கீழ் வானத்தில் இருள் படர்கிறது. பல வண்ண சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான ‘ஓம் சக்தி’ அம்மன் கட் அவுட் ஒளியில் உயிர் பெறுகிறது. பங்களாமேடு கிராமத்தின் இருளர்கள் வருடாந்திர தீ மிதி திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பகல் முழுவதும் எரியவிடப்பட்ட விறகுக் குவியல் பொடிப் பொடியாக உடைந்து கனிந்துகொண்டிருக்கிறது. அந்த நெருப்புக் கரியை மெலிதாக நிரவி விடுகிறார்கள் தன்னார்வலர்கள். பார்ப்பதற்கு ஒளிரும் பூக்களைப் போல் இருக்கிறது அந்தக் காட்சி. இதனால் கவரப்பட்டுதான் தீ மிதித் திருவிழாவை இருளர்கள் பூ மிதி திருவிழா என்கிறார்கள்.

மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடுகிறது. ஓம் சக்தி மீதான தங்கள் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் இருளர்கள் தீயில் நடப்பதைப் பார்ப்பதற்கு பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து குவிகிறார்கள். இருளர் அல்லாதோரின் தெய்வமான  ஓம் சக்தி வழிபாட்டு மரபு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. ஓம் சக்தி என்றால், ஆற்றல், பலம் என்று பொருள்.

இருளர்கள் சமூகம் தமிழ்நாட்டில் பட்டியல் பழங்குடி சமூகமாக பட்டியலிடப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இவர்கள் கன்னியம்மாவை வணங்குகிறவர்கள். இந்தக் கன்னியம்மா ஏழு கன்னிமார்களில் ஒன்று. கன்னியம்மாவின் குறியீடாக ஒவ்வோர் இருளர் வீட்டிலும் ஒரு மண் கலசமும், வேப்பிலைக் கொத்தும் இருக்கும்.

A kalasam (left) placed on neem leaves to symbolise Kanniamma in a temple (right) dedicated to her in Bangalamedu
PHOTO • Smitha Tumuluru
A kalasam (left) placed on neem leaves to symbolise Kanniamma in a temple (right) dedicated to her in Bangalamedu
PHOTO • Smitha Tumuluru

பங்களாமேட்டில் கன்னியம்மாவுக்காக உள்ள ஒரு கோயிலில் (வலது) கன்னியம்மாவின் குறியீடாக வேப்பிலைகள் மீது வைக்கப்பட்ட ஒரு கலசம் (இடது)

Left: Preparing for the theemithi thiruvizha for goddess Om Sakthi, volunteers in wet clothes stoke the fire to ensure logs burn evenly. Before the fire-walk, they need to spread the embers evenly over the fire pit.
PHOTO • Smitha Tumuluru
Right: Brothers, G. Chinnadurai and G. Vinayagam carry the poo-karagam , which is a large milk pot decorated with flowers
PHOTO • Smitha Tumuluru

இடது: ஓம் சக்தி அம்மனுக்கு தீ மிதி திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும்போது, கட்டைகள் சமமாக எரிய வேண்டும் என்பதற்காக அதைக் கிளரும் ஈரத்துணி கட்டிய தன்னார்வலர்கள். தீ மிதிப்பதற்கு முன்பாக, தீக்குழியில் நெருப்பை அவர்கள் சமமாக நிரவவேண்டும். வலது: ஜி.சின்னதுரை, ஜி.விநாயகம் சகோதரர்கள் பூ கரகம் எடுக்கிறார்கள். பூ கரகம் என்பது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பால் ஊற்றிய பெரிய பானை

பங்களாமேடு இருளர்களின் ஓம்சக்தி திருவிழா எதை விளக்குகிறது?

1990களில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் 36 வயது ஜி.மணிகண்டன் . இவரது சகோதரியும், இருளர் அல்லாத ஒருவரும் காதலித்ததால் சாதிப் பதற்றம் ஏற்பட்டது. இதனால், இவர்களது குடும்பம் தங்கள் சொந்த ஊரான செருக்கனூரைவிட்டு இரவோடு இரவாகத் தப்பிச் செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அந்தக் குடும்பம் செருக்கனூர் ஏரியில் உள்ள ஒரு சிறு கொட்டகையில் தஞ்சமடைந்தது.

“அன்றிரவு முழுவதும் கௌளி (பல்லி) கத்திக் கொண்டே இருந்தது மனதுக்குத் தெம்பாக இருந்தது. அம்மனிடம் இருந்து வந்த நல்ல சகுனமாக அதை நாங்கள் எடுத்துக்கொண்டோம்,” என்கிறார் அவர். அன்றிரவு தங்கள் உயிரைக் காத்தது ஓம் சக்திதான் என்று நம்புகிறார் அவர்.

*****

“நாங்கள் தப்பிச் சென்ற பிறகு உணவும் வேலையும் தேடுவது எளிதாக இருக்கவில்லை. நிலக்கடலை பொறுக்கி, எலி போன்ற சிறு விலங்குகளை வேட்டையாடி எங்களுக்கு உணவளித்தார் எங்கள் தாய். அம்மன்தான் எங்களைக் காப்பாற்றியது,”என்று நினைவுகூர்கிறார் அவர். [படிக்க: பங்களாமேடுவில் எலிகளோடு வேறொரு வாழ்க்கை ]

மணிகண்டன் குடும்பத்தினரும், அவர்களோடு தப்பிச் சென்ற வேறு சிலரும் செருக்கனூர் ஏரியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்களாமேடு என்ற இடத்தில் குடியேறினர். ஏரிக்கு அருகே உள்ள வயல்களில் அவர்களுக்கு வேலை கிடைத்தது.

தொடக்கத்தில் 10 குடும்பங்கள் மட்டுமே இருந்த பங்களாமேடு குடியிருப்பில் தற்போது 55 இருளர் குடும்பங்கள் உள்ளன. செருக்கனூர் இருளர் காலனி என்று அழைக்கப்படும் இப்பகுதி, இருபுறமும் வீடுகளைக் கொண்ட ஒரே ஒரு தெரு ஆகும். சுற்றிலும் புதர்கள் சூழ்ந்த பகுதி. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்தக் குடியிருப்புக்கு 2018ல் மின்சாரம் வந்தது.சமீபமாக ஓரிரண்டு சிமெண்ட் – காங்கிரீட் வீடுகள் வந்துள்ளன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தினக்கூலி வேலையும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட வேலையுமே வாழ்வாதாரம். மணிகண்டன் போன்ற வெகு சிலர் மட்டுமே நடுநிலைப் பள்ளி வரை படித்திருக்கிறார்கள்.

Left: The Om Sakthi temple set up by P. Gopal on the outskirts of Bangalamedu. The temple entrance is decorated with coconut fronds and banana trees on either sides, and has a small fire pit in front of the entrance.
PHOTO • Smitha Tumuluru
Right: G. Manigandan carries the completed thora or wreath
PHOTO • Smitha Tumuluru

இடது: பங்களாமேட்டின் புறவெளியில் பி.கோபால் அமைத்த ஓம் சக்தி கோயில். தென்னங் கீற்றுகளும், வாழை மரங்களும் கட்டி கோயில் முகப்பு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயிலுக்கு எதிரே சிறிய தீக்குழி இருக்கிறது. வலது: கட்டி முடிக்கப்பட்ட ‘தோர’ எனப்படும் பூ வளையத்தை எடுத்துச் செல்கிறார் ஜி.மணிகண்டன்

G. Subramani holds the thora on the tractor (left) carrying the amman deity.
PHOTO • Smitha Tumuluru
He then leads the fire walkers (right) as they go around the bed of embers
PHOTO • Smitha Tumuluru

அம்மன்  திருவுரு ஏற்றிய  டிராக்டரில் ‘தோர ‘வளையத்தை பிடித்தபடி நிற்கும் ஜி.சுப்ரமணி (இடது). பிறகு அவர், தீக்குழியை வலம் வரும் தீ மிதிக்கப்போகும் பக்தர்களை (வலது) நோக்கிச் செல்கிறார்

இங்கே குடியேறி சில ஆண்டுகள் கழித்து மணிகண்டனின் தந்தையும், இருளர் குல மூத்தவருமான பி.கோபால், ஏரிக்கு அருகே உள்ள சிறு இடத்தில் ஓம் சக்தி கோயில் ஒன்றைக் கட்டினார். சோதனைக் காலத்தில் தங்களுக்குத் துணையாக இருந்த ஓம் சக்தி அம்மனுக்கு நன்றி காட்டும் விதமாக இதைச் செய்தார். “அப்போது அந்தக் கோயில் ஒரு சிறு குடிசை. ஏரி மண்ணில்தான் அம்மன் சிலை செய்தோம். என் தந்தைதான் ஆடி மாத தீ மிதித் திருவிழாவையும் முதலில் தொடங்கினார்,” என்று கூறுகிறார் மணிகண்டன்.

கோபால் இறந்த பிறகு, அவரது பூசாரி வேலையை மணிகண்டனின் அண்ணன் ஜி.சுப்ரமணி ஏற்றார். வாரத்துக்கு ஒரு நாள் கோயில் வேலைக்கு என்று ஒதுக்குகிறார் சுப்ரமணி. மீதி ஆறு நாளும் அவர் கூலி வேலைக்கு செல்கிறார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களாமேடு இருளர்கள் ஒரு நாள் திருவிழா மூலம் ஓம் சக்தி அம்மனுக்கான தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். நாள் முழுவதும் நடக்கும் திருவிழா, தீமிதியோடு நிறைவடைகிறது. கடும் கோடைக்குப் பிந்தைய ஆசுவாசமாக பருவமழை பெய்யத் தொடங்கும் ஆடி மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் வரும்) இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இருளர்கள் தீமிதி விழா கொண்டாடுவது சமீபகால வழக்கம் என்றபோதிலும், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி வட்டம் முழுவதும் திரௌபதி அம்மன் (மகாபாரதத்தில் வரும் பாத்திரம்), மாரியம்மன், ரோஜா அம்மன், ரேவதி அம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களுக்கு தீ மிதித்து வழிபாடு செய்வது ஆடி மாதத்தில் பொதுவாக நடப்பதுதான்.

“கோடை காலத்தில் மக்களுக்கு அவ்வப்போது அம்மை போடும். இந்தக் கடினமான மாதங்களை கடக்க உதவவேண்டும் என்று அம்மனை வேண்டிக்கொள்வோம்,” என்கிறார் மணிகண்டன். பேசும்போது ‘அம்மன்’ என்ற சொல்லை, நோய், தெய்வம் இரண்டையும் குறிப்பிடுவதற்காக மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறார். அம்மனே அந்த நோயைத் தருவதாகவும், பிறகு அவளே தன்னை நம்புவோருக்கு அந்த நோயை குணப்படுத்துவதாகவும் இருக்கும் வெகுஜன நம்பிக்கையை அவர் பிரதிபலிக்கிறார்.

பங்களாமேட்டில் தீ மிதித் திருவிழாவை கோபால் தொடக்கியதில் இருந்து, அருகில் உள்ள குடிகுண்ட கிராமத்தைச் சேர்ந்த இருளர் அல்லாத ஒரு குடும்பத்தினர் இந்த விழா ஏற்பாட்டில் பங்கேற்று வருகின்றனர். மணிகண்டன் குடும்பம் தங்கள் சொந்த ஊரில் இருந்து தப்பி வந்தபோது அடைக்கலம் புகுந்தது, இந்த இருளர் அல்லாத குடும்பத்தின் வயலில் உள்ள கொட்டகையில்தான்.

Left: The mud idol from the original temple next to the stone one, which was consecrated by a Brahmin priest in the new temple building.
PHOTO • Smitha Tumuluru
Right: A non-Irular family, one of the few, walking on the fire pit
PHOTO • Smitha Tumuluru

இடது: முதலில் உருவாக்கப்பட்ட கோயிலில் இருந்த மண் சிலையும், பிறகு, புதிதாக கட்டிய கோயிலில் பிராமண பூசாரி குடமுழுக்கு செய்த கல் சிலையும். வலது: தீக்குழி மீது நடந்து வரும் ஓர் இருளர் அல்லாத குடும்பத்தினர். இருளர் அல்லாத வெகுசிலரே இங்கு இந்த தீ மிதியில் பங்கேற்கின்றனர்

“இருளர்கள் தவிர, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் பத்து பேர் ஆரம்பத்தில் இருந்தே இங்கே தீ மிதிக்கிறோம்,” என்கிறார் 57 வயது டி.என் .கிருஷ்ணன் – நண்பர்கள் பழனி என்று அழைக்கும் இவர் அந்த விளை நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவர். ஓம் சக்தியை வழிபடத் தொடங்கிய பிறகுதான் தங்களுக்கு குழந்தைகள் பிறந்ததாக பழனி குடும்பத்தினர் நம்புகின்றனர்.

எனவே, அந்த சாமிக்கு தங்கள் நன்றிக் கடனை செலுத்தும் விதமாக இருளர்கள் அமைத்திருந்த கொட்டகை கோயிலை அகற்றிவிட்டு சிறிய சிமெண்டால் ஆன கோயிலை அவர்கள் கட்டினர். இருளர்கள் வைத்த மண் அம்மனுக்குப் பதிலாக கல் சிலையையும் அவர்களே அமைத்தனர்.

*****

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆடி தீ மிதித் திருவிழா வேலைகள், விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடும். தீ மிதிக்க விரும்புவோர் அப்போதே கைகளில் காப்பு கட்டிக் கொண்டு, திருவிழா வரையில் சிரத்தையோடு விரதம் இருக்கவேண்டும்.

“காப்பு கட்டிக்கொண்ட பிறகு, திருவிழா வரை, நாங்கள் தினம் இரண்டு முறை தலைக் குளித்து, கோயிலுக்கு செல்வோம். மஞ்சள் ஆடை அணிவோம். இறைச்சி உண்ண மாட்டோம். ஊரைவிட்டு வெளியே செல்லமாட்டோம்,” என்கிறார் பங்களாமேட்டில் சிறிய பெட்டிக்கடை நடத்தும் எஸ்.சுமதி. சிலர் இப்படி ஒரு வாரம் விரதம் இருப்பார்கள். சிலர் திருவிழாவுக்கு முன்பு இன்னும் அதிக நாட்கள் விரதம் இருப்பார்கள். “அவரவருக்கு எத்தனை நாள் முடியுமோ அவ்வளவு நாட்கள் இப்படி இருப்பார்கள். ஆனால், காப்பு கட்டிய பிறகு நாங்கள் ஊரை விட்டுச் செல்ல முடியாது,” என்கிறார் மணிகண்டன்.

பண்பாடுகளுக்கு இடையே கருத்துகளும், பழக்க வழக்கங்களும் பரவுவதையே இந்த சடங்குகள் காட்டுகின்றன என்கிறார்  ‘எய்ட் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து இந்த மக்கள் நடுவே நீண்ட காலம் நெருக்கமாகப் பணியாற்றிய டாக்டர் எம்.தாமோதரன். “வேண்டுதல் செய்துகொள்வது, விரதம் இருப்பது, குறிப்பிட்ட நிறத்தில் ஆடை அணிவது, சமுதாய நிகழ்வுகளை நடத்துவது போன்ற பழக்கவழக்கங்கள் பல [இருளர் அல்லாத]சமூகங்களால் ஏற்கப்பட்டுள்ளன. இந்தப் பழக்க வழக்கங்கள் இருளர் சமூகத்திலும் பலரிடையே பரவியுள்ளது. எல்லா இருளர் கிராமங்களும் இந்தப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதில்லை,” என்கிறார் அவர்.

பங்களாமேட்டில், இந்த திருவிழாவின் எல்லா சடங்குகளையும் இருளர்களே செய்கிறார்கள். ஆளுக்கு கொஞ்சமாக பணம் போட்டு அலங்காரங்களை செய்கிறார்கள். திருவிழா நாள் காலையில் புதிதாகப் பறித்த பச்சை வேப்பிலைக் கொத்துகளை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மரங்கள் அனைத்திலும் கட்டுகிறார்கள். பெரிய ஸ்பீக்கர்கள் கட்டி பக்திப் பாடல்களைப் போடுகிறார்கள்.  பின்னிய பச்சை தென்னை ஓலைகள், உயரமான வாழை மரங்கள் கோயிலின் முகப்பை அலங்கரிக்கின்றன.

K. Kanniamma and S. Amaladevi carrying rice mixed with blood of a slaughtered goat and rooster (left).
PHOTO • Smitha Tumuluru
They are throwing it around (right) as part of a purification ritual around the village
PHOTO • Smitha Tumuluru

சாமி வந்ததாக நம்பப்படும் கே.கன்னியம்மா, எஸ்.அமலாதேவி இருவரும் அறுத்த ஆடு, கோழியின் ரத்தம் கலந்த அரிசியை எடுத்துச் செல்கிறார்கள் (இடது). அதை அவர்கள் ஊர் முழுவதும் தெளிக்கிறார்கள் (வலது). இது ஒரு தூய்மைப்படுத்தும் சடங்கு

Left: At the beginning of the ceremonies during the theemithi thiruvizha , a few women from the spectators are overcome with emotions, believed to be possessed by the deity's sprit.
PHOTO • Smitha Tumuluru
Right: Koozhu, a porridge made of rice and kelvaragu [raagi] flour is prepared as offering for the deity. It is cooked for the entire community in large aluminium cauldrons and distributed to everyone
PHOTO • Smitha Tumuluru

இடது: தீ மிதித் திருவிழா நிகழ்வின் தொடக்கத்தில் சில  பெண்கள் மேலிடும் உணர்ச்சியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் மீது சாமி வந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் மீது குளிர்ந்த நீரூற்றி நினைவைத் திருப்புவதை குழந்தைகள் பக்கத்தில் இருந்து பார்க்கிறார்கள். சாமிக்குப் படையலாக கேழ்வரகு – அரிசிக் கூழ் தயாராகிறது. ஊரில் உள்ள அனைவருக்கும் தருவதற்காக இந்தக் கூழ் ஒரு பெரிய அலுமினிய கொப்பரையில் தயாரிக்கப்படுகிறது

காப்புக் கட்டியவர்கள் சடங்குகளில் ஈடுபடுவதற்காக மஞ்சள் ஆடையில் கோயிலுக்கு வருகிறார்கள். அந்த நாள் நிகழ்வுகள் அம்மன் அருள்வாக்கு தருவதில் இருந்து தொடங்குகிறது. “யாரோ ஒருவர் மீது அம்மன் வந்தால், அவர்கள் மூலமாகப் பேசுவாள்,” என்கிறார் மணிகண்டன். “நம்பாதவர்கள் கோயிலில் ஒரு கல்லைத்தான் பார்ப்பார்கள். எங்களுக்கு அந்த திருவுரு உண்மையானது. உயிருள்ளது. அவள் எங்கள் தாயைப் போல. எங்களில் ஒருவரிடம் பேசுவதைப் போலவே நாங்கள் அவளிடம் பேசுவோம். தாய் எங்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அறிவுரையும் கூறுகிறாள்.”

ஒவ்வோர் ஆண்டும் அருள்வாக்கு கூறும் மணிகண்டனின் அக்கா கன்னியம்மா அறுத்த ஆடு, கோழியின் ரத்தம் கலந்த அரிசியை கோயிலிலும், ஊர் முழுவதிலும் தெளிக்கிறார். கேழ்வரகு-அரிசி கூழ் சமைக்கும் தன்னார்வலர்கள் ஊர் முழுக்க அதை விநியோகிக்கிறார்கள். ‘தோர’ எனப்படும் பூ, வாழை மட்டை கொண்ட பெரிய வளையம் ஒன்றை பகல் முழுவதும் கட்டுகிறார்கள். மாலை ஊர்வலத்துக்கு சாமியை அலங்கரிப்பதற்காக இந்த வளையம் கட்டப்படுகிறது.

பல ஆண்டுகளில், பழைய மண் கொட்டகை கோயில் இருந்த இடத்தில் சிமெண்ட் கோயில் வந்து, திருவிழாவும் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. பங்களாமேட்டில் நடக்கும் தீ மிதி திருவிழாவைப் பார்ப்பதற்கு பழனியின் குடிகுண்ட கிராமம் உள்ளிட்ட பக்கத்து ஊர்களில் இருந்து பெருந்திரளான மக்கள் வருகிறார்கள். “இந்த திருவிழா எப்போதும் நின்றதில்லை. கோவிட் காலத்தில் கூட இரண்டு ஆண்டுகள் குறைவான கூட்டத்தோடு நடத்தப்பட்டதே தவிர, நிற்கவில்லை,” என்கிறார் மணிகண்டன். கோவிட்டுக்கு முந்தைய 2019ம் ஆண்டில் இந்த திருவிழாவுக்கு சுமார் 800 பேர் வந்தார்கள்.

சமீப ஆண்டுகளில் வருகிற அனைவருக்கும் பழனி குடும்பம் அன்னதானம் செய்கிறது. “2019ம் ஆண்டு 140 கிலோ கோழிக்கறி போட்டு பிரியாணி செய்வதற்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டோம்,” என்கிறார் பழனி. இப்போது வரும் பக்தர்களின் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு வந்துவிட்டது என்று கூறும் அவர், எல்லோரும் ‘திருப்தியாக செல்கிறார்கள்,” என்கிறார். அதிகமாகும் செலவை சமாளிக்க அவர் தனது நண்பர்களிடம் பணம் திரட்டுகிறார்.

“கோயிலை நாங்கள் கட்டடமாக கட்டிய பிறகு கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இருளர்களால் இதை சமாளிக்க முடியாது இல்லையா?” என்று கேட்கும் அவர், கோயிலை தன் ஊர் பெயரை சேர்த்து ‘குடிகுண்ட ஓம் சக்தி கோயில்’ என்று கூறுகிறார்.

Irular volunteers prepare the tractor for the procession later that evening
PHOTO • Smitha Tumuluru
Irular volunteers prepare the tractor for the procession later that evening
PHOTO • Smitha Tumuluru

மாலை ஊர்வலத்துக்காக டிராக்டரை தயார் செய்யும் இருளர்கள்

Left: The procession begins with the ritual of breaking open a white pumpkin with camphor lit on top.
PHOTO • Smitha Tumuluru
Right: The bangle seller helps a customer try on glass bangles
PHOTO • Smitha Tumuluru

இடது: வெள்ளைப் பூசணி மீது கற்பூரம் ஏற்றி உடைத்து ஊர்வலம் தொடங்குகிறது. வலது: வளையல் வியாபாரி ஒருவர் கண்ணாடி வளையல் போட்டுப் பார்ப்பதற்கு ஒரு வாடிக்கையாளருக்கு உதவி செய்கிறார்

*****

“புதிய கோயில் கட்டப்பட்டவுடன், எங்கள் மண் சிலைக்குப் பதிலாக கல் சிலை வைக்கப்பட்டது. அப்படித்தான் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்,” என்கிறார் மணிகண்டன். “எங்கள் மண் சிலையை அதற்குப் பக்கத்திலேயே வைத்துவிட்டோம். அந்த மண் தெய்வம்தான் எங்களைக் காக்கிறது.”

“அவர்கள் ஓர் ஐயரைக் கூப்பிட்டுவிட்டார்கள். அவர் எங்கள் பச்சரிசியையும், வேப்பிலையையும் அகற்றிவிட்டார். இது நாங்கள் செய்வது போல இல்லை,” என்று கொஞ்சம் வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார் மணிகண்டன்.

“கன்னியம்மா போன்ற தெய்வங்களுக்கான வழிபாட்டில் வழக்கமாக விரிவான, கட்டமைக்கப்பட்ட சடங்குகளோ, சமுதாயம் முழுவதையும் ஈடுபடுத்துவதோ இருக்காது,” என்கிறார் டாக்டர் தாமோதரன். இவர், மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும்கூட. “சடங்குகளையும், குறிப்பிட்ட முறையில் அதைச் செய்வதையும் வலியுறுத்துவது பிராமண பூசாரிகளை நுழைத்து அதை மத வடிவமாக்குவது என்பதெல்லாம் அச்சுப்பிசகாத நடைமுறை. இது, பழக்கவழக்கங்களை மத முறைக்குள் கொண்டு வருகிறது. மாறுபட்ட பண்பாடுகளில் தனித்துவமான முறைகளில் வழிபடுவதை அழிக்கிறது,” என்கிறார் அவர்.

ஒவ்வோர் ஆண்டும் பங்களாமேடு தீ மிதி திருவிழா பிரம்மாண்டமாக ஆக ஆக, மணிகண்டனும் அவரது குடும்பத்தினரும் திருவிழா தங்கள் கையைவிட்டு நழுவிச் செல்வதை உணர்கிறார்கள்.

“முன்பு என் தந்தை மொய் பணத்தைக் கொண்டே உணவு செலவு முழுவதையும் தானே சமாளித்தார். இப்போது ’மணி... காப்பு சடங்கு முழுவதையும் நீ பாத்துக்கோப்பா’ என்று சொல்லி, உணவு செலவு முழுவதையும் அவர்கள் (பழனி குடும்பம்) ஏற்றுக்கொண்டார்கள்,” என்று கூறும் மணிகண்டனின் குடும்பம் அவ்வப்போது பழனியின் வயலில் வேலை செய்கிறது.

Left: A banner announcing the theemithi event hung on casuarina trees is sponsored by Tamil Nadu Malaivaazh Makkal Sangam – an association of hill tribes to which Irulars belong. A picture of late P. Gopal is on the top right corner.
PHOTO • Smitha Tumuluru
Right: K. Kanniamma tries to sit briefly in the fire pit before crossing. This is a risky move for those who attempt as one needs to be fast enough not to burn one's feet. Kanniamma's b rother Manigandan followed this tradition every year until their father's death. Since no male member of the family could sit, Kanniamma took it on herself.
PHOTO • Smitha Tumuluru

இடது: தீ மிதி திருவிழா அறிவிப்புப் பதாகை ஒன்று சவுக்கு மரத்தில் கட்டப்பட்டுள்ளது. வலது மூலையில் காலம் சென்ற பி.கோபாலின் படம் உள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இந்தப் பதாகையை ஸ்பான்சர் செய்துள்ளது. இருளர்கள் இந்த சங்கத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.வலது: நெருப்பைக் கடப்பதற்கு முன்பு அதில் லேசாக உட்கார முயற்சி செய்கிறார் கே.கன்னியம்மா. கடந்த ஆண்டு தனது தந்தையின் இறப்புவரை இவரது சகோதரன் மணிகண்டன் பின்பற்றிவந்த பாரம்பரியம் இது. குடும்பத்தின் ஆண்கள் எவரும் இந்தப் பாரம்பரியத்தை பின்பற்ற முடியாத சூழ்நிலையில், கன்னியம்மா இதை எடுத்துக்கொண்டார். இது மிகவும் ஆபத்தான செயல். ஏனென்றால் இதை செய்கிறவர் கால்களை சுட்டுக்கொள்ளாமல் இருக்கவேண்டுமானால், மிக வேகமாக செய்யவேண்டும்

Left: Fire-walkers, smeared with sandalwood paste and carrying large bunches of neem leaves, walk over the burning embers one after the other; some even carry little children.
PHOTO • Smitha Tumuluru
Right: It is an emotional moment for many who have kept their vow and walked on fire
PHOTO • Smitha Tumuluru

இடது: உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு, கைகளில் வேப்ப இலைக் கொத்து வைத்திருக்கும் தீ மிதிப்போர்  ஒருவர் பின் ஒருவராக தீயில் நடந்து செல்கிறார்கள். சிலர் சிறு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு நடக்கின்றனர். வலது: தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தீயில் நடந்து கடக்கிற பலருக்கும் இது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம்

அந்தப் பதாகையில் மறைந்த ‘கோபாலின் வழிமுறை’ என்ற வாசகத்தைத் தவிர இருளர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. “எங்கள் அப்பா பெயர், இடம் பெறவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதில் எந்தப் பெயரும் இடம் பெறுவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை,” என்றார் மணிகண்டன்.

ஆனால், தீ மிதித் திருவிழா அன்று தீ மிதிப்போர் இந்த எண்ணங்களையெல்லாம் ஓரம் வைத்துவிட்டு தங்கள் பக்தியைக் காட்டத் தயாரானார்கள். குளித்து மஞ்சள் ஆடை அணிந்து கழுத்தில் மாலை அணிந்துகொண்டு தலையில் பூச்சூடிக்கொண்டு, உடலெங்கும் சந்தனம் தடவிக்கொண்டு,பக்தி மிக்க கைகளில் வேப்ப இலைகளை வைத்துக்கொண்டு அவர்கள் தீ மிதிக்கச் சென்றார்கள். அந்த நாளில் அம்மனே எங்களோடு இருப்பதைப் போல இருந்தது. அதனால்தான் அந்த நாளில் ஆண்களும்கூட பூ அணிகிறார்கள்,” என்றார் கன்னியம்மா.

தீக்குழியில் இறங்க அவர்கள் தயாராகும்போது அமைதியாக இருப்பவர்கள் ஆவேசமாக மாறுகிறார்கள். சிலர் கூச்சலிடுகிறார்கள். சிலர் வணங்குகிறார்கள். இந்த நிகழ்வை பலர் தங்கள் செல் பேசியில் படமெடுக்கிறார்கள்.

பழைய எளிமையான இருளர் கோயில் என்ற பெயருக்குப் பதிலாக புதிய பெயர், புதிய சிலை, கோயிலை, திருவிழாவை நிர்வகிப்பதில் மாறுபடும் நிலைமைகள் என்று பல இருந்தாலும், மணிகண்டனும் அவரது குடும்பமும், தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு நன்றிக் கடன் செலுத்துவது என்ற தங்கள் தந்தையின் வாக்குறுதியை காப்பாற்றுகிறார்கள். தீ மிதி அன்று தங்கள் மற்ற கவலைகளையெல்லாம் அவர்கள் தள்ளி வைக்கிறார்கள்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள படங்கள் எல்லாம் இந்த செய்தியாளர் 2019ல் பங்களாமேடு  தீ மிதி திருவிழாவைக் காணச் சென்றபோது எடுத்தவை.

மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்

Smitha Tumuluru

स्मिता तुमुलुरु, बेंगलुरु की डॉक्यूमेंट्री फ़ोटोग्राफ़र हैं. उन्होंने पूर्व में तमिलनाडु में विकास परियोजनाओं पर लेखन किया है. वह ग्रामीण जीवन की रिपोर्टिंग और उनका दस्तावेज़ीकरण करती हैं.

की अन्य स्टोरी Smitha Tumuluru
Editor : Sangeeta Menon

संगीता मेनन, मुंबई स्थित लेखक, संपादक और कम्युनिकेशन कंसल्टेंट हैं.

की अन्य स्टोरी Sangeeta Menon
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

की अन्य स्टोरी A.D.Balasubramaniyan