“சார், சில வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர். அவர்களை பார்த்துவிட்டு வரலாமா? எனது இயர்போனை வைத்திருக்கிறேன், ங்கள் பாடங்களை கவனிப்பேன்,” என்று தயக்கத்துடன் ஆசிரியரிடம் அனுமதி கேட்கிறார் முசாஃபர். தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் அவர், வந்திருக்கும் சில வாடிக்கையாளர்களை கவனிக்கிறார். “தாஜி... சாப்ஜி லே-லோ...” என்று மீண்டும் ஒருமுறை கூவியபடி ஸ்மார்ட் ஃபோனில் அறிவியல் வகுப்பிற்கு திரும்புகிறார்.

முசாஃபர் ஷேக்கிற்கு  ஜூன் 15ஆம் தேதிதான் ஆன்லைன் வகுப்புகளின் முதல் நாள்.   “எனக்கு எல்லா நேரமும் போக்குவரத்து நெரிசல், வாடிக்கையாளர்களின் உரையாடல் என பின்னணியில் இரைச்சல் இருந்துகொண்டே இருக்கும். வகுப்பில் கவனம் செலுத்துவதா, காய்கறிகளை விற்பதா என்று முடிவு செய்ய முடியாது,” என்கிறார் 8ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதாகும் முசாஃபர். வடக்கு மும்பை மலாடின் மால்வானி பகுதியில் பரபரப்பு நிறைந்த காலை 10 மணி வேலையில் தனது கைவண்டியில் கத்திரிக்காய், பீட்ரூட், வெள்ளரி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை விற்றபடி இணைய வழி வகுப்பில் பங்கெடுக்கிறார்.

வகுப்பில் பங்கெடுப்பதற்காக நண்பனிடமிருந்து சில மணி நேரத்திற்கு தொலைபேசியை முசாஃபர் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு என சொந்தமாக ஸ்மார்ட்ஃபோன் கிடையாது. “இந்நேரத்திற்கு என அண்ணன் முபாரக்கும் [9ஆம் வகுப்பு படிக்கிறார்] தனது நண்பனின் வீட்டில் இணைய வழி வகுப்பில் பங்கெடுத்து கொண்டிருப்பான். அப்பாவும் வேலையில் இருப்பார். என்னால் தள்ளுவண்டியை நிறுத்தி வைக்க முடியாது. மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூன் 10ஆம் தேதி தான் நாங்கள் மீண்டும் [பணியை] தொடங்கினோம்,” என்கிறார் அவர்.

சிறுவனின் தந்தை இஸ்மாயில் ஜனவரி மாதம் தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்தார். குடும்பச் செலவு அதிகரித்ததால், கூடுதல் வருமானம் தேவைப்பட்டது. 40 வயதாகும் இஸ்லாம் லாரி ஓட்டுநரின் உதவியாளராக இருந்து வந்தார். போதிய வருமானமின்றி அந்த வேலையை விட்டு விட்டார் (இருப்பினும் ஜூன் மாதம் அந்த வேலைக்கே மீண்டும் திரும்பினார்). ஹேர்கிளிப்புகளை செய்வது, கவுன்களை தைப்பது போன்றவை சிறுவனின் தாயான 35 வயது மோமினாவின் வேலை. 2 வயதாகும் ஹஸ்னைன், 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது ஃபர்சானா, 6ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது அஃசானா என ஏழு பேர் கொண்ட குடும்பம்.

தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்த இரண்டு மாதங்களில் மார்ச் 25ஆம் தேதி கோவிட்-19 பொதுமுடக்கம் தொடங்கியதால் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்துவந்த காய்கறி வியாபாரமும் முடங்கியது. “அப்பா தான் முதலில் தள்ளுவண்டி ஓட்டினார்,” என்று கூறும் முசாஃபர், தனது 17 வயது அண்ணன் முபாரக்குடன் காலை 7 மணி முதல் மதியம் வரையிலான பள்ளிக்குச் சென்றான். இரண்டு சிறுவர்களுமே பள்ளி நேரம் முடிந்ததும் காய்கறிகளை விற்பதற்கு தந்தைக்கு உதவினர்.

Mubarak Sheikh and his brother Muzzafar (in white) have been trying to juggle attending online classes and selling vegetables on a handcart
PHOTO • Jyoti
Mubarak Sheikh and his brother Muzzafar (in white) have been trying to juggle attending online classes and selling vegetables on a handcart
PHOTO • Jyoti

தள்ளுவண்டியில் காய்கறி விற்றபடி இணைய வழி வகுப்பில் பங்கெடுப்பது என்பது முபாரக் ஷேக், அவரது தம்பி முசாஃபர் (வெள்ளை  உடையில்) இருவருக்கும் போராட்டமாக உள்ளது

“கடந்தாண்டு வரைக்கும் கஷ்டப்பட்டு ரூ.5000 [மாதந்தோறும்] சம்பாதித்து வந்தோம்,” என்கிறார் மோமினா. உறவினர்கள், அக்கம்பக்கத்தினரையே அக்குடும்பம் அதிகம் சார்ந்திருந்தது. அண்டை வீட்டாரிடம் தையல் இயந்திரத்தை மோமினா வாங்கிய பிறகு துணி தைப்பது, ஹேர் கிளிப்புகள் செய்வது என மாதம் ரூ.1000 வரை ஈட்டி வந்தார். ஆனால் ஊரடங்கினால் அவரது வருமானமும் நின்றுபோனது. “மளிகைப் பொருட்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம், பள்ளிக் கட்டணம் என அனைத்தையும் நிர்வகிப்பது கடினமாக இருந்தது,” என்கிறார் அவர். “எனவே நாங்கள் காய்கறிகளை விற்கத் தொடங்கினோம், அதுவும் ஊரடங்கினால் முடங்கிபோனது.”

ஷேக் குடும்பத்தினரைப் போன்று அமைப்பு சாரா துறைகளில் தினக்கூலிகளாக இருக்கும் பெருவாரியான புலம்பெயர் குடும்பங்கள் பொதுமுடக்கத்தினால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்தன. “சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கினால் மோசமாக பாதிக்கப்பட்டனர். அம்மாதத்தில் மட்டும் 12.15 கோடி பேரில் 9.12 கோடி பேர் வேலையிழந்தனர்,” என்கிறது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்  (CMIE) ஆகஸ்ட் 2020 வெளியிட்ட கட்டுரைக் குறிப்பு.

பொதுமுடக்கத்தின்போது பல குடும்பங்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதை ஷேக் குடும்பம் கண்டது. மீண்டும் திரும்பி சென்றுவிடலாம் என்றுகூட நினைத்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் பாலாப்பூர் கிராமத்திலிருந்து 1999ஆம் ஆண்டு வேலை தேடி மும்பை வந்தனர். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக அவர்கள் இருந்தனர். “எங்கள் கிராமத்திற்கு திரும்பிவிட எண்ணினோம்” என்கிறார் மோமினா, “பேருந்து அல்லது ரயில் டிக்கெட் என எதுவும் கிடைக்கவில்லை. நடந்து சென்றவர்கள், டெம்போவில் சென்றவர்கள் விபத்தில் இறந்த செய்திகளை கேள்விப்பட்டோம். நாங்கள் ஆபத்துகளை எதிர்கொள்ள விரும்பவில்லை. இயல்பு நிலை திரும்பும் வரை இங்கேயே தங்கிவிட என முடிவு செய்தோம்.”

பெற்றோர்கள் வேலையிழந்து விட்டதால், ஊரடங்கும், கடுமையான கட்டுப்பாடுகளும் அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில்கூட முசாஃபரும், முபாரக்கும் காய்கறிகளை விற்க முயன்றனர். வீட்டின் அருகே உள்ள சந்தையில் கூட்டத்தை கட்டுப்படுத்தியபோது முபாரக்கின் முழங்கையில் காவலர் தடியால் அடித்துவிட்டார்,” என்கிறார் முசாஃபர். அதன் பிறகு ஒரு மாதத்திற்கு நாங்கள் மால்வானியில் மற்றொரு காய்கறி வியாபாரியிடம் வேலை செய்தோம்.” இதற்காக மே மாதம் வரை நாளொன்றுக்கு தலா ரூ.50ஐ ஒவ்வொருவரும் ஈட்டி வந்தார்கள்.

“ஜூன் மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், இச்சிறுவர்கள் தள்ளுவண்டியை மீண்டும் வாடகைக்கு எடுத்தனர். தள்ளுவண்டி வாடகை, டெம்போ வாடகை (மொத்த விற்பனை சந்தைக்கு) , காய்கறிகளை வாங்குவதற்கு என மாதம் ரூ. 3,000-4000 வரை கிடைத்தது.”

'We have one simple mobile. So we borrowed khala’s mobile', says Mubarak, here with his mother Momina (who stitches gowns and makes hairclips for an income) and sister Afsana
PHOTO • Jyoti
'We have one simple mobile. So we borrowed khala’s mobile', says Mubarak, here with his mother Momina (who stitches gowns and makes hairclips for an income) and sister Afsana
PHOTO • Jyoti

'எங்களிடம் சாதாரண கைப்பேசி தான் உள்ளது. எனவே காலாவிடம் கைப்பேசி கடன் வாங்கினோம்', என்கிறார் முபாரக். தனது தாய் மோமினா (வருமானத்திற்காக கவுன்கள் தைக்கிறார், ஹேர் கிளிப்புகள் செய்கிறார்), சகோதரி அஃப்சானாவுடன்

அதே மாதத்தில் இஸ்லாமும் லாரி ஓட்டுநரின் உதவியாளராக மீண்டும் பணியை தொடங்கி ரூ.4000 வரை சம்பாதிக்கிறார். “9-10 முறை அவர் மும்பைக்கு வெளியே சென்று வருகிறார் [ஒவ்வொரு முறையும் 2-3 நாட்கள்],” என்கிறார் மோமினா. “இடையில் 2-3 மணி நேரங்கள் வீட்டில் ஓய்வெடுத்துவிட்டு உடனடியாக அடுத்த பயணத்திற்குச் சென்றுவிடுகிறார். அவர் இரவுபகலாக உழைக்கிறார்.”

அதேநேரத்தில் மோமினாவும் வேலையை தொடங்கிவிட்டார். மாதத்தில் சில நாட்கள் மட்டும் வேலை இருந்தது. “ஜூலையிலிருந்து எனக்கு சில வேலைகள் கிடைக்கத் தொடங்கின. ஆனால் மாதத்திற்கு 10 நாட்கள் தான் வேலை இருக்கும், மார்ச் மாதத்திற்கு முன் 20 நாட்கள் வரை வேலை இருந்தது,” என்கிறார் அவர். “நஷ்டத்தின் காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதால், சில ஆர்டர்கள் மட்டுமே கிடைக்கிறது என சப்ளையர் கூறுகிறார்,”

அவர்களின் வாழ்வாதாரத்துக்கான சில கதவுகள் மெல்ல திறந்தாலும், முசாஃபரும், முபாரக்கும் படித்து வரும் மல்வானி அம்புஜ்வாடி குடிசைப் பகுதியில் வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருகுல் ஆங்கில உயர் நிலை மற்றும் இளையோர் கல்லூரி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. என்ஜிஓக்களால் நடத்தப்படும் இப்பள்ளியில் கிண்டர்கார்டன் முதல் 12 ஆம் வகுப்பு வரை 928 மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டிற்கான இணைய வழி வகுப்புகள் ஜூன் மாதம் முதல் தொடங்கின.

“எங்களிடம் ஒரு சாதாரண கைப்பேசி தான் உள்ளது. எனவே நாங்கள் காலாவிடம் [சித்தி] கடன் வாங்கிக் கொள்வோம்,” என்று விளக்குகிறார் முபாரக். பாட அட்டவணை குறுக்கீடு செய்வதால் நான்கு பிள்ளைகளுக்கும் ஒரு ஸ்மார்ட்ஃபோன் போதாது. நகராட்சி நிர்வாகம் நடத்தும் எம்.ஹெச்.பி உருது பள்ளியில் பயிலும் அவர்களின் இளைய சகோதரிகளான ஃபர்சானாவும், அஃப்சானாவும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அம்புஜ்வாடியில் தோழியின் வசிப்பிடத்திற்கு சென்று இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.

கடன் வாங்கிய கைப்பேசியில் முசாஃபரும், முபாரக்கும் நேரம் ஒதுக்கி காய்கறி விற்பனையும், இணைய வழி வகுப்பில் பங்கேற்பதையும் செய்கின்றனர். சந்தையில் தங்களின் முதல் இணைய வழி வகுப்புகள் கொடுத்த இரைச்சல் அனுபவத்தை தவிர்க்க அம்புஜ்வாடி குடிசைப் பகுதியில் தங்களின் ஒற்றை அறை வீட்டில் அமர்ந்துள்ளனர். தினமும் 6 முதல் 7 மணி நேரம் வேலைசெய்துவிட்டு 3 மணி நேர வகுப்பில் கவனம் செலுத்தி படிப்பது இப்போதும் அவர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது (ஞாயிறுகளில் மட்டும் விடுமுறை).

ஒவ்வொரு நாளும் காய்கறி கொள்முதல் செய்யும் வேலையை சகோதரர்கள் இருவரும் பிரித்துக் கொள்கின்றனர் - அம்புஜ்வாடியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவி மும்பையின் வாஷியில் இயங்கும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC) கிடங்கிலிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்கின்றனர். டெம்போவிற்கான வாடகையை பிற வியாபாரிகளுடன் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஜனவரியில் இஸ்லாம் தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்தபோதும் இப்படிச் செய்துள்ளனர். “நாங்கள் இரவு சுமார் 12 மணிக்குச் சென்றுவிட்டு அதிகாலை 5-5.30 மணிக்கு வீடு திரும்புவோம்,” என்கிறார் முசாஃபர். “முபாரக்கிற்கு பேரம் பேசத் தெரியாததால் பெரும்பாலும் நான் தான் செல்வேன். 7.30 மணியளவில் அவற்றை கழுவி தள்ளுவண்டியில் விற்பனைக்கு அடுக்கி விடுவோம்.”

PHOTO • Jyoti

'வகுப்பிலா, காய்கறி விற்பனையிலா எதில் கவனம் செலுத்துவது எனத் தெரியவில்லை,' என்று முசாஃபர், தனது இணையக் கல்வியின் முதல் நாளை நினைவுக்கூர்கிறார்

இரவு முழுவதும் மொத்த விற்பனை சந்தையில் இருந்துவிட்டு அடுத்த நாள் காலை அல்லது மதியம் இணைய வழி வகுப்புகளில் விழிப்புடன் இருக்க கடுமையாக முயற்சிக்க வேண்டி உள்ளது. “வகுப்பின் போது கண்கள் கனத்துவிடுகிறது. கண்களில் நீர் தெளித்து அல்லது தலையை ஆட்டி தூக்கத்தை கட்டுப்படுத்த வேண்டி உள்ளது,” என்கிறார் முபாரக்.

15-20 கிலோ காய்கறிகள் கொண்ட பலமான தள்ளுவண்டியை எடுத்துச் செல்வது என்பது மிகவும் சோர்வடையச் செய்கிறது. “என் தோள்பட்டை வலிக்கிறது, உள்ளங்கைகள் எரிகின்றன. இதனால் எழுதும்போது வலிக்கிறது,” என்று மல்வானியின் குறுக்கு தெருக்களில் தள்ளுவண்டியை தள்ளியபடி சொல்கிறான் முசாஃபர். “நாங்கள் இந்த வேலையை எங்களுக்குள் மாற்றிக் கொள்வோம். இன்று [நவம்பர் 28]  முபாரக்கிற்கு காலை வகுப்பு என்பதால் நான் வேலைக்கு வந்தேன். எனக்கு மதியம் 1.30 மணிக்கு வகுப்பு.”

அவரது பள்ளியின் பல மாணவர்களும் இதுபோன்ற தடைகளை சந்திக்கின்றனர். குருகுல் ஆங்கில உயர் நிலை மற்றும் இளையோர் கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான ஃபரித் ஷேக் பேசுகையில், “எங்கள் மாணவர்களில் கிட்டதட்ட 50 பேர் உணவகங்களில், கட்டுமானப் பணியிடங்களில், காய்கறி வியாபாரத்தில் வேலை செய்கின்றனர். வேலை காரணமாக சோர்வு அல்லது தூக்கம் வருவதாக அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. வகுப்பின்போது விழிப்புடன் இருப்பது என்பது அவர்களுக்கு கடினமானது.”

“ஊரடங்கின் போது மால்வானி, தாராவி, மண்குர்த், கோவண்டி குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த பல குழந்தைகள் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர்,” என்கிறார் மும்பையைச் சேர்ந்த என்ஜிஓ பிரதாமின் திட்டத் தலைவர் நவ்நாத் காம்ப்ளி. “இணைய வழி வகுப்புகளுக்கான கருவிகள் இப்பகுதிகளில் கிடையாது, பெற்றோர் வேலையிழந்ததும் இதற்கு முக்கிய காரணம்.”

ஷேக்கின் வீட்டிலிருந்து சுமார் 10 நிமிட தூரத்தில் அம்புஜ்வாடியில் வசிப்பவர்களில் 17 வயதாகும் ரோஷ்னி கானும் ஒருவர். அதே குருகுல் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் அவள் ஊரடங்கின்போது இணைய வழி வகுப்புகளில் சேர பழைய ஸ்மார்ட்ஃபோன் வாங்குவதற்காக கேக் கடை ஒன்றில் வேலைக்குச் செல்ல தொடங்கினாள். அவளது தந்தை சாபிர், வெல்டிங் வேலை செய்பவர். தாய் ருக்சனா வீடுகளில் வேலை செய்கிறார்; அவர்களின் பெற்றோர் பீகார் மாநிலம் மதேப்பூரா மாவட்டம் கலோடஹா கிராமத்திலிருந்து 1970களில் மும்பை வந்தவர்கள்.

Along with online school, Roshni Khan continues to work at a cake shop to support her family, including her mother Ruksana and sister Sumaira (right)
PHOTO • Jyoti
Along with online school, Roshni Khan continues to work at a cake shop to support her family, including her mother Ruksana and sister Sumaira (right)
PHOTO • Jyoti

இணைய வழிப் பள்ளியுடன் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக கேக் கடையில் வேலையை தொடரும் ரோஷ்னி கான் தனது தாய் ருக்சனா, சகோதரி சுமைராவுடன் (வலது)

“அப்பாவிடம் சாதாரண கைப்பேசி தான் உள்ளது,” என்கிறார் ரோஷ்னி. “மார்ச் மாதம் முதல் அவர் வேலையிழந்துவிட்டதால் கைப்பேசி [ஸ்மார்ட்ஃபோன்] வாங்குவது என்பது அவர்களுக்கு சாத்தியமற்றது.” அம்புஜ்வாடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்கு மலாடில் உள்ள இந்த கேக் கடையில் அவள் பொட்டலம் கட்டுவது, மஃபின்களை விற்பது, கேக்குகளை அலங்கரிப்பது போன்ற வேலைகளை செய்கிறார். “மார்ச் மாதம் இந்த வேலையைப் பற்றி என் தோழி சொன்னாள், நான் சேர்ந்துவிட்டேன்,” என்று அருகில் உள்ள ஷேர் ஆட்டோவை நோக்கி நடந்தபடி சொல்கிறார் ரோஷ்னி. தினமும் வேலைக்குச் செல்ல ஒரு முறைக்கு ரூ.20 செலவிடுகிறார்.

மே மாத மத்தியில் தனது மாத வருமானத் தொகை ரூ.5000லிருந்து ரூ.2,500 செலவிட்டு ரோஷ்னி பழைய கைப்பேசி ஒன்றை வாங்கினார். பெற்றோருக்கு உதவி செய்வதற்காக அவர் தொடர்ந்து வேலைக்குச் சென்று வருகிறார்.

ஆனால் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையிலான அவரது பணி நேரம் பள்ளியின் பாட நேரத்தில் குறுக்கீடு செய்கிறது. “வாரத்தில் 2-3 முறை மதிய நேர வகுப்புகளை தவறிவிட்டுவிடுவேன்,” என்கிறார் அவர். “தவறவிட்ட பாடங்களை நானே படித்துக் கொள்வேன். சந்தேகம் எழுந்தால் தொலைப்பேசியில் அழைத்து ஆசிரியரிடம் கேட்டுக்கொள்வேன்.”

ரோஷினியின் ஏழு மணி நேரப்பணி அவரை சோர்வடையச் செய்துவிடுகிறது. “நான் சோர்வாக உணர்கிறேன், என்னால் வீட்டுப்பாடங்களை முடிக்க முடிவதில்லை. இரவு உணவு சாப்பிடாமல் கூட நான் அடிக்கடி தூங்கிவிடுகிறேன். சில சமயம் ஏற்கனவே [வேலையில்] வருவாய் ஈட்டுவதால் ஏன் படிக்க வேண்டும்? என்றுக்கூட சிலசமயம் தோன்றுகிறது,” என்கிறார் அவர்.

படிப்பில் ஆர்வம் குறைதல் என்பது பொதுவானது என்கிறார் பிரதாமின் நவ்நாத் காம்ப்ளி. “வேலை செய்யும் குடிசைப்பகுதி குழந்தைகள்,” என்று குறிப்பிடும் அவர், “கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை” என்கிறார். நல்ல கல்வி கிடைக்காமல் போனால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ரோஷினிக்கு மூன்று இளைய சகோதரிகள் உள்ளனர் - 7ஆம் வகுப்பு படிக்கும் ரிஹன்னா, 5ஆம் வகுப்பு படிக்கும் சுமைரா, 4ஆம் வகுப்பு படிக்கும் ரிஸ்வான் என அனைவரும் எம்.ஹெச்.பி பள்ளியில் படிக்கின்றனர். “என் பணியிடத்திற்கு கைப்பேசியை எடுத்துச் சென்றுவிடுவதால், அவர்கள் இணைய வழி வகுப்பிற்காக தோழிகளின் இடங்களுக்கு செல்கின்றனர்,” என்கிறாள் அவள்.

'I feel so tired, I cannot finish homework', says Roshni. 'Sometimes I feel I already [have a job and] earn, so why do I need to study?'
PHOTO • Jyoti
'I feel so tired, I cannot finish homework', says Roshni. 'Sometimes I feel I already [have a job and] earn, so why do I need to study?'
PHOTO • Jyoti

'நான் சோர்வாக உணர்கிறேன், என்னால் வீட்டுப்பாடங்களை முடிக்க முடிவதில்லை,' என்கிறார் ரோஷ்னி. 'நான் ஏற்கனவே [வேலையில் இருந்து] சம்பாதிக்கிறேன், ஏன் படிக்க வேண்டும் என்று சிலசமயம் தோன்றுகிறது?'

செப்டம்பர் மத்தியில் அவர்களின் பெற்றோர் பணிக்குத் திரும்பினாலும், சம்பளம் குறைந்துள்ளது. “முன்பெல்லாம் நான் நான்கு வீடுகளில் வேலை செய்வேன். இப்போது ஓரிடத்தில் மட்டும்தான் வேலை செய்கிறேன். மற்ற வீடுகளில் என்னை  இன்னும் அழைக்கவே இல்லை,” என்கிறார் ருக்சனா. மார்ச் மாதத்திற்கு முன்பு வரை மாதம் ரூ.4000 சம்பாதித்து வந்த அவர், இப்போது மாதம் ரூ.1000 தான் ஈட்டுகிறார்.

“மால்வானி தொழிலாளர்கள் கூடும் இடத்தில் நிற்கும்போது, ரோஷ்னியின் தந்தைக்கு இப்போது மாதத்தில் 15 நாட்கள்  [ஒரு நாளுக்கு ரூ.400], மட்டுமே வேலை கிடைக்கிறது. முன்பெல்லாம் 25 நாட்களுக்கு கிடைக்கும்,” என்கிறார் ருக்சனா. ஊரடங்கிற்கு பிறகு ரோஷ்னியின் பங்களிப்பைச் சேர்த்தாலும் அக்குடும்பத்தின் மாத வருவாய் என்பது முன்பு ரூ.14,000 என இருந்தது, இப்போது ரூ.12,000 என சரிந்துள்ளது.

“எங்கள் வருமானம் குறைந்துவிட்டது, செலவுகள் குறைவதில்லை,” என்கிறார் ருக்சனா, மளிகைப் பொருட்கள், கல்வி கட்டணம், மின் கட்டணம், சமையல் எரிவாயு உருளைகள், உணவு தானியங்கள் போன்றவற்றிற்கு செலவிடுகிறார் (இக்குடும்பத்திற்கு என குடும்ப அட்டை கிடையாது, அதற்கு விண்ணப்பித்ததும் இல்லை).

மகள் மீது சுமத்தப்படும் நிதிச்சுமை குறித்து ருக்சனா கவலை கொள்கிறார். “ரோஷ்னி மிகச் சிறியவள். அவளைக் குறித்து எனக்கு கவலையாக உள்ளது,” என்கிறாள் அவள். “இது மிகவும் அதிகமான பொறுப்பை சுமப்பதாகும்.”

முசாஃபர், முபாரக்கை போன்று பணிக்கும், இணைய வழி வகுப்புகளுக்கும் இடையே ரோஷ்னியும் போராடி வருகிறார். (குறைந்தது) டிசம்பர் 31 வரை நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடியே இருக்கும் என பிரிஹன்மும்பை நகராட்சி அறிவித்துள்ளது.

“படிப்புடன் வேலையும் செய்வது நீண்ட காலத்திற்கு தொடர்ந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நான் ஒருபோதும் படிப்பை விடமாட்டேன்,” என்று கூறியபடி இணைய வழி வகுப்பில் பங்கேற்க மற்றொரு வீட்டிற்கு நடந்து செல்கிறார் முசாஃபர். “சோர்விலும் படிப்பதற்கு நாங்கள் பழகிவிட்டோம், இனிமேலும் சமாளித்துக் கொள்வோம்.”

தமிழில்: சவிதா

ಜ್ಯೋತಿ ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಹಿರಿಯ ವರದಿಗಾರರು; ಅವರು ಈ ಹಿಂದೆ ‘ಮಿ ಮರಾಠಿ’ ಮತ್ತು ‘ಮಹಾರಾಷ್ಟ್ರ1’ನಂತಹ ಸುದ್ದಿ ವಾಹಿನಿಗಳೊಂದಿಗೆ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದಾರೆ.

Other stories by Jyoti
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha