“ஒரு நாள் நான் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்,” என்கிறார் அந்தப் பெண் – தன்னுடைய விளையாட்டுப் பள்ளியைக் கடந்து செல்லும் தார்ச்சாலையில் தனது ஓட்டப் பயிற்சியை முடித்த கையோடு மூச்சு வாங்கப்பேசுகிறார் அவர். அவரது சோர்வடைந்த, காயமடைந்த கால்கள் நான்கு மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு மைதானத்தில் ஓய்வெடுக்கின்றன.

அந்த 13 வயது நீண்ட தொலைவு ஓட்டப் பந்தய வீரர் ஏதோ ஒரு நவீன கால டிரெண்டுக்காக வெறும் காலோடு ஓடவில்லை. “என் அப்பா அம்மாவால் விலை மிகுந்த ஓட்டப்பந்தய ஷூ வாங்கித் தர முடியாது என்பதால்தான் நான் அப்படி ஓடுகிறேன்,” என்கிறார் வர்ஷா கதம் என்கிற அந்தப் பெண்.

மகாராஷ்டிரத்தின் வறட்சி பீடித்த மராத்வாடா பகுதியில் உள்ள மிகுந்த ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான பர்பணி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளிகளான விஷ்ணு – தேவ்ஷாலா இணையரின் மகள் அவர். மகாராஷ்டிராவில் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள மாதங் சமூகத்தை சேர்ந்தது அவரது குடும்பம்.

“ஓடுவது எனக்குப் பிடிக்கும்,” என்று கூறும்போது அவரது கண்கள் மின்னுகின்றன. “5 கி.மீ. தூர புல்தானா நகர்ப்புறக் காட்டுவழி மாரத்தான் போட்டிதான் 2021ல் நான் கலந்துகொள்ளும் முதல் ஓட்டப் பந்தயம். இதில் நான் இரண்டாவதாக வந்து என்னுடைய முதலாவது பதக்கத்தை வென்றபோது மகிழ்ச்சியாக இருந்தது,” என்கிறார் அந்த மன உறுதிமிக்க இளம் பெண்.

அவருக்கு 8 வயது இருக்கும்போதே அவரது ஆர்வத்தை அடையாளம் கண்டார்கள் அவரது பெற்றோர். “என் தாய் மாமா பராஜி கெய்க்வாட் மாநில அளவிலான தடகள வீரர். அவர் தற்போது ராணுவத்தில் இருக்கிறார். அவரைப் பார்த்து நானும் ஓடத் தொடங்கினேன்,” என்கிறார் அவர். 2019-ல் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான 4 கி.மீ. தூர கிராஸ் கண்ட்ரி ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார் அவர். “அது ஓட்டப்பந்தயத்தை தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது,” என்கிறார் அவர்.

arsha Kadam practicing on the tar road outside her village. This road used was her regular practice track before she joined the academy.
PHOTO • Jyoti
Right: Varsha and her younger brother Shivam along with their parents Vishnu and Devshala
PHOTO • Jyoti

இடது : ஊருக்கு வெளியே தார்ச் சாலையில் பயிற்சியில் ஈடுபடும் வர்ஷா கதம். விளையாட்டுப் பள்ளியில் சேர்வதற்கு முன்பு அவரது பயிற்சித் தடமாக இருந்தது இந்த சாலைதான். வலது : பெற்றோர் விஷ்ணு – தேவ்ஷாலா ஆகியோருடன் வர்ஷா, அவரது தம்பி சிவம்

பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. "இணைய வழி வகுப்பில் பங்கேற்க என்னுடைய பெற்றோரிடம் திறன்பேசி இல்லை," என்கிறார் வர்ஷா. எனவே தன்னுடைய நேரத்தை ஓடுவதற்கு பயன்படுத்தினார் அவர்.  தினமும் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் அவர் ஓடுவார்.

2020 அக்டோபர் மாதம் தனக்கு 13 வயதான போது ‘ஸ்ரீ சமரத்  அத்லெடிக்ஸ் ஸ்போர்ட்ஸ் ரெசிடென்ஷியல் அகாடெமி’ என்ற விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்தார் அவர். மகாராஷ்டிராவின் பர்பணி மாவட்டத்தில் உள்ள பிம்பள்காவ்ன் தாம்போர் என்ற ஊருக்கு வெளியே அமைந்துள்ளது இந்த விளையாட்டுப் பள்ளி.

விளிம்பு நிலை சமூகங்களை சேர்ந்த மேலும் 13 பேர் அங்கு பயிற்சி பெற்றனர். அவர்களில் எட்டு பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். அவர்களில் சிலர் மாநிலத்தின் 'குறிப்பான விளிம்புநிலை பட்டியல் பழங்குடி சமூகங்களை (PVTG)' சேர்ந்தவர்கள். அவர்களது பெற்றோர் கடும் வறட்சியால் துயருறும் மராத்வாடா பகுதியில் விவசாயிகளாகவும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களாகவும்,  புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்களாகவும் வேலை செய்கின்றனர்.

இங்கே பயிற்சி பெற்ற இந்த இளைஞர்கள் மாநில, தேசிய விளையாட்டு வீரர்களாகி வெற்றிக்கோட்டைத் தொட்டார்கள். சிலர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார்கள்.

இவர்களில் நட்சத்திர விளையாட்டு வீரர்கள், ஆண்டு முழுவதும் விளையாட்டுப் பள்ளியிலேயே தங்கிப் பயிற்சி பெற்றுக்கொண்டு 39 கி.மீ. தொலைவில் உள்ள பர்பணியில் பள்ளி கல்லூரிகளில் பயில்கிறார்கள். விடுமுறை காலங்களில்தான் அவர்கள் வீட்டுக்கு செல்வார்கள். "இவர்களில் சிலருக்கு பள்ளி/கல்லூரி காலை நேரத்தில் இருக்கும். வேறு சிலருக்கு பிற்பகல் நேரத்தில் இருக்கும். அவர்களது நேரத்துக்குத் தகுந்தபடி நாங்கள் பயிற்சியைத் திட்டமிடுகிறோம்," என்கிறார் நிறுவனர் ரவி ரஸ்கட்லா.

"இங்கு உள்ள குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளில் திறமைகள் இருக்கின்றன. ஆனால் தங்கள் குடும்பத்தில் இரண்டு வேளை உணவுக்கு போராடும்போது அவர்களால் தாங்கள் விரும்பும் விளையாட்டை தொழில்முறையில் தொடர முடியாது," என்கிறார் ரவி. ஜில்லா பரிஷத் பள்ளிகளில் விளையாட்டு போதித்துக் கொண்டிருந்த அவர் 2016-ம் ஆண்டு இந்தப் பள்ளியை தொடங்கினார். "இது போன்ற (ஊரக) குழந்தைகளுக்கு மிக இளம் வயதில் இருந்து தரமான பயிற்சியை இலவசமாக வழங்க வேண்டும் என்று முடிவு செய்தேன்," என்று கூறும் 49 வயது பயிற்சியாளர் ரவி, எப்போதும் பயிற்சிக்கும், உணவுக்கும், ஷூவுக்கும் கொடையாளர்களைத் தேடிக் கொண்டே இருக்கிறார்.

Left: Five female athletes share a small tin room with three beds in the Shri Samarth Athletics Sports Residential Academy.
PHOTO • Jyoti
Right: Eight male athletes share another room
PHOTO • Jyoti

(இடது) ஸ்ரீ சமரத் அத்லெடிக் ஸ்போர்ட்ஸ் ரெசிடென்ஷியல் அகாடமியில் மூன்று படுக்கைகள் போடப்பட்ட, தகரத்தால் ஆன சிறிய அறையில் ஐந்து பெண் தடகள வீரர்கள் தங்கி இருக்கிறார்கள். (வலது) இன்னொரு அறையில் எட்டு ஆண் தடகள வீரர்கள் தங்கி இருக்கிறார்கள்

The tin structure of the academy stands in the middle of fields, adjacent to the Beed bypass road. Athletes from marginalised communities reside, study, and train here
PHOTO • Jyoti

தகரத்தால் கட்டமைக்கப்பட்டு, ஊதா வண்ணம் அடிக்கப்பட்டு, வயல்களுக்கு நடுவே, பீட் புறவழிச் சாலைக்கு அருகில் அமைந்திருக்கிற  தற்காலிக கட்டுமானம்தான் இந்த அகாடமி. இங்கேதான் விளிம்பு நிலை சமூகங்களை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் தங்கி படிக்கிறார்கள். பயிற்சி மேற்கொள்கிறார்கள்

இந்த அகாடமி என்பது தகரத்தால் செய்யப்பட்டு ஊதா வண்ணம் பூசப்பட்ட ஒரு தற்காலிக கட்டுமானம். பீட் பைபாஸ் அருகே வயல்களுக்கு நடுவே சங்கர் ராவ் என்பவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இது அமைந்துள்ளது. சங்கர் ராவின் தந்தை ஜோதி கவடே பர்பணியை சேர்ந்த ஒரு தடகள வீரர். அவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்கிறார். ஜோதியின் தாய் சமையலராக வேலை செய்கிறார்.

"தகரக்கூரை போட்ட வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். நான் கொஞ்சம் முதலீடு செய்து சொந்தமாக ஓர் அடுக்கு கொண்ட வீடு கட்டினேன். (மகாராஷ்டிரா போலீசில் கான்ஸ்டபிளாக உள்ள) என் சகோதரரும் முன்பை விட அதிகம் சம்பாதிக்கிறார்," என்கிறார் ஜோதி. தன்னுடைய வாழ்க்கையை ஓட்டப்பந்தயத்திற்கு அர்ப்பணித்தவர் இந்த பெண்மணி. 'ரவி சார்' அகாடமி வைப்பதற்காக குடும்பத்தினர் தங்கள் நிலத்தைத் தரவேண்டும் என்று நினைத்தார் அவர். இவரது பெற்றோரும் சகோதரரும் இவருக்கு ஆதரவாக இருந்தனர். "இது ஒரு பரஸ்பர புரிதல்," என்கிறார் அவர்.

அகாடமியை தகரத்தைக் கொண்டு இரண்டு அறைகளாக பிரித்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் 15க்கு 20 அடி பரப்பு கொண்டவை. இவற்றில் ஒன்று பெண்களுக்கானது. அந்த அறையில் கொடையாளர்கள் வழங்கிய மூன்று படுகைகள் உள்ளன. இவற்றை ஐந்து பெண்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இன்னொரு அறை ஆண்களுக்கானது. அங்கே சிமெண்ட் தரையில் வரிசையாக பாய்கள் விரிக்கப்பட்டுள்ளன.

இரண்டு அறையிலும் மின்விசிறி, குழல் விளக்கு ஆகியவை உள்ளன. அந்தப் பகுதியில் அடிக்கடி மின்சாரம் போகும் என்பதால் மின்சாரம் வரும்போது அவை இயங்கும். கோடை காலத்தில் இந்த பகுதியில் 42 டிகிரி வரை வெப்பநிலை உயரும். குளிர்காலத்தில் 14 டிகிரி வரை கீழே செல்லும்..

தடகள வீரர்களின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநிலத்தில் விளையாட்டு வளாகங்கள், விளையாட்டுப் பள்ளிகள், முகாம்கள், விளையாட்டுக் கருவிகள் ஆகியவற்றை அரசாங்கம் ஏற்பாடு செய்வது கட்டாயம் என்கிறது மாநில விளையாட்டுக் கொள்கை 2012 .

ஆனால், "பத்து ஆண்டுகளாக இந்த கொள்கை காகிதத்தில்தான் இருக்கிறது. களத்தில் உண்மையாக செயல்படுத்தப்படவில்லை. இது போன்ற திறமையானவர்களை அடையாளம் காணத் தவறுகிறது அரசாங்கம். விளையாட்டுத்துறை அதிகாரிகள் மத்தியில் அலட்சியம் இருக்கிறது," என்கிறார் ரவி.

வட்ட அளவில் தொடங்கி விளையாட்டு உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற இந்த விளையாட்டுக் கொள்கையின் நோக்கம் நிறைவேறாமலே இருக்கிறது என்று இந்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட தணிக்கை அறிக்கை கூறுகிறது.

Left: Boys showing the only strength training equipments that are available to them at the academy.
PHOTO • Jyoti
Right: Many athletes cannot afford shoes and run the races barefoot. 'I bought my first pair in 2019. When I started, I had no shoes, but when I earned some prize money by winning marathons, I got these,' says Chhagan
PHOTO • Jyoti

இடது: தங்களுக்கு உள்ள ஒரே வலிமையாகிய அகாடமியின் விளையாட்டுக் கருவிகளை காட்டுகிறார்கள் இந்த தடகள வீரர்கள். வலது:  பல வீரர்களுக்கு ஷூ வாங்க வசதி இல்லை என்பதால் அவர்கள் வெறும் காலோடு ஓடுகிறார்கள். 'நான் விளையாடத் தொடங்கும் போது என்னிடம் ஷூக்களே இல்லை. அதன் பிறகு சில மாரத்தான்களில் ஓடி பரிசுப் பணம் வென்ற பிறகு 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக ஷூ வாங்கினேன்,' என்கிறார் சகன்

Athletes practicing on the Beed bypass road. 'This road is not that busy but while running we still have to be careful of vehicles passing by,' says coach Ravi
PHOTO • Jyoti

பீட் புறவழிச்சாலையில் பயிற்சி மேற்கொள்ளும் தடகள வீரர்கள். இந்தச் சாலையில் அவ்வளவு நிறைய வண்டிகள் போகாது என்றாலும் ஓடும்போது கடந்து செல்லும் வண்டிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் ரவி

தனியார் பயிற்சி மூலம் கிடைக்கிற வருமானத்தைக் கொண்டு அகாடமியின் அன்றாட செலவுகளை சமாளிப்பதாக கூறுகிறார் ரவி. "மாரத்தான் போட்டியின் உயர்ந்த நிலையை அடைந்துள்ள எனது மாணவர்கள் பலர் தாங்கள் பெறும் பரிசுத் தொகையை அகாடமிக்கு வழங்குகிறார்கள்."

நிதியாதாரம் குறைவாக இருந்தபோதும் தனது மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குகிறது அகாடமி. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கோழிக்கறி அல்லது மீன் வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் காய்கறிகள், கீரைகள், வாழைப்பழம், சோள ரொட்டி, கம்பு ரொட்டி, முளைகட்டிய  பயறு வகைகள், முட்டை போன்றவை வழங்கப்படுகின்றன.

தடகள வீரர்கள் காலை 6 மணிக்கு இந்த தார்ச் சாலையில் தங்கள் பயிற்சியை தொடங்கி 10 மணிக்கு முடிக்கிறார்கள். மாலையில் 5 மணிக்குப் பிறகு தொடங்குகிறார்கள். வேகப் பயிற்சியையும் இந்த சாலையிலேயே அவர்கள் மேற்கொள்கிறார்கள். "இந்தச் சாலையில் அவ்வளவாக வண்டிகள் போகாது என்றாலும் ஓடும்போது, கடந்து செல்கிற வண்டிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பு குறித்து நான் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்கிறேன்," என்கிறார் அவர்களது பயிற்சியாளர் ரவி. "வேகப் பயிற்சி என்பது அதிகமான தூரத்தை குறைவான காலத்தில் கடக்க முயல்வது. எடுத்துக்காட்டாக ஒரு கிலோமீட்டர் தூரத்தை இரண்டு நிமிடம் 30 வினாடிகளில் கடக்க வேண்டும்."

தேசிய அளவிலான விளையாட்டு வீரராக வரவேண்டும் என்ற தங்களுடைய மகளின் கனவு நனவாகும் நாளை வர்ஷாவின் பெற்றோர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  2021 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் அவர் பங்கேற்று வருகிறார். "ஓட்டப்பந்தயத்தில் அவள் தலைசிறந்தவளாக வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எல்லா விதமான ஆதரவையும் வழங்குகிறோம். எங்களுக்கும் நாட்டுக்கும் அவள் பெருமை தேடித்தருவாள்," என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் வர்ஷாவின் தாய். "பல போட்டிகளில் அவள் பங்கேற்பதை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவற்றில் அவள் எப்படி செய்யப் போகிறாள் என்பதைக் காண ஆவலோடு இருக்கிறோம்," என்கிறார் அவரது தந்தை விஷ்ணு.

2009 ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து இந்த இணையர் புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். தங்கள் மூத்த மகள் வர்ஷாவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவர்கள் முதன் முதலாக தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்றார்கள். குடும்பம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். வழக்கமாக, அவர்கள் கூடாரங்களில் தங்குவார்கள். "தொடர்ந்து லாரிகளில் சென்று கொண்டே இருந்ததால் விஷ்ணுவின் உடல் நலன் பாதித்தது. எனவே நாங்கள் போவதை நிறுத்தி விட்டோம்," என்கிறார் தேவ்ஷாலா. அதற்கு பதிலாக கிராமத்தைச் சுற்றி இருக்கிற பகுதிகளில் தினம் ஆண்களுக்கு 200 ரூபாயும் பெண்களுக்கும் 100 ரூபாயும் கிடைக்கிற வேலைகளுக்கு நாங்கள் செல்லத் தொடங்கினோம் என்கிறார் விஷ்ணு. ஆனால் இவர் ஆண்டுக்கு ஆறு மாதம் நகர்ப்புறங்களில் வேலை செய்வதற்காக புலம்பெயர்ந்து செல்கிறார். "நான் நாசிக், பூனே நகரங்களுக்கு சென்று அங்கே கட்டுமானத் தளங்களில் பாதுகாவலராக வேலை செய்கிறேன். சில நேரங்களில் செடி நாற்றங்கால்  நிறுவனங்களிலும் வேலை செய்கிறேன்," என்று கூறும் விஷ்ணுவுக்கு இத்தகைய வேலைகளின் மூலம் ஆண்டுக்கு 5 - 6 மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. இந்த காலத்தில் பள்ளி செல்லும் தங்கள் மகள், மகனைப் பார்த்துக்கொள்வதற்காக தேவ்ஷாலா வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.

எவ்வளவு முயன்றும் அவரது பெற்றோரால் வர்ஷாவுக்கு ஒரு நல்ல ஷூ வாங்கித் தர முடியவில்லை. ஆனால் அது குறித்து வருத்தப்படாத வர்ஷா "வேகத்திலும் உத்திகளிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்," என்று கூறுகிறார்.

Devshala’s eyes fills with tears as her daughter Varsha is ready to go back to the academy after her holidays.
PHOTO • Jyoti
Varsha with her father. 'We would really like to see her running in competitions. I wonder how she does it,' he says
PHOTO • Jyoti

இடது : விடுமுறைக்குப் பிறகு தங்கள் மகள் வர்ஷா அகாடமிக்கு செல்லத் தயாராகி வருவதால் தேவ்ஷாலாவின் கண்கள் குளமாகின்றன. வலது : தன் தந்தையுடன் வர்ஷா. போட்டிகளில் அவள் விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்க விரும்புகிறோம். அதை அவள் எப்படிச் செய்கிறாள் என்பதே எங்கள் ஆவல் என்கிறார் அவர்

*****

சகன் பாம்ப்ளே என்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரருக்கு, முதல் வெற்றியைப் பெற்ற பிறகே ஷூ வாங்க முடிந்தது. “நான் ஓடத் தொடங்கும்போது எனக்கு ஷூக்கள் இல்லை. மாரத்தான்களில் வென்று பரிசுப் பணம் பெற்ற பிறகே என்னுடைய முதல் ஜோடி ஷூக்களை 2019-ல் வாங்கினேன்,” என்று கூறும் அவர் இப்போது அணிந்திருப்பதும்கூட நைந்துபோன ஷூக்கள்தான்.

‘அந்த்’  பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களின் 22 வயது மகன் அவர். ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கம்பளா கிராமத்தில் வசிக்கிறது அவரது குடும்பம்.

அவரிடம் தற்போது ஷூக்கள் உள்ளன. ஆனால், அவருக்கு சாக்ஸ் வாங்க வசதி இல்லை. எனவே, சாக்ஸ் இல்லாமலே ஷூ அணிந்திருக்கிறார். அதை அணிந்துகொண்டு ஓடும்போது அவரது கால்கள் அந்த தார்ச்சாலையை தொட்டு உணரும் அளவுக்கு அந்த ஷூக்கள் நைந்துபோயிருக்கின்றன.

சகனின் பெற்றோர்களான மாருதிக்கும் பகீரதிக்கும் சொந்தமாக நிலம் ஏதும் இல்லை. அவர்கள் விவசாய வேலை மூலம் வருகிற கூலியை நம்பியே இருக்கிறார்கள். "சில நேரங்களில் நிலத்தில் வேலை செய்வோம். சில நேரம் விவசாயிகளின் கால்நடைகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வோம். எந்த வேலை என்றாலும் செய்வோம்," என்கிறார் மாருதி. அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 - 15 நாட்களுக்கு வேலை கிடைக்கிறது.

ஓட்டப்பந்தய வீரரான அவரது மகன், நகர அளவில், வட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் நடைபெறக்கூடிய பெரியதும் சிறியதுமான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, குடும்பத்துக்கு உதவி செய்கிறார். "முதல் மூன்று இடங்களில் வருகிறவர்களுக்கு பரிசு கிடைக்கும். சில நேரங்களில் பத்தாயிரம் கிடைக்கும், சில நேரங்களில் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 மாரத்தான் போட்டிகளில் நான் பங்கேற்பேன். பங்கேற்கும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. 2022 ஆம் ஆண்டு நான் 2 போட்டிகளில் வெற்றி பெற்றேன்; அது தவிர மூன்று போட்டிகளில் இரண்டாவதாக வந்தேன். அப்போது சுமார் 42 ஆயிரம் சம்பாதித்தேன்," என்றார் சகன்.

Left: 22-year-old marathon runner Chhagan Bomble from Andh tribe in Maharashra
PHOTO • Jyoti
Right: Chhagan’s house in Khambala village in Hingoli district. His parents depend on their earnings from agriculture labour to survive
PHOTO • Jyoti

இடது: மகாராஷ்டிராவின் அந்த் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 22 வயது மாரத்தான் ஓட்ட வீரரான ஜெகன் பாம்ப்ளே. வலது : ஹிங்கோலி மாவட்டம், கம்பளா கிராமத்தில் உள்ள சகனின் வீடு. விவசாய வேலையில் சம்பாதிப்பதை வைத்தே அவரது பெற்றோர் வாழ்கின்றனர்

கம்பளா கிராமத்தில் ஓர் அறை கொண்ட சகனின் வீடு முழுவதும் பதக்கங்களும், கோப்பைகளும் நிரம்பி வழிகின்றன. அவரது பதக்கங்கள், சான்றிதழ்களைக் கண்டு அவரது பெற்றோர் அளவற்ற பெருமிதம் கொள்கிறார்கள். “நாங்கள் எழுத்தறிவற்றவர்கள். எங்கள் மகன் ஓட்டப்பந்தயம் மூலம் வாழ்க்கையில் சாதிப்பான்,”என்கிறார் 60 வயது மாருதி. சிறிய மண் வீட்டின் தரையில் பரப்பிவைக்கப்பட்ட பதக்கங்களையும், சான்றிதழ்களையும் காட்டி, “இவை தங்கத்தைவிட விலைமதிப்பற்றவை,” என்று கூறிச் சிரிக்கிறார் சகனின் 56 வயது தாய் பகீரதா.

“பெரிய விஷயங்களுக்கு நான் தயாராகி வருகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்,” என்கிறார் சகன். அவரது குரலில் தனித்துவமான உறுதி வெளிப்படுகிறது. பாதகங்கள் என்ன என்பதும் அவருக்குத் தெரிகிறது. “எங்களுக்கு அடிப்படையான விளையாட்டு வசதிகளாவது வேண்டும். ஓட்டப்பந்தய வீரர்கள் குறைந்தபட்ச நேரத்தில் அதிகபட்ச தூரம் ஓடவேண்டும். மண், தார்ச்சாலைகளில் ஓடும் நேரமும் செயற்கை ஓட்டத் தடத்தில் ஓடும் நேரமும் மாறுபடும். எனவே, தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிக்கும் விளையாடத் தேர்வாவது கடினமாகிறது,”என்று விவரிக்கிறார் அவர்.

பர்பணியின் இளம் தடகள வீரர்கள் இரண்டு கர்லா கட்டைகள், நான்கு பிவிசி ஜிம் பிளேட்டுகள், குறுக்குக் கம்பி ஆகிய எளிய கருவிகளை மட்டுமே வைத்துக்கொண்டு வலிமைப் பயிற்சி மேற்கொள்கின்றனர். “பர்பணியிலோ, ஒட்டு மொத்த மராத்வடாவிலோ ஒரு மாநிலப் பயிற்சிப் பள்ளிகூட இல்லை,” என்று உறுதிப்படுத்துகிறார் ரவி.

வாக்குறுதிகளும், கொள்கை அறிவிப்புகளும் ஏராளம். 2012ம் ஆண்டு மாநில விளையாட்டுக் கொள்கை வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. வட்ட அளவில் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கித் தர உறுதி அளித்தது இந்தக் கொள்கை. மாவட்டத்துக்கு ஒன்று வீதம் ‘கேலோ இந்தியா’ (விளையாடு இந்தியா) மையங்களை உருவாக்க கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா அரசு 3.6 கோடி ரூபாய் வாங்கியபிறகும் கூட இதெல்லாம் உருவாக்கப்படவில்லை.

Left: Chhagan participates in big and small marathons at city, taluka, state and country level. His prize money supports the family. Pointing at his trophies his mother Bhagirata says, 'this is more precious than any gold.'
PHOTO • Jyoti
Right: Chhagan with his elder brother Balu (pink shirt) on the left and Chhagan's mother Bhagirata and father Maruti on the right
PHOTO • Jyoti

சகன் சிறியதும் பெரியதுமாக, நகர அளவில், வட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார். அவர் பெற்ற பரிசுத் தொகைகளைக் கொண்டு குடும்பத்துக்கு உதவினார். அவர் பெற்ற கோப்பைகளைக் காட்டி, 'இவை தங்கத்தைவிட விலைமதிப்பற்றவை என்று கூறுகிறார்,' அவரது தாய் பகீரதா. வலது: அண்ணன் பாலு, சகன் ஆகியோர் இடது புறத்தில், சகனின் தாய் பகீரதா, தந்தை மாருதி ஆகியோர்  வலது புறத்தில்

இந்தியாவின் விளையாட்டு மையமான, மகாராஷ்டிராவின் ஊரகப் பகுதிகளில் சர்வதேசத் தரத்தில் 122 விளையாட்டு வளாகங்கள் வர இருக்கின்றன என்று 2023 மாநில ஒலிம்பிக் போட்டியைத் தொடக்கிவைத்தபோது அறிவித்தார் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.

“விளையாட்டுப் பள்ளி கட்டுவதற்கு ஓர் இடத்தைத் தேடிவருகிறோம். வட்ட அளவிலான விளையாட்டு வளாகங்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன,” என்றார்  பர்பணி மாவட்ட விளையாட்டு அலுவலர் நரேந்திர பவார்.

அகாடமியில் உள்ள தடகள வீரர்களுக்கு எதை நம்புவது என்று தெரியவில்லை. “அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களும்கூட ஒலிம்பிக் பதக்கம் வெல்லும்போதுதான் நாங்கள் இருப்பதை அங்கீகரிக்கிறார்கள். அதுவரை நாங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. அடிப்படையான விளையாட்டுக் கட்டமைப்புகளுக்கான எங்கள் போராட்டம் யாருக்கும் புலப்படவில்லை. ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் நீதிக்காகப் போராடுவதையும், அவர்களுக்கு ஆதரவு தருவதற்குப் பதிலாக கொடூரமாக நடத்தப்படுவதையும் பார்க்கும்போது இதை நான் அதிகம் உணர்கிறேன்,” என்கிறார் சகன்.

“ஆனால், விளையாட்டு வீரர்கள் போராளிகள். செயற்கை ஓடுதளமாக இருந்தாலும், குற்றத்துக்கு எதிராக நீதிகேட்டு நடத்தும் போராட்டமாக இருந்தாலும், கடைசி மூச்சு வரை நாங்கள் போராடுவோம்,”என்று ஒரு புன்னகையோடு கூறுகிறார் அவர்.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

ಜ್ಯೋತಿ ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಹಿರಿಯ ವರದಿಗಾರರು; ಅವರು ಈ ಹಿಂದೆ ‘ಮಿ ಮರಾಠಿ’ ಮತ್ತು ‘ಮಹಾರಾಷ್ಟ್ರ1’ನಂತಹ ಸುದ್ದಿ ವಾಹಿನಿಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದಾರೆ.

Other stories by Jyoti
Editor : Pratishtha Pandya

ಪ್ರತಿಷ್ಠಾ ಪಾಂಡ್ಯ ಅವರು ಪರಿಯ ಹಿರಿಯ ಸಂಪಾದಕರು, ಇಲ್ಲಿ ಅವರು ಪರಿಯ ಸೃಜನಶೀಲ ಬರವಣಿಗೆ ವಿಭಾಗವನ್ನು ಮುನ್ನಡೆಸುತ್ತಾರೆ. ಅವರು ಪರಿಭಾಷಾ ತಂಡದ ಸದಸ್ಯರೂ ಹೌದು ಮತ್ತು ಗುಜರಾತಿ ಭಾಷೆಯಲ್ಲಿ ಲೇಖನಗಳನ್ನು ಅನುವಾದಿಸುತ್ತಾರೆ ಮತ್ತು ಸಂಪಾದಿಸುತ್ತಾರೆ. ಪ್ರತಿಷ್ಠಾ ಗುಜರಾತಿ ಮತ್ತು ಇಂಗ್ಲಿಷ್ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುವ ಕವಿಯಾಗಿಯೂ ಗುರುತಿಸಿಕೊಂಡಿದ್ದು ಅವರ ಹಲವು ಕವಿತೆಗಳು ಮಾಧ್ಯಮಗಳಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿವೆ.

Other stories by Pratishtha Pandya
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan