“அசமத்துவத்தில் என்ன தப்பு இருக்கிறது?” குழப்பத்திலிருக்கும் மாணவர் ஒருவர் பெங்களூரு தனியார் பள்ளி ஒன்றில் பாரி நிகழ்ச்சி நடத்தியபோது எங்களிடம் கேட்டார்.
“கடைக்காரர் சிறிய கடை ஒன்றை வைத்துள்ளார். அம்பானிக்கு பெரிய வணிகம் இருக்கிறது. அவரவரின் உழைப்புக்கேற்ப அவரவருக்கு விளைவு கிடைக்கிறது. கடுமையாக உழைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்,” என்கிறார் அவர் தன் வாதத்தில் நம்பிக்கை கொண்டு.
கல்வி, சுகாதாரம், நீதி ஆகியவற்றை பெறுவதிலுள்ள அசமத்துவம் குறித்த ஒரு பாரி கட்டுரையை கொண்டு ‘வெற்றி’ என்பது என்னவென்பதை விளக்கி விட முடியும். விவசாய நிலங்களிலும் காடுகளிலும் நகரங்களின் விளிம்புகளிலும் வசிக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைகளை வகுப்பறைகளில் பகிர்ந்து கொண்டோம்.
எங்களின் கல்விப்பணியில் பாரியின் இதழியலாளர்கள் வகுப்பறைகளுக்கு சென்று நம் காலத்தின் பிரச்சினைகளை இளையோருடன் உரையாடுவார்கள். கிராமப்புற இந்தியாவிலும் நகரங்களிலுமுள்ள பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வெவ்வேறு யதார்த்தங்களை எங்களின் கட்டுரைகள், புகைப்படங்கள், திரைப்படங்கள், இசை மற்றும் கலை அடங்கிய பெட்டகத்தின் வழியாக காட்டுகிறோம்.
“நாம் அவர்களை (தங்களை விட சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்) வெறும் புள்ளிவிவரங்களாகத்தான் அணுகுகிறோம். நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஒரு முழுமையான சக மனிதராக அல்ல,” என சென்னை மேல்நிலை பள்ளி மாணவரான அர்னவ் போன்றோர் சொல்கின்றனர்.
சமூகப்பிரச்சினைகள் நுட்பமானவை. ஆனால் அவற்றை வெளிப்படுத்த ஒரு கட்டுரையாலேயே முடியும். 2,000 மணிநேரங்கள் வெட்டப்படும் கரும்புகள் என்கிற கட்டுரை, மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலிருந்து விவசாயிகள் கிளம்பி கரும்பு வயல்களில் வேலை தேடி செல்வதை பற்றியது. அவர்கள் நாளொன்றில் 14 மணி நேரங்களுக்கு தொடர்ந்து கரும்பு வெட்டுகின்றனர். கட்டுரையில் தனித் தகவல்கள் இருக்கின்றன. வேலைக்கான அவர்களின் தேவையை சுட்டும் சக்தி வாய்ந்த படங்களும் இருக்கின்றன. மராத்வடாவிலிருந்து 6 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வருடந்தோறும் கரும்புகளை வெட்ட செல்வதை அக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
மோசமான கொள்கைகள், அதிகரிக்கும் இடுபொருட்செலவு, காலநிலை மாற்றத்தின் நிச்சயமின்மை போன்ற பல காரணிகளால் தீவிரமடைந்து வரும் விவசாய நெருக்கடி பற்றிய பெருங்கதையை கரும்புத் தொழிலாளர்கள் சொல்கின்றனர். இக்குடும்பங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். விளைவாக அவர்கள் பல நாட்களுக்கு பள்ளி செல்ல முடியாமல் போகிறது. எதிர்காலம் நிச்சயமின்மை கொண்டு, பெற்றோரின் வாழ்க்கைகளையே தேர்ந்தெடுக்கும் நிலை அவர்களுக்கு உருவாகிறது.
‘வறுமைச் சக்கரம்’ பற்றிய நிஜ வாழ்க்கை உதாரணமாக வகுப்பறையில் குழந்தைகளே குழந்தைகளிடம் பேசுவார்கள்.
பொருளாதார வெற்றி என்பது உழைப்பாலும் திறனாலும் அடைவது என சொல்லப்படும் வழக்கமான மூட நம்பிக்கை போவதற்கு இத்தகைய கட்டுரைகள் உதவும்.
வகுப்பறையில் இப்போது ‘வெற்றி’ என்பதை மறுக்கும் வகையில் ஒரு குழந்தை சொல்கிறார், “ரிக்ஷா ஓட்டுபவர் கூடதான் கடுமையாக உழைக்கிறார்,” என.
எங்களின் கட்டுரைகள், தனித்தகவல்கள், உறுதி செய்யப்பட்ட தகவல்கள் போன்றவற்றால் சமூகத்தின்பாற்பட்ட ஆய்வு சிந்தனையை வழங்குவது மட்டுமல்ல எங்களின் நோக்கம். சமூகத்திலுள்ளவர்கள் கரிசனம் கொண்டு, தங்களுக்கு வசதியான சூழல்களிலிருந்து வெளியேறி உண்மையை நோக்கி செல்ல வேண்டுமென்பதே நோக்கம். “எங்களை தாண்டிய வாழ்க்கைகளை காணும் வகையில் எங்களை நீங்கள் உந்தித் தள்ளியிருக்கிறீர்கள்,” என டெல்லியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் எங்களிடம் சொன்னார்.
நாங்கள் விட்டுச் செல்லும் இடத்திலிருந்து தொடரும் வகையில் ஆசிரியர்களுடனும் நாங்கள் இயங்குகிறோம். அவர்கள் தங்களுக்கான பாடங்களுக்காக பாரியில் (உதாரணத்துக்கு) அனல் மற்றும் பசுமை ஆற்றலை பற்றி தேடி, வாழ்க்கைகளையும் பண்பாடுகளையும் உள்ளது உள்ளபடி காட்டும் சிறு காணொளிகளை காட்டுவார்கள். கற்பிப்பதற்கான தரவுகளாக பயன்படுத்தக் கூடிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை பார்த்து மொழி ஆசிரியர்கள் ஆச்சரியமும் ஆர்வமும் கொள்கிறார்கள்: “இக்கட்டுரையின் பஞ்சாபி மொழிபெயர்ப்பு இருக்கிறதா?” எனக் கேட்பார்கள். எங்களிடமும் இருக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல, 14 மொழிகளில் இருக்கும். பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு, பாரி அளிக்கும் பிற தரவுகளுடன் அக்கட்டுரைகளும் இலவசமாக கிடைக்கும் நூலகம் ஆகும்.
*****
2023ம் ஆண்டில் உலக பத்திரிகை சுதந்திர பட்டியலில் இந்தியா 161ம் இடத்துக்கு சரிந்தது. உலக ஊடக கண்காணிப்பு நிறுவனமான, எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) வெளியிட்ட அறிக்கையின் 180 நாடுகள் பட்டியல் அது.
மிக முக்கியமான ‘ஜனநாயகத்தன்மையற்ற’ இச்செய்தியை, சமூக ஊடகத்தின் போலிச்செய்திகளால் தொடர்ந்து நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு எப்படி கொண்டு சென்று சேர்ப்பது?
பல்கலைக்கழகங்களில் கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வகுப்பறைகளில் வாய்ப்பே இல்லை.
பாரியில் எங்களின் கட்டுரைகளின் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பல மொழிகளின் வலிமையைக் கொண்டு, அதிகாரத்திலுள்ளவர்களின் உண்மையை நல்ல இதழியலால் எப்படி தோலுரித்துக் காட்ட முடியும் என்பதைக் காட்டுகிறோம். உண்மையை வெளிக்கொணர்பவர்களுக்கு அதிகாரத்தையும் அளிக்கிறோம்.
நாட்டுப்புறக் கலைஞர்கள், தபால்காரர், உள்ளூர் இயற்கை பாதுகாவலர்கள், ரப்பர் சேகரிப்பவர்கள், கரி சேகரிக்கும் பெண்கள், திறன் படைத்த கலைஞர்கள் போன்றவர்களை பற்றிய கட்டுரைகள், பாடப்புத்தகங்களை தாண்டி கவனிக்கவும் கற்கவும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அறிவுசார் அமைப்புகள் பற்றிய கருத்துகளை கேள்வி கேட்க வைக்கிறது.
எல்லா விஷயங்களையும் தெரிந்தவர்கள் என நாம் சொல்லிக் கொள்வதில்லை. அரசதிகாரத்தை கேள்வி கேட்கவும் ஊடகத்தில் நிலவும் கற்பிதங்களையும் பாகுபாடுகளையும் ஒழிக்கவும் சாதி மற்றும் வர்க்க சலுகைகளை கேள்வி கேட்கவும் உவப்பான சூழலை வகுப்பறையிலிருக்கும் மாணவர்கள் உருவாக்க ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம். அந்த வகையில் அவர்கள் வாழும் சமூகத்தை பற்றி அவர்கள் கற்றுக் கொள்ளவும் முடியும்.
சில நேரங்களில் பணியாளர்கள் எங்களை ஒதுக்குவார்கள். சாதிய பிரச்சினைகளை பற்றி வகுப்பறைகளில் பேசுவதில் தயக்கம் இருக்கிறது.
ஆனால் இக்கட்டுரைகள் பற்றி வகுப்பறைகளில் பேசாமலிருப்பது, எதிர்கால குடிமக்களுக்கு சாதிய ஒடுக்குமுறையின் கொடூர யதார்த்தத்தை தெரியாமல் ஆக்கும் நிலையை உருவாக்குகிறது.
எங்களின் ’அந்தக் குழிக்குள் யாருக்கும் உயிர் போகக்கூடாது’ கட்டுரை, நாட்டின் தலைநகரத்திலுள்ள வசந்த் குஞ்ச் பேரங்காடியின் மலக்குழியில் இறந்த ஒரு ஊழியரை பற்றி மாணவர்களிடம் பேசியது. அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சட்டவிரோதமான இத்தகைய உயிர் பறிக்கும் வேலை இருப்பது மட்டுமின்றி, அச்சம்பவம் அவர்களுக்கு மிக சமீபமாக நடந்திருப்பதும் அதிர்ச்சியை தந்திருந்தது. பள்ளியிலிருந்து அந்த பேரங்காடி, சில கிலோமீட்டர் தூரம்தான்.
நம் வகுப்பறைகளில் இத்தகைய பிரச்சினைகளை மறைப்பதாலும் தவிர்ப்பதாலும் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்கிற போலி பிம்பத்தையே உருவாக்குகிறோம்.
இக்கட்டுரைகளை காட்டியதும் மாணவர்கள், எப்படி உதவுவது என்று உடனடியாக எப்போதும் கேட்பார்கள்.
களச் செய்தியாளராகவும் இதழியலாளர்களாகவும் உடனடி தீர்வுகளை வழங்க விரும்பும் அவர்களின் ஆர்வத்தை நாங்கள் ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அவர்களை சுற்றியிருக்கும் வாழ்க்கை சிக்கல்களுக்கு உடனடி தீர்வுகளை நாடாமல் அலசி ஆராயும் தன்மையை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்கிறது.
வெறும் வார்த்தையை மட்டும் மாணவர்கள் கேட்டிருக்க நாங்கள் செய்வதில்லை. மாணவர் பருவத்திலேயே வெளியே சென்று அவர்கள் பார்க்கும் விஷயங்களை ஆவணப்படுத்த ஊக்குவிக்கிறோம். 2018ம் ஆண்டில் உருவானதிலிருந்து பாரி கல்வி, 200 நிறுவனங்களோடும் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் இணைந்து இயங்கி வருகிறது. இந்தியா முழுவதிலிருந்தும் வரும் கட்டுரைகளை பிரசுரிக்கிறோம். அப்பணியை செய்வதன் வழியாக முதுகலை மாணவர்களும் மேல்நிலை பள்ளி மாணவர்களும் கற்கின்றனர். அவர்களின் பணியை பாரி யில் நீங்கள் வாசிக்கலாம்.
தங்களை பற்றி வலைப்பூ எழுதுவதற்கு பதிலாக பிறரின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தி, அவர்களின் குரல்களை உரக்கச் செய்து, அவர்களின் வாழ்க்கைகளிலிருந்து கற்கும் வழியை அவர்களிடம் நாங்கள் உருவாக்குகிறோம்.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக முதுகலை மாணவரான திப்ஷிக்ஷா சிங், பிகார் திருமணங்களில் நடனமாடும் பெண்கள் சந்திக்கும் துயரங்களை பற்றி எழுதினார். கவர்ச்சியான பாலிவுட் பாடல்களை கொண்ட நிகழ்ச்சிகள் அவை. “ஆண்கள் எங்களின் இடுப்புகளில் கை வைப்பார்கள் அல்லது மேல்சட்டைக்குள் கை விடுவார்கள். இங்கு அவை வழக்கம்,” என்கிறார் சமூகப் பொருளாதார ரீதியிலான அச்சுறுத்தலை குறிப்பிட்டு பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண் நடனக் கலைஞர் .
தற்போது சமூகப்பிரிவில் பணியாற்றும் திப்ஷிக்ஷாவுக்கு, நடனக்கலைஞர்களை சந்தித்து, விசாரித்து உரையாடியது கற்றல் அனுபவமாக இருந்தது: “இந்த (ஆவணப்படுத்தும்) அனுபவம் என்னுடைய எழுத்துப் பயணத்தில் முக்கியமான மைல்கல். முக்கியமான விஷயங்களை கட்டுரைகளாக்கவும் எனக்கு அது ஊக்கம் தருவதாக அமைந்தது… பாரியின் நோக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்,” என அவர் நமக்கு எழுதியிருக்கிறர.
பாரி கல்வி, கிராமப்புற பள்ளிகளுடனும் மாணவர்களுடன் இணைந்து அவர்களின் வீடுகள் மற்றும் மனங்களுக்கு நெருக்கமாக இருக்கும் பிரச்சினைகளை அவர்களின் மொழியில் ஆவணப்படுத்த உதவுகிறது. ஒடிசாவின் ஜுருடியிலுள்ள வாரச்சந்தை பற்றி ஓர் இளையோர் குழு ஆவணப்படுத்தியது. சந்தைக்கு அவர்கள் பலமுறை சென்று, வாங்க வருபவர்களையும் விற்பவர்களையும் பலமுறை நேர்கண்டு செய்தி யளித்தனர்.
அனன்யா டொப்னோ, ரோகித் கக்ராய், ஆகாஷ் எகா மற்றும் பல்லபி லுகுன் ஆகியோர் பாரியிடம் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்: “இத்தகைய (ஆய்வு) பணி செய்வது எங்களுக்கு புதிய விஷயம். காய்கறி விற்பவர்களுடன் மக்கள் பேரம் பேசுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் காய்கறிகளை விளைவிப்பது எவ்வளவு கஷ்டமென எங்களுக்கு தெரியும். ஏன் விவசாயிகளுடன் மக்கள் விலைக்கு பேரம் பேசுகிறார்களென எங்களுக்கு தோன்றும்?”
கிராமங்களுக்கு செல்லாத மாணவர்களும் எழுதுவதற்கு N. சாரம்மாவை போன்றோரின் கதைகள் இருக்கிறது. திருவனந்தபுரத்தில் அனைவருக்குமான சமையலறையை நடத்தும் குப்பை சேகரிப்பாளர் அவர். “யாரும் பசியில் இருக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். ஏனெனில் குழந்தை பருவத்திலிருந்து நான் தீவிரமான வறுமையை பார்த்திருக்கிறேன்,” என சாரம்மா சொல்லியிருக்கிறார்.
இக்கட்டுரையை எழுதிய அய்ஷா ஜாய்ஸுக்கு ஆயிரக்கணக்கான வாசகர்களிடமிருந்து விருப்பக்குறிகளும் உதவி செய்ய விரும்புவதாக பின்னூட்டங்களும் கிடைத்தன. மகளும் ஏன் அவரின் வேலையையே செய்கிறார் என்கிற கேள்விக்கு, “தலித்துக்கு யார் வேலை கொடுப்பார்?” என்கிறார் சாரம்மா. “பிற மக்களுடன் பொருத்தி உங்களை யாரென முதலில் பார்ப்பார்கள். எத்தனை சாமர்த்தியமாக நாம் செயல்பட்டாலும் தப்பிக்க முடியாது,” என அய்ஷாவிடம் அவர் கூறினார்.
நேர்காணல் செய்யும் உத்திகளையும் கற்றுத் தருகிறோம். நேர்காணல் காணுபவர்களிடம் ஒப்புதல் பெறவும் வாசகருக்கு ஈர்ப்பு ஏற்படும் வகையில் குறுக்குவெட்டு தரவுகள் சேகரிக்கவும் பயிற்சி அளிக்கிறோம். முக்கியமாக இவை, தனிப்பட்ட பதிவுகளை போன்ற தோற்றத்தை கொடுக்காமல், கட்டுரைகளாக எழுதும் வகையில் வடிவமைக்கவும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
பல வழிகளிலிருந்து பெறப்பட்ட பலதரப்பட்ட தரவுகளை கொண்ட நீள வடிவத்திலான ஆய்வுச் செய்தியாக இருக்கும்போது, மக்களை பற்றிய எளிய அறிமுகங்களை எழுதும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். இந்த அறிமுகங்கள் சாமனியர்களின் அன்றாட அனுபவங்களையும் அவர்களின் பணியையும் வேலைநேரங்களையும் அவர்கள் பெறும் மகிழ்ச்சியையும் சந்திக்கும் போராட்டங்களையும் தளரா உறுதியையும் பொருளாதாரத்தையும் குழந்தைகளுக்காக அவர்கள் கொண்டிருக்கும் எதிர்காலத் திட்டங்களையும் ஆவணப்படுத்துகின்றன.
நேர்மையான இதழியலாளரின் கண்ணோட்டத்துடன் சரியாக சமூகப் பிரச்சினைகளை கண்டறிந்து அணுக இளையோருக்கு கற்றுக் கொடுப்பதே பாரி கல்வியின் முயற்சியாக இருக்கிறது. மக்கள் மற்றும் அவர்களின் கதைகளில் கவனம் செலுத்துகையில், இதழியலுக்கும் வகுப்பறைகளுக்கும் மாணவர்கள் மனிதாபிமானத்தை கொண்டு வருகின்றனர்.
பாரி உங்களின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பமிருந்தால் [email protected] மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்
இக்கட்டுரையின் முகப்புப் படத்தை எடுத்தவர் பாரியின் புகைப்பட ஆசிரியரான பினாய்ஃபர் பருச்சா
தமிழில் : ராஜசங்கீதன்