“என்னால் ஒரு நிமிடம் கூட தாமதிக்க முடியாது தாமதித்தால் அவ்வளவுதான்,” என லக்னோ கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மகாநகர் இடைநிலைக் கல்லூரி நோக்கி அவசரமாக சென்றபடி ரீட்டா பாஜ்பாய் கூறினார். அந்த வாக்குச் சாவடியில்தான் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர் வாக்கு செலுத்தும் வாக்குச்சாவடி அல்ல அது.

அவர் வீட்டிலிருந்து கல்லூரி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டிஜிட்டல் தெர்மாமீட்டர், சானிடைசர் பாட்டில்கள் மற்றும் பல ஜோடி கையுறைகள், முகமூடிகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு காலை 5:30 மணியளவில் அவர் அந்த தூரத்தை நடந்து கடந்து கொண்டிருந்தார். பிப்ரவரி 23 அன்று, ஒன்பது மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுடன் சேர்ந்து நான்காவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் லக்னோ வாக்களிக்கவிருந்ததால், அது அவருக்கு மிகவும் மும்முரமான நாளாக இருந்தது.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆனால் ஒரு பெரிய பெண்கள் குழுவிற்கு இன்னும் முடிவுகள் வரவில்லை. அம்முடிவுகள் மிகவும் துன்பகரமானதாக இருக்கலாம் என்பதும் ஒருவேளை அவை உயிருக்கே ஆபத்தாகவும் இருக்கலாம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விளைந்த அபாயங்களிலிருந்து எழும் முடிவுகள் அவை.

163,407 சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் , வாக்குச் சாவடிகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எந்த முறையான எழுத்துப்பூர்வ உத்தரவும் கிடையாது. வாக்குச் சாவடிகளில்சுகாதாரத்தைப் பேணுவதே அவர்களின் பணியாக இருந்தபோதும் அவர்களுக்கென தனிப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு பெரிய அளவில் எதுவும் இல்லை. அதாவது, 2021 ஏப்ரல்-மே மாதங்களில் கோவிட் தொற்றால் 2,000 பள்ளி ஆசிரியர்கள் இறந்ததைக் கண்ட மாநிலம் அது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில், ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக, தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்ற உத்தரவிடப்பட்டிருந்தனர்.

Reeta Bajpai spraying sanitiser on a voter's hands while on duty in Lucknow Cantonment assembly constituency on February 23
PHOTO • Jigyasa Mishra

பிப்ரவரி 23 அன்று லக்னோ கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியில் பணியில் இருந்தபோது வாக்காளர் ஒருவரின் கைகளில் சானிடைசரை தெளிக்கும் ரீட்டா பாஜ்பாய்

உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பங்கள், இழப்பீடு கேட்டு போராடி, பலருக்கு ரூ. 30 லட்சம் ரூபாய் கிடைத்தது. சுகாதாரச் செயற்பாட்டாளர்களிடம் எழுத்துப்பூர்வ ஆவணங்கள், உத்தரவுகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை. தண்டனைப் பணியாக அவர்கள் கருதும் அப்பணிகளுக்கு எதிராக அவர்கள் ஒரு வழக்குக் கூட போட முடியாது.

கோவிட் தொற்று வந்துவிடுமோ என்பதே அவர்களின் பயம். மேலும் அவர்கள் முந்தைய வாக்களிப்பு கட்டங்களில் பணிபுரிந்த சக செயற்பாட்டாளர்களுக்கு தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிக்கத் தொடங்கவில்லை.

*****

லக்னோவில் உள்ள 1,300 க்கும் மேற்பட்ட சுகாதாரச் செயற்பாட்டாளர்கள், அவர்கள் தெரிவிக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் (PHC) மூலம் வெறும் வாய்மொழி உத்தரவுகள் மற்றும் கடமை அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகு வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாநில சுகாதாரத் துறை தேர்தல் பணிகளை ஒதுக்கியது.

ரீட்டா கூறுகையில், "சந்தன் நகர் சுகாதார மையத்துக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். வாக்களிக்கும் நாளில் சுத்தப்படுத்தும் வேலைகளை பார்த்துக் கொள்வதற்கான வாய்வழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கிருமிநாசினிகளை தெளிக்கவும், [வாக்காளர்களின்] வெப்பநிலையை சரிபார்க்கவும், முகமூடிகளை விநியோகிக்கவும் எங்களிடம் கூறப்பட்டது,” என்கிறார்.

பிப்ரவரி 10 முதல் மார்ச் 7, 2022 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது உத்தரப் பிரதேசம் முழுவதும் சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்கு இதேப் போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டன.

லக்னோவில் உள்ள சர்வாங்கீன் விகாஸ் வாக்குச் சாவடியில் பணியாற்றிய 36 வயது பூஜா சாஹு கூறுகையில், “சுகாதாரப் பணியாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகள் ஆகியவை கொண்ட ஒரு தாள் எந்தக் கையெழுத்தும் இல்லாமல் இருந்தது,” என்கிறார்.

"சொல்லுங்கள், வாக்குச் சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டாலோ அல்லது எங்களுக்கு ஏதாவது நேர்ந்தாலோ, யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?" என பிப்ரவரி 27 அன்று தேர்தல் பணியில் இருந்த சித்ரகூட் நகரில் 41 வயது சாந்தி தேவி கேட்கிறார். “எழுத்துப்பூர்வக் கடிதம் இல்லாமல் நாங்கள் பணிக்கு அழைக்கப்பட்டதை எப்படி நிரூபிக்க முடியும்? அனைத்து  சுகாதாரச் செயற்பாட்டாளர்களும் குரல் எழுப்ப பயப்படுகிறார்கள். அதிகம் பேசினால் எனக்கும் ஆபத்துதான். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் தனியாக வந்து செல்ல வேண்டியிருந்தது.”

ASHA worker Shanti Devi in Chitrakoot: "Without a written letter how can we prove we were called on duty?"
PHOTO • Jigyasa Mishra

சித்ரகூட்டில் சுகாதாரச் செயற்பாட்டாளர் சாந்தி தேவி: ‘எழுத்துப்பூர்வமானக் கடிதம் இல்லாமல் நாங்கள் பணிக்கு அழைக்கப்பட்டதை எப்படி நிரூபிக்க முடியும்?’

எனினும் சித்ரகூட்டில் உள்ள தனது வாக்குச் சாவடியில் மற்ற ஊழியர்கள் வருகைப்பதிவில் கையெழுத்திட்டதைப் பார்த்ததும் சாந்தி தேவி கேள்வி கேட்டார். சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் எங்காவது கையெழுத்திட வேண்டுமா என்று தலைமை அதிகாரியிடம் கேட்டார். "ஆனால் எங்களைப் பார்த்து சிரித்தனர்," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படவில்லை. எனவே நாங்கள் கையெழுத்திடுவதன் மூலம் எங்கள் இருப்பைக் குறிக்கத் தேவையில்லை என்று அவர்கள் கூறினர்." சித்ரக்கூட் மாவட்டத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட சுகாதாரச் செயற்பாட்டாளர்களில் சாந்தியும் ஒருவர்.

சித்ரகூட்டில் உள்ள மற்றொரு சுகாதாரப் பணியாளரான 39 வயது கலாவந்தி தனது பணி உத்தரவுக் கடிதத்தைக் கேட்டபோது ஆரம்பச் சுகாதார மைய ஊழியர் ஒருவரால் அமைதிப்படுத்தப்பட்டார். “என் கணவர் அரசு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக இருக்கிறார். அவருடையப் பணி உத்தரவுக் கடிதத்தை நான் ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன்,” என்று அவர் கூறுகிறார். “எனக்கும் பணி ஒதுக்கப்பட்டதால் நானும் ஒன்றைப் பெறுவேன் என்று நினைத்தேன். ஆனால் சுகாதார மையத்திலிருந்து சுத்திகரிப்புப் பொருட்களைப் பெற்ற பிறகு, எழுத்துப்பூர்வ உத்தரவைப் பற்றி நான் கேட்டபோது, ​​பிரபாரி லகான் கார்க் [மையப் பொறுப்பாளர்] மற்றும் ரோஹித் [ஒன்றிய சமூக செயல்முறை மேலாளர்] ஆகியோர் சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்குக் கடிதம் கிடைக்காது என்றும் பணிக்கு வர வாய்மொழி உத்தரவுகளே போதும் என்றும் கூறினர்.”

தேர்தல் நாளில் கலவந்தி 12 மணி நேரம் வாக்குச்சாவடியில் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்கே கடமை முடிந்ததும் அவரின் வேலை முடிவதில்லை. ஆரம்பச் சுகாதார மையத்தின் உதவிச் செவிலியரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. "நான் வீடு திரும்பிய பிறகு, உதவிச் செவிலியர் என்னை அழைத்து இறுதிக்கெடு கொடுத்தார். அடுத்த நாள் இறுதிக்குள் ஒரு முழு கிராமத்தின் கணக்கெடுப்பை முடித்து அறிக்கையை நான் சமர்ப்பிக்க வேண்டுமென அவர் கூறினார்.”

கலவந்தி வாக்குச் சாவடிக்கு வருவது பணியாகக் கருதப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், அதற்கான ஊதியமும் கொடுக்கப்படவில்லை. சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் எவருக்கும் எந்த ஊதியமும் கொடுக்கப்படவில்லை. "அவர்கள் எங்களுக்கு கடிதங்கள் கொடுக்க மாட்டார்கள்," என்று உத்தரப்பிரதேச சுகாதாரச் செய்ற்பாட்டாளர்களுக்கான தொழிற்சங்கத்தின் தலைவர் வீணா குப்தா கூறுகிறார். “கடிதத்துடன்தான் ஊக்கத்தொகையும் வரும். தேர்தல் பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சில ஊக்கத்தொகைகள் கிடைத்தன. ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் எவரும் பெறவில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தை பயணத்திற்கு செலவழித்தனர். சுருக்கமாக, சுரண்டப்பட்டனர்,” என அவர் மேலும் கூறுகிறார்.

இது முதல் முறை அல்ல.

The Mahanagar Public Inter College polling station in Lucknow where Reeta Bajpai was posted to maintain sanitation and hygiene on election day. She worked for 10 hours that day
PHOTO • Jigyasa Mishra

லக்னோவில் உள்ள மகாநகர் பொதுக் கல்லூரி வாக்குச்சாவடியில் தேர்தல் நாளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க ரீட்டா பாஜ்பாய் நியமிக்கப்பட்டார். அன்று 10 மணி நேரம் வேலை செய்தார் அவர்

*****

தேசிய சுகாதாரத் திட்டத்தில் குறைந்த ஊதியம் மற்றும் அதிகச் சுமையுடன் உள்ள முக்கிய தொழிலாளர்கள் சுகாதாரச் செயற்பாட்டாளர்கள்தான். ஆனால் 2005 முதல் பொது சுகாதார உள்கட்டமைப்பில் முன்னணியில் அவர்கள்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் புறக்கணிப்புக்கும் அக்கறையின்மைக்கும் சில நேரங்களில் அநீதிக்கும் ஆளாகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவியபோது, சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் வீட்டுக்கு வீடு சோதனைகளை நடத்துதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்காணித்தல், தொற்றுநோய் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்தல், நோயாளிகள் கோவிட்-19 பராமரிப்பு மற்றும் தடுப்பூசிகளை அணுக உதவுதல் மற்றும் தரவுகளை சேகரித்து அவற்றை PHC களுக்குப் புகாரளித்தல் முதலிய முக்கியமானப் பணிகளைச் குறைந்த பாதுகாப்புகளுடன் செய்ய வைக்கப்பட்டனர். ஊதியமும் தாமதமாகவே கிடைத்தது. கூடுதல் மணிநேரம் அவர்கள் வேலை செய்தார்கள். ஒரு நாளைக்கு 8-14 மணிநேரம் களத்தில் இருந்தனர். வார இறுதி நாட்களில் கூட சராசரியாக 25-50 வீடுகளுக்குச் சென்றனர்.

“கடந்த ஆண்டிலிருந்து [2020] எங்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. ஆனால் கூடுதல் வேலைக்கு நாங்கள் பணம் பெற வேண்டும் அல்லவா?" என்று சித்ரக்கூட்டில் உள்ள 32 வயது சுகாதாரச் செயற்பாட்டாளர் ரத்னா கேட்கிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 2,200 ஒவ்வொரு மாதமும் கௌரவ ஊதியம் வழங்கப்படுகிறது. பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் கீழ் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளுடன், அவர்கள் மொத்தம் ரூ. 5,300 பெறுகின்றனர்.

மார்ச் 2020-ன் பிற்பகுதியில், கோவிட்-19 அவசரகால தொகுப்பின் கீழ், ஒன்றிய அரசாங்கம் மாதாந்திர ‘கோவிட் ஊக்கத்தொகை’யாக மாதந்தோறும் சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்கு ரூ.1,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது ஜனவரி முதல் ஜூன் 2020 வரை செலுத்தப்பட வேண்டிய ஊக்கத் தொகை. அவசரகாலத் தொகுப்பு நீட்டிக்கப்பட்ட மார்ச் 2021 வரை ஊக்கத்தொகையும் தொடர்ந்தது.

கடந்த நிதியாண்டில் செலவழிக்கப்படாத நிதியுடன் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2021 வரை கோவிட் ஊக்கத்தொகையை செலுத்துமாறு மே மாதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டது . ஆனால் கோவிட் அவசரகாலத் தொகுப்பின் இரண்டாம் கட்டமான ஜூலை 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் உட்பட்ட முன்னணி ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

ஏப்ரல் 2020-ல் சுகாதாரச் செயற்பாட்டாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் அவர்களின் கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பில் , 16 மாநிலங்களில் 11 மாநிலங்கள் கோவிட் ஊக்கத்தொகையை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. 52 சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சுகாதாரச் செயற்பாட்டாளர் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடனான நேர்காணல்களின் அடிப்படையிலான அறிக்கை, “ஒரு மாநிலம் கூட ஊரடங்கு காலத்தில் இடைநிறுத்தப்பட்ட தடுப்பூசி போன்ற சுகாதார நடவடிக்கைகளுக்கு வழக்கமான ஊக்கத்தொகையை செலுத்தவில்லை,” எனக் குறிப்பிடுகிறது.

Health workers from primary health centres in UP were put on election duty across UP. They had to spray disinfectants, collect the voters' phones, check their temperature and distribute masks
PHOTO • Jigyasa Mishra
Health workers from primary health centres in UP were put on election duty across UP. They had to spray disinfectants, collect the voters' phones, check their temperature and distribute masks
PHOTO • Jigyasa Mishra

உத்தரப்பிரதேசத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கிருமிநாசினிகளை தெளிக்கவும், வாக்காளர்களின் தொலைபேசிகளை சேகரிக்கவும், வெப்பநிலையை சரிபார்க்கவும் முகக்கவசங்களை விநியோகிக்கவும் வேண்டியிருந்தது

தொற்றுநோய் தொடர்பான அனைத்துக் கூடுதல் பணிகளையும் செய்த பிறகும், ஜூன் 2021 முதல் ரத்னா 'கோவிட் ஊக்கத்தொகை' பெறவில்லை. "கடந்த ஆண்டு [2021] ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எனக்கு வெறும் 2,000 ரூபாய்தான் கிடைத்தது," என்று அவர் கூறுகிறார். " எவ்வளவு பணம் கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்." ரத்னாவின் செலுத்தப்படாத ஊக்கத் தொகை குறைந்தபட்சம் 4,000 ரூபாய் வரும். உதவிச் செவிலியரால் கையொப்பமிடப்பட்ட அவரது கட்டண ரசீதுகளைப் பெற்ற பிறகும் இப்படி ஒரு வேலை பாக்கி இருக்கிறது.

"எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் நாங்கள் செய்துள்ளோம் எனப் புரியவைத்து எங்கள் கட்டண ரசீதுகளில் கையொப்பமிட உதவிச் செவிலியரை நம்ப வைப்பது எவ்வளவு சவாலானது என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள்." என்று ரத்னா கூறுகிறார். "சில அவசரநிலை அல்லது உடல்நலப் பிரச்சினை காரணமாக என்னால் ஒரு நாளில் வேலை செய்ய முடியவில்லை என்றால், 'நீங்கள் இந்த மாதம் நன்றாக வேலை செய்யவில்லை' என்று கூறி, அந்த மாதத்திற்கான 1,000 ரூபாய் ஊக்கத்தொகையை கழித்துக்கொள்வார். ஒரு சுகாதாரச் செயற்பாட்டாளர் மீத நாட்களுக்கு வேலை செய்யத் தகுதியானவராக இருந்தாலும் இதுவே நிலை,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

நாடு முழுவதும், 10 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரச் செயற்பாட்டாளர்கள், தங்களின் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர் முறைக்கு எதிராகவும், தங்கள் பணிக்கான அங்கீகாரத்திற்காகவும் போராடி வருகின்றனர். நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அறிக்கை கூறுவது போல்: "அவர்கள் [சுகாதாரச் செயற்பாட்டாளர்கள்] குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை. மேலும் வழக்கமான அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறுச் சலுகைகள் மற்றும் பிற திட்டங்களை அவர்கள் அனுபவிப்பதில்லை."

கோவிட்-19 காலத்தில் அவர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு உத்திகளில் ஒரு முக்கிய இணைப்பாக செயல்பட்டபோது, ​​​​மருத்துவ கவனிப்பு மற்றும் சிகிச்சையின் பற்றாக்குறையால் அடிக்கடி அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் தொற்றுக்காலத்தில் தங்கள் பணிகளை செய்யும்போது இறந்தனர்.

23 வயதான சூரஜ் கங்வார் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் பிற்பகுதியில் [2021] வீட்டில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தொலைபேசி அழைப்பு வந்தது,” என்கிறார். சூரஜ் கங்வார் தனது தாயார் சாந்தி தேவியை மே 2021-ல் இழப்பதற்கு முந்தைய நாட்களை நினைவு கூருகிறார். “அதைப் பற்றி கேள்விப்பட்டவுடன் டெல்லியில் இருந்து பரேலிக்கு விரைந்தேன். அவர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தார்.” பொறியியலாளரான சூரஜ் டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இப்போது சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர் அவர்தான்.

An ASHA worker in Chitrakoot, Chunki Devi, at her home with the dustbin, sanitisers and PPE kits she had to carry to the polling booth
PHOTO • Jigyasa Mishra

சித்ரக்கூட்டில் உள்ள சுகாதாரப் பணியாளரான சுங்கி தேவி, வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய குப்பைத் தொட்டி, சானிடைசர்கள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளுடன் தனது வீட்டில்

“நான் சென்றடைந்தபோது அம்மாவுக்கு கோவிட்-19 உறுதியாகவில்லை. ஏப்ரல் 29 அன்று RT-PCR செய்த பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அப்போதுதான் மருத்துவமனை அவரை வைத்திருக்க மறுத்தது. நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. மே 14 அன்று அவரது உடல்நிலை மோசமடைந்தபோது, ​​நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தோம். ஆனால் அவர் வழியிலேயே எங்களை விட்டுச் சென்றுவிட்டார்,” என்கிறார் கங்வார். தொற்று உறுதி செய்யப்பட்ட பல முன்னணி ஊழியர்களில் அவரது தாயும் ஒருவர். ஆனால் பொது சுகாதார சேவைகளிடமிருந்து எந்த சிகிச்சையும் கிடைக்காமல் இறந்தார்.

ஜூலை 23, 2021 அன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், ஏப்ரல் 2021 வரை கொரோனா வைரஸால் 109 சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளனர் என்று கூறினார். அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது உத்தரப்பிரதேசத்தில் இறப்பு இல்லை என்று கூறியது. ஆனால் சுகாதாரச் செயற்பாட்டாளர்களின் கோவிட்-19 தொடர்பான இறப்புகளின் மொத்த எண்ணிக்கை பற்றிய நம்பகமானத் தரவு எதுவும் பொதுவில் கிடைக்கவில்லை. ஒன்றிய அரசு அறிவித்திருந்த பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பின் கீழ் 50 லட்ச ரூபாய் மார்ச் 30, 2020 முதல், முன்னணி ஊழியர்களின் கோவிட் தொடர்பான இறப்புகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் பலரைச் சென்றடையவில்லை.

"என் அம்மா ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் இருக்க மாட்டார். சுகாதாரச் செயற்பாட்டாளராக தன் கடமையை விடாமுயற்சியுடன் செய்வார்" என்கிறார் சூரஜ். "தொற்றுக்காலம் முழுவதும் அவர் வேலை பார்த்தார். ஆனால் இப்போது அவர் போய்விட்டார். சுகாதாரத் துறை பொருட்படுத்தவே இல்லை. இழப்பீடு பெற முடியாது என்று கூறுகிறார்கள்.”

சூரஜ் மற்றும் அவரது தந்தை பரேலியில் உள்ள நவாப்கஞ்ச் சமூக சுகாதார மையத்தில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி (CMO) மற்றும் பிற ஊழியர்களை சந்தித்து உதவி கோரியுள்ளனர். ஆனால் பலனில்லை. அவரது தாயின் RT-PCR அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை எங்களிடம் காட்டி, அவர் கூறுகிறார்: “தலைமை மருத்துவ அதிகாரி, கோவிட்-19 நோயால் இறந்ததாகக் குறிப்பிடப்பட்ட மருத்துவமனையின் இறப்புச் சான்றிதழைப் பெற்றிருந்தால் மட்டுமே இழப்பீட்டிற்கு நாங்கள் தகுதியுடையவர்கள் என்று கூறினார். எந்த மருத்துவமனையும் அவரை அனுமதிக்காததால், அதை எங்கிருந்து பெறுவது? தேவைப்படுபவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளும் இதுபோன்ற போலித் திட்டங்களால் என்ன பயன்?”

*****

கடந்த ஆண்டு நடந்த பயங்கரங்களின் நினைவுகள் மங்குவதற்கு முன்பே, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 160,000-க்கும் மேற்பட்ட சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளைச் செய்ய ஆளாக்கப்பட்டனர். சங்கத் தலைவர் வீணா குப்தா இதை ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கையாக பார்க்கிறார். "நீங்கள் என்னைக் கேட்டால், இந்தப் பெண்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் சிக்கிக் கொண்டு, வாக்களிக்காமல் இருப்பதை  உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த 12 மணி நேரப் பணியை அரசு கட்டாயப்படுத்தியிருக்கலாம். ஏனெனில் சுகாதாரச் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைகளை அவர்கள் புறக்கணித்த விதம் மற்றும் எங்களின் கவுரவ ஊதியத்தை அவர்கள் செலுத்தும் விதம் ஆகியவற்றால் எங்களின்  வாக்குகள் அவர்களுக்கு எதிராகச் செல்லக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.”

ரீட்டா வாக்களிப்பதில் உறுதியாக இருந்தார். "நான் மாலை நான்கு மணிக்கு எனது வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளேன்," என்று அவர் அப்போது PARIயிடம் கூறியிருந்தார். “ஆனால் நான் இல்லாத நேரத்தில், வேலையைச் செய்ய இன்னொரு சுகாதாரச் செயற்பாட்டாளர் இங்கு வரும்போதுதான் என்னால் செல்ல முடியும். அந்த வாக்குச்சாவடி இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது,” என்று அவர் கூறினார். மற்ற அனைத்து சுகாதாரச் செயற்பாட்டாளர்களைப் போலவே, தனக்கு பதிலாக வேலை செய்வதற்கென ஓர் ஆளை அவர்தான் தயார் செய்ய வேண்டும். சுகாதாரத் துறையின் எந்த உதவியும் செய்யாது.

காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்கு வரச் சொல்லிவிட்டு, சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்குக் காலை உணவு அல்லது மதிய உணவு வழங்கப்படவில்லை. "பணியில் இருந்த ஊழியர்களுக்காக மதிய உணவுப் பொட்டலங்கள் வருவதை நான் பார்த்தேன். அவர்கள் அதை என் முன்னால் வைத்திருந்தார்கள். ஆனால் எனக்கு அது எதுவும் கிடைக்கவில்லை" என்று லக்னோவின் அலம்பாக் பகுதியில் உள்ள சுகாதாரப் பணியாளரான பூஜா PARI-டம் கூறினார்.

Messages from ASHAs in Lucknow asking for a lunch break as they weren't given any food at their duty station
PHOTO • Jigyasa Mishra
Veena Gupta, president of UP ASHA union, says the ASHAs were not given an allowance either, and had to spend their own money on travel
PHOTO • Jigyasa Mishra

இடப்புறம்: தங்கள் பணிநிலையத்தில் உணவு எதுவும் வழங்கப்படாததால் மதிய உணவு இடைவேளை கேட்டு லக்னோவில் உள்ள சுகாதாரச் செயற்பாட்டாளர்களிடமிருந்து  வந்த குறுந்தகவல்கள். வலது: சுகாதாரச் செயற்பாட்டாளருக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என உத்தரப்பிரதேச சுகாதாரச் செயற்பாட்டாளர் தொழிற்சங்கத்தின் தலைவர் வீணா குப்தா கூறுகிறார்

பணியில் இருந்த மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் மதியம் 3 மணியளவில் மதிய உணவுப் பொட்டலங்கள் கிடைத்தாலும், சுகாதாரச் செயற்பாட்டாளர்களுக்கு மதிய உணவு கொடுக்கப்படவில்லை. வீட்டிற்குச் சென்று சாப்பிட இடைவேளையும் இல்லை. “நாங்கள் அனைவரும் எப்படி மதிய உணவு இடைவேளை கேட்கிறோம் என்பதை நீங்களே பாருங்கள். அவர்கள் எங்களை வீட்டிற்குச் செல்லவும், சாப்பிடவும், திரும்பி வரவும் அனுமதிக்கலாம். எங்கள் வீடுகள் வெகு தொலைவில் இல்லை. ஒவ்வொருப் பணியாளரும் தங்கள் வீட்டைச் சுற்றியே பணி பெறுகிறார்கள்,” என்று பூஜா கூறினார். அலம்பாக்கில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து செய்திகளை எங்களுக்குக் காட்டினார்.

அன்னு சவுத்ரி, ஒரு பொது செவிலியர். வாக்குச்சாவடியில் ரீட்டாவுடன் இருந்தவர். காவல்துறை மற்றும் பணியில் இருந்த மற்ற அரசு ஊழியர்கள் உணவுப் பொட்டலங்கள் பெற்று தங்களுக்குக் கொடுக்கப்படாததால் கோபமடைந்தார். "இது எவ்வளவு அநியாயம்?" என அவர் முறையிட்டார். "நாங்கள் யாரும் இல்லாதவர்கள் போல் நடத்தப்படுகிறோம். பணியில் உள்ள மற்றவர்களுக்கு செய்யப்படும் வசதிகளை நாங்கள் ஏன் பெறுவதில்லை?"

சித்ரக்கூடில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் தேர்தல் பணிகளின் பட்டியலில் மற்றொரு பணியைச் சேர்த்துள்ளனர்: குப்பைகளை அகற்றுவது. மாவட்டத்தில் உள்ள பல சுகாதாரப் பணியாளர்களில் ஷிவானி குஷ்வாஹாவும் ஒருவர். ஆரம்பச் சுகாதார மையத்துக்கு அழைக்கப்பட்டு, சுத்தப்படுத்தும் பொருட்களுடன் பெரிய குப்பைத் தொட்டியும் வழங்கப்பட்டது. வாக்குச் சாவடியில் கோவிட் உறுதி செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு நாங்கள் கொடுக்க வேண்டிய பாதுகாப்பு உடைகளையும் அவர்கள் எங்களுக்கு வழங்கினர். மேலும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எங்கள் வாக்குச்சாவடியில் நாள் முழுவதும் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டோம். அதன் பிறகு, நாங்கள் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தப்படாத பாதுகாப்பு உடைகளுடன் குப்பைத் தொட்டியை குடாஹா துணை மையத்தில் வைப்போம்.” இதன் பொருள் அவர்கள் பிரதான சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நிரப்பப்பட்ட குப்பைத் தொட்டிகளுடன் நடந்து சென்று வளாகத்தை அடைந்தனர் என்பதுதான்.

அவர் பேசும்போது குஷ்வாஹாவின் குரல் எதிர்ப்புணர்வில் நடுங்கியது. "நாங்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். எனவே நாங்கள் அதைச் செய்வோம். ஆனால் மற்ற ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்தது போல் எங்களுக்கும் முறையான கடிதத்தையாவது கொடுங்கள். மேலும் தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்களுக்கு செலுத்தும் ஊதியம் ஏன் எங்களுக்குக் கிடைக்கவில்லை? நாங்கள் என்ன, ஊதியமற்றப் பணியாளர்களா என்ன?"

ஜிக்யாசா மிஷ்ரா பொது சுகாதாரம் மற்றும் சமூக உரிமைகள் பற்றியச் செய்திகளை தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீன இதழியல் மானியத்தின் வழியாக அளிக்கிறார். இந்தக் கட்டுரையின் உள்ளட்டக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை தன்னுடைய அதிகாரத்தை செலுத்தவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Jigyasa Mishra

ಉತ್ತರ ಪ್ರದೇಶದ ಚಿತ್ರಕೂಟ ಮೂಲದ ಜಿಗ್ಯಾಸ ಮಿಶ್ರಾ ಸ್ವತಂತ್ರ ಪತ್ರಕರ್ತೆಯಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Jigyasa Mishra
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan