“நான் வரையும் பலகைகள் எதுவும் ஒன்று போல இருக்காது,” என்கிறார் அகமதாபாத்தின் பெயர்ப்பலகை ஓவியரான ஷேக் ஜலாலுதீன் கமாருதீன். கத்திரிக்கோல் உற்பத்திக்கு பெயர் பெற்ற கீக்ண்டா பகுதியில் எல்லா பெயர்ப் பலகைகளையும் அவர்தான் வரைந்திருக்கிறார். எல்லா கடைகளும் ஒரே பொருளைத்தான் விற்கின்றன என்றாலும் ஜலாலுதீன் வரைந்த ஒவ்வொரு பெயர் பலகையும் தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் வகையிலேயே வரையப்பட்டிருக்கிறது.
மூத்த ஓவியரின் கைவண்ணம் சுவர்கள், கடைகள் மற்றும் கடை ஷட்டர்கள் என எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. திரைப்படங்களின் பின்னணிகளையும் உருவாக்கி இருக்கிறார். ஒரு பெயர்ப்பலகை ஓவியருக்கு உள்ளூர் மொழிகளின் எழுத்துகளை வரையவும் பூச்சு போடவும் தெரிந்திருக்க வேண்டும். அகமதாபாத்தின் மனேக் சவுக்கின் நகைக்கடையில், குஜராத்தி, இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளை கொண்ட பெயர்ப்பலகை அரை நூற்றாண்டு காலமாக இருக்கிறது.
அந்த பெயர்ப்பலகை தனக்குதான் வந்ததாக கூறுகிறார் ஜலாலுதீன். 71 வயதாகும் அவர், அகமதாபாத்திலேயே மூத்த பெயர்ப்பலகை ஓவியர்களில் ஒருவர் ஆவார். அவரின் கடைக்கு பெயர் ‘ஜேகே பெயிண்டர்’. 50 வருடங்களுக்கு முன்பு பெயர்ப்பலகை வரைய அவர் தொடங்கிய காலத்தில் கிடைத்த அளவுக்கான வேலைகள் தற்போது கிடைப்பதில்லை என்கிறார் அவர்.
7ம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர், குஜராத்தி, ஆங்கிலம், இந்தி, உருது மற்றும் அரபி ஆகிய ஐந்து மொழிகளில் பெயர்ப்பலகைகள் எழுதுவார். பள்ளிப் படிப்பை நிறுத்திய பிறகு, கயிறு தயாரிப்பவராகவும் புத்தக அட்டை போடுபவராகவும் மெக்கானிக்காகவும் பணியாற்றி இருக்கிறார். பிறகுதான் தல்கார்வாட் சந்தையின் ரஹீம் கடையில் ஓவியம் வரைய கற்றுக் கொண்டார்.
எழுபது வயதுகளில் இருந்தாலும் 20 கிலோ ஏணியை ஜலாலுதீன் இன்னும் பெயர்ப்பலகை எழுத அதை தூக்கி செல்ல முடியும். ஆனால் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சுமைகளை தூக்க வேண்டாமென அவரின் மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். “ஏணியில் அதிக நேரம் நின்றால் முழங்கால் வலிக்கிறது<” என்னும் அவர் உடனடியாக, “என் கையும் காலும் இயங்கும் வரை இந்த வேலையை நான் செய்வேன்,” என்கிறார்.
அவர் சமீபத்தில் முந்தாசீர் பிசுவாலா என்கிற வாடிக்கையாளருக்கு ஒரு பெயர்ப்பலகை வரைந்து கொடுத்தார். அகமதாபாத்தின் டீன் டர்வாசா பகுதியில் சமையல் பாத்திரங்கள் கடை வைத்திருக்கிறார் அவர். 3,200 ரூபாய் கொடுத்த அவர், இந்த வேலை பெரும்பாலும் கூட்டுழைப்பை கொண்டது என்கிறார். “நிறத்தையும் பிறவற்றையும் நாங்கள் தேர்ந்தெடுப்போம்.”
பிர் குதுப் மசூதி வளாகத்திலுள்ள வீட்டுக்கு முன்னால் ஜலாலுதீன் கடை வைத்திருக்கிறார். ஒரு வெயில் நாளின் மதிய வேளையில் மதிய உணவு முடித்து சிறு தூக்கம் போட்டுவிட்டு, கடைக்கு அவர் திரும்பி வந்தார். பெயிண்ட் சிந்தப்பட்டிருந்த ஒரு வெள்ளை சட்டை அணிந்திருந்த அவர், ஒரு ஹோட்டலின் ரூம் கட்டணங்களை கொண்ட பெயர்ப்பலகையை வரைய தயாரானார். ஒரு கயிறையும் கைப்பிடி இல்லாத ஒரு ஸ்டீல் நாற்காலியையும் அவர் பயன்படுத்துகிறார். அதில்தான் அவரால் இரு பக்கமும் கைகளை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அவரே தயாரித்த மரச்சட்டகத்தை சரியான உயரத்துக்கு வைத்து, பலகையை அதற்கு மேல் வைக்கிறார். 25 வருடங்களுக்கு முன்பு தயாரித்து அவர் பயன்படுத்தி வந்த பழைய பலகை பயன்படுத்த முடியாத நிலையை எட்டி விட்டது. எனவே உரிமையாளர், அதே போன்றவொரு பலகையை செய்ய பணம் கொடுத்தார்.
மூன்று முறை மேல்பூச்சுகளை பயன்படுத்துகிறேன்,” என்கிறார் அவர் வெள்ளை நிறம் பூசப்பட்ட மரப்பலகையை வைத்து. அவரைப் பொறுத்தவரை, “முடித்தவுடன் சரியான நிறத்தை பலகை கொண்டிருக்கும்,” என்கிறார். ஒவ்வொரு பூச்சும் உலருவதற்கு ஒரு நாள் பிடிக்கும்.
பலகைகள் வரையும் ஓவியர்களின் பாணி பலகைகளில் தெரியும். “அவர்களின் பாணியில், நம் சிற்பங்களும் கோவில்களும் அச்சுகளும் கொண்டிருக்கும் காட்சி மொழி படிமங்கள் தென்படும்,” என்கிறார் அகமதாபாத்தின் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (NID) வரைகலை பேராசிரியர் தருண் தீப் கிர்தெர்.
எழுதவிருக்கும் எழுத்துகளை ஜலாலுதீன் ஒருமுறை பார்க்கிறார். “எழுத்துகள் எந்த அளவு இருக்க வேண்டுமென பார்த்துக் கொள்கிறேன்,” என்கிறார் அவர். “நான் எதையும் வரைவதில்லை. வெறுமனே கோடுகளை வரைந்துவிட்டு, ப்ரஷ்ஷால் எழுதத் தொடங்குவேன்.” பென்சில்களில் அவர் முதலில் எழுதுவதில்லை. கோடுகள் வரைய ஒரு ஸ்கேலை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்.
பழைய அணில் முடி ப்ரஷ்ட்களை பெயிண்ட் பெட்டியிலிருந்து எடுத்து பெருமையுடன் அவர், “எனக்கென நானே ஒரு பெயிண்ட் பெட்டியை உருவாக்கிக் கொண்டேன்,” என்கிறார். தச்சராகவும் வேலை செய்யும் ஜலாலுதீன், இந்த பெட்டியை 1996ம் ஆண்டில் செய்திருக்கிறார். புதிய ப்ளாஸ்டிக் ப்ரஷ்கள் அவருக்கு பிடிக்கவில்லை. அவரின் பெட்டியில் வைத்திருக்கும் 30 வருடப் பழமையான ப்ரஷ்களையே பயன்படுத்த விரும்புகிறார்.
இரண்டு ப்ரஷ்களை தேர்ந்தெடுத்து, அவற்றை டர்பண்டைன் வைத்து சுத்தப்படுத்தி சிவுப்பு நிற பெயிண்ட் டப்பாவை திறக்கிறார். அந்த பாட்டில் 19 வருட பழமையானது. ஸ்கூட்டரின் சாவி கொண்டு அவர் டர்பண்டைனை கலக்குகிறார். பிறகு ப்ரஷ்ஷை தட்டையாக்குகிறார். துருத்தி நிற்கும் முடிகளை நீக்குகிறார்.
அந்த வயதிலும் கை நடுங்காமல் இருப்பது தனது பாக்கியம் என்கிறார் ஜலாலுதீன். அவர் வேலைக்கு கை நடுங்காமல் இருப்பது முக்கியம். முதல் எழுத்தை எழுத ஐந்து நிமிடங்கள் பிடிக்கிறது. சரியான உயரத்தில் அது இல்லை. அவ்வப்போது இத்தகைய தவறுகள் நேர்கையில், ஈரமாக இருக்கும்போதே அதை அழித்து சரி செய்கிறார். “பெயிண்ட் கொஞ்சம் வந்தாலும் நன்றாக இருக்காது,” என்கிறார் அவர்.
வேலையின் சுத்தமும் துல்லியமும்தான் வாடிக்கையாளர்கள் மீண்டும் அவரிடம் வரக் காரணம் என்கிறார். அவரின் திறன் வைரம் போன்ற பாணியில் இருக்கிறது. எழுத்துகள் முப்பரிமாணத்தில் இருக்கும் வைரம் போன்ற பாணியில் எழுதப்படும். மிகவும் நுட்பமான வேலை அது. வெளிச்சம், நிழல்கள், நடுத்தர நிறங்கள் ஆகியவை சரியாக இருக்க வேண்டும் என்கிறார் ஜலால்.
பெயர்ப்பலகையை முடிக்க இன்னும் ஒரு நாள் ஆகும். இரு நாள் வேலைக்கு அவர் 800-லிருந்து 1,000 ரூபாய் வரை வாங்குகிறார். ரூ.120-150 கட்டணத்தை தன்னுடைய வழக்கமான கட்டணமாக அவர் வைத்திருக்கிறார். ஆனால் அவர் மாத கணக்கை சொல்லவில்லை. “கணக்குகள் எழுதினால், எப்போதும் நஷ்டம்தான் வரும். எனவே நான் கணக்கு பார்ப்பதில்லை,” என்கிறார் அவர்.
ஜலாலுதீனுக்கு மூன்று குழந்தைகள். இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. மூத்த மகன், பெயர்ப்பலகை எழுதும் வேலையில் இருந்தார். ஆனால் விரைவில் அந்த வேலையை விட்டுவிட்டு, தையற்கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார்.
ஜலாலுதீனின் குழந்தைகளைப் போல, பல இளைஞர்கள் இந்த வேலையிலிருந்து வெளியேறுகின்றனர். கையால் பெயர்ப்பலகை வரையும் தொழில் அழிந்து கொண்டிருக்கிறது. “ஓவியரின் வேலையை கணிணிகள் எடுத்துக் கொண்டு விட்டன),” என்கிறார் 35 வருடங்களுக்கு முன் பெயர்ப்பலகை வரையத் தொடங்கிய ஆஷிக் ஹுசேன். இரண்டாம் தலைமுறை ஓவியரான திருபாய், அகமதாபாத்தில் 50 பெயர்ப்பலகை ஓவியர்கள்தான் மிஞ்சியிருப்பதாக கணக்கு சொல்கிறார்.
டிஜிட்டல் அச்சுகள் பரவலாக கிடைக்கின்றன. கையால் வரையப்படும் பலகைகளை விரும்புவோர் குறைந்து விட்டனர். எனவே வருமானத்தை ஈடுகட்ட, ஆஷிக் ஆட்டோவும் ஓட்டுகிறார்.
எதிர்பாராத அங்கீகாரமாக, கோபால் பாய் தக்கார் போன்ற சில டிஜிட்டல் அச்சுக் கடை உரிமையாளர்கள், விலை அதிகமாக இருந்தாலும், கையால் வரையப்படும் பெயர்ப்பலகைகளையே விரும்புவதாக சொல்கின்றனர். “கையால் வரையப்படும் பலகைகள் வாழ்நாளுக்கும் நீடிக்கும், டிஜிட்டல் அச்சுகள் நீடிக்காது.”
பல ஓவியர்கள் புது தொழில்நுட்பத்துக்கு தகவமைத்துக் கொண்டார்கள். 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அடலஜில் பெயர்ப்பலகைகளை அரவிந்த்பாய் பார்மர் 30 வருடங்களாக வரைந்து வருகிறார். ஏழு வருடங்களுக்கு முன் அவர் ஒரு ப்ளெக்ஸி வெட்டும் இயந்திரம் வாங்கினார். ஸ்டிக்கர் அச்சிடும் இயந்திரம் அது. பெரிய முதலீடு அது. ஒரு இயந்திரத்துக்கு 25,000 ரூபாய் ஆனது. கணிணிக்கு இன்னொரு 20,000 ரூபாய். நண்பர்களின் உதவியில் கணிணி கற்றுக் கொண்டார்.
ஸ்டிக்கர்களையும் எழுத்துகளையும் ஒரு ரேடியம் பேப்பரில் இயந்திரம் வெட்ட, பிறகு அது உலோகத்தில் ஒட்டுகிறது. ஆனால் கையால் வரைவதுதான் பிடிக்கும் என்கிறார் அரவிந்த்பாய். கணிணியும் இயந்திரமும் அவ்வப்போது பழுதாகி விடுவதாகவும் சொல்கிறார்.
41 வயது பெயர்ப்பலகை ஓவியரான வாலி முகமது மிர் குரேஷியும் டிஜிட்டல் அச்சுகளைதான் செய்கிறார். அவ்வப்போது பெயர்ப்பலகை வரையும் வேலை கிடைக்கிறது.
பிற ஓவியர்களை போல வாலிக்கும் ஹுசேன்பாய் ஹதாதான் பயிற்றுநர். 75 வய்தாகும் அவர், சொந்த பிள்ளைகளுக்கே அக்கலை தெரியாது என்கிறார். அவரின் மகன் ஹனீஃப் மற்றும் பேரன்கள் ஹசீர் மற்றும் அமீர், அச்சுகள், ஃப்ளக்ஸ் மற்றும் ஸ்டிக்கர் வடிவமைப்பு மற்றும் அச்சு வியாபாரத்தை காந்திநகர் செக்டர் 17-ல் இருக்கும் அவர்களின் கடையில் செய்கின்றனர்.
“பெயர்ப்பலகைகளை வரைய நிறைய பேர் முன்வர வேண்டும்,” என்கிறார் ஹுசேன்பாய்.
தமிழில் : ராஜசங்கீதன்