தனக்கு முன்பு பரந்து கிடக்கும் பல்வேறு பொம்மைகளைப் பார்த்து ராமச்சந்திரப் புலவர் இப்படிச் சொல்கிறார், “எங்களுக்கு இவையெல்லாம் வெறும் தோல் பொருட்கள் அல்ல. தெய்வங்கள், தேவதைகள், புனித ஆத்மாக்களின் உருவங்கள்.” அவருக்கு எதிரே உள்ள அந்த உருவங்கள் எல்லாம், கேரளத்தின் கடலோர மலபார் பகுதியின் புகழ் பெற்ற நாடக வடிவமான தோல்பாவைக் கூத்தில் பயன்படுத்தக்கூடியவை.
இவை பாரம்பரியமாக ‘சக்கிலியர்கள்’ போன்ற சமூகத்தவரால் செதுக்கப்படுகின்றன. இந்தக் கலைக்கான வரவேற்பு வீழ்ச்சியடையத் தொடங்கியதும் இதைச் செய்து வந்த சமூகத்தவர்கள் வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். எனவே, இந்தக் கலையை உயிரோடு காப்பாற்றுவதற்காக, தோல் பாவைகள் செய்யும் கலையை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினார் கிருஷ்ணன் குட்டி புலவர், அவரது மகன் ராமச்சந்திர புலவர் மேலும் ஒரு படி மேலே சென்று தன்னுடைய குடும்பத்திலும், தனது பகுதியிலும் உள்ள பெண்களுக்கு தோல் பாவை செய்வதற்கு பயிற்சி அளிக்கிறார். ஒரு காலத்தில் கோயில் வளாகத்தில் வேலை செய்யும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய இந்தத் தொழிலில் தற்போது ராஜலட்சுமி, ரஜிதா, அஸ்வதி ஆகிய பெண்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த பொம்மைகளை புனித உருவங்கள் என்று இந்த தொழிலாளர்கள் மட்டும் கருதுவதில்லை. கூத்துக்கு வரும் பக்தர்களும் இவற்றைப் புனித உருவங்களாகவே பார்க்கின்றனர். தோலில் உருவங்களை கவனமாக வரைந்துகொண்டு, உளி, துளையிடும் கருவிகள் போன்ற சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி இவர்கள் பாவைகளை செதுக்கத் தொடங்குகின்றனர். “திறமையான கொல்லர்கள் குறைவு என்பதால், இந்தக் கருவிகள் கிடைப்பது சாமானியமில்லை,” என்கிறார் ராமச்சந்திர புலவரின் மகன் ராஜீவ் புலவர்.
தோல் பாவைகளில் உள்ள வடிவுருக்கள் இயற்கையும், புராணக் கதைகளும் கலந்தவை. இயற்கை உலகுக்கு மரியாதை செய்யும் வகையில், நெல்மணிகள், நிலவு, பகலவன் போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு உருப்படிவங்கள் செய்யப்படுகின்றன. சிவனின் உடுக்கை வடிவ, ஆடை வடிவ பூ வேலைப்பாடுகள், பாவைக் கூத்து நடத்தும்போது பாடும் பாடல்களில் உள்ள புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. பார்க்கவும்: எல்லோருக்குமான தோல் பாவைக் கூத்து
தோல் பாவைகளுக்கு வண்ணம் தீட்ட, இவர்கள் இயற்கை வண்ணங்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால், இதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். புதிய தேவைகளுக்குப் பொருத்திக்கொள்ளும் வகையில், இவர்கள் அக்ரிலிக் வண்ணங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வண்ண அமைப்புகள், வடிவுருக்கள் ஆகியவற்றில் புதிய பரிசோதனைகள் செய்து பார்ப்பதற்கு ஆட்டுத்தோல் ஏற்றது என்பதால், இவர்கள் அக்ரிலிக் வண்ணங்களை ஆட்டுத் தோலில் பயன்படுத்துகின்றனர்.
கேரளாவின் மலபார் பகுதியில் நிலவும் பன்முகப் பண்பாடு மற்றும் ஒத்திசைவான மரபுகளின் குறியீடாக தோல் பாவைக்கூத்து உள்ளது. வெவ்வேறு பிரிவுகளில் இருந்து தோல் பாவை செய்வோர் வருவது உற்சாகம் தருவதாக உள்ளது.
மிருனாளினி முகர்ஜி ஃபௌன்டேஷன் (MMF) அளித்த மானிய உதவியுடன் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டது.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்