1997ம் ஆண்டு.

சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின. இந்த வருடத்தின் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியின் கடைசி மூன்று இறுதிப் போட்டிகளில் மேற்கு வங்க அணி மணிப்பூரிடம் தோற்றது, ஆனால் அவர்கள் இப்போது மஞ்சள் மற்றும் மெரூன் நிற உடையில் உயர்ந்து நிற்கிறார்கள். மேற்கு வங்க ஹல்டியா நகரில் உள்ள துர்காசாக் மைதானம் கால்பந்து வீரர் பந்தனா பாலுக்கு சொந்த மாநில மைதானம்.

விசில் அடித்து ஆட்டம் தொடங்கியது.

முன்னதாக, 16 வயது ஆட்டக்காரர் சாம்பியன்ஷிப்பின் கால் இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார். அந்தப் போட்டியில் கோவாவுக்கு எதிராக மேற்கு வங்கம் வென்றது, ஆனால் அது பாலுக்கு இடது கணுக்கால் காயத்தை ஏற்படுத்தியது: “ஆனாலும் நான் அரையிறுதியில் [பஞ்சாப்க்கு எதிராக] விளையாடினேன், ஆனால் நான் வலியில் இருந்தேன். அன்று நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தபோது, ​​என்னால் நிற்கக் கூட முடியவில்லை.”

மேற்கு வங்கத்தின் இளம் வீரரான பால், சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பெஞ்சில் இருந்து பார்த்தார். ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருந்த நிலையில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. மேற்கு வங்கப் பயிற்சியாளர் சாந்தி மல்லிக் மகிழ்ச்சியடையவில்லை. மேலும், 12,000 இருக்கைகள் கொண்ட ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் மத்தியில் மாநில முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். மல்லிக் பாலுவைத் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். “என் நிலையைப் பார்” என்று அவளிடம் சொன்னேன். ஆனால் பயிற்சியாளர், ‘நீ எழுந்து நின்றால் கோல் விழும் என் இதயம் என்னிடம் சொல்கிறது,’ என்றார்” என்கிறார் பால்.

எனவே வலியைக் குறைக்க இரண்டு விரைவான ஊசிகளுக்குப் பிறகு, காயத்தைச் சுற்றி ஒரு பேண்டேஜ் இறுக்கமாகக் கட்டப்பட்டது, பால் தயாராகிக் காத்திருந்தார். ஆட்டம் டிரா ஆனது. கூடுதல் நேரம் கோல்டன் கோலுக்கு விடுக்கப்பட்டது. எந்த அணி முதலில் அடிக்கிறதோ அந்த அணி சாம்பியன்ஷிப்பை வெல்லும்.

“நான் கோல் குறுக்குக் கம்பிகளைக் குறிவைத்தேன், பந்து வலது பக்கம் சுழன்றது. காப்பாளர் குதித்தார். ஆனால் பந்து அவரைக் கடந்து பறந்து வலையில் பாய்ந்து கோலானது.”

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடது: போனி பால் கால்பந்து விளையாடும் முதல் புகைப்படங்களில் ஒன்று. டிசம்பர் 2, 2012 அன்று ஆனந்தபஜார் பத்ரிகாவின் விளையாட்டு இணைப்பில் வெளியிடப்பட்டது. வலது: 1998 பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பந்தனா பங்கேற்றதற்காக AIFF-ன் சான்றிதழ்

ஒரு அனுபவமிக்க கதைசொல்லியின் எளிமையுடன் பால் இடைநிறுத்துவது இங்குதான். "நான் காயமடைந்த காலில் கோல் போட்டேன்," என்று கால்பந்து வீரர் சிரித்துக்கொண்டே கூறுகிறார். “ஒரு காப்பாளர் எவ்வளவு உயரமாக இருந்தாலும், குறுக்குக்கம்பி கோல்களை காப்பாற்றுவது கடினம். நான் கோல்டன் கோல் அடித்தேன்.”

அந்த போட்டி முடிந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது, ஆனால் 41 வயதான பால் அதை பெருமையுடன் மீண்டும் கூறுகிறார். ஒரு வருடம் கழித்து, பால் தேசிய அணியை உருவாக்கினார், அவர் விரைவில் பாங்காக்கில் 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடவிருந்தார்.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இச்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த இந்த கால்பந்தாட்ட வீரருக்கு இது வரை ஒரு கனவாக இருந்தது: “என் பாட்டி வானொலியில் [இறுதிப் போட்டிகளின்] வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு முன் எனது குடும்பத்தில் யாரும் இந்த அளவுக்கு கால்பந்தாட்டத்தை எட்டியதில்லை. அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி பெருமிதம் கொண்டனர்.”

பால் இளமையாக இருந்தபோது, ​​ஏழு பேர் கொண்ட குடும்பம் கைகாட்டா தொகுதியில் உள்ள இச்சாப்பூரில் உள்ள அவர்களின் வீட்டில் வசித்து வந்தனர், அங்கு அவர்களுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் அரிசி, கடுகு, பச்சை பட்டாணி, பயறு மற்றும் கோதுமை ஆகியவற்றை அன்றாட வாழ்வாதாரத்திற்காக பயிரிட்டனர். இந்த நிலத்தின் சில பகுதிகள் விற்கப்பட்டு தற்போது குடும்பத்திற்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

"என் தந்தை தையல்காரராக வேலை செய்தார். என் அம்மா அவருக்கு தையல் மற்றும் எம்பிராய்டரிக்கு உதவினார். அவர் தலைப்பாகைகள், ராக்கிகள் மற்றும் பிறப் பொருட்களையும் செய்தாள்,” என்று ஐந்து உடன்பிறப்புகளில் இளையவரான பால் கூறுகிறார். "நாங்கள் சிறு வயதிலிருந்தே நிலத்தில் வேலை செய்து வருகிறோம்." குழந்தைகளின் கடமைகளில் தோராயமாக 70 கோழிகள் மற்றும் 15 ஆடுகளை பராமரிப்பதும் அடங்கும். பள்ளிக்கு முன்னும் பின்னும் புல் வெட்டப்பட வேண்டும்.”

பால் இச்சாப்பூர் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பை முடித்தார். "பெண்கள் கால்பந்து அணி இல்லை, அதனால் பள்ளிக்குப் பிறகு நான் சிறுவர்களுடன் விளையாடினேன்," என்று முன்னாள் கால்பந்து வீரர் கூறிவிட்டு, பொமெலோ என்கிற பழத்தை எடுத்து வருகிறார். "நாங்கள் இதை படாபி அல்லது ஜம்புரா என்று அழைக்கிறோம். கால்பந்து வாங்க எங்களிடம் பணம் இல்லை, எனவே இந்த பழத்தை மரத்திலிருந்து உடைத்து விளையாடுவோம், ”என்று பால் கூறுகிறார், “நான் அப்படித்தான் தொடங்கினேன்.”

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடதுபுறம்: போனி தனது குடும்ப வீட்டின் முதல் தளத்தில் அவரும் சுவாதியும் தங்கியிருக்கும் அறையில் அமர்ந்துள்ளார். வலது: இரண்டு பொமலோக்கள் (இடது) , அவரது குடும்பத்தில் கால்பந்து வாங்க பணம் இல்லாததால் போனி விளையாடிய பழம். அவரது பயிற்சி காலணிகளை புகைப்படத்தில் வலதுபுறத்தில் காணலாம்

அத்தகைய ஒரு நாளில், இச்சாப்பூரில் புச்சு டா (மூத்த சகோதரர்) என்று அன்புடன் அழைக்கப்படும் சித்நாத் தாஸ், 12 வயது சிறுவன் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தார். அருகில் உள்ள பராசத் நகரில் கால்பந்து சோதனைகள் நடப்பதைப் பற்றி புச்சு டா பவுலுக்குத் தெரிவித்தார், அவர் அதைத் தொடர்ந்து பராசத் ஜுபக் சங்கக் கிளப் அணியில் இடம்பிடித்தார். அவர்களுடனான அறிமுக விளையாட்டுக்குப் பிறகு, கொல்கத்தாவில் உள்ள இடிகா மெமோரியல் கிளப்பில் பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு சுணக்கமே இல்லை.

பால் 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் கால்பந்தாட்ட வீரரின் பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்பங்கள் விரைந்து முடிக்கப்பட்டன. "நாங்கள் விமான நிலையத்தில் இருந்தோம், புறப்படத் தயாராக இருந்தோம்" என்று முன்னாள் வீரர் நினைவு கூர்ந்தார். "ஆனால் அவர்கள் என்னை திருப்பி அனுப்பினார்கள்."

மணிப்பூர், பஞ்சாப், கேரளா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த வீரர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாலின் ஆட்டத்தை கவனித்திருக்கிறார்கள். அவர்கள் பாலின் பாலினத்தில் சந்தேகமடைந்தனர். அதை தங்கள் பயிற்சியாளர்களிடம் தெரிவித்தனர். இந்த விவகாரம் விரைவில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு (AIFF) சென்றது.

“என்னை குரோமோசோம் சோதனை செய்யச் சொன்னார்கள். அந்த நேரத்தில், நான் இதை பம்பாய் அல்லது பெங்களூரில் மட்டுமே செய்ய முடியும்,” என்கிறார் பால். கொல்கத்தாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) டாக்டர் லைலா தாஸ், பாலின் இரத்த மாதிரியை மும்பைக்கு அனுப்பினார். "ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, '46 XY' ஐக் காட்டிய சோதனையை அறிக்கை மேற்கோள் காட்டியது. பெண்களுக்கு இது '46 XX' ஆக இருக்க வேண்டும். என்னால் [முறைப்படி] விளையாட முடியாது என்று டாக்டர் என்னிடம் கூறினார்,” என்கிறார் பால்.

வளர்ந்து வரும் கால்பந்து நட்சத்திரத்திற்கு வெறும் 17 வயதுதான், ஆனால் விளையாட்டின் எதிர்காலம் இப்போது சந்தேகத்தில் உள்ளது.

PHOTO • Riya Behl

ஜூலை 19, 2012 அன்று ஆஜ்கால் சிலிகுரியில் சப்-டிவிஷன் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் செயலாளரிடம் போனியின் சுயவிவரத்தைப் ஒப்படைக்கும் புகைப்படம்

பால்புதுமையினர், பெண் அல்லது ஆண் உடல்களுக்கான மருத்துவ மற்றும் சமூக விதிமுறைகளுக்கு பொருந்தாத உள்ளார்ந்த பாலின பண்புகளைக் கொண்டுள்ளனர். வேறுபாடுகள் வெளிப்புற அல்லது உள் இனப்பெருக்க பாகங்கள், குரோமோசோம் வடிவங்கள் அல்லது ஹார்மோன் வடிவங்களில் இருக்கலாம். அவை பிறக்கும்போதோ அல்லது பிற்காலத்திலோ வெளிப்படும்

***

"எனக்கு ஒரு கருப்பை இருந்தது, ஒரு கருமுட்டை இருந்தது மற்றும் உள்ளே ஒரு ஆண்குறி இருந்தது. எனக்கு இரண்டும் [இனப்பெருக்க பாகங்களும்] இருந்தது,” என்கிறார் முன்னாள் கால்பந்து வீரர். ஒரே இரவில், விளையாட்டு வீரரின் அடையாளம் கால்பந்து சமூகம், ஊடகங்கள் மற்றும் பாலின் குடும்பத்தினரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

"அந்த நேரத்தில், யாருக்கும் தெரியாது அல்லது புரிந்து கொள்ளவில்லை. இப்போதுதான் மக்கள் பேசுகிறார்கள். LGBTQ பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன,” என்று முன்னாள் கால்பந்து வீரர் கூறுகிறார்.

பால் ஒரு பால்புதுமையினர். இப்போது போனி பால் என்று அழைக்கப்படுகிறார். “எனது உடல் வகை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளது. தடகள வீரர்கள், டென்னிஸ் வீரர்கள், கால்பந்து வீரர்கள் என என்னைப் போல் பல வீரர்கள் உள்ளனர்” என்று ஆணாக அடையாளப்படுத்தும் போனி கூறுகிறார். அவர் தனது பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, பாலியல் மற்றும் பாலியல் நோக்குநிலை பற்றி மருத்துவ சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலதரப்பட்ட பார்வையாளர்களிடம் பேசுகிறார்.

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடது: டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இணைப்பில் வெளியான போனி பற்றிய கட்டுரை. வலது: போனி பாலின் ஆதார் அட்டை. அவரது பாலினம் ஆண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

பால்புதுமையினர் , அல்லது பாலின மாறுபாடுகளைக் கொண்ட நபர்கள், பெண் அல்லது ஆண் உடல்களுக்கான மருத்துவ மற்றும் சமூக விதிமுறைகளுக்குப் பொருந்தாத உள்ளார்ந்த பாலின பண்புகளைக் கொண்டுள்ளனர். வேறுபாடுகள் வெளிப்புற அல்லது உள் இனப்பெருக்க பாகங்கள், குரோமோசோம் வடிவங்கள் அல்லது ஹார்மோன் வடிவங்களில் இருக்கலாம். அவர்கள் பிறக்கும்போதோ அல்லது பிற்கால வாழ்க்கையிலோ வெளிப்படையாக இருக்கலாம். மருத்துவப் பயிற்சியாளர்கள், பாலின வளர்ச்சியின் வேறுபாடுகள்/குறைபாடுகள் என்ற சொற்றொடரைப் பால்புதுமையினருக்கு பயன்படுத்துகின்றனர்.

பாலின வளர்ச்சியின் வேறுபாடுகள்/குறைபாடுகள் பெரும்பாலும் மருத்துவ சமூகத்தில் பலரால் 'பாலியல் வளர்ச்சியின் சீர்குலைவுகள்' என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறது," என்கிறார் தில்லி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உடலியல் பேராசிரியரான டாக்டர் சதேந்திர சிங். பால்புதுமையினரின் ஆரோக்கியம் குறித்த அறியாமை மற்றும் குழப்பம் காரணமாக, பால்புதுமையினரின் எண்ணிக்கைக் குறித்து எந்த உறுதியும் இல்லை என்கிறார் அவர்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மாற்றுப்பாலினத்தோர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த 2014 அறிக்கை , ஒவ்வொரு 2,000 குழந்தைகளிலும் குறைந்தது ஒரு குழந்தை, ஆண் அல்லது பெண் என்று முத்திரை குத்த முடியாத அளௌவ்க்கான பாலினக் கலப்போடு பிறக்கிறது என்கிறது.”

இந்த உண்மை இருந்தபோதிலும், "[இந்தியாவின் மருத்துவப் பாடத்திட்டத்தில்] நிலையான பாடப்புத்தகங்கள்  'தெளிவற்ற பிறப்புறுப்பு' மற்றும் 'கோளாறுகள்' போன்ற இழிவான சொற்களையே இன்னும் குறிப்பிடுகின்றன," என்று மனித உரிமை ஆர்வலர் மற்றும் மாற்றுத்திறனாளி உரிமைகள் பாதுகாப்பாளருமான டாக்டர். சிங் கூறுகிறார்.

பெண்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கொல்கத்தாவின் இந்திய விளையாட்டு ஆணையத்தால் (SAI) அனுமதிக்கப்பட்ட உடல் பரிசோதனைகளை போனி மேற்கொண்டார். மேலும் அவர் எந்த மகளிர் கால்பந்து அணியிலும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. "கால்பந்து வெளியேறியபோது, ​​​​என் வாழ்க்கை முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டது” என்கிறார் போனி.

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடது: பட்டாபி அல்லது ஜம்புரா (பொமலோ) பழத்தை வைத்திருக்கும் போனி. அதன் தடிமனான தோலை அவர் விளையாடத் தொடங்கியபோது கால்பந்திற்கு ஒரு நல்ல மாற்றாக இருந்தது. வலது: அவரது கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் கொண்ட அலமாரி முன்

2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கை அளித்ததாக அவர் கூறுகிறார். அதில், “ஒருவரின் பாலின அடையாளத்தை அங்கீகரிப்பது கண்ணியத்திற்கான உரிமையின் அடிப்படையில் உள்ளது. பாலினம் என்பது ஒருவரின் உணர்வின் மையமாகவும், ஒரு நபரின் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ளது. எனவே, பாலின அடையாளத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம், நமது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாகும். தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் பூஜாயா மாதா நசிப் கவுர் ஜி மகளிர் நலச் சங்கம் ஆகியவை ‘மாற்றுப்பாலினத்தோர்’ என அடையாளப்படுத்தும் நபர்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மைல்கல் தீர்ப்பு பாலின அடையாளத்தை நீண்ட நேரம் விவாதித்தது.  இருவகை அல்லாத பாலின அடையாளங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் தீர்ப்பும் இந்தியாவில் மாற்றுப்பாலினத்தோரின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்திய தீர்ப்பும் அதுதான்.

தீர்ப்பு போனியின் நிலைமையை சட்டப்பூர்வமாக்கியது. "நான் பெண்கள் அணியில் சேர்ந்தது போல் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் ஏன் என்னால் விளையாட முடியவில்லை என்று AIFF-டம் கேட்டபோது, ​​அதற்கு உங்கள் உடல் மற்றும் குரோமோசோம்கள் தான் காரணம் என்று சொன்னார்கள்."

SAI நேதாஜி சுபாஸ் ஈஸ்டர்ன் சென்டர், கொல்கத்தா மற்றும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு பாலின வேறுபாடுகள் கொண்ட வீரர்களுக்கான பாலின மற்றும் பாலின சோதனைக் கொள்கைகள் பற்றிய தகவல்களைக் கோரி பல செய்திகள் அனுப்பப்பட்ட போதிலும், இந்த நிருபருக்கு அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

***

ஏப்ரல் 2019-ல், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்து, போனி பால்புதுமையினர் மனித உரிமைகள் இந்தியாவின் (IHRI) நிறுவன உறுப்பினரானார். இது பால்புதுமையினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் பரந்த-இந்திய வலைப்பின்னல். இந்த வலைப்பின்னல், பாலினத்தவர்களுக்கான உரிமைகளை மேம்படுத்துகிறது, ஆலோசனைகளை வழங்குகிறது. மேலும் அவர்களின் சவால்கள் மற்றும் தேவைகளை வக்கீல் மூலம் முன்னிலைப்படுத்துகிறது.

இந்த வலைப்பின்னலில் குழந்தைகளுடன் தீவிரமாக வேலை செய்யும் ஒரே நபர் போனி மட்டுமே. "மேற்கு வங்காளத்தில் உள்ள அரசாங்க சுகாதார மற்றும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மூலம் போனியின் தலையீடுகள், பாலின வளர்ச்சியில் வேறுபாடுகள் உள்ள பல இளைஞர்களுக்கு அவர்களின் உடல்கள் மற்றும் பாலியல் அல்லது பாலின அடையாளத்தை புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் உதவியது. மேலும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு தேவையான மற்றும் சாத்தியமான ஆதரவை வழங்க உதவியது" என்கிறார் புஷ்பா அச்சந்தா, IHRI-ன் ஆதரவாளர்-உறுப்பினர்.

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடப்புறம்: 2021-ல் மேற்கு வங்கக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு பயிற்சியாளராக தனது முன்மாதிரியான பணிக்காக வழங்கிய விருதை போனி வாசிக்கும்போது (இடதுபுறம்) ஸ்வாதி பார்க்கிறார். வலது: அக்டோபர் 9, 2017 அன்று, சால்ட் லேக்கில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றபோது, கிஷாலயா அணிக்கு பயிற்சியாளராக இருந்ததற்காக போனியைப் பாராட்டி எபேலாவில் வெளியான ஒரு கட்டுரை

“இளம் விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் உடல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. போனியைப் பொறுத்தவரை, இது அந்த நேரத்தில் இல்லை,” என்கிறார் தடகள உரிமை ஆர்வலர் டாக்டர் பயோஷ்னி மித்ரா. சுவிட்சர்லாந்தில் உள்ள லொசானில் உள்ள பெண்கள், விளையாட்டு, உடற்கல்வி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கான குளோபல் ஆய்வு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக டாக்டர். மித்ரா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள பெண் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாட்டுகளில் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்ய உதவுகிறார்.

“நான் [விமான நிலையத்திலிருந்து] திரும்பி வந்தபோது, ​​உள்ளூர் செய்தித்தாள்கள் என்னை சித்திரவதை செய்தன,” என்று போனி நினைவு கூர்ந்தார். "'பெண்கள் அணியில், ஒரு ஆண் விளையாடுகிறான்' - இவை தலைப்புச் செய்திகள்." அவர் இச்சாபூருக்குத் திரும்பியதை வலிமிகுந்த அனுபவமாக விவரிக்கிறார்: “என் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் பயந்தனர். எனது இரண்டு சகோதரிகளும் அவர்களது மாமியார்களும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர். நான் காலையில் வீட்டிற்கு வந்தேன், ஆனால் மாலைக்குள் ஓடிவிட வேண்டியிருந்தது.”

சுமார் 2,000 ரூபாயை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு போனி தப்பியோடினார். அவர் வீட்டை விட்டு வெளியேறிய நாளில் ஜீன்ஸ் அணிந்து, குட்டையான முடியுடன் விளையாடியதை அவர் நினைவு கூர்ந்தார். யாரும் அறியாத இடத்தைக் கண்டுபிடிக்க விரும்பினார்.

"எனக்கு சிலைகள் செய்வது எப்படி என்று தெரியும். அதனால் அந்த வேலையைச் செய்ய நான் கிருஷ்ணாநகருக்கு ஓடிவிட்டேன்," என்கிறார் பால் சமூகத்தைச் சேர்ந்த போனி. "நாங்கள் சிலை செய்கிறோம்." வளரும்போது இச்சாப்பூர் கிராமத்தில் உள்ள அவரது மாமாவின் சிலை செய்யும் பிரிவில் உதவிய அனுபவம், களிமண் சிலைகள் மற்றும் பொம்மைகளுக்குப் பெயர் பெற்ற கிருஷ்ணாநகர் நகரத்தில் வேலை பெறத் தேவையான திறமைகளை அவருக்கு அளித்தது. அவரது திறமையை சோதிக்கும் விதமாக, அரிசி மற்றும் சணல் கயிறுகளால் காய்ந்த தண்டுகளைக் கொண்டு ஒரு சிலை செய்யக் கேட்கப்பட்டது. போனிக்கு வேலை கிடைத்தது. ஒரு நாளைக்கு ரூ.200 வருமானம். தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார்.

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடப்புறம்: போனி, இச்சாப்பூரில் உள்ள சிலைகள் தயாரிக்கும் பிரிவில், வளர்ந்து, உதவி செய்து, கைவினைக் கற்றுக்கொண்டார். வலது: வைக்கோல் மற்றும் சணல் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு சிலையின் அமைப்பு. போனி கிருஷ்ணாநகரில் வேலைக்காக இதேபோன்ற ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது

இச்சாப்பூரில், போனியின் பெற்றோர், ஆதிர் மற்றும் நிவா, தங்கள் மூத்த மகள் சங்கரி மற்றும் மகன் போலாவுடன் வசித்து வந்தனர். போனி தனியாக வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் அவர் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தபோது அது குளிர்ந்த காலைப் பொழுது என்று நினைவு கூர்ந்தார்: “அவர்கள் [உள்ளூர்க்காரர்கள்] மாலையில் என்னைத் தாக்கினர். நான் வேகமாக ஓடினேன். ஆனால் நான் செல்வதைப் பார்த்து என் அம்மா அழுது கொண்டிருந்தார்.”

இது முதல் முறையும் அல்ல. கடைசி முறையும் அல்ல. அவர் உடல் ரீதியாக தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அன்று தனக்குத்தானே ஒரு உறுதி எடுத்துக் கொண்டார். "நான் என் சொந்தக் காலில் நிற்க முடியும் என்பதை அனைவருக்கும் காட்டப் போகிறேன். என் உடலில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் சரி செய்து கொள்வேன் என்று முடிவு செய்தேன்,” என்கிறார். போனி அறுவை சிகிச்சையை நாட முடிவு செய்தார்.

அவர் தனது இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்களைத் தேடினார், இறுதியாக கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள சால்ட் லேக்கில் ஒருவரைக் கண்டுபிடித்தார், அது ரயில் மூலம் நான்கு மணி நேரம் தொலைவில் இருந்தது. “ஒவ்வொரு சனிக்கிழமையும் டாக்டர் பி.என். சக்ரவர்த்தி சுமார் 10 முதல் 15 மருத்துவர்களுடன் அமர்ந்திருப்பார். அவர்கள் அனைவரும் என்னைச் சோதித்தனர்,” என்று போனி கூறுகிறார். அவர் பல மாதங்களாக பல சுற்று சோதனைகள் செய்தார். "எனது மருத்துவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதேபோன்ற மூன்று அறுவை சிகிச்சைகளைச் செய்தார். அவை வெற்றியடைந்தன" என்று போனி கூறுகிறார். ஆனால் அனைத்து உடல்களும் வேறுபட்டவை என்றும், இந்த செயல்முறையை முன்னெடுப்பதற்கு முன்பு அவர் தனது மருத்துவரிடம் பல உரையாடல்களை நடத்த வேண்டியிருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

அறுவை சிகிச்சைக்கு அவருக்கு கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் தேவைப்பட்டது. ஆனால் போனி உறுதியாக இருந்தார். 2003-ல், அவர் ஹார்மோன் மாற்று சிகிச்சையை (HRT) தொடங்கினார், மேலும் ஒரு மாதத்திற்கு சுமார் 100 ரூபாய் செலவழித்து டெஸ்டோவிரான் என்ற டெஸ்டோஸ்டிரோனைத் தூண்டும் ஊசியை வாங்கினார். மருந்துகளுக்கான பணம், மருத்துவரின் வருகை மற்றும் அறுவை சிகிச்சைக்காகச் சேமிக்க, போனி கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெயிண்டிங் வேலைகள் போன்ற தினசரி கூலி வேலைக்குத் திரும்பினார். இது அவர் கிருஷ்ணாநகரில் சிலை செய்யும் பணிக்குக் கூடுதலாக இருந்தது.

"எனக்குத் தெரிந்த ஒருவர் சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சிலைகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். அதனால் நான் அவருடன் அங்கு சென்றேன்" என்று போனி கூறுகிறார். வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்து ரூ.1000 நாளொன்றுக்கு வருமானமாக ஈட்டினார். விநாயகர் சதுர்த்தி, ஜென்மாஷ்டமி போன்ற விழாக்களுக்கு சிலைகள் தயாரித்தார்.

அவர் ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை மற்றும் ஜெகதாத்ரி பூஜைக்காக கிருஷ்ணாநகருக்குத் திரும்புவார். இவை வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. 2006-ம் ஆண்டு வரை கிருஷ்ணாநகரில் ஒப்பந்த அடிப்படையில் சிலைகளுக்கான ஆர்டர்களை போனி எடுக்கத் தொடங்கியது வரை இப்படித்தான் தொடர்ந்தது. "சூரத்தில், 150-200 அடி உயரமுள்ள சிலைகளை எப்படி செய்வது என்று நான் கற்றுக்கொண்டேன். அவைகளுக்கு இங்கு தேவை இருந்தது," என்று அவர் கூறுகிறார், "நான் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துவேன். மேலும் நாங்கள் பரபரப்பான திருவிழாவில் நிறைய சம்பாதிக்க முடிந்தது. ஆகஸ்ட் மற்றும் நவம்பர் இடையே சீசன்."

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடது: போனி மற்றும் சுவாதி. வலது: இச்சாபூர் கிராமத்தில் உள்ள குடும்ப வீட்டில் அவரது தாயார் நிவாவுடன்

இந்த நேரத்தில், போனி கிருஷ்ணாநகரைச் சேர்ந்த சிலை தயாரிப்பாளர் ஸ்வாதி சர்கார் என்பவரை காதலித்தார். ஸ்வாதி பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளுடன் சிலைகளை அலங்கரித்து வாழ்க்கையை நடத்தி வந்தார். போனிக்கு இது ஒரு அழுத்தமான நேரம் என அவர் நினைவு கூர்ந்தார், "என்னைப் பற்றி நான் அவளிடம் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால், [எனது அறுவை சிகிச்சையின் வெற்றியைப் பற்றி] மருத்துவரின் உறுதி என்னிடம் இருந்தது. அதனால் நான் அவளிடம் சொல்ல முடிவு செய்தேன்.”

ஸ்வாதியும் அவரது தாயார் துர்காவும் உறுதுணையாக இருந்தனர், மேலும் ஸ்வாதி 2006-ல் போனியின் அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 29, 2009 அன்று, போனியும் சுவாதியும் திருமணம் செய்து கொண்டனர்.

அன்று இரவு போனியிடம் தன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது ஸ்வாதி, “என் மகளுக்கு உன் உடம்பில் உள்ள பிரச்சனை புரிந்துவிட்டது. அவள் உன்னை இன்னும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறாள், நான் என்ன சொல்ல முடியும்? நீ அவள் பக்கத்தில் இருப்பாய். தொடர்ந்து இருப்பாய்.”

***

போனி மற்றும் சுவாதியின் வாழ்க்கை இடம்பெயர்ந்ததில் இருந்து தொடங்கியது. கிருஷ்ணாநகரில் உள்ளவர்கள் கேவலமான விஷயங்களைச் சொல்லத் தொடங்கினர், எனவே தம்பதியினர் 500 கிலோமீட்டர் வடக்கே டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மத்திகாராவுக்குச் செல்ல முடிவு செய்தனர், அங்கு யாரும் தங்களை அடையாளம் காண மாட்டார்கள். போனி அருகில் உள்ள சிலை செய்யும் பட்டறையில் வேலை தேடினார். “அவர்கள் என் வேலையைப் பார்த்து, எனக்கு தினசரி 600 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். நான் ஒப்புக்கொண்டேன், ”என்று அவர் கூறுகிறார். "மதிகரா மக்கள் எனக்கு மிகுந்த அன்பைக் கொடுத்தனர்," என்று அவர் மேலும் கூறுகிறார், அவரைச் சுற்றியுள்ள ஆண்கள் அவரை எவ்வாறு தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நினைவு கூர்ந்தார், மேலும் அவர்கள் மாலை நேரங்களில் தேநீர் கடைகளில் ஒன்றாகச் சுற்றித் திரிவார்கள்.

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடது: கிராமத்தில் ஒரு தேநீர் கடையில் போனி. வலது: உள்ளூர் தொழிலதிபர்களான புஷ்பநாத் தேவ்நாத் (இடது), மர வியாபாரி மற்றும் இளநீர் விற்கும் கோரங் மிஸ்ரா (வலது) ஆகியோருடன்

ஆனால் போனியின் குடும்பத்தினர் அவர்களை ஏற்கத் தயாராக இல்லாததால் தம்பதியரால் இச்சாபூருக்குத் திரும்ப முடியவில்லை. போனியின் தந்தை இறந்தபோது, ​​அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. "விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, என்னைப் போன்ற பலர் சமூகத்தின் மீது கொண்ட பயத்தால் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

2016-ம் ஆண்டு கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில், போனியின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படமான ’ஐ ஆம் போனி’ சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்றபோது, ​​அவர்களது போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக தம்பதியினர் உணர்ந்தனர். அதன்பிறகு, போனிக்கு கிஷாலயா குழந்தைகள் இல்லத்தில் கால்பந்து பயிற்சியாளராக வேலை வழங்கப்பட்டது. மேற்கு வங்கக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் (WBCPCR) நடத்தப்படும் பராசத் நகரில் உள்ள சிறுவர்களுக்கான பராமரிப்பு நிறுவனம் அது. "குழந்தைகளுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருக்க முடியும் என்று நாங்கள் உணர்ந்தோம்" என்று WBCPCR-ன் தலைவர் அனன்யா சக்ரவர்த்தி சாட்டர்ஜி கூறுகிறார். "போனியை நாங்கள் பயிற்சியாளராக நியமித்தபோது, ​​அவர் மாநிலத்திற்காக பல விருதுகளை வென்ற ஒரு சிறந்த கால்பந்து வீரர் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆனால் அவர் வேலை இல்லாமல் இருந்தார். எனவே அவர் ஒரு நல்ல விளையாட்டு வீரர் என்பதை நினைவூட்டுவது முக்கியம் என்று நாங்கள் உணர்ந்தோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

போனி ஏப்ரல் 2017 முதல் அங்கு பயிற்சியளித்து வருகிறார், மேலும் அவர் ஓவியம் மற்றும் சிற்பம் பயிற்றுவிப்பராகவும் உள்ளார். அவர் தனது அடையாளத்தைப் பற்றி குழந்தைகளிடம் சுதந்திரமாகப் பேசுகிறார். பலருக்கு நம்பிக்கைக்குரியவர். ஆனால் அவர் தனது எதிர்காலத்தைப் பற்றி இன்னும் கவலைப்படுகிறார். “எனக்கு நிரந்தர வேலை இல்லை. நான் வேலைக்கு அழைக்கப்பட்ட நாட்களுக்கு மட்டுமே எனக்கு சம்பளம் வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறுகிறார். அவர் வழக்கமாக சுமார் ரூ.14,000 ஒரு மாதத்திற்கு வருமானம் ஈட்டுகிறார். ஆனால் 2020-ல் கோவிட்-19 பரவிய பிறகு அவருக்கு நான்கு மாதங்களுக்கு வருமானம் இல்லை.

பிப்ரவரி 2020-ல், இச்சாப்பூரில் உள்ள தனது தாயின் வீட்டிலிருந்து சில படிகள் தொலைவில் ஒரு வீட்டைக் கட்ட ஐந்து வருடக் கடனைப் பெற்றார் போனி. அங்கு ஸ்வாதியும் அவரும் இப்போது அவரது சகோதரர், தாய் மற்றும் சகோதரியுடன் வசிக்கின்றனர். போனி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை விட்டு ஓட வேண்டியிருந்த வீடு அது. ஒரு கால்பந்து வீரராக போனியின் சம்பாத்தியம் இந்த வீட்டைக் கட்டுவதற்குச் செலவிடப்பட்டது, அவரும் ஸ்வாதியும் இப்போது ஒரு சிறிய படுக்கையறையை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் இன்னும் குடும்பத்தினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் அவர்களது அறைக்கு வெளியே ஒரு சிறிய பகுதியில் எரிவாயு அடுப்பில் தங்கள் உணவை சமைக்கிறார்கள்.

PHOTO • Riya Behl
PHOTO • Riya Behl

இடதுபுறம்: இச்சாப்பூரில் உள்ள முடிக்கப்படாத வீட்டிற்கு வெளியே ஸ்வாதி மற்றும் போனி. வலது: இப்போது தங்களுடைய சிறிய படுக்கையறையில் இருக்கும் கோப்பைகளின் காட்சிப் பெட்டி,  தங்களுடைய புதிய வீட்டில் நிரந்தர இடத்தைப் பெறும் என்று தம்பதியினர் நம்புகிறார்கள்

மைக்ரோ வீட்டுக்கடன் ரூ. 345,000 பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. போனி தனது வாழ்க்கையைப் பற்றிய திரைப்படத்தின் உரிமையை விற்றதன் மூலம் அதைச் சம்பாதிக்க எதிர்பார்த்தார். ஆனால் மும்பையைச் சேர்ந்த படத் தயாரிப்பாளரால் படத்தை விற்க முடியவில்லை. எனவே போனியின் கடன்கள் செலுத்தப்படாமல் உள்ளன.

சான்றிதழ்களும் பிரகாசிக்கும் கோப்பைகளும்  நிறைந்த ஒரு காட்சிப்பெட்டியின் முன் அமர்ந்து, போனி ஒரு பால்புதுமையராக தனது வாழ்க்கையை விவரிக்கிறார். நிச்சயமற்ற வாழ்க்கை இருந்தபோதிலும், அவரும் ஸ்வாதியும் செய்தித்தாள் துணுக்குகள், புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பொருட்களை ஒரு சிவப்பு சூட்கேஸில் கவனமாகப் பாதுகாத்துள்ளனர். அது காட்சிப்பெட்டிக்கு மேலே வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டத் தொடங்கிய வீடு நிரந்தரமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

"சில நேரங்களில், எனது கிராமத்தில் ஆகஸ்ட் 15 [சுதந்திர தினம்] அன்று கிளப்களுடன் நட்புரீதியான போட்டிகளை நான் இன்னும் விளையாடுகிறேன்," என்று போனி கூறுகிறார், "ஆனால் இந்தியாவுக்காக மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை."

தமிழில் : ராஜசங்கீதன்

ರಿಯಾ ಬೆಹ್ಲ್ ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾ (ಪರಿ) ದಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು ಛಾಯಾಗ್ರಾಹಕರಾಗಿದ್ದಾರೆ. ಪರಿ ಎಜುಕೇಶನ್ ವಿಭಾಗದಲ್ಲಿ ವಿಷಯ ಸಂಪಾದಕರಾಗಿ, ಅಂಚಿನಲ್ಲಿರುವ ಸಮುದಾಯಗಳ ಜನರ ಜೀವನವನ್ನು ದಾಖಲಿಸಲು ಅವರು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Riya Behl
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan