அது செப்டம்பர் 2023. நாம் பூ பூக்கும் காலத்துக்கு நடுவே பூக்களின் பள்ளத்தாக்கில் நிற்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற பூக்கள் நிறைந்திருக்கிறன. அவற்றில் பல, இப்பகுதிக்கு சொந்தமானவை. வருடந்தோறும் பூப்பவை.
ஆனால் இந்த வருடம், பூக்கள் குறைவாகவே பூத்திருக்கின்றன.
1,200 மீட்டர் உயரத்தில் இருக்கும் காஸ் பள்ளத்தாக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய தள விருதை 2012ம் ஆண்டு பெற்றது. அப்போதிருந்து அது மகாராஷ்டிராவின் பிரதானமான சுற்றுலா தளமாக பூ பூக்கும் காலமான ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இயங்கி வருகிறது. அதில்தான் பிரச்சினையும் இருக்கிறது.
“யாரும் இங்கு வந்ததில்லை. காஸ் எங்களுக்கு ஒரு மலை மட்டும்தான். கால்நடைகளை இங்கு நாங்கள் மேய்ப்போம்,” என்கிறார் சுலாபாய் பாதாபுரி. “ஆனால் இப்போது மக்கள் பூக்களில் நடக்கின்றனர். புகைப்படங்கள் எடுக்கின்றனர். வேரோடு அவற்றை பிடுங்குகின்றனர்!” அவர்களின் அலட்சியத்தால் எரிச்சலிலிருக்கும் 57 வயதான அவர், “இது ஒன்றும் பூங்கா இல்லை. இந்த பூக்கள் பாறையில் பூப்பவை,” என்கிறார்.
காஸில் இருக்கும் பள்ளத்தாக்கு, 1,600 ஹெக்டேர் பரப்பளவு பாறை படுகை ஆகும். சதாரா மாவட்டத்தின் சதாரா தாலுகாவில் இருக்கும் அது காஸ் பதார் என அழைக்கப்படுகிறது.
“கூட்டம் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகமாக இருக்கிறது,” என்கிறார் பள்ளத்தாக்குக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காவலிருக்கும் சுலாபாய். காஸ் பள்ளத்தாக்கில் காவலாளிகளாவும் குப்பை சேகரிப்பவர்களாகவும் வாசல் காவலாளிகளாகவும் வழிகாட்டுபவர்களாகவும் வனப்பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காஸ் வன மேலாண்மைக் குழுவுடன் பணிபுரியும் 30 பேரில் அவரும் ஒருவர்.
வழக்கமாக அன்றாடம் வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை, பூக்கும் காலத்தில் 2,000-த்தை தினமும் தாண்டுவதாக சதாராவின் வனத்துறை கமிட்டி சொல்கிறது. வருகை தருபவர்கள், சுலாபாய் சொல்வதை கேட்டு ஒரு கணம் நிற்கின்றனர், “அய்யோ மேடம்! பூக்களை மிதிக்க வேண்டாம். மென்மையான அவை, விரைவில் அக்டோபர் மாதத்தில் இறந்து விடும்,” என சொல்வதை கேட்டுவிட்டு, சடங்குத்தனமாக மன்னிப்பை சொல்லிவிட்டு தங்களின் புகைப்படப் பதிவை மீண்டும் தொடர்கின்றனர்.
பூக்கும் காலத்தில், இப்பள்ளத்தாக்கில் 850 செடியினங்கள் இருக்கும். அதில் 624 வகைகள், அருகிப் போன இனங்களை பதிவு செய்யும் ரெட் டேட்டா புக்கில் இடம்பெற்றிருக்கின்றன . 39 வகைகளை, காஸ் பகுதிக்குள் மட்டும்தான் காண முடியும். கிட்டத்தட்ட 400 மூலிகை செடிகள் இங்கு வளர்கின்றன. “மூலிகை செடிகள் தெரிந்த மூத்தவர்கள் சிலர் இருந்தனர். மூட்டு வலி, சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கான மூலிகை அவர்களுக்கு தெரியும். அனைவருக்கும் தெரிந்திருக்காது,” என்கிறார் அருகாமை வஞ்சோல்வாடி கிராமத்தை சேர்ந்த 62 வயது விவசாயியான லஷ்மண் ஷிண்டே.
செடிகளின் வாழ்க்கைகளை தாண்டி, காஸில் 139 நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்வகைகள் இருக்கின்றன. அவற்றில் தவளை வகையும் ஒன்று எனக் கூறுகிறது இந்த அறிக்கை . இங்கு வாழும் பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் இந்த பன்மையச்சூழலை தக்க வைக்கின்றன.
புனேவை சேர்ந்த ப்ரேர்னா அகர்வால், சுற்றுலாவின் தாக்கம் காஸில் ஏற்படுத்தும் சூழலியல் விளைவை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். “இங்குள்ள உயிரின வகைகள் கூட்டம், மிதித்தல் போன்றவற்றால் பாதிப்படைகின்றன. சுண்டெலிக் கூண்டு [ Utricularia purpurascens) செடியின் ஊதா பூக்கள் பாதிக்கப்படுகின்றன. மலபார் ஹில் பொராஜ் என்கிற வகையும் அழிந்து வருகிறது,” என்கிறார் அவர்.
முரண்நகை என்னவென்றால், சுற்றுலாத்துறைதான் ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதம் வரை பக்கத்தில் இருக்கும் கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பை இங்கு உருவாக்கி விட்டது. “நாளொன்றுக்கு 300 ரூபாய் கிடைக்கும். விவசாயக் கூலியை விட இது அதிகம்,” என்கிறார் சுலாபாய், கசானி, எகிவ் மற்றும் அதாலி கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களில் கிடைக்கும் அன்றாடக் கூலியான 150 ரூபாயுடன் ஒப்பிட்டு.
வருடத்தின் மிச்ச காலத்தில், குடும்பத்துக்கு இருக்கும் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் நெல் விளைவிக்கிறார். “விவசாயத்தை தவிர்த்து வேறு வேலை எதுவும் பெரிதாக இல்லை. இந்த மூன்று மாதங்கள் நல்ல வருமானத்தை கொடுக்கிறது,” என்கிறார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கசானி கிராமத்தில் வாழும் சுலாபாய். இங்கு வந்து போக அவருக்கு ஒரு மணி நேரம் ஆகிறது.
ஒவ்வொரு வருடமும் பள்ளத்தாக்குக்கு 20-லிருந்து 25 செமீ மழை கிடைக்கும். மழைக்காலத்தில், பாறையில் குறைவாக இருக்கும் இந்த மண் தனித்துவமான செடிகளை உருவாக்குகிறது. “காஸில் இருக்கும் செந்நிற களிமண், பஞ்சைப் போல் தண்ணீரை உறிஞ்சி, அருகே உள்ள ஓடைகளுக்கு பகிர்கிறது,” என விளக்குகிறார் டாக்டர் அபர்ணா வாத்வே. புனே சார்ந்த இயற்கை பாதுகாவலரும் உயிரியலாளருமான அவர், “இந்த பள்ளத்தாக்குகளுக்கு நேரும் எந்த பாதிப்பும், இப்பகுதியில் இருக்கும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கும்,” என எச்சரிக்கிறார்.
டாக்டர் வாத்வே, மகாராஷ்டிராவின் வடக்கிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொங்கன் பகுதிகளின் 67 பள்ளத்தாக்குகளை ஆய்வு செய்திருக்கிறார். “இந்த பள்ளத்தாக்கு நுட்பமான இடத்தில் அமைந்திருக்கிறது. நிறைய கட்டுமானங்கள் பன்மையச்சூழலை பாதிக்கும்,” என்கிறார் அவர் அதிகரிக்கும் சுற்றுலாவாசிகள் எண்ணிக்கையையும் ஹோட்டல் ரிசார்ட் கட்டுமானங்களையும் சுட்டிக் காட்டி.
மனித நடவடிக்கைகளால் மறைந்து வரும் பூச்சிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றால் இங்குள்ள பல பாலூட்டிகளும் ஊர்வனவும் பூச்சிகளும் தங்களின் உணவை இழந்து வருகின்றன. “(செடிகளை) ஆவணப்படுத்துதல் அவசியம். ஏனெனில் அவை இடம்பெயர்வதற்கான சாத்தியம் மிக குறைவு. வேறேங்கும் உயிர் வாழவும் முடியாது. இத்தகைய வாழ்விடங்களை மாசுப்படுத்தி அழைத்தால், அவற்றால் எங்கும் செல்ல முடியாது. அழிந்து விடும்,” என்கிறார் அறிவியலாளர் சமீர் பத்யே. பூச்சிகள் மற்றும் பூக்களின் மறைவு, பூக்கள் பூக்கும் தன்மைகளில் கடும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. அது பன்மையச் சூழலையும் பாதிக்கும் என்கிறார் அவர். மேலும் இந்த உயிரின வகைகளின் அழிவு மகரந்த சேர்க்கையை பாதிக்கும் கிராமங்களுக்கான நீராதாரத்தையும் குறைக்கும் எனக் குறிப்பிடுகிறார் பாத்யே.
மூட்டு வலியை போக்க உதவும் கத்தூரியை காட்டுகிறார் லஷ்மண். நாற்பது வருடங்களுக்கு முந்தைய நிலையை நினைவுகூரும் அவர், “அந்த காலத்தில் பூக்கள் இங்கு அடர்ந்திருக்கும்,” என்கிறார். பூக்கும் காலத்தில் அவர், பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளை சேகரித்து நாளொன்றுக்கு 300 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். வருடத்தின் மிச்ச காலத்தில் தன் இரண்டு ஏக்கர் நிலத்தில் அவர் நெல் விளைவிக்கிறார்.
“நாங்கள் இங்குதான் பிறந்தோம். எல்லா மூலைகளும் எங்களுக்கு தெரியும்,” என்கிறார் சவுலாபாய். “எனினும் நாங்கள் படிக்காதவர்கள் என்பதால் யாரும் எங்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் படித்தவர்கள் மட்டும் இயற்கைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?”
காஸ் இப்போது மாறிவிட்டது. “பாழ்பட்டு கிடக்கிறது. என் பால்யகாலத்தில் பார்த்த காஸ் இது இல்லை,” என்கிறார் சுலாபாய் சோகமாக.
தமிழில் : ராஜசங்கீதன்