“இரண்டு கூட்டல் இரண்டு - எவ்வளவு? பிரதீக், எப்படி நாம் கூட்டல் கணக்குகள் செய்தோம் என நினைவிருக்கிறதா?”

பிரதீக் ரவுத்தின் ஆசிரியரான மோகன் தலெகர் பலகையில் எழுதியிருக்கும் எண்களை சுட்டிக் காட்டி, அந்த 14 வயது சிறுவன் அவற்றை அடையாளம் காண முடிகிறதா எனக் கேட்கிறார். சிறுவன் பலகையை உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறார். அடையாளம் கண்டதற்கான அறிகுறி முகத்தில் இல்லை.

அது ஜூன் 15, 2022. மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்ட கர்மாலா தாலுகாவிலுள்ள ஞானப்ரபோதன் மதிமந்த் நிவாஸி வித்யாலயா பள்ளியில் இருக்கிறோம். அதுதான் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதீக் திரும்ப வந்திருந்த பள்ளி. இரண்டு மிக நீண்ட வருடங்கள்.

”எண்களை நினைவுறுத்த பிரதீக்கால் முடியவில்லை. தொற்றுகாலத்துக்கு முன் அவரால் கூட்டல் கணக்குகள் போட முடிந்தது. மொத்த மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளின் எழுத்துகளை எழுத முடிந்தது,” என்கிறார் அவரது ஆசிரியர். “இனி அவருக்கு எல்லாவற்றையும் நாங்கள் முதலிலிருந்து கற்றுக் கொடுக்க வேண்டும்.”

அக்டோபர் 2020-ல் இக்கட்டுரையாளர், ரஷின் கிராமத்திலுள்ள வீட்டில் பிரதீக்கை சந்தித்தபோது அவருக்கு 13 வயது. அப்போது அவர் சில எழுத்துகளை எழுதும் நிலையில்தான் இருந்தார். ஆனால் டிசம்பர் 2020-ல் அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

பிரதீக் 2018ம் ஆண்டு பள்ளிக்கு செல்லத் தொடங்கினார். அடுத்த இரண்டு வருடங்களில் தொடர் பயிற்சியால், அவர் எண்களையும் வார்த்தைகளையும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். மார்ச் 2020-ல் அடுத்தக் கட்ட வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்கு அவர் நகரவிருந்தபோது கோவிட் தொற்று பரவியது. விடுதிப் பள்ளி இரண்டு வருடங்கள் மூடப்பட்டதால் குடும்பங்களுக்கு திரும்ப அனுப்பப்பட்ட அறிதிறன் குறைபாடு கொண்ட - 6லிருந்து 18 வயது வரை இருக்கும் எல்லா சிறுவர்களும் - 25 மாணவர்களில் அவரும் ஒருவர்.

Prateek Raut on the porch of his home in Rashin village and writing in a notebook, in October 2020. He is learning the alphabet and numbers from the beginning at his school now
PHOTO • Jyoti
Prateek Raut on the porch of his home in Rashin village and writing in a notebook, in October 2020. He is learning the alphabet and numbers from the beginning at his school now
PHOTO • Jyoti

பிரதீக் ரவுத் ரஷின் கிராமத்திலுள்ள வீட்டின் தாழ்வாரத்தில் அக்டோபர் 2020-ல் ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுத்துகளையும் எண்களையும் அவர் இப்போது பள்ளியில் மீண்டும் தொடக்கத்திலிருந்து பயின்று வருகிறார்

“இந்த மாணவர்களின் வளர்ச்சி குறைந்தபட்சம் இரண்டு கட்டங்களுக்கு பின்னோக்கி சென்றிருக்கிறது. இப்போது ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகை சவாலை எதிர்கொண்டிருக்கிறது,” என்கிறார் பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான ரோகித் பகடே. தானேவின் தொண்டு நிறுவனமான ஷ்ரமிக் மகிளா மண்டல் நடத்தும் அப்பள்ளியில் விடுதியுடன் கூடிய இலவச கல்வி வழங்கப்படுகிறது.

தொற்று வந்ததும் பிரதீக்கின் பள்ளியும் பல பள்ளிகளும் மூடப்பட்டபோது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற அறிவிக்கை மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. சமூகநீதித்துறைக்கு ஜூன் 10 2020 அன்று குறைபாடு கொண்டோருக்கான ஆணையரகம் அனுப்பிய கடிதத்தில், “அறிதிறன் குறைபாடு கொண்டவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவன இணையதளத்தில் இருக்கும் கல்வி ஆவணங்களை பெற்றோரின் வழியாக குழந்தைகளுக்கு அளித்து சிறப்பு கல்வி அளித்திட ஆவண செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இந்த ஆவணங்களை பெற்றோர்களுக்கும் அளிக்க வேண்டும்,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளிக் குழந்தைகள் பலருக்கு இணையவழிக் கல்வி சவாலாக இருக்கும் நிலையில் அது அறிதிறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு பெரும் தடைகளை உருவாக்கியிருக்கிறது. கிராமப்புற இந்தியாவில் 5-19 வயதில் இருக்கும் 4,00,000 அறிதிறன் குறைபாடு கொண்ட குழந்தைகளில் (இந்தியாவில் 5,00,000க்கும் அதிகமான அறிதிறன் குறைபாடு குழந்தைகள் இருக்கின்றனர்) 1,85,086 பேர்தான் கல்வி நிறுவனத்துக்கு செல்கின்றனர் (கணக்கெடுப்பு 2011) .

அறிவுறுத்தப்பட்டபடி, பிரதீக்கின் பள்ளியான ஞானப்ரதோபன் வித்யாலயா கல்வி ஆவணங்களை பெற்றோருக்கு அனுப்பியது. எழுத்துகள் கொண்ட பதாகைகள், எண்கள், பொருட்கள், செய்யுள் மற்றும் பாடல்கள் தொடர்பான செய்முறைகள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள் ஆகியவை அனுப்பப்பட்டன.

Left: Prateek with his mother, Sharada, in their kitchen.
PHOTO • Jyoti
Right: Prateek and Rohit Bagade, programme coordinator at Dnyanprabodhan Matimand Niwasi Vidyalaya
PHOTO • Jyoti

இடது: பிரதீக் அவரது தாய் ஷாரதாவுடன் சமையலறையில். வலது: பிரதீக்கும் ஞானப்ர்போதன் மதிமந்த் நிவாசி வித்யாலயா பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோகித் பகதேயும்

”குழந்தையுடன் (கல்வி பொருட்களோடு) பெற்றோர் அமர வேண்டும். ஆனால் குழந்தைக்காக வீட்டில் இருப்பது அவர்களின் வருமானத்தை பாதிக்கும்,” என பகதே சுட்டிக் காட்டுகிறார். பிரதீக் உள்ளிட்ட 25 மாணவர்களின் பெற்றோர் செங்கல் சூளை தொழிலாளராகவும் விவசாயத் தொழிலாளராகவும் குத்தகை விவசாயியாகவும் பணிபுரிகின்றனர்.

பிரதீக்கின் பெற்றோரான ஷாரதா மற்றும் தத்தத்ராய் ராத் கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றை சம்பா சாகுபடியாக (ஜூனிலிருந்து நவம்பர்) குடும்ப பயன்பாட்டுக்கு விளைவிக்கின்றனர். “நவம்பரிலிருந்து மே வரை, நாங்கள் பிறரின் நிலத்தில் மாதம் 20-25 நாட்களுக்கு வேலை செய்கிறோம்,” என்கிறார் ஷாரதா. அவர்களின் மொத்த மாத வருமானம் 6,000 ரூபாயை தாண்டாது. இருவரில் ஒருவர் கூட மகனுக்காக வீட்டிலிருந்து பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது. வருமான இழப்பு ஏற்படும்.

”எனவே பிரதீக்குக்கும் பிறருக்கும் வீட்டில் சும்மா இருப்பதை தவிர வேறு வழியில்லை,” என்கிறார் பகதே. தினப்பணிகள் மற்றும் (பள்ளியில்) விளையாட்டுகள் போன்றவை அவர்களை சுயசார்பு கொண்டவர்களாக ஆக்கியது. எரிச்சல் மற்றும் ஆக்ரோஷம் ஆகியவற்றை கட்டுப்படுத்தியது. இத்தகைய வேலைகளை இணைய வழி செய்ய முடியாது.”

பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் அவர்களை காலை 10 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை (சில மணி நேரங்கள் சனிக்கிழமையிலும்) பார்த்துக் கொண்டனர். பேச்சு, உடற்பயிற்சி, சுய பராமரிப்பு, பேப்பர் கைவினை, மொழித்திறன், சொல்லகராதி, எண்ணியல், கலை மற்றும் பிற நடவடிக்கைகள் சொல்லிக் கொடுத்தனர். பள்ளி மூடப்பட்டது அந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொண்டு விட்டது.

Vaibhav Petkar and his mother, Sulakshana, who is seen cooking in the kitchen of their one-room house
PHOTO • Jyoti
This is the last year of school for 18-year-old Vaibhav
PHOTO • Jyoti

இடது: வைபவ் பெட்கரும் சமையலறையும் சமைத்துக் கொண்டிருக்கும் அவரது தாய் சுலக்‌ஷனாவும். வலது: 18 வயது வைபவுக்கு இதுதான் பள்ளியில் கடைசி வருடம்

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியதில் பழைய முறைக்கு தகவமைத்துக் கொள்ள குழந்தைகள் சிரமப்படுகின்றனர். “அன்றாட செயல்கள், பேச்சு, கவனம் போன்றவற்றில் மொத்தமாக சரிவை நாங்கள் பார்க்கிறோம்,” என்கிறார் பகதே. “சில குழந்தைகள் அன்றாட வழக்கம் மீண்டும் மாற்றப்பட்டிருப்பதால் ஆக்ரோஷமானவர்களாகவும் பொறுமையற்றவர்களாகவும் வன்முறை நிறைந்தவர்களாகவும் ஆகியிருக்கின்றனர். மாற்றத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

கற்றல் இழப்பை ஈடுகட்ட பிரதீக்குக்கு இன்னும் சில வருடங்கள் பிடிக்கும். 18 வயது வைபவ் பெட்கருக்கு இதுதான் பள்ளியில் கடைசி வருடம். குறைபாடு கொண்டவர்களுக்கான (சம வாய்ப்புகள், உரிமை பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995-ன்படி ‘குறைபாடு கொண்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கல்வி சரியான சூழலில் குழந்தை பதினெட்டு வயதை எட்டும் வரை கிடைக்க வேண்டும்.’

“அதற்குப் பிறகு அவர்கள் வீட்டில்தான் இருக்கின்றனர். அவர்களது குடும்பங்களிடம் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அவர்களை சேர்க்கவும் வசதி கிடையாது,” என்கிறார் பகதே.

ஒன்பது வயதில் ‘தீவிர மன வளர்ச்சி குன்றல்’ பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டபோது வைபவ் பேச முடியாமல் இருந்தார். தொடர் மருத்துவ கவனம் தேவைப்படும் வகையில் வலிப்பு தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தது. “தொடக்கத்திலேயே தலையிட்டதாலும் குழந்தையின் வளர்ச்சியை பலப்படுத்தும் சிறப்பு கல்வி 7-8 வயதிலிருந்தே கொடுக்கத் தொடங்கியதாலும் புதுத் திறன்களை கிரகித்துக் கொள்ளும் அவரின் தன்மையும் தினசரி வாழ்க்கை செயல்பாடும் நடத்தை கட்டுப்பாடும் வளரும்,” என விளக்குகிறார் குழந்தை நரம்பியல் மருத்துவரான டாக்டர் மோனா கஜ்ரே. வடக்கு மத்திய மும்பையின் சியோனிலுள்ள லோக்மான்யா திலக் முனிசிபல் பொது மருத்துவமனையில் பேராசிரியராகவும் குறைபாடு மருத்துவராகவும் இருக்கிறார் அவர்.

Left: Vaibhav with his schoolteacher, Mohan Talekar.
PHOTO • Jyoti
With his family: (from left) sister Pratiksha, brother Prateek, Vaibhav, father Shivaji, and mother Sulakshana
PHOTO • Jyoti

இடது: பள்ளி ஆசிரியர் மோகன் தலெகருடன் வைபவ். வலது: குடும்பத்துடன்: (இடதிலிருந்து) சகோதரி பிரதிக்‌ஷா, சகோதரர் பிரதீக், வைபவ், தந்தை சிவாஜி மற்றும் தாய் சுலக்‌ஷனா

2017ம் ஆண்டிலிருந்து வைபவ் தன் 13ம் வயதிலிருந்து பள்ளிக் கல்வி தொடங்கினார். மூன்று வருடப் பயிற்சியில் அவர் சுய பராமரிப்பு பழக்கங்களை கற்றுக் கொண்டு விட்டார். நடத்தை கட்டுப்பாடு கற்றுவிட்டார். வண்ணம் பூசுவது போன்ற சில திறன்களையும் பெற்றுவிட்டார். “சிகிச்சையின் விளைவாக அவர் நிறைய தேறி விட்டார்,” என்கிறார் பகதே. “அவர் வண்ண ஓவியங்கள் வரைவார். நிறைய துடிப்பாக இருப்பார். பிற குழந்தைகளுக்கு முன்பே தயாராகி விடுவார்,” என அவர் நினைவுகூருகிறார். மார்ச் 2020-ல் திருப்பி அனுப்பப்பட்டதும் வைபவ் ஆக்ரோஷமான நடத்தைக்கும் ஆளாகவில்லை.

வைபவின் பெற்றோரான சிவாஜியும் சுலக்‌ஷனாவும் ஆண்டு முழுவதும் தாத்தா பாட்டி நிலமான இரு ஏக்கர் நிலத்தில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் கம்பு, சோளம், சில நேரங்களில் வெங்காயங்கள் போன்றவற்றை சம்பா சாகுபடி செய்கின்றனர். குறுவை காலமான டிசம்பர் முதல் மே மாதம் வரை அவர்கள் விவசாயக் கூலிகளாக பணிபுரிகின்றனர். அகமது நகர் மாவட்டத்திலுள்ள கர்ஜத் தாலுகாவின் கோரேகோன் கிராமத்திலுள்ள ஓரறை வீட்டில் தனியே அமர்ந்திருக்கும் வைபவை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை.

“பள்ளி மூடி இரண்டு வருடங்கள் ஆனதில் அவர் ஆக்ரோஷமானார். இறுமாப்பு கொண்டார். தூக்கத்தை இழந்தார். மக்களை பார்ப்பதில் அடையும் பரபரப்பு மீண்டும் அவருக்கு வளர்ந்து விட்டது,” என்கிறார் பகதே. “வண்ணங்களை அவரால் அடையாளம் காண முடியவில்லை.” இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்து டம்மி செல்பேசியுடன் விளையாடிக் கொண்டிருந்தது வைபவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஞான்பிரபோதன் மதிமந்த் நிவாஸி வித்யாலயா ஆசிரியர்கள் எல்லாவற்றையும் திரும்பச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டனர். “இப்போது குழந்தைகளை பள்ளியின் சூழலுக்கும் முறைக்கும் பழக்கப்படுத்துவதுதான் எங்கள் முன் இருக்கும் பிரதானப் பணி,” என்கிறார் பகதே.

பிரதீக் மற்றும் வைபவ் ஆகியோர் தொற்றுக்கு முன் கொண்டிருந்த அறிவையும் திறன்களையும் மீண்டும் கற்க வேண்டியுள்ளது. தொற்று தொடங்கியதும் உடனே அவர்கள் அனுப்பப்பட்டுவிட்டதால், புதிய கற்றலில் கோவிட் தொற்றுடன் வாழ்வது எப்படி என்பது முக்கியமான அம்சமாக இருக்கும்.

Left: Rohit Bagade says children are finding it difficult to readjust to their old routine after the two-year break.
PHOTO • Jyoti
Right: Dnyanprabodhan Matimand Niwasi Vidyalaya, in Karmala taluka of Maharashtra’s Solapur district, where Bagade is the programme coordinator
PHOTO • Jyoti

இடது: இரு வருட இடைவெளிக்கு பிறகு பழைய முறைக்கு தகவமைத்துக் கொள்ள குழந்தைகள் சிரமப்படுவதாக ரோகித் பகதே சொல்கிறார். வலது: பகதே திட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஞான்ப்ரதோபன் மதிமந்த் நிவாசி வித்யாலயா பள்ளி

ஜூன் 15, 2022 அன்று மகாராஷ்டிராவில் 4,024 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டிருக்கிறது. மாநில சுகாதாரத்துறையின்படி முந்தைய நாளை விட 36 சதவிகிதம் அதிகம். கோவிட் தொற்று மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளை வைரஸ் தொற்றாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது முக்கியம்.

“எங்களின் எல்லா ஊழியர்களும் தடுப்பூசிகள் போட்டிருக்கின்றனர். எங்களின் ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கு முகக்கவசங்களும் பாதுகாப்பு உபகரணங்களும் இருகின்றன. ஏனெனில் எங்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே உடல் குறைபாடுகள் இருக்கின்றன,” என்கிறார் பகதே. “முகக்கவசங்கள் தொடர்பு கொள்ளுதலை குழந்தைகளிடையே கடினமாக்கலாம். ஏனெனில் முகபாவங்களை பார்த்து புரிந்து கொள்ளுதல் அவர்களுக்கு சுலபமாக இருக்கும்.” குழந்தைகளுக்கு முகக்கவசம் போட வேண்டிய அவசியத்தையும் காரணத்தையும் முறையையும் சொல்லிக் கொடுப்பது பெரும் சவாலாக இருக்கும் என்கிறார் அவர்.

”அறிதிறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொடுக்கும்போது ஒவ்வொரு செயலையும் நாங்கள் படிப்படியாக பொறுமையாகவும் பல முறையும் செய்து காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றை அவர்கள் சுலபமாக நினைவில் கொள்ள முடியும்,” என விளக்குகிறார் டாக்டர் கஜ்ரே.

ஞான்ப்ரபோதன் மதிமந்த் நிவாசி வித்யாலயா பள்ளிக்கு திரும்பியதும் கற்றுக் கொண்ட முதல் விஷயங்களில் ஒன்றி கை கழுவுதல்.

“சாப்பிட.. சாப்பிட.. உணவு சாப்பிட,” என வைபவ் திரும்ப திரும்பச் சொல்லி உணவு கேட்கிரார். “எங்களின் பல குழந்தைகளுக்கு கை கழுவுதல் என்றால் உணவு வேளை என அர்த்தம்,” என்கிறார் பகதே. “எனவே அவர்களுக்கு கோவிட் காலத்தில் திரும்பத் திரும்ப கை கழுவும் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.”

தமிழில் : ராஜசங்கீதன்

ಜ್ಯೋತಿ ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಹಿರಿಯ ವರದಿಗಾರರು; ಅವರು ಈ ಹಿಂದೆ ‘ಮಿ ಮರಾಠಿ’ ಮತ್ತು ‘ಮಹಾರಾಷ್ಟ್ರ1’ನಂತಹ ಸುದ್ದಿ ವಾಹಿನಿಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದಾರೆ.

Other stories by Jyoti
Editor : Sangeeta Menon

ಸಂಗೀತಾ ಮೆನನ್ ಮುಂಬೈ ಮೂಲದ ಬರಹಗಾರು, ಸಂಪಾದಕರು ಮತ್ತು ಸಂವಹನ ಸಲಹೆಗಾರರು.

Other stories by Sangeeta Menon
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan