான கோல்தோதா கிராமத்துடன் இணையும் காட்டுப் பகுதிக்கு குரங்குகள் அடிக்கடி வரும்

Left : Villagers in Kholdoda get ready for a vigil at the fall of dusk.
PHOTO • Jaideep Hardikar
Right: A farmer walks to his farm as night falls, ready to stay on guard
PHOTO • Jaideep Hardikar

இடது: மாலை ஆனதும் இரவுரோந்துக்கு கோல்தோதா கிராமவாசிகள் தயாராகின்றனர். வலது: இரவு கவிகையில் ஒரு விவசாயி காவல் காக்க நிலத்தை நோக்கி செல்கிறார்

அந்திப்பொழுது வந்ததும் கிராமம் மீண்டும் உயிர் பெற்றது. பெண்கள் சமைக்கத் தொடங்கினர். ஆண்கள் இரவு ரோந்துக்கு தயாராகினர். மாடுகள் காட்டிலிருந்து மேய்ப்பர்களுடன் வீடு திரும்புகின்றன.

தேக்கு மற்றும் பிற மரங்கள் கொண்ட அடர்ந்த காடுகள் சூழ்ந்த கோல்தோதா, ததோபா நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்.  108 குடும்பங்கள் (2011 கணக்கெடுப்பு) அங்கு வசிக்கின்றன. சிறு, குறு விவசாயிகள்தான் இரு பிரதான சமூகப் பிரிவுகளான மனா ஆதிவாசி மற்றும் மகர் தலித் ஆகிய சமூகங்களில் இருக்கின்றனர். சில குடும்பங்களில் பிற சமூகத்தினரும் இருக்கின்றனர்.

இங்கு 110 ஹெக்டேர் அளவு விவசாய நிலம் இருக்கிறது. வளமான மண் பெரும்பாலும் மழையை சார்ந்துதான் இருக்கிறது. நெல், பருப்புகள் போன்ற பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. சிலர் கோதுமை, தானியம் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை வளர்க்கின்றனர். இங்குள்ள விவசாயிகளே அவர்களின் நிலத்தில் உழைக்கின்றனர். காட்டுப் பொருட்களையும் ஊதிய உழைப்பையும் சிறிதளவு சார்ந்திருக்கின்றனர். விவசாயத்தால் பெரும் அளவில் வருமானம் இல்லாததால் சில இளைஞர்கள் பிற டவுன்களுக்கு சென்று வேலைகள் பார்க்கின்றனர். தாதாஜியின் மகன் நாக்பூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். கிராமத்தில் சிலர் பிவாபூர் சென்று கூலி வேலை செய்கின்றனர்.

*****

இரவுணவு தயாராகிக் கொண்டிருக்கையில், கிராமத்தில் நிலவும் சூழலை வேகமாக நோட்டம் விட்டோம்.

50 வயதுகளில் இருக்கும் ஷகுந்தலா கோபிசந்த் நன்னவாரே, ஷோபா இந்திராபால் பெண்டாம் மற்றும் பர்பதா துள்ஷிராம் பெண்டாம் ஆகிய மூன்று பெண்களை சந்தித்தோம். முன்னதாகவே அவர்களின் நிலத்துக்கு அவர்கள் விரைந்து கொண்டிருந்தனர். ஒரு நாயும் துணைக்கு இருந்தது. “எங்களுக்கு பயமாக இருக்கிறது, நாங்கள் என்ன செய்வது?” என்கிறார் ஷகுந்தலா, வீட்டுவேலை, விவசாய வேலை ஆகியவற்றுடன் இரவுரோந்தையும் செய்வது கடினமாக இல்லையா என்கிற என் கேள்விக்கு. இரவில் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து நிலத்தை சுற்றி வருவார்கள்.

தாதாஜியின் வீட்டுக்கு எதிரே உள்ள கிராமத்தின் பிரதான சாலையில் நண்பர்களுடன் குன்வந்தா கெயிக்வாட் பேசிக் கொண்டிருக்கிறார். “அதிர்ஷ்டம் இருந்தால் இன்று புலியை பார்ப்பீர்கள்,” என ஒருவர் கிண்டலடிக்கிறார். “எங்கள் நிலங்களை புலிகள் அடிக்கடி கடப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்கிறார் கெயிக்வாட்.

Gunwanta Gaikwad (second from right) and other villagers from Kholdoda prepare to leave for their farms for a night vigil
PHOTO • Jaideep Hardikar

குன்வந்தா கெயிக்வாட்டும் (வலதிலிருந்து இரண்டாவது) கோல்தோதாவின் பிற கிராமவாசிகளும் இரவுரோந்துக்கு கிளம்ப தயாராகின்றனர்

Left: Sushma Ghutke, the woman ‘police patil’ of Kholdoda, with Mahendra, her husband.
PHOTO • Jaideep Hardikar
Right: Shakuntala Gopichand Nannaware, Shobha Indrapal Pendam, and Parbata Tulshiram Pendam, all in their 50s, heading for their farms for night vigil (right to left)
PHOTO • Jaideep Hardikar

இடது: கோல்தோதாவின் பெண் காவல்துறை தலைவரான சுஷ்மா குட்கே, கணவர் மகேந்திராவுடன். வலது: 50 வயதுகளில் இர்க்கும் ஷகுந்தலா கோபிசந்த் நன்னவாரே, ஷோபா இந்திரபால் பெண்டாம் மற்றும் பர்பாதா துள்ஷிராம் பெண்டாம் ஆகியோர் இரவுரோந்துக்காக செல்கின்றனர் (வலதிலிருந்து இடது)

ஊரின் துணைத் தலைவரான ராஜன்ஸ் பங்கரை சந்திக்கிறோம். இரவுணவை அவர் முடிக்கிறார். விவசாய நிலத்துக்கு அவர் கிளம்ப வேண்டும். அந்த நாள் உழைத்ததிலேயே அவர் சோர்வுற்று களைப்பாக இருக்கிறார். பஞ்சாயத்தின் நிர்வாக வேலைகளை பங்கர் பார்த்துக் கொள்கிறார்.

அடுத்ததாக நாம் ‘காவல்துறை பெண் தலைவராக’ இருக்கும் சுஷ்மா குட்கேவை சந்திக்கிறோம். நிலத்துக்கு கணவர் மகெந்திராவுடன் பைக்கில் அமர்ந்து சென்று கொண்டிருக்கிறார். இரவுணவு, சில போர்வைகள், மரத் தடி மற்றும் டார்ச் லைட் ஆகியவற்றை கொண்டு செல்கின்றனர். பலர் டார்ச்கள், மரக்குச்சிகள், போர்வைகள் போன்றவற்றுடன் நிலங்களுக்கு செல்வதை பார்க்கிறோம்.

“எங்களோடு வாருங்கள்,” என புன்னகையுடன் சுஷ்மா எங்களை அழைக்கிறார். “இரவில் நிறைய சத்தங்களை நீங்கள் கேட்பீர்கள்,” என்கிறார் அவர். ”சத்தம் கேட்க வேண்டுமெனில் அதிகாலை 2.30 மணி வரையேனும் விழித்திருங்கள்.”

காட்டுப் பன்றிகள், நீலான்கள், மான்கள், கடமான்கள், மயில்கள், முயல்கள் யாவும் இரவில் உணவு தேடி வரும். சில நேரங்களில் சிறுத்தைகளையும் புலிகளையும் கூட அவர்கள் பார்த்திருப்பதாக சொல்கிறார். “எங்களின் நிலங்கள் விலங்குகளின் நிலங்கள்,” என அவர் கிண்டலடிக்கிறார்.

23 ஏக்கர் மூதாதையர் நிலம் கொண்டிருக்கும் 55 வயது ஆத்மராம் சவஸ்காலே கொஞ்ச வீடுகளை தாண்டி, இரவு ரோந்துக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் நிலத்தை அடைந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். “என் நிலம் பெரிதென்பதால், அதை காப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது,” என்கிறார் அவர். கோதுமையும் உளுந்தும் விளைந்திருக்கும் அவரின் நிலத்தில் பயிர்களை கண்காணிக்கவென ஆறேழு கண்காணிப்பு இடங்களேனும் இருக்கும்.

இரவு 8.30 மணிக்கெல்லாம், கோல்தோதா குடும்பங்கள் அவர்களின் இரண்டாவது வசிப்பிடமான நிலத்துக்கு சென்றுவிட்டார்கள்.

*****

தன் நிலம் முழுவதும் பல கண்காணிப்பு மையங்களை ராம்சந்திரா கட்டியிருக்கிறார். அங்கிருந்து சத்தத்தை கேட்க முடியும். அவரை விலங்கால் பார்க்க முடியாது. பாதுகாப்பாக உறங்கவும் முடியும். கட்டைகள் கொண்டு ஏழெட்டு அடிக்கு உயர்த்தப்பட்டு வைக்கோல் அல்லது தார்ப்பாய்கள் போடப்பட்டவைதான் இந்த கண்காணிப்பு மையங்கள். இத்தகைய மையங்கள் சிலவற்றில் இருவர் இருக்க முடியும். பெரும்பாலானவை ஒருவருக்கு மட்டுமே இடம் கொண்டிருக்கும்.

Ramchandra has built several machans (right) all over his farm. Machans are raised platforms made of wood with canopies of dry hay or a tarpaulin sheet
PHOTO • Jaideep Hardikar
Ramchandra has built several machans (right) all over his farm. Machans are raised platforms made of wood with canopies of dry hay or a tarpaulin sheet
PHOTO • Jaideep Hardikar

ராம்சந்திரா பல கண்காணிப்பு மையங்களை (வலது) நிலத்தில் கட்டியிருக்கிறார். வைக்கோல் மற்றும் தார்ப்பாய் போடப்பட்டு சற்று உயர்த்தி கட்டைகள் கொண்டு அமைக்கப்பட்டவை அவை

குறிப்பாக காடுகளுடன் இணைந்திருக்கும் பிவாப்பூரின் இப்பகுதியில் ஆச்சரியப்படும் அளவுக்கான கண்காணிப்பு மையங்களை காண முடியும். இரவுப்பொழுதுகளை அங்கு கழிக்கும் விவசாயிகளின் அற்புதமான கட்டடத் திறன் அவற்றில் புலப்படும்.

“எந்த கண்காணிப்பு மையத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்,” என்கிறார் அவர். சுண்டல் விளைந்து அறுவடைக்கு காத்திருக்கும் நிலத்தின் மையத்தில் இருக்கும் தார்ப்பாய் கண்காணிப்பு மையத்தை நான் தேர்ந்தெடுத்தேன். வைக்கோல் இருக்கும் கண்காணிப்பு மையத்தில் பெருச்சாளிகள் இருக்கலாம் என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. கண்காணிப்பு மையத்தில் ஏறும்போது அது ஆடியது. அப்போது இரவு 9.30 மணி. இரவுணவை உண்ணவிருந்தோம். ஒரு சிமெண்ட் தளத்தில் மூட்டப்பட்ட நெருப்பை சுற்றி நாங்கள் அமர்ந்தோம். தட்பவெப்பம் குறைந்து கொண்டிருந்தது. மையிருட்டு. ஆனால் வானம் தெளிவாக இருந்தது.

தாதாஜி உண்ணத் தொடங்கினார்.

“நான்கு மாதங்களுக்கு முன் என்னுடைய கண்காணிப்பு மையம் நடு இரவில் திடீரென இறங்கிவிட்டது. தலைகுப்புற நான் ஏழடி உயரத்திலிருந்து விழுந்தேன். கழுத்தையும் முதுகையும் காயப்படுத்திக் கொண்டேன்.”

அது அதிகாலை 2.30 மணிக்கு நடந்தது. நல்லவேளையாக அவர் விழுந்த இடம் கடினமான தரையாக இருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு அங்கேயே அதிர்ச்சியில் வலியோடு கிடந்ததாக அவர் சொல்கிறார். கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டிருந்த மரக்கட்டை மண்ணுக்குள் இறங்கிவிட்டதால் அப்படி நேர்ந்தது.

“என்னால் அசைய முடியவில்லை. எனக்குதவ யாரும் இல்லை.” பலரும் அவரவர் நிலங்களை காவல் காத்துக் கொண்டிருந்தாலும் இரவுப்பொழுதில் ஒருவர் தனியாகதான் இருக்க வேண்டியிருக்கும். “இறந்துவிடுவேன் என நினைத்தேன்,” என்கிறார் அவர்.

Dadaji (left) and Ramchandra lit a bonfire to keep warm on a cold winter night during a night vigil
PHOTO • Jaideep Hardikar
Dadaji (left) and Ramchandra lit a bonfire to keep warm on a cold winter night during a night vigil
PHOTO • Jaideep Hardikar

தாதாஜி (இடது) மற்றும் ராம்சந்திரா ஆகியோர் இரவுரோந்தில் குளிரைப் போக்கவென தீ மூட்டியிருக்கின்றனர்

அதிகாலை நெருங்கும் வேளையில் ஒருவழியாக அவர் கழுத்து மற்றும் முதுகு வலியோடு எழுந்து நின்றார். இரண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நடந்தார். “வீடடைந்ததும் என்னுடைய குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் உதவிக்கு வந்தனர்.” தாதாஜியின் மனைவி ஷாகுபாய் பதட்டமடைந்திருந்தார்.

ராம்சந்திரா, அவரை பிவாபூரின் தாலுகாவிலுள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றார். அங்கிருந்து பின் அவர் அவசர ஊர்தியில் நாக்பூரின் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது மகன் மருத்துவத்துக்கு துணையாக இருந்தார்.

எக்ஸ்ரேயும் எம்ஆர்ஐ ஸ்கேன்களும் அதிர்ச்சி மட்டும் இருப்பதாக தெரிவித்தன. அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு இல்லை. ஆனால் விழுந்ததற்கு பின், அமரும்போதும் அதிக நேரம் நின்றிருக்கும்போது அவருக்கு தலை கிறுகிறுப்பு வந்துவிடுகிறது. எனவே படுத்து விடுகிறார். படுத்துக் கொண்டு பஜனை பாடல்கள் பாடுகிறார்.

“இரவுரோந்து சென்றதற்காக நான் கொடுத்த விலை அது. ஆனால் ஏன்? பயிரை நான் காக்கவில்லை எனில், வன விலங்குகள் எந்த விளைச்சலும் எனக்கு கிடைக்காமல் செய்துவிடும்,” என்கிறார் அவர்.

தாதாஜி இளைஞராக இருந்தபோது இரவுரோந்துக்கு அவசியம் இருக்கவில்லை என்கிறார் அவர். வனவிலங்குகளின் சூறையாடல் கடந்த 20 வருடங்களில்தான் அதிகரித்திருப்பதாக கூறுகிறார். காடுகள் குறைந்துவிட்டது மட்டுமின்றி, வனவிலங்குகளுக்கு அங்கு போதுமான அளவு உணவும் நீரும் கிடைப்பதில்லை. அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. எனவே ஆயிரக்கணக்கான விவசாயிகள் இரவுப்பொழுதுகளை நிலங்களில் கழித்து கண்காணித்து, வனவிலங்குகளின் சூறையாடலிலிருந்து தங்களின் பயிர்களை காக்க முனைகின்றனர்.

விபத்துகள், கீழே விழுவது, வனவிலங்குகளை எதிர்கொள்வது, அகச்சிக்கல்களை கொடுக்கும் தூக்கமின்மை மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் போன்றவை கோல்தோதா மற்றும் விதர்பா பகுதி விவசாயிகளுக்கான இயல்பு வாழ்க்கையாக மாறிவிட்டது. விவசாய நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

Machans , or perches, can be found across farms in and around Kholdoda village. Some of these perches accommodate two persons, but most can take only one
PHOTO • Jaideep Hardikar
Machans , or perches, can be found across farms in and around Kholdoda village. Some of these perches accommodate two persons, but most can take only one
PHOTO • Jaideep Hardikar

கோதோதா கிராமத்திலும் அதை சுற்றியும் கண்காணிப்பு மையங்களை பார்க்கலாம். சிலவற்றில் இருவரும் பெரும்பாலானவற்றில் ஒருவரும் தங்க முடியும்

Farmers house themselves in these perches during the night vigil. They store their torches, wooden sticks, blankets and more inside
PHOTO • Jaideep Hardikar
Farmers house themselves in these perches during the night vigil. They store their torches, wooden sticks, blankets and more inside
PHOTO • Jaideep Hardikar

இரவுரோந்தின்போது விவசாயிகள் இவற்றில் தங்கிக் கொள்கின்றனர். டார்ச்கள், மரக் குச்சிகள், போர்வைகள் போன்றவற்றை அங்கே வைத்திருக்கின்றனர்

கடந்த சில வருடங்களாக கிராமங்களில் நான் பயணித்ததில் Sleep Apnea என்கிற தூக்கக் கோளாறு கொடுக்கும் அழுத்தத்தில் உழலும் விவசாயிகளை சந்தித்திருக்கிறேன். சுவாசம் நின்று தூக்கத்தின்போது மீண்டும் தொடங்கும் குறைபாடு அது.

“உடலுக்கு பெரும் தீங்கை அது கொடுக்கும். பகலிலும் இரவிலும் தூக்கமின்றி நாங்கள் உழைக்க வேண்டும்,” என்கிறார் ராம்சந்திரா. “வயலை விட்டு ஒருநாள் கூட வர முடியாத காலமும் உண்டு.”

சோறு, பருப்பு அல்லது உளுந்து போன்றவற்றை இங்கு நீங்கள் உண்ண முடிந்தால், யாரோ இங்கு தூக்கமில்லா இரவுகளை கழித்து பயிர்களை காப்பாற்றியதன் விளைவாக அவை உங்களுக்கு கிடைத்திருக்கிறது என அர்த்தம்.

“அலாரம்களை அடிப்போம். தீ வைப்போம். வேலி அடைப்போம். ஆனால் இரவில் நீங்கள் நிலத்தில் இல்லையெனில், உங்கள் விளைச்சல் மொத்தமும் போய்விடும் வாய்ப்பு அதிகம்,” என்கிறார் ராம்சந்திரா.

*****

இரவுணவுக்கு பின்னர் நாங்கள் ராம்சந்திராவுக்கு பின்னால், டார்ச் ஒளி காட்டும் வழிகளில் நடக்கிறோம்.

இரவு 11 மணி. மக்கள் கத்தும் சத்தம் கேட்கிறது. “ஓய்.. ஓய்.. ஈஈஈ…” என தூரத்தில் அவ்வப்போது விலங்குகளை விரட்டவும் அவர்களின் இருப்பை அறிவிக்கவும் சத்தங்கள் எழுப்புகின்றனர்.

பிற நாட்களில் அவர் தனியாக இருக்கும்போது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ராம்சந்திரா நீண்ட மரக்குச்சியை கையிலேந்தி வயலை சுற்றி வருவார். குறிப்பாக அதிகாலை 2 மணியிலிருந்து 4 மணிவரை அவர் கூர்மையாக கவனிப்பார். அச்சமயத்தில்தான் விலங்குகள் சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறார் அவர். இடைப்பட்ட காலத்தில் சிறு தூக்கம் போட்டாலும் சுதாரிப்புடன் இருப்பார்.

நள்ளிரவை ஒட்டி, ஒரு கிராமவாசி பைக்கில் நிலத்துக்கு வந்து, அலெசூரில் முழு இரவு கபடி போட்டி நடப்பதாக கூறுகிறார். சென்று பார்ப்பதென நாங்கள் முடிவெடுத்தோம். தாதாஜி ராம்சந்திராவின் மகனுடன் வயலிலேயே இருப்பதென முடிவெடுக்க, மிச்சமுள்ள நாங்கள் 10 நிமிட தொலைவில் இருக்கும் அலெசூருக்கு செல்கிறோம்.

Villages play a game of kabaddi during a night-tournament
PHOTO • Jaideep Hardikar

இரவு நேரத்தில் கிராமங்கள் விளையாடும் கபடி விளையாட்டு

விவசாயிகள் இரவுரோந்து வேலைக்கு நடுவே அலெசூர் கிராமப் பஞ்சாயத்தில் நடக்கும் கபடி போட்டியை காணவும் வருகின்றனர்

வழியில் காட்டுப் பன்றிகளுகளுக்கு பின்னே இரு நரிகள் சாலையை கடப்பதை கண்டோம். சற்று நேரம் கழித்து ஒரு மான் மந்தையை காட்டுப் பகுதியில் பார்த்தோம். இதுவரை, புலி எதுவும் தட்டுப்படவில்லை.

அலெசூரில் ஒரு பெரும் கூட்டம் இரண்டு போட்டி கிராமங்களுக்கு இடையே நடக்கும் கபடி போட்டியை பார்ப்பதில் மூழ்கியிருந்தது. எங்கும் உற்சாகம் தென்பட்டது. போட்டியில் 20 அணிகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. காலை வரை போட்டிகள் நடைபெறும். இறுதி ஆட்டம் காலை 10 மணிக்கு நடக்கும். கிராமவாசிகள்,  நிலங்களுக்கும் போட்டி நடக்கும் இடத்துக்கும் இடையே இரவில் போய் வந்து கொண்டிருந்தனர்.

புலி இருக்கும் தகவலை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். “நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என ஒருவர் ராம்சந்திராவிடம் சொல்கிறார். அலெசூர் கிராமவாசி ஒருவர் மாலையில் புலியை பார்த்திருக்கிறார்.

புலியை பார்ப்பது மாயமான விஷயம்.

சற்று நேரம் கழித்து நாங்கள் ராம்சந்திராவின் நிலத்துக்கு திரும்பினோம். அதிகாலை 2 மணி. அஷுடோஷ் ஒரு சிறு படுக்கையில் தூங்கி விட்டார். தாதாஜி அமைதியாக அமர்ந்து அவரை பார்த்துக் கொண்டு, தீயையும் காத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் அலுப்பில் இருந்தோம். ஆனால் இன்னும் தூக்கம் வரவில்லை. வயலை சுற்றி இன்னொரு முறை நடந்தோம்.

Ramchandra Dodake (right) at the break of the dawn, on his farm after the night vigil
PHOTO • Jaideep Hardikar
Ramchandra Dodake (right) at the break of the dawn, on his farm after the night vigil
PHOTO • Jaideep Hardikar

ராம்சந்திரா தோதாகே (வலது) இரவுரோந்து முடிந்து அதிகாலை அவரது நிலத்தில்

Left: Ramchandra Dodake's elder son Ashutosh, on the night vigil.
PHOTO • Jaideep Hardikar
Right: Dadaji plucking oranges from the lone tree on Ramchandra’s farm
PHOTO • Jaideep Hardikar

இடது: ராம்சந்திரா தோதோகேவின் மூத்த மகனான அஷுடோஷ் இரவுரோந்தில் இருந்தார். வலது: ராம்சந்திராவின் வயலில் உள்ள ஒரு தனி மரத்தில் ஆரஞ்சுகளை பறித்துக் கொண்டிருந்தார் தாதாஜி

ராம்சந்திரா 10ம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். வேறு வேலைகள் கிடைத்தால் விவசாயம் பார்க்க மாட்டாரென சொல்கிறார். அவரின் இரு குழந்தைகளையும் நாக்பூரில் உள்ள விடுதிப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். ஏனெனில் அவர்களை விவசாயத்துக்குக் கொண்டு செல்ல அவருக்கு விருப்பமில்லை. விடுமுறைக்காக அஷுடோஷ் வந்திருக்கிறார்.

திடீரென பயங்கரச் சத்தம் எல்லா பக்கங்களிலிருந்தும் வருகிறது. விவசாயிகள் தட்டுகளை தட்டி உச்சக்குரலில் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். விலங்குகளை விரட்ட இதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள்.

குழப்பமான என் முகத்தை பார்த்ததும், தாதாஜி புன்னகைக்கிறார். ராம்சந்திராவும் புன்னகைக்கிறார். “இது உங்களுக்கு குழப்பத்தை தரலாம்,” என்னும் அவர், “ஆனால் இதுதான் முழு இரவும் நடக்கும். விலங்குகளின் நடமாட்டத்தை அறிவிக்க விவசாயிகள் உச்சக்குரலில் கத்துவார்கள்,’ என்கிறார். 15 நிமிடங்கள் கழித்து, சத்தம் ஓய்கிறது. மீண்டும் அமைதி சூழ்கிறது.

அதிகாலை 3.30 மணிக்கு நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வானுக்குக் கீழ் நாங்கள் கிளம்பி, ஆடிக் கொண்டிருக்கும் கண்காணிப்பு மையத்தில் ஓய்வெடுக்க செல்கிறோம். பூச்சிகளின் சத்தம் என்னை சுற்றி அதிகமாகிறது. படுக்கிறேன். எனக்கு போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. கிழிந்திருக்கும் வெள்ளை தார்ப்பாய் காற்றில் ஆடுகிறது. நட்சத்திரங்களை எண்ணியபடி தூக்கமுறுகிறேன். அவ்வப்போது மக்கள் கத்தும் சத்தம் கேட்கிறது. ஒருகட்டத்தில் பொழுது விடிகிறது. நான் இருக்கும் பகுதியிலிருந்து பார்க்கும்போது என்னை சுற்றியிருக்கும் பசுமையான வயல்கள் பனியால் மூடப்பட்டிருந்தது.

ராம்சந்திரா மற்றும் தாதாஜி முன்னதாகவே எழுந்து விட்டனர். வயலில் இருக்கும் ஒரு தனி மரத்தில் தாதாஜி பழங்களை பறித்து வந்து வீட்டுக்கு எடுத்து செல்ல என்னிடம் கொடுக்கிறார்.

Ramchandra Dodake (left), Dadaji and his wife Shakubai (right) bang thalis ( metal plates), shouting at the top of their voices during their night vigils. They will repeat this through the night to frighten away animals
PHOTO • Jaideep Hardikar
Ramchandra Dodake (left), Dadaji and his wife Shakubai (right) bang thalis ( metal plates), shouting at the top of their voices during their night vigils. They will repeat this through the night to frighten away animals
PHOTO • Jaideep Hardikar

ராம்சந்திரா தோதாகே (இடது), தாதாஜி மற்றும் மனைவி ஷாகுபாய் (வலது) தட்டுகளை தட்டி, உச்சக்குரலில் இரவுரோந்தின்போது கத்துகின்றனர். விலங்குகளை விரட்ட இரவு முழுக்க இதை அவர்கள் செய்கின்றனர்

பயிர்கள் ஏதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறதா என்பதை பார்க்க ராமச்சந்திராவை பின் தொடர்ந்து வயலை சுற்றி வருகிறேன்.

கிராமத்துக்கு காலை 7 மணிக்கு திரும்பினோம். அதிர்ஷ்டகரமாக இரவில் எந்த நஷ்டமும் நேரவில்லை என்கிறார் அவர்.

சற்று நேரத்துக்குப் பிறகு, பிற வயல்களில் விலங்குகள் இறங்கினவா என்பது பற்றி தெரிய வரும்.

விடைபெறும்போது புதிதாக எடுக்கப்பட்ட ஒரு பாக்கெட் அரிசியை என் கையில் கொடுக்கிறார். நறுமண வகை சார்ந்த அரிசி. அறுவடையை அந்த அரிசி எட்டுவதை உறுதிப்படுத்த ராம்சந்திரா தூக்கமில்லா பல இரவுகளை கழித்திருக்கிறார்.

கோல்தோதா நிலங்களை தாண்டி நாங்கள் வாகனத்தில் செல்லும்போது, ஆண்களும் பெண்களும் அமைதியாக நிலங்களிலிருந்து வீடு திரும்புவதை பார்த்தேன். என்னுடைய சாகசம் முடிந்துவிட்டது. அவர்களின் முதுகொடிக்கும் வேலை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

தமிழில் : ராஜசங்கீதன்

Jaideep Hardikar

ನಾಗಪುರ ಮೂಲದ ಪತ್ರಕರ್ತರೂ ಲೇಖಕರೂ ಆಗಿರುವ ಜೈದೀಪ್ ಹಾರ್ದಿಕರ್ ಪರಿಯ ಕೋರ್ ಸಮಿತಿಯ ಸದಸ್ಯರಾಗಿದ್ದಾರೆ.

Other stories by Jaideep Hardikar
Editor : Priti David

ಪ್ರೀತಿ ಡೇವಿಡ್ ಅವರು ಪರಿಯ ಕಾರ್ಯನಿರ್ವಾಹಕ ಸಂಪಾದಕರು. ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು ಶಿಕ್ಷಕರಾದ ಅವರು ಪರಿ ಎಜುಕೇಷನ್ ವಿಭಾಗದ ಮುಖ್ಯಸ್ಥರೂ ಹೌದು. ಅಲ್ಲದೆ ಅವರು ಗ್ರಾಮೀಣ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ತರಗತಿ ಮತ್ತು ಪಠ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಆಳವಡಿಸಲು ಶಾಲೆಗಳು ಮತ್ತು ಕಾಲೇಜುಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ ಮತ್ತು ನಮ್ಮ ಕಾಲದ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ದಾಖಲಿಸುವ ಸಲುವಾಗಿ ಯುವಜನರೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan