எதற்காக அதிகம் கவலைப்படுவது என ராஜிவ் குமார் ஓஜாவிற்குத் தெரியவில்லை: நல்ல பயிர்களை அறுவடை செய்வதா அல்லது அவற்றை விற்பதா. “உங்களுக்கு நகைப்பாக இருக்கலாம், பயிர் காலத்தில் நல்ல அறுவடை பெற்ற பிறகு தான் எனக்கு பிரச்னையே தொடங்கியது,” என்று பீகாரின் வடக்கு மத்திய கிராமமான சவுமுக்கில் தனது பாழடைந்த வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்தபடி அவர் சொன்னார்.

47 வயதாகும் ஓஜா முசாஃபர்பூர் மாவட்டம் போச்சஹா தாலுக்காவில் உள்ள கிராமத்தில் தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் சம்பா பருவத்தில் (ஜூன்-நவம்பர்) நெல் பயிரிடுகிறார், குறுவை காலத்தில் (டிசம்பர்-மார்ச்) கோதுமை, சோளம் பயிரிடுகிறார். “நல்ல அறுவடைக்கு பருவநிலை, நீர், உழைப்பு மற்றும் பல விஷயங்கள் இணைந்து செயலாற்ற வேண்டும்,” என்று என்னிடம் 2020 நவம்பரில் அவர் தெரிவித்தார். “இதற்கு பிறகும் சந்தை இல்லை. என் விளைபொருட்களை கிராமத்தில் உள்ள தரகரிடம், அவர் நிர்ணயிக்கும் விலைக்கு விற்க வேண்டி உள்ளது.” அந்த தரகர் தரகுத் தொகையைப் பெற்றுக்கொண்டு மொத்த வர்த்தகரிடம் விற்றுவிடுவார்.

2019ஆம் ஆண்டு ஓஜா ஒரு குவிண்டால் நெல்லை ரூ.1,100 விற்றுள்ளார். இது அப்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) ரூ.1,815 விடவும் 39 சதவீதம் குறைவாகும். “எனக்கு வேறு வாய்ப்பில்லை. தரகர்கள் எப்போதும் குறைந்த விலைக்கே வாங்குகின்றனர், எங்களால் [விற்பதற்கு] வேறு எங்கும் செல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே லாபம் கிடைப்பதும் கடினமாகிறது,” என்கிறார் அவர்.

பீகாரில் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட ஒரு விவசாயி ரூ.20,000 முதலீடு செய்ய வேண்டும். “ஒரு ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்து 20-25 குவிண்டால் பெறுகிறேன். குவிண்டால் 1,100 ரூபாய் என்றால், ஆறுமாத கடின உழைப்பிற்குப் பிறகு, லாபம் [ஏக்கருக்கு] 2,000-7,000 வரைதான் கிடைக்கும். இது நல்ல தொழில் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

குறிப்பாக 2006ஆம் ஆண்டு பீகார் வேளாண் உற்பத்தி சந்தை சட்டம், 1960ஐ மாநில அரசு திரும்பப் பெற்றதால் ஓஜாவைப் போன்று பீகாரில் உள்ள பல விவசாயிகளும் தங்களின் பயிர்களுக்கு நல்ல விலை பெறுவதற்கு போராடி வருகின்றனர். அதனுடன் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் (ஏபிஎம்சி) மண்டி முறையும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

Rajiv Kumar Ojha's five-acre farmland in Chaumukh village
PHOTO • Parth M.N.

அவற்றில் சவ்முக் கிராமத்தில் உள்ள ராஜிவ் குமார் ஓஜாவின் ஐந்து ஏக்கர் விளைநிலம்

2020 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய வேளாண் சட்டங்களை இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. புதிய சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளிலும், நாடு முழுவதிலும், 2020 நவம்பர் 26 முதல் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில்  விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 என்பது மாநிலங்களின் ஏபிஎம்சி சட்டங்களை மீறுகிறது. இச்சட்டம் மாநில அரசுகளின் ஒழுங்குமுறையான சந்தை கிடங்குகளுக்கு (ஏபிஎம்சி) வெளியே வர்த்தகம் செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கிறது. இது வேளாண் உற்பத்தியை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வழிவகுக்கிறது. வேளாண்மைத் துறையை சுதந்திரப்படுத்துகிறது. இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் விளைபொருட்களை விற்க வழிவகுக்கும் என இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே நோக்கத்துடன்தான் பீகார் அரசும் ஏபிஎம்சி சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் அப்போது முதல் 14 ஆண்டுகளாக விவசாயிகளின் நிலைமை மோசமடைந்து வருகிறது. மாதம் ரூ.5,000க்கும் குறைவாக வருவாய் ஈட்டும் வேளாண் குடிகள் என்று தேசிய மாதிரி ஆய்வு (70ஆவது சுற்று) குறிப்பிடும் இந்தியாவின் ஆறு மாநிலங்களில் பீகாரும் ஒன்று.

“இந்தியாவில் புதிய சந்தை சார்ந்த புரட்சிக்கு பீகார் வழிவகுக்கும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் சொல்கின்றனர், ” என்கிறார் சண்டிகரைச் சேர்ந்த வேளாண் பொருளாதார வல்லுநர் தேவிந்தர் ஷர்மா. “தனியார் முதலீடு விவசாயிகளுக்கு நல்ல விலையை உறுதி செய்யும் என்பது அவர்களின் விவாதம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.”

பீகாரின் வேளாண் அமைச்சக அதிகாரியும் இச்சூழலை உறுதிபடுத்தியுள்ளார். “துரதிஷ்டவசமாக 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு [வேளாண் துறையில்] வந்த தனியார் முதலீடு குறித்த துல்லியமான தரவுகள் தங்களிடம் இல்லை என்கின்றனர். ஆனால் ஏபிஎம்சிக்களை நீக்கியதால் பீகாரில் தனிப்பட்ட முறையில் ஊக்கப்படுத்துவது குறிப்பிடத்தக்க அளவிற்கு வந்துள்ளது,” என்கின்றார் அந்த அதிகாரி. “உதாரணத்திற்கு பூர்ணியாவில் உள்ள விவசாயிகள் வீட்டுவாசலுக்கே வரும் [வெளிமாநில] ஆட்களுக்கு தங்களது வாழை உற்பத்தியை விற்கின்றனர்.”

பீகாரில் நெல், கோதுமை, சோளம், பருப்பு வகைகள், கடுகு, வாழை உள்ளிட்ட 90 சதவீத பயிர்கள் கிராமத்திற்குள் உள்ள இடைதரகர்கள், வியாபாரிகளிடம் விற்கப்படுவதாக தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில்(NCAER) 2019 வெளியிட்ட அறிக்கையை https://www.ncaer.org/publication_details.php?pID=311 குறிப்பிட்டு இந்தியாவில் பீகார் மாநிலத்திற்கான வேளாண் கண்டறிதல் பற்றிய ஆய்வு தெரிவிக்கிறது. “2006ஆம் ஆண்டில் ஏபிஎம்சி சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பீகாரில் புதிய சந்தைகளை உருவாக்குதல், நடப்பில் உள்ளவற்றின் வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் தனியார் முதலீடு எதுவும் நடைபெறவில்லை, இதனால் சந்தையின் அடர்த்தி குறைந்துள்ளது,” என்கிறது அறிக்கை.

A locked Primary Agriculture Credit Society (PACS) centre in Khapura, where farmers can sell their paddy. Procurement by the PACS centres has been low in Bihar
PHOTO • Parth M.N.
A locked Primary Agriculture Credit Society (PACS) centre in Khapura, where farmers can sell their paddy. Procurement by the PACS centres has been low in Bihar
PHOTO • Parth M.N.

காப்புராவில் பூட்டப்பட்டுள்ள ஆரம்ப வேளாண்மை கடன் சங்கத்தின் (பிஏசிஎஸ்) மையம். இங்குதான் விவசாயிகள் நெல் விற்றனர். பீகாரில் பிஏசிஎஸ் மையங்களின் கொள்முதலும் குறைவாகவே உள்ளன.

பெரு வணிகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதை தடுக்கவே விவசாயிகள், வர்த்தகர்கள், வேளாண் கூட்டுறவுகள் போன்ற நிறுவனங்களால் ஏபிஎம்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டன. “அவற்றை நீக்கியதற்கு பதிலாக மேம்படுத்தி இருக்க வேண்டும், அவற்றின் குழுமத்தை விரிவுப்படுத்தி விவசாயிகளிடம் அதிகளவில் கொள்முதல் செய்திருக்க வேண்டும்,” என்கிறார் ஏபிஎம்சிகளின் வல்லுநரான ஐஐஎம் அகமதாபாத்தில் உள்ள வேளாண் நிர்வாக மையத்தின் தலைவரான பேராசிரியர் சுக்பால் சிங். “மாற்று ஏற்பாடுகளின்றி அவற்றை ஒழித்தது நிலைமையை இன்னும் மோசமடையவே செய்துள்ளது.”

ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்வதன் விளைவுகள் பீகாரில் பெரும் தாக்கத்தை உண்டாக்க கூடியவையாக உள்ளன. NCAER அறிக்கைபடி, முதன்மை பயிர்களின் விலை 2006ஆம் ஆண்டிற்கு பிறகு அதிகரித்துள்ளது, விலையின் ஏற்ற இறக்கமும் அதிகரித்துள்ளது. “விலையில் ஏற்றத்தாழ்வை நாங்கள் விரும்பவில்லை, நிலைத்தன்மை வேண்டும். இல்லாவிடில் நாங்கள் அவசர கதியில் விற்க வேண்டி உள்ளது,” என்கிறார் ஓஜா. புதிய வேளாண் சட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தவுடன் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளும் இதே ஏற்ற இறக்கத்தை பொறுத்துக் கொள்ள நேரிடும் என தேவிந்தர் ஷர்மா அஞ்சுகிறார்.

இடைத்தரகர்களிடம் விற்பதோடு, ஏபிஎம்சி சட்டம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து பீகாரில் அமைக்கப்பட்ட மாநில ஆரம்ப வேளாண் கடன் குழுவில் (பிஏசிஎஸ்) நெல் விற்கிறார் ஓஜா. இங்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்த ஆதரவு விலையில் கொள்முதல் நடைபெறுகிறது. NCAER 2019 ஆய்வுப்படி பீகாரில் பிஏசிஎஸ்களால் கொள்முதல் செய்தது மிகவும் குறைவு எனவும், 91.7 சதவீத நெல் இடைதரகர்களிடம் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிப்ரவரி வரை பிஏசிஎஸ் கொள்முதல் சென்றது,” என்கிறார் ஓஜா. “நான் நவம்பரில் அறுவடை செய்தேன். டிசம்பரில் தொடங்கும் குறுவை சாகுபடிக்கான ஏற்பாட்டிற்கு எனக்கு பணம் தேவை. ஒருவேளை நெல்லை சேமித்து வைத்திருந்து மழை பெய்துவிட்டால் ஒட்டுமொத்த அறுவடையும் சேதமடைந்துவிடும்.” போதிய சேமிப்பு வசதிகள் இல்லாததால் ஓஜாவினால் காத்திருந்து பிஏசிஎஸ்களில் விற்க முடிவதில்லை. “இதில் அதிகளவு ஆபத்து நிறைந்துள்ளது.”

பட்னா மாவட்ட நீதிபதி குமார் ரவி பேசுகையில், பிஏசிஎஸ் மையங்கள் நவம்பரில் கொள்முதலை தொடங்கின என்றார். “குளிர் காலம் என்பதால் சேகரிக்கப்பட்ட நெல் ஈரப்பதம் அடைந்துள்ளது. தங்கள் அறுவடையை உலர்வாக வைத்திருக்கும் விவசாயிகள் பிஏசிஎஸ்களில் விற்கின்றனர். இதனை மாநில கூட்டுறவுத் துறையும், மாவட்ட நீதிமன்றமும் கண்காணிக்கின்றன,” என்றார் அவர்.

மாவட்ட நீதிமன்றம் வாங்கும் அளவிற்கான இலக்கு நிர்ணயித்துள்ளது என்கிறார் சவுமுக் கிராமத்தில் உள்ள பிஏசிஎஸ் மைய தலைவர் அஜய் மிஷ்ரா. “ஒவ்வொரு பிஏசிஎஸ்களுக்கும் என வைக்கப்பட்டுள்ள அளவை மீற முடியாது. கடந்த பருவத்தில் [2019-20],  எங்கள் கொள்முதல் அளவு 1,700 குவிண்டால்,” என்கிறார் அவர். “[சவுமுக்] கிராம பஞ்சாயத்தில் 20,000 குவிண்டால் உற்பத்தி செய்யப்படுகிறது. எனக்கு நெருக்கடியான சூழல்தான். திருப்பி அனுப்புவதால் விவசாயிகள் என்னை திட்டுகின்றனர். என்னால் எதுவும் செய்ய முடியாது.”

Small and marginal farmers end up dealing with agents, says Ajay Mishra, chairman of the PACS centre in Chaumukh
PHOTO • Parth M.N.

சிறு, குறு விவசாயிகள் எப்போதும் இடைத்தரகர்களிடம் தான் வியாபாரம் செய்கின்றனர் என்கிறார் சவுமுக்கில் உள்ள பிஏசிஎஸ் மையத் தலைவர் அஜய் மிஷ்ரா

NCAER 2015-16 ஆய்வு அறிக்கைப்படி பீகாரில் கிட்டதட்ட 97 சதவீத விவசாயிகள் சிறு, குறு நிலம் வைத்துள்ளவர்கள்தான். இந்தியாவின் சராசரியான 86.21 சதவீதத்தைவிட இது மிகவும் அதிகம். “சிறு, குறு விவசாயிகள் இடைத்தரகர்களிடமும், வசதி படைத்த விவசாயிகள் பிஏசிஎஸ்களிலும் தங்களது அறுவடையை விற்கின்றனர்,” என்கிறார் மிஷ்ரா.

பிஏசிஎஸ்கள் நெல் கொள்முதல் மட்டுமே செய்வதால் கோதுமை, சோளம் போன்ற அறுவடைப் பொருட்களை இடைத்தரகர்களிடம் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவான விலைக்கு ஓஜா விற்கிறார். “நான்கு கிலோ சோளம் விற்றால் ஒரு கிலோ உருளைக்கிழங்கு என்னால் வாங்க முடியும்,” என்கிறார் அவர். “இந்தாண்டு [2020], பொதுமுடக்கத்தினால் ஒரு குவிண்டால் சோளத்தை ரூ.1000க்கு விற்றேன். கடந்தாண்டு ரூ.2,200ஆக இருந்தது. இடைத்தரகர்களின் தயவை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்.”


குறைந்தபட்ச விலை கொடுப்பதோடு எடை காட்டும் கருவியிலும் சதிசெய்து ஏமாற்றுவதாக கூறுகிறார் பட்னாவின் பலிகஞ்ச் தாலுக்கா காப்பூரா கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள 40 வயதாகும் விவசாயி கமல் ஷர்மா. “ஒவ்வொரு குவிண்டாலுக்கும் அவர் ஐந்து கிலோ திருடி விடுகிறார். ஒரே பொருளுக்கு இடைதரகர்கள், ஏபிஎம்சிக்களின் எடை இயந்திரங்களுக்கும் இடையே எப்போதும் வித்தியாசம் காட்டுகிறது,” என்கிறார் அவர்.

“இடைத்தரகர் ஏமாற்றினால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு விவசாயி செல்ல முடியும். ஆனால் எத்தனை விவசாயிகளால் அச்செலவை ஏற்க முடியும்?” என கேட்கிறார் சிஎம்ஏவின் சிங். ஏபிஎம்சிகளில் செயல்படும் வர்த்தகர்கள் உரிமம் பெற்றவர்கள், அவர்களின் செயல்களுக்கு பதில் சொல்ல வேண்டும், என்கிறார் அவர். “ஒழுங்குமுறையின்றி உங்களால் வேளாண் சந்தையை நடத்த முடியாது. அதுவே அனைவருக்கும் நல்லது. இந்த ஒழுங்குமுறைக்காகத் தான் ஏபிஎம்சிஎஸ் கொண்டுவரப்பட்டன.”

இடைத்தரகர்களின் இந்த கறாரான வியாபாரத்தால் பலரும் பீகாரிலிருந்து வெளியேறி எங்காவது கூலிவேலைக்கு செல்ல வைக்கப்படுகின்றனர், என்கிறார் கமல் ஷர்மா. “நல்ல கூலி கொடுத்து வேலைக்கு வைக்கும் அளவிற்கு நாங்கள் சம்பாதிப்பதில்லை. அதனால்தான் அவர்கள் பஞ்சாப், ஹரியானா செல்கின்றனர்.”

Left: Kamal Sharma in his farm in Khapura. Right: Vishwa Anand says farmers from Bihar migrate to work because they can't sell their crops at MSP
PHOTO • Parth M.N.
Left: Kamal Sharma in his farm in Khapura. Right: Vishwa Anand says farmers from Bihar migrate to work because they can't sell their crops at MSP
PHOTO • Parth M.N.

இடது: காப்பூராவில் உள்ள தனது நிலத்தில் கமல் ஷர்மா. வலது: குறைந்தபட்ச ஆதார விலைக்கு தங்களின் பயிர்களை விற்க முடியாததால் பீகார் விவசாயிகள் புலம்பெயர்வதாக சொல்கிறார் விஷ்வா ஆனந்த்

பஞ்சாப், ஹரியானாவில் உற்பத்தியாகும் பெரும்பான்மையான கோதுமை, நெல் அம்மாநிலங்களின் அரசுகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. “அங்குள்ள விவசாயிகள் நல்ல விலையைப் பெறுவதால் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் தருகின்றனர்,” என விளக்குகிறார் சவுமுக்கைச் சேர்ந்த வேளாண் செயற்பாட்டாளர் விஷ்வா ஆனந்த். “பீகாரில் தொழிலாளர்கள் வேலை செய்வதில்லை என குற்றஞ்சாட்ட முடியாது. விவசாயிகளுக்கு தங்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்தால், இங்கிருந்து அவர்கள் புலம்பெயர மாட்டார்கள்.”

2020 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பீகாரின் பல மாவட்ட விவசாயிகளிடம் நான் பேசியபோது, குறைந்தபட்ச ஆதார விலையில் பயிர்களை கொள்முதல் செய்வதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதே கோரிக்கைதான் டெல்லிக்கு வெளியே போராடி வரும் விவசாயிகளிடமும் எதிரொலிக்கிறது.

பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதாலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் இந்த புதிய சட்டங்களை எதிர்க்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற பல ஆதரவு அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றனர். இந்திய சட்டப்பிரிவு 32ன்கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சட்டரீதியான உதவிக் கோரும் உரிமையை முடக்குவதால் இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

“[மத்திய] அரசு விலை நிர்ணயித்துவிட்டு, குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்க முடியாத விவசாயிகளின் நிலை குறித்து மறந்துவிடுகிறது. எம்எஸ்பிக்கு கீழே கொள்முதல் செய்பவர்கள் மீது அரசு ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது?” என கேட்கிறார் ஆனந்த். “வர்த்தகர்கள் ஏமாற்றினால் அவர்கள் எங்கே செல்வார்கள்?”

காப்பூராவில் கமல் ஷர்மா அவரது மனைவி பூனம் ஆகியோரிடம் வியாபாரி ஒருவரிடமிருந்து ரூ.2,500ஐ பெற 12 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். “எங்கள் நெல் பயிரை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான முன்தொகை என்று சொல்லப்பட்டது,” என்கிறார் கமல்.

“இப்போதும் அது எங்களுக்கு பெரிய தொகைதான். அப்போது இதைவிட பெரியதொகை. ஓர் உர பொட்டலத்திற்கு இன்றைய செலவில் ஐந்தில் ஒரு பங்கு செலவாகும்,” என்கிறார் பூனம். “இதுபோன்ற சம்பவங்கள் பீகாரில் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதில் நமக்கு ஆச்சரியம் ஏதுமில்லை.”

தமிழில்: சவிதா

Parth M.N.

2017 ರ 'ಪರಿ' ಫೆಲೋ ಆಗಿರುವ ಪಾರ್ಥ್ ಎಮ್. ಎನ್. ರವರು ವಿವಿಧ ಆನ್ಲೈನ್ ಪೋರ್ಟಲ್ ಗಳಲ್ಲಿ ಫ್ರೀಲಾನ್ಸರ್ ಆಗಿ ಕಾರ್ಯನಿರ್ವಹಿಸುತ್ತಿದ್ದಾರೆ. ಕ್ರಿಕೆಟ್ ಮತ್ತು ಪ್ರವಾಸ ಇವರ ಇತರ ಆಸಕ್ತಿಯ ಕ್ಷೇತ್ರಗಳು.

Other stories by Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha