“இந்தா உனக்கான பரிசு,” என உள்ளூர் ‘பயனாளிகள் குழுவின்’ உறுப்பினராக இருக்கும் பெகாரி லக்ரா, கும்லா மாவட்டத்தின் தெத்ரா கிராமப் பஞ்சாயத்து தலைவர் தெரெசா லக்ராவிடம் சொல்கிறார். 5,000 ரூபாய் பணத்தை அவர் கைகளில் திணிக்கிறார். ‘பரிசு’ என்பது கையில் திணிக்கப்பட்ட 5,000 ரூபாய்தான் என்பது தெரெசாவுக்கு தெரியவில்லை. அவர் பணத்தை பெறவுமில்லை. ஏனெனில், அந்தக் கணத்தில் ராஞ்சியிலிருந்து வந்த ஊழல் ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஊர்த் தலைவரை சுற்றி வளைத்து, “சட்டவிரோத கையூட்டு” பெறுகிறாரென ஊழல் தடுப்பு சட்டத்தின்படி கைது செய்தார்கள்.

அச்சம்பவம் ஓரவோன் பழங்குடியான 48 வயது தெரெசாவை உடைத்துப் போட்டது. அவரின் பஞ்சாயத்து இடம்பெற்றிருக்கும் ஜார்கண்டின் பாசியா ஒன்றியத்தின் 80,000 பேருக்கும் கூட அதிர்ச்சி. 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராஞ்சியிலிருந்து இந்த இடத்துக்கு - SUV காரில் வந்த எனக்கே இரண்டு மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும் தூரம் - 5,000 ரூபாய் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்பு துறை வந்ததில் உள்ள அபத்தத்தை யாரும் யோசித்ததாக தெரியவில்லை. எனினும் அவர் கொண்டு சென்று நிறுத்தப்பட்ட நீதிபதி இதைக் குறித்து குறிப்பிட்டார். லஞ்ச ஒழிப்பு துறை, இந்த இடத்துக்கு வந்து போக ஐந்து மணி நேரங்கள் ஆகியிருக்கும். அதற்கே அந்த தொகையில் பாதி செலவாகி இருக்கும். மிச்ச செலவுகளும் இருக்கிறது.

பாசியா ஒன்றியப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு தெரெசா, சக பஞ்சாயத்து உறுப்பினர்களால் அழைத்து செல்லப்பட்டதும் கூட எவருக்கும் சந்தேகத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள்தான் அவருக்கு எதிராக சாட்சியாகவும் இருந்தவர்கள். மேலும் தெரெசாவை கைது செய்த குழு, அவரே சொல்வது போல, “என்னை பாசியா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லவில்லை” - ஒன்றிய பஞ்சாயத்து அலுவலகத்துக்கு எதிரில்தான் இருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தூரம்தான். அதற்கு பதிலாக, “10-15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கம்தாரா ஒன்றிய காவல் நிலையத்துக்கு என்னை கொண்டு சென்றனர்.”

ஜுன் 2017-ல் அது நடந்தது.

திரும்பிப் பார்க்கையில், 12ம் வகுப்பு படித்த அவருக்கு புரிகிறது, “இந்த பாசியா காவல் நிலையத்தில் அனைவருக்கும் என்னை தெரியும். நான் குற்றவாளி இல்லை என்பதும் அவர்களுக்கு தெரியும்,” என. அவரின் வழக்கு ராஞ்சில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வந்தது.

Teresa Lakra, sarpanch of the Tetra gram panchayat in Gumla district of Jharkhand
PHOTO • P. Sainath

ஜார்கண்டின் கும்லா மாவட்டத்திலுள்ள தெத்ரா கிராமப் பஞ்சாயத்தின் ஊர்த்தலைவரான தெரெசா லக்ரா

அடுத்த இரண்டு மாதங்களும் 12 நாட்களும் சிறையில் கழித்து விட்டு பிணையில் வெளிவந்தார் தெரெசா லக்ரா. கைது ஆன மூன்று நாட்களில் ஊர்த்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பஞ்சாயத்தின் அதிகாரம் உடனே துணைத் தலைவரின் கைக்கு சென்றது. பாசியா பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரும்படி தெரெசா லக்ராவை தொலைபேசியில் வற்புறுத்திக் கொண்டிருந்த கோவிந்தா பராய்க்தான் துணைத் தலைவர்.

தெரெசா லக்ரா சிறையிலிருந்த காலத்தில் பல ஒப்பந்தங்களும் குத்தகைகளும் கையெழுத்தாகி இருக்கின்றன. அவை என்னவென தெளிவாக தெரியவில்லை.

*****

மொத்த சம்பவமும் பிறகான கைதும் தெரெசாவுக்கும் அவரது கணவருக்கும் இரு பெண்குழந்தைகளுக்கும் கடும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. “மூத்தவளான 25 வயது சரிதாவுக்கு திருமணமாகி விட்டது,” என்கிறார் அவர். “12ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.” இளையவர் ஏஞ்சலாவுக்கு 18 வயது. தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் அவர், மேற்படிப்பு படிக்க விரும்புகிறார். தெரெசாவின் கணவர் ராஜேஷ் லக்ராதான் குடும்பத்தில் கல்லூரிக்கு சென்றிருக்கும் ஒரே உறுப்பினர். வணிகவியல் பட்டப்படிப்பு முடித்திருந்தும், அவரும் தெரெசாவும் நகரங்களுக்கு இடம்பெயராமல் தெத்ரா கிராமத்திலேயே தங்கி விவசாயம் பார்ப்பதென முடிவெடுத்தனர்.

பதவியிலிருந்து விலக்கப்பட்ட முறையும் சிறையும் கொடுத்த அதிர்ச்சி, அவரை முடக்கிவிடவில்லை. ”நான் உடைந்து போனேன். கடும் துயரத்தில் இருந்தேன்,” என்கிறார் அவர். சிறையை விட்டு வெளியே வந்ததும், தன்னை சிக்க வைத்த சதியை எதிர்கொண்டார் தெரெசா.

“சட்டவிரோதமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டதை எதிர்த்து போராடினேன்,” என்கிறார் அவர். தீர்ப்பு வரவில்லை என்பது மட்டுமல்ல, நீதிமன்ற விசாரணை தொடங்கும் முன்பே அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். மாநில தேர்தல் கமிஷனுக்கு பிரச்சினையை அவர் கொண்டு சென்றார். சட்டவிரோதமாக பதவி விலக்கப்பட்டதை கொண்டு ராஞ்சியின் அதிகார வர்க்கத்துடன் மோதினார்.

”இத்தனை மாதங்களில் 12 - 14 முறை நான் தேர்தல் கமிஷனுக்கும் பிற அலுவலகங்களுக்கும் செல்ல ராஞ்சிக்கு சென்றிருக்கிறேன். பெரும் பணம் செலவானது,” என்கிறார் தெரெசா. எனினும் வழக்கமாக தாமதமாக கொடுக்கப்படும் நீதி, அவருக்கு கிடைத்தது. அது கிடைக்க ஒரு வருடத்துக்கு கொஞ்சம் அதிக காலம் பிடித்தது. ஊர்த் தலைவர் பதவிக்கான ஆணையை பெற்றார். சிறையில் அவர் இருந்தபோது அதிகாரத்தில் இருந்த துணைத் தலைவர் கோவிந்த் பராய்க்கின் அதிகாரம் குறைக்கப்பட்டது.

எல்லா செலவுகளையும், வானம் பார்த்த பூமியாக ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்து வருடத்துக்கு 2 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்ட முடியாத குடும்பம்தான் பார்த்துக் கொண்டது. நெல், ராகி, உளுந்து போன்றவற்றை சந்தைக்காக விளைவிக்கின்றனர். வேர்க்கடலை, சோளம், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றை அவர்களின் சொந்த பயன்பாட்டுக்காக விளைவித்துக் கொள்கின்றனர்.

Lakra has fought the bribery allegations with her own limited resources.
PHOTO • P. Sainath
Lakra has fought the bribery allegations with her own limited resources. With her are other women (right) from Tetra village, gathered at the village middle school building
PHOTO • Purusottam Thakur

லஞ்ச குற்றச்சாட்டுக்கு எதிராக தன்னிடமிருந்த குறைவான சாத்தியங்களைக் கொண்டு லக்ரா போராடினார்.  தெத்ரா கிராமத்தின் பிற பெண்களும் (வலது) அவருடன் நடுநிலைப் பள்ளி கட்டடத்தில்  கூடியிருக்கின்றனர்

ஆனால் சட்டவிரோதமாக அவரின் பதவி பறித்ததற்கு எதிராக ஒரு வருடம் கழித்து  மாநில தேர்தல் கமிஷனிடமிருந்து ஆணை பெற்றது கிட்டத்தட்ட வெற்றிதான்.

“பாசியாவின் ஒன்றிய வளர்ச்சி அதிகாரி (BDO) உடனே நடவடிக்கை எடுத்தார். தேர்தல் கமிஷனின் உத்தரவு வந்த ஒரே வாரத்தில் நான் மீண்டும் என் பொறுப்புக்கு வந்தேன்,” என்கிறார் தெரெசா சிறிய புன்னகையுடன். அது நடந்தது செப்டம்பர் 2018-ல்.

பதவி கவிழ்ப்பிலிருந்து மீண்டவர் உண்மையில் ஏழு வருடங்களாக ஊர்த் தலைவராக இருந்திருக்கிறார். கோவிட் தொற்று பரவத் தொடங்கியபோது அவரது பொறுப்பின் ஐந்தாண்டு காலம் முடிவை எட்டியிருந்தது. பஞ்சாயத்து தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால், 5,000 மக்கள் கொண்ட தெத்ரா கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக இரண்டு வருடங்கள் கூடுதலாக அவருக்கு நீட்டிக்கப்பட்டது. அரசியல் ரீதியான குழப்பத்தில் தள்ளப்பட்ட அவர், ஏழு வருடங்களாக ஊர்த்தலைவராக இருந்ததாகத்தான் இன்றைய நிலையில் அதிகாரப்பூர்வ தரவுகள் சொல்லும்.

அவரது பஞ்சாயத்தில் உள்ள சோலாங்க்பிரா கிராமத்தின் குன்று ஒன்றை அழித்து கற்கள் எடுப்பதற்காக ஒரு பெரிய ஒப்பந்ததாரர், அக்குன்றை குத்தகைக்கு கேட்டு கொடுத்த 10 லட்ச ரூபாயை நிராகரித்த நபராக மொத்த பஞ்சாயத்திலும் அறியப்படுபவர் தெரெசா. ஆனால், 5000 ரூபாய் லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் அவர் சிறையிலிருந்தார்.

*****

தெரெசாவின் கைது நடந்த விதத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. லஞ்சத்தை கொடுப்பவர் பொதுவெளியில் கொடுக்க விரும்பியது ஏன்? வேறொரு வேலையில் இருக்கும்போது துணை ஊர்த் தலைவர் கோவிந்தா பராய்க் உள்ளிட்ட சக பஞ்சாயத்து உறுப்பினர்களிடமிருந்து, வேகமாக ஒன்றிய பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரும்படி தொடர் அழைப்புகள் வந்தது ஏனென அவர் கேட்கிறார்.

இந்த ‘லஞ்சம்’ எதற்கு தரப்பட்டது?

“ஒரு அங்கன்வாடி மோசமான நிலையில் இருந்தது. நான் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்தேன். அதை சரி செய்தேன்,” என்கிறார் தெரெசா. இத்தகைய விஷயங்களின்போது செய்யப்படுவதுபோல், அங்கன்வாடி பழுதுபார்க்கும் பணிக்காக ஒரு ‘பயனாளிகள் குழு’ உருவாக்கப்பட்டது. “இந்த பெகாரி லக்ரா என்பவர் அக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். பணி முடிந்ததில் 80,000 ரூபாய் மிச்சமானது. அதை அவர் எங்களுக்கு திரும்பக் கொடுத்திருக்க வேண்டும். கோவிந்த் பராய்க் தொடர்ந்து என்னை செல்பேசியில் அழைத்து, பாசியா பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரச் சொன்னார். நானும் சென்றேன்.”

பாசியா பஞ்சாயத்து அலுவலகத்திலோ தெத்ரா கிராமப் பஞ்சாயத்திலோ பணம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. முக்கியமாக அவர் அலுவலகத்துக்குள் நுழையக் கூட இல்லை. பெகாரி லக்ரா அவரிடம் வந்தார். அப்போதுதான் 5,000 ரூபாயை அவர் கையில் திணித்து, அவரின் கை ரேகைகளை ரூபாய் நோட்டுகளில் பெறும் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பிறகுதான் தெரெசாவின் கொடும் கனவு தொடங்கியது.

Teresa is known across the panchayat for having turned down a 10-lakh-rupee bribe from a big contractor seeking to lease and destroy a nearby hillock in Solangbira village in her panchayat for rock chips
PHOTO • Purusottam Thakur

பஞ்சாயத்தில் உள்ள சோலாங்க்பிரா கிராமத்தின் குன்று ஒன்றை அழித்து கற்கள் எடுப்பதற்காக ஒரு பெரிய ஒப்பந்ததாரர், அக்குன்றை குத்தகைக்கு கேட்டு கொடுத்த 10 லட்ச ரூபாயை நிராகரித்த நபராக மொத்த பஞ்சாயத்திலும் அறியப்படுபவர் தெரெசா

ஆனால் அந்த ‘லஞ்ச’ குற்றச்சாட்டு, லஞ்சம் பெறாத இன்னொரு சம்பவத்துக்கு இட்டுச் சென்றது.

ஒரு பெரிய ஒப்பந்ததாரர் கொடுத்த பெரும் லஞ்சப் பணத்தை நிராகரித்ததை, இத்திட்டத்துக்கான காரணமாக சொல்கிறார் தெரெசா. சக பஞ்சாயத்து உறுப்பினர்களை சத்தம் போட்டு விமர்சிப்பவர் அவர். அந்த ஒப்பந்ததாரர், தேசிய அளவில் அதிகாரம் மிக்க ஒரு அரசியல்வாதியின் தொடர்பில் இருப்பதால், அவரை பற்றி அதிகம் சொல்ல தெரெசா தயங்குகிறார்.

“சாலை போடுதல் முதலிய வேலைகள் கொண்ட ஒரு பெரும் திட்டம் அது,” என்கிறார் தெரெசா. “எங்கள் பகுதியில் இருக்கும் குன்றிலிருந்து அவர்கள் கற்களை உடைத்தெடுத்தனர். அதற்கு எதிராக நான் மக்களை திரட்டினேன். இல்லையெனில், அவர்கள் மொத்த குன்றையும் இல்லாமல் ஆக்கியிருப்பார்கள். அதை நான் அனுமதிக்க முடியாது.” ஒரு கட்டத்தில் அவர்கள் நேராக அவரிடம் வந்து கிராம சபையிடமிருந்து அனுமதி பெற்றிருப்பதாக ஓர் ஆவணத்தை கூட காட்டினார்கள்.

“அதில் பல கையெழுத்துகள் இருந்தன. அவற்றில் படிப்பறிவு இல்லாதவர்களின் கையெழுத்துகளும் இருந்தன. அவர்களுக்கு கையெழுத்து போடத் தெரியாது,” என புன்னகைக்கிறார். மொத்த விஷயமும் மோசடிதான். ஆனால் எங்களுக்கு குழப்பமாக இருந்தது. ஊர்த் தலைவர் இல்லாமல் எப்படி அவர்கள்  கிராம சபை கூட்டத்தை கூட்ட முடியும்? இவர்தானே அதைக் கூட்ட வேண்டும்?

அப்போதுதான் இப்பகுதியில் இயங்கும் செயற்பாட்டாளரான சன்னி என்பவர் நாம் PESA வட்டாரத்தில் இருக்கிறோம் என்பதை நினைவூட்டினார். பட்டியல் பகுதிகளுக்கான பஞ்சாயத்து விரிவு சட்டம் 1996-க்குக் கீழ் வரும் பகுதிகள் இவை. “இங்கு கிராம சபையை கிராமத்தின் பாரம்பரியத் தலைவர் கூட்ட முடியும்,” என சுட்டிக் காட்டுகிறார் அவர். எப்படியிருந்தாலும் அந்த ஆவணம் போலி என தெரெசா அதை நிராகரித்து விட்டார்.

பிறகுதான் லஞ்சம் கொடுக்கும் முயற்சி நேர்ந்தது. பெரிய ஒப்பந்ததாரரின் ஆட்களின் வழியாக 10 லட்ச ரூபாய் கொடுக்க முயற்சிக்கப்பட்டது. தன்னை விலை பேசி விட முடியுமென நம்பிய அவர்களின் சிந்தனை மீது கோபம் கொண்டு, அந்த லஞ்சத்தை ஏற்க தெரெசா மறுத்தார்.

3-4 மாதங்கள்தான் ஓடியிருக்கும். ‘லஞ்சம் வாங்கினார்’ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நாடகத்தின் முடிவில், ஒப்பந்ததாரர் விரும்பிய ஒன்றிரண்டு குன்றுகள் அவரை சென்று சேர்ந்துவிட்டன.

சுவாரஸ்யம் என்னவென்றால், எளிய பாரம்பரிய தன்மையிலான பரிசுகளை பெறுவதை தெரெசா ஏற்றுக் கொள்கிறார். “எப்போதும் நான் பணம் கேட்டதில்லை,” என்கிறார். “இத்தகைய திட்டங்களின்போது பரிசுகள் கொடுக்கப்படும், வாங்கப்படும். நானும் வாங்கியிருப்பேன்,” என்கிறார் நேர்மையுடன். இத்தகைய பரிவர்த்தனைக்கு பரிசுகள் வழங்கப்படும் முறை ஜார்கண்டில் மட்டும் நிலவவில்லை. பரிசுப் பொருளின் தன்மை  மாறுபடலாம். ஆனால் இம்முறை நாட்டின் எல்லா மாநிலங்களிலும் இருக்கவே செய்கிறது. பரிசுகளை ஏற்காத சில தனிப்பட்ட ஊர்த்தலைவர்களும் பஞ்சாயத்து உறுப்பினர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் பெரும்பான்மையாக அவர்கள் இல்லை.

சதிக்குள் தன்னை வீழ்த்திய குழுவை எதிர்ப்பதோடு தெரெசா லக்ராவின் பிரச்சினைகள் முடிந்துவிடவில்லை. சதித்திட்டம் நிகழ்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியும் வழக்கு தொடர்கிறது. அவரின் வசதியையும் ஆற்றலையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது. அவருக்கு உதவி தேவை. எனினும் உதவி வரும் இடம் குறித்த எச்சரிக்கையும் தேவை.

ஒப்பந்ததாரர்கள் கொடுக்கும் பரிசுகளில் எச்சரிக்கையாக இருக்க அவர் கற்றுக் கொண்டார்.


கவர் படம்: புருஷோத்தம் தாகூர்

தமிழில் : ராஜசங்கீதன்

ಪಿ. ಸಾಯಿನಾಥ್ ಅವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಸ್ಥಾಪಕ ಸಂಪಾದಕರು. ದಶಕಗಳಿಂದ ಗ್ರಾಮೀಣ ವರದಿಗಾರರಾಗಿರುವ ಅವರು 'ಎವೆರಿಬಡಿ ಲವ್ಸ್ ಎ ಗುಡ್ ಡ್ರಾಟ್' ಮತ್ತು 'ದಿ ಲಾಸ್ಟ್ ಹೀರೋಸ್: ಫೂಟ್ ಸೋಲ್ಜರ್ಸ್ ಆಫ್ ಇಂಡಿಯನ್ ಫ್ರೀಡಂ' ಎನ್ನುವ ಕೃತಿಗಳನ್ನು ರಚಿಸಿದ್ದಾರೆ.

Other stories by P. Sainath

ಪಿ. ಸಾಯಿನಾಥ್ ಅವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಸ್ಥಾಪಕ ಸಂಪಾದಕರು. ದಶಕಗಳಿಂದ ಗ್ರಾಮೀಣ ವರದಿಗಾರರಾಗಿರುವ ಅವರು 'ಎವೆರಿಬಡಿ ಲವ್ಸ್ ಎ ಗುಡ್ ಡ್ರಾಟ್' ಮತ್ತು 'ದಿ ಲಾಸ್ಟ್ ಹೀರೋಸ್: ಫೂಟ್ ಸೋಲ್ಜರ್ಸ್ ಆಫ್ ಇಂಡಿಯನ್ ಫ್ರೀಡಂ' ಎನ್ನುವ ಕೃತಿಗಳನ್ನು ರಚಿಸಿದ್ದಾರೆ.

Other stories by P. Sainath
Photographs : Purusottam Thakur

ಪತ್ರಕರ್ತ ಹಾಗೂ ಸಾಕ್ಷ್ಯಚಿತ್ರ ನಿರ್ಮಾಪಕರಾದ ಪುರುಶೋತ್ತಮ ಠಾಕುರ್, 2015ರ 'ಪರಿ'ಯ (PARI) ಫೆಲೋ. ಪ್ರಸ್ತುತ ಇವರು ಅಜೀಂ ಪ್ರೇಂಜಿ ವಿಶ್ವವಿದ್ಯಾನಿಲಯದ ಉದ್ಯೋಗದಲ್ಲಿದ್ದು, ಸಾಮಾಜಿಕ ಬದಲಾವಣೆಗಾಗಿ ಕಥೆಗಳನ್ನು ಬರೆಯುತ್ತಿದ್ದಾರೆ.

Other stories by Purusottam Thakur
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan