உமா பட்டீலின் 2 அறைகள் கொண்ட வீட்டின் ஒரு ஓரத்தில் உள்ள சிறிய இரும்பு பீரோவில், கையில் எழுதிய ஒரு தசாப்தத்தின் பதிவுகள், பெரிய பதிவேடுகள், நோட்டுகள், டைரிகள் உள்ளன. கணக்கெடுப்பு படிவங்களின் நகல்களும் அதில் உள்ளன. அனைத்தும் ஒன்றன் மேல் ஒன்றாக பாலிதீன் கவர்களில் போடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

குழந்தை பிறப்பு குறித்த தகவல்கள், நோய்த்தடுப்பு, இளம்பருவத்தினருக்கான ஊட்டச்சத்து, கருத்தடை, காசநோய் உள்ளிட்ட பல்வேறு சுகாதார கட்டமைப்பிற்கு தேவையான கிராமப்புற மஹாராஷ்ட்ராவின் விவரங்களை, அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஊழியர் பதிவு செய்யும் தகவல்களே இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும். இந்த பெரிய பெரிய புத்தகங்களை உமா 2009ம் ஆண்டு முதல் வைத்திருக்கிறார். இவை அனைத்தும் மஹாராஷ்ட்ராவின் சங்லி மாவட்டம் மிராஜ் தாலுகாவின் அராக் கிராமத்தில் உள்ள மக்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விவரங்கள். அவர் தொடர்ந்து அவரது கிராமத்தினருக்கு சுகாதார பிரச்னைகள் குறித்து அறிவித்தும், வழிகாட்டியும் வருகிறார்.

45 வயதான உமாவைப்போல், மஹாராஷ்ட்ரா முழுவதும் 55 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், தினமும் நீண்ட நேரம் செலவிட்டு, கிராமங்களின் அடிப்படை சுகாதார பராமரிப்பை உறுதிசெய்கிறார்கள். இந்தப்பணிகள் 2005ம் ஆண்டு தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் மூலம் துவங்கப்பட்டன. சமுதாய சுகாதார ஆர்வலர்கள் அனைவரும் பெண்கள், 23 நாள் பயிற்சிக்கு பின்னர் பணியமர்த்தப்படுவார்கள். தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், ஆதிவாசி கிராமங்களில் ஆயிரம் பேருக்கு ஒரு சமூக சுகாதார ஆர்வலர் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது. (அவர்கள் கட்டாயம் 8ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்) ஆதிவாசிகள் அல்லாத கிராமத்தில் 1,500 பேருக்கு ஒரு சமூக சுகாதார ஆர்வலர் இருக்க வேண்டும் எனவும் கூறுகிறது. (அவர்கள் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்).

15,600 பேர் வசிக்கும் பெரிய கிராமம் அராக், அங்கு உமாவுடன் 15 அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் தினமும் காலை 10 மணி முதல் தங்கள் பணிகளை துவங்கிவிடுவார்கள். மிராஜ் தாலுகாவில் பெடாக், லிங்னுர், கட்டாவ், ஷிண்டேவாடி மற்றும் லட்சுமண்வாடி ஆகிய கிராமங்களுக்கு அராக் முக்கிய ஆரம்ப சுகாதார மையமாகவும் உள்ளது. இங்கு உள்ள 47,000 பேருக்கு 41 அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் உள்ளார்கள்.

ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலரும் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வது, கூடுதல் நேரம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் என அவர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய 5 மணி நேர வேலையைவிட இந்த வேலைகளு்ககாக அவர்கள் செலவிடும் நேரம் கூடுதலாகிறது. “வீடுகள், கிராமத்திற்குள் இருந்தால், இரண்டு மணி நேரத்தில் 10 முதல் 15 வீடுகளுக்கு சென்றுவிடலாம். ஆனால், சிலர் பண்ணைகளில் வசிப்பார்கள். இதனால், 5 மணி நேரத்தைவிட கூடுதலான நேரம் நான்கு வீடுகளுக்கு செல்வதற்கே எடுத்துக்கொள்ளும். மேலும், நாங்கள் பல கிலோமீட்டர் தூரங்கள் புதர்கள், வயல்வெளிகள் மற்றும் மண் பாதையிலேயே நடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அது மிக மோசமாக இருக்கும்“ என்று உமா கூறுகிறார்.

Uma handling her record books
PHOTO • Jyoti Shinoli
Uma filling in her record books
PHOTO • Jyoti Shinoli

அனைத்து விவரங்களையும் பேப்பரில் குறித்து வைப்பது அவர்களின் மிக முக்கியமான வேலையாகும். அவர்கள்தான் நகல் எடுப்பது, எழுதுபொருட்கள் வாங்குவது போன்ற அனைத்திற்கும் செலவு செய்ய வேண்டும் என்று சங்லி மாவட்டம் அராக் கிராமத்தைச் சேர்ந்த உமா பட்டீல் கூறுகிறார்

ஒரு வீட்டிற்கு செல்வது, குடும்பங்களுடன் சுகாதாரம், கருத்தடை ஆகியவை குறித்து பேசுவது, இருமல், காய்ச்சல், போன்ற சிறு உடல் உபாதைகளுக்கு போதிய மருந்துகள் கொடுப்பது, கர்ப்பிணி பெண்களை பிரசவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதற்கு தயார்படுத்துவது, புதிதாக பிறந்த குழந்தைகளை கண்காணிப்பது, (குறிப்பாக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை மற்றும் குறைமாதத்தில் பிறந்த குழந்தை) வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ள குழந்தைகளை தொடர்ந்து பார்ப்பது, அவர்களின் முழு தடுப்பூசிகளை உறுதிப்படுத்துவது, காசநோய் மற்றும் மலேரியா போன்றவற்றை தடுப்பது அல்லது சிகிச்சையளிப்பது ஆகியவை அவர்களின் பணியாகும்.

இது இடைவிடாமல் அவர்கள் செய்யக்கூடிய வேலை குறித்த பட்டியல். “ஒரு வீடு கூட கணக்கெடுப்பிலோ, சுகாதார வசதியிலோ விடுபடாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். பருவத்திற்கு ஏற்ப இடம்பெயர்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கூட விடுபடாமல் இருப்பதையும் நாங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்“ என்று உமா கூறுகிறார். அவரும், அவரது கணவர் அசோக்கும் சேர்ந்து அவர்களின் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடுகின்றனர்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலரின் மாத வருமானம் ஊக்கத்தொகை அல்லது மதிப்பூதியம் என்று அழைக்கப்படுகிறது. அது ரூ.2 அயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே வேலை முடிக்கப்பட்ட அளவைப்பொறுத்து மஹாராஷ்ட்ராவில் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு பாக்கெட் காண்டம் அல்லது மாத்திரை வழங்கினால், ரூ.1 வழங்கப்படுகிறது. அவர் உறுதிப்படுத்தும் மருத்துவமனை பிரசவத்திற்கு ரூ.300ம், 42 வீடுகளில் புதிதாக பிறந்த குழந்தைகளை சென்று பார்வையிட்டால் ரூ.250ம் வழங்கப்படும்.

Paper works
PHOTO • Jyoti Shinoli
Paper Work
PHOTO • Jyoti Shinoli
Paper Work
PHOTO • Jyoti Shinoli

ஏராளமான, இடைவிடாத பேப்பரில் குறித்து வைக்கும் பணிகள் இருக்கும். இவை நோட்டு புத்தகங்கள், பதிவு விவரங்கள், பல்வேறு கணக்கெடுப்பு படிவங்கள். இவற்றை மிக கவனத்துடன் இந்த சுகாதார ஆர்வலர்கள் பராமரிக்கிறார்கள்

கூடுதலாக நோட்டு புத்தகங்களை அடுக்கி வைப்பது, சுகாதார ஊழியர்கள் அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கு செல்லும் தகவல்களை பராமரிப்பது, கண்காணிப்பது மற்றும் கணக்கெடுப்பது ஆகிய வேலைகளையும் கூடுதலாக செய்ய வேண்டும். “நான் மாதம் ரூ.2 ஆயிரம் பெறுகிறேன். ஆனால், ரூ.800, எழுதுபொருட்கள், நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்கும், பயணம் செய்வதற்கும், செல்போனுக்கும் ஆகிறது“ என்று உமா கூறுகிறார். “ஒவ்வொரு அசல் விண்ணப்பத்தையும் இரண்டு நகல் எடுக்க வேண்டும். ஒன்றை எங்களை வழிநடத்துபவரிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்று எங்களிடம் இருக்கும். ஒவ்வொரு புறமும் நகல் எடுக்கு ரூ.2 செலவாகிறது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

வீடுகளில் பிறந்த குழந்தை பராமரிப்பு விண்ணப்பங்கள், கர்ப்பிணிகளுக்கான ஜனனி சுரக்ஷா யோஜனா விண்ணப்பங்கள், கழிவறைகள் குறித்த குடும்ப கணக்கெடுப்பு விண்ணப்பங்கள், குடிநீர் ஆதார விவரங்கள், தொழுநோயாளிகள் குறித்த தகவல்கள் என அவை எண்ணற்ற விண்ணப்பங்கள் இருக்கும். கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தின கணக்கெடுப்பு விண்ணப்பங்களில் எத்தனை பேர் மாதாந்திர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள் என குறிக்க வேண்டும். ஹீமோகுளோவின் அளவு பரிசோதித்த விவரங்கள், தடுப்பூசி வழங்கப்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு விவரங்கள் என சோர்வடையச்செய்யக்கூடிய அளவிலான 40 விவரங்கள் வழங்க வேண்டியிருக்கும்.

உமா உள்ளிட்ட சமூக சுகாதார ஆர்வலர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட எண்ணற்ற தகவல்கள், மாநில அரசின் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் இணையதளத்தில் , ஒவ்வொரு மாத இறுதியிலும் பதிவேற்றப்படும். நான் அங்கு சென்றபோது, பிரியங்கா புஜாரி (28), அராக் ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள வழிநடத்துனர் அந்த இணையதளத்தை புதுப்பிப்பதற்கு திண்டாடிக்கொண்டிருந்தார். ஆரம்ப சுகாதார மையத்தில் மூன்று கட்டிடங்கள் உள்ளது. அதில் கணினி, மருத்துவர் அறை, நோயாளிகள் அமரும் இடம், ரத்த பரிசோதனை செய்வதற்கான ஆய்வகம், மருந்துகள் வைப்பதற்கான அறை ஆகியவை இருந்தன. வழக்கமாக ஒரு வழிநடத்துனர் 10 சமூக சுகாதார ஆர்வலர்களை கண்காணிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையத்தில் (குறைந்தபட்ச விதியாக உள்ளது) செவிலியர், குறிப்பிட்ட நேரம் மட்டும் வருகை புரியும் மருத்துவர் மற்றும் மருத்துவ தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.

Priyanka Pujari filling the data on ASHA website
PHOTO • Jyoti Shinoli
Reviewing some paper works
PHOTO • Jyoti Shinoli

ஆராக்கில் தகவல்கள் அனைத்தையும் பிரியங்கா புஜாரி (இடது), இணையதளத்தில் பதிவேற்றுவார். ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள மற்ற வழிநடத்துனர்களை கண்காணிப்பது, சமூக சுகாதார ஆர்வலர்கள் கூட்டம் நடத்துவதும் அவரது பணியாகும்

“சமூக சுகாதார ஆர்வலர்கள் இணையதளம் ஏப்ரல் மாதத்தில் இருந்து முடங்கிவிட்டது. பின்னர் நவம்பரில் மீண்டும் செயல்பட துவங்கியது. நான் அதில் இந்த மாதம் உள்பட அனைத்து மாதத்திற்கான தகவல்களை பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறேன். அடிக்கடி, மின் இணைப்பு துண்டிப்பு, மோசமான இணைய இணைப்பு ஆகியவற்றால் வேலை தடைபடும்“ என்று பிரியங்கா கூறுகிறார். அவர், பிஏ பட்டமும், கல்வியில் டிப்ளமோவும் முடித்தவுடன், மூன்று ஆண்டுகளாக வழிநடத்துனராக செயல்படுகிறார். அவர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவரது இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது கிராமமான லிங்னூரில் இருந்து வருகிறார். அவரது வேலை சமூக சுகாதார ஆர்வலர்களின் வேலையை  கண்காணிப்பது, மாதாந்திர கூட்டத்தை நடத்துவது மற்றும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வரும் மக்களை கவனிப்பது ஆகியவையாகும்.

பிரியங்காவிற்கு மாதம் ரூ.8,375 சம்பளம் கிடைக்கிறது. அதற்கு அவர் 20 புதிதாக பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை பரிசோதித்திருக்க வேண்டும் மற்றும் 5 நாட்கள் சமூக சுகாதார ஆர்வலர்களின் இணையதளத்தை புதுப்பித்திருக்க வேண்டும். “நாங்கள் மாதத்தில் 25 நாட்கள் வேலை முழுதாக முடிக்காவிட்டால், எங்களின் சம்பளம் பிடித்து வைத்துக்கொள்ளப்படும். சம்பளம் பெறுவதற்கு, சமூக சுகாதார ஆர்வலர்கள் மற்றும் அவர்களை வழி நடத்துபவர்கள் இருவரும், வட்டார சுகாதார உயர் அலுவலர்களிடம் அவர்களின் வேலையை சமர்பிக்க வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

மாதந்திர கூட்டங்களின்போது, சுகாதார ஊழியர்களின் நலன் குறித்தும் பிரியங்கா பேசுவார். “ஆனால் ஒன்றும் நடக்காது“ என்று அவர் கூறுகிறார். “அண்மையில் நாங்கள் எழுதுபொருள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அடங்கிய பையை பெற்றோம். அதில் 50 பக்கங்கள் கொண்ட 5 நோட்டுபுத்தகங்கள், 10 பேனாக்கள், ஒரு பென்சில் பெட்டி, 5 மில்லி லிட்டர் பசை, ஒரு அளவுகோல் ஆகியவை இருக்கும். இவை எத்தனை நாட்கள் வரும்?“ என்று அவர் கேட்கிறார்.

மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படுவதும் அடிக்கடி ஏற்படும் பிரச்னையாகும். “காண்டம்களும், கருத்தடை மாத்திரைகளும் பெற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. யாராவது இரவில் காய்ச்சல், தலைவல், உடல் வலி என்று வந்தால் அவர்களுக்கு கொடுக்க எங்களிடம் மருந்துகள் இல்லை“ என்று சைய்யா சவன் (42) கூறுகிறார். அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் மதிப்பூதியம் கிடைக்கிறது. அவரது கணவருக்கு ரூ.7 ஆயிரம் கிடைக்கிறது. அவர் அருகில் உள்ள சர்க்கரை ஆலையில் பாதுகாவலராக பணிபுரிகிறார்.

Shirmabai Kore sitting on her bed
PHOTO • Jyoti Shinoli
Chandrakant Naik with his daughter
PHOTO • Jyoti Shinoli

அரசு அவர்களுக்கு குறைந்தளவு பணம் கொடுத்தாலும், ஹிர்மாபாய் கோர் (இடது), சந்திரகாந்த் நாயக் (வலது) உள்ளிட்ட பெரும்பாலான கிராமமக்கள் அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கிறார்கள்

கிராமப்புற இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு இந்த களப்பணியாளர்கள் வசமே உள்ளது. நாட்டின் சுகாதார வளர்ச்சியை அதிகரிக்க அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. எடுத்துக்காட்டாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு – 4 ல், 2015-16ம் ஆண்டில், மஹாராஷ்ட்ராவின் குழந்தைகள் இறப்பு விகிதம், 1000க்கு 24 ஆக குறைந்துவிட்டது. இதுவே 2005-06ல் இறப்பு விகிதம் 38ஆக இருந்தது. மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை, 2005-06ல் 64.6ஆக இருந்தது, 2015-16ம் ஆண்டில் 90.3 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

“சமூக சுகாதார ஆர்வலர்கள் மக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். கர்ப்பகாலம் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் தொடர்ச்சியாக வீடுகளுக்கு செல்வது, அவர்கள் தொடர்ந்து உடல் நலக்குறைவு குறித்து மக்களுக்கு தெரிவிப்பது அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படுகிறது“ என்று டாக்டர் நிரஞ்சன் சாவன் கூறுகிறார். இவர் மும்பை லோக் மான்யா திலக் நகராட்சி மருத்துவமனையின் மகப்பேறியல் நிபுணராவார்.

சமூக சுகாதார ஆர்வலர்கள்தான், சுகாதாரம் தொடர்பான எந்த சூழ்நிலையிலும் முன்னால் நின்று செயல்படக்கூடியவர்கள். “6 மாதங்களுக்கு முன்னர், லட்சுமிவாடியில் (3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த ஊரின் சமூக சுகாதார ஆர்வலர் உடனடியாக அராக் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவித்தார்“ என்று உமா நினைவு கூறுகிறார். ஒரு மருத்துவர் குழு மற்றும் கண்காணிப்பாளர்கள் அங்கு சென்று மொத்தம் உள்ள 318 வீடுகளிலும் சோதனை நடத்தினர். நாங்கள் நோய் அறிகுறி இருந்தவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தோம். ஆனால், வேறு ஒருவரும் பாதிக்கப்படவில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

சமூக சுகாதார ஆர்வலர்களின் பணிகளை கிராம மக்களும் அங்கீகரிக்கிறார்கள். “நான் கண்ணில் கேட்ராக்ட் அறுவைசிகிச்சை செய்துகொண்ட இரண்டு ஆண்களுக்கு முன்னர் வரை நான் மருத்துவமனையை பார்த்ததில்லை“ என்று வயதில் மூத்த ஷிர்மாபாய் கோரே கூறுகிறார். “உமா எங்களை வழி நடத்தினார். அவர்தான் எனது மருமகள் சாந்தாபாயையும் அவருக்கு காசநோய் இருந்த இரண்டு ஆண்டுகள் (2011-12) பார்த்துக்கொண்டார். என்னைப்போன்ற வயதானவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை இவரைப்போன்ற இளம்பெண்கள் உறுதிப்படுத்துகிறார்கள். எனது காலத்தில் இதுபோல் எதுவுமில்லை. அப்போதெல்லாம் எங்களுக்கு வழிகாட்ட யார் இருந்தார்கள்?“ என்று ஷிர்மாபாய் கேட்கிறார்.

Yashodha (left), and her daughter, with Chandrakala
PHOTO • Jyoti Shinoli
Chandrakala checking a baby at primary health centre
PHOTO • Jyoti Shinoli
Chandrakala Gangurde
PHOTO • Jyoti Shinoli

ஒரு சமூக சுகாதார ஆர்வலராக நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகலா கங்குர்டே யசோதாவின் (இடது) பிரசவத்திற்கு உதவினார். ஆரம்ப சுகாதார மையத்தில் (நடுவில்) இளந்தாய்மார்களை கண்காணிப்பது உள்பட பல்வேறு பணிகள் அவருக்கு உள்ளன. ஆனால், அவர் கண்ணீருடன் (வலது) அவரது தனிப்பட்ட வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக உள்ளது என்று கூறுகிறார்

சந்திரகாந்த் நாயக், அராக்கைச் சேர்ந்த 40 வயதான விவசாயி, அதே அனுபவத்தை கூறுகிறார். “மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எனது சகோதரரின் மகளுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் உமாவின் உதவி கேட்டு வீட்டிற்கு ஓடினேன். அவர் ஆம்புலன்சை அழைத்தார். நாங்கள் அவரை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றோம்“ என்றார்.

சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு இதுபோன்ற அவசரமாக சிகிச்சையளிக்க வேண்டிய சூழ்நிலைகளை கையாள தெரிந்திருக்கிறது. வழக்கமாக, உடனடி செலவுகளுக்கு அவர்களின் சொந்த பணத்தையே செலவிடுகிறார்கள். நாசிக் மாவட்டம் திரிம்பகேஸ்வர் தாலுகா தல்வாடே திரிம்பக் கிராமத்தைச் சேர்ந்த சமூக சுகாதார ஆர்வலர் 32 வயதான சந்திரகலா கங்குர்டே 2015ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார். “யசோதா சவுரேவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது இரவு 8 மணி. நாங்கள் ஆம்புலன்சுக்காக கிட்டதட்ட 45 நிமிடங்கள் வரை காத்திருந்தோம். பின்னர் நாங்கள் அருகில் உள்ள பங்களாவின் சொந்தக்காரரிடம் இருந்து ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்தோம். நாசிக்கில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு (26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) அழைத்துச்சென்றோம். நான் அவர்களுடன் இரவு முழுவதும் இருந்தேன். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது மூன்று வயதாகிறது.

யசோதா (25) மேலும் கூறுகையில், சந்திரகலா டேவுக்கு நான் நன்றியுடையவளாகிறேன். மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் தொடர்புகொள்ள முடியாத தூரத்தில் இருந்தார்கள். அவர்தான் உதவினார். “இந்த மருத்துவமனை பிரசவத்திற்கு சந்திராகலா, மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.300 மதிப்பூதியம் பெற்றார். (பிரசவ கால மற்றும் குழந்தை மரணத்தை குறைப்பதே அத்திட்டத்தின் நோக்கமாகும்). அவர் வாடகை ரூ.250ஐ வண்டியின் சொந்தக்காரருக்கு அளித்தார். ரூ.50ஐ டீ மற்றும் பிஸ்கட் செலவிற்காக பயன்படுத்தினார்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் சமூக சுகாதார ஆர்வலர்கள், சந்திரகலா செய்ததுபோல், இரவு முழுவதுமே மருத்துவமனையில் தங்க நேரிடுகிறது. அவர்களுக்கு உணவோ, ஓய்வெடுக்க இடமோ இருப்பதில்லை என்றுதான் இதற்கு அர்த்தம். “இதுபோன்ற அவசரமான சூழ்நிலைகளில் உணவை எடுத்துக்கொள்ள நேரம் எங்கு உள்ளது? எங்கள் குழந்தைகள், குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு நாங்க ஓடவேண்டும். நான் அந்த இரவு முழுவதும் விழித்திருந்தேன். அவரின் படுக்கைக்கு அருகே தரையிலே ஒரு விரிப்பை விரித்து படுத்திருந்தேன்“ என்று சந்திரகலா கூறுகிறார். அவர், அவரது கணவர் சந்தோசுடன் சேர்ந்து தன்னுடைய ஒரு ஏக்கர் விளை நிலத்தில் நெல் அல்லது கோதுமை பயிரிடுகிறார். “எங்களுக்கு ஞாயிறு என்றெல்லாம் கிடையாது. நாங்கள் எல்லா நாளும் விழிப்புடன் இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவிக்காக எங்களை அழைப்பார்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

Protest

சமூக சுகாதார ஆர்வலர்கள் யூனியன் மற்றும் சங்கத்தின் சார்பில் அவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டம் சங்லி கலெக்டர் அலுவலகம் முன் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது

அம்போலி ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ் உள்ள 10 சமூக சுகாதார ஆர்வலர்களில் சந்திரகலாவும் ஒருவர். திரிபகேஸ்வர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் உள்ள மற்ற சுகாதார பணியாளர்களுடன் மாதத்தில் இரண்டு முறை கூட்டத்திற்காக செல்வார். “அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். சமூக சுகாதார ஆர்வலர்களே ஏழ்மையான குடும்பத்தில் இருந்துதான் வருவார்கள். அவர்களே பொருளாதார ரீதியாக திண்டாடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், கிராமத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்காக கடுமையாக உழைப்பார்கள்“ என்று கண்ணீருடன் சந்திரகலா கூறுகிறார்.

அவரைப்போன்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் அனைவருமே அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான் தேவை. “இது பெரிய கோரிக்கை ஒன்றுமில்லை. எங்களின் மதிப்பூதியம் இரட்டிப்பாக்கப்படவேண்டும். மற்ற செலவுகளையும் திரும்ப வழங்க வேண்டும். மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக எங்களின் வாழ்க்கையே அர்ப்பணிக்கிறோம். இதையாவது நாங்கள் கோரவேண்டும்“ என்று உடைந்த குரலில் சந்திரகலா கூறுகிறார்.

சமூக சுகாதார ஆர்வலர்கள் யூனியன் மற்றும் சங்கம் சார்பில், அரசு அவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் மற்றும் மற்ற கோரிக்கைகள் குறித்து கவனத்தில்கொள்ள வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் அல்லது ஊக்கத்தொகை அடிக்கடி நடக்கும் வேலைகளுக்கு உயர்த்தப்படும் என்று அறிவித்தார். எடுத்துக்காட்டாக, கிராம சுகாதார பதிவேட்டை பராமரிப்பதற்கு ரூ.100க்கு பதிலாக ரூ.300 வழங்கப்படும் என்று கூறினார்.

ஆனால், சுகாதார போராளிகள் மற்றும் சமூக சுகாதார ஆர்வலர்கள் அதை விமர்சித்தார்கள். “நாங்கள் ஒரு நிலையான மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்பட வேண்டும். அதில் காப்பீடு, ஓய்வூதியத்தையும் சேர்க்க வேண்டும். சமூக சுகாதார ஆர்வலர்களை நிரந்தரமாக்க வேண்டும். மதிப்பூதியம் அல்லது ஊக்கத்தொகையை உயர்த்துவது பிரச்னைகளை தீர்க்காது“ என்று சங்லியைச் சேர்ந்த சங்கர் புஜாரி கூறுகிறார். இவர் மஹாராஷ்ட்ரா சமூக சுகாதார ஆர்வலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சங்கத்தின் தலைவராவார்.

இதற்கிடையில், அராக் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்சேர்ந்த உமா மற்றும் மற்றவர்கள், சமூக சுகாதார ஆர்வலர்கள் மும்பையில் ஜனவரி மாதத்தில் அறிவித்துள்ள போராட்டம் குறித்து பேசினார்கள். “மேலும் ஒரு போராட்டம்“ என்று உமா கூறுகிறார். “என்ன செய்ய முடியும்? (அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (accredidated social health activist சுருக்கமாக ASHA, ASHA என்றால் நம்பிக்கை) நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

ಜ್ಯೋತಿ ಶಿನೋಲಿ ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಹಿರಿಯ ವರದಿಗಾರರು; ಅವರು ಈ ಹಿಂದೆ ‘ಮಿ ಮರಾಠಿ’ ಮತ್ತು ‘ಮಹಾರಾಷ್ಟ್ರ1’ನಂತಹ ಸುದ್ದಿ ವಾಹಿನಿಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದಾರೆ.

Other stories by Jyoti Shinoli
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.