“ஓ, நீங்கள் கொல்கத்தாவிலிருந்து வருகிறீர்களா?” என அவர் என்னை நிமிர்ந்து பார்த்து கண்கள் ஒளிரக் கேட்டார். “நானும் கொல்கத்தாவுக்கும் ஹவுராவுக்கும் சென்றிருக்கிறேன். பல முறை. ஒவ்வொரு தடவையும் வேலை தேடிச் சென்றிருக்கிறேன். சில நேரங்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சில நேரங்களில் கிடைத்ததில்லை. இறுதியில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.”

‘இங்கு’ என அவர் குறிப்பிடுவது கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இருக்கும் லடாக்கை. ஜார்கண்டின் வீட்டிலிருந்து 2500 கிலோமீட்டர் தொலைவில் ராஜு மர்மூ இருக்கிறார். மாலை ஆனதும் திடுமென வானிலை மாறும் இமயமலையின் பாலைவனத்தில் இருக்கும் கூடாரத்துக்கு வெளியே பரிச்சயமான நகரத்தின் நினைவுகளை ஓட்டிப் பார்க்கிறார். மின்சாரமின்றி, ராஜு மற்றும் சக புலம்பெயர் தொழிலாளரின் கூடாரங்களை சற்று நேரத்தில் இருள் ஆக்கிரமித்துவிடும்.

ஜார்கண்டின் தும்கா மாவட்டத்திலிருந்து - பிற தொழிலாளர்களைப் போலவே - 31 வயது ராஜூவும் நாட்டிலேயே உயரமான இடத்தில் சாலைகள் போடும் வேலை செய்வதற்காக வருவது வழக்கம். ”இது நான்காவது வருடம். போன வருடமும் நான் வந்திருக்கிறேன். என்ன செய்வது? என் கிராமத்தில் வேலைகள் இல்லை,” என்கிறார் அவர். ராஜூவும் அவரின் மாநிலத்தை சேர்ந்த ஓர் ஒன்பது பேரும் சாலை போடும் தளத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி சிறு கூடாரங்களில் வசிக்கின்றனர். 17,582 அடி உயரத்தில் இருக்கும் (கர்தோங் கிராமம் அருகே இருக்கும்) கர்துங் லாவிலிருந்து 10,000 அடி உயரத்தில் இருக்கும் நுப்ரா பள்ளத்தாக்கு வரை அவர்கள் கணவாய் கட்டும் பணி செய்து கொண்டிருக்கின்றனர்.

வரலாற்றின் வணிகம், மதம் மற்றும் கலாசாரம் ஆகிய விஷயங்களுக்கு முக்கியமாக இருந்த லடாக் பகுதி ஜார்கண்ட், சட்டீஸ்கர், பிகார், மத்தியப் பிரதேஷ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து புலம்பெயரும் தொழிலாளர்களின் மையமாக வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. லடாக்கின் புது நிர்வாக அந்தஸ்து, லடாக்குக்குள் சாலைகள் அமைக்கும் பணியில் தனியார் கட்டட நிறுவனங்களை அனுமதித்திருக்கிறது. யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம், எல்லைச் சாலை நிறுவனத்துடன் இணைந்து, வணிக மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுப்படுத்தி இருக்கிறது. இதனால் லடாக்குக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

அவர்களை சாலையோரங்களில் நீங்கள் பார்க்க முடியும். அவர்களின் குடும்பங்களுடன் சில நேரங்களில் தென்படுவார்கள். 11 x 8.5 அடி கூடாரத்தில் இருப்பார்கள். சாலை வேலைகள் முன்னோக்கி போகும்போது இக்கூடாரங்களும் நகர்த்தப்படும். ஒவ்வொரு கூடாரத்திலும் ஏகப்பட்ட பைகள், உடைமைகள், பாத்திரங்கள் முதலியவை இருக்கும். கிட்டத்தட்ட 10 பேர் வசிப்பார்கள். குளிர்தரையில் வெறும் ஒரு கம்பளம் விரித்து படுப்பார்கள். மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர். கடும் குளிருடன் போராடுகின்றனர். பெரும்பாலும் மிகக் குறைந்த தட்பவெப்பத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் பணிபுரிகின்றனர். கொடூரமான காலநிலை, உள்கட்டமைப்பு திட்டங்களில் இருக்கும் அதிகமான செலவு மற்றும் தரம் குறைந்த இயந்திரங்களால் தொழிலாளர்களே அதிக எடைகளை தூக்கி சுமந்து சாலைகளை அமைக்கின்றனர். இவை யாவும் உயரமான, ஆக்சிஜன் குறைவான மலைப்பரப்பில் நேர்கின்றன. ஆனால் இக்கடுமையான பணிக்கு கொடுக்கப்படும் ஊதியம், குடும்பத்தை நடத்துவதற்கு போதாத அளவில் இருக்கிறது.

PHOTO • Ritayan Mukherjee

கர்துங் லா கணவாய்க்கருகே ஜார்கண்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் கல் சுமக்கிறார். கொடூரமான காலநிலை, உள்கட்டமைப்புத் திட்டங்களில் இருக்கும் அதிகமான செலவு மற்றும் தரம் குறைந்த இயந்திரங்களால் தொழிலாளர்களே அதிக எடைகளை தூக்கிச் சுமந்து சாலைகளை அமைக்கின்றனர்

“22,000-லிருந்து 25,000 ரூபாய் வரை ஐந்தாறு மாதங்களில் என்னால் சேர்க்க முடியும். ஆறு பேர் கொண்டு குடும்பத்துக்கு அது போதாது,” என்கிறார் தும்காவிலிருந்து இங்கு வந்திருக்கும் அமீன் மர்மு. நாற்பது வயதுகளில் இருப்பவர் அவர். அவரைப் போன்ற தொழிலாளர்களுக்கு வேலையைப் பொறுத்து 450லிருந்து 700 ரூபாய் வரை நாட்கூலி கிடைக்கும். கர்துங் லாவில் நம்மிடம் பேசுகையில், 14 மற்றும் 10 வயதுகளில் மகன்களை பெற்றிருக்கும் அவர், இருவரின் படிப்பும் தொற்றால் தடைபட்டுவிட்டதாக வருத்தத்தில் இருந்தார். இணையவழிக் கல்வி வந்தபோது அவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் வாங்கிக் கொடுக்க அவரிடம் வசதி இல்லை. “என்னுடைய பகுதியில் வாழும் பெரும்பான்மையான குடும்பங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் வசதி கிடையாது. என்னுடைய மூத்த மகன் படிப்பதை நிறுத்திவிட்டான். என்னால் பணம் சேமிக்க முடிந்தால், என் இளைய மகனுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கிக் கொடுப்பேன். ஆனாலும் மாதந்தோறும் இணையக் கட்டணத்தை யார் கட்டுவது?” எனக் கேட்கிறார் அவர்.

அமீனின் வசிப்பிடத்துக்கு அருகே நான் சென்றபோது ஒரு தொழிலாளர்க் குழு சீட்டாடிக் கொண்டிருந்தது. “சார்.. நீங்களும் சீட்டாட வாருங்கள். இது ஞாயிற்றுக் கிழமை. எங்களுக்கு விடுமுறை,” என்கிறார் 32 வயது ஹமிது அன்சாரி. அவரும் ஜார்கண்டை சேர்ந்தவர்தான். அது நட்பு பாராட்டும் குழுவாக இருந்தது. ஒருவர் பேசத் தொடங்குகிறார்: “கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதால், ஜார்கண்ட் கோவிட்டால் எந்த அளவு பாதிப்புக்குள்ளானது என்பது உங்களுக்கு தெரியும். பல மரணங்கள். எண்ணற்றப் பலர் வேலைகளை இழந்தனர். கடந்த வருடத்தை சமாளிப்பது கஷ்டமாக இருந்தது. உணவுக்கே கஷ்டப்பட்டோம். எனவே இந்த வருடம் (2021) எந்த தாமதமும் செய்யாமல் இங்கு வந்து விட்டோம்.”

1990களிலிருந்து நான் லடாக்குக்கு கட்டுமானத் தொழிலாளியாக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த வருடம்தான் மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது,” என்கிறார் கனி மியா. ஜார்கண்ட் குழுவில் இருக்கும் அவருக்கு வயது 50களில் இருக்கும். ஜூன் 2020-ல் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது இங்கு வந்தார். “நாங்கள் வந்தபோது தனிமை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டோம். 15 நாட்களுக்கு பிறகு பணியில் நாங்கள் சேர்ந்தோம். ஆனால் அந்த இரண்டு வாரங்களும் மனதளவில் பயங்கரமாக இருந்தது.”

லெ டவுனுக்கு திரும்பும் வழியில் ஜார்கண்டை சேர்ந்த இன்னொரு இளைஞர் குழுவை நான் சந்தித்தேன். “தொழிலாளர்களுக்கு சமைப்பதற்காக நாங்கள் இங்கு வந்தோம்,” என்கின்றனர். “எங்களின் நாட்கூலி என்னவென கூட தெரியாது. எனினும் அங்கு (கிராமத்தில்) எதுவும் செய்யாமலிருப்பதற்கு இங்கு வேலை பார்ப்பது எவ்வளவோ மேல்.” அவர்களில் ஒவ்வொருக்கும் அவர்களின் குடும்பங்கள் பெருந்தொற்றுடன் போராடும் கதைகள் பல இருந்தபோதும் ஒரே ஆறுதலான விஷயம், அவர்கள் அனைவரும் முதல் தடுப்பூசி போட்டு விட்டார்கள் என்பதுதான். (காண: In Ladakh: a shot in the arm at 11,000 feet ).

PHOTO • Ritayan Mukherjee

லெவின் பிரதான சந்தைப் பகுதியில் தொழிலாளர்கள் ஒரு ஹோட்டலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். லடாக்கின் புது நிர்வாக அந்தஸ்து லடாக்குக்குள் தனியார் கட்டட நிறுவனங்களை அனுமதித்திருக்கிறது

PHOTO • Ritayan Mukherjee

லெ டவுனில் கடுமையான பணிகளிலிருந்து ஒரு தொழிலாளர் இடைவேளை எடுத்துக் கொள்கிறார்


PHOTO • Ritayan Mukherjee

இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையில் எல்லையில் பிரச்சினைகள் ஏற்பட்டதால் லடக்கில் உள்கட்டமைப்பு பணிகள் வேகம் பெற்றிருக்கின்றன. ஜார்கண்ட், சட்டீஸ்கர், பிகார் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல தொழிலாளர்கள் வேலைக்காக இங்கு புலம்பெயர்கின்றனர்


PHOTO • Ritayan Mukherjee

தீவிரமான காலநிலைகளுக்கு பெயர் பெற்ற பகுதி, லடாக். புழுக்கமான கோடைகால மதிய வேளைகளிலும் வானிலையும் உயரமும் சாலைகள் கட்டும் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கிறது


PHOTO • Ritayan Mukherjee

ஜார்கண்டிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்களின் குழு ஒன்று கர்துங் லாவுக்கு அருகே சாலை அமைக்கும் பணியில்

PHOTO • Ritayan Mukherjee

எல்லைச் சாலைகள் நிறுவன ஊழியர் ஒருவர் உடைந்த சாலையின் மேற்புறத்தை சுத்தப்படுத்துகிறார்


PHOTO • Ritayan Mukherjee

பழுதான ஒரு புல்டோசர் திறந்தவெளியில் இருக்கிறது. இந்த பரப்பு கொடூரமானது. வாகனங்களும் உபகரணங்களும் அடிக்கடி பழுதடைந்து விடும்


PHOTO • Ritayan Mukherjee

“விரிவடையும் ஒரு தனியார் நிறுவனத்துக்காக நான் இங்கு பணிபுரிகிறேன்,” என்கிறார் ஜார்கண்டை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர்


PHOTO • Ritayan Mukherjee

மின்சாரமோ போதுமான படுக்கைகளோ இல்லாத கூடாரங்கள்தான் ஆறு மாத ஒப்பந்தத்தில் வசிப்பிடமாக இருக்கிறது


PHOTO • Ritayan Mukherjee

ஜார்கண்டின் தும்கா மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளரான அமீன் மர்மு ஒரு ஞாயிறு மதியம் உணவு இடைவேளை எடுத்துக் கொள்கிறார். 14 மற்றும் 10 வயதுகளில் இருக்கும் இரு மகன்களின் கல்வி, தொற்றினால் தடைப்பட்டு விட்டதை எண்ணி வருந்துகிறார் அவர். இணைய வழிக் கல்வி படிப்பதற்கு, அவர்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் வாங்கிக் கொடுக்கும் வசதி அவருக்கு இல்லை


PHOTO • Ritayan Mukherjee

பணியிலிருந்து இடைவேளை எடுத்திருக்கும் ஒரு தொழிலாளர் தன் செல்ஃபோனில் ஒரு படம் பார்க்கிறார்


PHOTO • Ritayan Mukherjee

கர்துங் லாவின் ஒரு கூடாரத்துக்குள் புலம்பெயர் தொழிலாளர்கள் சீட்டாடிக் கொண்டிருக்கின்றனர். 50 வயதுகளில் இருக்கும் கனி மியா, 1990களிலிருந்து லடாக்குக்கு வந்து கொண்டிருக்கிறார்


PHOTO • Ritayan Mukherjee

“எங்களின் தினக்கூலி எவ்வளவு என எங்களுக்கு தெரியாது. தொழிலாளர்களுக்கு உணவு சமைப்பதற்காக இங்கு வந்தோம்,” என்கிறது இக்குழு


PHOTO • Ritayan Mukherjee

ஒரு உடைந்த கூடாரம் நீரின்றி, சாக்கடையின்றி, ஒரு கழிவறையாக பயன்படுத்தப்படுகிறது


PHOTO • Ritayan Mukherjee

ஜார்கண்ட் புலம்பெயர் தொழிலாளர்கள் கர்துங் லா கணவாயின் ஒரு சிறு உணவகத்தில் பணிபுரிகின்றனர். 17,582 அடி உயரத்திலிருக்கும் கர்துங் லாவிலிருந்து 10,000 அடி உயரத்திலிருக்கும் நுப்ரா பள்ளத்தாக்கு வரை கணவாய் கட்டுகின்றனர். சுற்றுலாக் காலத்தில் பலர் சாலையோர உணவகங்களில் பணிபுரிகின்றனர். இருக்கும் ஒரே வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமையும் இன்னொரு வேலைக்குச் சென்று பணமீட்டுகின்றனர்


PHOTO • Ritayan Mukherjee

8லிருந்து 10 தொழிலாளர்கள் வசிக்கும் சிறு அறைக்குள் இருக்கும் உடைமைகளும் துணிகளும்


PHOTO • Ritayan Mukherjee

நிம்மோ பகுதியில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்: ”எந்த வேலையும் செய்யாமல் கிராமத்திலிருப்பதற்கு இங்கு வேலை பார்ப்பது மேல்”


PHOTO • Ritayan Mukherjee

ஒரு குளிர் நாளில் ஒரு தனித்த தொழிலாளர் சுமதங் பகுதியில் வேலை பார்க்கிறார்


PHOTO • Ritayan Mukherjee

கிழக்கு லடக்கின் ஹான்லே கிராமத்தில் மின்சாரக் கம்பியை எந்த பாதுகாப்புமின்றி சரி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள்


PHOTO • Ritayan Mukherjee

ஹான்லே கிராமத்தில் ஒரு ஸ்கூட்டரின் மீது காய வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் உடைகளும் படுக்கைகளும்


தமிழில் : ராஜசங்கீதன்

Ritayan Mukherjee

ರಿತಯನ್ ಮುಖರ್ಜಿಯವರು ಕಲ್ಕತ್ತದ ಛಾಯಾಚಿತ್ರಗ್ರಾಹಕರಾಗಿದ್ದು, 2016 ರಲ್ಲಿ ‘ಪರಿ’ಯ ಫೆಲೋ ಆಗಿದ್ದವರು. ಟಿಬೆಟಿಯನ್ ಪ್ರಸ್ಥಭೂಮಿಯ ಗ್ರಾಮೀಣ ಅಲೆಮಾರಿಗಳ ಸಮುದಾಯದವನ್ನು ದಾಖಲಿಸುವ ದೀರ್ಘಕಾಲೀನ ಯೋಜನೆಯಲ್ಲಿ ಇವರು ಕೆಲಸವನ್ನು ನಿರ್ವಹಿಸುತ್ತಿದ್ದಾರೆ.

Other stories by Ritayan Mukherjee
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan