அவருக்கு விராட் கோலி தான் உயிர். அவளோ பாபர் ஆசாமின் தீவிர ரசிகை. கோலி சதம் அடித்தபோது அவர் கொண்டாடினால், பாபர் சிறப்பாக விளையாடும்போது அவள் அவரை கிண்டல் செய்வார். ஆயிஷா மற்றும் நூருல் ஹசனின் காதல் மொழி கிரிக்கெட் தான். அவர்களின் திருமணம், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என்பதை அவர்களைச் சுற்றியுள்ள எவரும் நம்ப மாட்டார்கள்.
ஜூன் 2023 இல் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளிவந்தபோது, ஆயிஷாவிற்கு கண்கள் ஒளிர்ந்தன. ஏனெனில் அதில், அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இருந்தது. "நாம் அதை மைதானத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்று நான் நூருலிடம் சொன்னேன்” என 30 வயதான ஆயிஷா, மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள தான் பிறந்த கிராமம், ராஜாச்சே குர்லேயில் இருந்து நினைவு கூர்கிறார். “இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டியிட்டு விளையாடுவது அரிது. எங்கள் இருவருக்குமான அபிமான வீரர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது ஒரு அரிய வாய்ப்பு.”
சிவில் இன்ஜினியரான 30 வயது நூருல், சில முயற்சிகளுக்கு பின், இரண்டு டிக்கெட்டுகளைப் பெற முடிந்தது. தம்பதியினருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அப்போது ஆயிஷா கர்ப்பமாகி ஆறாவது மாதத்தில் இருந்ததால், சதாரா மாவட்டத்தில் உள்ள பூசேசாவலி கிராமத்தில் இருந்து 750 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள அனைத்து வழிகளையும் முன்னதாகவே திட்டமிட்டனர். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு, தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போட்டி நாளன்று இருவரும் போட்டியைக் காண செல்லவில்லை.
அக்டோபர் 14, 2023 விடியலின் போது, நூருல் இறந்து ஒரு மாதமாகியிருந்தது, ஆயிஷா முற்றிலுமாக உடைந்து போயிருந்தார்.
*****
ஆகஸ்ட் 18, 2023 அன்று, மகாராஷ்டிரா, சதாரா நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூசேசாவலி கிராமத்தில், ஸ்கிரீன் ஷாட் ஒன்று வைரலானது. அதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆதில் பக்வான் (25) என்ற முஸ்லீம் சிறுவன், இன்ஸ்டாகிராம் கமெண்டில் இந்துக் கடவுள்களை அவதூறாகப் பேசுவது போல அமைந்திருந்தது. இன்றுவரை, ஆதில், அந்த ஸ்கிரீன் ஷாட் மார்ஃபிங் செய்யப்பட்டதாக கூறுகிறார், மேலும் அவரது இன்ஸ்டாகிராம் நண்பர்களும் கூட அத்தகைய கமெண்டை பார்க்கவில்லை என்கின்றனர்.
இருப்பினும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க, பூசேசாவலியில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் மூத்த உறுப்பினர்கள் அவரை காவல்துறைக்கு அழைத்துச் சென்று, ஸ்கிரீன் ஷாட் குறித்து விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். "ஆதில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், நாங்களும் கண்டிப்பதாகவும் கூறியிருந்தோம்," என்று பூசேசாவலி கிராமத்தில் கேரேஜ் நடத்தும் 47 வயதான சிராஜ் பக்வான் கூறுகிறார். இரு மதத்தினரிடையே பகைமையை தூண்டியதின் அடிப்படையில் ஆதிலின் ஃபோனை போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது புகாரைப் பதிவு செய்தனர்.
இருந்த போதிலும், ஆத்திரமடைந்த சதாராவின் இந்து தீவிர வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள், மறுநாள் பூசேசாவலியில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய வன்முறைக்கு அழைப்பு விடுத்து பேரணி நடத்தினர். சட்ட ஒழுங்கை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.
சிராஜ் மற்றும் முஸ்லீம் சமூகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்கள், ஸ்கிரீன் ஷாட்டைப் பற்றிய நியாயமான விசாரணைக்கு உள்ளூர் காவல் நிலையத்தைக் கேட்டுக்கொண்டதோடு, இதற்கு எந்தத் தொடர்பும் இல்லாத பூசேசாவலியின் மற்ற முஸ்லீம்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டினர். "கலவரம் வெடிப்பதற்கான வலுவான சாத்தியம் இருப்பதாக நாங்கள் காவல்துறையிடம் கூறினோம்," என்று சிராஜ் நினைவு கூர்கிறார். "சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் கெஞ்சினோம்."
ஆனால் பூசேசாவலி எல்லைக்கு உட்பட்ட, அவுந்த் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் கங்கபிரசாத் கேந்த்ரே, அவர்களை கேலி செய்ததாக, சிராஜ் கூறுகிறார். “முகமது நபி ஒரு சாதாரண மனிதர் தானே, அவரை ஏன் நீங்கள் பின்பற்றுகிறீர்கள்,” என்று அவர் எங்களிடம் கேட்டார். "சீருடை அணிந்த ஒருவர் இப்படி கேட்டதை என்னால் நம்ப முடியவில்லை."
அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இந்து ஏக்தா மற்றும் ஷிவ்பிரதிஷ்தன் ஹிந்துஸ்தான் ஆகிய இரண்டு தீவிர வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள், பூசேசாவலியில் முஸ்லீம் ஆடவர்ளை தடுத்து நிறுத்தி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழங்குமாறு வற்புறுத்தினர். இல்லாவிடில் அவர்களது வீடுகளை எரித்துவிடுவதாக மிரட்டினர். அந்த கிராமம், அமைதியை தொலைக்கும் விளிம்பில் இருந்தது, தெளிவாகத் தெரிந்தது.
செப்டம்பர் 8 அன்று, முஸம்மில் பக்வான், 23, மற்றும் அல்தமாஷ் பக்வான், 23 ஆகிய இருவரின் பெயர்களிலும் இதேபோன்ற மேலும் இரண்டு ஸ்கிரீன் ஷாட்கள் வைரலானது. இருவரும் பூசேசாவலியில் வசிப்பவர்கள் மற்றும் ஆதிலை போன்றே, இன்ஸ்டாகிராம் பதிவில் இந்துக் கடவுள்களை அவதூறாகப் பேசியதாக இருந்தது. ஆதிலைப் போலவே, இருவரும் ஸ்கிரீன் ஷாட்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று கூறினர். அந்த பதிவு, இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம் ஆண்கள் கூறும் அவதூறுகளின் தொகுப்பாக இருந்தது.
தீவிர வலதுசாரி இந்து குழுக்கள் இந்த பதிவை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஐந்து மாதங்களுக்கும் மேலான பின்னும், சம்பந்தப்பட்ட மூன்று ஸ்கிரீன் ஷாட்களின் நம்பகத்தன்மையை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர்.
ஆனால் அது செய்ய நினைத்த சேதம் நிறைவேறிவிட்டது - ஏற்கனவே வகுப்புவாத பதட்டங்களின் விளிம்பில் இருந்த கிராமத்தில் வன்முறையும் பரவியது. செப்டம்பர் 9 ஆம் தேதி பூசேசாவலியில் உள்ளூர் முஸ்லிம்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் பலனளிக்கவில்லை.
செப்டம்பர் 10 அன்று பொழுது சாய்ந்த பின் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீவிர வலதுசாரி இந்து கும்பல் கிராமத்திற்குள் வந்து, முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகள், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்து சேதப்படுத்தியது. முஸ்லீம் சமூக உறுப்பினர்கள், 29 குடும்பங்கள் குறி வைக்கப்பட்டு, மொத்தமாக ரூ. 30 லட்சம் நஷ்டம் அடைந்ததாக மதிப்பிட்டுள்ளனர். இந்த வன்முறையால், சில நிமிடங்களில், அவர்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதும் சாம்பலாகியது.
பூசேசாவலியில் இ-சேவை மையத்தை (பொது வழக்குரைஞரின் அனைத்து நீதிமன்றத் தேவைகளுக்கும் உதவும் மையம்) இயக்கும், 43 வயதான அஷ்ஃபாக் பக்வான், தனது தொலைபேசியை எடுத்து, நிருபரிடம், தலை முழுதும் இரத்தத்தோடு தரையில் அமர்ந்திருக்கும் ஒரு பலவீனமான முதியவரின் புகைப்படம் காட்டுகிறார். "அவர்கள் என் ஜன்னலை நோக்கி கல்லெறிந்தபோது, கண்ணாடி உடைந்து என் தந்தையின் தலையில் விழுந்தது," என்று அவர் நினைவு கூர்கிறார். "என்னால் அதை இன்னும் மறக்க முடியவில்லை. வெட்டு மிகவும் ஆழமாக இருந்ததால், எங்களால் வீட்டிலும் சிகிச்சை அளிக்க முடியவில்லை.”
வெறித்தனமான கும்பல், வெளியே இருந்ததால், அஷ்ஃபாக்கால் வெளியேறவும் முடியவில்லை. ஒருவேளை அவர் வெளியேறியிருந்தால், இளம் கணவரும், கிரிக்கெட் ஆர்வலருமான நூருல் ஹசனுக்கு ஏற்பட்ட அதே கதி தான் அஷ்ஃபாக்குக்கும் நிகழ்ந்திருக்கும்.
*****
வேலை முடிந்து அன்று மாலை நூருல் வீடு திரும்பியபோது, பூசெசாவலியில் வன்முறை ஏதும் தொடங்கவில்லை. ஆனால், அன்று முன்னதாக கிரமத்திற்குள் நுழைந்த கும்பலைப் பற்றி அறியாமல், நூருல், குளித்து முடித்து, மாலை தொழுகைக்காக தன் கிராம மசூதிக்குச் செல்ல முடிவு செய்தார். "விருந்தினர்கள் சிலர் வந்திருந்ததால், வீட்டிலேயே தொழுகை நடத்த கேட்டுக் கொண்டேன்" என்று ஆயிஷா நினைவு கூர்கிறார். "ஆனால் அவர் விரைவில் திரும்பி வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்."
ஒரு மணி நேரம் கழித்து, நூருல் மசூதியில் இருந்து ஆயிஷாவை அழைத்து, வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறியுள்ளார். அதுவரை நூருல் குறித்து பயந்திருந்த ஆயிஷா, அவர் மசூதிக்குள் இருப்பதை அறிந்ததும், நிம்மதியாக இருந்திருக்கிறார். "அந்த கும்பல் வழிபாட்டுத் தலத்தைத் தாக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். "நிலைமை கைகளை மீறிப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மசூதிக்குள் பாதுகாப்பாக இருப்பார் என்று நினைத்தேன்.”
ஆனால் அவர் நினைத்தது தவறு.
முஸ்லீம்களுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி எரித்த பிறகு, உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த மசூதியை அந்த கும்பல் சூழ்ந்தது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் எரிக்கப்பட்டன, மற்றவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். மசூதியின் கதவின் மீது விழுந்த ஒவ்வொரு அடிக்கும் தாழ்ப்பாள் சற்று தளர்ந்து, இறுதியில், தாழ்ப்பாள் உடைந்து கதவுகள் திறந்தன.
சில நிமிடங்களுக்கு முன்பு வரை அமைதியாக மாலை தொழுகையை நடத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களை, அந்த வெறித்தனமான கும்பல், கட்டைகள், செங்கற்கள் மற்றும் ஓடுகளினால் கொடூரமாக தாக்கியது. அவர்களில் ஒருவர், ஒரு ஓட்டை நூருலின் தலையில் உடைத்தார், அதன் பிறகு அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். "அவரது சடலத்தைப் பார்க்கும் வரை நான் நம்பவே இல்லை" என்று ஆயிஷா கூறுகிறார்.
“நூருல் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களில் சிலர் அவரை பாய் [சகோதரர்] என்று தான் அழைப்பார்கள். அவரை அடித்துக் கொன்றபோது அது அவர்களுக்கு ஏன் நினைவிற்கு வரவில்லை என்பது எனக்கு இன்றும் ஆச்சரியமாக உள்ளது,” என்று வருந்தும் மனைவி மேலும் கூறுகிறார்.
பல நாட்களாக, பூசேசாவலியில் உள்ள முஸ்லிம்கள், இது போன்ற ஒரு தாக்குதலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். விரைவில் இத்தகைய வன்முறை வெடிக்கும் என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாத ஒரே ஆட்கள், சதாரா காவல்துறையினர் மட்டுமே.
*****
மசூதியின் மீதான கொடூரமான தாக்குதல் நடந்து ஐந்து மாதங்கள் ஆன பின்பும், பூசேசாவலியில் பிரிவினை மறைந்தபாடில்லை: இந்துக்களும் முஸ்லீம்களும் பிரிந்திருப்பதோடு, ஒருவரையொருவர் சந்தேகிக்கின்றனர். ஒரு காலத்தில், ஒன்றாக ஒருவருக்கொருவர் வீட்டில் உணவருந்திய மக்கள், இப்போது வன்மத்துடன் பழகுகின்றனர். இந்துக் கடவுள்களுக்கு எதிராக இழிவான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பூசேசாவலியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் சிறுவர்கள் உயிருக்கு பயந்து கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்; அவர்கள் இப்போது உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் வாழ்கின்றனர்.
"இந்தியாவில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நீங்கள் நிரபராதி தான்" என்று 23 வயதான முஸம்மில் பக்வான் கூறுகிறார். அவர் நிருபரிடம் தனது இருப்பிடத்தை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார். "ஆனால் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை நீங்கள் குற்றவாளி தான்."
செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு, முஸம்மில், குடும்ப நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பூசேசாவலிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், உணவருந்த சென்றிருக்கிறார். உணவுக்காக காத்திருந்தபோது, அவரது காண்டாக்ட் லிஸ்டில் உள்ள இந்து நண்பர்கள் சிலர் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருப்பதை கண்டார்.
அதை பார்க்க முஸம்மில் கிளிக் செய்தபோது; அவர் கண்டதை அவராலேயே நம்பமுடியவில்லை. அவர்கள் அனைவரும் முஸம்மிலைக் கண்டித்தும், அவரது தவறான கருத்துப் பதிவை கொண்ட ஸ்கிரீன் ஷாட்டை பதிவேற்றியிருந்தனர். "இது போன்ற ஒன்றை பதிவிடுவதன் மூலம் நானாக ஏன் சிக்கலை வரவேற்க வேண்டும்?" என்று அவர் கேட்கிறார். "இது நிச்சயமாக, வன்முறையைத் தூண்டுவதற்கு பதிவுசெய்யப்பட்ட ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம்."
முஸம்மில் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தை அணுகி தனது போனை ஒப்படைத்தார். "அதை முழுமையாக சரிபார்க்க நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
இன்ஸ்டாகிராம் வைத்திருக்கும் நிறுவனமான மெட்டாவிடமிருந்து பதிலுக்காகக் காத்திருப்பதால், காவல்துறையினரால் கருத்துப்பதிவின் உண்மைத்தன்மையைக் கண்டறிய முடியவில்லை. தேவையான விவரங்கள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன, அவர்களின் சேவையகத்தைப் பார்த்து அவர்கள் தான் இனி பதில் அளிக்க வேண்டும், என்று சதாரா காவல்துறை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் எம்பவர்மென்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர் ஒசாமா மன்சர் கூறுகையில், "மெட்டா பதிலளிக்க இவ்வளவு நேரம் எடுப்பதில் ஆச்சரியமில்லை. "இது அவர்களுக்கு முக்கியமானது அல்ல, காவல்துறையும் அதைத் தீர்க்க ஆர்வம் காட்டவில்லை. இந்த செயல்முறையே பெரிய தண்டனை தான்.
தான் நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை கிராமத்திற்கு திரும்ப மாட்டேன் என்று முஸம்மில் கூறுகிறார். தற்போது அவர் மேற்கு மகாராஷ்டிராவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் ரூ.2,500 வாடகைக்கு தங்கியுள்ளார். அவர் தனது பெற்றோரை 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திக்கிறார், ஆனால் அதிகம் பேச முடிவதில்லை. "நான் அவர்களை சந்திக்கும் போதெல்லாம், என் பெற்றோர் அழுது விடுகிறார்கள்," என்று முஸம்மில் கூறுகிறார். "அவர்களுக்காக, நான் தைரியமாக இருப்பதைப் போல் முகத்தை வைத்திருக்க வேண்டும்."
முஸம்மில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு கிடைக்கும் ரூ.8,000 சம்பளத்தில், வாடகை மற்றும் செலவுகளை சமாளிக்கிறார். பூசேசாவலியில் இருந்த போது, சொந்தமாக ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வந்தார். "அது ஒரு வாடகைக் கடை" என்று முஸம்மில் கூறுகிறார். “அதன் உரிமையாளர் இந்து என்பதால், இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் என்னை வெளியேற்றிவிட்டார், நான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட பிறகுதான் மீண்டும் அங்கு வர முடியும் என்றார். அதனால் என் பெற்றோர்கள் இப்போது அன்றாட செலவுகளுக்காக காய்கறிகளை விற்று சம்பாதிக்கின்றனர். ஆனால் கிராமத்தில் உள்ள இந்துக்கள் யாரும் அவர்களிடமிருந்து காய்கறி வாங்க மறுக்கிறார்கள்.”
இந்த பிரிவினைக்கு சிறு குழந்தைகள் கூட விதிவிலக்கல்ல.
ஒரு நாள் மாலை, அஷ்ஃபாக் பக்வானின் ஒன்பது வயது மகன் உஸர், மற்ற குழந்தைகள் அவனுடன் விளையாட மறுத்ததால், பள்ளியிலிருந்து மனமுடைந்து வீட்டிற்கு வந்தான். "குறித்தோல் அகற்றும் விருத்தசேதனத்தைக் குறிக்கும், முஸ்லீம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இழிவான வார்த்தையான 'லந்தியா' என குறிப்பிட்டு, அவனது வகுப்பில் உள்ள இந்துக் குழந்தைகள் அவனைச் விளையாட்டில் சேர்க்க மறுத்துவிட்டனர். “நான் குழந்தைகளைக் குறை கூறவில்லை. வீட்டில் கேட்பதை தானே அவர்களும் கூறுவார்கள். ஆனால், எங்கள் கிராமத்தில் இதுபோன்ற சூழல் இதற்கு முன் இருந்ததில்லை.”
ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும், பூசேசாவலி ஒரு பாராயண அமர்வை நடத்துகிறது, அதில் இந்துக்கள் எட்டு நாட்கள் முழுவதும் வேதங்களை ஓதி, மந்திரம் பாடுவார்கள். சமீபத்திய அமர்வு ஆகஸ்ட் 8 அன்று நடந்தது. அதாவது சரியாக கிராமத்தில் வன்முறை வெடிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நிகழ்ந்தது. நிகழ்வின் முதல் நாள் அன்று, உள்ளூர் முஸ்லிம்கள் முதல் உணவை வழங்கினர். 1,200 இந்துக்களுக்காக 150 லிட்டர் ஷீர் குர்மா (சேமியா இனிப்பு உணவு) தயாரிக்கப்பட்டது.
“நாங்கள் அதற்காக ரூ.80,000 செலவு செய்தோம்,” என்கிறார் சிராஜ். "ஒட்டுமொத்த சமூகமும் இதற்காக வழங்கியது, அது தான் எங்கள் கலாச்சாரம். ஒரு வேளை, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி எங்கள் மசூதிக்கு ஒரு இரும்புக் கதவு அமைத்திருந்தால், இன்று எங்களில் ஒருவர் உயிருடன் இருந்திருப்பார்.”
*****
இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் திரு. தேவ்கரின் கூற்றுப்படி, செப்டம்பர் 10 அன்று நடந்த வன்முறைக்காக 63 பேர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 34 பேர் தலைமறைவாக உள்ளனர், 59 பேர் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் ராகுல் கதம் மற்றும் நிதின் வீர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்று அவர் கூறுகிறார். "அவர்கள் இருவரும் இந்து ஏக்தாவுடன் வேலை செய்கிறார்கள்."
மேற்கு மகாராஷ்டிராவில் செயல்படும் தீவிர வலதுசாரி அமைப்பான ஹிந்து ஏக்தாவின் உயர்மட்ட தலைவர் விக்ரம் பவாஸ்கர், மகாராஷ்டிர மாநில பாஜகவின் துணைத் தலைவர் ஆவார். அவர் தனது சமூக ஊடகப் பக்கங்களில், பிரதமர் நரேந்திர மோடியுடனான புகைப்படங்களை வைத்துள்ளார், மேலும் அவர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
மூத்த இந்துத்துவா தலைவரான விநாயக் பவாஸ்கரின் மகன், விக்ரம், வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மூலம் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் வரலாற்றைக் கொண்டவர். ஏப்ரல் 2023 இல், சதாராவில் "சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியை" இடிக்கும் போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
ஜூன் 2023 இல், இஸ்லாம்பூரில் நடந்த ஒரு பேரணியில், திருமணத்தின் மூலம், இந்திய மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் வளர்ச்சி மற்றும் அதன்மூலம் இந்தியாவை ஆதிக்கம் செய்வதை உறுதி செய்ய, இஸ்லாத்திற்கு மாற்றும் நோக்கத்தில் முஸ்லீம் ஆண்கள் இந்துப் பெண்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் என்ற இந்து வலதுசாரிகளின், நிரூபிக்கப்படாத சதிக் கோட்பாடான 'லவ் ஜிஹாத்'க்கு எதிராகப் போராட "இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்" என்று பவாஸ்கர் அழைப்பு விடுத்தார். "எங்கள் மகள்கள், எங்கள் சகோதரிகள் கடத்தப்பட்டு, 'லவ்-ஜிஹாத்'திற்காக வேட்டையாடப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார். “ஜிஹாதிகள் இந்து மத பெண்களையும், செல்வத்தையும் அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் அனைவரும் அவர்களுக்கு சரியான பதிலை வழங்க வேண்டும். இந்தியாவை இந்து நாடாக ஆக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, முஸ்லிம்களின் பொருளாதாரப் புறக்கணிப்பை அவர் மேலும் ஆமோதித்தார்.
வன்முறையை நேரில் பார்த்த ஒருவரின் கூற்றுப்படி, பவாஸ்கர் பூசேசாவலியில் தாக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். கிராமத்தைத் தாக்கிய இந்துத்துவா கும்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட அந்நியர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் 27 பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் சிலர் பவாஸ்கர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். கிராமத்தில் உள்ள மசூதிக்குள் புகுந்த கும்பலில் ஒருவர், “இன்றிரவு எந்த லந்தியாவையும் உயிருடன் விடக்கூடாது. விக்ரம் பவாஸ்கர் நம்மை பாதுபாப்பார். யாருக்கும் இரக்கம் காட்டாதே” எனக் கூறியதாகக் கூறுகிறார்.
இருந்த போதிலும், போலீசார் அவரைக் கைது செய்யவில்லை. சதாராவின் காவல் கண்காணிப்பாளர் சமீர் ஷேக், நிருபரிடம் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். "தேவையான விவரங்கள் பொது களத்தில் உள்ளன," என்று கூறிவிட்டு, விசாரணை மற்றும் பவாஸ்கரின் பங்கு பற்றிய கூடுதல் கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.
2024 ஜனவரி கடைசி வாரத்தில், பவாஸ்கருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததற்காக, சதாரா காவல்துறையை, பம்பாய் உயர்நீதிமன்றம் தண்டித்தது.
*****
சதாரா காவல்துறையின் வெட்கக்கேடான பதில், தனக்கு இதற்கான நீதி கிடைக்குமா, நூருலின் கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்களா, தலைமறைவானோர் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்படுவார்களா என்று ஆயிஷா சந்தேகிக்கிறார். துக்கத்தில் இருக்கும் மனைவியாக இருந்தாலும், தான் ஒரு வக்கீல் என்பதால், இவ்வழக்கில் உண்மை மறைக்கப்படுவதை, அவர் உணர்கிறார்.
"குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்து, கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்," என்று அவர் கூறுகிறார். "அதை ஜீரணிக்க முடியவில்லை."
பாதுகாப்பாக உணராததாலும், கணவனின் இன்மையை அதிகம் நினைவு படுத்துவதாலும், பூசேசாவலியை விட்டு, ராஜாச்சே குர்லேயில் தனது பெற்றோருடன் அதிக நேரம் செலவிட அவர் முடிவு செய்துள்ளார். "வெறும் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால், இரண்டு கிராமங்களுக்கும் என்னால் விரைவாக போய் வர முடியும்" என்று ஆயிஷா கூறுகிறார். "ஆனால் தற்போது, என் வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது தான் எனது முன்னுரிமை."
அவர் தனது சட்டப் பயிற்சியை மீண்டும் தொடங்க நினைத்தார், ஆனால் கிராமத்தில் இதனால் வருமானம் அதிகம் இருக்காது என்பதால் தற்போதைக்கு கைவிட்டு விட்டார். "நான் சதாரா நகரம் அல்லது புனேவுக்குச் சென்றால் அது எனக்கு உதவலாம்" என்று ஆயிஷா கூறுகிறார். “ஆனால் என் பெற்றோருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால், நான் அவர்களை விட்டு செல்ல முடியாது. அவர்களை நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.”
ஆயிஷாவின் தாயார், 50 வயதான, ஷாமாவிற்கு உயர் இரத்த சர்க்கரையும், 70 வயதான தந்தை ஹனிஃப்புக்கு, அவரது மகளுக்கு ஏற்பட்ட நிலைமை காரணமான மனஅழுத்தத்தால், டிசம்பர் 2023 இல் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. "எனக்கு உடன்பிறப்புகள் யாரும் இல்லை, ஆனால் நூருல் அவருக்கு ஒரு மகனைப் போல இருந்ததால், அவர் மரணித்ததிலிருந்து, என் தந்தை தானாகவே இல்லை.” என்று ஆயிஷா கூறுகிறார்.
ஆயிஷா தனது பெற்றோருடன் தங்கி அவர்களைக் கவனித்துக் கொள்ள விரும்பினாலும், அவள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய இருக்கிறது. அவளுடைய வாழ்க்கையின் அர்த்தத்தையும், நோக்கத்தையும் தரும் ஒரு விஷயம்: அவளின் மறைந்த கணவனின் கனவுகளை நிறைவேற்றுவதாகும்.
சம்பவத்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, நூருலும் ஆயிஷாவும், அஷ்னூர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், தங்கள் சொந்த கட்டுமான நிறுவனத்தை உருவாக்கினர். அவர் வேலையைக் கொண்டு வரவும், ஆயிஷா வேலை குறித்த சட்டப்பூர்வ தேவைகளை கவனித்துக்கொள்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.
இப்போது அவர் மரணித்துவிட்டாலும், ஆயிஷா நிறுவனத்தை மூட விரும்பவில்லை. "எனக்கு கட்டுமானத்தைப் பற்றி அதிகம் தெரியாது," என்று அவர் கூறுகிறார். "ஆனால் நான் கற்றுக்கொண்டு நிறுவனத்தை முன்னெடுத்து செல்வேன். நிதி ரீதியாக தற்போது சிரமப்பட்டாலும், எப்படியாவது நிதி திரட்டி அதைச் செயல்படுத்துவேன்.
நூருலின் இரண்டாவது ஆசை கொஞ்சம் சிக்கலானது.
நூருல் தனது குழந்தை கிரிக்கெட் பயிற்சி பெற வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். அதுவும் குறிப்பாக விராட் கோலி பயிற்சி பெற்ற விளையாட்டு அகாடமியில் பயிற்சி பெற வேண்டும் என விரும்பினார். நூருலின் கனவை நனவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிஷா, "நான் நிறைவேற்றுவேன்," என்று உறுதியாக சொல்கிறார்.
தமிழில் : அஹமத் ஷ்யாம்