“இந்த குர்தாவில் உள்ள அட்டையைப் பாருங்கள். நாடு முழுதும் எல்லாருக்கும் தெரிந்த நிறுவனம் இந்த குர்தாவை  சந்தையில் வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள அலங்கார வடிவத்தை ‘தோடா எம்ப்ராய்டரி’ என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இது எம்ப்ராய்டரியே அல்ல. துணியில் அச்சடித்திருக்கிறார்கள். எம்ப்ராய்டரியின் பெயரையும் அவர்கள் தப்பாக எழுதியிருக்கிறார்கள். ‘புக்கூர்’  என்று இதில் எழுதியிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் இருக்கிற சில எழுத்துகள் எங்களது மொழியைச் சேர்ந்தவையே அல்ல” என்கிறார் வாசமல்லி.

தோடர் மொழியில் அவர்களது எம்ப்ராய்டரியை ‘பொகர்’ என்று அழைக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குண்டா தாலுகாவின் கரிகாத்முண்ட் எனும் குக்கிராமத்தில் வாசமல்லி வசிக்கிறார். அவருக்கு 60 வயதுக்கு மேலிருக்கும். தோடர் மக்களில் கைவேலை அலங்கரிப்புகள் செய்பவர்களில் அவர் மூத்தவர். . 16 கிலோ மீட்டருக்கு அப்பால் ஊட்டி நகரம் இருக்கிறது. அங்கே ஷீலா பவுல் ஒரு தோடர் எம்ப்ராய்டரி கொண்ட பொருள்களை விற்பனை செய்கிறார். ஒரு புகழ்பெற்ற சில்லறைக் கடையில் தோடர் எம்ப்ராய்டரி சேலை ஆன்லைனில் வெறும் 2500 ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதைப் பார்த்தார். அவர் உடனே அதனை ஆன்லைனில் வாங்கினார். “அந்த சேலையை தமிழ்நாட்டின் தோடர் பெண் தனது கையால் செய்திருப்பதாக விளம்பரத்தில் இருந்தது. எப்படி இவ்வளவு குறைந்த விலைக்கு அவர்கள் விற்கிறார்கள். அது எங்கே தயாரானது? என்றும் நான் தெரிந்து கொள்ள விரும்பினேன்” என்றார் அவர்.

சில தினங்களில் அந்தச் சேலை வந்து சேர்ந்தது. “அது கைவேலை அல்ல. மிஷின் எம்ப்ராய்டரி அது. துணியின் பின்பக்கத்தில் அது கையால் பின்னப்பட்டது அல்ல என்பதை மறைப்பதற்காக ஒரு துணி கொண்டு மூடியிருந்தனர். கருப்பு சிவப்பில் அது இருந்தது என்பதுதான் ஒரே ஒற்றுமை” என்கிறார் அவர்.

பாரம்பரியமான தோடர் எம்ப்ராய்டரியில் சிவப்பும் கருப்பும் இருக்கும். எப்போதாவது நீல வண்ணமும் இருக்கும். வெளுப்பாக்கப்படாத பருத்தித் துணியில் பருத்தி நூலைக்  கொண்டு பின்னியிருக்கும் அது. தோடர் மக்களின் பாரம்பரியமான உடையின் பெயர் ’புடுகுலி’. அது ஒரு தனிச் சிறப்பான சால்வை. அந்த உடைக்கு நல்ல மரியாதை உண்டு. முக்கியமான நாட்களில்தான் அதை அணிந்துகொள்வார்கள். கோயில்களுக்குப் போகும்போதும்  திருவிழாக்கள் காலகட்டத்தின்போதும், ஒரு மனிதர் மரணமடையும்போது அவரை அதில் போர்த்தி புதைக்கும்போதும் அந்த உடை பயன்படும். 1940களில் தோடர் பெண்கள் இங்கிலாந்து நாட்டின் வியாபாரிகள் கேட்டுக்கொள்வதற்கு ஏற்ற எண்ணிக்கையில் இதை பின்னிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் கைவேலை அலங்கரிப்புகள் கொண்ட மேஜை விரிப்புகள், பைகள் உள்ளிட்டவை தயாராகின. அடுத்த பல பத்தாண்டுகளுக்கு குறிப்பிட்ட பொருள்களுக்கு மட்டுமே அவர்களின் கைவேலை அலங்கரிப்புகள் கிடைத்தன. அளவான விற்பனைதான் நடைபெற்றது. கடந்த காலத்தில் பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பெரும்பாலான பெண்கள் கம்பளி நூலைப் பயன்படுத்துகிறார்கள். அது மலிவாக இருக்கிறது. அதில் வேகமாக பின்ன முடிகிறது என்கிறார்கள் அவர்கள்.

Toda Embroidery. T. Aradkuttan and U. Devikili dressed in their putukulis (traditional shawls embroidered only by Toda women), outside their home in Bhikapatimand, Kukkal, Ooty taluk
PHOTO • Priti David

பருத்தி நூலைப் பயன்படுத்திப் பின்னப்படும் பழைய எம்ப்ராய்டரி முறை. தோடர் இனப் பெண்கள் அவர்களின் கைவேலைகளுக்கான கருப்பொருள்களை இயற்கையிலிருந்து எடுப்பதாக சொல்கின்றனர். மனித வாழ்வின் பல்வேறுபட்ட கட்டங்களை அடையாளப்படுத்துகிறது. கீழ் வலது: டி. அரத் குட்டனும் உ.தேவிகிளியும் தோடர் இன பெண்களால் பின்னப்பட்ட பாரம்பரிய உடையான புடுகுளியை அணிந்துகொண்டு ஊட்டி தாலுகாவில் உள்ள பிகாபடிமண்ட் குக்கிராமத்தில் உள்ள அவர்களின் வீட்டின் முன் நிற்கிறார்கள்

இப்போதும் கூட இந்த வேலை சிக்கலானது. கண்களுக்கு மிகவும் சிரமத்தைத் தரக்கூடியது. அதனால், ஒருவர் மூன்று அல்லது நான்கு மணிநேரம் தான் இதனைச் செய்ய முடியும் என்கிறார் பி. சிம்மவானி. 54 வயதான இவர் வாசமல்லியின் மைத்துனி. இந்த கைவேலை அலங்கரிப்புகளை அப்படியே பிரதி எடுத்து பயன்படுத்த முடியாது. குறுக்காகவும் நெடுக்காகவும் பின்னுகிற நூல்கள் தான் ஒரு கைவேலை அலங்கரிப்பாளருக்கு சட்டகமாக உள்ளன. சில பின்னல்கள் இறுக்கமாக இருக்கும். சில பின்னல்கள் கலைவடிவத்தின் பகுதியாக தளர்வாக தொங்கிக்கொண்டிருக்கும். தோடர்களின் கைவேலை பின்னல் முறையில்  பின்னால் திரும்பி வருகிற மாதிரியான வேலைப்பாடுகள் கிடையாது. இரண்டு பக்கமும் மிகவும் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் அவை இருக்கும். தோடர் இனத்தைச் சேர்ந்த கைவேலை பின்னல் நிபுணர்களுக்கு அத்தகைய ஒழுங்கும் நேர்த்தியும் அவர்களின் பெருமிதத்தோடு சம்பந்தப்பட்டவை.

“ஒரு ஆறு மீட்டர் சேலையை பின்னுவதற்கு அவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் ஆகும். குறைந்த பட்சம் அதை அவர்கள் 7000 ரூபாய்க்கு விற்பார்கள். உண்மையான அத்தகைய  சேலையை 2500-க்கும் 3000-க்கும் விற்பனை செய்வது பொருளாதார அடிப்படையில் சாத்தியமாகாது.” என்று விளக்குகிறார் ஷீலா.

பெரிய பெரிய கம்பெனிகள் தோடர் மக்களின் கைவேலை பின்னல் பற்றி தங்களின் ஆடைகளில் போட்டுக்கொள்வது என்பது தவறான தகவல்களை பரப்பி மக்களைத் திசைதிருப்புவது மட்டுமல்ல. அது ஒரு சட்ட மீறலும் ஆகும். தோடர்களின் கைவேலை பின்னலுக்கு இந்திய அரசின் இடம் சார்ந்த சான்றிதழ் 2013-ல் தான் கிடைத்தது. குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய அறிவையோ அல்லது குறிப்பிட்ட கைவினைப் பொருள்கள், உணவுகள், தொழில்களின் உரிமையாளர்களையோ பாதுகாக்கவோ மத்திய அரசின் இந்த சான்றிதழ் கிடைக்கிறது. இது ஒரு அறிவுத் சொத்துரிமை போன்றது. தோடர் சமூகத்துக்கு மத்திய அரசு கொடுத்திருக்கிற சான்றிதழின் அர்த்தம் என்பது நீலகிரி மாவட்டத்துக்கு வெளியில் எதுவும் இதனைக் காப்பியடித்து உருவானால்  அது சட்ட மீறல் என்பதுதான். மேலும் அது கையாலும் தயார் ஆகவில்லை. தோடர் சமூகத்தினருக்குத் தரப்பட்டிருக்கிற சான்றிதழ் என்பது கூட்டாக வழங்கப்படிருக்கிறது. தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு கழகமான பூம்புகார் நிறுவனத்துக்கும் நீலகிரியில் பணியாற்றுகிற கீஸ்டோன் எனும் அரசு சாரா நிறுவனத்துக்கும் தோடர் நல்வாழ்வு சங்கம் என்கிற தோடர் இன மக்கள் மற்றும் ஒரு தோடர் மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பல் மருத்துவரும் அதில் உள்ளனர். இவர்களுக்கு கூட்டாக சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய மத்திய அரசின் சான்றிதழ் இருந்தாலும் “ பெரிய கம்பெனிக்காரர்கள் நீலகிரிக்கு வெளியே இதனைக் காப்பியடிக்கிறார்கள். அவர்கள் அதனை இயந்திரங்களில் செய்கிறார்கள். துணிகளில் அச்சடிக்கிறார்கள். அவர்கள் எப்படி அதைச் செய்யலாம்? ” என்கிறார் வாசமல்லி

Simmavani - : Toda embroidery has switched from cotton thread to wool, cheaper and easier to do
PHOTO • Priti David
Sheela Powell of Shalom
PHOTO • Priti David

இடது: பருத்தி நூலை விட மலிவாகவும் வேலை செய்வதற்கு எளிதாகவும் கம்பளி நூ்ல் இருப்பதால் தோடர் எம்ப்ராய்டரி கம்பளிக்கு மாறியிருக்கிறது என்கிறார் சிம்மவாணி வலது: நன்கு அறியப்படுகிற சில்லறை விற்பனைக் கடையில் தோடர் சேலை ஆன்லைனில் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதைக் கண்ட தோடர் எம்பிராய்டரி பொருள்களை விற்பனை செய்யும் ஷீலா பவுலுக்கு ஒரே ஆச்சரியம்.

பெரிய கம்பெனிகள் மட்டும் அல்ல, மற்ற கைவினைப் பொருள்களை விற்பனை செய்வோரும் சட்ட மீறல்களைச் செய்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் கண்காட்சியில் வாசமல்லி கம்பளி சால்வைகளில் தோடர் பாணியிலான அலங்கரிப்புகளைக் கண்டார். “பாதி விலைக்கு இதே பொருள் கிடைக்கிறது. நீங்கள் மட்டும் ஏன் அதிகமான விலை சொல்கிறீர்கள் என்று ஒரு வாடிக்கையாளர் என்னிடம் சண்டைக்கு வந்தார்”  என்றார் அவர்.  “ அவர் சொல்கிற பொருளில் உள்ள டிஸைன் துணியில் அச்சடித்து இருந்தது. அது கைவேலை அல்ல. அதனால் அது மலிவாக இருந்தது”

தோடர் அல்லாதவர்கள் இந்த எம்ப்ராய்டரி திறன்களை கற்றுக்கொண்டு விடுவார்கள் என்ற பயமும் இந்த சமூகத்தில் இருக்கிறது. தோடர் மக்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அவர்கள் 2002 பேர்தான் இருந்தனர். 538 குடும்பங்கள். நீலகிரி மாவட்டத்தின் 125 குக்கிராமங்களில் அவர்கள் வசிக்கின்றனர். அவர்களின் சொந்தக் கணக்கெடுப்பின்படியே கூட அவர்கள் சமூகத்தில் சுமார் 300 பேர்தான் இந்த எம்ப்ராய்டரி திறமையை கற்றுக்கொண்டவர்களாக உள்ளனர். இளம் பெண்கள் இதனை கற்றுக்கொள்வது குறைந்துவருகிறது. அதுவும் இந்த பாரம்பரிய திறனின் எதிர்காலம் பற்றிய கவலையை அதிகரித்திருக்கிறது.

“ இதைப் பின்னுவதில் வேலை அதிகம். நிறைய நேரத்தையும் அது எடுத்துக்கொள்ளும். தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குப் போனால் ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கு மேல்  சம்பாதிக்கலாம். ஆனால், இதைப் பின்னுவதற்கு நான் உட்கார்ந்தால் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் முதல் ஆறு மணிநேரம் வரை ஆகும். ஆனால், மாதக்கடைசியில் எனக்கு 2000 ரூபாய் அளவுக்குத் தான் கிடைக்கும்” என்கிறார். குன்னூர் தாலுகாவில் உள்ள நெடுமண்ட் குக்கிராமத்தில் கை வேலை பின்னல் திறமை தெரிந்த  23 வயதான இளம்  பெண் சத்தியாசின்.

தோடர் இனத்தைச் சேராதவர் ஷீலா. அவர் நடத்துகிற ஷாலூம் கடையோடு இணைந்து வேலை செய்கிறார் சத்தியாசின். இந்தக் கடையில் தோடர் அல்லாத மற்ற பெண்களை  வேலைக்கு வைக்கிறார்கள் என்று சில தோடாக்கள் விமர்சித்துவருகிறார்கள். “ அவர்கள் தையல் வேலைகளைச் செய்கிறார்கள் என்று பதில் சொல்கிறார் ஷீலா. “ யாராவது இதை முன்னெடுத்துப் போகவில்லை என்றால் இந்த கைவேலைத் திறன் அதன் சில முக்கியத்துவங்களை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. தற்போது இவை குறைவாகவே உற்பத்தி ஆகின்றன. ஒரு வருடம் முழுதும் சில பொருள்கள்தான் உற்பத்தி ஆகின்றன. ஆனால், ஒவ்வொரு பொருளும் இதில் தனிவகையானது. இந்த வேலையைச்  செய்து வாங்குவதும் இதனைத் தொடர்ந்து செய்யவைப்பதும் பெரிய சவால் என்கிறார் அவர்.

Sathyasin
PHOTO • Priti David
Vasamalli is a member of the State Tribal Welfare Board since 2008, Vasamalli is also one of the six authors of ‘Maria Horigal’, (‘Enduring voices of the Todas’) 50 songs and 50 folk tales, published by the Sahitya Akademi in 2017
PHOTO • Priti David

வலது: என். சத்தியாசின் முன்வைக்கிற சங்கடமான ஒரு நிலைமை பற்றிய கருத்தைத் தான் மற்ற தோடர் இனப் பெண்களும் பேசுகிறார்கள். வலது- பெரிய கம்பெனிகள் எங்களது எம்ப்ராய்டரியை காப்பியடிக்கின்றன. மிஷினைப் பயன்படுத்துகிறார்கள். துணிகளில் பிரி்ண்ட் செய்துவிட்டு அதனை எம்ப்ராய்டரி என்கிறார்கள். அவர்கள் எப்படி இதனை செய்யலா் என்கிறார் வாசமல்லி.

ஷீலாவின் கடை 2005 இல் ஆரம்பமானது. 220 தோடர் இனப் பெண்கள் இந்த கடையோடு இணைந்து பணி செய்கின்றனர். அவர்களின் வேலைகள்தான் சால்வைகள், சேலைகள், பைகளாக மாறின. ஒவ்வொரு சேலையும் 7000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கைவேலை பின்னல் செய்தவருக்கு 5000 போகும். மிச்சமுள்ளது பொருள்கள் வாங்கவும் சந்தைப்படுத்தல் செலவுகளுக்காகவும் என்கிறார் ஷீலா.   அனுபவம் உள்ளவர்கள் சராசரியாக ஒரு மாதத்துக்கு 4000 முதல் 16000 வரை சம்பாதிக்கின்றனர். அது அவர்கள் எடுக்கிற வேலையைப் பொறுத்தது என்கிறார் அவர். 2017- 18 ஆம் வருடத்தில் இந்தக் கடையில் 35 லட்சம் ரூபாய் வரை கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது, தங்களது பொருள்களுக்கான சந்தை வளர்ந்ததற்கு நீலகிரியில் பலர் இந்தக் கடைக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.

“இதை தோடர் அல்லாத மற்ற மக்கள் செய்தால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும். அதே நேரத்தில் போதுமான  தோடர் இன மக்கள் இதனைச் செய்யவில்லை என்றால் இந்த கைவேலைத் திறன் முழுமையாக அழிந்துவிடும் என்கிறார் வாசமல்லி.

தோடர்கள் 84 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். வங்கிகள் உள்ளிட்ட மற்ற பணிகளுக்குப் போய்விட்டார்கள். வசதியாக இருக்கிறார்கள். வாசமல்லி கூட சமூகவியலில் எம்ஏ படித்தவர். தமிழ்நாடு பழங்குடி மக்கள் நல்வாழ்வு கழகத்தில் உறுப்பினராக உள்ளார். சாகித்ய அகாடமியின் மூலம் அவரது நூல் வெளியாகி உள்ளது.

“ தோடர் இனப் பெண்களின் தலைவலியாக இதனைப் பார்க்கிறார்கள். யார் எம்ப்ராய்டரி செய்கிறார்கள், யார் அதை காப்பி அடிக்கிறார்கள் என்று ஆண்களுக்கு கவலையில்லை. ” என்கிறார் அவர். “எங்களது கைவேலைப் பின்னல்களை விற்பனை செய்வது என்பதும் வியாபாரம் செய்வதும் எங்களது பண்பாட்டில் பாரம்பரியமானது அல்ல. அதனால் ஆண்கள் அதைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், எங்களுக்கு இது எங்களின் பண்பாட்டு உரிமையைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எங்களது பொருளாதாரத்தில் ஏற்படுகிற இழப்பாகவும் இருக்கிறது.

” தோடர் இனத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் ஒரே சங்கமாக ஒருங்கிணைந்து இருக்கவில்லை என்பதும் தோடர் எம்ப்ராய்டரி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தடையாக இருக்கிறது.“ நாங்கள் பல கூறாக சிதறியிருக்கிறோம்” என்கிறார் வாசமல்லி. “ பல அமைப்புகள் இருக்கின்றன. அரசியல்ரீதியாகவும் மாறிவிடுகிறது. நானும் பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன். ஆனாலும் இந்த பிரச்சனை தொடர்பாக யாரையும் என்னால் திரட்ட முடியவில்லை. எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது.”

Toda-GI135-Certificate of Registration
PHOTO • Priti David
Siyahi, a brand that copies Toda embroidery and sells it online. It's not an original Toda embroidered product.
PHOTO • Priti David
Machine embroidery front
PHOTO • Priti David

இடது: தோடர் எம்ப்ராய்டரிக்கு மத்திய அரசின் சான்றிதழ் நடுவிலும் வலதுபக்கமும்: பெரிய கம்பெனிகள் தோடர் எம்ப்ராய்டரி எனும் பெயரில் தவறான பொருள்களை விற்கின்றன.

தோடர் எம்ப்ராய்டரிக்கான மத்திய அரசு சான்றிதழ் என்பது ஒரு சட்டரீதியான நடத்த வேண்டிய வழக்கு என்பதில் பெங்களூரைச் சேர்ந்த ஜெஹேடாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் அறிவுச்சொத்துரிமை மற்றும் காப்புரிமைகள் தொடர்பாக ஆழமான ஞானம் பெற்றவர். “தோடா எம்ப்ராய்டரியில் தயாரிப்பு முறை என்பது கையால் பின்னப்படுவது மட்டும்தான்” என்கிறார் அவர். “ இந்த எம்ப்ராய்டரியை இயந்திரங்கள் மூலம் போடுவது உள்ளிட்ட வழிகளில் போட்டால் அதை தோடர் எம்ப்ராய்டரி என்று அழைப்பது சரியல்ல.   இயந்திரங்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பொருள்கள் ‘தோடர் எம்ப்ராய்டரி’ என்று விற்கப்படுவது ஒரு சட்ட மீறல். குறிப்பிட்ட  தனிச் சிறப்பான டிஸைன்களும் பதிவு செய்யப்ட்டிருக்கின்றன.”

“ தோடர் எம்ப்ராய்டரியை வாங்குபவர்களிடம் நீங்கள் விழி்ப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் உங்களுக்கு ஆட்பலம் தேவை. மத்திய அரசு சான்றிதழ் வைத்திருப்பவர்களும் உண்மையான உற்பத்தியாளர்களும் (மத்திய அரசு சான்றிதழில் ‘அதிகாரபூர்வமான பயன்பாட்டாளர்கள்’ என்று இருக்கிறது.) போலி யான  பொருள்களை விற்பனை செய்பவர்களால் பாதிக்கப்பட்டால் நீதிமன்றங்களில் வழக்கு போட்டு நியாயம் பெற வேண்டும் ” என்றும் அவர் சொல்கிறார்.

தோடர் எம்ப்ராய்டரி என்று சந்தையில் பொருள்களை விற்பவர்கள் என்று இந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்படுபவர்கள் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்-சும் , Tjori.com எனும் இணையதளமும். அந்த இணையத் தளத்துக்கு பல மின்னஞ்சல்கள் அனுப்பியும் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

[email protected] மட்டும்  பதில் அளித்துள்ளது. “சியாகி எனும் எங்களது பிராண்ட் பாரம்பரிய இந்தியன் கைவினைத் தொழில்களின் மீது கவரப்பட்ட ஒரு பிராண்ட். கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் பொருள்களை  நாங்கள் வைத்திருப்பதில்லை. எம்ப்ராய்டரிகள் எல்லாம் இயந்திரங்களால் செய்யப்பட்டவையே. தொழிற்சாலைகளில் உள்ள எம்ப்ராய்டரி கணினி இயந்திரங்களில் அவை செய்யப்பட்டவை. தோடர் மக்களின் சால்வைகளால் நாங்கள் கவரப்பட்டு அதிலிருந்து எடுத்துள்ளோம்” என்று அதில் உள்ளது.

“ எங்களது டிஸைன்களை காப்பியடிப்பதும் எங்களது பெயரைப் பயன்படுத்துவதும் சரியல்ல” என்கிறார் வாசமல்லி.

தமிழில் : த. நீதிராஜன்

Priti David

ಪ್ರೀತಿ ಡೇವಿಡ್ ಅವರು ಪರಿಯ ಕಾರ್ಯನಿರ್ವಾಹಕ ಸಂಪಾದಕರು. ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು ಶಿಕ್ಷಕರಾದ ಅವರು ಪರಿ ಎಜುಕೇಷನ್ ವಿಭಾಗದ ಮುಖ್ಯಸ್ಥರೂ ಹೌದು. ಅಲ್ಲದೆ ಅವರು ಗ್ರಾಮೀಣ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ತರಗತಿ ಮತ್ತು ಪಠ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಆಳವಡಿಸಲು ಶಾಲೆಗಳು ಮತ್ತು ಕಾಲೇಜುಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ ಮತ್ತು ನಮ್ಮ ಕಾಲದ ಸಮಸ್ಯೆಗಳನ್ನು ದಾಖಲಿಸುವ ಸಲುವಾಗಿ ಯುವಜನರೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Priti David
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan