அன்று இரவு மீனா தூங்கவில்லை. மழை நீரெல்லாம் அவர் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. பெருமழையை தாங்க முடியாமல் நிமிடங்களில் தார்ப்பாய் கீழே விழுந்துவிட்டது. உடனடியாக மீனாவும் அவரது குடும்பமும் அருலிலுள்ள மூடப்பட்ட கடை முன்னால் தஞ்சம் அடைந்தனர்.

மழை நிற்கும் வரை இரவு (ஜூன் மாத ஆரம்பத்தில்) முழுவதும் நாங்கள் அங்கேயே இருந்தோம் எனக் கூறும் மீனா, நெடுஞ்சாலையின் ஓரத்தில் அச்சிடப்பட்ட தாளை விரித்து அதில் அமர்ந்திருக்கிறார். அவரது இரண்டு வயது மகள் ஷாமா, அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

மழை நின்றதும், திரும்பி வந்த மீனா தனது வசிப்பிடத்தை சரி செய்தார். ஆனால் அதற்குள் அவரது பெரும்பாலான உடமைகள் – பாத்திரங்கள், தாணியங்கள், பாடப்புத்தகங்கள் - மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

“எங்களிடம் இருந்த முகக்கவசமும் தண்ணீரில் சென்று விட்டது” என்கிறார் மீனா. ஊரடங்கின் ஆரம்பக் கட்டத்தில் தன்னார்வலர்கள் இவர்களுக்கு துணியிலான பச்சை நிற முகக்கவசத்தை கொடுத்திருந்தனர். “நாங்கள் முகக்கவசம் அணிந்தால் மட்டும் என்ன ஆகப்போகிறது? ஏற்கனவே நாங்கள் இறந்தவர்கள் போல்தான் உள்ளோம். அதனால் எங்களுக்கு கொரோனா வந்தால் யார் கவலைப்பட போகிறார்கள்?”

மீனாவும் (தன்னுடைய முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்) அவரது குடும்பமும் – கனவர் மற்றும் நான்கு குழந்தைகள் – இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து தங்களிடமிருந்த கொஞ்ச உடமைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து வருகின்றனர். இந்தப் பருவமழை தொடங்கியதிலிருந்து இப்படி நடப்பது இரண்டாவது முறை. ஒவ்வொரு வருடமும் இது தொடர்கதையாக உள்ளது. வடக்கு மும்பையின் கிழக்கு கண்டிவெளி புறநகர்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் இருக்கும்

ஆனால் போன வருடம் வரை, அதிகமாக மழை பெய்யும்போது அருகிலுள்ள கட்டுமான தளங்களில் தஞ்சம் அடைவார்கள். இப்போது அதுவும் நின்றுவிட்டது. 30 வயது போல இருக்கும் மீனா கூறுகையில், “இந்த மழைக்கு நாங்கள் பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் இந்த முறை கொரோனா வந்து எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விட்டது. முன்பு அந்தக் கட்டிடங்களுக்கு சென்று காத்திருப்போம். காவலாளிகளுக்கும் எங்களைத் தெரியும். மதிய நேரத்தில் கடைக்காரர்கள் கூட எங்களை வெளியே உட்கார அனுமதிப்பார்கள். ஆனால் இப்போதோ அருகில் நடக்க கூட எங்களை அவர்கள் விடுவதில்லை.”

During the lockdown, Meena and her family – including her daughter Sangeeta and son Ashant – remained on the pavement, despite heavy rains
PHOTO • Aakanksha
During the lockdown, Meena and her family – including her daughter Sangeeta and son Ashant – remained on the pavement, despite heavy rains
PHOTO • Aakanksha

ஊரடங்கு சமயத்தில் மீனாவும் அவரது குடும்பமும் – அவரது மகள் சங்கீதா மற்றும் மகன் அஷாந்த் உள்பட – கடுமையான மழையின் போதும் நடைபாதையில்தான் தங்கியிருந்தனர்

பெரும்பாலும் இவர்கள் மழையின் போது ‘வீட்டிற்குள்’ இருப்பார்கள். இரண்டு மரங்கள் மற்றும் சுவருக்கு இடையில் வெள்ளை தார்ப்பாயை விரித்து, நடுவில் கூடாரத்தை தாங்கிக்கொள்ள கனமான மூங்கில் கம்பை நிற்க வைத்துள்ளார்கள். சில பிளாஸ்டிக் சாக்குகள், துணி மூட்டைகள் மற்றும் பள்ளிக்கூட பை மரத்தில் தொங்குகின்றன. அதற்குள் துணிகள், பொம்மைகள் மற்றும் பிற உடைமைகள் இருக்கின்றன. ஈரமான உடைகள் அருகிலுள்ள கயிற்றில் தொங்குகின்றன. சாயம் போன அரக்கு நிற மெத்தை தரையில் நனைந்து கிடக்கிறது.

மீனாவின் கனவர் சித்தார்த் நர்வாடே, மகராஷ்ட்ராவின் ஜால்னா மாவட்டத்திலுள்ள சர்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர். “தன்னிடமிருந்து சிறு நிலத்தை விற்று, பணி நிமித்தமாக மும்பைக்கு என் தந்தை மாறியபோது நான் மிகவும் சிறுவனாக இருந்தேன். பின்பு மீனாவோடு வந்துவிட்டேன்” என்கிறார் 48 வயதாகும் சித்தார்த்.

கட்டுமான தளங்களில் பணிபுரியும் இவர், சிமெண்ட் கலவை வேலையில் தினமும் ரூ. 200 சம்பாதிக்கிறார். “ஊரடங்கு தொடங்கியதும் இந்த வேலையை நிறுத்திவிட்டார்கள்” என்கிறார் சித்தார்த். அன்றிலிருந்து ஒப்பந்ததாரர் இவரை அழைக்கவும் இல்லை, இவரது தொலைபேசி அழைப்பை எடுப்பதும் இல்லை.

இந்த வருட ஜனவரி மாதத்தில், தான் வேலை பார்த்து வந்த குடும்பத்தினர் வேறு வீட்டிற்குச் செல்லும் வரை, அருகிலுள்ள கட்டிடத்தில் வீட்டு வேலை செய்து வந்தார் மீனா. அன்றிலிருந்து வேறு வேலை தேடி வருகிறார். “நான் தெருவில் வாழ்கிறேன் என இங்குள்ள மக்களுக்கு தெரியும். யாரும் எனக்கு வேலை தரமாட்டார்கள். ஏனென்றால், இப்போது என்னை வீட்டிற்குள் விடவே அவர்கள் பயப்படுகிறார்கள் (கோவிட்-19 காரணமாக)” என்கிறார்.

மார்ச் கடைசி வாரத்தில் ஊரடங்கு ஆரம்பித்ததும், அருகிலுள்ள கட்டிடங்களில் வாழும் மக்கள் இவர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். அந்த சமயத்தில் இதுவே அவர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. ரேஷன் பொருட்களோ அல்லது எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களோ மாநில அரசிடமிருந்து தாங்கள் பெறவில்லை என்கிறார் மீனா. மே இறுதி – ஜுன் ஆரம்பத்தில், இந்த உணவு பொட்டலங்களின் – அரிசி, கோதுமை மற்றும் எண்ணெய் அல்லது சமைத்த உணவு - வரத்து குறைந்தாலும், இவர்கள் குடும்பம் அதைப் பெற்று வந்தது.

'I cannot store milk, onions potatoes… anything [at my house],' says Meena, because rats always get to the food
PHOTO • Aakanksha
'I cannot store milk, onions potatoes… anything [at my house],' says Meena, because rats always get to the food
PHOTO • Aakanksha

‘பால், வெங்காயம், உருளைக்கிழங்கு….எதையும் நான் வீட்டில் சேமித்து வைப்பதில்லை. ஏனென்றால் உணவைத் தேடிதான் எலிகள் வரும்’ என்கிறார் மீனா

“எலிகளும் எங்களோடுதான் சாப்பிடும். காலையில் தரையெங்கும் தாணியங்கள் சிதறிக் கிடப்பதை பார்ப்போம். கீழே கிடக்கும் எதையும் கிழித்து போட்டு விடும். எப்போதும் இது பிரச்சனையாக இருக்கிறது. உணவை ஏதாவது பாத்திரத்தில் மறைத்து வைத்தாலும் அல்லது துணியில் கட்டி வைத்தாலும் அவை எடுத்துவிடுகிறது. இதனால் பால், வெங்காயம், உருளைக்கிழங்கு என எதையும் நான் சேமித்து வைப்பதில்லை” என்கிறார் மீனா.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து, மீனாவும் சித்தார்த்தும் கண்டிவெளி தெருக்களில் தூக்கி எறியப்பட்ட பீர் அல்லது வைன் பாட்டில்களையும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் சேகரிக்க தொடங்கினர். ஒருவர் மாறி ஒருவர் இரவில் இந்த வேலையை செய்கின்றனர். அப்போதுதான் ஒருவராவது குழந்தைகளோடு இருக்க முடியும். இந்தப் பொருட்களை அருகிலுள்ள பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள். பாட்டில்களை கிலோ ரூ. 12-க்கும், நாளிதழ்களை ரூ. 8-க்கும் விற்கிறார்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை, எப்படியோ 150 ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள்.

செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் பாய்க்க வரும் பிஎம்சி டேங்கர் லாரியிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொள்கிறார்கள். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து சில வாரங்களாக அதுவும் நின்றுவிட்டது. பருவமழை காலங்களில் இதுவும் இருக்காது. அந்தச் சமயங்களில் அருகிலுள்ள கோயிலிலோ அல்லது சற்று தொலைவில் உள்ள பள்ளியிலிருந்தோ தண்ணீரைப் பிடித்து 20 லிட்டர் ஜாடியிலும் பிளாஸ்டிக் பாத்திரத்திலும் சேமித்து வைக்கிறார்கள்.

நடைபாதை சுவருக்கு பின்னால் உள்ள புதர்களின் மறைவில் மீனாவும் சங்கீதாவும் இரவில் குளிக்கிறார்கள். அருகிலுள்ள பொதுக் கழிப்பறையை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு முறைச் செல்ல 5 ரூபாய் கட்டணம். ஒரு நாளைக்கு இரண்டு பேரும் பயன்படுத்த ரூ. 20 செலவாகிறது. சித்தார்த்தும் அவர்களது இரண்டு மகன்களான அஷாந்த், 5 மற்றும் அக்ஷய், 3, அருகிலுள்ள திறந்தவெளியை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் மீனா கவலைப்பட வேறு விஷயங்களும் உள்ளது. “இப்போதெல்லாம் பலகீனமாக உணர்கிறேன். ஒழுங்காக நடக்க முடியவில்லை. பருவ மாற்றத்தால் இது ஏற்படுகிறது என நான் நினைக்கிறேன். ஆனால் மருத்துவரோ (கண்டிவெளியில் உள்ள) நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்கிறார்.” தனக்கு இனியும் குழந்தைகள் வேண்டாம், அதுவும் இந்த மாதிரி சமயத்தில் என நினைக்கிறார் மீனா. ஆனால் கருக்கலைப்பு செய்யக்கூடாது என அவரை அறிவுறுத்தியுள்ளார்கள். மருத்துவரிடம் செல்ல 500 ரூபாய் செலவானது. அந்தப் பணத்தையும் தான் முன்பு வேலை பார்த்த குடும்பத்திடம்தான் வாங்கி வந்ததாக கூறுகிறார் மீனா.

Siddharth – here, with his son Akshay – used to work at construction sites. 'That stopped when the lockdown began', he says
PHOTO • Aakanksha
Siddharth – here, with his son Akshay – used to work at construction sites. 'That stopped when the lockdown began', he says
PHOTO • Aakanksha

சித்தார்த் – தனது மகன் அக்ஷையோடு இருக்கிறார் – கட்டுமான தளங்களில் பணியாற்றுகிறார். ‘ஊரடங்கு தொடங்கியதிலிருந்து வேலையை நிறுத்திவிட்டனர்’ என்கிறார்

மீனாவின் குழந்தைகள் கிழக்கு கண்டிவெளியின் சம்தா நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். மூத்தவள் சங்கீதா மூன்றாம் வகுப்பு படிக்கிறாள், அஷாந்த் இரண்டாம் வகுப்பு, அக்ஷய் பால்வாடி செல்கிறான், ஷாமா இன்னும் பள்ளிக்குச் செல்லவில்லை. “சத்துணவிற்காகவாது சென்று கொண்டிருந்தார்கள்” என்கிறார் மீனா.

மார்ச் 20 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அன்றிலிருந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டும் சித்தார்த் போனில் பேலன்ஸ் இருக்கும்போது கார்ட்டூன் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

‘பள்ளி’ என்ற வார்த்தையை கேட்டதும், நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து, எனக்கு விமானம் வாங்கித் தாருங்கள் என கேட்கிறான் அஷாந்த். அதில் நான் பள்ளிக்குச் செல்வேன் என்கிறான். மழையிலிருந்து பாதுகாத்த புத்தகங்களை வைத்து தனது பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள் சங்கீதா. பாத்திரங்களை கழுவுவது, தன் சகோதரர்களை கவனித்து கொள்வது, தண்ணீர் பிடிப்பது, காய்கறிகள் நறுக்குவது போன்ற வீட்டு வேலைகளையும் இவள் செய்கிறாள்.

அவளுக்கு மருத்துவராக வேண்டும் என ஆசை. “எங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், நாங்கள் மருத்துவரிடம் செல்ல முடியாது. ஆனால் நான் மருத்துவராகி விட்டால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது” என்கிறாள். மேற்கு கண்டிவெளியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவும் மருந்துகள் வாங்கவும் செலவாகும். மருத்துவ உதவி தாமதமாக கிடைத்ததன் காரணமாக, தன் தாயார் இரட்டை குழந்தைகளை இழந்ததைப் பார்த்துள்ளார் சங்கீதா.

கிழக்கு கண்டிவெளியின் தாமு நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ளார் மீனா. அங்குள்ள காலனியில்தான் தனது தாயார் ஷாந்தாபாயோடு வசித்து வந்தார். மீனா பிறந்ததும் அவரது தந்தை பிரிந்துச் சென்றுவிட்டார்; அவருக்கு பெண் குழந்தை பிடிக்கவில்லை. இவருடைய பெற்றோர்கள் கர்நாடகாவின் பிடார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தன்னுடைய தந்தை என்ன வேலை செய்து வந்தார் என மீனாவுக்கு தெரியவில்லை. ஆனால் அவரது அம்மா, உள்ளூர் ஒப்பந்ததாரர்களிடம் தினசரி சம்பளத்திற்கு சாக்கடை சுத்தம் செய்து வந்தார்.

'At least the midday meal kept them going [before the lockdown],' Meena says about her kids. Now the rains have further deleted their resources (right)
PHOTO • Aakanksha
'At least the midday meal kept them going [before the lockdown],' Meena says about her kids. Now the rains have further deleted their resources (right)
PHOTO • Aakanksha

‘சத்துணவிற்காகவாது அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள் (ஊரடங்கிற்கு முன்பு)’ என தன்னுடைய குழந்தைகள் பற்றி மீனா கூறுகிறார். இப்போது அவர்களிடமிருந்த வளங்களை மேலும் அழித்துவிட்டது மழை (வலது)

“என் அம்மா சில சமயம் வித்தியாசமாக நடந்து கொண்டாலும், என் மீது அக்கறைக் கொண்டவர். எந்நேரமும் கவலைப்பட்டார். பிரிந்து சென்ற அப்பாவிற்கு சாபம் விடுவார். எனக்கு 10 வயதாக இருக்கும்போது, நிலைமை இன்னும் மோசமடைந்தது. ‘இந்தப் பைத்தியக்கார பெண்ணைப் பாருங்கள்’ என்றும் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் அருகிலிருப்போர் கூற ஆரம்பித்தார்கள்” என நினைவுகூர்கிறார் மீனா. போகப் போக அவரது அம்மா தனக்கு தானே பேசிக்கொண்டும், அலறவும் தொடங்கினார். வேலையிலிருந்தும் நின்றுவிட்டார். தனது தாயாரைக் கவனித்துக் கொள்வதற்காக பள்ளிப் படிப்பை நிறுத்தினார் மீனா.

11 வயதில் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலைக்குச் சென்றார் மீனா. ரூ. 600 மாதச் சம்பளத்துடன் அந்தக் குடும்பத்துடனே கண்டிவெளியில் தங்கிவிட்டார். “நான் என் அம்மாவை விட்டுச் சென்றாக வேண்டும். இல்லையேல், எங்கள் இருவருக்கும் யார் சாப்பாடு போடுவது? வாரம் ஒருமுறை அவரை நான் பார்த்து வந்தேன்.”

மீனாவிற்கு 12 வயதாக இருக்கும் போது அவரது அம்மா காணாமல் போய்விட்டார். “மழை காரணமாக ஒரு வாரம் அவரைப் பார்க்கச் செல்லவில்லை. நான் சென்றபோது அவர் அங்கு இல்லை. அருகிலிருந்தவர்களிடம் கேட்டபோது, யாரோ சிலர் அழைத்துச் சென்றதாக கூறினார்கள். ஆனால் அழைத்துச் சென்றது யார் என ஒருவருக்கும் தெரியவில்லை.” பயம் காரணமாக மீனா போலீசிடம் செல்லவில்லை: “என்னை அவர்கள் அனாதை ஆசிரமத்திற்கு அனுப்பிவிட்டால் என்ன செய்வது?”

மேலும் அவர் கூறுகையில், “எங்காவது அவர் அமைதியாக, உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்…..”

அந்தக் குடும்பத்துடனேயே தங்கியிருந்து, 8-9 வருடங்களாக குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்து வந்தார் மீனா. ஆனால் விடுமுறையில் குடும்பத்தினர் நகரத்தை விட்டுச் சென்றபோது, சில காலம் தெருவில் தங்கினார். அதன்பிறகு தான் பார்த்து வந்த வேலையை விடுத்து, சாலையே அவரது நிரந்தர வீடாக மாறிவிட்டது.

தாமு நகரில் அவரும் அவரது தாயாரும் தொடர்ந்து துன்புறுத்தலைச் சந்தித்தார்கள். “ஆண்களின் அசிங்கமான பார்வையை பார்த்து பயந்தேன். என்னிடம் பேச அவர்கள் முயற்சிப்பார்கள், குறிப்பாக குடிகாரர்கள். தாங்கள் உதவ விரும்புவதாக கூறுவார்கள். ஆனால் அவர்களின் உள்நோக்கம் எனக்கு தெரியும்.”

'I have never really slept [at night],' says Meena, who worries about her children's safety, especially her daughters Shama and Sangeeta (right)
PHOTO • Aakanksha

‘நான் ஒருபோதும் இரவில் தூங்கியதில்லை’ எனக் கூறும் மீனா, தனது குழந்தைகள், குறிப்பாக மகள் ஷாமா மற்றும் சங்கீதாவை (வலது) நினைத்து கவலைப்படுகிறார்

இப்போதும் கூட, தான் எச்சரிக்கையாக இருப்பதாக கூறுகிறார் மீனா. சில சமயங்களில் சித்தார்த்தின் நண்பர்கள் எங்கள் ‘வீட்டில்’ வந்து மது அருந்துவார்கள். “அவர்கள் குடிப்பதை தடுக்காவிட்டாலும் நான் எச்சரிக்கையாக இருப்பேன். இரவில் நான் ஒருபோதும் தூங்குவதில்லை. இது எனக்காக மட்டும் இல்லை, என் குழந்தைகளுக்காகவும் தான், குறிப்பாக சங்கீதா மற்றும் ஷாமாவிற்காக……”

மும்பையின் பல வீடில்லா மனிதர்களில் மீனா குடும்பமும் ஒன்று. இவர்கள் குறைந்தது 57, 480 பேர் இருப்பார்கள் என 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. இந்தியாவில் உள்ள வீடில்லாதவர்களுக்கு பல திட்டங்களை வகுத்தது அரசாங்கம். செப்டம்பர் 2013-ம் ஆண்டு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தை தொடங்கியது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம். நகர்ப்புற தங்கும் விடுதிகள், அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகியவையும் இந்தத் திட்டத்தில் உள்ளடங்கும்.

இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து வீடில்லாதவர்களின் நிலை என்னவென்று அறியக்கோரும் இரண்டு மனுக்களை 2016-ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி கைலாஷ் காம்பீர் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதிகளை மாநில அரசாங்கங்கள் முறையாக பயன்படுத்துவதில்லை என 2017-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. மகராஷ்ட்ராவிற்கு ஒதுக்கிய ரூ. 100 கோடி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

ஜூலை 28 அன்று, திட்டம் மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு பிரிவின் துணை ஆணையர் டாக்டர். சங்கீதா ஹஸ்னேல் என்னிடம் பேசுகையில், “வீடில்லாதவர்களுக்காக மும்பையில் 22 தங்கும் விடுதிகள் உள்ளது. இன்னும் ஒன்பது கட்ட திட்டமிட்டுள்ளோம். சிலவற்றில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. அடுத்த வருடத்திற்குள் 40-45 தங்கும் விடுதிகள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்றார். (குடிசை பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் வீடில்லாதவர்களுக்காக 2005-ல் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி பாத் கிராந்தி யோஜனா திட்டத்தைப் பற்றியும் பேசினார் டாக்டர். ஹஸ்னேல். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளை விற்றுவிட்டு மறுபடியும் தெருக்களில் வந்து வாழத் தொடங்கிவிடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்).

Meena and her family are used to seeing their sparse belongings float away every monsoon
PHOTO • Courtesy: Meena
Meena and her family are used to seeing their sparse belongings float away every monsoon
PHOTO • Aakanksha

ஒவ்வொரு பருவமழையின் போதும் தங்களது உடமைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை மீனாவும் அவரது குடும்பமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

“எனினும், தற்போது மும்பையில் ஒன்பது தங்கும் விடுதிகளே உள்ளது. வீடில்லா ஜனத்தொகையை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானது. பல வருடங்களாக இந்த எண்ணிக்கை அப்படியேதான் உள்ளது” எனக் கூறுகிறார் ஹோம்லெஸ் கலெக்டிவ்-ன் ஒருங்கிணைப்பாளர் பிரிஜேஸ் ஆர்யா. இவர் வீடில்லாதவர்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் பெச்சான் என்ற அரசு சாரா நிறுவனத்தின் நிறுவனருமாவார்.

2019-ம் ஆண்டின் ஆரம்பத்தில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மும்பையில் வீடில்லாதவர்கள் குறித்த கணக்கெடுப்பில் , அவர்களின் எண்ணிக்கை வெறும் 11, 915-ஆக குறைந்துள்ளதாக காண்பிக்கப்பட்டது. “தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக, வீடில்லா நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது? அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?” எனக் கேட்கிறார் ஆர்யா.

மார்ச் 2004-ம் ஆண்டு, வீடில்லாதவர்களிடம் அடையாள அட்டை அல்லது முகவரிச் சான்று இல்லாவிட்டாலும் அவரக்ளுக்கு ரேஷன் அட்டை கிடைக்க உதவுமாறு உச்ச நீதிமன்றம் கூறியதை தன்னுடைய சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது மகராஷ்ட்ரா அரசாங்கம்.

மாநில அரசு வழங்கும் இதுபோன்ற சலுகைகள் எதுவும் மீனாவிற்கு தெரியாது. அவரிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை அல்லது வங்கி கணக்கு என எதுவும் கிடையாது. “அடையாள அட்டையும் முகவரி சான்றும் எங்களிடம் கேட்கிறார்கள்; அடையாள அட்டை பெற்றுதர தனக்கு பணம் தருமாறு ஒருவர் தன்னிடம் கேட்டதாக” கூறுகிறார் மீனா. இவரது கனவருக்கு ஆதார் அட்டை (அவரது கிராம முகவரியில்) உள்ளது ஆனால் வங்கி கணக்கு இல்லை.

மீனாவின் வேண்டுகோள் ரொம்ப எளிமையானது: “மழையை தாங்குமளவிற்கு என்னுடைய வீடு பலமிக்கதாக இருக்க, இரண்டு தார்ப்பாய் விரிப்புகளை தாருங்கள்.”

மாறாக, இந்த மாதம் நடைபாதையை காலி செய்யுமாறு பிஎம்சி அலுவலர்கள் தங்களிடம் கேட்டுக் கொண்டதாக கூறுகிறார் மீனா. கடந்த காலங்களில் இதுபோன்று நடந்தால், மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு வேறு நடைபாதைக்கு இவர்கள் சென்றுவிடுவார்கள்.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Aakanksha

ಆಕಾಂಕ್ಷಾ ಅವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ವರದಿಗಾರರು ಮತ್ತು ಛಾಯಾಗ್ರಾಹಕರು. ಎಜುಕೇಷನ್ ತಂಡದೊಂದಿಗೆ ಕಂಟೆಂಟ್ ಎಡಿಟರ್ ಆಗಿರುವ ಅವರು ಗ್ರಾಮೀಣ ಪ್ರದೇಶದ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ತಮ್ಮ ಸುತ್ತಲಿನ ವಿಷಯಗಳನ್ನು ದಾಖಲಿಸಲು ತರಬೇತಿ ನೀಡುತ್ತಾರೆ.

Other stories by Aakanksha
Editor : Sharmila Joshi

ಶರ್ಮಿಳಾ ಜೋಶಿಯವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಮಾಜಿ ಕಾರ್ಯನಿರ್ವಾಹಕ ಸಂಪಾದಕಿ ಮತ್ತು ಬರಹಗಾರ್ತಿ ಮತ್ತು ಸಾಂದರ್ಭಿಕ ಶಿಕ್ಷಕಿ.

Other stories by Sharmila Joshi
Translator : V Gopi Mavadiraja

V Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V Gopi Mavadiraja