அதிகாலை 3 மணி. கிழக்கிந்திய கடற்கரை. டார்ச் லைட் வெளிச்சத்தில் ரமோலு லஷ்மய்யா ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை தேடுகிறார். ஒரு நீளமான குச்சியும் பக்கெட்டும் வைத்திருக்கும் அவர், ஜலாரிப்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டுக்கும் ஆர்கே கடற்கரைக்கும் இடையே உள்ள மணல் பாதையில் மெதுவாக நடக்கிறார்.
ஆலிவ் ரிட்லி பெண் ஆமைகள் முட்டையிட கரைக்கு வரும். விசாகப்பட்டணத்தின் மணற்பாங்கான சரிந்த கடற்கரைகளும் நல்ல கூடாக அவற்றுக்கு இருக்கிறது. 1980களிலிருந்து அந்த ஆமைகள் இங்கு தட்டுப்பட்டு வருகின்றன. ஆனால் சில கிலோமீட்டர் வடக்கே இருக்கும் ஒடிசா கடற்கரைதான் நாட்டின் பெரும் கூட்டுப் பகுதியாக இருக்கிறது. பெண் ஆமைகள் ஒரு நேரத்தில் 100-150 முட்டைகள் போடுகின்றன. அவற்றை ஆழமான மணற்குழிகளில் புதைக்கின்றன.
“மணல் உதிரியாக இருந்தால், தாய் ஆமை அங்கு முட்டைகளிடும்,” என விளக்குகிறார் குச்சியைக் கொண்டு எச்சரிக்கையாக மணலை கிளறும் லஷ்மய்யா. அவருடன் கர்ரி ஜல்லிபாபுவும் புட்டியபனா யெர்ரனாவும் புல்ல பொலாராவும் இருக்கின்றனர். ஜலாரி சமூகத்தை (ஆந்திராவின் பிற பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்த மீனவர்கள் அவர்கள். 2023ம் ஆண்டு, ஆந்திரப்பிரதேச வனத்துறையின் (APFD) பகுதி நேரக் காவலர் வேலையில் சேர்ந்த அவர்கள், கடலோர ஆமை பாதுகாப்பு திட்டத்தில் பணிபுரிகின்றனர்.
ஆலிவ் ரிட்லி ஆமைகளை ‘பாதிப்புக்குள்ளான இனம்’ என சர்வதேச இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் Red List வரையறுத்திருக்கிறது. இந்திய வன உயிர் பாதுகாப்பு சட்டப்பிரிவு 1-ன் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
கடலோர அழிவு போன்றவற்றால் ஆமைகள் சிக்கலை எதிர்கொள்கின்றன. “குறிப்பாக வளர்ச்சி என்கிற பெயரிலும் காலநிலை மாற்றத்தாலும் அழிவுக்குள்ளாகும் கடலுயிர் வசிப்பிடங்கள் அவற்றுக்கு சிக்கலை கொடுக்கின்றன,” என்கிறார் விசாகப்பட்டிணத்தில் இருக்கும் கம்பலக்கொண்டா வன உயிர் சரணாலயத்தின் திட்ட அறிவியலாளரான யக்னபதி அதாரி. கறிக்காகவும் முட்டைகளுக்காகவும் கடல் ஆமைகளும் வேட்டையாடப்படுகின்றன.
“தாய் ஆமை எத்தனை ஆழத்தில் முட்டைகளை புதைத்தாலும் கண்டறிந்து விட முடியும். யார் காலிலாவது மிதிபடும். அல்லது நாய்கள் தோண்டியெடுக்கும்,” என்கிறார் முட்டைகள் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் லஷ்மய்யா. “கூட்டிடத்தில் அவை பாதுகாப்பாக இருக்கின்றன,” என்கிறார் 32 வயதாகும் அவர்.
எனவே லஷ்மய்யா போன்ற காவலர்கள் அவற்றின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். ஆலிவ் ரிட்லி ஆமைகள் மிகச் சிறிய கடல் ஆமை வகை ஆகும். ஆலிவ் பச்சை நிறம் என்பதால் அப்பெயரை அவை பெற்றன.
ஆமை முட்டைகளை தேடி எடுத்து கூட்டிடத்தில் வைத்து, முட்டை பொறிந்ததும் குஞ்சுகளை கடலில் விடுவதற்காகத்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆர்கே கடற்கரையில் இருக்கும் கூட்டிடம் ஆந்திராவில் இருக்கும் நான்கில் ஒன்றாகும். சாகர் நகர், பெடநாகமய்யபலெம் மற்றும் செப்பலாப்பாடா ஆகியவை பிறவை.
சாகர் நகர் கூட்டிடத்தில் இருக்கும் எல்லா காவலர்களும் மீனவர்கள் இல்லை. சில புலம்பெயர் தொழிலாளர்களும் கூடுதல் வருமானத்துக்காக அப்பணியில் சேர்ந்திருக்கின்றனர். வாழ்க்கைக்கான செல்வை சமாளிப்பதற்காக ஓட்டுநரான ரவி அந்த வேலையை எடுத்திருக்கிறார். ஸ்ரீகாகுளம் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளரான ரகு, 22 வயதில் விசாகப்பட்டிணத்துக்கு புலம்பெயர்ந்தார். சொந்த வாகனம் இல்லை. ஆனால் ஓட்டுநராக பணிபுரிந்து ரூ.7000 ஈட்டுகிறார்.
பகுதி நேர வேலையாக இதை செய்வது அவருக்கு உதவியாக இருக்கிறது. “ஊரில் இருக்கும் என் பெற்றோருக்கு 5,000-6,000 ரூபாய் என்னால் இப்போது அனுப்ப முடிகிறது.”
டிசம்பர் முதல் மே மாதம் வரை வருடந்தோறும் ஆர்கே கடற்கரையின் ஏழெட்டு கிலோமீட்டர் வரை தூரத்தை காவலர்கள் பார்ப்பார்கள். சில நிமிடங்களுக்கு ஒருமுறை நின்று முட்டைகள் தேடுவார்கள். இந்தியாவில் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கான கூடடையும் காலம் வழக்கமாக நவம்பர் தொடங்கி மே வரை இருக்கும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம்தான் பார்க்க முடியும்.
“சில நேரங்களில், தாய் ஆமையின் காலடித் தடங்களை பார்ப்போம். மிகச் சில சமயங்களில் தாய் ஆமையையே பார்ப்போம்,” என்கிறார் ஜல்லிபாபு.
முட்டைகள் கண்டறியப்பட்டதும், பைகளில் ஒரு கையளவு அப்பகுதி மண்ணுடன் சேர்த்து அவை கவனமாக வைக்கப்படும். கூட்டிடத்தில் பிறகு அம்மண்ணோடு அந்த முட்டைகள் புதைக்கப்படும்.
முட்டைகளை கண்டறிந்ததும் எண்ணிக்கையையும் தோராயமாக அவை பொறியும் காலத்தையும் அவர்கள் பதிவு செய்வார்கள். அப்பதிவை ஒரு குச்சியில் இணைத்து புதைக்கும் பகுதியருகே வைப்பார்கள். பொறியும் காலத்தை கணக்கிட இது உதவும். முட்டை பொறிப்பதற்கு வழக்கமாக 45 - 65 நாட்கள் ஆகும்.
காலை 9 மணி வரை காவலர்கள் கூட்டிடத்தில் இருப்பார்கள். பிறகு அவர்களின் பிரதான வருவாய் கிடைக்கும் மீன்பிடிக்காக கடலுக்கு செல்வார்கள். பாதுகாப்பு பணிக்காக டிசம்பர் முதல் மே மாதம் வரை ரூ.10,000 மாதந்தோறும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. கடந்த 2021-22 கூடடையும் காலம் வரை அந்த தொகை ரூ.5000 ஆக இருந்தது. “ஆமை குஞ்சுகள் வர உதவும் இப்பணியின் வருமானம் உதவியாக இருக்கிறது,” என்கிறார் ஜல்லிபாபு.
லஷ்மய்யாவும் இணைகிறார். “மீன் இனவிருத்தி நடக்கும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலான 61 நாட்களுக்கு இருக்கும் மீன்பிடி தடைக்காலத்தில் இந்த வருமானம் பெரும் உதவி,” என்கிறார். “ஆனாலும் காவலர்களுக்கு இந்த மாதங்களில் ஊதியம் கொடுக்கப்படவில்லை. பாரி அவர்களை ஜுன் மாதத்தில் சந்தித்தபோது, முதல் மூன்று மாதங்களுக்கான தொகையைதான் அவர்கள் கிடைக்கப் பெற்றிருந்தனர். டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊதியங்கள்.
மீன்பிடி தடைக்காலத்தில் அவர்களுக்கு சொல்லிக் கொள்ளுமளவுக்கு வருமானம் இருக்காது. “வழக்கமாக கட்டுமான தளங்களில் நாங்கள் வேலை பார்ப்போம். ஆனால் இந்த வருடம் இந்த உபரிப் பணம் உதவியாக இருந்தது. மிச்ச தொகையும் சீக்கிரம் வந்துவிட விரும்புகிறேன்,” என லஷ்மய்யா ஜூன் மாதத்தில் சொன்னார்.
சிலருக்கு செப்டம்பர் மாதம் பணம் வந்தது. இன்னும் சிலருக்கு ஆகஸ்ட் மாதம் கிடைத்தது.
முட்டைகள் பொறிந்த ஆமைகள் வெளிவந்தபிறகுதான் விருப்பமான பகுதி நடைபெறும் என்கிறார் ரகு. காவலர்கள் ஆமைகளை ஒரு கூடையில் வைத்து கொண்டு சென்று, கடற்கரையில் வெளியே விடுவார்கள்.
“அவை வேகமாக மணலை தோண்டும். குட்டியான கால்களை கொண்டிருக்கும். வேகமாக சிறு அடிகளை எடுத்து வைக்கும். கடலை அடையும் வரை நிற்காது,” என்கிறார் அவர். “பிறகு அலைகள் குஞ்சுகளை அள்ளி சென்று விடும்.”
கடைசி முட்டை தொகுப்பு இவ்வருட ஜூன் மாதம் பொறிந்தன. ஆந்திர வனத்துறையின் கணக்குப்படி நான்கு கூட்டிடங்களில் 21 காவலர்கள், 46,754 முட்டைகளை சேகரித்து, 37,630 ஆமை குஞ்சுகளை கடலில் விட்டிருக்கின்றனர். 5,655 முட்டைகள் இன்னும் பொறியவில்லை.
“பல முட்டைகள் மார்ச் 2023-ல் பெய்த கனமழையில் பாதிப்படைந்தன. துயரமான விஷயம். சில குஞ்சுகள் அவற்றிலிருந்து வெளியே வந்தபோதும் முட்டை ஓடுகள் அவற்றில் இருந்தன,” என்கிறார் லஷ்மய்யா.
பிறந்த புவிசார் இடத்தை ஆமைகள் பதிவு செய்து கொள்வதாக அடாரி விளக்குகிறார். பெண் ஆமைகள், தாம் பிறந்த அதே இடத்துக்குதான், பாலியல் முதிர்ச்சி அடைந்த 5 வருடங்களில் முட்டையிட வரும்.
“இதை செய்வதில் எனக்கு சந்தோஷம்தான். ஆமை முட்டைகளின் பாதுகாப்பு எந்தளவுக்கு முக்கியம் என்பதை நான் புரிந்திருக்கிறேன்,” என்கிறார் லஷ்மய்யா, அடுத்த கூடடையும் காலத்தை எதிர்நோக்கி.
இக்கட்டுரை Rang De மானிய ஆதரவில் எழுதப்பட்டது
தமிழில் : ராஜசங்கீதன்