ஒரு மதியவேளையில் அஷோக் டாங்டே செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு வாட்சப் தகவல் தோன்றியது. மணம் முடித்துக் கொள்ளவிருக்கும் இளம் மணமக்கள் இருவரின் முகங்களை கொண்ட டிஜிட்டல் அழைப்பிதழ் அது. திருமணம் நடக்கவிருக்கும் நேரம், இடம், நாளும் அதில் இருந்தது.

ஆனால் டாங்டேவுக்கான அழைப்பிதழ் அல்ல அது.

மேற்கு இந்தியாவின் மாவட்டத்தில் இருக்கும் அவரது ஆள் அந்த அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார். அழைப்பிதழோடு சேர்த்து மணப்பெண்ணின் பிறப்பு சான்றிதழையும் அவர் அனுப்பியிருக்கிறார். பெண்ணுக்கு 17 வயதுதான். சட்டத்தின் பார்வையில் அவர் மைனர்.

அழைப்பிதழை பார்க்கும் 58 வயது நிறைந்த அவர், ஒரு மணி நேரத்தில் திருமணம் நடக்கவிருப்பதை கண்டறிகிறார். உடன்பணிபுரிபவரும் நண்பருமான தட்வஷீல் காம்ப்ளேவை வேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விட்டு வேகமாக காரில் ஏறுகிறார்.

“பீட் நகரத்தில் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அரை மணி நேர தூரத்தில் இடம் இருந்தது,” என ஜூன் 2023-ல் நடந்த சம்பவத்தை நினைவுகூருகிறார் டாங்க்டே. “நேரம் குறைவாக இருந்ததால், நாங்கள் செல்லும் வழியில், புகைப்படங்களை நாங்கள் உள்ளூர் காவல்நிலையத்துக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் வாட்சப்பில் அனுப்பி வைத்தோம்.”

டாங்க்டேவும் காம்ப்ளேவும் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

அவர்களுக்கு உதவவென பல வகைகளில் தகவல் சொல்பவர்கள் இருக்கின்றனர். மணப்பெண்ணின் மீது ஒருதலைக் காதல் கொண்ட உள்ளூர் இளைஞன் தொடங்கி, பள்ளி ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர் என குழந்தை திருமணம் ஒரு குற்றம் என்பதை புரிந்த எவரும் தகவல் சொல்பவராக இருக்கலாம். இத்தனை வருடங்களில், இரண்டு செயற்பாட்டாளர்களும் கிட்டத்தட்ட 2000 பேரை தகவல் கொடுப்பவர்களாக மாவட்டம் முழுக்க உருவாக்கியிருக்கின்றனர்.

Tatwasheel Kamble (left) and Ashok Tangde (right) are child rights activists working in Beed, Maharashtra. In the past decade, they have together prevented over 4,000 child marriages
PHOTO • Parth M.N.

தட்வாஷீல் காம்ப்ளே (இடது) மற்றும் அஷோக் டாங்டே (வலது) ஆகிய குழந்தை நல ஆர்வலர்கள் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் இயங்கி வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் ஒருங்கிணைந்து 4,000 குழந்தை திருமணங்களை தடுத்திருக்கின்றனர்

“மக்கள் எங்களை அணுகத் தொடங்கினார்கள். பிறகுதான் கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் தகவல் சொல்பவர்களை கண்டறியத் தொடங்கினோம். செல்பேசிகளில் தொடர்ந்து எங்களுக்கு திருமண அறிவிப்புகள் அனுப்பப்படும். அதில் எதுவும் அழைப்பிதழ் கிடையாது,” என அவர் சிரிக்கிறார்.

வாட்சப் துணையோடு, தகவல் சொல்பவர் சுலபமாக ஒரு ஆவணத்தை புகைப்படம் எடுத்து அனுப்பி விட முடியும் என்கிறார் காம்ப்ளே. ஆவணம் கிடைக்கவில்லை எனில், பெண்ணின் பள்ளியை தொடர்பு கொண்டு வயதுக்கான சான்றிதழை அவர்கள் பெறுவார்கள். “அந்த வகையில், தகவல் பெறுபவரின் பெயர் வெளிவராது,” என்கிறார் அவர். “வாட்சப்புக்கு முன்னால், தகவல் சொல்பவர் நேரடியாக சென்று ஆதாரத்தை சேகரிக்க வேண்டும். அது ஆபத்து நிறைந்த விஷயம். கிராமத்திலிருந்து ஒரு நபர், தகவல் சொல்பவராக வெளியேற்றப்பட்டால், மக்கள் அவரது வாழ்க்கையை நரகமாக்கி விடுவார்கள்.”

42 வயது செயற்பாட்டாளரான அவர், உடனடியாக ஆதாரங்களை சேகரிக்கவும் மக்களை ஒருங்கிணைக்கவும் வாட்சப் பெருமளவில் உதவுவதாக சொல்கிறார்.

இந்தியாவின் இணையம் மற்றும் செல்பேசி சங்கத்தின் ( IAMAI) 2022ம் ஆண்டு அறிக்கைபடி, 75 கோடியே 90 லட்ச இணைய பயன்பாட்டாளர்களில் 39 கோடியே 90 லட்சம் பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் வாட்சப் பயன்படுத்துபவர்கள்.

“சரியான நேரத்துக்கு சட்டம் மற்றும் காவல்துறை உதவியுடன் சென்று சேருவதுதான் சவாலான விஷயம். அதே நேரத்தில் துப்பு கொடுத்த நபரின் பெயரும் ரகசியமாக இருக்க வேண்டும்,” என்கிறார் காம்ப்ளே. “வாட்சப்புக்கு முன், அது பெரும் சவாலாக இருந்தது.”

திருமண இடங்களிலிருந்து கொண்டு தகவல் கொடுப்போருடன் நடக்கும் உரையாடல்கள் ஆச்சரியமாக இருக்கும் என சிரிக்கிறார் டாங்க்டே. “இயல்பாக இருந்து கொண்டு, எங்களை அடையாளம் தெரியாத மாதிரியே நடக்கும்படி சொல்வோம்,” என்கிறார் அவர். “எல்லாருக்கும் அது வராது. தகவல் கொடுத்தவரிடம் சில நேரங்களில் எல்லாரின் முன்னிலையிலும் நாங்கள் கடுமையாக நடந்து கொள்வோம். அப்போதுதான் எவருக்கும் சந்தேகம் வராது.”

தேசிய குடும்ப கணக்கெடுப்பு 2019-21 அறிக்கையின்படி ( NFHS 5 ) இந்தியாவின் 20-24 வயது பெண்களில் 23.3 சதவிகிதம் பேர், சட்டப்பூர்வ வயதான 18 வயதாகும் முன்பே மணமுடித்துக் கொண்டதாக சொல்லியிருக்கின்றனர். கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் வாழும் பீட் மாவட்டத்தில், இந்த எண்ணிக்கை தேசிய சராசரியான 43.7 சதவிகிதத்தின் இரு மடங்காக இருக்கிறது. இளவயது கர்ப்பங்களால் குழந்தைகள் மரணமும் சத்து குறைபாடும் அதிகரிக்கும் வாய்ப்பை சிறு வயது திருமணம் உருவாக்குகிறது.

WhatsApp has greatly helped their cause by allowing them to quickly gather evidence and mobilise people at the last minute. O ver the years, the two activists have cultivated a network of over 2,000 informants
PHOTO • Parth M.N.

கடைசி நேரத்தில் ஆதாரங்களை சேகரிக்கவும் மக்களை ஒருங்கிணைக்கவும் வாட்சப் பெருமளவில் அவர்களுக்கு உதவுகிறது. இத்தனை வருடங்களில் இரு செயற்பாட்டாளர்களும் சேர்ந்து 2,000 தகவல் சொல்பவர்களின் வலைப்பின்னலை உருவாக்கியிருக்கின்றனர்

பீட் மாவட்டத்தின் இளவயது திருமணங்களுக்கும் மாநிலத்தில் தழைத்துக் கொண்டிருந்த சர்க்கரை தொழில்துறைக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. மகாராஷ்டிராவின் கரும்பு வெட்டுபவர்களுக்கான முக்கியமான தளமாக இம்மாவட்டம் விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் அவர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து மாநிலத்தின் மேற்குப் பகுதியை அடைந்து சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகள் வெட்டும் வேலை பார்க்கின்றனர். தொழிலாளர்களில் பலரும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள்.

உயரும் உற்பத்தி செலவு, சரியும் பயிர் விலைகள், காலநிலை மாற்றம் ஆகியவற்றால், இம்மாவட்டத்தின் விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்தை அதிகம் சார்ந்திருக்க முடியவில்லை. எனவே அவர்கள் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாய் வரை வருமானம் தரும் ஆறு மாத முதுகொடியும் வேலைக்காக புலம்பெயர்கின்றனர். (வாசிக்க: கரும்பு வெட்ட நெடுந்தொலைவு சாலைப்பயணம் ).

இவர்களை பணிக்கமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் மணம் முடித்த தம்பதிகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் கரும்புகளை வெட்ட ஒருவரும் அவற்றை கட்டி ட்ராக்டரில் ஏற்ற ஒருவரும் என இந்த வேலைக்கு இருவர் தேவை. மணத் தம்பதி ஒரு யூனிட்டாக மதிப்பிடப்படுகின்றனர். இது, சுலபமாக அவர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது.

“பெரும்பாலான (கரும்பு வெட்டும்) குடும்பங்கள், பிழைப்பதற்காக இளவயது திருமணங்கள் நடத்தத் தள்ளப்படுகின்றன. இது தெளிவாக புலப்படுவதில்லை,” என்கிறார் டாங்டே குழந்தை திருமண சட்டம், 2006 -ன்படி தடுக்கப்பட்டிருக்கும் இம்முறையை குறித்து. “மணமகனின் குடும்பத்துக்கு அது புதிய வருமானத்துக்கான வழி. மணமகளின் குடும்பத்துக்கு, சோறு போடும் கட்டாயம் ஓர் ஆளுக்கு குறையும்,” என அவர் விவரிக்கிறார்.

ஆனால் இதுதான் டாங்டே மற்றும் காம்ப்ளே போன்ற செயற்பாட்டாளர்களை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பீட் மாவட்டத்தில், ஐந்து உறுப்பினர் கொண்ட குழந்தை நலக் குழுவுக்கு (CWC) டாங்டே தலைவராக இருக்கிறார். தன்னாட்சி அமைப்பான அது, குழந்தைகளுக்கான நீதி சட்டம், 2015 ன்படி உருவாக்கப்பட்டது. குற்றத்தடுப்பில் அவருடன் இயங்கும் காம்ப்ளே, மாவட்டத்தின் முன்னாள் CWC உறுப்பினராக இருந்தவர். தற்போது குழந்தைகள் உரிமைக்காக இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருக்கிறார். “கடந்த ஐந்து வருடங்களாக எங்களில் ஒருவரிடம் அதிகாரம் இருக்கும். இன்னொருவர் களத்தில் இருப்பார். வலிமையான குழுவாக இருக்கிறோம்,” என்கிறார் டாங்டே.

*****

Early marriages in Beed are closely linked to the state's sugar industry. Contractors prefer to hire married couples as the job requires two people to work in tandem; the couple is treated as one unit, which makes it easier to pay them and also avoids conflict
PHOTO • Parth M.N.

பீட் மாவட்டத்தின் இளவயது திருமணங்களுக்கும் மாநிலத்தின் சர்க்கரை தொழில்துறைக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. ஒப்பந்ததாரர்கள் மணம் முடித்த தம்பதிகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். மணத் தம்பதி ஒரு யூனிட்டாக மதிப்பிடப்படுகின்றனர். ஊதியம் கொடுக்கவும், பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கவும் இது உதவுகிறது

மாமா சஞ்சய் மற்றும் அத்தை ராஜஸ்ரீயுடன் பீட் மாவட்டத்தில் பூஜா வாழ்கிறார். கரும்பு வெட்டும் வேலை பார்க்கும் இருவரும் கடந்த 15 வருடங்களாக கரும்பு வெட்ட புலம்பெயர்ந்து வருகின்றனர். பூஜாவின் திருமணத்தை நிறுத்தத்தான் ஜூன் 2023-ல் டாங்டேவும் காம்ப்ளேவும் சென்றனர்.

இரு செயற்பாட்டாளர்களும் திருமண மண்டபத்தை அடையும்போது கிராம நிர்வாக அலுவலரும் காவலர்களும் அங்கு ஏற்கனவே இருந்தனர். முதலில் இருந்த விழாக்கோல உற்சாகம், குழப்பமாக மாறி, பின் இழவு வீடு போன்ற தோற்றத்தை பெற்றது. திருமணத்தை நடத்திய பெரியவர்கள் மீது வழக்குப் பதியப்படும் என சொல்லப்பட்டது. “நூற்றுக்கணக்கான விருந்தாளிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினார்கள். மணமக்களின் குடும்பங்கள் காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சினர்,” என்கிறார் காம்ப்ளே.

திருமணத்தை ஒருங்கிணைத்த 35 வயது சஞ்சய், தன் தவறை உணர்ந்தார். “நானொரு சாதாரண கரும்பு வெட்டும் தொழிலாளர். வேறு எதையும் நான் யோசிக்கவில்லை,” என்கிறார் அவர்.

பூஜாவும் அவரது அக்கா உர்ஜாவும் இளமையாக இருந்தபோது, அவர்களின் தந்தை ஒரு விபத்தில் இறந்தார். அவர்களின் தாய் இன்னொரு திருமணம் செய்து கொண்டார். புதிய குடும்பம் மகள்களை ஏற்கவில்லை. எனவே அவர்களை சஞ்சயும் ராஜஸ்ரீயும் வளர்த்தனர்.

ஆரம்பப் பள்ளிக்கு பிறகு, பீட் மாவட்டத்திலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புனேவின் விடுதிப் பள்ளி ஒன்றில் அவர்களை சேர்த்தார் சஞ்சய்.

ஆனால் உர்ஜா படித்து முடித்தபிறகு, பள்ளியிலிருந்த குழந்தைகள், பூஜாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். “என்னை அவர்கள் கிண்டல் செய்வார்கள். கிராமத்தான் போல பேசுவதாக சொல்வார்கள்,” என்கிறார் அவர். “என் சகோதரி அங்கு இருந்தபோது அவள் என்னை பாதுகாத்தாள். அவள் போன பிறகு, என்னால் தாங்க முடியவில்லை. எனவே வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.”

'Most of the [sugarcane-cutting] families are forced into it [child marriage] out of desperation. It isn’t black or white...it opens up an extra source of income. For the bride’s family, there is one less stomach to feed,'  says Tangde
PHOTO • Parth M.N.


‘மோசமான சூழ்நிலையால்தான் பல குடும்பங்கள் குழந்தை திருமணங்கள் நோக்கி தள்ளப்படுகின்றன. வெளிப்படையாக அது தெரிவதில்லை. வருமானத்துக்கு புதிய வழி கொடுக்கிறது. மணமகளின் குடும்பத்தில், சோறு போட வேண்டிய தேவையில் ஒரு நபர் குறைவார்,’ என்கிறார் டாங்டே

நவம்பர் 2022-ல் அவர் திரும்பியதும் சஞ்சயும் ராஜஸ்ரீயும் பூஜாவையும் அழைத்துக் கொண்டு, மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்துக்கு 500 கிலோமீட்டர் பயணித்து ஆறு மாதங்கள் கரும்பு வெட்ட சென்றனர். இருவருக்கும் அவரை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் செல்லுமிடத்தில் இருக்கும் வாழ்க்கை சூழல் இன்னும் கொடுமைதான் என்கின்றனர்.

“வைக்கோல் குடிசையில் நாங்கள் வாழ்வோம்,” என்கிறார் சஞ்சய். “கழிவறைகள் இருக்காது. வயல்வெளிகளில்தான் இயற்கை கடன்களை கழிக்க வேண்டும். 18 மணி நேரங்களுக்கு கரும்புகளை வெட்டிவிட்டு திறந்தவெளியில் நாங்கள் உணவு சமைப்போம். இத்தனை வருடங்களில் இது எங்களுக்கு பழகிவிட்டது. ஆனால் பூஜாவுக்கு கடினமாக இருந்தது.”

சதாராவிலிருந்து திரும்பும்போது பூஜாவுக்கென ஓர் இணையை உறவினர்கள் மூலமாக சஞ்சய் கண்டறிந்தார். மைனராக இருந்தாலும் அவருக்கு திருமணம் செய்து வைப்பதென முடிவெடுத்தார். வீட்டில் தங்கி, அருகேயே ஒரு வேலை தேடும் வாய்ப்பு அந்த தம்பதிக்கு இல்லை.

“வானிலை விவசாயத்துக்கு உகந்ததாக இல்லை,” என்கிறார் சஞ்சய். “எங்களின் இரண்டு ஏக்கர் நிலத்தில், எங்களின் தேவைக்காக உணவுப் பயிரை விளைவிக்கிறோம். அவளுக்கு சரியென நினைத்துதான் செய்தேன். அடுத்த முறை புலம்பெயர்ந்தபோது அவளை உடன் அழைத்து செல்ல முடியவில்லை. பாதுகாப்பு குறித்த பயத்தால் வீட்டில் விட்டு செல்லவும் முடியவில்லை.”

*****

கரும்பு வெட்டும் குடும்பங்களிடையே பரவலாக இருக்கும் குழந்தை திருமணத்தை பற்றி அஷோக் டாங்டே 15 வருடங்களுக்கு முன் தெரிந்து கொண்டார். கரும்பு வெட்டும் பெண் தொழிலாளர்களை சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த அவரின் மனைவி மனிஷா டோக்லேவுடன் மாவட்டம் முழுக்க பயணித்த போது அவருக்கு இப்பிரச்சினை தெரிய வந்தது.

“அவர்களில் சிலரை மனிஷாவுடன் சந்தித்தபோது, பதின்வயதுகளின் தொடக்கத்தில் அவர்கள் மணம் முடித்திருப்பதை தெரிந்து கொண்டேன்,” என்கிறார் அவர். “அப்போதுதான் இப்பிரச்சினை சார்ந்து தனியாக இயங்க வேண்டுமென நான் நினைத்தேன்.”

பீட் மாவட்ட வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த காம்ப்ளேவை அவர் தொடர்பு கொண்டார். இருவரும் ஒன்றாக இயங்குவதென முடிவெடுத்தனர்.

10-12 வருடங்களுக்கு முன், முதன்முறையாக ஒரு குழந்தை திருமணத்தை அவர்கள் தடுத்து நிறுத்தியபோது மொத்த பீட் மாவட்டத்துக்கே அது புது விஷயமாக இருந்தது.

According to the latest report of National Family Health Survey 2019-21, a fifth of women between the age of 20-24 were married before they turned 18. In Beed, a district with a population of roughly 3 million, the number is almost double the national average
PHOTO • Parth M.N.

சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-21-ன்படி 20-24 வயதுகளில் இருக்கும் பெண்களில் ஐந்தில் ஒருவர் 18 வயதுக்கு முன்பே மணம் முடித்து வைக்கப்படுகின்றனர். 30 லட்சம்ப் பேர் வசிக்கும் பீட் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை தேசிய சராசரியை விட இரண்டு மடங்காகும்

“மக்கள் ஆச்சரியப்பட்டு, எங்களின் நம்பகத்தன்மை குறித்து கேட்டனர்,” என்கிறார் டாங்டே. “நிகழ்வை நடத்தும் பெரியவர்களால், இப்படியொரு விஷயம் நடக்குமென நம்பவே முடியவில்லை. குழந்தை திருமணங்களுக்கு சமூகரீதியாக ஏற்பு இருக்கிறது. சில நேரங்களில், ஒப்பந்ததாரர்களே திருமணத்துக்கு பணம் கொடுத்து, மணமக்களை கரும்பு வெட்ட அழைத்தும் செல்வார்கள்.”

இருவரும் பிறகு பீட் முழுவதும் பேருந்துகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் சென்று, அவர்களுக்கு தகவல் கொடுத்து உதவுபவர்களுக்கான வலைப்பின்னலை உருவாக்கினார்கள். விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களை பிரபலப்படுத்தவும்  உள்ளூர் செய்தித்தாள்கள் உதவியதாக நம்புகிறார் காம்ப்ளே.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் 4,500 குழந்தைத் திருமணங்களை அந்த மாவட்டத்தில் அவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். திருமணத்தை நிறுத்திய பிறகு, அதை நடத்தியவர்கள் மீது  குழந்தை திருமணச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வார்கள். திருமணம் முடிந்துவிட்டால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ( POCSO ) கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். பிறகு வயது குறைந்த பெண் பாதுகாப்புக்கு அழைத்து செல்லப்படுவார்.

“பெண்ணுடனும் பெற்றோருடனும் பேசி, குழந்தைத் திருமணத்தின் சட்டவிளைவுகளை தெரியப்படுத்துவோம்,” என்கிறார் டாங்டே. “பிறகு CWC குழு, மாதந்தோறும் குடும்பத்தை தொடர்பு கொண்டு, பெண்ணுக்கு மீண்டும் மணம் முடித்து வைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும். பெரும்பாலான பெற்றோர் கரும்பு வெட்டும் பணியை செய்பவர்கள்.”

*****

ஜூன் 2023-ன் முதல் வாரத்தில், ஒரு தூரத்து கிராமத்தில் நடக்கும் குழந்தை திருமணம் பற்றிய துப்பு டாங்டேவுக்கு கிடைத்தது. அவரது வீட்டிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமம். “அந்த தாலுகாவில் என் தொடர்பில் இருந்தவருக்கு ஆவணங்களை அனுப்பினேன். ஏனெனில் உடனே கிளம்பி நேரத்துக்கு அங்கு என்றால் சென்றடைய முடியாது,” என்கிறார் அவர். “என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்தார். என்னுடன் இயங்குபவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென தற்போது தெரியும்.”

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்று, திருமணத்தை நிறுத்திய பிறகுதான், அது பெண்ணின் மூன்றாம் கல்யாணம் என தெரிய வந்தது. முதல் இரண்டு திருமணங்களும் கோவிட் தொற்று இருந்த இரண்டு வருடங்களுக்குள் நடந்திருந்தது. பெண்ணின் பெயர் லஷ்மி. அவருக்கு வயது 17.

மார்ச் 2020-ல் பரவிய கோவிட் தொற்று, டாங்டே மற்றும் காம்ப்ளே பல வருடங்களாக செய்து வந்த பணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளும் கல்லூரிகளும் நீண்ட காலத்துக்கு மூடப்படன. குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை. மார்ச் 2021-ல் வெளியான யுனிசெஃப் அறிக்கை யின்படி, கோவிட் தொற்றால் பள்ளி மூடப்பட்டதும் அதிகரித்த வறுமையும் பெற்றோர் மரணங்களும் “லட்சக்கணக்கான பெண் குழந்தைகளின் நிலையை மிகவும் மோசமாக்கியது.”

டாங்க்டே இப்பிரச்சினை பீட் மாவட்டத்திலேயே நடப்பதைக் கண்டார். வயது குறைந்த பெண்கள் பெருமளவில் மணம் முடித்து வைக்கப்பட்டனர். (வாசிக்க: கரும்பு வெட்டும் குழந்தை மணப்பெண்கள் ).

An underage Lakshmi had already been married twice before Tangde and Kamble prevented her third marriage from taking place in June 2023
PHOTO • Parth M.N.

வயது குறைந்த லஷ்மியின் திருமணத்தை டாங்க்டேவும் காம்ப்ளேவும் ஜூன் 2023-ல் தடுப்பதற்கு முன் இரு முறை அவருக்கு திருமணமாகி இருந்தது

2021ம் ஆண்டில் இரண்டாம் ஊரடங்கு அமலானபோது லஷ்மியின் தாய் விஜய்மாலா, மகளுக்கு ஒரு மணமகனை பீட் மாவட்டத்தில் கண்டறிந்தார். அப்போது லஷ்மிக்கு வயது 15.

“என் கணவர் ஒரு குடிகாரர்,” என்கிறார் விஜய்மாலா. “கரும்பு வெட்ட ஆறு மாதங்கள் புலம்பெயர்வதை தவிர்த்து, அவர் அதிகமாக வேலை பார்ப்பதில்லை. அதிகமாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து என்னை அடிப்பார். என் மகள் அவரை தடுக்க முயற்சிக்கையில், அவளையும் அடிப்பார். அவரிடமிருந்து அவள் சென்றுவிட வேண்டுமென விரும்பினேன்,” என்கிறார் 30 வயது நிரம்பிய அவர்.

லஷ்மியின் கணவர் வீட்டாரும் துன்புறுத்துபவர்களாக இருந்தனர். மணம் முடித்த ஒரு மாதத்தில், கணவரிடமிருந்தும் அவர் வீட்டாரிடமிருந்து தப்பிக்கும் வழியாக அவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டார். அதற்குப் பிறகு, கணவர் வீட்டார் அவரைக் கொண்டு வந்து பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சென்றார்கள். திரும்பி வரவே இல்லை.

ஆறு மாதங்கள் கழித்து, நவம்பர் மாதத்தில் விஜய்மாலாவும் கணவரான 33 வயது புருஷோத்தமும் மேற்கு மகாராஷ்டிராவுக்கு கரும்பு வெட்ட புலம்பெயரவிருந்தனர். பணியில் உதவியாக இருப்பாரென லஷ்மியையும் உடன் அழைத்துச் சென்றனர். பணிதளத்தில் வாழ்க்கை சூழல் சிரமமாக இருக்குமென்பதை அறிந்திருந்தார் லஷ்மி. ஆனால் அவர் எதிர்பாராதது நடந்தது.

மணம் முடிக்க விரும்பும் ஒருவரை கரும்பு வயல்களில் புருஷோத்தம் சந்தித்தார். மகளை பற்றி சொன்னதும் அந்த நபரும் சம்மதம் தெரிவித்தார். அவருக்கு 45 வயது. லஷ்மி மற்றும் விஜயமாலா ஆகியோரின் விருப்பமின்மையை பொருட்படுத்தாமல், மும்மடங்கு வயது அதிகமாக இருந்தவருக்கு மகளை அவர் மணம் முடித்துக் கொடுத்தார்.

“இதை செய்ய வேண்டாமென கட்டாயப்படுத்தினேன்,” என்கிறார் விஜய்மாலா. “ஆனால் என்னை அவர் மதிக்கவே இல்லை. எதையும் பேசக் கூடாதென்றார். என் மகளுக்கு என்னால் உதவ முடியவில்லை. அதற்குப் பிறகு அவரிடம் நான் பேசவில்லை.”

ஆனால் ஒரு மாதத்துக்கு பின், லஷ்மீ வீடு வந்துவிட்டார். இன்னொரு பிரச்சினைக்குரிய மண வாழ்க்கையாக அது இருந்தது. “திரும்பவும் அதே கதைதான்,” என்கிறார் அவர். “அவருக்கு தேவைப்பட்டது மனைவி அல்ல, வேலைக்காரி.”

Laxmi's mother Vijaymala says, 'my husband is a drunkard [...] I just wanted her to be away from him.' But Laxmi's husband and in-laws turned out to be abusive and she returned home. Six months later, her father found another groom, three times her age, who was also abusive
PHOTO • Parth M.N.
Laxmi's mother Vijaymala says, 'my husband is a drunkard [...] I just wanted her to be away from him.' But Laxmi's husband and in-laws turned out to be abusive and she returned home. Six months later, her father found another groom, three times her age, who was also abusive
PHOTO • Parth M.N.

லஷ்மியின் தாய் விஜய்மாலா, ‘என் கணவர் ஒரு குடிகாரர். மகள் அவரின் பக்கத்தில் இருக்கக் கூடாது என விரும்பினேன்,’ என்கிறார். ஆனால் லஷ்மியின் கணவரும் கணவர் வீட்டாரும் துன்புறுத்தியதால், லஷ்மி வீடு திரும்பினார். ஆறு மாதங்களுக்கு பிறகு தந்தை பார்த்த மணமகன், லஷ்மியை விட மூன்று மடங்கு மூத்தவர். அவரும் துன்புறுத்துபவராக இருந்தார்

அதற்குப் பிறகு பெற்றோருடன் லஷ்மி ஒரு வருடம் வாழ்ந்தார். விவசாய நிலத்தில் விஜய்மாலா வேலை பார்க்கும்போது, அவர் வீட்டை பார்த்துக் கொண்டார். வீட்டுக்கு தேவையான கம்பு தானியத்தை நிலத்தில் விளைவித்துக் கொள்கிறார்கள். “பணத்துக்காக பிற மக்களின் வயல்களில் தொழிலாளராகவும் நான் பணிபுரிகிறேன்,” என்கிறார் விஜய்மாலா. அவர்களின் மாத வருமானம் ரூ.2,500. “என் வறுமை என் துரதிர்ஷ்டம். அதை நான்தான் சமாளிக்க வேண்டும்,’ என்கிறார் அவர்.

மே 2023-ல், ஒரு குடும்ப உறுப்பினர் ஒரு வரனை குறித்து விஜய்மாலாவிடம் கூறினார். “பையன் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன்,” என்கிறார் அவர். “பொருளாதார ரீதியாகவும் அவர்கள் எங்களை விட நல்ல இடத்தில் இருக்கின்றனர். இது அவளுக்கு நல்ல இடமாக இருக்குமென நினைத்தேன். எனக்கு படிப்பறிவு கிடையாது. என்னுடைய சாத்தியங்களிலிருந்து ஒரு சிறந்த முடிவாக அதை நினைத்தேன்.” இந்த திருமணம் பற்றிய துப்புதான் டாங்க்டேவுக்கும் காம்ப்ளேவுக்கும் கொடுக்கப்பட்டது.

இன்று, அது சரியான விஷயம் கிடையாது என்கிறார் விஜய்மாலா.

“என் தந்தை ஒரு குடிகாரர். 12 வயதிலேயே எனக்கு மணம் முடித்து அனுப்பி விட்டார்,” என்கிறார் அவர். “அப்போதிருந்து கரும்பு வெட்ட என் கணவருடம் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறேன். பதின்வயதில் எனக்கு லஷ்மி பிறந்தாள். என்னை அறியாமலே, தந்தை செய்ததைதான் நானும் செய்திருக்கிறேன். நல்லது எது, கெட்டது எது என சொல்வதற்கு கூட எனக்கு எவருமில்லை என்பதுதான் பிரச்சினை. நான் தனியாக இருக்கிறேன்.”

கடந்த மூன்று வருடங்களாக பள்ளிக்கு செல்லாத லஷ்மி, கல்வி தொடர்வதில் ஆர்வமின்றி இருக்கிறார். “எப்போதும் வீட்டை பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகள்தான் செய்திருக்கிறேன்,” என்கிறார் அவர். “பள்ளிக்கு திரும்ப செல்ல முடியுமா என தெரியவில்லை. எனக்கு நம்பிக்கை இல்லை.”

*****

லஷ்மிக்கு 18 வயதான உடனே மீண்டும் அவரை மணம் முடிக்க தாய் முயலுவாரென டாங்டே சந்தேகிக்கிறார். ஆனால் அது சுலபமாக நடந்து விடாது.

“நம் சமூகத்தில் ஒரு பிரச்சினை உண்டு. இரண்டு திருமணங்கள் தோல்வியுற்று, ஒரு திருமணம் தடைபட்டுவிட்டால், பெண்ணிடம்தான் பிரச்சினை என மக்கள் நினைப்பார்கள்,” என்கிறார் டாங்டே. “அவர் மணம் முடித்த ஆண்களை பற்றி எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அதனால்தான் மரியாதை குறித்த பிரச்சினைக்காக இன்றும் நாம் போராடுகிறோம். திருமணத்தை நிறுத்தி பெண்ணின் பெயரை களங்கப்படுத்துபவர்களாக எங்களை மக்கள் பார்க்கின்றனர்.”

While Tangde and Kamble have cultivated a network of informants across the district and work closely with locals, their help is not always appreciated. 'We have been assaulted, insulted and threatened,' says Kamble
PHOTO • Parth M.N.

தகவல் சொல்பவர்களை மாவட்டம் முழுக்க கொண்டு டாங்க்டேவும் காம்ப்ளேவும் இயங்கினாலும் அவர்களின் பணி பாராட்டப்படுவதில்லை. ‘தாக்கப்பட்டிருக்கிறோம், அவமதிக்கப்பட்டிருக்கிறோம், மிரட்டப்பட்டிருக்கிறோம்,’ என்கிறார் காம்ப்ளே

சஞ்சயும் ராஜஸ்ரீயும் கூட, பூஜாவின் திருமணத்தை இரு செயற்பாட்டாளர்களும் நிறுத்தியதையும் அப்படிதான் குறிப்பிடுகிறார்கள்.

“திருமணம் நடக்க அவர்கள் விட்டிருக்க வேண்டும்,” என்கிறார் 33 வயது ராஜஸ்ரீ. “அது ஒரு நல்ல குடும்பம். அவளை அவர்கள் நல்லபடியாக பார்த்திருப்பார்கள். அவளுக்கு 18 வயதாக இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை காத்திருக்க அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. 2 லட்ச ரூபாய் திருமணத்துக்கென கடன் வாங்கினோம். எங்களுக்குதான் இப்போது நஷ்டம்.”

சஞ்சய் மற்றும் ராஜஸ்ரீயின் குடும்பத்தை போலில்லாமல், ஊரின் செல்வாக்கு மிக்க குடும்பமாக இருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும் என்கிறார் டாங்க்டே. “எங்களின்  பணியால் நிறைய எதிரிகளை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு முறை துப்பு கிடைக்கும்போதும், சம்பந்தப்பட்ட குடும்பங்களின் பின்னணிகளை நாங்கள் ஆராய்வோம்.”

உள்ளூர் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்ட குடும்பம் என்றால், நிர்வாகத்தை முன் கூட்டியே இருவரும் தொடர்பு கொண்டு விடுவார்கள். தேவையெனில் காவல் நிலையத்திலிருந்து அதிக பாதுகாப்பையும் கேட்பார்கள்.

“நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம், அவமதிக்கப்பட்டிருக்கிறோம், மிரட்டவும் பட்டிருக்கிறோம்,” என்கிறார் காம்ப்ளே. “தங்களின் தவறை அனைவரும் உணர்ந்து விட மாட்டார்கள்.”

ஒருமுறை, மணமகனின் தந்தை சுவரில் தலையை மோதிக் கொண்டார் என நினைவுகூருகிறார் டாங்டே. தலையிலிருந்து ரத்தம் வந்திருக்கிறது. அதிகாரிகளை உணர்வுப்பூர்வமாக அச்சுறுத்துவதற்கான வழி அது. “சில விருந்தினர் வெட்கமின்றி உணவை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்,” என சிரிக்கிறார் டாங்க்டே. “ஆனால் குடும்பத்தை கையாளுவது மிகவும் சிரமம். சில நேரங்களில், குற்றவாளிகள் போல  நடத்தப்படும்போதுதான் இதையெல்லாம் செய்வதால் என்ன பயனென எண்ணத் தோன்றும்,” என்கிறார் அவர்.

In May 2023, three years after they stopped the wedding of a 17-year-old girl, her father walked into the duo's office with a box of sweets. Tangde and Kamble were finally invited to a wedding
PHOTO • Parth M.N.

17 வயது பெண்ணின் திருமணத்தை நிறுத்தி மூன்று வருடங்களுக்கு பிறகு மே 2023 அன்று, அப்பெண்ணின் தந்தை அலுவலகத்துக்கு இனிப்புகளோடு வந்தார். டாங்டேவும் காம்ப்ளேவும் இறுதியில் ஒரு திருமண அழைப்பிதழ் அளிக்கப்பட்டது

அதே நேரம் நினைவில் நிற்கும் அனுபவங்களும் இருக்கின்றன.

2020ம் ஆண்டு தொடக்கத்தில், டாங்டேவும் காம்ப்ளேவும் ஒரு 17 வயது பெண்ணின் திருமணத்தை நிறுத்தினர். 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு அச்சமயத்தில் தயாராகிக் கொண்டிருந்தார் அவர். கரும்பு வெட்டி வறுமையில் இருந்த அவரின் தந்தை, பெண்ணுக்கு மணம் முடித்து வைப்பதென முடிவு செய்தார். ஆனால் இரு செயற்பாட்டாளர்களுக்கும் தகவல் தெரிய வந்து, அதை தடுத்து நிறுத்தினர். கோவிட் தொற்று பரவத் தொடங்கிய பிறகு அவர்களால் தடுத்து நிறுத்த முடிந்த திருமணங்களில் அதுவும் ஒன்று.

“வழக்கமாக செய்வதைத்தான் நாங்கள் செய்தோம்,” என நினைவுகூருகிறார் டாங்டே. “காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தோம். தந்தைக்கு ஆறுதல் கூற முயன்றோம். ஆனாலும் அப்பெண்ணுக்கு மீண்டும் மணம் முடிக்கப்படும் ஆபத்து இருந்து கொண்டுதான் இருந்தது.”

மே 2023-ல், பெண்ணின் தந்தை டாங்க்டே அலுவலகத்துக்கு வந்தார். முதலில் டாங்க்டே அவரை அடையாளம் காணவில்லை. இருவரும் சந்தித்து பல நாட்களாகி விட்டது. தந்தை, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மகள் பட்டதாரி ஆகும் வரை தான் காத்திருந்ததாக சொன்னார். பிறகு திருமண ஏற்பாடுகள் செய்திருக்கிறார். மகள் ஒப்புக் கொண்ட பிறகுதான் பையன் ஒப்புக் கொண்டிருக்கிறார். டாங்க்டேவின் பணிக்காக நன்றி தெரிவித்து ஒரு பரிசுப் பொருளை அவர் கொடுத்தார்.

முதன்முறையாக டாங்டேவுக்கு திருமணத்துக்கு வரக் கேட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மற்றும் உறவினர்களின் பெயர்கள் இக்கட்டுரையில் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டிருக்கின்றன.

இக்கட்டுரை தாமஸ் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் உதவியில் தயாரிக்கப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

2017 ರ 'ಪರಿ' ಫೆಲೋ ಆಗಿರುವ ಪಾರ್ಥ್ ಎಮ್. ಎನ್. ರವರು ವಿವಿಧ ಆನ್ಲೈನ್ ಪೋರ್ಟಲ್ ಗಳಲ್ಲಿ ಫ್ರೀಲಾನ್ಸರ್ ಆಗಿ ಕಾರ್ಯನಿರ್ವಹಿಸುತ್ತಿದ್ದಾರೆ. ಕ್ರಿಕೆಟ್ ಮತ್ತು ಪ್ರವಾಸ ಇವರ ಇತರ ಆಸಕ್ತಿಯ ಕ್ಷೇತ್ರಗಳು.

Other stories by Parth M.N.
Editor : Sarbajaya Bhattacharya

ಸರ್ಬಜಯ ಭಟ್ಟಾಚಾರ್ಯ ಅವರು ಪರಿಯ ಹಿರಿಯ ಸಹಾಯಕ ಸಂಪಾದಕರು. ಅವರು ಅನುಭವಿ ಬಾಂಗ್ಲಾ ಅನುವಾದಕರು. ಕೊಲ್ಕತ್ತಾ ಮೂಲದ ಅವರು ನಗರದ ಇತಿಹಾಸ ಮತ್ತು ಪ್ರಯಾಣ ಸಾಹಿತ್ಯದಲ್ಲಿ ಆಸಕ್ತಿ ಹೊಂದಿದ್ದಾರೆ.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan