சந்திரிகா பெஹெராவுக்கு ஒன்பது வயது. அவர் பள்ளிப்படிப்பை நிறுத்தி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிறது. பரபங்கி கிராமத்தை சேர்ந்த அவரைப் போல் 1லிருந்து 5ம் வகுப்பு வரை படிக்க வேண்டிய மாணவர்கள் 19 பேர் அக்கிராமத்தில் படிக்காமல் இருக்கின்றனர். 2020-லிருந்து அவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்லவில்லை. தாய் பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதில்லை, என்கிறார் அவர்.

பரபங்கிக்கு பள்ளிக்கூடம் 2007ம் ஆண்டு வந்தது. ஆனால் ஒடிசா அரசாங்கத்தால் அது 2020ம் ஆண்டில் மூடப்பட்டது. தொடக்கப்பள்ளி படித்த மாணவர்கள் பெரும்பாலும் சந்திரிகாவை போல் கிராமத்தைச் சேர்ந்த சந்தால் மற்றும் முண்டா பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜமப்பசி கிராமப் பள்ளியில் சேரும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

“அவ்வளவு தூரத்தை குழந்தைகள் தினமும் நடக்க முடியாது. நீண்ட தூரம் நடக்கும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றனர்,” என்கிறார் சந்திரிகாவின் தாயான மமி பெஹெரா. “நாங்கள் ஏழைத் தொழிலாளர்கள். நாங்கள் சென்று வேலை தேடுவதா அல்லது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு கூட்டி வரும் வேலையை செய்வதா? எங்களின் பள்ளியை அதிகாரிகள் மீண்டும் திறக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

அதுவரை அவரது மகளை போல 6லிருந்து 10 வயது வரை இருக்கும் குழந்தைகள் படிப்பில்லாமல்தான் இருக்க வேண்டியிருக்கும் என வேறு வழியின்றி அவர் கூறுகிறார். ஜஜ்பூர் மாவட்டத்தின் தனகடி ஒன்றியத்திலுள்ள காட்டில் குழந்தை கடத்துபவர்கள் இருக்கலாமென 30 வயதுகளில் இருக்கும் அந்தத் தாய் அஞ்சுகிறார்.

மகன் ஜோகிக்கு, பயன்படுத்தப்பட்ட ஒரு சைக்கிளை கொடுத்து மமி சமாளித்தார். 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இன்னொரு பள்ளியில் ஜோகி 9ம் வகுப்பு படிக்கிறார். மூத்த மகள் மோனி 7ம் வகுப்பில் இருக்கிறார். ஜமப்பசியிலிருக்கும் பள்ளிக்கு அவர் நடந்து செல்ல வேண்டும். கடைசி குழந்தையான சந்திரிகா வீட்டிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.

“எங்களின் தலைமுறை உடல் ஒத்துழைத்த வரை நடமாடியது, ஏறியது, வேலை பார்த்தது. எங்கள் குழந்தைகளும் அப்படி ஆக வேண்டுமா?” என கேட்கிறார் மமி.

After the school in their village, Barabanki shut down, Mami (standing in a saree) kept her nine-year-old daughter, Chandrika Behera (left) at home as the new school is in another village, 3.5 km away.
PHOTO • M. Palani Kumar
Many children in primary school have dropped out
PHOTO • M. Palani Kumar

இடது: பரபங்கியிலிருந்த பள்ளி மூடப்பட்டதும், 3.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு படிக்க செல்ல வேண்டியிருந்ததால் மமி (புடவை கட்டியிருப்பவர்) தனது ஒன்பது வயது குழந்தையான சந்திரிகா பெஹெராவை (இடது) வீட்டிலேயே வைத்துக் கொண்டார். வலது: தொடக்கப் பள்ளியின் பல குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டன

பரபங்கியின் 87 குடும்பங்களில் பெரும்பான்மை பழங்குடி சமூகத்தை சார்ந்தவை. சிலர் சிறு நிலங்களில் பயிரிடுகின்றனர். ஆனால் பலரும் தினக்கூலி வேலைக்காக 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்டீல் ஆலை அல்லது சிமெண்ட் ஆலைக்கு செல்கின்றனர். சிலர் பஞ்சாலையிலும் மது புட்டி தயாரிக்கும் ஆலையிலும் வேலை பார்க்க தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

பரபங்கியின் பள்ளி மூடப்பட்டதால் மதிய வேளை சத்துணவு கிடைப்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏழைக்குடும்பங்களின் உணவுத் திட்டத்தில் மதிய உணவு திட்டம் அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. கிஷோர் பெஹெரா சொல்கையில், “பள்ளியில் சூடாக சமைக்கப்படும் மதிய உணவுக்கு பதிலாக உறுதியளிக்கப்பட்ட அரிசியோ பணமோ குறைந்தபட்சம் ஏழு மாதங்களுக்கு எனக்கு கிடைக்கவில்லை,” என்கிறார். உணவுக்கு பதிலாக சில குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் போடப்பட்டது. சில நேரங்களில் 3.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புதிய பள்ளி வளாகத்தில் விநியோகிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.

*****

பரனமந்திரா, அதே ஒன்றியத்தை சேர்ந்த பக்கத்து கிராமம் ஆகும். 2022ம் ஆண்டின் ஏப்ரல் மாத முதல் வாரம். கிராமத்திலிருந்து வரும் குறுகிய சாலையில் நண்பகலில் நிறைய நடமாட்டம் தெரிந்தது. திடீரென பெண்களும் ஆண்களும் அச்சாலையில் நிறைந்தனர். சம்பந்தமின்றி ஒரு மூதாட்டியும் தென்பட்டார். சில பதின்வயது இளைஞர்கள் சைக்கிளில் வந்தனர். யாரும் ஒன்றும் பேசவில்லை. தலையில் துண்டுகளும் புடவை முக்காடுகளும் போட்டு 42 டிகிரி செல்சியஸ் வெயிலை தடுத்துக் கொண்டிருந்தனர்,

பரனமந்திராவின் மக்கள் வெயிலை பொருட்படுத்தாமல் பள்ளியிலிருந்து  குழந்தைகளை அழைத்து வர 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கின்றனர்.

பரனமந்திராவில் வசிப்பவர் தீபக் மாலிக். சுகிந்தாவிலிருக்கும் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கிறார். சுகிந்தா பள்ளத்தாக்கு அதன் குரோமைட் கனிமத்துக்கு பெயர்பெற்ற இடம். தீபக் மாலிக்கை போலவே, பட்டியல் சாதியினர் அதிகம் வசிக்கும் கிராமத்தில் இருப்போர், நல்ல எதிர்காலத்துக்கு கல்விதான் வழி என்கிற விழிப்புணர்வு கொண்டிருக்கின்றனர். “எங்கள் கிராமத்திலுள்ள பெரும்பாலானோர் இரவு உணவு சாப்பிட வேண்டுமெனில் அன்றைய பகல் முழுக்க வேலை பார்க்க வேண்டும்,” என்கிறார் அவர். “எனவேதான் 2013-2014ல் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் பெரும் நிகழ்வாக எங்களுக்கு இருந்தது.”

2020ம் ஆண்டின் தொற்றுக்காலத்திலிருந்து பரனமந்திராவில் 1-5ம் வகுப்பு வரை படிக்க வேண்டிய 14 குழந்தைகளுக்கு தொடக்கப்பள்ளி இல்லை என்கிறார் சுஜாதா ராணி சமால். 25 குடும்பங்கள் கொண்ட கிராமத்தை சேர்ந்தவர் அவர். பதிலாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் 1.5 கிலோமீட்டர் பயணித்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து பக்கத்து கிராமமான சக்குவா கிராமத்துக்கு செல்ல வேண்டும்.

The school building in Puranamantira was shut down in 2020.
PHOTO • M. Palani Kumar
The construction of a school building in 2013-2014 was such a huge occasion for all of us,' says Deepak Malik (centre)
PHOTO • M. Palani Kumar

இடது: பரனமந்திராவின் பள்ளி 2020-ல் மூடப்பட்டுவிட்டது. வலது: ’ 2013-2014ல் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் பெரும் நிகழ்வாக எங்கள் அனைவருக்கும் இருந்தது,’ என்கிறார் தீபக் மாலிக் (நடுவே)

Parents and older siblings walking to pick up children from their new school in Chakua – a distance of 1.5 km from their homes in Puranamantira.
PHOTO • M. Palani Kumar
They cross a busy railway line while returning home with the children (right)
PHOTO • M. Palani Kumar

பெற்றோரும் உடன்பிறந்தோரும் சக்குவாவின் புதிய பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைக்க 1.5 கிலோமீட்டர் பரனமந்திராவிலிருந்து நடக்கின்றனர். குழந்தைகளுடன் வீடு திரும்புகையில் அவர்கள் ஒரு ரயில்பாதையையும் (வலது) கடக்கின்றனர்

ரயில்பாதை கொண்ட வழியை தவிர்க்க வேண்டுமெனில் மேம்பாலத்தின் மீதான சாலையை பயன்படுத்த வேண்டும். ஆனால் ஐந்து கிலோமீட்டர் அதிகரிக்கும். அதைவிட தூரம் குறைவான சாலை பழைய பள்ளிக்கு அருகே தொடங்கி நெளிந்து சில கோவில்களை ஊரின் எல்லையில் கடந்து ப்ரஹ்மனி ரயில் நிலையத்துக்கு செல்லும் ரயில்பாதையில் முடியும்.

ஒரு சரக்கு ரயில் அலறியபடி கடக்கிறது.

பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை சரக்கு ரயிலோ பயணிகள் ரயிலோ இந்திய ரயில்வேயின் ஹவ்ரா - சென்னை வழியிலுள்ள ப்ரஹ்மணியை கடக்கின்றன. ஆகவே பரனமந்திராவை சேர்ந்த எந்த குடும்பமும் தங்களின் குழந்தையை பள்ளிக்கு வளர்ந்தவரின் துணையின்றி அனுப்புவதில்லை.

அடுத்த ரயில் வருவதற்கு முன் அனைவரும் தாண்டும் தண்டவாளம் இன்னும் அதிர்ந்து கொண்டுதான் இருந்தது. சில குழந்தைகள் சறுக்கி, குதித்து பாதையை தாண்டின. சிறு குழந்தைகள் அவசரவசரமாக தூக்கி இறக்கப்பட்டு பாதையை கடந்தன. பிறரும் அவசரமாக கடந்தனர். கரடுமுரடான பாதங்கள், கூசும் பாதங்கள், வெயிலில் காய்ந்த பாதங்கள், வெற்றுப் பாதங்கள், சோர்வான பாதங்கள் போன்றவற்றுக்கு 25 நிமிடங்கள் பிடிக்கக் கூடும்.

*****

பரபங்கி மற்றும் பரனமந்திரா ஆகிய கிராமங்களின் தொடக்கப்பள்ளிகளுடன் சேர்த்து ஒடிசாவின் 9000 பள்ளிகள் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ‘மனித மூலதனத்தை மாற்றுவதற்கான நிலைத்து நீடிக்கும் செயல்பாடு (SATH)’ என்கிற ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ்  - பக்கத்து கிராமத்து பள்ளியுடன் ‘இணைக்கப்பட்டது’ அல்லது ‘ஒருங்கிணைக்கப்பட்டது’ என்பதே அதிகாரப்பூர்வ வார்த்தைகள் - மூடப்பட்டன

ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பள்ளிக் கல்வியை ‘சீர்திருத்த’வென 2017ம் ஆண்டில் அத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2018ம் ஆண்டின் ஊடக அறிவிக்கை யில், “மொத்த அரசுப் பள்ளிக் கல்வி முறையையும் உணர்திறன் கொண்டதாகவும் உத்வேகம் மற்றும் மாற்றம் ஆகியவற்றை குழந்தைக்கு அளிக்கக் கூடியதாகவும் ஆக்குவது”தான் இலக்கு என குறிப்பிடப்பட்டது.

பரபங்கி கிராமத்தில் பள்ளி மூடப்பட்டதால் நேர்ந்த ’மாற்றம்’ கொஞ்சம் வித்தியாசமானது. கிராமத்தில் ஒருவர் பட்டயப்படிப்பு முடித்திருக்கிறார். சிலர் 12ம் வகுப்பு முடித்திருக்கின்றனர். பலர் மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி இழந்திருக்கின்றனர். “இப்போது எங்களுக்கும் அதுவும் நடக்காது போலிருக்கிறது,” என்கிறார் இயங்காத பள்ளிகளின் மேலாண்மை கமிட்டி தலைவரான கிஷோர் பெஹெரா.

Children in class at the Chakua Upper Primary school.
PHOTO • M. Palani Kumar
Some of the older children in Barabanki, like Jhilli Dehuri (in blue), cycle 3.5 km to their new school in Jamupasi
PHOTO • M. Palani Kumar

இடது: சக்குவா பள்ளியில் குழந்தைகள். வலது: ஜில்லி தெகுரி (நீல நிறம்) போல பரபங்கியின் பல குழந்தைகள் 3.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜமப்பசியின் புதுப் பள்ளிக்கு சைக்கிளில் செல்கின்றனர்

பக்கத்து கிராமத்தில் உள்ள பள்ளியுடன் தொடக்கப் பள்ளிகள் ‘ஒருங்கிணைக்கப்படும்’ என்கிற சொற்றொடர், குறைந்த மாணவர்களை கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்பதற்கான நாசூக்கான சொல்லாடல் ஆகும். நிதி அயோக்கின் தலைவராக இருந்த அமிதாப் கண்ட் ஒருங்கிணைப்பை (அல்லது பள்ளி மூடலை) “தைரியமான புதுமையான சீர்திருத்தம்” என நவம்பர் 2021ம் ஆண்டு SATH அறிக்கை யில் விளக்கியிருந்தார்.

பரனமந்திராவின் இளம் சித்தார்த் மாலிக்கோ, சக்குவாவில் இருக்கும் புதுப்பள்ளிக்கு நீண்ட தூரம் பயணிப்பதால் ஏற்படும் கால் வலியை அப்படி விளக்கவில்லை. பல தருணங்களில் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் நேர்ந்திருப்பதாக அவரின் தந்தை தீபக் சொல்கிறார்.

இந்தியாவின் 11 லட்சம் அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் பள்ளிகளில் 50க்கும் குறைவான எண்ணிக்கை மாணவர்களும் 1.1 லட்சம் பள்ளிகளில் 20க்கும் குறைந்த எண்ணிக்கை மாணவர்களும்தான் இருக்கின்றனர். SATH-E அறிக்கை இவற்றை “துணை அளவு பள்ளிகள்” எனக் குறிப்பிட்டு அதன் குறைபாடுகளையும் பட்டியலிடுகிறது. பாடத்திட்டம் சார்ந்த திறனற்ற ஆசிரியர்கள், முதல்வர்கள் இல்லாதிருத்தல், மைதானம் இல்லாமை, வளாகச் சுவர்களோ நூலகங்களோ இல்லாமை போன்ற குறைபாடுகள்.

ஆனால் பரனமந்திராவை சேர்ந்த பெற்றோர், கூடுதல் வசதிகளை அவர்களின் பள்ளியிலேயே கட்டிக் கொள்ள முடியுமென சுட்டிக் காட்டுகின்றனர்.

சக்குவா பள்ளியில் நூலகம் இருக்கிறதா என எவருக்கும் தெரியாது. பழைய பள்ளியில் இல்லாத வளாகச் சுவர் புதுப் பள்ளியில் இருக்கிறது.

ஒடிசாவில் SATH-E திட்டத்தின் மூன்றாம் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் “ஒருங்கிணைக்கப்பட”வென 15,000 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

*****

It is 1 p.m. and Jhilli Dehuri, a Class 7 student and her schoolmate, are pushing their cycles home to Barabanki. She is often sick from the long and tiring journey, and so is not able to attend school regularly
PHOTO • M. Palani Kumar
It is 1 p.m. and Jhilli Dehuri, a Class 7 student and her schoolmate, are pushing their cycles home to Barabanki. She is often sick from the long and tiring journey, and so is not able to attend school regularly
PHOTO • M. Palani Kumar

பிற்பகல் 1 மணி. 7ம் வகுப்பு மாணவியான ஜில்லி தெகுரியும் அவரது பள்ளி நண்பரும் சைக்கிளை உருட்டியபடி பரபங்கியிலுள்ள வீட்டுக்கு செல்கின்றனர். நீண்ட, சோர்வளிக்கும் பயணத்தால் அவர் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். தொடர்ந்து பள்ளிக்கு செல்ல அவரால் முடியவில்லை

வீட்டை நெருங்கும்போது சைக்கிளை மேட்டில் தள்ள ஜில்லி தெகுரி சிரமப்படுகிறார். அவரது ஊரான பரபங்கியில் ஆரஞ்சு நிற தார்ப்பாய் ஒரு பெரிய மாமர நிழலில் விரிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி பிரச்சினை பற்றி பேச பெற்றோர் இங்கு கூடியிருக்கின்றனர். ஜில்லி களைத்துப் போய் வந்து சேருகிறார்.

பரபங்கியின் நடுநிலைப் பள்ளி மற்றும் மூத்த மாணவர்கள் (11 வயதிலிருந்து 15 வயது வரை) 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜமப்பசி பள்ளிக்கு செல்கின்றனர். உச்சிவெயிலில் நடப்பதும் சைக்கிளில் செல்வதும் அவர்களுக்கு சோர்வளிப்பதாக கிஷோர் பெஹெரா சொல்கிறார். அவரின் சகோதரரின் மகள் தொற்றுக்கு பிறகு 2022ம் ஆண்டில் 5ம் வகுப்பு தொடங்கினார். நீண்ட தூர நடைக்கு பழக்கப்பட்டிருக்காத அவர் முந்தைய வாரத்தில் வீட்டுக்கு நடந்து வருகையில் மயக்கம் போட்டிருக்கிறார். ஜமப்பசி சேர்ந்த யாரோ சிலர் அவரை மோட்டார் பைக்கில் வீட்டுக்கு கொண்டு வர வேண்டியிருந்தது.

“எங்கள் குழந்தைகளிடம் செல்பேசிகள் இல்லை,” என்கிறார் கிஷோர். “ நெருக்கடிகளில் பயன்படுத்தவென பெற்றோரின் தொலைபேசி எண்களை வாங்கி வைக்கும் வழக்கமும் பள்ளிகளில் இல்லை.”

ஜஜ்பூர் மாவட்டத்தின் சுகிந்தா மற்றும் தனகடி ஒன்றியங்களிலுள்ள தூரத்து கிராமங்களை சேர்ந்த பல பெற்றோர், நீண்ட தூரம் பள்ளிக்கு பயணிக்க வேண்டியதில் இருக்கும் ஆபத்துகளை குறித்து பேசியிருக்கின்றனர். அடர்ந்த காட்டுக்குள்ளோ வாகனங்கள் அதிகம் ஓடும் நெடுஞ்சாலையிலோ ரயில்பாதையை தாண்டியோ மலைச்சரிவிலோ, மழை வெள்ளம் நிரம்பி ஓடும் ஓடைகளின் வழிகளிலோ வெறிநாய்கள் இருக்கும் கிராமத்துப் பாதைகளிலோ, யானைக் கூட்டங்கள் வரும் வயல்வெளிகளின் வழியாகவோ அவர்கள் செல்ல வேண்டியிருக்கும்.

SATH-E அறிக்கை யின்படி பூகோள தகவல் அமைப்பின் (GIS) தரவுகள் கொண்டு புதுப் பள்ளிகளின் தூரத்தை மூடப்படும் பள்ளிகளிலிருந்து கண்டறிய முடியும். ஆனால் தெளிவான பூகோளவியல் தூரத் தரவுகளை சார்ந்த தெளிவான கணக்குகள், கள யதார்த்தத்தை காட்டவில்லை.

Geeta Malik (in the foreground) and other mothers speak about the dangers their children must face while travelling to reach school in Chakua.
PHOTO • M. Palani Kumar
From their village in Puranamantira, this alternate motorable road (right) increases the distance to Chakua to 4.5 km
PHOTO • M. Palani Kumar

இடது: கீதா மாலிக் (முன்னிருப்பவர்) மற்றும் பிற தாய்கள், சக்குவாவிலுள்ள பள்ளிக்கு செல்ல நீண்ட தூரம் பயணிப்பதில் தங்கள் குழந்தைகள் எதிர்நோக்கும் ஆபத்துகளை குறித்து பேசுகின்றனர். பரனமந்திராவிலுள்ள அவர்களின் கிராமத்திலிருந்து செல்லும் மாற்றுப் பாதை (வலது) சக்குவாவுக்கான தூரத்தை 4.5 கிலோமீட்டர் கூட்டுகிறது

ரயில் மற்றும் தூரம் ஆகியவற்றை தாண்டி தாய்களுக்கு வேறு சில கவலைகள் இருப்பதாக கூறுகிறார் முன்னாள் பஞ்சாயத்து வார்ட் உறுப்பினரான கீதா மாலிக். “சமீப காலங்களில் வானிலை நம்ப முடியாததாக இருக்கிறது. மழைக்காலத்தில் சில நேரம் காலையில் வெயில் அடிக்கிறது. மாலையில் பள்ளி மூடும் நேரத்தில் புயல் அடிக்கிறது. இத்தகைய சூழலில் நீங்கள் எப்படி உங்கள் குழந்தையை வேறொரு கிராமத்துக்கு அனுப்ப முடியும்?”

கீதாவுக்கு 11 மற்றும் 6 வயதுகளில் இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்தவர் 6ம் வகுப்பு படிக்கிறார். இளையவர் பள்ளிப்படிப்பை சமீபத்தில்தான் தொடங்கியிருக்கிறார். குடும்பத்தினர் குத்தகை விவசாயம் பார்க்கின்றனர். மகன்கள் நன்றாக வர வேண்டுமென அவர் விரும்புகிறார். அவர்கள் நன்றாக சம்பாதித்து சொந்த விவசாய நிலம் வாங்குவளவுக்கு வர வேண்டுமென்ற ஆசை அவர் கொண்டிருக்கிறார்.

மாமரத்துக்கடியில் கூடிய எல்லா பெற்றோரும் கிராமப்பள்ளி மூடப்பட்ட பிறகு குழந்தைகள் படிப்பை நிறுத்தினார்கள் அல்லது பள்ளிக்கு தொடர்ந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர் என்கிற முடிவை எட்டினர். சிலர் மாதத்தில் 15 நாட்கள் வரை கூட பள்ளிக்கு போக முடியாமல் இருந்தனர்.

பரனமந்திராவில் பள்ளி மூடப்பட்டதும் 6 வயதுக்கும் குறைந்த குழந்தைகளுக்காக இருந்த அங்கன்வாடியும் பள்ளி வளாகத்திலிருந்து இடம்பெயர்த்தப்பட்டு தற்போது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

*****

கிராமப்பள்ளி பலருக்கு வளர்ச்சியின் அடையாளம்; சாத்தியங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட ஆசைகளுக்கான அடையாளம்.

மாதவ் மாலிக் 6ம் வகுப்பு வரை படித்த ஒரு தினக் கூலி. 2014ம் ஆண்டில் பரனமந்திராவில் பள்ளி வந்ததும், மகன்கள் மனோஜ் மற்றும் தேபஷிஷ் ஆகியோருக்கு நல்ல எதிர்காலம் இருக்குமென்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறுகிறார். “எங்களின் பள்ளியை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டோம். ஏனெனில் எங்கள் நம்பிக்கையின் சின்னம் அது.”

தற்போது மூடப்பட்டிருக்கும் அரசு தொடக்கப் பள்ளியின் வகுப்பறைகள் சுத்தமாக இருக்கின்றன.சுவர்களில் வெள்ளை மற்றும் நீல நிற வண்ணங்கள் பூசப்பட்டிருக்கின்றன. ஒடியா எழுத்து, எண்கள் மற்றும் படங்கள் கொண்ட பதாகைகளால் நிறைந்திருக்கிறது. ஒரு சுவரில் கரும்பலகை வரையப்பட்டிருக்கிறது. வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, பள்ளியை புனித இடமாக கிராமவாசிகள் பாவித்து பிரார்த்தனைக் கூடமாக பயன்படுத்தினர். ஒரு வகுப்பறை தற்போது கூடுவதற்கான அறையாகவும் கீர்த்தனைகள் பாடப்பெறும் அறையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. தெய்வத்தின் படத்துக்கு பின் இருக்கும் சுவரில் பித்தளைப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

Students of Chakua Upper Primary School.
PHOTO • M. Palani Kumar
Madhav Malik returning home from school with his sons, Debashish and Manoj
PHOTO • M. Palani Kumar

இடது சக்குவாவின் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள். வலது: மாதவ் மாலிக் பள்ளியிலிருந்து மகன்கள் தேபாசிஷ் மற்றும் மனோஜ் ஆகியோருடன் வீடு திரும்புகிறார்

பள்ளியை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டுமென்பதிலும் பரனமந்திரா மக்கள் உறுதியாக இருக்கின்றனர். கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் ட்யூஷன் ஏற்பாடு செய்திருக்கின்றனர். 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்திலிருந்து ஓர் ஆசிரியர் சைக்கிளில் வந்து ட்யூஷன் எடுக்கிறார். தீபக் சொல்கையில், மழைநாட்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து பயணிக்க முடியாமல் ட்யூஷன் வகுப்புகள் தடைபட்டுவிடக் கூடாது என்பதால் அவரோ அல்லது கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவரோ சென்று ஆசிரியரை மோட்டார் பைக்கில் அழைத்து வருவார்களென கூறுகிறார். ட்யூஷன் வகுப்புகள் பழைய பள்ளியில் நடக்கின்றன. கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடும்பமும் ஆசிரியருக்கு 250லிருந்து 400 ரூபாய் வரை ஒவ்வொரு மாதத்துக்கும் கட்டணமாக கொடுக்கிறது.

“கிட்டத்தட்ட எல்லா வகை கற்றல்களும் இங்கு ட்யூஷனில் நடக்கும்,” என்கிறார் தீபக்.

வெளியே முழுமையாக பூத்திருக்கும் பலாஷ் மரத்தின் நிழலில், கிராமவாசிகள் பள்ளி மூடலை குறித்து தொடர்ந்து கலந்துரையாடுகின்றனர். ப்ரஹ்மனி வெள்ளமெடுத்தால் பரனமந்திராவுக்கு வருவது கஷ்டமாகி விடும். அவசர ஊர்திகள் வர முடியாமலும் மின்சாரமும் இல்லாமலும் மருத்துவ நெருக்கடிகளை கிராமவாசிகள் சந்தித்திருக்கின்றனர்.

”பள்ளிகள் மூடப்படுவது நாம் பின்னடைகிறோம் என்பதற்கான சமிக்ஞை போல் தெரிகிறது. நிலைமை மோசமாகும் போலத் தோன்றுகிறது,” என்கிறார் மாதவ்.

SATH-E திட்டத்தில் ஒன்றிய அரசுடன் இயங்கும் சர்வதேச அமைப்பான பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப் (BCG) மேம்பட்ட கற்றல் விளைவுகளை கொண்டு வந்திருக்கும் “ கல்வித்துறை மாற்றத்துக்கான திட்டம் ” என இச்செயல்பாட்டை குறிப்பிடுகிறது.

ஆனால் ஜஜ்பூரின் எல்லா கிராமங்களிலும் ஒடிசாவின் பிற பகுதிகளிலும் கூட, பள்ளி மூடல்களால் கல்வி பெறுவதே பெரும் சவாலாக மாறியிருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.

Surjaprakash Naik and Om Dehuri (both in white shirts) are from Gunduchipasi where the school was shut in 2020. They now walk to the neighbouring village of Kharadi to attend primary school.
PHOTO • M. Palani Kumar
Students of Gunduchipasi outside their old school building
PHOTO • M. Palani Kumar

இடது: சுர்ஜபிரகாஷ் நாயக்கும் ஓம் தெகுரியும் (வெள்ளை சட்டைகளில்) 2020ம் ஆண்டு பள்ளி மூடப்பட்ட கண்டுச்சிப்பசியை சேர்ந்தவர்கள். அவர்கள் அருகாமை கிராமமான காரடியிலிருக்கும் தொடக்கப் பள்ளிக்கு செல்ல நடந்து கொண்டிருக்கின்றனர். வலது: கண்டுச்சிப்பசி மாணவர்கள் அவர்களின் பழைய பள்ளிக் கட்டடத்துக்கு வெளியே

கண்டுச்சிப்பசி கிராமத்தில் 1954ம் ஆண்டிலேயே பள்ளிக்கூடம் வந்துவிட்டது. சுகிந்தா ஒன்றியத்தின் காரடி மலைக்காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த கிராமத்தில் சபர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். மாநிலத்தில் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கும் சமூகம் அவர்கள்.

அவர்களின் முப்பத்து இரண்டு குழந்தைகள் உள்ளுர் அரசு தொடக்கப் பள்ளி மூடும் வரை அங்கு படித்து வந்தார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, குழந்தைகள் பக்கத்து கிராமமான காரடிக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. காட்டு வழியாக நடந்தால் ஒரு கிலோமீட்டர் தூரம்தான். மாற்றாக ஒரு பிரதானச் சாலையும் இருக்கிறது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு ஆபத்தான வழி அது.

வருகை குறைந்ததற்கு காரணமாக குழந்தைகளின் பாதுகாப்பு இருந்ததாக பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர்.

2ம் வகுப்பு படிக்கும் ஓம் தெகுரியும் 1ம் வகுப்பு படிக்கும் சுர்ஜாபிரகாஷ் நாயக்கும் ஒன்றாக பள்ளிக்கு நடந்து செல்வதாக கூறுகின்றனர். பிளாஸ்டிக் குடுவைகளில் நீர் எடுத்து செல்கின்றனர். ஆனால் தின்பண்டங்களோ அவற்றை வாங்குவதற்கான காசோ அவர்களிடம் இல்லை. 3ம் வகுப்பு படிக்கும் ராணி பாரிக் சொல்கையில், பள்ளிக்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகும் என்றும் அதற்கும் காரணம் அவர் மெதுவாக நடப்பதும் நண்பர்கள் வர காத்திருப்பதும்தான் என்றும் கூறுகிறார்.

அறுபது வருடங்களாக இருந்த பள்ளியை மூடிவிட்டு குழந்தைகளை காட்டுவழியாக பக்கத்து கிராமத்திலிருக்கும் பள்ளிக்கு அனுப்புவது எப்படி சரியாக இருக்குமென தனக்கு புரியவில்லை என்கிறார் ராணியின் பாட்டியான பகோதி பாரிக். “நாய்களும் பாம்புகளும் சில நேரங்களில் கரடியும் கூட இருக்கும். உங்கள் நகரத்தில் இருக்கும் பெற்றோர் பள்ளிக்கு செல்ல இது ஒரு பாதுகாப்பான வழி என நினைப்பாரா?” என அவர் கேட்கிறார்.

7ம் 8ம் வகுப்பு குழந்தைகள், சிறு குழந்தைகளை அங்கு கூட்டி சென்று அழைத்து வரும் பொறுப்பை ஏற்றிருக்கின்றனர். 7ம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீ பெஹெரா, இரண்டு தங்கைகளான பூமிகாவையும் ஓம் தெகுரியையும் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார். “அவர்கள் நாங்கள் சொல்வதை எப்போதும் கேட்பதில்லை. அவர்கள் ஓடினால் ஒவ்வொருவரின் பின்னால் ஓடுவதும் சுலபம் கிடையாது,” என்கிறார் அவர்.

மமினா பிரதானின் குழந்தைகள் - 7ம் வகுப்பு படிக்கும் ராஜேஷ், 5ம் வகுப்பு படிக்கும் லிஜா - புதுப் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். “குழந்தைகள் ஒரு மணி நேரம் நடக்கின்றனர். எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?,” எனக் கேட்கிறார் செங்கற்களால் கட்டப்பட்டு கூரை வேயப்பட்டிருக்கும் வீட்டில் அமர்ந்திருக்கும் இந்த தினக்கூலி தொழிலாளர். அவரும் அவரது கணவர் மகந்தோவும் பிற மக்களின் விவசாய நிலங்களில் வேலை பார்க்கின்றனர். விவசாயமற்ற காலங்களில் வேறு வேலைகள் தேடுகின்றனர்.

Mamina and Mahanto Pradhan in their home in Gunduchipasi. Their son Rajesh is in Class 7 and attends the school in Kharadi.
PHOTO • M. Palani Kumar
‘Our children [from Gunduchipasi] are made to sit at the back of the classroom [in the new school],’ says Golakchandra Pradhan, a retired teacher
PHOTO • M. Palani Kumar

இடது: மமினா மற்றும் மகந்தோ பிரதான் கண்டுச்சிப்பசியிலுள்ள அவர்களின் வீட்டில். அவர்களது மகன் ராஜேஷ் 7ம் வகுப்பு படிக்கிறார். காரடியிலுள்ள பள்ளிக்கு செல்கிறார். வலது: எங்களின் (கண்டுச்சிப்பசி) குழந்தைகளை புதுப் பள்ளியின் வகுப்பறையில் பின்னால் அமர வைக்கின்றனர்,” என்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியரான கோலக்சந்திர பிரதான்

Eleven-year-old Sachin (right) fell into a lake once and almost drowned on the way to school
PHOTO • M. Palani Kumar

பதினொரு வயது சச்சின் (வலது) பள்ளிக்கு செல்லும்போது ஒருமுறை ஏரிக்குள் விழுந்து கிட்டத்தட்ட மூழ்கி விட்டார்

கண்டுச்சிப்பசி பள்ளியில் வழங்கப்படும் கல்வியின் தரம் நன்றாக இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். “எங்கள் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இங்கு தனிப்பட்ட கவனம் கொடுக்கின்றனர். புதுப் பள்ளியில் எங்கள் குழந்தைகளை வகுப்பறைகளில் பின்னால் அமர வைக்கப்படுகின்றனர்,” எனச் சொல்கிறார் கிராமத்தின் தலைவரான 68 வயது கோலக்சந்திர பிரதான்.

சுகிந்தா ஒன்றியத்தில் இருக்கும் இன்னொரு கிராமமான சந்தர்பூரில் தொடக்கப்பள்ளி 2019ம் ஆண்டில் மூடப்பட்டுவிட்டது. குழந்தைகள் தற்போது 1.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜமப்பசியின் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். ஒரு வெறி நாய் விரட்டி தப்பிக்க முயன்று பதினொரு வயது சச்சின் மாலிக் ஒருமுறை ஏரியில் விழுந்தார். “2021ம் ஆண்டின் பிற்பகுதியில் அது நடந்தது,” என்கிறார் சச்சினின் அண்ணனான 21 வயது சவுரவ். 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் துபுரியிலுள்ள ஸ்டீல் ஆலையில் பணிபுரிகிறார் அவர். “இரண்டு மூத்த சிறுவர்கள் அவனை மூழ்க விடாமல் காப்பாற்றினர். ஆனால் அந்த நாளில் அனைவரும் பயந்து விட்டனர். அடுத்த நாள் பல குழந்தைகளை கிராமத்திலிருந்து பள்ளிக்கு அனுப்பவில்லை,” என்கிறார்.

சந்தர்பூர்-ஜமப்பசி பாதையிலுள்ள வெறிநாய்கள் வளர்ந்தவர்களையும் தாக்கியதாகக் கூறுகிறார் லபோன்யா மாலிக். கைம்பெண்ணான அவர் ஜமப்பசி பள்ளியில் மதிய உணவு சமைப்பவருக்கு உதவியாளராக இருக்கிறார். “15-20 நாய்கள் கொண்ட குழு அது. ஒருமுறை என்னை அவை விரட்டியபோது குப்புற விழுந்தேன். ஒரு நாய் என் காலை கடித்தது,” என்கிறார் அவர்.

சந்தர்பூரின் 93 குடும்பங்களில் பெரும்பாலானவை பட்டியல் சாதி மற்றும் இதர பிறபடுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவை. கிராமத்துப் பள்ளி மூடப்படும் வரை 28 குழந்தைகள் அங்கு சென்று படித்துக் கொண்டிருந்தனர். இப்போது வெறும் 8-10 மாணவர்கள்தாம் தொடர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

சந்தர்பூரை சேர்ந்த கங்கா மாலிக் ஜமப்பசியில் 6ம் வகுப்பு படித்தார். காட்டுப் பாதையின் விளிம்பில் இருக்கும் ஏரிக்குள் விழுந்த பிறகு பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டார். தினக்கூலியான அவரது தந்தை சுஷாந்த் மாலிக் சம்பவத்தை நினைவுகூறுகிறார்: “ஏரியில் அவள் விழுவதற்கு முன் முகத்தை நீரில் கழுவிக் கொண்டிருந்தாள். காப்பாற்றும்போது கிட்டத்தட்ட அவள் மூழ்கியிருந்தாள். அதற்குப் பிறகு அவள் பள்ளிக்கு செல்வதை பலமுறை தவிர்த்திருக்கிறாள்.”

இறுதித்தேர்வுக்கு செல்வதற்கான தைரியத்தை கூட கங்கா கொண்டிருக்கவில்லை. “ஆனாலும் என்னை தேர்ச்சியடைய வைத்து விட்டார்கள்,” என்கிறார் அவர்.

அஸ்பைர் இந்தியாவின் ஊழியர்கள் அளித்த உதவிக்கு கட்டுரையாளர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Kavitha Iyer

ಕವಿತಾ ಅಯ್ಯರ್ 20 ವರ್ಷಗಳಿಂದ ಪತ್ರಕರ್ತರಾಗಿದ್ದಾರೆ. ಇವರು ‘ಲ್ಯಾಂಡ್‌ಸ್ಕೇಪ್ಸ್ ಆಫ್ ಲಾಸ್: ದಿ ಸ್ಟೋರಿ ಆಫ್ ಆನ್ ಇಂಡಿಯನ್ ಡ್ರಾಟ್’ (ಹಾರ್ಪರ್ ಕಾಲಿನ್ಸ್, 2021) ನ ಲೇಖಕಿ.

Other stories by Kavitha Iyer
Photographer : M. Palani Kumar

ಪಳನಿ ಕುಮಾರ್ ಅವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಸ್ಟಾಫ್ ಫೋಟೋಗ್ರಾಫರ್. ದುಡಿಯುವ ವರ್ಗದ ಮಹಿಳೆಯರು ಮತ್ತು ಅಂಚಿನಲ್ಲಿರುವ ಜನರ ಬದುಕನ್ನು ದಾಖಲಿಸುವುದರಲ್ಲಿ ಅವರಿಗೆ ಆಸಕ್ತಿ. ಪಳನಿ 2021ರಲ್ಲಿ ಆಂಪ್ಲಿಫೈ ಅನುದಾನವನ್ನು ಮತ್ತು 2020ರಲ್ಲಿ ಸಮ್ಯಕ್ ದೃಷ್ಟಿ ಮತ್ತು ಫೋಟೋ ದಕ್ಷಿಣ ಏಷ್ಯಾ ಅನುದಾನವನ್ನು ಪಡೆದಿದ್ದಾರೆ. ಅವರು 2022ರಲ್ಲಿ ಮೊದಲ ದಯನಿತಾ ಸಿಂಗ್-ಪರಿ ಡಾಕ್ಯುಮೆಂಟರಿ ಫೋಟೋಗ್ರಫಿ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನು ಪಡೆದರು. ಪಳನಿ ತಮಿಳುನಾಡಿನ ಮ್ಯಾನ್ಯುವಲ್‌ ಸ್ಕ್ಯಾವೆಂಜಿಗ್‌ ಪದ್ಧತಿ ಕುರಿತು ಜಗತ್ತಿಗೆ ತಿಳಿಸಿ ಹೇಳಿದ "ಕಕ್ಕೂಸ್‌" ಎನ್ನುವ ತಮಿಳು ಸಾಕ್ಷ್ಯಚಿತ್ರಕ್ಕೆ ಛಾಯಾಗ್ರಾಹಕರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದಾರೆ.

Other stories by M. Palani Kumar
Editor : Priti David

ಪ್ರೀತಿ ಡೇವಿಡ್ ಅವರು ಪರಿಯ ಕಾರ್ಯನಿರ್ವಾಹಕ ಸಂಪಾದಕರು. ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು ಶಿಕ್ಷಕರಾದ ಅವರು ಪರಿ ಎಜುಕೇಷನ್ ವಿಭಾಗದ ಮುಖ್ಯಸ್ಥರೂ ಹೌದು. ಅಲ್ಲದೆ ಅವರು ಗ್ರಾಮೀಣ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ತರಗತಿ ಮತ್ತು ಪಠ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಆಳವಡಿಸಲು ಶಾಲೆಗಳು ಮತ್ತು ಕಾಲೇಜುಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ ಮತ್ತು ನಮ್ಮ ಕಾಲದ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ದಾಖಲಿಸುವ ಸಲುವಾಗಿ ಯುವಜನರೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan