"அன்னை போன்பீபியின் அழைப்பை யாராலும் மறுக்க முடியாது" என்று கூறியபடி ஷம்பா, வானத்தை நோக்கி பக்தியுடன் கைகாட்டினார். "ஜாய் மா போன்பீபி!" அவரும், அவரது கணவர் ரகு குச்சாய், அவர்களது மூன்று வயது மகன் ஆகியோர் தங்கள் கிராமத்தின் தெற்கு முனையில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான மா போன்பீபி கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். அது ஜனவரி மாதத்தின் நண்பகல், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ராம்ருத்ராபூரில் இந்துக்கள், முஸ்லிம்கள் என யாராக இருந்தாலும், அனைவரும் அங்கு செல்கின்றனர். "மா போன்பீபி காட்டின் ராணி" என்று கிராமத்தின் மூத்த பெண்மணியான ஃபுல் மாஷி (அத்தை) அறிவித்தார். "இன்று காடு இங்கே இல்லாவிட்டாலும், அவளுடைய ஆசீர்வாதங்கள் இங்கே உள்ளன. போன்பீபி ஒரு சக்தி பீடம், இந்த திருவிழா இக்கிராமத்தின் பழமையான பாரம்பரியம்.”
போன்பீபி திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை ஜனவரி அல்லது ஃபிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ராம்ருத்ராபூரின் மாபெரும் இத்திருவிழா பழமையானது. ரகு தனது அண்ணன் ஷிபுவுடன் சேர்ந்து வைத்துள்ள கடைக்கு என்னை அழைத்துச் சென்றான். கொல்கத்தாவில் ஒரு வியாபாரியிடமிருந்து அவன் வாங்கிய வண்ணமயமான வளையல்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அந்த கடை நிரம்பி இருந்தது. போன்பீபியின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் வருமானத்திற்காக ஆலயத்திற்கு அருகாமையில் தங்கள் கடையை அமைத்துக்கொண்டனர். அங்குதான் பெண்கள் பெருமளவு குழுமி இருந்தனர். கிராமத்தைச் சேர்ந்த சகினா மொண்டல் என்னிடம், "அக்கா, நீங்கள் கோவிலுக்கு போறீங்களா?" என்று புன்னகையுடன் கேட்டார். அவரது மகள் சபீனாவை என்னுடன் கோயிலுக்கு அனுப்பி வைத்தார்.
போன்பீபி, பக்தர்கள் அனைவருக்கும் மதங்களை கடந்து கேட்கும் அனைத்து வரங்களையும் வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்து, முஸ்லீம் பெண்கள், திருவிழா நாள் முழுவதும் நோன்பு நோற்று, மாலை நேரத்தில் மட்டுமே சாப்பிடுகிறார்கள். போன்பீபி அருள் மீதான நம்பிக்கையை மக்களின் ஆர்வத்தில் காண முடிந்தது. ஆரத்தியும், பிபாஷ் நாஸ்கரும், வன தெய்வத்திடம் குழந்தை வரம் கேட்டு தட்டு நிறைய பாரம்பரிய இனிப்புகளை காணிக்கையாக வழங்கி வழிபாடு செய்தனர். சம்பா தனது குடும்ப நலனுக்காக வழிபட்டார்; நல்ல விளைச்சல் வேண்டினார் சஞ்சய்; மஃபுஜா மற்றும் அல்தாஃப் மன்னா ஆகியோர் தங்களுக்கு பிறந்துள்ள மகளை ஆசீர்வதிக்க வேண்டி இங்கு அழைத்து வந்தனர்.
சபீனாவும் நானும் இறுதியாக கோவிலுக்குள் நுழைந்தோம். 15 வயதான டெபோல் எங்களை வரவேற்றான். அவன், "அக்கா, இப்போது சுபநேரம், உங்கள் வேண்டுதல்களை இப்போது செய்யுங்கள்," என்று கூறினான்.
கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. உள்ளூர் கலைஞர்களும், கொல்கத்தாவிலிருந்து வந்திருந்த பிற கலைஞர்களும் வெவ்வேறு மூலைகளில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் தயாராகினர். உள்ளூர்வாசிகள் தோர்ஜா கான் (புராண கதாபாத்திரங்கள் அல்லது அன்றாட வாழ்க்கை பற்றிய வங்காள நாட்டுப்புற பாடல்கள்) அல்லது கீர்த்தனை (மத பாடல்கள்) பாடி, ஜாத்ரா (வரலாற்று அல்லது புராண காட்சிகளை இயற்றும் நாடகங்கள்) செய்வார்கள். வெளியாட்கள் "ஆர்கெஸ்ட்ரா இரவுகள்" - பாலிவுட் அல்லது டோலிவுட் பாடல்கள் - ஜாத்ரா மற்றும் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்த இருந்தனர்.
அத்திருவிழாவில் பங்கேற்ற ஒவ்வொருவரும் உற்சாகத்துடனும், ஆற்றலுடனும், மனநிறைவுடனும் காணப்பட்டனர்: ஆபரணங்களால் கவரப்பட்ட பெண்கள், குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுக்கும் தந்தைகள், இங்கும் அங்கும் திரியும் சில காதல் பறவைகள், சிரித்தபடி, அரட்டை அடித்துக் கொண்டு திரிந்த இளைஞர்கள் – இவை அனைத்தும் போன்பீபியின் விருப்பத்தால் நிகழ்ந்தன.
ஃபுல் மாஷி மகிழ்ச்சியுடன் ஒரு ரசகுல்லாவை விழுங்குவதை நான் பார்த்தேன். கண்காட்சி முடிந்ததும் என்ன நடக்கும் என்று அவரிடம் கேட்டேன். "அடுத்த வருஷம் மீண்டும் வரும்," என்றார். "இந்த திருவிழா அனைவரின் வாழ்க்கையும் துணையும் ஆகும்."
சுந்தரவனத்தின் மேட்டுப்பாங்கான பகுதிகளில், காடுகள் குறைவான இந்த இடங்களில் போன்பீபியின் இந்த அற்புதமான மற்றும் கொண்டாட்ட வழிபாட்டு வடிவம், காடுகள் நிறைந்த தாழ்நிலப் பகுதிகளில் இன்னும் இருக்கும் உண்மையான வழிபாட்டு வடிவத்தின் எளிமை மற்றும் உற்சாகத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. இந்த "கீழ்" தீவுகளில், காட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் ஒரு சாகச முயற்சியாகும். போன்பீபியின் பங்கு எளிமையானது ஆனால் முக்கியமானது: புலிகள் மற்றும் பாம்புகளின் தொல்லைகளிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது.
மா போன்பீபி முதலில் ஒரு "ஆதிசக்தி" ஆக உருவெடுத்தாள். அவள் மீனவ சமூகம், தேன் சேகரிப்பவர்கள், மரம் வெட்டுபவர்கள் என காட்டுக்குள் நுழைந்தவர்களை புலி தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தாள். 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த போன்பீபி ஜோஹுரானாமா என்ற ஒரு சிறு புத்தகம், அவளது கதையைச் சொல்கிறது. இதை ஒரு முஸ்லீம் எழுதியிருக்கலாம் - இது வங்காள மொழியில் உள்ளது. இடமிருந்து வலமாக எழுதப்பட்டது. ஆனால் அரபு எழுத்துக்களைப் பின்பற்றும் நோக்கில் பின் பக்கத்திலிருந்து முன்பக்கம் எழுதப்பட்டிருக்கிறது.
இந்தப் புராணக் கதையின்படி, போன்பீபியின் மிகப் பெரிய எதிரி டோகின் ராய் என்ற பிராமண முனிவர் ஆவார். அவர் காட்டில் வாழ்ந்து வந்தார். கோபத்தில் மனிதர்களை உண்ண முடிவு செய்தார். அதனால் அவர் புலி வடிவம் எடுத்தார். பேராசை கொண்ட அவர், வன வளங்களை மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்டு, மனிதர்களைக் கொல்வதை ஒரு வகையான கவ்ர் அல்லது வரிவிதிப்பாக சட்டப்பூர்வமாக்கினார். டோகின் ராய் ஒரு பேராசைக்கார ஜமீன்தார் அல்லது நிலப்பிரபுவின் பிரதிநிதியாகத் தோன்றுகிறார். அவர் இறுதியில் தன்னை சதுப்புநிலத்தின் ஒரே உரிமையாளர் என்று அறிவித்து, மனிதர்களை வேட்டையாடும் ராட்சஸன் அல்லது அரக்கனாக மாறினார். காட்டின் அனைத்து புலிகளும், பிற உயிரினங்களும் அவரது அடிமைகளாகி மனிதர்களை பயமுறுத்தத் தொடங்கின. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே முன்பு இருந்த நல்லிணக்க ஒப்பந்தம் முறிந்தது.
மக்களின் துன்பங்களைக் கண்ட அல்லா, டோகின் ராயின் அராஜகத்தை ஒழிக்க காட்டில் வாழ்ந்த போன்பீபி என்ற இளம் பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். போன்பீபி குழந்தையாக இருந்தபோது, அவளுடைய தாயால் கைவிடப்பட்டு, ஒரு மானால் வளர்க்கப்பட்டாள். அல்லாவின் அழைப்பு வந்ததும், தனது இரட்டையரான சகோதரர் ஷா ஜொங்கோலியை (போன் மற்றும் ஜோங்கோல் என்றால் காடு) தன்னருகே அழைத்தார். பாத்திமாவின் ஆசீப் பெற அவர் மதீனாவுக்கும், மெக்காவிற்கும் சென்றார். அங்கிருந்து அவர் சுந்தரவனத்திற்கு சில புனித மண்ணைக் கொண்டு வந்தார்.
அல்லாவின் குறுக்கீடு பிடிக்காத டோகின் ராய் அவர் மீதும் கோபம் கொண்டார். அவர்களை விரட்ட முடிவு செய்தார். ஆனால் ராயின் தாய் நாராயணி, ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சண்டையிடுவதே முறையானது என்றுக்கூறி, போன்பீபியுடன் தானே சண்டையிட்டார். போரில் தோற்றுவிட்டதை உணர்ந்த நாராயணி, போன்பீபியை தனது சாய் (தோழி) என்று அழைத்தார். போன்பீபி சாந்தமடைந்தாள். மோதல் முடிந்தது.
2014ஆம் ஆண்டு ராம்ருத்ராபூரில் நடந்த திருவிழாவில், 'துக்கேவின் கதை' (துக்கோ என்பதிலிருந்து துக்கம் என்று பொருள்) என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது. புலி, டோகின் ராய் மற்றும் துக்கே ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்த்தப்பட்ட நாடகத்தில் விளக்கப்பட்ட கதையில் தெய்வம், மனிதர்கள், விலங்குகள் இடையேயான நல்லிணக்க ஒப்பந்தம் தெளிவாகிறது. புலியிடம் தன் கணவரை இழந்த ஃபுல் மாஷி, "துக்கேவின் கதை எங்கள் கதையைப் போன்றது," என்றார். "துக்கே எங்கள் மகனைப் போன்றவர். அவரது அவலநிலை எங்கள் நிலை. ஏனென்றால் காட்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிந்துள்ளோம். பேராசை கொண்டவர்களை காடு அனுமதிப்பதில்லை. பேராசை தடை செய்யப்பட்டுள்ளது. துக்கேவின் கதை அதையே குறிக்கிறது.
கணவரை இழந்த தாயுடன் வசித்து வந்த ஓர் ஏழைச் சிறுவன் துக்கே. டோகின் ராயின் கட்டுப்பாட்டில் இன்னும் இருப்பதாக நம்பப்படும் ஒரே தீவான கெடோகாலியில் அவரது மாமா தோனாவால் (தோன் என்றால் செல்வம்) கைவிடப்பட்டான். துக்கே புலிக்கு உணவளிக்கப்பட வேண்டும். ஆனால் போன்பீபி அவனைக் காப்பாற்றி தாயிடம் திருப்பி அனுப்பினாள். டோகின் ராய் தனது ஒரே நண்பரும் ஆதரவாளருமான காஜியிடம் ஆலோசனை கேட்டார். அவரது ஆலோசனைப்படி போன்பீபியிடம் மன்னிப்புக் கோரினார். டோகின் ராயை மன்னித்து தனது மகனாக போன்பீபி தெய்வம் ஏற்றுக்கொண்டாள் - மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் இனி சகோதர உணர்வுகளுடன் இருப்பார்கள் என்றும், சுந்தரவனத்தின் செல்வங்களை சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் அவரிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வாக்குறுதிகளைப் பெற்றாள். மனிதர்கள், தங்கள் பங்கிற்கு, தங்கள் உடன்பிறப்புகளிடமிருந்து, காட்டின் உயிரினங்களிடமிருந்து, அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்வதாக உறுதியளித்தனர். அதற்கு மேல் அனுமதியில்லை.
போன்பீபி மனிதர்களைப் பாதுகாப்பாள் என்பது நம்பிக்கை. மனிதர்கள் தங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சுந்தரவனத்தின் வனப்பகுதிகளில் எளிமை மற்றும் பக்தியில் அவளை காணலாம். போன்பீபி ஜோஹுரானாமாவின் தொடக்கத்தையும் முடிவையும் படிப்பதன் மூலமும், மற்றவர்கள் நடுப்பகுதிகளைப் படிப்பதன் மூலமும் இந்துவோ, முஸ்லிமோ யார் வேண்டுமானாலும் அவளை அழைக்க முடியும். காட்டுப் பாதையில் நடந்து உட்புறத்துக்குள் நுழையும் நேரத்திற்குள் சில மணி நேரங்களில் படித்து ஒப்பிக்கும் அளவுக்கு சிறியதாக இருக்கிறது அந்தக் கையேடு.
கூடுதலாக, புலிகளிடமிருந்து மற்றவர்களைப் பாதுகாக்க போன்பீபியால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் தனக்கு இருப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு பௌலி அல்லது புலி-மந்திரவாதி துணையின்றி அல்லது அறிவுறுத்தல்களைப் பெறாமல் எந்த வனப் பணியாளரும் காட்டுக்குள் நுழைவதில்லை. பௌலி பயன்படுத்தும் வரிகள் அரபு மொழியில் உள்ளன. அவை சதுப்புநிலக் காடுகளிலிருந்து நிலத்தை மீட்டெடுப்பதற்கும், புலிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், 16ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியில் இஸ்லாத்தின் பரவலுக்கும் பங்களித்த சூஃபி துறவிகளிடமிருந்து பெறப்பட்டதை பிரதிபலிக்கின்றன. (இந்துக்களும் பௌலிகளாக ஆகலாம் என்றாலும், நான் சந்தித்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களே.)
சுந்தரவனத்தில், தீய ஆவிகள் மற்றும் பேய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மந்திர சக்தியாக பலரும் இஸ்லாத்தைப் பார்க்கிறார்கள். மேலும் பௌலி பணிவுடன், அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை வனத் தொழிலாளர்கள் மீது ஆழமான உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், பெரும்பாலும், புலி-மந்திரவாதிகள் வன அதிகாரிகளால் கேலி செய்யப்படுகிறார்கள். அவர்கள் உள்ளூர் மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும், அவர்களிடம் எந்த சக்தியும் இல்லை என்றும் வனத்துறையினர் கூறுகின்றனர்.
சுந்தரவனத்திற்கு வெளியே நம்மில் பெரும்பாலானவர்களிடம் புலிகள் குறித்த பயம் இருப்பதால், இந்த காட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியாட்களுடன் தொடர்பு கொள்வதையே வன்முறை, தாழ்ச்சி என்று கருதுகின்றனர். மாறாக, அவர்களைப் பொறுத்தவரை, காடு மக்களை ஒன்றிணைக்கவும் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இதனால்தான் பெரும்பாலான போன்பீபி ஆலயங்களுக்கு, குறிப்பாக தீவு பதிகளில் உள்ள ஆலயங்களில் கதவுகள் இல்லை. அவை நடைபாதைகள் மற்றும் ஆற்றங்கரைகள் போன்ற பொதுவான பகுதிகளில் அமைந்துள்ளன. அவை அனைவரும் எளிதில் சென்று வரக்கூடிய வகையில் உள்ளன. மக்கள் காட்டுக்குள் கிளைகள் மற்றும் மரத்துண்டுகளால் செய்யப்பட்ட, சில நேரங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தற்காலிக குடிசைகளை உருவாக்குகிறார்கள். அங்கு அவர்கள் புலிகளின் எல்லைகளுக்குள் நுழைவதற்கு முன்பு அவளுடைய அருளைப் பெறுகிறார்கள்.
உள்ளூர் சந்தையில் மீன் விற்கும் ஃபுல் மாஷியின் இளைய மகன் ஜதீந்திரா, காட்டை ஒரு கோயிலாக, புனித இடமாக கருதுகிறார்; அது தூய்மையானது, அமைதியானது, அங்கு நல்ல மனநிலையில் நுழைய வேண்டும். அங்கு நடப்பவை அனைத்தும் போன்பீபியின் விருப்பம். அவளுக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. "சுமார் 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்பு," அவர் நினைவு கூர்ந்தார், "விறகு வெட்டச் சென்ற ஒரு குழு பாம்பு கடித்து உயிரிழந்தது. அவர்கள் காட்டை மாசுபடுத்துவதாகவும், பிராந்தியத்தின் விதிமுறைகளை மதிக்கவில்லை என்றும் அதனால் போன்பீபி அவர்களைத் தண்டித்தாள் என்றும் உள்ளூர்வாசிகள் நம்பினர்."
போன்பீபியின் சமத்துவம் பல சாதிகளைச் (சாதி, இனம் அல்லது மதம்) சேர்ந்தவர்களால் அவரது கதைகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்துவதன் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ராம்ருத்ராபூரில் வசிப்பவரும், போன்பீபி ஓபரா என்ற ஜாத்ரா குழுவைச் சேர்ந்த நடிகருமான சம்சுதீன் அலி அதை என்னிடம் விளக்கினார்: "சாதி, மதம் மற்றும் பிற படிநிலைகளின் அரசியலில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், மா போன்பீபி ஆசியை பெற முடியாது. அம்மா எல்லோருக்குமானவள். குறிப்பாக அவளது கதைகளை நாங்கள் நடிக்கும்போது, எல்லோரும் ஒன்றிணைவதைப் பார்க்கும்போது, அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மதம் முக்கியமல்ல. மனிதனே முக்கியம்"
அப்பகுதியில் உள்ள மற்றொரு ஜாத்ரா நிறுவனத்தில் வேலை செய்த முதியவர் போரேஷ் பிருஹா, இதுபோன்ற எண்ணற்ற அமைப்புகள் மூடப்பட வேண்டும் என்றும் அவை ஒரே சாதியின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன என்றும் கூறினார். "எந்தக் குழுவும் இனி அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவம் கொடுக்கப்போவதில்லை," என்று அவர் கூறினார். "போன்பீபி ஒற்றுமையைக் கோருகிறாள். அவளை வழிபட அனைவரின் ஒற்றுமையும் அவசியம்."
வனவாசிகளை பிணைக்கும் மற்றொரு பொதுவான விஷயம் என்னவென்றால், பேராசையால் பலரும் காட்டுக்குள் நுழைந்து அதன் அமைதியை அழிக்கத் தூண்டியுள்ளது என்ற நம்பிக்கை. வனத் தொழிலாளர்களில் புதிய வகையான இறால் விதைகளை சேகரிப்பவர்கள், காட்டிற்குள் பெரும்பாலும் தவறுகள் ஏதும் நடக்கும் போது குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால் இறால் விதை சேகரிப்பாளரான குசும் மொண்டல், பேராசை பிடித்த தேன் சேகரிப்பவர்கள் மீது தான் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். "போன்பீபி மற்றும் டோகின் ராய் இடையேயான பழமையான ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால் போன்பீபி மிக விரைவில் பழிவாங்குவாள்," என்று அவர் எச்சரித்தார். "காட்டில் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது."
எவ்வாறாயினும், தங்களுக்குள் அதிகரித்து வரும் சச்சரவுகளும், சுற்றுலாப் பயணிகளின் அதிகளவிலான வருகையும் பாதுகாப்பற்றதாக, தொந்தரவாக புலிகளை உணர வைக்கிறது என்பதை அனைத்து வனப் பணியாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இதனால், புலிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கோசாபா தீவைச் சேர்ந்த மீனவரான காஞ்சன், நிலத்தில் வலையை சுத்தம் செய்து கொண்டிருந்த தனது கூட்டாளியை ஒரு புலி எவ்வாறு கொன்றது என்பதை விவரித்தார்: புலி எங்கிருந்தோ ஓடி வந்து பாய்ந்தது. "ஒரு புலி யாரையாவது சாப்பிட முடிவு செய்துவிட்டால், அதை யாராலும் தடுக்க முடியாது," என்று காஞ்சன் கூறினார். "நாம் அதை அனுமதிக்க வேண்டும்." அப்படித்தான் அவர் தனது தந்தையையும் இழந்தார்.
"குறைந்தது 12 பேர் புலிகளால் தாக்கப்பட்டு இருக்கலாம். இன்னும் எத்தனை பேர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்," என்று சம்சுதீன் கனத்த இதயத்துடன் கூறினார். "இது தொடர்ந்தால், போன்பீபியால் கூட யாரையும் காப்பாற்ற முடியாது." அவர் ஒரு கணம் தயங்கி தன்னை சுதாரித்துக் கொண்டார். "இது உண்மையில் டோகின் ராயின் கோபம். புலிகள் சீற்றம் கொண்டவை. மனிதர்களாகிய நாம் தான் காரணம். இப்போது போன்பீபியால் மட்டுமே அவனை சமாதானப்படுத்த முடியும் என்றார்."
Land of eighteen tides and one goddess
Ferries, fish, tigers and tourism
தமிழில்: சவிதா