முதுமலை புலிகள் சரணாலயத்தில் கண்கள் ஓய்வெடுக்கலாம், காதுகள் ஓய்வெடுக்காது. பறவைகளும் விலங்குகளும் நாம் புரிந்து கொள்ள முடியாத ஒலிகளில் பேசிக் கொள்ளும். அவற்றுக்கு நடுவேதான் நீலகிரி மலைவாழ் பழங்குடிகளின் மொழிகள் இருக்கின்றன.

“நலையாவொடுது” (எப்படி இருக்கே)? எனக் கேட்கின்றனர் பெட்டக்குரும்பர்கள். இருளர்கள் பதிலுக்கு “சந்தகிதையா?” என்கிறார்கள்

கேள்வி ஒன்றுதான், வெவ்வேறு மொழிகள்.

Left: A Hoopoe bird after gathering some food.
PHOTO • K. Ravikumar
Right: After a dry spell in the forests, there is no grass for deer to graze
PHOTO • K. Ravikumar

இடது: உணவு சேகரித்தபின் கொண்டலாத்தி பறவை ஒன்று. வலது: மழையின்றி காடுகளில் மான்கள் மேய புற்கள் இல்லை

மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியான இங்கு விலங்குகள் மற்றும் மக்களின் இசையை மறுக்கும் வண்ணம், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் சத்தம் எங்கிருந்தோ கேட்கிறது. இவைதான் வீட்டில் இருக்கும் சப்தங்கள்.

முதுமலை புலிகள் சரணாலயத்துக்குள் இருக்கும் பொக்கபுரம் கிராமத்தில், குரும்பர்பாடி என்கிற தெருவில் நான் வசிக்கிறேன். பிப்ரவரி பிற்பகுதி தொடங்கி மார்ச் மாதத் தொடக்கம் வரை, இந்த பரிசுத்தமான இடம் பரபரப்பாக இயங்கும் தூங்கா நகரம் மதுரை போல் மாறுகிறது. பொக்கபுரம் மாரியம்மனுக்கு நடத்தப்படும் திருவிழாதான் காரணம். ஆறு நாட்களுக்கு கூட்டங்களும் விழாக்களும் இசையும் டவுனில் நிறைந்திருக்கும். எனினும் என் ஊரின் வாழ்க்கை பற்றி நான் யோசிக்கையில், இது மட்டும்தான் நினைவுக்கு வரும்.

இது புலிகள் சரணாலயம் பற்றி கட்டுரையோ கிராமம் பற்றிய கட்டுரையோ அல்ல. என் வாழ்வில் முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு நபரை பற்றிய கட்டுரை இது. கணவன் நிர்க்கதியாக விட்டுச் சென்றபிறகு ஒற்றை ஆளாக ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய பெண்ணை பற்றிய கட்டுரை. என் தாய் பற்றிய கட்டுரை.

Left: Amma stops to look up at the blue sky in the forest. She was collecting cow dung a few seconds before this.
PHOTO • K. Ravikumar
Right: Bokkapuram is green after the monsoons, while the hills take on a blue hue
PHOTO • K. Ravikumar

இடது: காட்டில் நீலவானத்தை பார்க்க நிற்கும் அம்மா. சில கணங்களுக்கு முன் வரை மாட்டுச்சாணம் சேகரித்துக் கொண்டிருந்தார். வலது: மழைக்கு பிறகு பொக்கபுரம் பச்சை பசேல் எனவும் மலைகள் நீல நிறமாகவும் காட்சியளிக்கும்

*****

என்னுடைய அதிகாரப்பூர்வ பெயர் கே.ரவிகுமார். ஆனால் எங்களின் மக்களுக்கு மாறன் என்றுதான் என்னைத் தெரியும். எங்கள் சமூகம் பேட்டக்குரும்பர் சமூகம் ஆகும்.

இக்கதையின் நாயகி, என் அம்மா மேத்தி. அதிகாரப்பூர்வமாக இருப்பதும் மக்கள் அழைப்பதும் அந்தப் பெயர்தான். என் அப்பா கிருஷ்ணனை கேத்தன் என அழைப்பார்கள். நாங்கள் மொத்தம் ஐந்து குழந்தைகள்: என் அக்கா சித்ரா (சமூகத்தில் கிர்காலி எனப் பெயர்), அண்ணன் ரவிச்சந்திரன் (மாதன் என அழைக்கப்படுவார்) இரண்டாவது அக்கா, சசிகலா (சமூகத்தில் கெத்தி எனப் பெயர்) பிறகு தங்கை குமாரி (கின்மாரி என அழைப்பார்கள்) ஆகியோர். என் அண்ணனுக்கும் அக்காவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கடலூரிலுள்ள பாலவாடியில் அவரவர் குடும்பங்களுடன் வாழ்கின்றனர்.

அம்மா, அப்பா பற்றிய என் ஆரம்பகால நினைவு, அங்கன்வாடிக்கு அவர்கள் என்னை அழைத்து சென்றதுதான். அங்கு என் நண்பர்களால் எல்லா வகை உணர்வுகளையும் அனுபவித்தேன். சந்தோஷம், கோபம், துயரம் என எல்லாமும். பிற்பகல் 3 மணிக்கு என் பெற்றோர் வந்து என்னை அழைத்து வீட்டுக்கு கூட்டிச் செல்வார்கள்.

மதுவால் மரணமடையும் வரை அன்புடன் என் அப்பா இருந்தார். மது குடிக்க ஆரம்பித்ததும் பொறுப்பில்லாமல் வன்முறையைக் கையிலெடுப்பவராக ஆனார். “கெட்ட சகவாசம்தான் அவரின் நடத்தைக்கு காரணம்,” என்பார் என் அம்மா.

Left: My amma, known by everyone as Methi.
PHOTO • K. Ravikumar
Right: Amma is seated outside our home with my sister Kumari and my niece, Ramya
PHOTO • K. Ravikumar

இடது: என் அம்மாவை அனைவரும் மேத்தி என அழைப்பார்கள். வலது: வீட்டுக்கு வெளியே அக்கா குமாரி மற்றும் சகோதரி மகள் ரம்யாவுடன் அமர்ந்திருக்கிறார் அம்மா

வீட்டில் பிரச்சினை ஏற்பட்ட என் முதல் நினைவு, ஒருநாள் வீட்டுக்கு மதுவருந்து விட்டு அப்பா வந்து, அம்மாவை திட்டத் தொடங்கியதுதான். அம்மாவை அவர் தாக்கி, அம்மாவின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தாரை அவமதித்து அசிங்கமாகப் பேசினார். அவர்களும் அச்சமயத்தில் எங்களுடன்தான் இருந்தனர். அவர் பேசியதைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதும், அவர்கள் அவரின் வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை. இந்த சண்டைகள் தினசரி நிகழ்வுகளாகி விட்டன.

2ம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த இன்னொரு சம்பவமும் நினைவில் ஓரளவுக்கு இருக்கிறது. வழக்கம்போல் அப்பா குடித்து விட்டு வந்திருந்தார். கோபமாக அம்மாவையும் என் சகோதர சகோதரிகளையும் பின் என்னையும் தாக்கினார். அந்த இரவில், தாயுடன் நாங்கள்  நடுத்தெருவில் நின்றோம். குளிர்காலத்தில் தாயின் அரவணைப்புக்கு ஏங்கும் சிறு விலங்குகள் போல நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.

நாங்கள் சென்ற பழங்குடி அரசுப் பள்ளியான GTR நடுநிலைப் பள்ளியில் விடுதியும் உணவு வசதிகளும் இருந்ததால், என் அண்ணனும் அக்காவும் அங்கு வசிக்க முடிவு செய்தனர். அந்த நாட்களில், கண்ணீரும் அழுகைகளும்தான் எங்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. எங்கள் வீட்டில் தொடர்ந்து நாங்கள் வசிக்கத் தொடங்கினோம். அப்பா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

எப்போதும் நாங்கள் பதற்றத்திலேயே இருந்தோம். அடுத்த சண்டை எப்போது வெடிக்கும் எனத் தெரியாது. ஒருநாள் இரவு, அப்பாவின் மது போதை கோபம், அம்மாவின் சகோதரருடன் சண்டை போடுமளவுக்கு மாறியது. கத்தியை வைத்து என் மாமாவின் கைகளை வெட்ட முயன்றார் அப்பா. அதிர்ஷ்டவசமாக கத்தி கூரின்றி இருந்ததால், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. குடும்பத்திலிருந்து பிறர் தலையிட்டு அப்பாவை அடித்தனர். அந்தக் குழப்பத்தில், அம்மா வைத்திருந்த என் தங்கை தவறி விழுந்து தலையில் அடிபட்டது. ஒன்றும் செய்ய முடியாமல் நடப்பதையும் ஜீரணிக்க முடியாமல் வெறுமனே அங்கு நான் நின்று கொண்டிருந்தேன்.

அடுத்த நாள், வீட்டின் முன்பக்கத்தில் அப்பா மற்றும் மாமாவின் கருஞ்சிவப்பு ரத்தக்கறை சிதறியிருந்தது. நள்ளிரவில் தள்ளாடியபடி என் அப்பா, என்னையும் சகோதரியையும் தாத்தா வீட்டிலிருந்து இழுத்துச் சென்று, வயலுக்கு நடுவே இருக்கும் அவரது சிறு அறையில் விட்டார். சில மாதங்களுக்கு பிறகு, ஒருவழியாக என் பெற்றோர் பிரிந்தனர்.

Left: My mother cutting dry wood with an axe. This is used as firewood for cooking.
PHOTO • K. Ravikumar
Right : The soft glow of the kerosene lamp helps my sister Kumari and my niece Ramya study, while our amma makes rice
PHOTO • K. Ravikumar

இடது: என் தாய் கோடரி கொண்டு விறகு வெட்டுகிறார். வலது: மண்ணெண்ணெய் விளக்கின் மெல்லிய வெளிச்சம்தான் என் சகோதரி குமாரியும் அக்கா மகள் ரம்யாவும் படிக்கவும் அம்மா சோறாக்கவும் உதவுகிறது

கூடலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் என் சகோதரர்களும் நானும் அம்மாவுடன் வசிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டோம். கொஞ்ச காலத்துக்கு தாத்தா, பாட்டியுடன் சந்தோஷமாக இருந்தோம். அவர்களின் வீடும், பெற்றோர் இருந்த வீடு இருந்த தெருவில்தான் இருந்தது.

எங்களின் சந்தோஷம் கொஞ்ச காலத்துக்குதான் இருந்தது. உணவுக்கு பிரச்சினை வந்தது. தாத்தாவுக்கு கிடைத்த 40 கிலோ உணவுப் பொருட்கள் எங்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. பல நாட்களுக்கு எங்களின் தாத்தா எங்களை உண்ணவிட்டு, அவர் பட்டினியாகத்தான் தூங்கியிருக்கிறார். சில நேரங்களில் எங்களை பசியாற்ற கோவில் பிரசாதம் வாங்கி வருவார். அப்போதுதான் கூலி வேலைக்கு செல்வதென அம்மா முடிவெடுத்தார்.

*****

குடும்பத்தில் வசதி இல்லாததால் மூன்றாம் வகுப்பிலேயே அம்மா படிப்பை நிறுத்திவிட்டார். உடன்பிறந்தோரை வளர்ப்பதிலேயே அவரது பால்யம் கழிந்தது. 18 வயதில் என் அப்பாவுக்கு அவர் மணம் முடித்து வைக்கப்பட்டார்.

பொக்காபுரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த சிங்கார கிராமம் என்கிற தேயிலைத் தோட்டத்தில் விறகு சேகரிக்கும் வேலையில் அப்பா இருந்தார்.

எங்கள் பகுதியை சேர்ந்த அனைவரும் அங்கு வேலை பார்த்தனர். இருவரும் மணம் முடித்த பிறகு, வீட்டிலிருந்து அம்மா எங்களைப் பார்த்துக் கொண்டார். இருவரும் பிரிந்த பிறகு, அவர் சிங்காரா தேயிலைத் தோட்டத்தில் தினக்கூலி பணியாளராக வேலைக்கு சேர்ந்து தினசரி 150 ரூபாய் வருமானம் ஈட்டினார்.

Left: After quitting her work in the coffee estate, amma started working in her friends' vegetable garden.
PHOTO • K. Ravikumar
Right: Here, amma can be seen picking gourds
PHOTO • K. Ravikumar

இடது: தேயிலைத் தோட்டத்து வேலையை விட்ட பிறகு, நண்பர்களின் காய்கறி தோட்டத்தில் அம்மா வேலை பார்க்கத் தொடங்கினார். வலது: அம்மா சுரைக்காய் பறிக்கிறார்

அன்றாடம் அவர் வேலைக்கு காலை 7 மணிக்கு சென்றுவிடுவார். வெயிலிலும் மழையிலும் உழைப்பார். அவருடன் பணிபுரிபவர்கள், “மதிய உணவு வேளைகளிலும் அவள் ஓய்வெடுக்க மாட்டாள்,” என சொல்லக் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு ஊதியத்தைக் கொண்டுதான் அவர் குடும்பத்தை ஓட்டினார். இரவு 7.30 மணிக்குதான் அவர் வீட்டுக்கு திரும்புவார். புடவை நனைந்து நடுங்கிக் கொண்டிருப்பார். தலையில் ஒரு ஈர துண்டு மட்டும்தான் இருக்கும். அத்தகைய மழை நாட்களில், எங்களின் வீட்டுக் கூரை பல இடங்களில் ஒழுகும். அவர் மூலைக்கு மூலை நகர்ந்து நீர் பிடிக்க பாத்திரங்கள் வைப்பார்.

நெருப்பு மூட்ட எப்போதும் அவருக்கு நான் உதவுவேன். பிறகு குடும்பம் நெருப்பருகே அமர்ந்து இரவு 11 மணி வரை ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்.

சில இரவுகளில் நாங்கள் படுக்கையில் படுத்திருக்கும்போது தூங்குவதற்கு முன், அவர் எங்களுடன் பேசுவார். சமயங்களில் அவர் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்து கொள்வார். அவ்வப்போது கண்ணீரும் சிந்தியிருக்கிறார். நாங்களும் அழத் தொடங்கினால், உடனே எங்களை திசைதிருப்ப ஏதேனும் நகைச்சுவை சொல்வார். குழந்தைகள் அழுவதை தாங்கிக் கொள்ளும் ஓர் அம்மா இவ்வுலகில் இருப்பாரா?

Before entering the forest, amma likes to stand quietly for a few moments to observe everything around her
PHOTO • K. Ravikumar

காட்டுக்குள் நுழைவதற்கு முன், அமைதியாக நின்று சுற்றியிருப்பவற்றை சில கணங்கள் அம்மா அவதானிக்கிறார்

இறுதியாக அம்மாவுக்கு வேலை கொடுத்தவர்கள் மசினக்குடியில் வைத்திருந்த ஸ்ரீ ஷாந்தி விஜியா உயர்நிலைப் பள்ளியில் நான் சேர்ந்தேன். பணியாளர் குழந்தைகளுக்கான பள்ளி அது. சிறைவாசம் போல இருந்தது. கெஞ்சிக் கேட்டபோதும் என் அம்மா இணங்கவில்லை. பள்ளிக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தினார். பிடிவாதம் பிடித்தபோது அடிக்கக் கூடச் செய்தார். ஒரு கட்டத்தில் தாத்தா-பாட்டி வீட்டிலிருந்து அக்கா சித்ரா மணம் முடித்து சென்ற வீட்டுக்கு சென்றோம். சிறு இரு அறைகள் கொண்ட குடிசை அது. என் தங்கை குமாரி, ஜிடிஆர் நடுநிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.

10 வகுப்பு தேர்வுகளால் என் சகோதரி சசிகலா அழுத்தத்தை சந்தித்தபோது, பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்யத் தொடங்கி அம்மாவுக்கு சற்று ஆசுவாசம் அளித்தார். ஒரு வருடத்துக்கு பிறகு, திருப்பூர் ஜவுளி நிறுவனத்தில் சசிகலாவுக்கு வேலை கிடைத்தது. வருடத்துக்கு ஓரிரு முறை எங்களை வந்து பார்ப்பார். அவர் சம்பாதித்த 6,000 ரூபாய் ஊதியம் ஐந்து வருடங்களுக்கு எங்களுக்கு உதவியாக இருந்தது. அம்மாவும் நானும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்று அவரை பார்ப்போம். அவரும் எப்போதும் தன் சேமிப்பை எங்களுக்குக் கொடுப்பார். அவர் வேலை பார்க்கத் தொடங்கி ஒரு வருடத்துக்கு பிறகு, என் தாய் தேயிலைத் தோட்ட வேலையை விட்டார். என் அக்கா சித்ராவின் குழந்தையையும் வீட்டையும் பார்த்துக் கொள்வதில் அவர் நேரம் செலவழித்தார்.

என்னுடைய 10ம் வகுப்பை ஒருவழியாக ஸ்ரீ ஷாந்தி விஜியா உயர்நிலைப் பள்ளியில் முடித்தேன். பிறகு மேல்நிலை படிப்புக்கு கோத்தகிரி அரசு விடுதிப் பள்ளியில் சேர்ந்தேன். என் கல்விக்கு பணம் ஈட்ட, காய்ந்த வறட்டிகளை விற்கும் வேலையை என் தாய் செய்தார்.

அப்பா விட்டு சென்ற பிறகு, எங்கள் வீட்டை அவர் அழித்தார். மின்சார இணைப்பை துண்டித்தார். மின்சாரமின்றி, நாங்கள் மதுக் குப்பிகளில் மண்ணெண்ணெய் ஊற்றி விளக்காக பயன்படுத்தினோம். பிறகு அவற்றுக்கு பதிலாக இரண்டு செம்பு விளக்குகள் வாங்கினோம். பத்து வருடங்களுக்கு எங்களின் வாழ்க்கையில் அவைதாம் ஒளியேற்றியது. இறுதியில் நான் 12ம் வகுப்பு படிக்கும்போதுதான் மின்சாரம் திரும்பக் கிடைத்தது.

மின்சார இணைப்பு கிடைக்க என் அம்மா அதிகாரிகளுடன் கடுமையாக போராடினார். அவருக்கு மின்சாரத்தின்பால் இருந்த அச்சத்தையும் களைந்தார். தனியாக இருக்கும்போது எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, விளக்குகளை மட்டும்தான் அவர் பயன்படுத்துவார். மின்சாரத்துக்கு ஏன் பயப்படுகிறாரென நான் கேட்டபோது, சிங்காராவில் மின்சாரம் பாய்ந்து ஒரு பெண் உயிரிழந்ததாக அவர் கேள்விப்பட்ட செய்தியை கூறினார்.

Left: Our old house twinkling under the stars.
PHOTO • K. Ravikumar
Right: Even after three years of having an electricity connection, there is only one light bulb inside our house
PHOTO • K. Ravikumar

இடது: நட்சத்திரங்களுக்கு அடியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் எங்களின் பழைய வீடு. வலது: மூன்று வருட மின்சார இணைப்புக்கு பிறகும், வீட்டுக்குள் ஒரே ஒரு பல்ப் மட்டும்தான் இருக்கிறது

மேற்படிப்புக்காக நான் ஊட்டியிலுள்ள கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். என் தாய் கடன்களை வாங்கி எனக்குக் கட்டணம் கட்டினார். புத்தகங்கள் மற்றும் உடைகள் வாங்கிக் கொடுத்தார். இந்தக் கடன்களை அடைக்க, அவர் காய்கறி நிலங்களில் வேலை பார்த்து, வறட்டி சேகரித்தார். தொடக்கத்தில் அவர் எனக்கு பணம் அனுப்பினார். பிறகு நான் பகுதி நேரமாக ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து எனக்கான பணத்தை சம்பாதித்துக் கொண்டேன். தற்போது 50 வயதாகும் என் தாய், எவரிடமும் உதவி கேட்டு நின்றதில்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வதற்கு எப்போதும் அவர் தயாராக இருந்தார்.

என்னுடைய அக்கா குழந்தைகள் வளர்ந்த பிறகு, என் தாய் அவர்களை அங்கன்வாடியில் விட்டுவிட்டு, வறட்டி சேகரிக்க செல்வார். வாரம் முழுக்க சாணத்தை சேகரித்து, ஒரு பக்கெட் 80 ரூபாய் என்ற விலையில் அவர் விற்றார். காலை 9 மணிக்கு வேலை தொடங்கி, மாலை 4 மணிக்கு திரும்புவார். இடையில் கத்தாழைப் பழம் மதியத்துக்கு சாப்பிட்டுக் கொள்வார்.

குறைவாக சாப்பிட்டும் எப்படி சக்தியோடு இருக்கிறாரென கேட்டதற்கு, “என் பால்யகாலத்தில் நிறைய கறியும் கீரையும் காய்கறிகளும் காட்டுக் கிழங்குகளும் சாப்பிடுவேன். அந்த உணவுதான் இன்று வரை எனக்கு சக்தியாக இருக்கிறது,” என்றார். அவருக்கு காட்டுக் காய்கறிகள் பிடிக்கும். கஞ்சி சாப்பிட்டு மட்டுமே என் அம்மா இயங்குவதை நான் கண்டிருக்கிறேன்.

ஆச்சரியமாக, “பசிக்கிறது,” என அம்மா சொல்லி நான் கேட்டதே இல்லை. எப்போதும் அவர், குழந்தைகளான நாங்கள் உண்ணுவதை பார்த்தே பசியாறி விடுவார்.

எங்கள் வீட்டில் தியா, தியோ மற்றும் ராசாத்தி என மூன்று நாய்கள் இருக்கின்றன. ஆடுகளும் இருக்கின்றன. தோல் நிறத்தை கொண்டு அவர்களுக்கு பெயர்கள் உண்டு. இந்த விலங்குகளும் எங்களின் குடும்பம்தான். எங்களை பார்த்துக் கொள்வது போலவே அம்மா அவற்றையும் பார்த்துக் கொள்வார். அவையும் எங்கள் மீது பாசத்துடன் இருக்கும். ஒவ்வொரு காலையும் அவற்றுக்கு உணவளித்து நீர் வைப்பார். ஆடுகளுக்கு இலை தழைகளும் கஞ்சித் தண்ணீரும் வைப்பார்.

Left: Amma collects and sells dry cow dung to the villagers. This helped fund my education.
PHOTO • K. Ravikumar
Right: The dogs and chickens are my mother's companions while she works in the house
PHOTO • K. Ravikumar

இடது: வறட்டி சேகரித்து கிராமவாசிகளுக்கு அம்மா விற்பார். என் கல்விக்கு பணமீட்ட இது உதவியது. வலது: வீட்டில் அம்மா வேலை பார்க்கும்போது நாய்களும் கோழிகளும்தான் அவருக்கு துணை

Left: Amma taking the goats into the forest to graze.
PHOTO • K. Ravikumar
Right: Amma looks after her animals as if they are her own children.
PHOTO • K. Ravikumar

இடது: ஆடு மேய்த்து காட்டுக்கு செல்வார் அம்மா வலது: விலங்குகளையும் தன் குழந்தைகள் போல அம்மா பார்த்துக் கொள்வார்

என் அம்மா கடவுள் நம்பிக்கை கொண்டவர். எங்களின் பாரம்பரிய தெய்வத்தைக் காட்டிலும் ஜெடசாமி மீதும் அய்யப்பன் மீதும் நம்பிக்கை கொண்டவர் அவர். வாரத்துக்கு ஒருமுறை, வீட்டை முழுமையாக சுத்தம் செய்துவிட்டு, ஜெடசாமி கோவிலுக்கு சென்று தன் துயரங்களை கடவுளிடம் சொல்வார்.

என் அம்மா, தனக்கென ஒரு புடவை வாங்கி நான் பார்த்ததில்லை. மொத்தம் இருப்பதே எட்டு புடவைகள்தாம். ஒவ்வொரு புடவையும் அத்தையும் அக்காவும் கொடுத்தது. அவற்றை எந்த புகாரும் எதிர்பார்ப்புமின்றி மீண்டும் மீண்டும் அவர் உடுத்துகிறார்.

குடும்பத்தில் நடக்கும் சண்டைகள் குறித்து பல கிராமவாசிகள் புரணி பேசுவதுண்டு. இன்று என் உடன் பிறந்தாரும் நானும் நல்ல நிலையில் இருப்பது அவர்களுக்கு வியப்பாக இருக்கிறது. குடும்பப் பிரச்சினை பாதிக்காமல் நல்லபடியாக எங்களை வளர்த்ததற்காக உள்ளூர் மக்கள் இப்போது அம்மாவை பாராட்டுகின்றனர்.

சற்று பின்னோக்கி பார்த்தால், பள்ளிக்கு செல்லவில்லை என நான் அடம்பிடித்தபோது அம்மா என்னைக் கட்டாயப்படுத்தி அனுப்பியது சரிதான் என்று புரிகிறது. ஸ்ரீ ஷாந்தி விஜியா உயர்நிலைப் பள்ளியில் நான் சேர்ந்ததும் நன்மைக்குதான். அங்குதான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். அம்மாவின் வற்புறுத்தலும் அந்தப் பள்ளியும் இல்லாதிருந்திருந்தால் என் மேற்படிப்பு போராட்டமாக இருந்திருக்கும். எனக்கு என் அம்மா செய்தவற்றுக்கு கைமாறு என்னால் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. வாழ்க்கைக்கும் அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும் காலை நீட்டி அம்மா இளைப்பாற முடிகிறபோது, அவரின் பாதங்களை நான் பார்ப்பேன். பல வருடங்களுக்கு ஓய்வின்றி உழைத்த பாதங்கள். பல மணி நேரங்களுக்கு நீரில் நிற்க வேண்டிய வேலையாக இருந்தாலும் அவர் நின்றிருக்கிறார். அவரின் பாதங்கள், காய்ந்து வெடித்துக் கிடக்கும் நிலத்தை போல இருக்கும். அந்த வெடிப்புகள்தான் எங்களை வளர்த்தெடுத்தவை.

No matter how much my mother works in the water, her cracked feet look like dry, barren land
PHOTO • K. Ravikumar

நீரில் எவ்வளவு வேலை பார்த்தாலும் என் அம்மாவின் கால்கள் பல வெடிப்புகளுடன் காய்ந்து கிடக்கும் நிலத்தைப் போல இருக்கும்

தமிழில் : ராஜசங்கீதன்

K. Ravikumar

के. रविकुमार के एक उभरते फ़ोटोग्राफ़र और डाक्यूमेंट्री फ़िल्ममेकर हैं, और तमिलनाडु के मुदुमलई टाइगर रिज़र्व में स्थित गांव बोक्कापुरम में रहते हैं. रवि ने पलनी स्टूडियो से फ़ोटोग्राफ़ी सीखी है, जिसे पारी के फ़ोटोग्राफ़र पलनी कुमार चलाते हैं. रवि अपने बेट्टकुरुम्ब आदिवासी समुदाय के जीवन और आजीविकाओं का दस्तावेज़ीकरण करना चाहते हैं.

की अन्य स्टोरी K. Ravikumar
Editor : Vishaka George

विशाखा जॉर्ज, पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया की सीनियर एडिटर हैं. वह आजीविका और पर्यावरण से जुड़े मुद्दों पर लिखती हैं. इसके अलावा, विशाखा पारी की सोशल मीडिया हेड हैं और पारी एजुकेशन टीम के साथ मिलकर पारी की कहानियों को कक्षाओं में पढ़ाई का हिस्सा बनाने और छात्रों को तमाम मुद्दों पर लिखने में मदद करती है.

की अन्य स्टोरी विशाखा जॉर्ज
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan