இரண்டு பேர் மலை வழியாக எதிர்ப்படும் முட்செடிகளை வெட்டியபடி நாகமுன் குன்ஃபைஜாங்கிலுள்ள அவர்களின் நிலங்களை நோக்கி செல்கின்றனர். சிறு கிராமமான அங்கு 40 குகி-ஜோ பழங்குடி குடும்பங்கள் இருக்கின்றன. மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் அந்த கிராமம் இருக்கிறது. 2023ம் ஆண்டின் அந்த செப்டம்பர் நாளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. சுற்றியிருந்த மலைப்பரப்பு முழுக்க காட்டுப் புதர்கள் நிரம்பியிருந்தன.

ஆனால் சில வருடங்களுக்கு முன் இம்மலைகளை கசாகசா செடிகளின் ( Papaver somniferum ) பளீர் வெள்ளை, இளம் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு பூக்கள் போர்த்தியிருந்தன.

“1990களின் தொடக்கத்தில் நான் கஞ்சா ( Cannabis sativa ) செடி வளர்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த காலத்தில் அதில் அதிகம் பணம் வரவில்லை,” என்கிறார் பெளலால். பயணித்துக் கொண்டிருக்கும் இருவரில் ஒருவர் அவர். “2000மாம் வருடங்களின் தொடக்கத்தில் மக்கள் கானி (கசாகசா) செடிகளை இம்மலைகளில் வளர்க்கத் தொடங்கினர். நானும் வளர்த்தேன்,” என்னும் அவர், “சில வருடங்களுக்கு முன் அது தடை செய்யப்படும் வரை,” என்கிறார்.

பெளலால் குறிப்பிடுவது 2020-ம் ஆண்டின் குளிர்காலத்தை. நாகமுன் குன்ஃபைஜாங்கின் தலைவரான தாங்போய் கிப்கென், கிராமத்திலிருக்கும்  பயிர்களை அழிக்கச் சொன்னார். விவசாயிகளையும் கசாகசா விவசாயத்தை முற்றாக கைவிடும்படி கூறினார். அவரின் முடிவு, மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாஜக அரசாங்கம் முழு வீச்சில் முன்னெடுத்த ‘போதைப் பொருட்களுக்கு எதிரான போர்’ பிரசாரத்தின் விளைவில்தான் எடுக்கப்பட்டிருந்தது.

போதை கொடுக்கக் கூடிய ஓபியம், கசாகசாச் செடியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அச்செடிகள் பிரதானமாக மணிப்பூரின் மலை மாவட்டங்களான சுராசந்த்பூர், உக்ருல், காம்ஜாங், செனாபதி, தமேங்லாங், சாந்தெல், தேங்க்னோபல் மற்றும் காங்போங்பி போன்ற இடங்களில் விளைவிக்கப்படுகிறது. காங்போக்பியில் வாழும் பெரும்பாலானோர் குகி-ஜோ பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் நவம்பர் 2018-ல்தான் முதலமைச்சர் பைரன் சிங்கின் தலைமையிலான பாஜக மாநில அரசாங்கம் ‘போதைப்பொருட்களுக்கு எதிரான போர்’ அறிவித்தது. மலை மாவட்டங்களிலிருந்து ஊர்த் தலைவர்கள் மற்றும் தேவாலயங்கள், தங்களின் பகுதிகளில் கசாகசா விவசாயத்தை நிறுத்த வேண்டும் என சிங் கேட்டுக் கொண்டார்.

Left: Poppy plantations in Ngahmun village in Manipur's Kangpokpi district .
PHOTO • Kaybie Chongloi
Right: Farmers like Paolal say that Manipur's war on drugs campaign to stop poppy cultivation has been unsuccessful in the absence of  consistent farming alternatives.
PHOTO • Makepeace Sitlhou

இடது: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தின் நாகமுன் கிராமத்தில் கசாகசா பயிர். வலது: கசாகசா விவசாயத்தை தடுப்பதற்கான மணிப்பூரின் போதைப்பொருட்களுக்கு எதிரான போர், மாற்று விவசாயம் இல்லாதததால் தோல்வியுற்றதாக பெளலால் போன்ற விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்

’போதைப்பொருட்களுக்கு எதிரான போர்’ பிரசாரம் தங்களுக்கு எதிரான நேரடி தாக்குதல் என்கின்றனர் உள்ளூர்வாசிகளான குகி-ஜோ பழங்குடிகள். மே 2023-ல் பெரும்பான்மை மெய்தி சமூகத்துக்கும் சிறுபான்மை குகி-ஜோ பழங்குடிகளுக்கும் இடையே வெடித்த இனக்கலவரத்துக்கு அடிப்படையாகவும் அந்த பிரசாரம்தான் அமைந்திருந்தது. கசாகசா விவசாயம், நாகா மற்றும் குகி ஜோ ஆகிய இரு பழங்குடி மக்கள் வாழும் மலை மாவட்டங்களிலும் நடந்தபோதும் முதலமைச்சர் பைரன் சிங் (பாஜக) போதை வணிகம் மணிப்பூரில் நடப்பதற்கே குகிகள் மட்டும்தான் காரணமென்றதாக உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாகமுன் குன்ஃபைஜாங்கில் வசிக்கும் பெளலாலின் குடும்பத்தைப் போன்ற 30 விவசாயக் குடும்பங்களும் கசாகசா விவசாயத்தை கைவிடக் கட்டாயப்படுத்தப்பட்டன. பட்டாணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்குகள் மற்றும் வாழைப்பழங்கள் வளர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதில் வருமானம் குறைவாகத்தான் கிடைக்கும். “அது இவர்களை திணறடித்தது,” என்கிறார் தற்காலிக ஊர்த்தலைவராக இருக்கும் சாம்சன் கிப்கென். இங்கு, நிலம் மொத்த பழங்குடி சமூகத்துக்கும் சொந்தம். அதை மேற்பார்வையிடுவது ஊர்த் தலைவர்தான். அவருக்கு அந்தப் பொறுப்பு வம்சாவளியாக கிடைத்த பொறுப்பு. “ஆனால் அவர்கள் (மாறிய விவசாயிகள்) ஊருக்கும் சுற்றுப்புறத்துக்கும் இது நல்லது என்பதை புரிந்து கொண்டார்கள்,” என்கிறார் அவர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (MNREGA) போன்ற வாய்ப்புகள் இல்லாத விவசாயிகளுக்கு கசாகசா விவசாயம்தான் வருமானம் ஈட்டும் வழி.

விளைவிப்பவர்களை கைது செய்து சிறையிலடைப்போம் என்கிற அரசாங்கத்தின் மிரட்டலால் கசாகசா விளைவிப்பதை நிறுத்தியதாக சொல்கிறார் 45 வயது விவசாயியான பெளலால். கிராமவாசிகள் ஒத்துழைக்காவிட்டால், உள்ளூர் காவல்துறை கசாகசா நிலங்களை எரித்து அழிக்குமென பிரசாரம் எச்சரித்தது. சமீபத்தில், சமவெளி சார்ந்த ஒரு குழு, கசாகசா நிலங்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்த ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது என்று கூட சொன்னது. உண்மையில் அப்படி எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

2018ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 18,000 ஏக்கர் கசாகசா பயிரை அழித்து 2,500 விவசாயிகளை கைது செய்திருப்பதாக மாநில அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் மணிப்பூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவான போதைமருந்து விவகாரத்துறையின் தரவுகளின்படி 2018 முதல் 2022 வரை, 13,407 ஏக்கர்  பயிர் அழிக்காப்பட்டிருக்கிறது.

மணிப்பூரின் எல்லை மியான்மருடன் இருக்கிறது. உலகிலேயே பெரியளவுக்கு கசாகசா தயாரிக்கும் நாடு மியான்மர் ஆகும். மார்ஃபின், கோடின், ஹெராயின், ஆக்ஸிகோடோன் போன்ற பல போதை மருந்துகளும் அங்கு தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மியான்மர் அருகிலிருப்பதால், போதை மருந்து உள்ளிட்ட சட்டவிரோத வணிகம் நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 2019ம் ஆண்டில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட இந்தியாவில் போதைமருந்துகளின் தாக்கம் குறித்த கணக்கெடுப்பில், வட கிழக்கு இந்தியாவிலேயே ஊசியில் போதை மருந்து செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மணிப்பூரில்தான் அதிகமென குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“இளைஞர்களை காக்க, போதை மருந்துகள் மீது போர் தொடுப்பது தவறா?” என இம்பாலிலுள்ள பாஜக தலைமையகத்தில் டிசம்பர் 2023-ல் நடந்த கட்சிக் கூட்டத்தில் கேட்டார் முதலமைச்சர் பைரன் சிங். இன மோதலை பாஜக தூண்டுவதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் அளித்த பதில் அது.

Demza, a farmer who used to earn up to three lakh rupees annually growing poppy, stands next to his farm where he grows cabbage, bananas and potatoes that he says is not enough to support his family, particularly his children's education
PHOTO • Makepeace Sitlhou

கசாகசா பயிர் விளைவித்து வருடந்தோறும் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிய விவசாயியான டெம்சா, தற்போது முட்டைக்கோஸ், வாழைப்பழங்கள், உருளைக் கிழங்குகள் போன்றவற்றை விளைவிக்கும் நிலத்துக்கருகே நின்று கொண்டு, குழந்தைகள் படிப்புக்கும் குடும்பத்துக்கும் போதுமான அளவுக்கான வருமானம் கிடைப்பதில்லை என்கிறார்

முரண் நகை என்னவென்றால், ‘போதைப்பொருட்கள் மீதான போர்’தான் டெம்சா குழந்தைகளின் கல்வியைப் பறித்தது.

நான்கு வருடங்களுக்கு முன் வரை, டெம்சாவும் குடும்பத்தினரும் நாகமுன் குன்ஃபைஜாங்கில் கசாகசா விளைவித்து வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அது தடை செய்யப்பட்ட பிறகு, கலப்பு பயிர் விவசாயத்துக்கு டெம்சா நகர்ந்தார். அவரின் வருமானம் சரிந்தது. “காய்கறிகளை வருடத்துக்கு இரண்டு முறை விளைவித்து, நல்ல விளைச்சல் கிடைத்தால், வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்,” என்கிறார் டெம்சா. “ஆனால் கசாகசா விளைவித்தபோது, ஒரே அறுவடையில் குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாய் வரை ஈட்டியிருக்கிறோம்.”

வருமானம் கணிசமாக குறைந்ததால், குழந்தைகளின் பள்ளிக் கல்வியை அவர் நிறுத்த வேண்டியிருந்தது. ஒரே ஒரு குழந்தையை மட்டும் காங்போக்பி மாவட்ட உள்ளூர் பள்ளியில் சேர்க்க முடிந்தது.

வறுமை, உணவு பற்றாக்குறை மற்றும் பொருள் தேவை ஆகியவை மணிப்பூரின் பழங்குடி விவசாயிகள் ஓபியம் விவசாயத்தை நாடக் காரணமாக இருக்கிறது என்கிறது 2019ம் ஆண்டில் காங்போக்பி, சுராசந்த்பூர் மற்றும் தேங்க்னோபல் போன்ற மலை மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வு . கவுஹாத்தியின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT) சமூகவியல் உதவிப் பேராசிரியராக இருக்கும் நாம்ஜஹாவோ கிப்கென் தலைமை தாங்கிய ஆய்வு இது. கிட்டத்தட்ட 60 குடும்பங்களிடம் ஆய்வு செய்த அவர், ஒரு ஹெக்டேர் நிலத்தில் 5-7 கிலோ ஓபியம் தயாரிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்தார். அதன் விலை கிலோவுக்கு ரூ.70,000-150,000 வரை இருக்கும்.

*****

சிறுபான்மையினரான குகி-ஜோ பழங்குடி மக்கள் தங்களின் வருடாந்திர அறுவடைக் கால குட் விழாவை கொண்டாடுவது நவம்பர் மாதத்தில். இந்த விழாவின்போது குழுக்கள் ஒன்று சேர்ந்து பெருவிருந்துகளை சமைத்து உண்டு, பாடி ஆடி, அழகு போட்டிகள் கூட நடத்துவார்கள். ஆனால் 2024ம் வருடம் வேறு நிலையிலிருந்து. மே மாதத்தில் கடுமையான உள்நாட்டு மோதல் மெய்தி சமூகத்தினருக்கும் குகி-ஜோ சமூகத்தினருக்கும் வெடித்தது. மெய்தி சமூகத்தினர்தான் மணிப்பூர் மக்கள்தொகையில் 53 சதவிகிதம்.

மார்ச் 2023-க்கு பிற்பகுதியில், மெய்தி சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையான - பட்டியல் பழங்குடி வகையில் சேர்ப்பதை குறித்து மாநில அரசு யோசிக்கும்படி மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. பட்டியல் பழங்குடியாக ஆக்கப்பட்டால், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடும் பொருளாதார பலன்களும் மெய்தி சமூகத்தினருக்குக் கிடைக்கும். கூடுதலாக, குகி பழங்குடிகள் பெரும்பான்மையாக வசிக்கும் மலைப்பகுதிகளில் மெய்திகளால் நிலம் வாங்க முடியும். நிலம் மீதான தங்களின் உரிமை பறிபோவதாக எண்ணிய எல்லா பழங்குடி சமூகங்களும் நீதிமன்றத்தின் பரிந்துரையை எதிர்த்தன.

Farmers and residents of Ngahmun village slashing the poppy plantations after joining Chief Minister Biren Singh’s War on Drugs campaign in 2020
PHOTO • Kaybie Chongloi

முதலமைச்சர் பைரன் சிங்கின் போதைமருந்துகளின் மீதான போரில் இணைந்து 2020ம் ஆண்டில் நாகமுன் கிராமத்தின் கசாகசா பயிரை விவசாயிகள் அழிக்கின்றனர்

இது, வன்முறை தாக்குதல்களை மாநிலம் முழுக்க தொடங்கி வைத்தது. காட்டுமிராண்டித்தனமான கொலைகளும், தலை துண்டிப்புகளும் கூட்டு வல்லுறவுகளும் எரியூட்டும் நிகழ்வுகளும் அரங்கேறின.

கிராமத்துக்கு பாரி செல்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு குரூரமான சம்பவத்தின் காணொளி வைரல் ஆனது. காங்போக்பியை சேர்ந்த பி ஃபைனோம் கிராமத்தின் இரு பெண்கள் மெய்தி ஆண்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு நடத்தி வரப்பட்டனர். அச்சம்பவம் மே மாத தொடக்கத்தில் பி ஃபைனோம் கிராமம் தாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டபோது நடந்திருந்தது. அக்காணொளி பதிவு செய்யப்பட்ட பிறகு, அவர்களின் ஆண் உறவினர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் நெல்வயல்களில் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை 200 பேர் (இன்னும் கூடிக் கொண்டிருக்கிறது) வரை, மோதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். 70,000 பேர் இடம்பெயர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களின் பெரும்பாலானோர் சிறுபான்மையான குகிகள். மெய்தி பயங்கரவாதிகளை காவல்துறையும் அரசும் தூண்டி விடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த உள்நாட்டு மோதலின் மையமாக இருப்பது கசாகசா செடி. “அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் இந்த வலைப்பின்னலின் உச்சத்தில் இருக்கின்றனர். விவசாயிகளிடமிருந்து இவற்றை வாங்கும் தரகர்களும் நல்ல பணம் பார்க்கின்றனர்,” என்கிறார் IIT பேராசிரியரான கிப்கென். கசாகசா பயிர் அழிப்பு, பெருமளவுக்கு போதை மருந்து கைப்பற்றுதல் மற்றும் கைதுகள் போன்றவை நடந்தும், இதில் ஈடுபடும் பெரிய மனிதர்கள் இன்னும் சட்ட நடவடிக்கைக்கு வெளியேதான் இருக்கின்றனர். பெரும்பாலான சிறுவிவசாயிகள், கசாகசா வணிகத்திலிருந்து மிகக் குறைவான வருமானத்தையே பெற்றதாக கிப்கென் சொல்கிறார்.

முதலமைச்சர் பைரன் சிங் மோதலுக்கான காரணத்தை குகி ஜோ பழங்குடியின் ஏழை கசாகசா விவசாயிகள் மீது சுமத்தினார். அவர்களுக்கு ஆதரவாக குகி தேசிய முன்னணி (KNF) குழு இருந்து போதை மருந்து வணிகத்தை எல்லை தாண்டி மியான்மருடன் செய்வதாகவும் கூறினார். மலைகளில் நடத்தப்படும் கசாகசா விவசாயம்தான் காப்புக் காடுகள் அழிப்புக்கும் மெய்தி ஆதிக்க சமவெளியில் நேரும் சூழலியல் சீர்கேடுகளுக்கும் காரணமென மாநில அரசு கூறி வந்தது.

கசாகசா விளைவிப்புக்கான பணிகள், பெரிய நிலங்களிலுள்ள மரங்களை வெட்டி, காட்டுப் பகுதிகளை எரித்து, பிறகு பூச்சிக்கொல்லி மருந்து, வைட்டமின்கள் மற்றும் யூரியா பயன்படுத்தி தொடங்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 2021ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வின்படி , சுராசந்த்பூர் மாவட்டத்தின் புதிய தோட்டப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமங்களில் ஓடைகள் காய்ந்து, கிராமத்துக் குழந்தைகளிடம் நீர் சார்ந்த நோய்கள் அதிகரித்திருக்கின்றன. எனினும் மணிப்பூரில் நடக்கும் கசாகசா விவசாயத்தினால் ஏற்படும் சூழலியல் தாக்கம் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகள் இல்லை என்கிறார் பேராசிரியர் கிப்கென்.

Paolal harvesting peas in his field. The 30 farming households in Ngahmun Gunphaijang, like Paolal’s, were forced to give up poppy cultivation and grow vegetables and fruits like peas, cabbage, potatoes and bananas instead, getting a fraction of their earlier earnings
PHOTO • Makepeace Sitlhou

பெளலால் பட்டாணி அறுவடை செய்கிறார். நாகமுன் குன்ஃபைஜாங்கின் 30 விவசாயக் குடும்பங்கள், பெளலாலின் குடும்பத்தை போல, கசாகசா விவசாயத்தை விடுத்து, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, வாழைப்பழங்கள் போன்றவற்றை வளர்க்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர்

அண்டை நாடான மியான்மரில் நடக்கும் கசாகசா விவசாயம் குறித்த ஐநாவின் போதைமருந்துகள் மற்றும் குற்றங்கள் அறிக்கை யில், கசாகசா விவசாயம் நடக்கும் கிராமங்களின் காடுகளின் தரம், கசாகசா விவசாயம் நடக்காத இடங்களில் இருக்கும் காடுகளின் தரத்தைக் காட்டிலும் வேகமாக சரிந்து வருவதாக கண்டறிந்திருக்கிறது. ஆனால் காலநிலை மாற்றத்தின் தாக்கம் கசாகசா விவசாயம் நடக்கும் இடங்களிலும் நடக்காத இடங்களிலும் விளைச்சலை 2016ம் ஆண்டு தொடங்கி 2018ம் ஆண்டு வரை குறைக்கவே செய்திருக்கிறது. ஆனால் கசாகசா விவசாயத்தின் விளைவாக நேரும் சூழலியல் தாக்கம் குறித்த முற்றான ஆய்வு ஏதுமில்லை.

இதை மறுக்கும் விவசாயி பெளலால், “கசாகசா செடி மண்ணை பாதித்திருந்தால், இந்த காய்கறி விவசாயத்தை நாங்கள் இப்போது செய்ய முடிந்திருக்காது,” என்கிறார். பிற நாகமுன் விவசாயிகளும், முன்பு கசாகசா விளைவிக்கப்பட்ட அவர்களது நிலத்தில் தற்போது காய்கனிகள் வளர்ப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை எனக் கூறுகின்றனர்.

*****

கசாகசா விவசாயம் அளித்த அளவுக்கான உயர்ந்த வருமானத்தை அளிக்கக் கூடிய மாற்றுகளை அளிக்கவில்லை என விவசாயிகள் அரசை குற்றஞ்சாட்டுகின்றனர். உருளைக்கிழங்கு விதைகளை கிராமவாசிகளுக்கு கொடுத்ததாக சொல்லும் ஊர்த்தலைவரின் கூற்றைத் தாண்டி, பெளலால் போன்ற முன்னாள் கசாகசா விவசாயிகள் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்கின்றனர். “ஒரு பாக்கெட் விதையை 100 ரூபாய் கொடுத்து ஒருவழியாக நான் வாங்கினேன். இப்படித்தான் காய்கறிகளை நான் விளைவிக்கிறேன்,” என்கிறார் அவர்.

அரசாங்கத்தின் முன்னெடுப்பில் நாகமுன் இணைந்து ஒரு வருடம் கழித்து, தாங்குல் நாகா மக்கள் அதிகம் வசிக்கும் உக்ருல் மாவட்டத்தின் பெ கிராமமும் மலைகளில் இருந்த கசாகசா பயிரை அழித்தது. முதலமைச்சர் உடனே 2021-ல் 10 லட்சம் ரூபாய் விருது அறிவித்தார். தோட்டக்கலை மற்றும் மண் பாதுகாப்பு துறை, மணிப்பூர் இயற்கை இலக்கு நிறுவனத்துடன் இணைந்து, பயனாளிகளை கண்டறியம் வேலையை ஊர் சபையுடன் சேர்ந்து செய்கின்றன. கிவி மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் போன்ற மாற்றுகளை வழங்கி வருகின்றன.

கூடுதலாக, உழுவதற்கான கருவிகளும் 80 மூட்டை உரமும், ப்ளாஸ்டிக் பைகளும் ஆப்பிள், இஞ்சி மற்றும் சீமைத் தினைக் கன்றுகளும் மேலும் ஒரு 20.3 லட்சம் ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டதாக பெ கிராமத்தின் ஊர்த்தலைவரான மூன் ஷிம்ரா கூறுகிறார். “ஒரே ஒரு குடும்பம்தான் கசாகசா விவசாயம் செய்யத் தொடங்கியது. உடனே ஊர் சபை தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியது. அதற்காக அரசாங்கம் எங்களுக்கு வெகுமதி அளித்திருக்கிறது,” என்கிறார் ஷிம்ரா. அரசாங்கத்தின் வெகுமதி, கிராமத்தின் 703 குடும்பங்களுக்கும் பலனளிக்கும், அந்த கிராமம், மாவட்ட தலைநகரான உக்ருலிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. உக்ருலில் சேனைக்கிழங்கு, எலுமிச்சை, ஆரஞ்சு, சோயாபீன்ஸ், தானியங்கள், சோளம் மற்றும் நெல் போன்றவை விளைவிக்கப்படுகின்றன.

”ஆனால் இந்த புதிய பயிர்களை விளைவிப்பதற்கான பயிற்சியை எங்களுக்கு அளித்து, இவை பலனளிக்கும் வரை எங்களை கண்காணித்து உதவ அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். மேலும் இந்த பயிர்களை காக்க வேலி வேண்டும். ஏனெனில் சுற்றித் திரியும் கால்நடைகள் பயிர்களை அழித்துவிடக் கூடும்,” என்கிறார் அவர்.

நாகமுன் கிராமத்தின் தற்காலிக தலைவராக இருக்கும் கிப்கென், தங்களின் கிராமத்துக்கு ஒரே ஒருமுறை உதவி கிடைத்ததாக சொல்கிறார். அதுவும் ஆய்வுக்காக ஓர் அரசு பல்கலைக்கழகத்தின் மூலம் வாழ்வாதார மாற்றுகளாக கோழிகள், காய்கறி விதைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அரசு ஆதரவு தொடர்ச்சியாக இருக்கவில்லை. “’போதைப் பொருட்களுக்கு எதிரான போரில்’ கலந்து கொண்ட முதல் பழங்குடி கிராமம் எங்களுடையதுதான்,” என்கிறார் அவர். “ஆனாலும் அரசாங்கம் சில பழங்குடி சமூகங்களுக்குதான் உதவுகிறது.”

Left: Samson Kipgen, the acting village chief,  says that switching from poppy cultivation has 'strangled' the farmers.
PHOTO • Makepeace Sitlhou
Right: Samson walks through a patch of the hill where vegetables like bananas, peas, potatoes and cabbages are grown
PHOTO • Makepeace Sitlhou

இடது: தற்காலிக ஊர்த்தலைவரான சாம்சன் கிப்கென், கசாகசா விவசாயத்திலிருந்து மாறியதால் விவசாயிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர் என்கிறார். வலது: வாழைப்பழம், பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் முட்டைகோஸ் போன்றவை விளைவிக்கப்படும் மலைப்பகுதியின் வழியாக சாம்சன் நடக்கிறார்

ஆனால் மாநில அரசில் உள்ளவர்களோ வாழ்வாதார மாற்றங்கள் இல்லை என்பதை குற்றஞ்சாட்டவில்லை. மாறாக இம்முறையையே அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். “மலைப் பழங்குடி விவசாயிகள் விதைகள் மற்றும் கோழிகளை பெற்றனர். ஆனால் அவை பிழைப்புக்கான விவசாயத்துக்குதான் உதவும்,” என்கிறார் மணிப்பூர் அரசாங்கத்தை சேர்ந்த ஒருவர். நாகா மற்றும் குகி ஜோ மக்கள் வாழும் மலை மாவட்டங்களின் கசாகசா விவசாயிகளுக்கான வாழ்வாதார முன்னெடுப்புகளை மேற்பார்வையிடுபவர் அவர்.

காய்கறிகள் விளைவிப்பதாலும் கோழிகள் வளர்ப்பதாலும், கசாகசா விளைவித்து விவசாயிகள் பெற்ற வருமானத்தை எட்ட முடியாது என்கிறார் அவர். கசாகசா விவசாயத்தில் வருடாந்திர வருமானம் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் இருந்தது. காய்கறி மற்றும் கனிகள் விவசாயத்திலோ வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான் கிடைக்கிறது. “‘போதைப் பொருட்கள் மீதான போர்’ பிரசாரம் மலைகளில் வெற்றி பெறவில்லை,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அரசாங்க ஊழியர். “அது வெறும் கண் துடைப்புதான்.”

நிலைத்து நீடிக்கக்கூடிய மாற்று வாழ்வாதாரங்களை அளிக்காமலோ ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்றவற்றை கொண்டு வராமலோ கசாகசா விவசாய அழிப்பு என்பதில் பொருளில்லை. அவை எதையும் செய்யாமல் “சமூக மோதல்கள் அதிகரிக்கும். உள்ளூர் அரசாங்கத்துக்கும் விவசாய சமூகங்களுக்கும் இடையே பிளவு அதிகரிக்கும்,” என்கிறார் அவர்.

ஐநா அறிக்கை கூட, “ விவசாயத்தை நிறுத்திய விவசாயிகள், தங்களின் வருமானத்தை தக்க வைப்பதற்கான வருமான சாத்தியங்கள் உருவாக்கினால்தான்  விவசாயம் முற்றாக ஒழியும்,” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

மலை பழங்குடி விவசாயிகளின் துயரங்களை கூட்டுவதாகதான் இனவாத மோதல் அமைந்தது. ஏற்கனவே அவர்களால் சமவெளியில் வணிகம் செய்ய முடியாத சூழலில்தான் இம்மோதல் நடந்திருக்கிறது.

“(வருடாந்திர)  விளைச்சல் முடிந்த பிறகு, கூடுதல் வருமானத்துக்காக குவாரி மணலை மெய்திகளுக்கு விற்போம். இனி அதுவும் நடக்காது,” என்கிறார் டெம்சா. “இது (மோதல்) தொடர்ந்து கொண்டிருந்தால், எங்களின் குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ந்து அனுப்ப முடியாமலும் எங்களால் பிழைக்க முடியாமலும் போகும் ஒரு காலம் வரும்.”

தமிழில் : ராஜசங்கீதன்

Makepeace Sitlhou

मेकपीस सितल्हो स्वतंत्र पत्रकार हैं और मानवाधिकार, सामाजिक मुद्दों, शासन और राजनीति पर केंद्रित रिपोर्टिंग करती हैं.

की अन्य स्टोरी Makepeace Sitlhou
Editor : PARI Desk

पारी डेस्क हमारे संपादकीय कामकाज की धुरी है. यह टीम देश भर में सक्रिय पत्रकारों, शोधकर्ताओं, फ़ोटोग्राफ़रों, फ़िल्म निर्माताओं और अनुवादकों के साथ काम करती है. पारी पर प्रकाशित किए जाने वाले लेख, वीडियो, ऑडियो और शोध रपटों के उत्पादन और प्रकाशन का काम पारी डेस्क ही संभालता है.

की अन्य स्टोरी PARI Desk
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan