"நான் சிறுவயதில் இருந்தே இந்த வேலையை (விவசாயக் கூலி) செய்து வருகிறேன், எனக்கு ஒன்பது வயதாகும் முன்பிருந்தே இதை செய்கிறேன்", என்று 54 வயதான தினக்கூலி தொழிலாளி கூறுகிறார். சுமன் ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதில்லை. அவரது தந்தை இறந்த பிறகு, தனது மாமாவின் (தாய்மாமன்) வயலில் அவர் வேலை செய்யத் தொடங்கினார்.
"இந்திரா காந்தி இறந்த ஆண்டு [1984] எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு திருமண வயது நினைவில் இல்லை, ஆனால் 16-20 வயது இருக்கும், "என்று அவர் கூறுகிறார். இவர் பண்டு சம்ப்ரே என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். "கர்ப்ப காலம் முழுவதும் நான் வேலை செய்தேன்,", என்று சுமன் கூறுகிறார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கட்டுமான வேலையை விட்டுவிட்டு விவசாய வேலைக்கு சுமன் திரும்பினார். இவர் தனது 15 வயது நம்பிரதா, 17 வயது கவிதா, 12 வயது குரு, 22 வயதான துல்ஷா, 27 வயதான சில்வினா ஆகிய 5 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுமனின் தாயார் நந்தாவும் அவர்களுடன் பால்கர் மாவட்டத்தில் உள்ள உமேலா கிராமத்தில் வசிக்கிறார்.
"நான் கட்டாயத்திற்காக வேலை செய்கிறேன். எனக்கு வேறு வழியில்லை" என்கிறார் சுமன். இவரது குடும்பம் மல்ஹார் கோலி சமூகத்தைச் சேர்ந்தது (மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளது).
வெயிலடிக்கும் மார்ச் மாத மதிய வேளை ஒன்றில், அவர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொச்சை (மொச்சைக்காய்) வயலில் வேலை செய்கிறார். காலை 8 மணிக்கு தண்ணீர் பாட்டில், 2 அரிவாள்களுடன் தார்பாய் பையுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறுகிறார்.
கடுமையான வெயிலில் இருந்து தலையை சுற்றியுள்ள துண்டு அவரை பாதுகாக்கிறது. மென்மையான மொச்சைக் காய்களை கவனமாகப் பறித்து இடுப்பில் கட்டியிருந்த துப்பட்டாவுக்கு அவர் மாற்றியதும், பை போல விரிந்து அது இரு மடங்காக ஆனது.
"இந்த ஓடி [பை] நிரம்பியதும், பீன்ஸை நான் கூடைக்கு மாற்றுகிறேன். அது நிரம்பியவுடன், அவற்றை சாக்கில் சேர்க்கிறேன்," என்று அவர் விளக்குகிறார். பின்னர் உலர்ந்த காய்களை மென்மையான காய்களிலிருந்து அவர் பிரித்து எடுக்கிறார்.
மதிய உணவு என்பது அவரது நாளின் முதல் உணவாகும். சில நேரங்களில், உணவு கொண்டு வராதபோது, அவளுடைய சேதானி (முதலாளி) கொடுக்கிறார். அல்லது சாப்பிட வீட்டிற்குச் சென்று திரும்புகிறார். ஆனால் விரைவாக வீட்டிலிருந்து திரும்பி பொழுது சாயும் வரை வேலை செய்கிறார். இளைய மகள் நம்பிரதா சில நேரங்களில் அவருக்கு மதியம் தேநீர் கொண்டு வருகிறார்.
"வெயிலின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்ட பிறகு, எனக்கு 300 ரூபாய் கிடைக்கிறது. இந்த தொகையை வைத்து என்ன செய்ய முடியும்?" "எனக்கு தினமும் வேலை கிடைப்பதில்லை" என்று சுமன் கூறுகிறார். விவசாய சீசன், தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவருக்கு வேலை கிடைக்கிறது. "நான் இந்த வயலில் அறுவடை செய்து முடித்துவிட்டால், அடுத்த எட்டு நாட்களுக்கு எனக்கு வேலை கிடைக்காது."
சுமனுக்கு வேலை கிடைக்காத நாட்களில், அவர் வீட்டிலேயே இருந்து விறகு சேகரிப்பது, சமைப்பது மற்றும் தனது குச்சா குடிசையை மீண்டும் கட்டுவது ஆகியவற்றைச் செய்கிறார். "எல்லாப் பொருளும் விலையேறி விட்டதைப் பாருங்கள்!" என்று தனது அடுத்த கூலி வேலையைப் பற்றி அவர் கவலைப்படுகிறார்.
சுமனின் குழந்தைகளில் இருவரான துல்ஷா, சில்வினா ஆகியோர் ஒரு உற்பத்தி தொழிற்சாலையில் அண்மையில் வேலைக்குச் செல்ல தொடங்கியதால், குடும்பத்தின் வருமானம் சிறிது அதிகரித்துள்ளது.
கணவரை இழந்த சில ஆண்டுகளில், அவரது மூத்த மகன் சந்தோஷ் சாம்ப்ரே 2022 அக்டோபரில் தற்கொலை செய்து கொண்டார். 30 வயதிருந்த சந்தோஷ் மண்டபத்தை (மேடை) அலங்கரித்து வந்தார். அச்சம்பவத்திற்கு முந்தைய இரவில் நடந்த சம்பவங்களை அவர் நினைவுகூருகிறார். "எனது மற்றொரு மகன் துல்ஷா எங்கள் பூனைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, சந்தோஷ் எரிச்சலடைந்து துல்ஷாவிடம் சத்தம் போட்டான்." பிறகு சந்தோஷ் வெளியேச் சென்றான்.
"அவன் நண்பனுடன் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன். அவனை தேடி இரவு முழுவதும் பல முறை சாலைக்குச் சென்று நான் பார்த்து வந்தேன்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
மொச்சை வயல்களில் வேலை செய்யும் போது இதைத்தான் நினைப்பேன் என்கிறார். "என் மகன் [குரு] திரும்பத் திரும்பச் சொல்கிறான், 'பாபா [தந்தை] தற்கொலை செய்து கொண்டார், தாதா [சகோதரர்] தற்கொலை செய்து கொண்டார்; நானும் ஒருநாள் தற்கொலை செய்து கொள்வேன்' என்று. அவரது குடும்பத்தில் நிகழ்ந்த தற்கொலைகளின் வரலாறு அவரை கவலையடையச் செய்கிறது.
"எனக்கு என்ன செய்வது என்றுத் தெரியவில்லை, நான் ஒவ்வொரு நாளும் இங்கு வேலைக்கு வருகிறேன்," என்று அவர் கூறுகிறார், "எனக்கு துக்கப்பட நேரம் இல்லை."
உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தால் அல்லது யாராவது துன்பத்தில் இருப்பதாக தெரிந்தால் , தயவுசெய்து தேசிய உதவி எண் , 1800-599-0019 (24/7 கட்டணமில்லை) அல்லது உங்களுக்கு தெரிந்த உதவி எண்களில் ஏதேனும் ஒன்றை அழைக்கவும். மனநல வல்லுநர்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களுக்கு , தயவுசெய்து SPIF- ன் மனநல கோப்பகத்தைப் பார்க்கவும்.
தமிழில்: சவிதா