இரண்டுக் குழந்தைகள் இருக்கின்றன எனத் தனியார் பிரசவ மையத்தின் மருத்துவரிடம் உறுதியாகச் சொல்கிறார் ரோபி எந்தப் பரிசோதனை அறிக்கையும் பார்க்காமலே.

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை ஆனந்தத்துடன் நினைவுகூர்கிறார் ரோபி. "அவள் அதை காதில் மாட்டியிருந்தாள்," என்கிறார் அவர், ஸ்டெத்தஸ்கோப்பை குறிப்பிட்டு. பலவீனமாக இருந்த கர்ப்பிணியின் பருத்திருக்கும் வயிறைப் பார்த்துவிட்டு ரோபியின் இரட்டைக் குழந்தை என்ற ஆரூடத்தை மருத்துவர் மறுத்தார்.

"இரண்டு மேடம், இரண்டு பிறக்கும்," என அவர் மீண்டும் சொன்னார். பிறகு பிரசவ அறையிலிருந்து ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டார். 70 வயதுகளில் இருக்கும் ரோபியும், வலியால் துடித்துக் கொண்டிருக்கும் தாயாகப் போகிறவரும் மெல்காட் காட்டுப் பகுதியின் விளிம்பில் இருக்கும் அவர்களின் கிராமமான ஜைதாதேகியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரத்வாடா டவுனில் இருந்தனர்.

மாலையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நொடிகள் கடந்ததும் இரண்டாம் குழந்தையின் தலை வெளியே வந்தது. பெண் குழந்தை.

அவரின் பாரம்பரிய வீட்டின் தாழ்வாரத்தின் ஒரு முனையிலிருக்கும் ஒரு மரக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ரோபி சத்தமாக சிரிக்கிறார். அந்த வீட்டின் தரை மாட்டுச்சாணத்தால் துடைக்கப்பட்டுப் பளபளப்பாக இருந்தது. மூன்று அறைகளும் காலியாக இருந்தன. அவரின் மகன்கள் குடும்ப நிலமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கச் சென்றிருக்கின்றனர்.

கழுதையின் அந்தரங்க உறுப்பைக் குறிக்கும் ஒரு வசவு வார்த்தையைச் சொல்லி இன்னும் அதிகமாக சிரிக்கிறார். முக வரிகள் ஆழமாகின. "அப்படித்தான் நான் அவளைச் சொன்னேன், " என்கிறார் அவர் ஒரு நகர மருத்துவரைத் திட்டிய சம்பவத்தை நினைவுகூர்ந்து.

Ropi, Jaitadehi village's last remaining traditional dai, says she must have delivered at least 500-600 babies
PHOTO • Kavitha Iyer

கிட்டத்தட்ட 500-600 குழந்தைகள் பிறக்க உதவிய ரோபிதான், ஜைதாதேகி கிராமத்தின் கடைசி பாரம்பரிய மருத்துவச்சி

நாற்பது வருடங்களுக்கும் மேலான அனுபவத்திலிருந்துதான் அந்த நம்பிக்கை வருகிறது. கோர்க்கு சமூகத்தைச் சேர்ந்தவர் ரோபி. ஜைதாதேகியின் கடைசி பாரம்பரிய மருத்துவச்சி அவர்தான். கிட்டத்தட்ட 500-600 குழந்தைகள் பெற அவர் உதவியிருப்பதாக சொல்கிறார். அவர் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. அவர் பார்த்தப் பிரசவங்களில் ஒருமுறை கூட குழந்தை இறந்துப் பிறந்ததில்லை எனப் பெருமையுடன் கூறுகிறார். "எல்லாமுமே நல்ல விதத்தில்தான் பிறந்தன." மருத்துவச்சிகள் பாரம்பரியமாக பிரசவங்கள் பார்ப்பவர்கள். நவீனப் பயிற்சியோ சான்றிதழோ பெறாதவர்கள்.

மெல்காட் காட்டுப்பகுதியின் கோர்க்கு பழங்குடிகளாக மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தின் தார்னி மற்றும் சிகால்தாரா ஒன்றியங்களில் வாழும் ரோபி போன்ற பெண்கள், வீட்டுப் பிரசவங்கள் பார்க்கும் பாரம்பரியத்தை மட்டுமே கொண்டவர்களாக இல்லை. அனுபவம் வாய்ந்த மருத்துவச்சிகளாக, கருத்தடை பராமரிப்பையும் அவர்கள் அளிக்கின்றனர். உடனடி மருத்துவப் போக்குவரத்து கிடைக்க முடியாத தூரத்து காட்டுப் பகுதி மற்றும் மலைப் பகுதிகளில் சுகாதாரச் சேவை வழங்குபவர்களும் அவர்கள்தான்.

மெல்காட்டின் பெரும்பாலான கிராமங்களில் மருத்துவச்சி ஒருவரோ இருவரோ இன்னும் இருக்கின்றனர். எனினும் அவர்களுக்கு வயதாகி விட்டது என்கிறார் ரோபி. அடுத்தத் தலைமுறை மருத்துவச்சிகள் உருவாகவில்லை. ஜைதாதேகியின் இன்னொரு மருத்துவச்சி பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். மகளையோ மருமகளையோ மருத்துவச்சியாக உருவாக்கி இருக்கலாமென ரோபி கருதுகிறார். அவரின் குடும்பத்திலிருந்து ஒருவரும் மருத்துவச்சியாக வரவில்லை.

ரோபியின் குழந்தைகளும் வீட்டில்தான் பிறந்தனர். அவரின் தாயும் ஒரு மருத்துவச்சியும் அவருக்கு பிரசவம் பார்த்தனர். நான்கு மகன்கள் அவருக்கு. பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் நோயுற்று இறந்துவிட்டார்.  இரண்டு மகள்கள். இருவருமே மணம் முடிந்து ஜைதாதேகியிலேயே வாழ்கின்றனர். பேரக்குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளும் அவருக்கு உண்டு. (மகள்கள் மருத்துவச்சி ஆக மறுத்துவிட்டனர் என்றும் ஒருவர் மட்டும் திறன்கள் மட்டும் கற்றுக் கொண்டார் என்றும் குறிப்பிடுகிறார் ரோபி.)

"என் மருமகள் பயந்து விடுவாள். பிரசவம் நடக்கும் அறையில் கூட அவள் என்னுடன் நிற்க மாட்டாள்," என்கிறார் அவர். "பார்க்கக் கூட மாட்டாள். உதவவும் மாட்டாள். நடுங்க ஆரம்பித்து விடுவாள்," என ரத்தத்தைப் பார்த்து மருமகள் நடுங்கும் விதத்தை அவர் செய்து காட்டுகிறார்.

பழைய தலைமுறைகளின் பெண்கள் உடல்ரீதியான இயக்கத்தைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் என நினைவுக் கூர்கிறார் ரோபி. "எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. தைரியமாக இருக்க வேண்டி இருந்தது. சிறு சிறு விஷயங்களுக்கும் ஓடவென மருத்துவர்களோ செவிலியர்களோ அன்று இருக்கவில்லை."

Ropi with her great grandchildren: her own children were all born at home, assisted by her mother and a dai
PHOTO • Kavitha Iyer

கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் ரோபி: அவரின் எல்லா குழந்தைகளையும் வீட்டில்தான் பெற்றெடுத்தார். அவரின் தாயும் ஒரு மருத்துவச்சியும் உதவினர்

அவரின் தாயும் பாட்டியும் மருத்துவச்சிகளாக இருந்தவர்கள். பாட்டி பிரசவம் பார்க்க வீடுகளுக்குச் செல்கையில் உடன்சென்று திறன்களைக் கற்றுக் கொண்டார் அவர். "வீட்டிலேயே இரு", என கோர்க்கு மொழியில் பாட்டி திட்டுவாரென நினைவுகூர்கிறார் அவர். " ஆனால் என்னுடைய பாட்டி என்னை உடன் அழைத்துச் செல்வார். எனக்கு 12, 13 வயதுதான் இருக்கும்." எனவே அவருக்கு திருமணமான 16 வயதுக்கு முன்னமே பாட்டியின் உதவியாளராக வேலையைத் துவங்கிவிட்டார் அவர்.

*****

பல்லுயிர்ப் பகுதியான மெல்காட்டின் சரிந்த மலைகளும் காடுகளும் புலிகள் காப்பகமாக இருக்கிறது. 1,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. வறண்ட காட்டின் கிராமங்களில் கோர்க்கு மற்றும் கோண்டு பழங்குடிச் சமூகங்கள் வசிக்கின்றன. பல பழங்குடியின் வசிப்பிடங்கள் புலிகள் காப்பகத்துக்குள்ளேயே அதன் விளிம்பில் அமைந்திருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகளும் மேய்ப்பர்களும் ஆவர். காட்டில் கிடைக்கும் மூங்கில் மற்றும் மூலிகைகள்தாம் அவர்களுக்கான வருமானத்துக்கான ஆதாரம்.

150 குடும்பங்களைக் கொண்ட போர்த்யாகெடா என்கிற குக்கிராமம் காட்டின் மையப்பகுதியில் இருக்கிறது. சிகல்தாரா தாலுகாவிலிருந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவு. இங்கு, 70 வயதுகளில் இருக்கும் சார்க்கு பாபுலால் காஸ்தெகார் மருத்துவச்சியாக பல காலம் இருக்கிறார். "நினைவுகூர முடிகிற காலத்திலிருந்து மருத்துவச்சியாக இருக்கிறேன்," என்கிறார். கடந்த பத்தாண்டுகளில் சுகாதார வசதி சற்று அதிகரித்திருந்தாலும் மெல்காட்டின் கிராமங்களிலில் 10 கர்ப்பிணிகளுக்கு ஐந்து பேர் வீட்டுப் பிரசவத்தையே விரும்புவதாக அவர் சொல்கிறார். (2015-16ம் ஆண்டின் தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி , கிராமங்களில் நேரும் பிரசவங்களில் 91 சதவிகிதம் நிறுவனங்களில்தான் ஏற்படுகிறது. ஆனாலும் அந்த விகிதம் மெல்காட்டின் யதார்த்தத்துக்குப் பொருந்தவில்லை.)

ஏப்ரல் 2021-ல், போர்த்யாகெடாவில் கூடுதலாக ஒரு துணை சுகாதார மையம் வந்தது. ஒரு மாடிக் கட்டடம். இரண்டு மாதங்களாகியும் இன்னும் குழாய் நீர் வரவில்லை. அங்கு, 24 மணி நேரமும் உதவிக்கு வரக் கூடிய ஒரு துணைச் செவிலியர் இருக்கிறார். முதல் தளம் அவர் வசிக்க ஒதுக்கப்பட்டது. ஆனால் போர்த்யாகெடாவின் துணைச் செவிலியர் ஷாந்தா விகிகே துர்வே ஓர் உள்ளூர்வாசி. கிராமத்துக்குள்ளேயே மணம் முடித்துக் கொண்டவர்.

துணை மையத்தில் சுகாதார அலுவலராக பணிபுரியும் மருத்துவருக்கான இடம் காலியாக இருக்கிறது. ஆனால் குழாய் நீர் இல்லாதிருப்பது அப்பதவிக்கு எவரும் வரத் தடையாக இருக்கிறது என்கின்றனர் கிராமவாசிகள். புதிதாக பட்டம் பெற்று, 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள செமடோ கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு மருத்துவர் விரைவில் அங்கு வரவிருக்கிறார்.

Bortyakheda’s ANM Shanta Durve (left) urges Charku, the village's elderly dai, to come along even for deliveries the PHC
PHOTO • Kavitha Iyer

போர்த்யாகெடாவின் துணைச் செவிலியரான ஷாந்தா துர்வே (இடது) கிராமத்தின் மூத்த மருத்துவச்சியான சார்க்குவை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் வந்து பிரசவங்கள் பார்க்கச் சொல்கிறார்

ஆனால் துணை மையத்துக்கு வர பல பெண்கள் விரும்புவதில்லை என்கிறார் துணைச் செவிலியர். "அவர்கள் சமூகப் பெண் ஒருவர் பிரசவத்தை பார்த்துக் கொண்டால்தான் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது," என்கிறார் 30 வயதுகளில் இருக்கும் ஷாந்தா. அருகே இருக்கும் மோர்ஷி ஒன்றியத்தின் துணை மையத்தில் பத்தாண்டு கால பணி அனுபவத்துக்குப் பிறகு இங்கு பணியமர்த்தப்பட்டவர்.

செமடோ ஆரம்பச் சுகாதார மையத்தில் பிரசவங்கள் நடந்தபோது கூட அவர் சார்க்குவை வரக் கேட்டிருக்கிறார். மருத்துவச்சி அறிவுரை வழங்கும்போது குடும்பங்கள் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடும் ஷாந்தா, போர்த்யாகெடாவில் இளைய மருத்துவச்சி என யாரும் இல்லை என்பதில் வருத்தம் கொள்கிறார். சாக்குவின் பாரம்பரியத்தை தொடர யாரும் இல்லை. கிராமத்தின் இரண்டாவது மருத்துவச்சி வயோதிகத்தால் அந்த வேலையை நிறுத்தி விட்டார். சில ஆண்டுகளுக்கு முன் யுனிசெப்புடன் இணைந்து அரசு ஒருங்கிணைத்த குறுகிய காலப் பயிற்சிக்கும் அவர் போகவில்லை.

ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சார்க்கு சொல்கையில், “எங்களுக்கு எல்லாம் தெரியுமென நினைத்தோம், ஆனால் அவர்கள் பல முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனர். சோப் பயன்படுத்துவதன் அவசியம், கைகளை எப்படிக் கழுவ வேண்டும், புதுக் கத்தியை எப்படி பயன்படுத்த வேண்டும் முதலிய விஷயங்கள்.

ஆரம்பச் சுகாதார மையத்திலோ எப்போதாவது தனியார் மருத்துவ மையத்திலோ பிரசவம் நடக்கும் சமயங்களில் அவர் பிரசவம் பார்க்கச் செல்லும் நபருக்கு துணையாகச் செல்வார். செவிலியர், தன்னால் சாத்தியமில்லை என சொல்லும் வரை, பெண்கள் ஆண் மருத்துவரைத் தவிர்ப்பார்கள் என்கிறார் சார்க்கு. ஏதேனும் சிக்கல் இருந்தால் மட்டும் ஒரு மருத்துவர் அழைக்கப்படுவார்.

இப்படிச் செல்வதற்கெல்லாம் எந்தப் பணமும் சார்க்குவுக்குக் கிடைப்பதில்லை. பின் ஏன் அவர் செல்கிறார்? “அவர்கள் கேட்டால், நான் செல்கிறேன். ஒரு தாய்க்கு நானிருப்பது ஆறுதலாக இருக்கிறதென்றால் நான் போகத்தானே வேண்டும்?”

பல வருடங்களுக்கு முன், தானியங்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று படி அரிசியும் கோதுமையும் கட்டணமாகக் கிடைக்கும் என்கிறார் சார்க்கு. சில நேரங்களில் ஒரு சிறு அளவு  ஊக்கத்தொகை கிடைக்கும்.

பல பத்தாண்டுகளாகியும் மருத்துவச்சிகளின் ஊதிய அளவு பெரிய அளவில் உயரவில்லை. சார்க்குப் பார்த்தக் கடைசிப் பிரசவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் ஜூன் 2021-ல் அவரைச் சந்தித்தேன். அவருக்கு 500 ரூபாயும் நான்கு கிலோ கோதுமையும் கிடைத்தது. மிகக் குறைவான நேரத்தில் நடந்தப் பிரசவம் அது. வலி தொடங்கியதுமே குழந்தை வெளிவரத் தொடங்கிவிட்டது. “நீண்ட நேரப் பிரசவமானாலும் எனக்கு அதே தொகைதான் கிடைக்கும்,” என்கிறார் அவர்.

Charku with two of her great grandkids: at least half of the babies born in Bortyakheda over the past three decades had Charku present at the time of their birth, and she has delivered her own grandchildren and a great-grandchild
PHOTO • Kavitha Iyer

இரண்டு கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் சார்க்கு: போர்த்யாகெடாவில் கடந்த முப்பது வருடங்களில் பிறந்தக் குழந்தைகளில் பாதியளவேனும் பிறக்கும்போது சார்க்கு இருந்திருக்கிறார். அவரது பேரக் குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளும் பெற்றெடுக்கவும் உதவியிருக்கிறார்

சார்க்குவின் கணவர் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு ஏக்கர் நிலத்தில் அவர் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது அந்த நிலத்தில் அவரின் மகளும் மருமகனும் விவசாயம் பார்க்கின்றனர். மருத்துவச்சி வேலையில் நிலையான வருமானம் என ஏதுமில்லை என்கிறார் சார்க்கு. சமீபத்திய வருடங்களின் சில மாதங்களில் ரூ.4,000 கிடைத்திருக்கிறது. சில மாதங்களில் ரூ.1,000 கூட கிடைக்காத சூழல் இருந்திருக்கிறது.

கடந்த முப்பது வருடங்களில் போர்த்யாகெடாவில் பிறந்த குழந்தைகளில் பாதியளவேனும் பிறக்கையில் சார்க்கு உடனிருந்திருக்கிறார். அவரது பேரக்குழந்தைகளையும் கொள்ளுப் பேரக் குழந்தைகளையும் பெற்றெடுக்கவும் உதவியிருக்கிறார்.

அவர் பிரசவம் பார்த்த சில குழந்தைகள் சில நாட்களிலேயே இறந்து போயிருப்பதாக சொல்கிறார் அவர். “பிறந்தபோது இல்லை. சில நாட்களுக்குப் பிறகு.” அந்த மரணங்களுக்கான காரணம் அவருக்குத் தெரியவில்லை. யாருக்குமே தெரியவில்லை என்கிறார்.

அவரின் பார்வைத்திறன் குன்றத் தொடங்கியிருக்கும் இச்சமயத்தில், குடும்பங்களை ஆரம்பச் சுகாதார மையம் அல்லது புதிய துணை மையம் ஆகியவற்றுக்கு செல்லுமாறு அதிகமதிகமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

*****

என்ன வயது தனக்கு எனத் ரோபிக்கு தெரியாது. அவரின் கால்களில் சமீப காலமாக பிரச்சினை இருக்கிறது. கணுக்காலைச் சுற்றி வீங்கி, அவரின் முட்டிகள் கடுமையாக வலியைக் கொடுக்கின்றன. அதற்கென நகரம் சென்று எந்த மருத்துவரையும் அவர் பார்க்கவில்லை. உள்ளூர் மாற்று மருத்துவர் கொடுத்த எண்ணெயும் உதவவில்லை.

பழைய நண்பர்களையும் மகள்களையும் சந்திக்க அவர் கிராமத்தை அடிக்கடி சுற்றி வருவார் என்றாலும் பிரசவத்துக்கென அவரை அணுகும் பல குடும்பங்களின் விண்ணப்பங்களை ஏற்க மறுக்கிறார். வீட்டுக்கு வெளியே சரியாகப் பிரசவம் பார்க்க முடியுமா என உறுதியாக தெரியாததாலும் அவரின் பார்வை நன்றாக இல்லாததாலும் அவர் மறுக்கிறார். “நகரத்திலிருக்கும் மையத்தைத் (பராத்வாடா டவுன்) தொடர்பு கொள்ளுமாறு அவர்களிடம் சொல்கிறேன். அவசர ஊர்தி வரும் வரை அவர்களுடன் காத்திருப்பேன். ஊர்தி உடனே கிராமத்துக்கு திரும்புமெனில் அச்சமயங்களில் கூடவே நான் சென்று விடுவேன்,” என்கிறார் ரோபி.

Ropi's family has a small goat-rearing business, and they also cultivate two acres. Her earning as a dai remain modest, and have not improved greatly over the decades
PHOTO • Kavitha Iyer
Ropi's family has a small goat-rearing business, and they also cultivate two acres. Her earning as a dai remain modest, and have not improved greatly over the decades
PHOTO • Kavitha Iyer

ரோபியின் குடும்பத்துக்கென சிறிய அளவில் ஆட்டுப் பண்ணை இருக்கிறது. இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கிறார்கள். மருத்துவச்சியாக அவரின் வருமானம் குறைவுதான். பல பத்தாண்டுகளாக அது ஏறவே இல்லை

அவர் மருத்துவச்சியாக இருந்த காலங்களில் நிதானமாகவும் வேகமாகவும் சூழல்களைக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றவர். “முன்பு அவர்கள் வந்து என்னை அழைக்கும்போது, என்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை சொல்லி விடுவேன். ஒரு கத்தி, நூல், ஊசி போன்றவை.” பல மருத்துவச்சிகளும் வயிற்றைத் தைப்பதில் வேகம் பெற்றவர்கள்தான் என்கிறார் அவர் தோள்களை குலுக்கியபடி, அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்கிற அர்த்தத்தில்.

வலி தொடங்கிய நேரத்தை வைத்து வீட்டுவேலைகளை செய்து முடித்துவிட்டு, தாயாகப் போகிறவரின் வீட்டுக்கு கம்பீரமாக அவர் நடந்து செல்வார்.

ரோபி எப்போதும் ஒரு வேண்டுதலுடன் தொடங்குவார். பிறகு பெண்ணின் வலியை பரிசோதித்துவிட்டு, கைகளை கழுவிக் கொள்வார்.

“தாய் (தாயாகப் போகிறவரின் தாய்) எதையும் செய்ய மாட்டார். ஆனால் அவர் மகளின் பக்கம் நிற்பார். அழுது கொண்டிருப்பார். தாயின் அழுகையும் மகள் வலியால் அழும் அழுகையும் ஒன்றாக இருக்கும். ‘அவளின் வலியைச் சீக்கிரம் தீர்த்து வையுங்கள்,’ என தாய்கள் கத்துவார்கள். என்னவோ என் கையில் எல்லாம் இருப்பது போல!” என்கிறார் ரோபி.

சில நேரங்களில் பிரசவ வலி பல மணி நேரங்கள் நீடிப்பதுண்டு. ரோபி உணவு சாப்பிடவோ கணவர் அல்லது மகனுக்கு உணவு கொடுக்கவோ வேகமாக வீட்டுக்கு சென்று வந்து விடுவார். “அச்சமயங்களில் தாய்கள் சத்தமாக கத்துவார்கள். குழந்தைப் பிறக்கும் வரை போக வேண்டாம் என்பார்கள். சில நேரங்களில் வலி முழு இரவும் முழுப் பகலும் கூடத் தொடரும். மற்ற அனைவரும் அச்சூழல்களில் பயந்து விடுவார்கள். நான் மட்டும் பயப்பட மாட்டேன்.”

சிறு அளவு எண்ணெய் (சமையற்கட்டில் இருக்கும் ஏதோவொரு எண்ணெய்) கொண்டு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் அவர் தடவுவார். வயிற்றைத் தடவியே குழந்தை சரியான இடத்தில் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் ரோபி. குழந்தை ஒருவேளை தலைகீழாக இருந்தாலோ தலை சற்று சாய்வாக இருந்தாலோ வயிற்றை தடவியே சரியான கோணத்துக்கு குழந்தையைக் கொண்டு வந்து விடுவார். குழந்தையின் கால்கள் முதலில் வெளியே வரும் தருணங்களையும் பிரசவங்களில் அவர் பார்த்திருக்கிறார். எனினும் அந்தப் பிரசவங்களில் அவருக்குப் பெரிய பிரச்சினைகள் இருந்ததில்லை.

பிற பாரம்பரிய நம்பிக்கைகளை சுலபத்தில் போக்க முடியாது. ஒன்பதாம் மாதம் முடிந்ததும் வலி தொடங்கவில்லையெனில், தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட நீரை சில மிடறுகள் குடிக்க சார்க்கு சொல்வார்

பிறப்புப் பகுதியை மருத்துவச்சி பிரசவம் முடிந்ததும் வழக்கமாக சுத்தப்படுத்துவார் என்கிறார் ரோபி. “ஆரம்பத்தில் குழந்தையை நாங்கள் உடனே குளிப்பாட்டுவோம். இப்போது நாங்கள் அதை நிறுத்திவிட்டோம்,” என்கிறார் அவர். வழக்கம் என்னவெனில் குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகுதான் அதை பாலூட்டுவதற்காக தாயிடம் கொடுக்க வேண்டும்.

சார்க்குவும் ஒப்புக் கொள்கிறார். “ஆரம்பத்தில் குழந்தைப் பிறந்ததும் வெதுவெதுபான நீரில் நாங்கள் குளிப்பாட்டுவோம். சில நேரங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் சில நாட்களுக்குப் பின்தான் கொடுக்கப்படும்.” சில குடும்பங்கள் குழந்தைக்கு முதல் நாளில் வெல்ல நீர் அல்லது தேன் கலந்த நீர் மட்டும்தான் கொடுப்பார்கள்.

பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டும் முறை தற்போது மிக அரிதாகதான் பின்பற்றப்படுகிறது. காரணம் உள்ளூரின் துணைச் செவிலியர்களின் மருத்துவமனைப் பிரசவத்துக்கான பிரசாரமும் மெல்காட்டில் நேரும் குழந்தை இறப்பில் அரசு கொண்ட கவனமும்தான். (பல ஆய்வுகளும் அறிக்கைகளும் அப்பகுதியின் அதிக குழந்தை இறப்பு மற்றும் சத்துக் குறைபாடு பற்றிப் பேசியிருக்கின்றன.)

தாய் சில நிமிடங்கள் ஓய்வெடுத்ததும் குழந்தை அழத் தொடங்கினால், படுத்தபடியோ அமர்ந்தபடியோ பாதுகாப்பாக தாய்ப்பாலூட்டுவது எப்படி என மருத்துவச்சிகள் தாய்க்குக் கற்றுக் கொடுப்பார்கள். இப்போது தாய்ப்பால் குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் கொடுக்கப்பட்டுவிடுகிறது என்கிறார் சார்க்கு.

பிற பாரம்பரிய நம்பிக்கைகளை சுலபத்தில் போக்க முடியாது. ஒன்பதாம் மாதம் முடிந்ததும் வலி தொடங்கவில்லையெனில், பூம்கால் எனகிற தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட நீரை சில மிடறுகள் குடிக்க சார்க்கு சொல்வார்.

ஒரு கர்ப்பிணிப் பெண் பெற்றெடுக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கணிக்க எப்போதும் விரும்புவாரென ரோபி சொல்கிறார். ஆண் குழந்தைகள் வயிற்றை முன்னோக்கி சரித்திருக்கும் என்கிறார் அவர். “பெண் குழந்தைகள் வயிற்றை எல்லா பக்கமும் பரப்பி சரித்திருக்கும்.” அந்த பொதுமைப்படுத்துதல் குறித்து சிரித்தும் கொள்கிறார். அதை ஒரு யூகக் கணக்கு என சொல்லும் அவர், குழந்தைப் பிறக்கும் வரை, அதன் பாலினம் என்னவென்பதை மனிதர்கள் கணிக்க கடவுள் விரும்பவில்லை என்கிறார்.

Charku's eyesight is dimming, and she tells families more and more frequently to head to the PHC or the new sub-centre.
PHOTO • Kavitha Iyer
Ropi too sends away most people who come to seek her help, tellign them, 'I can’t do it any longer'
PHOTO • Kavitha Iyer

இடது: சார்க்குவின் பார்வைத்திறன் குறைகிறது. ஆரம்பச் சுகாதார மையத்துக்கு செல்லுமாறு அவர் அதிகதிகமாக குடும்பங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வலது: ரோபியும் அவரை நாடி வரும் மக்களிடம், ‘இனி என்னால் செய்ய இயலாது' என சொல்லி அனுப்பி விடுகிறார்

போர்த்யாகெடாவில் அரசின் உதவி (தொடர் பரிசோதனைகள், போலிக் அமில மாத்திரைகள் மற்றும் சுண்ணாம்புச் சத்து உண்பொருட்கள் விநியோகம் போன்றவை) கர்ப்பிணிப் பெண்களுக்குக் கிடைக்க வழிசெய்யும் கடைசிக் கண்ணியாகவும் சமூக சுகாதாரத்தில் பாரம்பரிய மருத்துவச்சிகள் இருப்பதாக கிராமவாசிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தனியார் மருத்துவர்கள் இருக்கும் பராத்வடா டவுனுக்கு அருகே இருக்கும் ஜைதாதேகியின் கிராமவாசிகளுக்கு, ரோபிக்கு அடுத்து ஒரு மருத்துவச்சி இருக்க மாட்டார் என்கிற கவலையே இல்லை. குழந்தைகள் பிறக்கக் கூடிய அரசின் நிறுவனங்களுக்கு சொல்ல சில விஷயங்கள் இருப்பதாக ரோபி சொல்கிறார். “சில பெண்கள் மிகவும் மெலிந்து போயிருப்பார்கள். ஒன்பது மாதங்களின் எல்லா நாட்களும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள். கறி சாப்பிட மறுப்பார்கள். சில உணவுகளைப் பார்த்தாலே முகம் மாறும். கர்ப்பிணிகள் எல்லா வகை உணவும் உண்ண வேண்டும். எதுவும் விலக்கப்பட்டதல்ல,” என்கிறார் அவர். “இந்த விஷயங்கள் குறித்தும் மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.”

அவரின் சமூகத்தில், ஒரு குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் கொண்டாட்டங்களுக்கு மருத்துவச்சி அழைக்கப்படுவார். அவருக்கு அந்த நாளில் பணம் அன்பளிப்பாகக் கொடுக்கப்படும். குழந்தை நிச்சயமற்ற காலத்தைத் தப்பிவிட்டது என்பதற்கான அடையாளமாகதான் அன்பளிப்பு. “சிலவை விபத்துகளாலும் சிலவை நோயாலும் சிலவை பிறக்கும்ப்போதும் இறப்பதுண்டு,” என்கிறார் ரோபி. “எல்லாரும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும். ஆனால் ஒரு குழந்தைப் பிறப்பில் தப்பிப்பது குழந்தைக்கும் தாய்க்கும் வெற்றியே.”

குழந்தைகள் உயிரோடு பிறக்கும்போது அவருக்குக் கிட்டிய பாராட்டுகள்தான் மருத்துவச்சியாக அவர் அடைந்த பெருமகிழ்ச்சித் தருணங்கள் என்கிறார் ரோபி. ஆனால் இப்போது அதிகம் செயல்படாததால் அவருக்கு அவை கிடைப்பதில்லை. அவரின் உதவியை நாடி வரும் பலரையும் அவர், “என்னால் இனி செய்ய முடியாது,” எனச் சொல்லி அனுப்பி விடுகிறார்.

கிராமப்புற பதின்வயது மற்றும் இளம்பெண்கள் பற்றிய செய்திகளளிக்கும் PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய திட்டம், இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் ஒரு பகுதி ஆகும். இத்தகைய விளிம்புநிலை குழுக்களின் சூழலை சாதாரண மக்களின் வாழ்வனுபவங்களை கொண்டு ஆராய்வதற்கான முன்னெடுப்பு.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய வேண்டுமா? [email protected] மற்றும் [email protected] மின்னஞ்சல்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழில் : ராஜசங்கீதன்

Kavitha Iyer

ಕವಿತಾ ಅಯ್ಯರ್ 20 ವರ್ಷಗಳಿಂದ ಪತ್ರಕರ್ತರಾಗಿದ್ದಾರೆ. ಇವರು ‘ಲ್ಯಾಂಡ್‌ಸ್ಕೇಪ್ಸ್ ಆಫ್ ಲಾಸ್: ದಿ ಸ್ಟೋರಿ ಆಫ್ ಆನ್ ಇಂಡಿಯನ್ ಡ್ರಾಟ್’ (ಹಾರ್ಪರ್ ಕಾಲಿನ್ಸ್, 2021) ನ ಲೇಖಕಿ.

Other stories by Kavitha Iyer
Illustration : Priyanka Borar

ಕವರ್ ಇಲ್ಲಸ್ಟ್ರೇಷನ್: ಪ್ರಿಯಾಂಕಾ ಬೋರಾರ್ ಹೊಸ ಮಾಧ್ಯಮ ಕಲಾವಿದೆ. ಹೊಸ ಪ್ರಕಾರದ ಅರ್ಥ ಮತ್ತು ಅಭಿವ್ಯಕ್ತಿಯನ್ನು ಕಂಡುಹಿಡಿಯಲು ತಂತ್ರಜ್ಞಾನವನ್ನು ಪ್ರಯೋಗಿಸುತ್ತಿದ್ದಾರೆ. ಅವರು ಕಲಿಕೆ ಮತ್ತು ಆಟಕ್ಕೆ ಎಕ್ಸ್‌ಪಿರಿಯೆನ್ಸ್ ವಿನ್ಯಾಸ‌ ಮಾಡುತ್ತಾರೆ. ಸಂವಾದಾತ್ಮಕ ಮಾಧ್ಯಮ ಇವರ ಮೆಚ್ಚಿನ ಕ್ಷೇತ್ರ. ಸಾಂಪ್ರದಾಯಿಕ ಪೆನ್ ಮತ್ತು ಕಾಗದ ಇವರಿಗೆ ಹೆಚ್ಚು ಆಪ್ತವಾದ ಕಲಾ ಮಾಧ್ಯಮ.

Other stories by Priyanka Borar
Editor and Series Editor : Sharmila Joshi

ಶರ್ಮಿಳಾ ಜೋಶಿಯವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಮಾಜಿ ಕಾರ್ಯನಿರ್ವಾಹಕ ಸಂಪಾದಕಿ ಮತ್ತು ಬರಹಗಾರ್ತಿ ಮತ್ತು ಸಾಂದರ್ಭಿಕ ಶಿಕ್ಷಕಿ.

Other stories by Sharmila Joshi
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan