மரம் வெட்டுபவர், தன் கோடாலியை உயர்த்தி, காலடியில் கிடத்தியிருக்கும் மரத்தை நோக்கி அதைச் செலுத்துகிறார். ‘தட்’டென்ற ஒலியுடன் அது மரத்துண்டைத் தாக்குகிறது. பத்தடி தூரத்தில் நிற்கும் என்னை அச்சத்தம் திடுக்கிட வைக்கிறது. மரம் வெட்டுபவரின் முதுகில் வியர்வை ஊற்றாக வழிகிறது. அது அவர் இடுப்பில் அணிந்திருக்கும் துண்டை நனைக்கிறது. ‘தட்’, என மீண்டும் அந்த மரத்துண்டை வெட்டுகிறார். மரத்துண்டு இரண்டாகப் பிளக்கிறது. மரம் வெட்டுபவரின் பெயர் காமாட்சி. பல காலம் வேளாண் தொழிலாளராகப் பணி செய்தவர். தலையை நிமிர்த்தாமலேயே என்னுடன் உரையாடுகிறார். அவர் கண்கள் கோடாலியின் முனையை விட்டு விலகவில்லை.
தஞ்சாவூரின் மிகப் பழம் பூங்காவான, சிவகங்கைப் பூங்கா வின் அருகில் உள்ள ஒரு கொட்டாயில்தான் கடந்த 30 ஆண்டுகளாக, காமாட்சி இந்த வேலையைச் செய்து வருகிறார். சிவகங்கைப் பூங்காவின் வயது 150. காமாட்சியை விட இரு மடங்கு அதிக வயது. அவர் தோராயமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இசைக் கருவி அதை விடப் பலப்பல ஆண்டுகள் பழையது. நான்கு அடி நீளமுள்ள பலா மரத்தின் பலகையில் இருந்து, அவர் வீணைக்கான அடிப்பாகத்தை உருவாக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.
மரத்துண்டு சரிந்து விடாமல் இருக்க, குடமாக மாறப்போகும் இடத்தின் மீது தன் கால்களை ஊன்றிப் பிடித்துக் கொள்கிறார். கொட்டாய் நிழலில் இருந்தாலும், வெக்கையாக இருக்கிறது. எங்கும் தூசு பறக்கிறது. காமாட்சியின் வேலை கடினமானது. இந்தத் திறன் தேவைப்படும் வேலைக்காக அவருக்குக் கிடைக்கும் நாட்கூலி 600 ரூபாய். ஒவ்வொரு முறை கோடாலி மரத்தை வெட்டும் போதும் அவர் வாயிலிருந்து பெரும் சத்தம் வருகிறது. அவ்வப்போது வியர்வை வழியும் முகத்தைத் துண்டினால் துடைத்துக் கொள்கிறார்.
சில மணி நேரங்களில், 30 கிலோ எடையுள்ள மரத்தை 20 கிலோவாக வெட்டி, செதுக்கிக் குறைக்கிறார். இங்கிருந்து அடுத்த நிலை தயாரிப்புக்காக, பட்டறை செல்ல பலாமரத்துண்டு தயாராகி விட்டது. அங்கே இது மேலும் செதுக்கப் பட்டு பளபளப்பாக்கப்படும். அடுத்த ஒரு மாத காலத்தில், ஒரு வீணை வித்துவானின் மடியில் அமர்ந்து, இனிமையான இசையை வழங்க அது தயாராகிவிடும்.
வீணை தஞ்சாவூரில் பிறந்தது. இதற்கு முந்தைய வடிவமான ‘சரஸ்வதி வீணை’, இந்தியாவின் தேசிய இசைக்கருவி. மிருதங்கம், புல்லாங்குழல், வீணை என்னும் இந்த மூன்று இசைக்கருவிகளும், வேத காலத்தில் குறிப்பிடப்படும் மேலுலக இசைக் கருவிகள் .
மிருதங்கம், கஞ்சிரா, தவில், உடுக்கை போன்ற தாளக்கருவிகளைப் போல வீணையும் தன் பயணத்தை, பண்ருட்டி அருகிலுள்ள ஒரு பலாமரத்தோப்பில் இருந்துதான் தொடங்குகிறது. இசைக்கும் பலாமரத்துக்கும் உள்ள தொடர்பு வெளியுலகு அதிகம் அறியாதது.
*****
“காழ் வரை நில்லாக் கடும்
களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்குத் தாழ்பு, நின்
தொல்கவின் தொலைதல் அஞ்சி என்
சொல்வரைத் தங்கினர் காதலோரே.”
தஞ்சாவூர் வீணைக்கான புவிசார் குறியீடு 2013ல் கிடைத்தது. இதன் வரலாற்று எச்சங்களை நாம் 2000 ஆண்டுகளுக்கும் முந்தய சங்க காலக் கவிதைகளில் காணலாம். சங்க காலப்பாடல்களில் இது ‘யாழ்’, எனக் குறிப்பிடப்படுகிறது.
“மடுத்து அவன் புகுவழி
மறையேன் என்று யாழொடும்
எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான் கொல்,
அடுத்துத் தன் பொய் உண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண் 15
எடுத்துக் கொள்வது போலும் தொடி வடு காணிய?”
கலித்தொகை, பாடல் 71 , காமக்கிழத்தி தலைவனிடம் சொன்னது
புவிசார்க் குறியீட்டுக்கான ஆவணம், வீணை பலாமரத்தில் செய்யப்படுவதைக் குறிப்பிட்டு, மேலும் அது எப்படி உருவாக்கப்படுகிறது என்பதையும் சொல்கிறது. நாலடி நீளமுள்ள வீணை, “உருண்ட அடிப்பாகமும், நீண்ட அகன்ற கழுத்துப்பகுதியும் கொண்ட ஒன்று. கழுத்துப் பகுதியின் முடிவில் யாழி யின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கும்.”
வீணை அது பற்றிய குறிப்புகளை விடவும் அழகான இசைக்கருவி. சில இடங்களில் வளைந்தும், சில இடங்களில் செதுக்கப்பட்டும் இருக்கும். பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருக்கும் அதன் முடிவில் செதுக்கப்பட்டிருக்கும் யாழியின் உருவம் நம்மைத் திகைக்க வைக்கும். வீணையின் கழுத்துப்பகுதியில் 24 frets ம், நான்கு தந்திகளும் இருக்கும். அதன் வழியேதான் அனைத்து ராகங்களும் வெளிப்படும். விஷேஷ வீணைகளில், குடத்துப் பகுதியில் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் இருக்கும். இந்த வீணைகள் சாதாரண வீணைகளை விட இருமடங்கு விலை அதிகமானவை.
கடலூர் மாவட்டம் பண்ருட்டிப் பகுதிகளில் விளையும் 30-50 ஆண்டுகள் வயதான பலாமரங்களே வீணை செய்யப் பயன்படுகின்றன. விவசாயிகளுக்கு, ஆடுமாடுகள் போல, பலாமரமும் ஒரு முதலீடாக விளங்குகிறது. திருமணம் போன்ற தேவைகளின் போது, விவசாயிகள், இந்த மரத்தை விற்றுச் செலவு செய்கிறார்கள். 7-9 அடி உயரமும், 8 கை அகலமும் ” கொண்ட பலாமரம் 50000 ரூபாய் வருமானம் தரும்,” என்கிறார் 40 வயதான ஆர்.விஜயக்குமார் என்னும் பலாப்பழ வணிகர்.
பலாமரம் பயிர் செய்யும் விவசாயிகள் முடிந்த வரை மரத்தை வெட்ட மாட்டார்கள். “ஆனால், அவசர மருத்துவச் செலவுகள், திருமணம் போன்றவற்றிற்குத் திடீரென அதிகப் பணம் தேவைப்படுகையில், சில பெரிய மரங்களை வெட்டி விற்பார்கள்,” என விளக்குகிறார் 47 வயதான கே.பட்டுசாமி என்னும் விவசாயி. ‘அப்படி வெட்டி வித்தா சில லட்சங்கள் பணம் கிடைக்கும்... செலவைச் சமாளிக்க சரியா இருக்கும்…”
தஞ்சாவூரை அடையும் முன்னரே, பலாமரத்தின் சிறந்த பகுதிகள், மிருதங்கம் , செய்யத் தனியே எடுத்து வைக்கப்பட்டு விடும். பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, தனது ’ செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் ’, புத்தகத்தில், இந்த இசைக்கருவிகளை உருவாக்கும் கலைஞர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
மிருதங்கம் என்பது உருளை வடிவமான, இரு புறங்களிலும் ஒலியெழுப்பும் முகங்களைக் கொண்ட முக்கியமான தாளக் கருவி. கர்நாடக இசைக் கச்சேரிகளின் முதன்மையான கருவி. அதன் உருளை வடிவ உடல், உள்ளே காலியாக இருக்குமாறு பலாமரத்தில் செதுக்கப்பட்ட ஒன்றாகும். உள்ளே காலியாக இருக்கும் பகுதிதான் மிருதங்கத்தின் இசையை மேம்படுத்தி, கேட்போர் செவிக்கு இன்பம் தருகிறது. இருபுறங்களிலும் இருக்கும் ஓட்டைகள் வழியே, மூன்று அடுக்குகளான தோல் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும்.
பலாமரம் தான் மிருதங்கத்தின் “புனித மறை”, என எழுதுகிறார் கிருஷ்ணா. “பலா மரம் கோவிலுக்கு அருகில் வளர்ந்ததாக இருந்தால் அதன் புனிதம் மேலும் கூடுகிறது. அது கோவில்களின் மணியையும், வேத கோஷங்களையும் கேட்டு வளர்ந்திருப்பதால், அதிலிருந்து வெளிப்படும் இசை ஈடு இணையில்லாததாக இருக்கும். புகழ்பெற்ற கர்நாடக இசை வித்வான்களாகிய மணி ஐயர் போன்றவர்கள், இப்படி ஒரு பலாமரத்தில் செய்யப்படும் மிருதங்கங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவார்கள்.”
“கோவில் அல்லது சர்ச்சுகளுக்கு அருகில் வளரும் பலா மரங்கள்… ஏன் மக்கள் நடமாடும் இடங்களில் அல்லது மணியோசை கேட்கும் இடங்களில் வளரும் மரங்கள், இந்த ஓசைகளை உள்வாங்கி, நல்ல நாதத்தை வெளிப்படுத்தும் என ஒரு நம்பிக்கை உள்ளது,” என கிருஷ்ணாவிடம் குப்புசாமி ஆச்சாரி சொல்கிறார். இவர் இசைக்கருவிகள் உருவாக்கும் குடும்பம் ஒன்றின் மூன்றாம் தலைமுறைக் கைவினைக் கலைஞர்.
“மிருதங்கம் வாசிக்கும் வித்வான்கள் கோவில் மணிகளும், வேத கோஷன்களும்தான் மிருதங்கத்தில் வெளிப்படும் இசையின் மந்திரம் எனக் கருதினாலும், இசைக்கருவியை வடிக்கும் கலைஞர் அந்த மந்திரத்துக்கு கத்தோலிக்க அடிப்படைகளை நம்புகிறார்,” என கிருஷ்ணா குறிப்பிடுகிறார்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் பலாப்பழ விவசாயிகளையும், வணிகர்களையும் சந்திக்க, பண்ருட்டி சென்றிருந்தேன். ஒரு மதிய நேரத்தில், குப்புசாமி ஆசாரியின் பட்டறைக்குச் சென்றேன். அந்தப் பட்டறை, நவீனத்தையும் (லேத், இயந்திரங்கள்) பழமையையும் (பழங்காலக் கருவிகள், கடவுளரின் புகைப்படங்கள்) ஒருங்கே கொண்ட ஒரு இடமாக இருந்தது. மிருதங்கம் தயாரிக்கும் குப்புசாமியின் அணுகுமுறையையும் அது பிரதிபலிப்பதாக இருந்தது.
“உங்களுக்கு என்ன தெரியனும்? கேளுங்க,” என்றார் குப்புசாமி. அவர் குரலில் அவசரம் தெரிந்தது. “ஏன் பலாமரம்?” எனக் கேட்டேன். “ஏன்னா, அதுதான் மிருதங்கம் செய்ய ரொம்பப் பொருத்தமான மரம்,” என்றார். “எடை குறைவு. அதிலிருந்து வரும் நாதம் நல்லா இருக்கும். இங்க எல்லாத் தாள வாத்தியமும் செய்வோம். வீணையைத் தவிர.” குப்புசாமி மிகவும் மதிக்கப்படும் ஒரு இசைக்கருவி உற்பத்தியாளர். “எங்களப் பத்தி டி.எம். கிருஷ்ணாவோட புத்தகத்தில நீங்க படிக்கலாம்…” என்கிறார் பெருமையாக. “அதுல லேத் மிஷின் பக்கத்துல நிக்கற மாதிரி ஒரு ஃபோட்டோ கூட இருக்கும்.”
சென்னைக்கு அருகில் உள்ள மாதவரம் என்னும் பகுதியில் பயிற்சி பெற்ற குப்புசாமிக்கு 50 ஆண்டுகள் அனுபவம் உண்டு. அதிகம் படிக்காத அவர், பத்து வயதில் தொழிலிலைக் கற்கத் தொடங்கினார். அவருக்கு மரவேலைகளில் ஆர்வம் இருந்தது. “அப்பல்லாம், எல்லா வேலைகளையும் கைலதான் செய்யனும். எங்க அப்பா, பலா மரத்தை ஒரு வண்டிச் சக்கரத்து மேல வைப்பார். ரெண்டு ஆளுங்க அதச் சுத்துவாங்க. மரம் அப்படிச் சுத்தும் போது, இவர் நடுவில் இருக்கும் மரப்பகுதியை சுரண்டி எடுத்துருவார். நடுவுல பெரும் ஓட்டையா மாறும். ஆனா, தொழில்நுட்பம் வளர்ந்த போது, அதை உடனே ஏத்துக்கிட்டு, இயந்திரங்களை உபயோகிக்கத் தொடங்கினார்கள்.”
மற்ற கைவினைக் கலைஞர்களைப் போல அல்லாமல், குப்புசாமி, நவீன இயந்திரங்களைப் பற்றிய ஆர்வத்துடன் இருக்கிறார். “அந்தக் காலத்துல ஒரு மிருதங்கத்தின் நடுப்பகுதியை ஓட்டையாக்க ஒரு நாளாகும். இன்னிக்கு லேத்ல ரொம்ப சீக்கிரம் அதைச் செஞ்சு முடிக்க முடியும். வேலையும் மிகக் கச்சிதமா இருக்கும்.” பண்ருட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக லேத் இயந்திரத்தை நிறுவியவர் குப்புசாமிதான். அதன் பின்னரே மற்ற ஊர்களில் லேத் இயந்திரம் நிறுவப்பட்டது.
“என்னைத் தவிர, இங்கே 4-5 பேருக்கு நான் தொழில் கத்துக் கொடுத்தேன். கத்துகிட்ட பின்னால, அவங்க தனியாக் கடை போட்டாங்க.. மயிலாப்பூர்ல நான் விக்கற அதே கடைக்கு அவங்களும் இதெல்லாம் எடுத்துட்டுப் போய், நாங்க குப்புசாமியோட கடைல வேல கத்துகிட்டவங்கன்னு சொல்லிருக்காங்க. கடைக்காரர் எனக்கு ஃபோன் போட்டு, ‘எத்தன பேத்துக்குய்யா தொழில் சொல்லிக் கொடுத்தே’னு கேட்டாங்க..” (சிரிக்கிறார்)
குப்புசாமியின் மகன் சபரிநாதன் பொறியியல் படித்திருக்கிறேன். “அளவெல்லாம் எடுத்து, இசைக்கருவி செய்யறதக் கத்துக்கோன்னு சொல்லியிருக்கேன். வேலைல இருந்தாலும், இத ஆள வச்சிப் பாத்துக்கலாம் இல்லையா?”
*****
“ஆசாரிகள் விஸ்கர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மரம், உலோகம், கல் முதலியவற்றில் சிற்பங்கள் செய்பவர்கள். படைப்பூக்கம் என்பதைத் தாண்டி, பலரும் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில், உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருப்பவர்களாக மாறி விட்டனர். அடுத்த தலைமுறையினர், இதை விட்டு, அலுவலகப் பணிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்,” என டி.எம்.கிருஷ்ணா, செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் நூலில் எழுதுகிறார்.
“பாரம்பரியம், சாதி வழித் தொழில் என்று பேசுகையில், தலைமுறை தாண்டி வளரும் தொழில்நுட்பம் / அறிவார்ந்த செயல்பாடுகள் என்று அதை உயர்த்திப் பிடிக்கும் தவற்றைச் செய்துவிடக் கூடாது. எல்லாத் தொழில்களும், மக்களும் நிதர்சனத்தில் சமமாகக் கருதப்படுவதில்லை,” என கிருஷ்ணா சுட்டிக் காட்டுகிறார். சமூகத்தில் உயர்தட்டில் இருக்கும் சாதிகளில், பிறப்பு வழியே பிள்ளைகளுக்குத் தொழில் செல்வது அறிவு என்றும், அப்படித் தொழில்கள் சாதி அடையாளங்களுக்குள்ளேயே நிறுத்தப்படுவது, பாதுகாக்கப்படுதல் என்றும் பார்க்கப்படுகிறது. அப்படித் தொழில்களுக்குள் இருப்பவர்கள் ஒடுக்கப்படுவதில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதிகள் பின்பற்றும் சாதிவழித் தொழில்கள் ‘அறிவு’ எனக் கருதப்படுவதில்லை. அவர்கள் அறிவார்ந்த செல்வத்தை உருவாக்குபவர்கள் எனக் கருதப்படுவதில்லை. அவர்களது தொழில் வெறும் உடல் உழைப்பு என்றே இழிவாகப் பார்க்கப்படுகிறது. அத்தகைய மக்கள் சாதி வழி ஒடுக்குதல்களுக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள். பலசமயங்களில், சமூகக் காரணங்களால், ஒடுக்கப்பட்ட சாதியினர் வேறு வழியின்றி தங்கள் குலத்தொழில்களையே தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.”
”இசைக் கருவிகளைச் செய்பவர்களைப் பற்றி மிக அரிதாகவே பேச்சுக்கள் வரும். அப்படியே பேசினாலும், அது அக்கருவிகளின் தொழில்நுட்ப அலகுகளைப் பற்றியதாக இருக்கும்,” என்கிறார் கிருஷ்ணா . ”கட்டுமானத் தொழில்களில் பணி செய்யும் ஒரு தச்சரைப் போலவோ அல்லது மேஸ்திரியைப் போலவோதான் அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இசை வாத்தியத்தை வாசிப்பவர் கட்டிட வடிவமைப்பாளர் போன்றவர். இசை வாத்தியத்தை உருவாக்குபவருக்கு மிக அரிதாகவே பாராட்டுக்கள் கிடைக்கும். போனால் போகுது என்பது போல பாராட்டுவார்கள். அதன் காரணம் சாதிதான்.”
மிருதங்க வாத்திய உற்பத்தியில் பெரும்பாலும் ஆண்கள்தான் இருக்கிறார்கள் என்கிறார் குப்புசாமி. “சில பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் தோலை மிருதங்கத்தில் கட்டும் பணியில். ஆனால், மரவேலைப்பாடுகள் முழுக்க முழுக்க ஆண்கள் வசமே உள்ளது. மரம் பெரும்பாலும் காய்ப்பு நின்றுவிட்ட பலா மரங்கள். வயதான, காய்ப்பது நின்றி விட்ட மரங்களை வெட்டி விடுவார்கள்,” என்கிறார் குப்புசாமி. “பத்து மரத்தை வெட்டினா, 30 புதுச் செடிகளை நடுவார்கள்.”
குப்புசாமி, மரத்தை வாங்கப் பல தகுதிகளை வைத்திருக்கிறார். 9-10 அடி உயரம் கொண்டதாக, அகலமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். சாலையோரமாகவோ அல்லது வேலியோரமாகவோ வளர்ந்த மரமாக இருக்க வேண்டும். அடர்த்தியான வண்ணம் கொண்ட அடிமரத்தையே பெரும்பாலும் விரும்புகிறார். அதில் இசை அதிர்வுகள் நன்றாக இருக்கும் என்பது அவரது கருத்து.
ஒரு நாளில் 6 மிருதங்கங்களுக்கான மரத்தை வெட்டி, செதுக்கி விடுவார். அதற்கு நகாசு வேலைகளைச் செய்ய மேலும் இரண்டு நாட்கள் பிடிக்கும். பெரிதான லாபம் இல்லை. ஒரு மிருதங்கத்துக்கு 1000 ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார். ”இதற்கு வேலையாட்கள் கூலி 1000 ரூபாய் ஆகும். கடினமான வேலை. சரியான கூலி தரவில்லை என்றால், வேலையாட்கள் வரமாட்டார்கள்.”
மரம் வருடம் முழுவதும் கிடைக்காது. காய்க்கும் காலத்த்தில் மரத்தை யாரும் வெட்ட மாட்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ”அதனால, நான் வருஷம் முழுசுக்கும் தேவையான மரத்தை வாங்கி ஸ்டாக் வச்சிக்கனும்,” என்கிறார். ஐந்து லட்சம் முதலீடு செய்து, 20 மரங்களை, சராசரியா 25000 ரூபாய் என வாங்கி வைத்துக் கொள்கிறார். இங்குதான் அவர் அரசின் உதவியை எதிர்பார்க்கிறார். ”மரம் வாங்க மானியமோ கடனோ கொடுத்தால் நல்லா இருக்கும்.”
உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில், மிருதங்கங்களுக்கான தேவை நல்லா இருக்கு என்கிறார் குப்புசாமி. ”மாசம் 50 மிருதங்கம், 25 தவில் வித்திருவேன்,” என்கிறார். ”இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, நல்ல மரத்தைவாங்கி, ஒரு 4 மாசம் அதைச் சரியா பதப்படுத்தி வைக்கனும். அதுக்கு பண்ருட்டி பலாதான் பெஸ்ட்,” என்கிறார் குப்புசாமி. இதுக்குக் காரணம் இங்கிருக்கும் செம்மண் என்பது அவரின் கருத்து.
“பத்தடி நீளப் பலாமரக்கட்டையோட விலை 25000 ரூபாய். அதிலிருந்து மூணு மிருதங்கம் செய்யலாம்.” ஆனால், ஒவ்வொரு முறை வாங்கும் போதும் பலதரப்பட்ட கட்டைகள் கலந்து வரும். சில மரக்கட்டைகள் இசைக்கு ஒத்தே வராது. அது போன்ற மரக்கட்டைகளில் இருந்து அதிக பட்சமாக உடுக்கைகளைத் தயாரிக்கிறார் குப்புசாமி
”நல்ல பலாமரக்கட்டைக்கு எட்டு ரூபா ஆகும்,” என விளக்குகிறார் குப்புசாமி. எட்டு ரூபாய் எனில் 8000 என்பது பொருள். ”இது ஒண்ணாம் நெம்பர் தரம்” எனச் சுட்டும் அவர், இதை ஒருபோதும் வாங்கிச் செல்பவர்கள் திரும்பக் கொண்டு வர மாட்டார்கள் என்கிறார். ”பலகை சரியா இல்லன்னா, அதுல பிளவு வரும். சத்தம் சரியா வராது. நிச்சயமாத் திரும்பி வந்துரும்.”
மிருதங்கம் சராசரியாக 22 முதல் 24 அங்குல நீளம் கொண்டது. இது மைக்குக்கு முன்னாடி வச்சி வாசிக்கும் நிகழ்ச்சிகளுக்குச் சரியாக இருக்கும். “கூத்து மாதிரி மைக் இல்லாமல் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பெரிய மிருதங்கம் (28 அங்குல நீளம்) தேவைப்படும். ஒருபுரம் சிறியதாகவும், மறுபுரம் பெரியதாகவும் இருக்கும் இந்த மிருதங்கங்களில் இருந்து எழும் சத்தம் கணீரென இருக்கும். வெகுதூரம் வரை கேட்கும்.”
சென்னையில் இருக்கும் இசைக்கருவிகள் விற்கும் கடைகளுக்கு, குப்புசாமி கடைந்தெடுத்த மரப்பகுதிகளை விற்கிறார். மாதம் 20-30 மரப்பகுதிகளுக்கு ஆர்டர் வருகிறது. அந்த மரப்பகுதிகளை கடைக்காரர்கள் தோல் வேலை செய்யும் தொழில்நுட்பப் பணியாளர்களிடம் கொடுத்து, தோலை மிருதங்க மரப்பகுதியில் இணைத்துக் கட்டி மிருதங்கத்தை உருவாக்குகிறார்கள். அதற்கு மேலும் 4500 ரூபாய் வரை செலவாகிறது. “அதுக்கப்புறம் ஜிப் வைத்த பை தைக்கனும்,” என கைகளால் சைகை மூலம் விளக்குகிறார்.
நல்ல தரமான மிருதங்கத்தின் விலை 15000 வரை இருக்கும். மிருதங்கங்களுக்கும் 50, 75 என்று விலை இருந்த காலத்தை குப்புசாமி நினைவு கூர்கிறார். “எங்க அப்பா மிருதங்கங்களை எடுத்துகிட்டு நேரா மயிலாப்பூர்ல இருக்கும் வித்வான்கள் வீட்டுக்கே கொண்டு போயிருவார்.. அவங்க எங்களுக்கு சலவை நோட்டாக் கொடுப்பாங்க.. நான் அப்ப சின்ன புள்ள,” என்கிறார் புன்னகையுடன்.
காரைக்குடி மணி, உமையாள்புரம் சிவராமன் உள்ளிட்ட பெரும்பாலான பெயர்பெற்ற கர்நாடக இசையுலக மிருதங்க வித்வான்கள் குப்புசாமியிடம் இருந்துதான் மிருதங்கங்களை வாங்குவார்கள். “இங்கேயும் பல பெரும் வித்வான்கள் வந்து வாங்கிட்டுப் போவாங்க.. நம்ம கடை ரொம்ப ஃபேமஸ்.. அந்தக் காலத்துல இருந்தே இருக்கற கடை,” என்கிறார் பெருமையுடன்.
தாளவாத்தியங்களைப் பற்றிப் பல அனுபவங்களைச் சொல்கிறார் குப்புசாமி. பழமைக்கும் புதுமைக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்லும் கதைகள். “பாலக்காடு மணி ஐயர் தெரியுமா? அவரோட மிருதங்கம் ரொம்ப கனமா இருக்கும்.. தூக்கிகிட்டுப் போறதுக்குன்னே ஒரு ஆள வச்சிருந்தார்.” கனமான மிருதங்கத்துலதான் சத்தம் ‘கணீர்.. கணீர்’ னு வரும். இப்ப இருக்கும் வித்வான்கள் அதைப் பெரிசா விரும்பறதில்ல என்கிறார் குப்புசாமி
“வெளிநாடு போகைல தூக்கிகிட்டு போறதுக்கு வசதியா எடை குறைவா இருக்கற மாதிரி மிருதங்கங்களைக் கேக்கறாங்க.. அவங்களோட மிருதங்கங்களை இங்கே கொண்டு வருவாங்க.. நான் 12 கிலோவில இருந்து 6 கிலோவா வெயிட்ட குறச்சுத் தருவேன்’. அது எப்படிச் செய்ய முடியும் என்று நான் கேட்டேன். மிருதங்கத்தோட வயித்துப் பகுதியைச் சுரண்டி எடையைக் குறைப்போம். வெயிட் போட்டுப் போட்டு பாத்து, 6 கிலோ வரும் வரை சுரண்டுவோம்.”
மிருதங்கத்தோட எடைக் குறைப்புப் பயிற்சின்னு நெனச்சிகிட்டேன்…
மிருதங்கம் மட்டும் அல்லாது பல தாள வாத்தியங்களைச் செய்து உலகெங்கும் அனுப்புகிறார். ”கடந்த 20 வருஷமா மலேசியாவுக்கு உருமி மேளம் அனுப்பிகிட்டு இருக்கேன். கோவிட் காலத்துலதான் அது நின்னு போச்சு.”
”தவில், தபேலா, வீணை, உடுக்கை, உருமி, பம்பைனு எல்லாத்துக்குமே பலாக் கட்டைதான் பெஸ்ட்,” எனப் பட்டியலிடுகிறார். ”15 வகையான தாள வாத்தியங்கள என்னால செய்ய முடியும்.”
மற்ற இசைக்கருவிகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பக் கலைஞர்களை நன்கு அறிந்தவராக இருக்கிறார். சிலரின் பெயரும் விலாசமுமே நன்கு தெரிந்திருக்கிறது. “வீணை செய்யற நாராயணனைப் பாத்தீங்களா? அவரு தஞ்சாவூரு தெற்கு மாட வீதில குடியிருக்கார்.. எனக்கு நல்லாத் தெரியும்.. வீணை செய்யறது ரொம்பக் கஷ்டமான வேலை,” என்கிறார் குப்புசாமி. ”ஒரு வாட்டி பக்கத்துல இருந்து வீணை செய்யறதப் பாத்திருக்கேன். ஆசாரி வளைவான ஒரு பகுதியைச் செஞ்சிகிட்டு இருந்தார். நான் ரெண்டு மணி நேரம் அமைதியாப் பாத்துகிட்டு இருந்தேன். வெட்டி, செதுக்கி, கீழ வச்சி பாத்து, மறுபடியும் வெட்டி, செதுக்கின்னு.. நுட்பமான வேலை. பாக்கவே ஆச்சர்யமா இருந்துச்சி..”
*****
வீணை செய்யும் தொழில்நுட்பக் கலைஞர்களை நான் நாராயணன் அவர்களின் பட்டறையில்தான் 2015 ஆம் ஆண்டு முதன்முதலாகச் சந்தித்தேன். மீண்டும் அவரது பட்டறைக்கு வருமாறு 2023 ஆம் ஆண்டு அழைத்தார். “வீடு நினைவிருக்கில்லையா? வீட்டுக்கு முன்னாடி ஒரு மரம் இருக்கும்,” என்றார். அந்தத் தெருவில் இருந்த ஒரே ஒரு புங்கை மரம் அது. முதல் மாடியின் முகப்பில் சிமெண்டினால் செய்த வீணை இருந்தது. வீட்டின் பின்னால் இருந்த பட்டறை முன்பு பார்த்தது போலவே இருந்தது. சிமெண்டினால் செய்யப்பட்ட அலமாரியில் வைக்கப்பட்டிருக்கும் உபகரணங்கள்; சுவற்றில் மாட்டியிருக்கும் ஃபோட்டோக்கள், காலண்டர்கள்; தரையில் முடிக்கப்படாத வீணைகள் என.
சிவகங்கைப் பூங்காவில் இருந்து வருகையில், வீணை ஒரு பெரும் உருண்டையான, சரியாக செதுக்கப்படாத மரக்கட்டையாகத்தான் வருகிறது. இங்கே வந்ததும் நுட்பமான உளிகள், இயந்திரங்கள் வழியே அழகான வீணையாக உருப்பெறுகிறது. 16 அங்குல குடம் போன்ற மரக்கட்டை செதுக்கப்பட்டு, 14.5 அங்குல வீணைக்குடமாக மாறுகிறது. வீணைக் குடத்தை வட்டமாகச் செதுக்க அவர் காம்பஸை உபயோகிக்கிறார். வட்டம் வரைந்த பின்னர், அதீதமாக இருக்கும் மரப் பகுதி உளியால் செதுக்கப்பட்டு எடுக்கப்படுகிறது
நல்ல இசை கிடைக்க வேண்டும் என்பதற்காக மரப்பலகை விட்டு விட்டு செதுக்கப்படுகிறது. செதுக்கப்படுவதற்கிடையே கிடைக்கும் இடைவெளிகள், மரப்பலகை சரியாக உலர்ந்து மேம்படுவதற்கு உதவுகிறது. 30 கிலோ எடையுடன் சிவகங்கைப் பூங்காவை அடையும் பலாமரப்பலகை, வீணைப்பட்டறையை அடையும் போது 20 கிலோவாக எடை குறைகிறது. வீணைப்பட்டறையில் மேலும் செதுக்கப்பட்டு எளிதில் தூக்கும் வண்ணம் 8 கிலோ வீணையாக மாறுகிறது.
வீணைப்பட்டறையின் முன்னிருக்கும் வீட்டில் அமர்ந்த படி, நாராயணன் என்னிடம் ஒரு வீணையைத் தருகிறார். “இந்தா பிடிங்க.” அது நீளமாக, ஒவ்வொரு பாகமும் மிகச் சரியாகச் செதுக்கப்பட்டு, வழுவழுப்பாக மாற்றப்பட்டு, வார்னிஷ் பூச்சுடன் இருக்கிறது. “எல்லாமே கைகளால் செய்யப்பட்டது,” என்னும் நாராயணனின் குரல் பெருமை தெரிகிறது.
“வீணை தஞ்சாவூரில் மட்டும்தான் செய்யப்படுகிறது. இங்கிருந்து உலகம் முழுவதும் செல்கிறது. இதற்காக புவிசார் குறியீடு வழக்கறிஞர்கள் வழியே பெறப்பட்டுள்ளது.”
“வீணை எப்பவுமே பலாமரத்தில்தான் செய்யப்படுகிறது. ஏன்னா, பலாமரம் எல்லா க்ளைமேட்டுக்கும் ஒத்துவரும். இன்னிக்கு தஞ்சாவூர்ல 39 டிகிரி வெயில். இங்க செஞ்ச வீணையை அமெரிக்காவுக்குக் கொண்டு போய் அங்கே 0 டிகிரி இருந்தாக் கூட, அதிலிருந்து வரும் நாதம் மாறாது. இதை விடவும் வெயில் பிரதேசமான மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு போனாலும் பிரச்சினை இருக்காது. அதனாலதான் பலாமரத்தை உபயோகிக்கிறோம்.”
“எடுத்துக்காட்டா, இத மாமரத்துல செய்ய முடியாது. மாமரத்துல செஞ்ச கதவ, வெயில் காலத்துல சுலபமா சாத்திர முடியும். ஆனா மழைக்காலத்துல, அறைஞ்சுதான் சாத்த வேண்டியிருக்கும். அப்புறம் எப்படி இழைச்சாலும், பலா மரத்துல கிடைக்கற ஃபினிஷ் இதுல இருக்காது.” பலாமரக்கட்டைல சின்னச் சின்ன ஓட்டைகள் இருக்கு. தலை மயிரை விடச் சன்னமான ஓட்டைகள். “அதுவழியே அந்தக் கட்டை சுவாசிக்கும்,” என நாராயணன் விளக்குகிறார்.
பலாமரம் பரவலாகப் பயிரிடப்படுது. “ஆனா, எனக்குத் தெரிஞ்சவரை பட்டுக்கோட்டை, கந்தர்வ கோட்டைப் பகுதிகளில் எல்லாம் நெறய மரங்கள வெட்டிட்டாங்க. புதுசா மரமே நடல. பலாமரத் தோப்புகள் எல்லாம் வீட்டு மனைகள் ஆயிருச்சு. விவசாயிகள் நிலத்த வித்து பேங்கில பணத்தப் போட்டுட்டுப் போயிட்டாங்க. மரமெல்லாம் இல்லாம போயிருச்சு. இசைக்கருவிகளுக்குத் தேவைப்படறத விடுங்க.. இந்தத் தெருவிலேயே என் வீட்டுக்கு முன்னாடி மட்டும்தான் மரம் இருக்கு.. மத்ததெல்லாம் வெட்டிட்டாங்க!”
புதிய பலாமரக் கட்டை மஞ்சள் நிறத்தில் இருக்கும். கொஞ்சம் பழையதாகி உலர்ந்த பின்னர், மெல்லிய சிகப்பு நிறத்துக்கு மாறும். அதிலிருந்து வரும் அதிர்வுகள் பிரம்மாதமாக இருக்கும். “அதனாலத்தான் பழைய வீணைகளுக்கு செம்ம டிமாண்டு.. ஒங்களுக்கு மார்க்கெட்ல கிடைக்கவே கிடைக்காது.. ஏன்னா பழைய வீணைய வச்சிருக்கவுங்க, அதை ரிப்பேர் பண்ணி வெச்சிக்குவாங்களே தவிர விக்க மாட்டாங்க.. வீட்டைத் தாண்டி வெளியவே வராது,” எனச் சொல்லிச் சிரிக்கிறார் நாராயணன்.
வீணைகளைச் செய்வதில், சில நவீன கால மாறுதல்கலைச் செய்கிறார் நாராயணன். “இதுல பாத்தீங்களா? இது கிட்டாரில் இருக்கும் கீ. இதை வீணைல பொருத்தறோம்.. ஏன்னா, இது தந்திகளை இழுத்துக்கட்டவும், சுருதி சேக்கவும் ஈசியா இருக்கும்கறதனால.” ஆனால், வீணை பயில்வதில், கற்றுக் கொடுப்பதில் மாற்றங்களைச் செய்வதில் அவருக்கு விருப்பமில்லை. அவற்றைக் குறுக்குவழிகள் என்கிறார் (ஆசிரியர்கள் சுருதி சேர்ப்பது போன்ற அடிப்படைகளைச் சொல்லித் தராமல் இருப்பது போன்றவை). தானே ஒரு வீணையில் சுருதி சேர்த்துக் காண்பிக்கிறார். பலாமரமும், அதன் மீது கட்டப்பட்ட உலோகத் தந்திகளும் இணைந்து எழுப்பும் ஒலி, எங்களின் உரையாடலுக்குப் பின்ணணி இசை போல ஒலிக்கிறது.
இசைக்கருவிகளைச் செய்யும் பலரைப் போலவே, நாராயணனுக்கும் தான் உருவாக்கும் இசைக்கருவிகளை இசைக்கத் தெரியும். “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்,” வலது கையால் தந்திகளை மீட்டிக் கொண்டே, இடது கையால் வீணையின் மேல்பகுதியை வருடிக் கொண்டு தன்னடக்கத்துடன் சொல்கிறார். “எங்கிட்ட வீணை வாங்க வருபவர்களின் தேவை என்ன என்னும் அளவுக்கு இசை தெரியும்.”
அவர் மடியில், ஒரே பலகையில் செய்யப்பட்ட ஏகாந்த வீணை கிடக்கிறது. அதை அவர் மழலையைக் கையாளும் தாயைப் போல மிகக் கவனமாகக் கையாள்கிறார். “ஒரு காலத்தில் வீணைகளை மான் கொம்புகள் அலங்கரித்தன. இப்போது மும்பையில் இருந்து வரும் ஐவரி ப்ளாஸ்டிக்..”
ஒரு வீணையை ஒருவர் மட்டுமே செய்து முடிக்க 25 நாட்களாகும். “அதனால்தான் நாங்கள் வீணை செய்யும் வேலையை பலருக்குப் பகிர்ந்து கொடுத்து விடுகிறோம். அப்படிச் செய்வதனால், மாதம் 2-3 வீணைகளைச் செய்ய முடிகிறது. வீணையின் தரத்தைப் பொருத்து விலை 25000 முதல் 75000 வரை ஆகும்.”
மற்ற வீணை உற்பத்தியாளர்களைப் போலவே, நாராயணனும் தனக்குத் தேவைப்படும் பலாமரக்கட்டைகளை பண்ருட்டியில் இருந்து வாங்குகிறார். “ஒன்னு நாங்க போயி, ஒரு லாட்டை வாங்கிட்டு வருவோம். இல்லன்னா அவங்க இங்க கொண்டு வருவாங்க. 40-50 வயசான வளந்த, முதிர்ந்த மரங்கள்தான் ரொம்ப சரியா இருக்கும். ஏகாந்த வீணை செய்ய 10 அடி நீள மரக்கட்டைக்கு 20000 விலை சொல்லுவாங்க. கொஞ்சம் பேரம் பேசி வாங்கலாம். வாங்கின கட்டைகளை வெட்டி, தேவைப்படற ஸைஸுக்கு, சிவகங்கைப் பூங்கா பக்கதுல இருக்கற நம்ம அஸோசியசன் இடத்துல மாத்திக்குவோம்.” இதுல கொஞ்சம் ரிஸ்க் இருக்கு என்கிறார். “சில சமயம் மரத்துல விரிசல் இருக்கும். அதுல தண்ணி புகுந்தா கட்டை கெட்டுரும். வெட்டற வரைக்கும் தெரியாது!”
தஞ்சாவூர்ல கிட்டத்தட்ட 10 பேரு முழுநேரமா வீணை செய்யறவங்க இருப்பாங்க. இன்னும் சில பேர் பார்ட் டைமா செய்வாங்க என அனுமானிக்கிறார் நாராயணன். ஒரு கட்டை தஞ்சாவூரை அடைந்ததிலிருந்து அது இசைக்கருவியாக 30 நாட்கள் வரை பிடிக்கும். “உண்மையில் நல்ல டிமாண்ட் இருக்கு,” என்கிறார் நாராயணன்.
”சிட்டிபாபு, சிவானந்தம் போன்ற பெரிய இசைக்கலைஞர்கள் எங்க அப்பாகிட்ட இருந்து வீணை வாங்கிருக்காங்க.. இப்ப இருக்கற தலைமுறை கலைஞர்களும் வந்து வாங்கறாங்க.. ஆனா, பெரும்பாலானவங்க சென்னைல இருக்கற ‘இசைக்கருவிகள் விற்கும் கடைகள்’லேயே வாங்கிக்கறாங்க. சில பேர் இங்க நேரா வந்து அவங்களுக்குத் தேவையான டிசைன் இல்லன்னா ஏதாவது மாற்றங்களைச் செஞ்சு வாங்கிட்டுப் போறாங்க.” நாராயணனுக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.
இந்த பிசினஸ் நல்லாப் போனா இன்னும் நல்லாத்தான் இருக்கும் என எண்ணுகிறார் நாராயணன். “நான் இந்தத் தொழில 45 வருஷமாப் பண்ணிகிட்டு இருக்கேன். ஆனா, என்னோட ரெண்டு பசங்களும் இதுக்கு வர மாட்டேனுட்டங்க. படிச்சு வேலைக்குப் போயிகிட்டு இருக்காங்க. ஏன் தெரியுமா?”, என இடைவெளி விட்டவர் மேலும் சொல்கிறார். “இங்க வேலை செய்யர கொத்தனாருக்கு தினமும் சம்பளம் 1200 ரூபாய். காலை மாலை டீ, வடை வாங்கித்தரனும். ஆனா, வீணை மாதிரி நுட்பமான வேலை செஞ்சா, அதுல பாதிதான் எங்களுக்குக் கிடைக்கும். ஓய்வு ஒழிச்சலே இருக்காது. நல்ல தொழில்தான். ஆனா, இதுல இடைத்தரகர்கள்தான் லாபம் பாக்கறாங்க.. என்னோட பட்டறையப் பாத்தீங்கள்ல? பத்துக்குப் பத்து ரூம். எல்லா வேலையையும் நாங்க கையாலதான் செய்யறோம். ஆனால், மின்சாரக் கட்டணம் வணிகக் கட்டணம் – அதிகம். நாங்க இதை கைவினைத் தொழில்னு சொல்ல முயற்சி பண்ணினோம். ஆனா, எங்களோட தேவைகளை சரியான முறைல அரசாங்கத்துகிட்ட எடுத்துச் சொல்லி, இதச் சரி செய்ய முடியல..”
நாராயணன் பெருமூச்சிடுகிறார். வீட்டின் பின்னால் இருக்கும் பட்டறையில், ஒரு வயதான தொழில்நுட்பக் கலைஞர் நுட்பமாகச் செதுக்கி பலாமரக்கட்டையை வீணையாக மாற்றி, இசைகூட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆய்வு, 2020 ஆம் ஆண்டுக்கான அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிதிநல்கையின் உதவியினால செய்யப்பட்டது.
தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி