“இங்கு ஒரு பெரிய சகுவா மரம் இருந்தது. ஹிஜிலா கிராமத்தை சேர்ந்தவர்களும் சுற்றி இருப்பவர்களும் இங்கு சந்தித்து கூட்டம் போடுவார்கள். அந்த தினசரிக் கூட்டங்களை கண்டதும், மரத்தை வெட்டுவதென பிரிட்டிஷார் முடிவெடுத்தனர். பெரும் ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டது. மரத்தின் தண்டு, கல்லாக மாற்றப்பட்டது.”
ஜார்கண்டின் தும்கா மாவட்டத்தில் மரம் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு நூறாண்டுகள் கடந்த கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார் ராஜேந்திர பாஸ்கி. “மரத்தின் தண்டு, மராங் புரு தெய்வத்தை வணங்குவதற்கான புனித இடமாக தற்போது மாறியிருக்கிறது,” என்கிறார் 30 வயதாகும் அவர். சந்தால் பழங்குடிகள் ஜார்கண்ட், பிகார் மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.” விவசாயியான பாஸ்கிதான் மராங் புருவின் தற்போதைய பூசாரி.
ஹிஜிலா கிராமம், சந்தால் பர்கனா பிரிவில், தும்கா டவுனுக்கு வெளியே அமைந்திருக்கிறது. 2011 கணக்கெடுப்பின்படி 640 பேர் வசிக்கின்றனர். ஜுன் 30, 1855 அன்று, பாக்நதி கிராமத்தின் (போக்நதி என்றும் சொல்லப்படுகிறது) சிதோ மற்றும் கன்னு முர்மு ஆகியோரின் தலைமையில் பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு எதிராக சந்தா ஹல் எழுச்சி நடந்தது.
ராஜ்மஹல் மலைத்தொடரின் நீட்சியான ஹிஜிலா மலையை சுற்றி ஹிஜிலா கிராமம் அமைந்திருக்கிறது. எனவே கிராமத்தின் எந்த புள்ளியிலிருந்து நீங்கள் நடக்கத் தொடங்கினாலும், ஒரு வட்டமடித்து மீண்டும் அந்த புள்ளிக்கு திரும்பி வருவீர்கள்.
“எங்களின் முன்னோர்கள், அந்த மரத்தடியில்தான் முழு வருடத்துக்கான விதிகளை வகுப்பார்கள்,” என்கிறார் 2008ம் ஆண்டிலிருந்து ஊர்த் தலைவராக இருக்கும் 50 வயது சுனிலால் ஹன்ஸ்தா. மரத்தண்டு இருக்கும் பகுதி, இன்னுமே கூட்டங்களுக்கு பிரபலமான பகுதியாகதான் இருப்பதாக ஹன்ஸ்தா கூறுகிறார்.
ஹிஜிலாவில் ஹன்ஸ்தாவுக்கு 12 பிகா நிலம் இருக்கிறது. சம்பா பருவத்தில் அதில் விவசாயம் செய்கிறார். மிச்ச மாதங்களில் அவர் தும்கா டவுனிலுள்ள கட்டுமான தளங்களில் தினக்கூலியாக பணிபுரிகிறார். வேலை கிடைக்கும் நாட்களில் நாளொன்றுக்கு 300 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஹிஜிலாவிலுள்ள 132 குடும்பங்களும் வாழ்வாதாரமாக விவசாயத்தையும் தினக்கூலி வேலையையும்தான் சார்ந்திருக்கின்றனர். மழை பெய்வதன் நிச்சயமற்ற தன்மை கடந்த சில வருடங்களில் அதிகரித்து, பலரையும் புலம்பெயர வைத்திருக்கிறது.
மராங் புருவுக்கென ஒரு முக்கியமான கண்காட்சியும் ஹிஜிலாவில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாத பசந்த் பஞ்சமியில் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வு, மயூராஷி ஆற்றங்கரையில் நடத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் அரசாங்க அறிவிக்கை யின்படி, 1890ம் ஆண்டில் அப்போதைய சந்தால் பர்கானாவின் துணை ஆணையராக இருந்த ஆர்.கஸ்டேர்ஸின் தலைமையில் இந்த கண்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
கோவிட் தொற்று பீடித்த இரு ஆண்டுகளை தவிர்த்து ஹிஜிலா கண்காட்சி எல்லா வருடங்களும் நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறுகிறார் தும்காவின் சிதோ கன்னு முர்மு பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர் ஷர்மிலா சோரென். பாலா (வேல்) தொடங்கி தல்வார் (கத்தி), மேளம், மூங்கில் கூடை வரை பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் விற்பனைக்கு இடம்பெறுகின்றன. நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் புலம்பெயர்வதால், “இந்த கண்காட்சியில் பழங்குடி பண்பாடு முன்பைப் போல இடம்பெறுவதில்லை,” என்கிறார் மராங் புருவின் 60 வயது பூசாரியான சீதாராம் சோரென். மேலும் அவர், “எங்களின் பண்பாடுக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. பிற (நகர்ப்புற) செல்வாக்கு அதிகமாகி வருகிறது,” என்கிறார்.
தமிழில் : ராஜசங்கீதன்