“பிஜு (புத்தாண்டு விழா) சமயத்தில், சீக்கிரமாக நாங்கள் விழித்தெழுந்து பூக்கள் பறிக்க செல்வோம். பிறகு பூக்களை ஆற்றில் மிதக்கவிட்டு முக்கி எடுப்போம். கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அனைவரையும் சந்தித்து வாழ்த்துவோம்,” என்கிறார் ஜெயா. அரை நூற்றாண்டு கடந்து விட்டாலும், அந்த நாள் குறித்த அவரது நினைவு மங்கவில்லை.

“கைப்பிடி அரிசியை நாங்கள் (நற்காலத்துக்கு அடையாளமாக) பரிசளிப்போம். பதிலுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் லங்கி (அரிசி மது) கொடுப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சில மடக்குகள்தான் குடிப்போம். ஆனால் பல வீடுகளுக்கு செல்வதால், எல்லாம் முடியும்போது நாங்கள் போதையில் இருப்போம்,” என்கிறார் அவர். மேலும், “அந்நாளில் கிராமத்தின் இளைஞர்கள், மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக பெரியவர்களை ஆற்றுநீரில் குளிப்பாட்டுவார்கள்.” ஜெயாவின் முகம், வருடாந்திர கொண்டாட்டங்களின் நினைவுகளில் ஜொலிக்கிறது.

தற்போது சர்வதேச எல்லையைக் கடந்து, அந்த வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் மிஞ்சியிருப்பது லங்கி மட்டும்தான். சக்மா சமூகத்தை சேர்ந்த பல அகதிகளை தம் சடங்குகளோடும் பண்பாடோடும் இணைத்திருப்பது அந்த ஒற்றை சரடுதான். “அது எங்களது பண்பாட்டின் அங்கம்,” என்கிறார் வங்க தேசத்தின் ரங்கமதியில் வளர்ந்த ஜெயா. இப்பகுதியை சேர்ந்த பிற பழங்குடிகளும் லங்கி யை சடங்குகளிலும் வேண்டுதல்களிலும் பயன்படுத்துகின்றனர்.

”பெற்றோரை பார்த்து நான் இதை ( லங்கி ) செய்யக் கற்றுக் கொண்டேன். மணம் முடித்த பிறகு, என் கணவர் சுரேனும் நானும் ஒன்றாக இதை செய்யத் தொடங்கினோம்,” என்கிறார். அவர்கள் இருவருக்கும் மூன்று வகை மதுக்களை செய்யத் தெரியும் - லங்கி, மாட், ஜொகோரா

ஜொகோரா வகையும் அரிசியில்தான் செய்யப்படுகிறது. சைத்ரா (வங்க நாட்காட்டியின் கடைசி) மாதத்தின் முதல் நாள் தயாரிப்பு தொடங்கும். “நாங்கள் பிரோய்ன் சல் லை (ஒட்டரிசியில் தரம் வாய்ந்த வகை) மூங்கில் கொண்டு வாரக்கணக்கில் நொதிக்க வைத்து பிறகு காய்ச்சுவோம். இப்போதெல்லாம் அடிக்கடி நாங்கள் ஜோகோரா தயாரிப்பதில்லை,” என்கிறார் ஜெயா. ஏனெனில் அந்த வகையை செய்ய குறைந்தது ஒரு மாதம் ஆகும். அரிசியின் விலையும் அதிகமாகி விட்டது. “முன்பெல்லாம் இந்த அரிசியை நாங்கள் ஜும் மில் (மலை விவசாயம்) விளைவிப்போம். ஆனால் இப்போது அந்தளவுக்கு நிலம் இல்லை.”

PHOTO • Amit Kumar Nath
PHOTO • Adarsh Ray

இடது: மது தயாரிப்புக்கு அவசியமானவற்றை இங்கே வைத்திருக்கிறார் ஜெயா – பாத்திரங்கள், லங்கியும் மாடும் காய்ச்ச அடுப்பு ஒரு பக்கத்தில். வலது: திரிபுராவில் மூங்கில் சுவர்களை கொண்டிருக்கும் வீடுகளும் கடைகளும்

அவர்களின் வீடு திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் இருக்கிறது. நாட்டிலேயே இரண்டாம் சிறிய மாநிலமாக இருக்கும் மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு காடு. விவசாயம்தான் பிரதான தொழில். பலரும் உபரி வருமானத்துக்கு மரமல்லாத காட்டுற்பத்தியை (NTFP) சார்ந்திருக்கிறார்கள்.

”வீட்டை விட்டு வரும்போது எனக்கு மிகவும் சிறிய வயது. மொத்த சமூகமும் இடம்பெயர்த்தப்பட்டனர்,” என்கிறார் ஜெயா. அப்போது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த (தற்போது வங்க தேசம்) பகுதியில் இருந்த சிட்டாகாங்கின் கர்னாஃபுலி ஆற்றில் கட்டப்பட்ட அணைக்காக அவர்களின் குடும்பங்கள் இடம்பெயர்த்தப்பட்டன. “எங்களிடம் உணவும் இல்லை, பணமும் இல்லை. அருணாச்சல பிரதேச முகாமில் தஞ்சம் புகுந்தோம். சில வருடங்கள் கழித்து திரிபுராவுக்கு சென்றோம்,” என்கிறார் ஜெயா. பிறகு அவர், திரிபுராவில் வசித்து வந்த சுரேனை மணம் முடித்துக் கொண்டார்.

*****

லங்கி என்பது பிரபல மதுவகை. தயாரிப்பிலும் விற்பனையிலும் நூற்றுக்கணக்கான பழங்குடி பெண்கள் இயங்கும் சந்தையை கொண்டது. அந்த பழங்குடி மக்களின் மத மற்றும் சமூக நிகழ்வுகளில் இந்த மதுவகை பிரதான பங்கு வகிக்கிறது. ‘கள்ள மது’ என்கிற வார்த்தையால், சட்ட ஒழுங்கு அதிகாரிகளின் துன்புறுத்தல்களுக்கு வணிகம் செய்யும் பெண்கள் ஆளாகின்றனர்.

ஒரு தொகுப்பு செய்ய இரண்டு - மூன்று நாட்கள் ஆகும் என்கிறார் ஜெயா. “இது ஓர் எளிய வேலை இல்லை. வீட்டு வேலை செய்யக் கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை,” என்கிறார் அவர் தன் கடையில் அமர்ந்து கொண்டு. அவ்வப்போது ஹூக்காவில் புகையிழுத்து கொள்கிறார்.

லங்கி தயாரிக்க பல வகை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சமூகக்குழுவையும் சார்ந்து இறுதியாக கிடைக்கும் மதுவின் சுவை மாறுகிறது என்கிறது 2016ம் ஆண்டு வெளியான பண்பாட்டு உணவுகள் என்கிற ஆய்விதழ் . ”ஒவ்வொரு சமூகமும் லங்கி தயாரிக்கவென தனி பாணி வைத்திருக்கிறது. நாங்கள் தயாரிப்பது ரீங் சமூகம் தயாரிப்பதை விட அதிக காட்டம் கொண்டிருக்கும்,” என்கிறார் சுரேன். திரிபுராவில் வசிக்கும் இரண்டாம் பெரிய பழங்குடி சமூகம், ரீங்க் ஆகும்.

அவர்கள் இருவரும் அரைக்கப்பட்ட அரிசி தானியங்களை கொண்டு மது தயாரிப்பு வேலையைத் தொடங்குகின்றனர். “ஒவ்வொரு தொகுப்புக்கும், நாங்கள் 8-10 கிலோ சித்தோ சால் (ஒட்டரிசியின் சிறு தானிய) அரிசியை தேக்சி யில் (பெரிய சமையல் பாத்திரம்) தயாரிப்போம். அதிகமாக வெந்துவிடக் கூடாது,” என்கிறார் ஜெயா.

PHOTO • Adarsh Ray
PHOTO • Adarsh Ray

இடது: மது தயாரிப்புக்கு அரிசியை வேக வைப்பதுதான் முதல் கட்டம். பெரிய அலுமினிய பானையை விறகு அடுப்பில் பயன்படுத்துகிறார் ஜெயா

PHOTO • Adarsh Ray
PHOTO • Adarsh Ray

வேக வைத்த அரிசி காய்வதற்காக தார்ப்பாயில் பரப்பி வைக்கப்பட்டு, பிறகு நொதிக்க வைக்கும் முறை தொடங்கும்

ஐந்து கிலோ அரிசியை கொண்டு அவர்கள் இரண்டு லிட்டர் லங்கி யோ அல்லது சற்று அதிகமாக மாடோ தயாரிப்பார்கள். 350 மிலி பாட்டில் அல்லது டம்ளரில் (90 மிலி) அவர்கள் விற்பார்கள். ஒரு கிளாஸ் 10 ரூபாய் என்கிற விலையில் லங்கி யும் 20 ரூபாய்க்கு மாடும் விற்கப்படுகிறது.

“எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. ஒரு குவிண்டால் (100 கிலோ) அரிசி, 10 வருடங்களுக்கு முன் 1,600 ரூபாய்க்கு விற்றது. இப்போது 3,300 ரூபாய் ஆகிவிட்டது,” என சுரேன் சுட்டிக் காட்டுகிறார். அரிசி மட்டுமல்ல, அடிப்படை தேவைகளுக்கான பொருட்களின் விலைகளும் கடந்த வருடங்களில் உயர்ந்து விட்டது.

ஜெயா, தங்களின் விலைமதிப்பற்ற மதுவகையை தயாரிக்கும் விதம் குறித்து விரிவாக விளக்கத் தொடங்குகிறார். வேக வைக்கப்பட்ட அரிசி (ஒரு பாயில்) காய வைக்கப்படுகிறது. சூடு ஆறியதும் மூலி சேர்க்கப்பட்டு, காலநிலைக்கேற்ப இரண்டு மூன்று நாட்களுக்கு நொதிக்க விடப்படுகிறது. “வெயில் காலங்களில், ஓரிரவு மட்டும் நொதிக்க வைத்தால் போதுமானது. குளிர்காலமெனில் சில நாட்கள் பிடிக்கும்,” என்கிறார் அவர்.

நொதித்து முடிந்தபிறகு, “நீர் சேர்த்து, கடைசியாக ஒருமுறை வேக வைப்போம். பிறகு நீரை வடித்து, ஆற வைப்போம். அவ்வளவுதான், லங்கி தயாராகி விடும்,” என்கிறார் அவர். மாட் தயாரிக்க வேண்டுமெனில் வடிக்கப்பட வேண்டும். மூன்று பாத்திரங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு தொடர் ஆவியாகுதல் செய்யப்படுகிறது.  நொதிக்க வைப்பதற்கான ஈஸ்ட் போன்ற செயற்கை பொருள் சேர்க்கப்படுவதில்லை.

இரண்டு வகைகளுக்குமே அவர்கள் பதார் டகார் ( Parmotrema perlatum ), ஆக்சி இலைகள், ஜின்ஜின் செடி பூக்கள் போன்ற பல மூலிகைகளும் கோதுமை மாவு, பூண்டு, பச்சை மிளகு போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. “இவை யாவும் கலக்கப்பட்டு சிறு மூலி கள் முன்பே செய்யப்பட்டு, சேமித்து வைக்கப்படுகின்றன,” என்கிறார் ஜெயா.

PHOTO • Adarsh Ray
PHOTO • Adarsh Ray

அரைத்த மூலியை (மூலிகை மற்றும் தானிய கலவை) புழுங்கல் அரிசி நொதிக்க ஜெயா சேர்க்கிறார். வலது: 48 மணி நேர நொதிக்கு பிறகான கலவை

PHOTO • Adarsh Ray
PHOTO • Adarsh Ray

ஈஸ்ட் போன்ற செயற்கை பொருட்களுக்கு பதிலாக ஏராளமான மூலிகைகளும் பூச்செடியும் இலைகளும் பூக்களும் கோதுமை மாவும் பூண்டும் பச்சை மிளகும் பயன்படுத்தப்படுகிறது

“பிற மது வகைகளை போல எரிக்கும் தன்மையற்ற வித்தியாசமான ஒரு கசப்பு ருசி அதற்கு உண்டு. கோடை காலத்தில் சுகமாக இருக்கும் இம்மதுவுக்கு அருமையான மணம் உண்டு,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத வாடிக்கையாளர். பாரி சந்தித்த எல்லா வாடிக்கையாளர்களும் புகைப்படம் எடுக்க ஒப்புக் கொள்ளவில்லை. சட்டத்துக்கு பயந்து இயல்பாக உரையாடவும் இல்லை.

*****

லங்கி தயாரிப்பவர்கள் இந்த ம்து தயாரிப்பது கடினமாகிக் கொண்டே வருவதாக சொல்கிறார்கள். நொதி அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மதுவை திரிபுரா மதுவிலக்கு சட்டம் தடை செய்திருக்கிறது.

“எப்படி இங்கு பிழைக்க முடியும்? தொழிலும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை. என்ன செய்ய முடியும்? மக்கள் எப்படி பிழைக்கிறார்கள் என சுற்றி கொஞ்சம் பாருங்கள்.”

பெரும் அளவுகளில் மதுவை தயாரிப்பது சாத்தியமற்ற விஷயம். ஐந்து பானைகள் மட்டும் இருப்பதாலும் நீர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாலும் ஒவ்வொரு முறையும் 8-10 கிலோ அரிசிதான் தயாரிக்க முடியும் என்கிறார் ஜெயா. மேலும், “அதை தயாரிக்க நாங்கள் விறகுகள் பயன்படுத்துகிறோம். நிறைய விறகுகள் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு மாதமும் நாங்கள் 5,000 ரூபாய் செலவழிக்கிறோம்,” என்கிறார் அவர். எரிவாயு சிலிண்டர்களின் ஆதிக விலை அதைப் பற்றிய யோசனையே இல்லாமல் ஆக்கிவிட்டது.

”10 வருடங்களுக்கு முன் நாங்கள் ( லங்கி ) கடை திறந்தோம். திறக்காமல் இருந்திருந்தால் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளித்திருக்க முடியாது,” என்கிறார் ஜெயா. “எங்களுக்கு ஹோட்டலும் இருந்தது. ஆனால் பல வாடிக்கையாளர்கள் அங்கு சாப்பிட்டு காசு கொடுக்காமல் சென்று விடுவார்கள். எனவே அதை நாங்கள் மூடி விட்டோம்.”

PHOTO • Adarsh Ray
PHOTO • Adarsh Ray

‘நிறைய விறகுகள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நாங்கள் 5,000 ரூபாய் செலவழிக்கிறோம்,’ என்கிறார்கள். எரிவாயு சிலிண்டர்களின் ஆதிக விலை அதைப் பற்றிய யோசனையே இல்லாமல் ஆக்கிவிட்டது

PHOTO • Amit Kumar Nath
PHOTO • Rajdeep Bhowmik

இடது: ஒன்றன் மீது ஒன்றாக பாத்திரங்கள் வைக்கப்பட்டு மது வடிக்கப்படுகிறது. குழாய் வடிக்கப்பட்ட மதுவை சேகரிக்கிறது. வலது: குடுவையில் லங்கி தயார்

மது தயாரிக்கும் இன்னொருவரான லதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) சுற்றி வசிக்கும் அனைவரும் பெளத்தர்கள் என்கிறார். “நாங்கள் லங்கியை பெரும்பாலும் பூஜைக்கும் புத்தாண்டுக்கும்தான் தயாரிக்கிறோம். சில சடங்குகளில் கடவுளுக்கு மதுவை அளிக்க வேண்டும்.” கடந்த சில வருடங்களில், பெரிய லாபம் இல்லாததால் மது தயாரிப்பை லதா நிறுத்தி விட்டார்.

குறைந்த வருமானம், முதுமையடைந்து கொண்டிருக்கும் ஜெயாவுக்கும் சுரேனுக்கும் கூட கவலையை தருகிறது. அவர்களின் உடல்நலத்தை பார்த்துக் கொள்ள அவர்களுக்கு பணம் தேவை. “எனக்கு பார்வை மங்கி விட்டது. மூட்டு வலி அவ்வப்போது வருகிறது. என் பாதங்கள் அடிக்கடி வீங்குகிறது.”

இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள திரிபுராவின் நீண்ட வரிசைகள் நிற்பதால், அவர்கள் அஸ்ஸாமின் மருத்துவமனைகளுக்கு பயணிக்கத் தொடங்கினர். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் தருகிறது என்றாலும், அரசு மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாததால் அவர்கள் அஸ்ஸாமுக்கு பயணிக்கின்றனர். “பயணத்துக்கு மட்டுமே 5,000 ரூபாய் ஆகிறது,” என்கிறார் ஜெயா. அவர்களின் சேமிப்பை மருத்துவ சோதனைகளும் கரைக்கின்றன.

நாங்கள் கிளம்பும் நேரம் வந்து விட்டது. ஜெயா சுமையலறையை சுத்தப்படுத்தத் தொடங்க, அடுத்த நாள் காலை லங்கி தயாரிக்க விறகுகளை அடுக்கி வைக்கிறார் சுரேன்.

இக்கட்டுரை மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை ஆதரவில் எழுதப்பட்டிருக்கிறது

தமிழில் : ராஜசங்கீதன்

Rajdeep Bhowmik

राजदीप भौमिक, पुणे के आईआईएसईआर से पीएचडी कर रहे हैं. वह साल 2023 के पारी-एमएमएफ़ फ़ेलो हैं.

की अन्य स्टोरी Rajdeep Bhowmik
Suhash Bhattacharjee

सुहास भट्टाचार्जी, असम के सिलचर में स्थित एनआईटी से पीएचडी कर रहे हैं. वह साल 2023 के पारी-एमएमएफ़ फ़ेलो हैं.

की अन्य स्टोरी Suhash Bhattacharjee
Deep Roy

दीप रॉय, नई दिल्ली के वीएमसीसी व सफ़दरजंग अस्पताल में परास्नातक रेज़िडेंट डॉक्टर हैं. वह साल 2023 के पारी-एमएमएफ़ फ़ेलो हैं.

की अन्य स्टोरी Deep Roy
Photographs : Adarsh Ray
Photographs : Amit Kumar Nath
Editor : Priti David

प्रीति डेविड, पारी की कार्यकारी संपादक हैं. वह मुख्यतः जंगलों, आदिवासियों और आजीविकाओं पर लिखती हैं. वह पारी के एजुकेशन सेक्शन का नेतृत्व भी करती हैं. वह स्कूलों और कॉलेजों के साथ जुड़कर, ग्रामीण इलाक़ों के मुद्दों को कक्षाओं और पाठ्यक्रम में जगह दिलाने की दिशा में काम करती हैं.

की अन्य स्टोरी Priti David
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan