ஒரு வழக்கமான பஷ்மினா சால்வைக்கான நூல் சுற்ற ஃபஹ்மீதா பானோவுக்கு ஒரு மாத காலம் பிடிக்கிறது. சங்தாங்கி ஆட்டின் மிக மெல்லிய கம்பளி நூலை பிரித்து சுற்றுவது என்பது மிகவும் கடினமான நுட்பமான வேலை. ஒரு மாத உழைப்புக்கு, 1,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக 50 வயது கைவினைஞர் சொல்கிறார். “நான் தொடர்ந்து வேலை செய்தால், நாளொன்றுக்கு 60 ரூபாய் சம்பாதிக்க முடியும்,” என்கிறார் அவர்.
ரூ.8000 முதல் ரூ. 1,00,000 வரை வேலைப்பாடை பொறுத்து சால்வையின் விலை மாறுகிறது. அந்த விலையோடு அவர்களின் வருமானத்தை ஒப்பிட்டால், ஒரு பொருட்டுக்குக் கூட ஈடில்லை.
பாரம்பரியமாக வீட்டு வேலைகளுக்கு நடுவே பெண்கள் பஷ்மினா நூலை சுற்றுகின்றனர். இந்த வேலையை செய்யும் ஃபஹ்மீதா போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் குறைவான ஊதியத்தால், அந்த பணியை செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
ஸ்ரீநகரில் வசிக்கும் ஃபிர்தவுசா, திருமணமாகி பின் குடும்பத்தையும் வீட்டையும் கவனிப்பதில் மும்முரமாவதற்கு முன்பு, கம்பளி நூல் சுற்றிக் கொண்டிருந்தார். இளமைக்காலத்தில் நினைவுகூரும் அவர், “வீட்டில் மூத்தவர்கள் எங்களை நூல் சுற்ற சொல்வார்கள். அப்போதுதான் மனம் அலைபாயாது என்றும் கிசுகிசுக்கள் பேச மாட்டோம் என்றும் சொல்வார்கள்,” என்கிறார். அவரின் இரண்டு பதின்வயது மகள்கள் நூல் சுற்றும் வேலை செய்யவில்லை. வீட்டுவேலையிலும் படிப்பிலும் அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். அதைக் காட்டிலும் வருமானமும் குறைவு.
நூல் சுற்றுதல் காஷ்மீரின் பண்பாடு என்னும் ஃபிர்தவுசா, உள்ளூர் உணவுக்கும் (தாமரைத் தண்டு) நூல் சுற்றலுக்கும் உள்ள தொடர்பை சொல்கிறார்: “தொடக்கத்தில் தாமரைத் தண்டு போல் மெலிதாக இருக்கும் நூலை சுற்ற பெண்கள் போட்டி போடுவார்கள்.”
நெய்வது, நூலை சுற்றுவது போலல்லாமல் நல்ல வருமானத்தை கொடுக்கிறது. நல்ல வருமானம் கிடைக்கும் வேலைகள் கிட்டும் வரை அந்த வேலையை பல ஆண்கள் செய்கின்றனர். இன்றைய நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், திறனற்ற தொழிலாளர்கள் அன்றாடக் கூலியாக ரூ.311 பெறுகிறார்கள். பயிற்சித் திறன் தொழிலாளர்கள் ரூ.400-ஐயும் திறன் உழைப்பாளர்கள் ரூ.480-ஐயும் நாட்கூலியாக பெறுவதாக ஊதியங்கள் குறித்த மாநிலத்தின் 2022ம் ஆண்டின் குறிப்பு சொல்கிறது.
வழக்கமான சால்வையில் 140 கிராம் பஷ்மினா நூல் இருக்கிறது. உயரமான மலைகளில் வாழும் சங்தாங்கி ஆட்டின் பஷ்மினா நூலில் 10 கிராமை பிரித்து சுற்றி முடிக்க ஃபஹ்மீதாவுக்கு இரண்டு நாட்கள் பிடிக்கும்.
பஷ்மினா நூல் சுற்றும் கலையை ஃபஹ்மீதா, மாமியார் கதிஜாவிடமிருந்து கற்றுக் கொண்டார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரின் கோஹிமரானிலுள்ள ஒரு மாடிக் கட்டடத்தில் குடும்பங்களுடன் அப்பெண்கள் வாழ்கின்றனர்.
10 x10 அறை வீட்டில் ராட்டையில் பணி செய்கிறார் கதிஜா. ஒரு அறை சமையலறையாகவும் இன்னொரு அறை, குடும்பத்தின் ஆண்கள் பஷ்மினா நெசவு செய்யும் பட்டறையாகவும் இருக்கிறது. மற்றவை படுக்கையறைகள்.
70 வயது மூத்த நூல் சுற்றுபவர், 10 கிராம் பஷ்மினா கம்பளியை சில நாட்களுக்கு முன் வாங்கி வந்தார். கண் பார்வை மங்கியிருப்பதால், மெல்லிய நூலாக அவற்றை மாற்ற சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். 10 வருடங்களுக்கு முன் கண் புரை நீக்கப்பட்டது. உன்னிப்பாக கவனித்து நூல் சுற்றுவது அவருக்குக் கடினமாக இருக்கிறது.
ஃப்ஹ்மீதா மற்றும் கதிஜா போன்ற நூல் சுற்றுபவர்கள் முதலில் பஷ்மினாவை சுத்தப்படுத்த ‘கார்டிங்’ என்கிற உத்தியை பயன்படுத்துகின்றனர். மர சீப்பு ஒன்றை கொண்டு, ஒரு திசையில் கம்பளி இழைகளில் சிக்கல் நீங்கும் வண்ணம் வாரப்படுவதே அந்த உத்தி. காய்ந்த புற்களின் தண்டுகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறு கோலில் பிறகு அதை சுற்றுகிறார்கள்.
நூல் செய்வதென்பது நேரம் பிடிக்கும் நுட்பமான வேலை. “இரண்டு நூல்கள் சேர்த்து ஒரு வலிமையான நூல் செய்யப்படும். கோலைக் கொண்டு இரு நூல்களும் ஒன்றாக திரிக்கப்பட்டு, இறுதியில் முடிச்சு போடப்படும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் காலிதா பேகம். ஸ்ரீநகரின் சஃபா கடல் பகுதியை சேர்ந்த திறன் வாய்ந்த நூல் சுற்றி அவர். 25 வருடங்களாக பஷ்மினா கம்பளி நூலை சுற்றுகிறார்.
”ஒரு புரியில் (10 கிராம் பஷ்மினா) என்னால் 140-160 முடிச்சுகள் உருவாக்க முடியும்,” என்கிறார் அவர். அதற்கு தேவையான நேரம் மற்றும் திறன் ஆகியவற்றை தாண்டி, ஒரு முடிச்சுக்கு ஒரு ரூபாய் வருமானம் பெறுகிறார் காலிதா பேகம்.
பஷ்மினா புரியின் விலை, நூலின் அளவை பொறுத்தது. மெல்லிய நூலுக்கு விலை அதிகம். மெல்லிய நூலில் பல முடிச்சுகள் போட முடியும். தடி நூலில் சில முடிச்சுகள்தான் போட முடியும்.
“ஒவ்வொரு முடிச்சிலும் 8 விரல்களுக்கு இணையாக, 8-11 அங்குல நீளம் கொண்ட 9-11 பஷ்மினா நூல்கள் இருக்கும். முடிச்சு போட இப்படித்தான் பெண்கள் நூலின் அளவை அளக்கின்றனர்,” என்கிறார் இந்திசார் அகமது பாபா. 55 வயதாகும் அவர், சிறு வயதிலிருந்தே பஷ்மினா வணிகத்தில் இருக்கிறார். ஒவ்வொரு முடிச்சுக்கும் 1 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரையிலான கை ராட்டை வணிகரை பொறுத்துக் கிடைக்கும்.
“வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டுமென்பதால் ஒரு பெண்ணால் 10 கிராம் பஷ்மினா கம்பளியைத்தான் நூலாக்க முடியும். ஒரு புரியை ஒரு நாளில் முடிக்க முடியாது,” என்கிறார் ஒரு முடிச்சுக்கு ரூ.1.50 பெறும் ருக்சானா பானோ
அதிகபட்சமாக ஒரு நாளில் இப்பணியிலிருந்து 20 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்கிறார் 40 வயது ருக்சானா. நவா கடலின் அரம்போரா பகுதியில் கணவர், மகள் மற்றும் விதவை அண்ணியுடன் வசிக்கிறார். “10 கிராம் பஷ்மினா நெய்ததில் அதிகபட்சமாக மூன்று நாள் உழைத்து 120 ரூபாய் சம்பாதித்திருக்கிறேன். காலையிலிருந்து மாலை வரை தேநீர், உணவு இடைவேளைகள் இன்றி உழைத்தேன்,” என்கிறார் அவர். 10 கிராம் முடிக்க அவருக்கு 5-6 நாட்கள் பிடிக்கும்.
பஷ்மினா நெசவு வேலை போதுமான அளவில் வருமானம் கொடுப்பதில்லை என்கிறார் கதிஜா: “இப்போது நான் பல நாட்கள் வேலை பார்த்தாலும் வருமானம் வராது போல,” என்னும் அவர், “ஐம்பது வருடங்களுக்கு முன் 30-லிருந்து 50 ரூபாய் நாட்கூலி பெறுவது போதுமானதாக இருந்தது,” என்கிறார்.
*****
சால்வை வாங்குபவர்கள் அதிக விலை கொடுக்க மறுப்பதால்தான், கையில் பஷ்மினா நூல் சுற்றும் பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் கிடைக்கிறது. பஷ்மினா வணிகர் நூருல் ஹுதா சொல்கையில், “இயந்திரம் சுற்றிய பஷ்மினா சால்வை 5,000 ரூபாய்க்கு கிடைக்கும்போது கையால் சுற்றுப்பட்ட சால்வையை 8,000-9,000 ரூபாய் கொடுத்து ஏன் வாடிக்கையாளர் வாங்கப் போகிறார்?,” எனக் கேட்கிறார்.
“கையால் சுற்றிய நூல் கொண்டு தயாரிக்கப்படும் பஷ்மினா சால்வைகளை வாங்க மிகக் குறைவான ஆட்கள்தான் இருக்கின்றனர். 100 (வாடிக்கையாளர்கள்) பேரில் இருவர்தான் மெய்யான கையால் சுற்றப்பட்ட பஷ்மினா சால்வைகளை கேட்பார்கள்,” என்கிறார் ஸ்ரீநகரின் பதாம்வாரி பகுதியில் இருக்கும் பஷ்மினா கடையான ஷினாரின் கைவினைப் பொருட்கள் கடையின் உரிமையாளரான 50 வயது நூருல் ஹுதா.
காஷ்மீர் பஷ்மீனாவுக்கு 2005ம் ஆண்டிலிருந்து புவிசார் குறியீடுகள் இருக்கின்றன. கையால் சுற்றப்பட்ட நூலும் இயந்திரத்தால் சுற்றப்பட்ட நூலும் புவிசார் குறியீடுக்கு தகுதியானவை என கைவினை வல்லுநர்களுக்கு என பதிவு செய்யப்பட்ட அமைப்பின் தர வழிகாட்டியும் அரசாங்க இணையதளமும் குறிப்பிட்டிருக்கிறது.
நூற்றாண்டு பழமையான பஷ்மினா கடையை நகரத்தில் அப்துல் மனான் பாபா நடத்துகிறார். அதிகபட்ச எண்ணிக்கையான, 250 புவிசார் குறியீடு கொண்ட பொருட்களை கொண்டிருக்கிறார். சால்வையிலுள்ள முத்திரை, அது கையால் செய்யப்பட்டது என்பதையும் தூய்மையானது என்பதையும் உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் நெசவாளர்கள் இயந்திரத்தால் சுற்றப்பட்ட நூலைத்தான் விரும்புகிறார்கள் என அவர் சுட்டிக் காட்டுகிறார். “ நுட்பமான தன்மை கொண்டிருப்பதால் கையால் சுற்றப்பட்ட நூல் கொண்டு நெசவாளர்கள் பஷ்மினா சால்வை செய்ய தயாராக இல்லை. இயந்திரம் சுற்றிய நூல் ஒரே தன்மை கொண்டிருக்கும். நெசவுக்கும் எளிமையாக இருக்கும்.”
சில்லரை வணிகர்களும் இயந்திர நூலையே விரும்புகின்றனர். “1,000 பஷ்மினா சால்வைகளுக்கு ஆர்டர் கிடைத்தால், 10 கிராம் பஷ்மினாவையே சுற்ற 3-5 நாட்கள் ஆகும் நிலையில் எப்படி எங்களால் ஆர்டரை பூர்த்தி செய்ய முடியும்?,” எனக் கேட்கிறார் மனான்.
மனானின் தந்தையான 60 வயது அப்துல் ஹமீது பாபா, கையால் சுற்றப்படும் பஷ்மினாவுக்கு மதிப்பு குறைந்து வருவதாகக் கூறுகிறார். நூல் சுற்றும் கலை, 600 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீருக்கு வந்த சூஃபி துறவி ஹஸ்ரத் மிர் சையது அலி ஹம்தானி அளித்த பரிசு என அவர் நம்புகிறார்.
தாத்தாவின் காலத்தில் பஷ்மினா கம்பளிக்காக அருகே உள்ள லடாக் பகுதிக்கு மக்கள் குதிரைகளில் சென்ற விதத்தை ஹமீது நினைவுகூருகிறார். “எல்லாமே அப்போது தூய்மையானவையாக இருந்தது. 400-500 பெண்கள் எங்களுக்காக பஷ்மினா நூல் சுற்றினர். இப்போது வெறும் 40 பெண்கள்தான் இருக்கின்றனர். அவர்களும் வருமானத்துக்காகதான் அதை செய்கின்றனர்.”
தமிழில்: ராஜசங்கீதன்