பாரியின் பயிற்சிப் பணியில் சேர வேண்டுமென ஒவ்வொரு வருடமும் பல இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர். இந்த வருடத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் மாணவர்கள் எங்களை அணுகினர். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு துறைகளை சார்ந்த மாணவர்கள் பயிற்சிப் பணி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். மும்பையிலிருக்கும் சமூக அறிவியல்களுக்கான டாடா நிறுவனம், பெங்களூருவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், சோனெபட்டின் ஃப்ளேம் பல்கலைக்கழகம், ராஜஸ்தானின் மத்திய பல்கலைக்கழகம் போன்ற இடங்களை சேர்ந்த மாணவர்கள் அவர்கள்.
இத்தனை வருடங்களில் எங்களின் பயிற்சிப் பணி திட்டங்கள், அளவிலும் சாத்தியங்களிலும் வளர்ந்திருக்கிறது; பல புதிய தேவைகளையும் இலக்குகளையும் கூட உட்செரித்திருக்கிறது. எனினும் இறுதி நோக்கம் மட்டும் மாறவே இல்லை. நம் காலத்து பிரச்சினைகளான அசமத்துவம், அநீதி, விளிம்புநிலைக்கு ஒதுக்கப்படுதல் போன்றவற்றை இளைஞர்கள் ஆராயந்து கையாளத் தொடங்க வேண்டுமென்பதே அந்த நோக்கம் ஆகும்.
பாரியின் பணியில் பங்களிக்க இப்பயிற்சியாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபடுவது, நேர்காணல் செய்வது, எழுத்தாக்கம் செய்வது, விவரங்களை சரிபார்ப்பது, புகைப்படம் எடுப்பது, படம்பிடிப்பது மற்றும் கிராமப்புறத்துக்கும் விளிம்புநிலைக்கும் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் பற்றிய கதைகளை படங்களிட்டு விளக்குவது போன்ற பணிகளும் இதில் அடங்கும். இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஆர்வலர்கள் பங்களித்துள்ளனர்.
நூலக அறிக்கைககள் செய்வது, திரைப்படங்கள் எடுப்பது, வீடியோக்கள் பதிவு செய்வது, சமூக ஊடக இடுகைகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், தேவையிருப்பின் கட்டுரைகளை மொழிபெயர்க்கவும் உதவுகிறார்கள்.
பல மாணவர்கள், ஆராயந்து அறிந்து, முன்னிலைப்படுத்தி எழுத விழைந்த ஒரு விஷயம், பாலின பாகுபாட்டின் அநீதிகளாகும். இது குறித்த அவர்களின் கதைகளுள் சில பின்வருமாறு:
பயிற்சியாளர் ஆதியேதா மிஸ்ராவின் இயற்கை உபாதைக்கு இடைவேளை இல்லை கட்டுரை, மேற்கு வங்காள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள், இயற்கை உபாதைகளை கழிக்க தோட்டங்களில் வழியின்றி படும் கஷ்டங்களைப் பற்றி பேசியது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியம் படிக்கும் ஆதியேதா, உண்மை சூழலை வெளிப்படுத்தியதற்காக அப்பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களையும், அவர்கள் வேலை செய்த தோட்டங்களின் அடையாளங்களையும் மறைக்க வேண்டியிருந்தது.
பிகாரில் அசிம் பிரேம்ஜி பல்கலைகழகத்தில் எம்.ஏ டெவலப்மெண்ட் படித்துக்கொண்டே பங்களிக்கும் மாணவியான தீப்ஷிகா சிங், கிராமப்புறங்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில் ஆடும் பெண்கள் படும் பாலின துன்புறுத்தல்கள் பற்றி எழுதியிருந்தார்: பிகார்: இம்சை இசைக்கு ஆடும் பெண்கள் . பயிற்சியின் அனுபவம் குறித்து பாரிக்கு நன்றி கூறும் வகையில் "நீங்கள் வழங்கிய வழிகாட்டுதலும் கருத்துகளும், எனது கட்டுரையின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், ஒரு எழுத்தாளராக எனது நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. பாரியின் வலைத்தளத்தில் எனது கட்டுரை வெளியானதை கண்டு மகிழ்ந்தது, என் கனவு நனவாகிய தருணம். இந்த அனுபவம், குரல் கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான கதைகளைப் பகிர்ந்து கொள்ள எனக்கு உத்வேகம் அளித்துள்ளது,” என எழுதியிருந்தார்.
அதே போல, சென்ற ஆண்டு, பயிற்சிப் பணியாளரான குஹுவோ பஜாஜ் மத்தியப் பிரதேசத்தின் தாமோவிலிருந்து பீடித் தொழிலாளர்களை நேர்காணல் செய்து எழுதியிருந்த கதை, எப்போதும் கஷ்டத்தில் இருக்கும் பீடித் தொழிலாளர்கள் . அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான இவர் கூறுகையில், "எனக்கு இது உண்மையான இதழியலின் வலிமையை உணர்த்திய அனுபவம்… இந்த அனுபவத்திலிருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டதோடு, ஒவ்வொரு கதையை சொல்வதும் ஒரு புதிய அனுபவம் என்பதை புரிந்து ரசிக்கத் தொடங்கினேன்," என்கிறார். பெரும்பாலும் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏதும் இல்லாமல், இந்த வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்பங்களை இந்த கட்டுரை வெளிக்காட்டியிருந்தது.
கடந்த ஆண்டு, எங்களின் இளைய நிருபரான, 10 ஆம் வகுப்பு படிக்கும் ஹனி மஞ்சுநாத், உள்ளூர் கிராமத் தபால்காரரைப் பற்றி எழுதியிருந்த கதை: தேவராயப்பட்னத்திலிருந்து ஒரு தபால்! . மழை, வெயில் பாராமல், நீண்ட நேரம் கடுமையாக உழைக்கும் டாக் சேவகர்களின் (தபால்காரர்கள்) வேலை பற்றிய மலரும் நினைவுகளை ஒரு பக்கமும், மறுபக்கம் அவர்களின் நடைமுறை சிரமங்களையும் அறிந்து விளக்கியிருந்தார். இத்தனைக்கும் இத்தபால்காரர்களுக்கு ஓய்வூதியத்திம் கூட கிடைக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
பாரியின் பயிற்சிப்பணியில் இணைய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கவும்.
எங்கள் பணி, உங்கள் ஆர்வத்தை தூண்டியிருந்தாலும் நீங்கள் பாரிக்கு பங்களிக்க விரும்பினாலும், தயவுசெய்து எங்களை [email protected]ல் தொடர்பு கொள்ளவும். எங்களுடன் இணைந்து பணியாற்ற, சுயாதீன எழுத்தாளர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்கள், இயக்குநர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தொகுப்பாளர்கள், விளக்கப்பட ஓவியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என அனைவரையும் வரவேற்கிறோம்.
பாரியில் எங்களுக்கு லாப நோக்கங்கள் கிடையாது. இது எங்களின் பன்மொழி இணைய இதழ். பாரி, பாராட்டுபவர்களின் நன்கொடைகளில் இயங்குகிறது. நீங்களும் பாரிக்கு நன்கொடை அளிக்க விரும்பினால், DONATE -ஐ கிளிக் செய்யவும்.
தமிழில்: அஹமத் ஷ்யாம்