“நான் என்னை ஓவியராக கருதுவதில்லை. ஓவியருக்கான தகுதிகள் எனக்கு இல்லை. ஆனால் என்னிடம் கதைகள் இருக்கின்றன. அவற்றை ப்ரஷ் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். என்னுடைய ஓவியங்கள் முழுமையானவை என நான் சொல்வதில்லை. கடந்த இரண்டு-மூன்று வருடங்களாகதான் ஓவியர்கள் பலரது ஓவியங்களை ஆராய்ந்து கற்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஓவியம் பற்றி பெரிய அறிவு கிடையாது."

லபானி ஓர் ஓவியர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்திலுள்ள கிராமமான துபுலியாவை சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போரின்போது, ராணுவ முகாமும் விமானப் பாதையும் இந்த கிராமத்தில் இருந்திருக்கிறது. இஸ்லாமிய பெரும்பான்மை வாழும் இந்த கிராமத்தில், பிரிட்டிஷார் முகாம் அமைத்தபோது விவசாய நிலத்தின் பெரும்பகுதி பறிபோனது. பிறகு பிரிவினை ஏற்பட்டது. கிராமத்தை சேர்ந்த பலரும் எல்லையின் மறுபுறத்துக்கு இடம்பெயர்ந்தனர். “ஆனால் நாங்கள் செல்லவில்லை.எங்களின் முன்னோர்கள் செல்ல விரும்பவில்லை. அவர்கள் இதே நிலத்தில்தான் புதைக்கப்பட்டார்கள். இங்குதான் நாங்கள் வாழவும் சாகவும் விரும்புகிறோம்,” என்கிறார் லபானி. நிலத்துடனான இந்தத் தொடர்பும் இந்தத் தொடர்பை வைத்து நடக்கும் எல்லா விஷயங்களும் இந்த ஓவியரின் இளமைக்கால உணர்வுகளை வடிவமைத்தது.

ஓவியம் வரைவதற்கான ஊக்கம், தந்தையிடமிருந்து அவருக்குக் கிடைத்தது. குழந்தையாக இருக்கும்போது ஓவியப் பயிற்சியில் அவரை சில ஆண்டுகளுக்கு தந்தை அனுப்பினார். அவரின் தந்தைதான் கல்வி பெற்ற முதல் தலைமுறை ஆகும். 10 உடன்பிறந்தார்களில் அவர் மட்டும்தான் கல்வியறிவு பெற்றார். கள மட்டத்தில் பணியாற்றும் வழக்கறிஞரான அவர், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்குமென கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினார். ஆனால் அதிகம் பணம் பெறவில்லை. “அவருக்குக் கிடைத்த பணத்தை கொண்டு அவர் எனக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பார்,” என்கிறார் லபானி. “மாஸ்கோ பதிப்பகம், ரதுகா பப்ளிஷர்ஸ் ஆகியவற்றிலிருந்து நிறைய குழந்தைகள் புத்தகங்கள் வரும். அவை வங்க மொழிபெயர்ப்புகளாக எங்களின் வீடுக்கு வந்தது. அப்புத்தகங்களில் இருந்த படங்கள் எனக்கு பிடித்தது. ஓவியத்துக்கான முதல் ஊக்கத்தை அங்கிருந்துதான் பெற்றேன்.”

இளம்வயதில் அவரது தந்தை அவருக்கு அறிமுகப்படுத்திய பயிற்சி வகுப்பு தொடரவில்லை. ஆனால் ஓவியத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்று, 2016ம் ஆண்டில் மொழி அவரைக் கைவிடத் தொடங்கியதும் மீண்டும் திரும்பியது. அரசின் அலட்சியத்தால் கும்பல் வன்முறை நாட்டில் அதிகரித்து வந்தது. சிறுபான்மையினர் மீதான வன்முறை திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. பெரும்பான்மையானோர் அந்த வெறுப்புக் குற்றங்களை பொருட்படுத்தவில்லை. கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு முடித்தபிறகு, நாட்டின் நிலவரத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டார் லபானி. எனினும் அவரால் அவற்றை பற்றி எழுத முடியவில்லை.

”ஓர் அசெளகரிய உணர்வு தீவிரமாக இருந்தது,” என்கிறார் அவர். “அந்த சமயம் வரை எழுத்தில் எனக்கு விருப்பம் இருந்தது. வங்க மொழியில் சில கட்டுரைகளை எழுதி பிரசுரித்திருக்கிறேன். சட்டென மொழி போதுமானதாக இல்லாமல் மாறியது. எல்லாவற்றிலும் இருந்து ஓடி விட விரும்பினேன். அப்போதுதான் நான் ஓவியம் வரையத் தொடங்கினேன். கடலை எல்லா தன்மைகளிலும் வரைந்திருக்கிறேன். வாட்டர் கலரில், எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு துண்டு பேப்பரிலும் வரைந்திருக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக நான் பல கடல் ஓவியங்களை (2016-17) காலக்கட்டத்தில்  வரைந்தேன். சிரமம் நிறைந்த உலகின் ஓவியம்தான் எனக்கு அமைதியைக் கொடுத்தது.”

இன்று வரை லபானி, சொந்தமாக ஓவியம் கற்றுக் கொண்ட கலைஞராக திகழ்கிறார்.

PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

தந்தை அறிமுகப்படுத்திய ஓர் ஆசிரியரிடம் ஆரம்ப கால ஓவியப் பயிற்சியை லபானி பெற்றார். ஆனால் விரைவிலேயே அப்பயிற்சி நின்று போனது

PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

சொந்தமாக ஓவியம் வரையக் கற்றுக் கொண்ட அக்கலைஞர், 2016 மற்றும் 2017ல் நாடு மத வெறுப்பில் சிக்கியிருந்தபோது மீண்டும் வரையத் தொடங்கினார். உள்ளும் புறமும் இருந்த கொந்தளிப்பை சமாளிக்க 25 வயது கலைஞர் எடுத்த உத்தி இது

2017ம் ஆண்டில் அவர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கொல்கத்தாவின் சமூக அறிவியல்கள் மையத்தில் ஆய்வுப் படிப்புக்காக சேர்ந்தார். அதற்கு முன், சிறுபான்மை மாணவர்களுக்கான மெளலானா ஆசாத் தேசிய மானியத்தை (2016-20) அவர் வென்றிருந்தார். புலம்பெயர் தொழிலாளர் பற்றிய அந்தப் பணியை அவர் தொடர்ந்தார். ஆனால் இன்னும் ஆழமாக அவர்களின் வாழ்வனுபவங்களை கொண்டு அப்பணியை மேற்கொண்டார். ‘வங்காளி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கைகளும் உலகமும்’ என்பதுதான் பணியின் பெயர்.

தன் ஊரிலிருந்து பலரும் கட்டுமான வேலை தேடி கேரளாவுக்கோ ஹோட்டல்களில் பணிபுரிய மும்பைக்கோ செல்வதை லபானி கண்டிருக்கிறார். “என் தந்தையின் சகோதரர்களும் குடும்பங்களின் உறுப்பினர்களும் வங்கத்துக்கு வெளியே புலம்பெயர் தொழிலாளர்களாக வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பெண்களை காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகம்,” என்கிறார் அவர். மனதுக்கு விருப்பமான களமாக இருந்தாலும் அதிகமாக உழைக்க வேண்டும். “பிறகுதான் தொற்று தாக்கியது,” என நினைவுகூருகிறார். “புலம்பெயர் தொழிலாளர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆய்வுப்படிப்பில் கவனம் எனக்கு செல்லவில்லை. அவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமப்பட்டு, மருத்துவமும் கிடைக்காமல், சுடுகாட்டிலும் இடம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தபோது நான் சென்று எப்படி என் கல்விக்கென கேள்விகள் கேட்க முடியும்? அவர்களின் நிலையை வைத்து ஆதாயம் பார்க்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய பணியை கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் முடிக்க முடியவில்லை. எனவே என் ஆய்வுப்படிப்பு இழுபறி ஆனது.”

மீண்டும் ஓவிய ப்ரஷ்ஷை எடுத்தார் லபானி. இம்முறை, புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கைகளை பாரியின் பக்கங்களில் ஆவணப்படுத்தினார். “சாய்நாத்தின் சில கட்டுரைகள் வங்காளி தினசரியான கனஷ்க்தியின் தலையங்க பக்கங்களில் வெளியாகும். எனவே எனக்கு பி. சாய்நாத் பற்றி தெரிந்திருந்தது. முதலில், ஒரு கட்டுரைக்கு ஸ்மிதா என்னை சில ஓவியங்கள் வரைய வைத்தார். பிறகு ஒரு கவிதைக்கு வரைந்தேன்.” (ஸ்மிதா காடோர், பாரியின் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியர்). 2020ம் ஆண்டு முழுவதும் லபானி ஜங்கி பாரியின் மானியப் பணியாளராக இருந்தார். இங்கு அவர், தனது ஆய்வுப் படிப்பின் மக்களின் வாழ்க்கைகளை வரைந்தார். மேலும் தொற்றுக்காலத்திலான விவசாயிகளின் வாழ்க்கைகளையும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைகளையும் வரைந்தார்.

“பாரியில் நான் வரைந்த ஓவியங்கள் அமைப்புரீதியிலான சவால்களையும் கிராமப்புற வாழ்க்கையின் தொடர்ச்சியையும் ஒருமித்துக் காட்டுகின்றன. இந்த கதையாடல்களை என்னுடைய கலையில் கொண்டு வருவதன் மூலம், அவர்களின் வாழ்க்கைகளிலுள்ள நுட்பங்களை பிரதிபலிக்கும் படங்களை உருவாக்க முயற்சிக்கிறேன். கிராமப்புற இந்தியாவின் செறிவான பண்பாடுகளையும் சமூக யதார்த்தங்களையும் பகிரவும் பாதுகாக்கவும் என் படங்கள் ஒரு வழியாக இருக்கிறது.”

PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

விவசாயப் போராட்டங்கள் மற்றும் தொற்றுக்கால புலப்பெயர்வு குறித்து பாரியில் அவர் வரைந்த ஓவியங்கள் நம் செய்திகளுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தன

PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

2020ம் ஆண்டின் பாரி மானியப் பணியாளராக லபானி, தன் அற்புதமான வண்ணங்களால் பல கட்டுரைத் தொடர்களை செறிவாக்கி இருக்கிறார்

லபானி எந்தக் கட்சியையும் சேராதவரெனினும் தன் கலையை அவர் அரசியலாக பார்க்கிறார். “பல ஓவியர்கள், அரசியல் போஸ்டர்களை ஜாதவ்பூரில் படிக்க வந்த பிறகு கவனிக்கத் தொடங்கினேன். நம்மை சுற்றி நடப்பவை பற்றிய என் படங்கள் யாவும் இந்த அனுபவத்திலிருந்தும் அவை கொடுக்கும் உணர்வு நிலைகளிலிருந்தும் வருபவைதான்.” வெறுப்பு இயல்பாக்கப்பட்டு, அன்றாட வாழ்வின் யதார்த்தமாக அரசு வன்முறை ஆக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஓர் இஸ்லாமியப் பெண்ணாக வாழும் அன்றாட நிலைகளிலிருந்துதான் தனக்கான உத்வேகத்தை அவர் பெறுகிறார்.

”உலகம் எங்களையோ எங்களின் திறன்களையோ உழைப்பையோ ஏற்க விரும்பவில்லை,” என்கிறார் லபானி. “எங்களின் அடையாளம் இதில் முக்கிய பங்காற்றுகிறது. இன்று வரை இது தொடர்கிறது. ஓர் இஸ்லாமிய கலைஞரின் பணி என்பது பலரின் பார்வையில் இடம்பெறுவது கூட கிடையாது. எவரும் அதற்கான இடமும் கொடுப்பதில்லை. அத்தகைய பணியுடன் அங்கீகரிப்பதும் இல்லை. விமர்சிப்பது கூட இல்லை. இதனால்தான் இதை இருட்டடிப்பு என நான் சொல்கிறேன். கலை, இலக்கியம் என பல துறைகளிலும் இந்த நிலை நீடிக்கிறது,” என்கிறார் அவர். எனினும் லபானி ஓவியம் வரைவதை தொடர்கிறார். தன்னுடைய ஓவியங்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற டிஜிட்டல் தளங்களில் அவர் பதிவேற்றுகிறார்.

முகநூலின் வழியாகத்தான், சட்டோகிராமின் சித்ரபாஷா கலை கண்காட்சி குழுவினர் அவரை தொடர்பு கொண்டு, முதல் கண்காட்சியான பிபிர் தர்காக்கள் வங்க தேசத்தில் டிசம்பர் 2022-ல் நடத்த அழைப்பு விடுத்தனர்.

PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Courtesy: Labani Jangi

சத்தோகிராமின் சித்ரபாஷா கலை கண்காட்சியில் 2022ம் ஆண்டு நடந்த லபானி ஓவிய கண்காட்சி

PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

பெண் துறவிகளுக்கு மதிப்பளிக்கும் பழங்கால தர்காக்கள் மறைந்து போயிருக்கலாம். ஆனால் அவற்றின் தன்மை, உரிமைகளுக்காக போராடும் பெண்களிடம் இன்றும் இருக்கிறது. அதை நினைவுகூருவதுதான் லபானியின் முக்கியப் பணியாக இருக்கிறது

பீபிர் தர்காக்கள் கண்காட்சி பற்றிய யோசனை பால்யகாலத்தில் தோன்றி, தற்கால வங்கதேச சூழலால் உறுதிபட்டதாக சொல்லும் அவர், பிற்போக்கு இஸ்லாமின் வளர்ச்சியை வங்கதேசத்திலும் காணுவதாக சொல்கிறார். பீபி தர்கா என்பது பெண் பீர்களுக்கான தர்காக்களை குறிப்பிடுகிறது. “என் ஊரிலேயே இரு பெண்களுக்கான தர்காக்கள் நான் வளரும்போது இருந்தது. வேண்டுதலுக்கென ஒரு மன்னத் கயிறை கட்டும் பழக்கமும் கூட இருந்தது. எங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் ஒன்றாக விருந்து சமைப்போம். இப்பகுதியின் ஒத்திசைவான பண்பாட்டுக்கான சான்று அது.

“எனினும் அவை யாவும் என் கண் முன்னேயே மறைந்து போயின. பிறகொரு மக்தாப் (நூலகம்) அந்த இடத்தில் வந்தது. மசார்களிலும் (கல்லறைகள்), சூஃபி தர்காக்களிலும் நம்பிக்கை இல்லாத பிற்போக்கு இஸ்லாமியர்கள், இந்த தர்காக்களை உடைத்தார்கள். அல்லது புதிய மசூதிகளை கொண்டு வந்தார்கள். இப்போது கொஞ்சம் தர்காக்கள்தான் இருக்கின்றன. ஆனால் அவை யாவும் ஆண் பீர்களுக்கானவை. பெண் பீர்களுக்கான தர்காக்கள் ஏதும் இல்லை. அவர்களின் பெயர்கள் நம் பண்பாட்டு நினைவில் இருந்து அழிக்கப்பட்டு விட்டன.”

இத்தகை அழித்தல் பரவலாக இருக்கும் நிலையில் இன்னொரு வகை அழித்தலும் இருப்பதாக லபானி சொல்கிறார். திட்டமிட்டு, வன்மத்துடன் இத்தகைய நினைவுகள் அழிக்கப்படும் போக்குக்கு எதிரான விஷயம் அது. “வங்க தேசத்தில் கண்காட்சிக்கான நேரம் வந்தபோது, மஜார்கள் அழிவதை ஒரு பக்கமும், நிலத்தையும் உரிமைகளையும் பறிகொடுத்த பெண்களின் போராட்டவுணர்வு மறுபக்கமும் காட்டலாமென நினைத்தேன். போராட்டவுணர்வும் தொடர்ச்சியும் மஜார் அழிக்கப்பட்ட பிறகும் உயிர்ப்போடு இருக்கும் அம்சங்களாகும். அதைத்தான் என் கண்காட்சியில் காட்ட விழைந்தேன்.” கண்காட்சி முடிந்த பல நாட்களுக்கு பிறகும், அவர் அந்த கருப்பொருளில் தொடர்ந்து பணியாற்றுகிறார்.

லபானியின் ஓவியங்கள் மக்களின் குரல்களுக்கு வலு சேர்க்கின்றன. பல கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் புத்தகங்களுக்கும் இரண்டாம் உயிர் கொடுத்திருக்கின்றன. “கலைஞர்களோ எழுத்தாளர்களோ நாம் அனைவரும் தொடர்பு கொண்டவர்கள். கேசவ் பாவ் நினைவில் இருந்ததைப் போலவே ஷாகிரை ( அம்பேத்கர் மீதான ஈர்ப்பு: சால்வேவின் விடுதலைப் பாடல் ) நான் வரைந்தேனென அவர் சொன்னதை நினைவுகூருகிறேன். அது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் தனியராகவும் சமூகமாகவும் பண்பாட்டு அடையாளங்களாலும் தனித்திருந்தபோதும் கதைகள், நினைவுகள், கற்பனைகள் ஆகியவற்றால் நாங்கள் ஒன்றுபடுகிறோம்,” என்கிறார் லபானி.

PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Courtesy: Labani Jangi

லபானியின் பணி பல புத்தகங்களின் முகப்பில் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவுக்குள்ளும் வெளியேயும் எழுதப்பட்ட படைப்பெழுத்து மற்றும் ஆய்வெழுத்து புத்தகங்களிலும் அவரின் பணி இடம்பெறுகிறது

PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Labani Jangi

இடது: லபானி தன் ஆக்கங்களை, மார்ச் 2024-ல் ஐஐடி காந்திநகரில் ஒருங்கிணைக்கப்பட்ட காமிக்ஸ் கான்க்லேவில் காட்சிப்படுத்தினார். வலது: ஆகஸ்ட் 2022-ல் மல்லிகா சாராபாய் ஒழுங்கமைத்து இந்தியா, வெனிசுலா, பாலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் பங்கேற்ற நிகழ்விலும் தன் ஆக்கங்களை அவர் காட்சிப்படுத்தினார்

லபானி ஓவியங்களின் வெளிர் நிறங்கள், வலிமையான தீற்றுகள் மற்றும் மானுட வாழ்க்கைகளின் வெளிப்பாடு ஆகியவை, பண்பாட்டு ஓர்மையாக்கத்துக்கு எதிரான கதைகளையும் கூட்டு நினைவு, அடையாளங்கள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கான கதைகளையும் சொல்லி, பிரிவுவாதத்துக்கு நடுவே இணைப்புகளை ஏற்படுத்துகின்றன. ”பொன்னுலகுக்கான அவசரத்துடன் நான் இயங்குவதாக நினைக்கிறேன். சுற்றி நடக்கும் வன்முறையின் விளைவாக புதுச் சமூகத்தை கனவு காணுவது இயல்பாக மாறி விடுகிறது,” என்கிறார் லபானி. “அரசியல் போக்கு அழிவுடன் மட்டும் இணையும் உலகில், என் ஓவியம் மென்மையாக பேசினாலும் வலிமையாக போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.”

இம்மொழியை அவர், பாட்டியிடம் கற்றுக் கொண்டார். முதல் 10 வருடங்கள் அவர் பாட்டியிடம்தான் வளர்ந்தார். “சகோதரனையும் என்னையும் பார்த்துக் கொள்வது தாய்க்கு சிரமமாக இருந்தது,” என்கிறார் லபானி. “வீடும் சிறியதாக இருந்தது. எனவே அவர் என்னை பாட்டி வீட்டுக்கு அனுப்பினார். அங்கு பெரியம்மா என்னை பத்து ஆண்டுகளுக்கு பார்த்துக் கொண்டார். எங்கள் வீட்டருகே ஒரு குளம் இருந்தது. அங்குதான் தினசரி பிற்பகல் நாங்கள் பூத்தையல் வேலை செய்வோம்.” அவரின் பாட்டி, நுட்பமான கதைகளை வண்ணமய வேலைப்பாடாக நெய்வார். எளிய தீற்றுகளில் நுட்பமான கதைகளை சொல்லும் திறன் அவருக்கு பாட்டியிடமிருந்து கிடைத்திருக்கலாம். பயத்துக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான வெளியை அவர் தாயிடமிருந்து பெற்றார்.

PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Courtesy: Labani Jangi

இடது: அப்பாவும் அம்மாவும் லபானியின் வாழ்க்கையில் முக்கிய ஆளுமைகளாக இருக்கின்றனர். அவர்கள்தான் அவரின் போராட்ட உணர்வை கட்டியெழுப்பினர். வலது: பத்து வயது வரை வளர்ந்த பாட்டியிடம்தான் கதை சொல்லும் திறனை லபானி பெற்றார்

PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Courtesy: Labani Jangi

இடது: பிற கலைஞர்களுடன் சேர்ந்து லபானி, குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்குமான ஒரு அமைப்பை, உத்தரப்பிரதேச கிரிராஜ்பூர் கிராமத்தில் கந்தேரா கலை வெளி என்கிற பெயரில் உருவாக்கியிருக்கிறார். வலது: அவர் பஞ்சேரி கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்

”இளம் வயதில் நான் தேர்வுகளில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கணக்கு தேர்விலும் சமயங்களில் அறிவியல் தேர்விலும் கூட பூஜ்ய மதிப்பெண் பெற்றேன்,” என்கிறார் அவர். “எனினும் என் அம்மா என்னை முழுமையாக நம்பினார். அப்பாவுக்கு கூட சில சந்தேகங்கள் இருந்தது. அடுத்த முறை நன்றாக தேர்வு எழுதுவேன் என என் அம்மா எனக்கு உறுதி அளிப்பார். அவர் இன்றி இந்த உயரத்தை நான் எட்டியிருக்க முடியாது. மேலும் அம்மாவுக்கு படிக்க ஆர்வமிருந்தும் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. மணம் முடித்து வைக்கப்பட்டார். எனவே என் வழியாக அவரின் விருப்பங்களை அவர் வாழ்ந்தார். கொல்கத்தாவிலிருந்து நான் வீடு திரும்பினால், அவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, வெளியுலகக் கதைகளை தெரிந்து கொள்வார். உலகை என் கண்களின் வழியாக அவர் பார்க்கிறார்.”

ஆனால் உலகம் அச்சமூட்டும் இடம். கலையும் வேகமாக வணிகமயமாகி வருகிறது. “என்னுடைய உணர்வு நிலையை இழந்து விடுவேனோ என அஞ்சுகிறேன். பெரிய கலைஞராக வேண்டும் என்கிற விருப்பத்தில், என் மக்களிடமிருந்தும் என் கலையின் நோக்கத்திடமிருந்தும் அந்நியப்பட நான் விரும்பவில்லை. பணம், நேரம் என தொடர்ந்து நான் போராடுகிறேன். இவ்வுலகில் என் மனதை விற்காமல் வாழ்வதுதான் பெரும் போராட்டமாக இருக்கிறது.”

PHOTO • Courtesy: Labani Jangi
PHOTO • Labani Jangi
PHOTO • Labani Jangi

பஞ்சேரி கலைஞர்களின் சங்க உறுப்பினரான லபானி, ஒருங்கிணைந்த பண்பாடு மற்றும் அறிவுசார் உரையாடலில் ஆழமாக ஈடுபடுகிறார். இந்தியா முழுவதும் நான்கு கண்காட்சிகளை நடத்தி விட்டார்

PHOTO • Ritayan Mukherjee

விருது பெற்ற கலைஞரான அவர், ‘ஆன்மாவை வணிகத்துக்கு விற்காமல் உலகில் வாழ்வது பெரும் போராட்டமாக இருக்கிறது,’ என்கிறார்

முகப்பு படம்: ஜெயந்தி புருடா
தமிழில்: ராஜசங்கீதன்

Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या, पारी में बतौर वरिष्ठ संपादक कार्यरत हैं, और पारी के रचनात्मक लेखन अनुभाग का नेतृत्व करती हैं. वह पारी’भाषा टीम की सदस्य हैं और गुजराती में कहानियों का अनुवाद व संपादन करती हैं. प्रतिष्ठा गुजराती और अंग्रेज़ी भाषा की कवि भी हैं.

की अन्य स्टोरी Pratishtha Pandya
Editor : P. Sainath

पी. साईनाथ, पीपल्स ऑर्काइव ऑफ़ रूरल इंडिया के संस्थापक संपादक हैं. वह दशकों से ग्रामीण भारत की समस्याओं की रिपोर्टिंग करते रहे हैं और उन्होंने ‘एवरीबडी लव्स अ गुड ड्रॉट’ तथा 'द लास्ट हीरोज़: फ़ुट सोल्ज़र्स ऑफ़ इंडियन फ़्रीडम' नामक किताबें भी लिखी हैं.

की अन्य स्टोरी पी. साईनाथ
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan