“எங்கள் உடம்பில் வண்ணம் தீட்டிக்கொள்வது கடினம். (அதைச் செய்ய) இரவு முழுவதும் விழித்திருக்கவேண்டும்,” என்று கூறுகிறார் தன் உடல் மீது முதல் முதலாக ஆயில் பெயிண்ட் அடித்துக்கொள்ளும் ஆயுஷ் நாயக். “என் உடல் எரிவதுபோல இருக்கிறது. எனவே முடிந்தவரை விரைவாக பெயிண்டை காய வைக்கவேண்டும்,” என்கிறார் அந்த 17 வயது இளைஞர்.
தசரா, ஜென்மாஷ்டமி விழாக்களின்போது ஆடப்படும் பிலி வேஷா ( அல்லது ஹுலி வேஷா) என்ற நாட்டுப்புற நடனம் ஆடுவதற்காக தங்கள் உடலில் பளீர் நிற வண்ணக் கோடுகளைத் தீட்டிக்கொள்ளும் கடலோரக் கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்களில் ஒருவர்தான் ஆயுஷ். சுற்றிலும் மேள ஓசை அதிர, புலி முகமூடி அணிந்துகொண்டு, உறுமிக்கொண்டே இவர்கள் நடனமாடுவார்கள்.
கடலோரக் கர்நாடகத்தில் பேசப்படும் துளு மொழியில் பிலி என்றால் புலி என்று பொருள். வேஷா என்றால் ஒப்பனை (அதாவது... புலிவேடம்) என்று பொருள். “இதில் எதையும், யாரிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இது எங்கள் ஆன்மாவில் இருக்கிறது,” என்று கூறுகிற விரேந்திர ஷெட்டிகார் கடந்த 22 ஆண்டுகளாக பிலி வேஷா ஆடிவருகிறார். “மேளத்தின் ஓசையும், அதைச் சுற்றி ஏற்படுகிற ஆற்றலும், உங்களை அந்தத் தாளத்துக்கு ஆடவைக்கும்,” என்கிறார் அவர். 30 வயதுக்காரரான விரேந்திர ஷெட்டிகார் அமேசானில் விநியோகஸ்தராக வேலை செய்கிறார். தன் ஊரைச் சேர்ந்த இளைஞர்களை இந்த ஆட்டத்தில் பங்கேற்கும்படி ஊக்குவிக்கிறார் அவர்.
புலிகள், சிறுத்தைகள் போலத் தோன்றும் வகையில் தங்கள் உடல் முழுவதும் அக்ரிலிக் பெயிண்டால், மஞ்சள், செம்பழுப்பு நிறப் பட்டைக் கோடுகளை வரைந்து கொள்கிறார்கள் இந்தப் புலி நடனக் கலைஞர்கள். முன்பெல்லாம் கரி, மண், பூஞ்சை ஆகியவற்றைக் கொண்டே இவர்கள் பளிச்சென்ற வண்ணங்களைத் தீட்டிக்கொள்வார்கள்.
இந்த நடனத்தின் பாரம்பரிய அடவுகள் மாறி, காலப்போக்கில் சாகசச் செயல்கள் இதில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. முன்னோக்கி, பின்னோக்கி குட்டிக்கரணம் அடிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, தீயை சுவாசிப்பது என்று ஆபத்தான விளையாட்டுகளுக்கு இதில் முக்கியத்துவம் கூடிவிட்டது. இப்போதைய நடன அசைவுகளை செய்வதற்கு உடல் திறனும், வலிமையும் அபரிமிதமாகத் தேவை. எனவே, இந்தப் பாரம்பரிய நடனத்தை ஆடிவந்த முதியோர் ஒதுங்கிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கிறார்கள்.
இந்தப் பாரம்பரிய நடனத்தை நிகழ்த்துவதற்கு முதல் நாளே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. உடலிலும், முகத்திலும் வண்ணம் தீட்டிக்கொள்வதற்கு பல மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது. பிறகு கொண்டாட்டம் முடியும் வரை சில நாட்களுக்கு இந்த பெயிண்டை கலைக்காமல் வைத்திருக்கவேண்டும். “முதலில் இது கடினமாக இருக்கும், ஆனால், மேளச் சத்தம் கேட்டவுடனே, அதன் தாளத்துக்கு ஆடவேண்டும் போல இருக்கும் ,” என்று கூறும் ஆயுஷ் 12-ம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
தங்கள் பக்தியைக் காட்டுவதற்காகவும், மக்களை மகிழ்விப்பதற்காகவும், உடலில் புலி போல வண்ணம் தீட்டிக்கொண்டிருக்கும் ஆட்கள், அதிரும் மேளத்துக்கு ஏற்ப ஆடுவார்கள். இளைஞர்கள், புலி வேடம் கலையாமல் இருக்கும் வகையில் வண்ணம் தீட்டிக்கொண்டால், பெண்கள் தங்கள் முகத்தில் மட்டும் புலி போல வண்ணம் தீட்டிக்கொண்டு, உடலில் புலி போலத் தோன்றும் பருத்தி ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். பிலி வேஷா நடனத்தில் பெண்கள் பங்கேற்பது சமீப காலமாகத்தான் அதிகரித்துள்ளது.
பிலி வேஷா நடனம் ஆடுகிறவர்களுக்கு, கடலோரக் கர்நாடகத்தில் விளையும் நெல், அரிசி போன்றவற்றை அளிப்பார்கள். இன்று உணவு தானியங்களுக்குப் பதில் பணம் தருகிறார்கள். ஒவ்வொரு நடனக் கலைஞரும் இரண்டு நாட்களில்ல சுமார் 2,500 ரூபாய் சம்பாதிப்பார்கள். அதிரடி சாகசங்களில் ஈடுபடும் ஆட்டக்காரர்கள் இரண்டு நாளில் கூடுதலாக 6,000 ரூபாய் சம்பாதிப்பார்கள். “பல பேர் ஆடுவதைப் பார்த்தவுடன், உங்களுக்கே தன்னால் பிலி வேஷா ஆடவேண்டும் என்று தோன்றும்,” என்கிறார் ஆயுஷ்.
வழக்கமாக, குடியிருப்புப் பகுதிக் கமிட்டிகளே இந்த நடன நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும். ஆயுஷும், அவரது அணியினரும், உடுப்பி, மணிபாலில் ஆண்டு முழுவதும் பிலி வேஷா கொண்டாட்டங்களுக்கு நிதியுதவி செய்யும் ‘யுவ டைகர்ஸ் மஞ்சி’ அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படும். வண்ணம் தீட்டுகிறவர்களுக்கும், நடனம் ஆடுகிறவர்களுக்கும் கொடுப்பதற்கு இந்தப் பணம் செலவாகும். போக்குவரத்து, உணவு, பெயிண்ட், ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றுக்கும் இந்தப் பணத்தில் இருந்தே செலவிடுவார்கள்.
மக்களை மகிழ்விப்பதே ஆட்டக்காரர்களுக்கு முன்னுரிமை என்றாலும், பல நூற்றாண்டுகள் பழமையானது என்று சொல்லப்படும் இந்தப் பாரம்பரியத்தின் ஒழுக்கத்தைப் பேணும் வகையில் பல சட்டதிட்டங்களை அவர்கள் கடைபிடிக்கவேண்டும். “ஆடி முடிக்கும்போது, உடம்பெல்லாம் வலிக்கும். ஆனால், மக்களை மகிழ்விக்கவும், இந்த மரபைக் காப்பாற்றவும் நாங்கள் இதைச் செய்கிறோம்,” என்கிறார் ஆயுஷ்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்