“என் நுரையீரல் கல்லை போல் இருக்கிறது. என்னால் நடக்க முடியவில்லை,” என்கிறார் மாணிக் சர்தார்.

55 வயது நிரம்பிய அவருக்கு, நவம்பர் 2022-ல் சிலிகாஸிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சரி செய்ய முடியாத நுரையீரல் நோய் அது. “வரும் தேர்தல்களில் எனக்கு ஈடுபாடு இல்லை,” என அவர் தொடர்கிறார். “என் குடும்பத்தின் நிலைதான் கவலையாக இருக்கிறது.”

நபா குமார் மண்டலும் சிலிகாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். “போலி வாக்குறுதிகள்தான் தேர்தலில் கொடுக்கப்படுகின்றன. எங்களை பொறுத்தவரை, வாக்களிப்பு ஒரு சம்பிரதாய வேலை. யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களின் நிலை மாறப் போவதில்லை,” என்கிறார் அவர்.

மாணிக் மற்றும் நாபா ஆகிய இருவரும் மேற்கு வங்கத்தின் மினாகான் ஒன்றியத்திலுள்ள ஜூப்காலி கிராமத்தில் வசிக்கின்றனர். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலின் கடைசி கட்டமான ஜூன் 1ம் தேதி அங்கு வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.

ஒன்றரை வருடங்களாக அவ்வப்போது வேலை பார்த்த ஆலைகளில் வெளிப்பட்ட சிலிகா தூசால் இருவரின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருமானம் பறிபோனது. அவர்கள் வேலை பார்த்த பெரும்பாலான ரேமிங் மாஸ் (Ramming Mass) ஆலைகள் பதிவு பெற்றிராதவை என்பதால் நிவாரணம் பெறவும் வழியில்லை. அவை பல நியமன ஆணைகளோ அடையாள அட்டைகளோ வழங்கும் முறை கூட கொண்டிராதவை. பெரும்பாலான ஆலைகள் சட்டவிரோதமானவை. அவற்றின் பணியாளர்களும் பதிவு செய்யப்படாதவர்கள்தான்.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

மாணிக் சர்காரும் (இடது) ஹரா பைக்கும் (வலது) மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸை சேர்ந்த ஜுப்காலி கிராமத்தில் வசிக்கிறார்கள். இருவரும் புலம்பெயர்ந்து சென்று வேலை பார்த்த ரேமிங் மாஸ் ஆலையில் வெளியான சிலிகா தூசால் அவர்களுக்கு சிலிகாஸிஸ் நோய் வந்திருக்கிறது

இத்தகைய ஆபத்து இந்த வேலையில் இருப்பது தெளிவாக தெரிந்து, 2000மாம் வருடம் தொடங்கி 2009ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 10 வருடங்களாக வடக்கு 24 பர்கானாஸை சேர்ந்த மாணிக் மற்றும் நபா குமார் போன்றவர்கள், வாழ்வாதாரத்துக்காக புலம்பெயர்ந்து இந்த ஆலைகளில் வேலை பார்த்தனர். காலநிலை மாற்றமும் பயிர் விலைகளின் சரிவும் அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரமான விவசாயத்தை வருமானமின்றி ஆக்கி விட்டது.

“வேலைகள் தேடி அங்கு நாங்கள் சென்றோம்,” என்கிறார் ஜுப்காலி கிராமத்தில் வசிக்கும் ஹரா பைக். “மரணப் பகுதிக்கு செல்கிறோம் என அப்போது எங்களுக்கு தெரியவில்லை.”

ரேமிங் மாஸ் ஆலைகளின் பணியார்கள் சிலிகா துகளை தொடர்ந்து சுவாசிக்க நேரும்.

உலோகத் துண்டுகளையும் உலோகமல்லா தனிமங்களையும் கரண்டிகளையும் உருக்கும் உலைகளின் மேற்பகுதி, ரேமிங் மாஸால் செய்யப்பட்டிருக்கும். உயர் வெப்பங்களை தாங்கும் செங்கற்களை உற்பத்தி செய்யவும் இது பயன்படுகிறது.

இந்த ஆலைகளில், பணியாளர்கள் தொடர்ந்து சிலிகா துகளை எதிர்கொள்வார்கள். “பணி தளத்துக்கு அருகே இருக்கும் பகுதியில் நான் தூங்குவேன். தூக்கத்தில் கூட தூசைதான் நான் சுவாசித்தேன்,” என்கிறார் 15 மாதங்களாக அங்கு பணிபுரிந்த ஹரா. பாதுகாப்பு உபகரணம் இல்லாத அந்த பணிச்சூழலில், சிலிகாஸிஸ் நோய் ஏற்படுவது மிக எளிய விஷயம்தான்.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: 2001-2002 வரை, வடக்கு 24 பர்கானாஸை சேர்ந்த பல விவசாயிகள், காலநிலை மாற்றத்தாலும் பயிர் விலை வீழ்ச்சியாலும் புலம்பெயரத் தொடங்கினர். 2009ம் ஆண்டின் பெரும்புயல் ஐலாவுக்கு பிறகு, இன்னும் அதிக பேர் கிளம்பினர். பலரும் குவார்ட்ஸ் நொறுக்குதல் மற்றும் அரைத்தல் வேலையை செய்தனர். ஆபத்தும் உடல் நலக் கேடுகளும் நிறைந்த தொழில். வலது: சிலிகாசிஸ், குணமாக்க முடியாது நுரையீரல் நோய் ஆகும். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர், நோயுற்று இறந்து விட்டால், துயரிலும் சிரமத்திலும் தவிக்கும் பெண்கள் மீதுதான் பொறுப்பு விழும்

2009-10-லிருந்து மினாகான் - சந்தேஷ்காலி ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 34 பணியாட்கள், ஒன்பது மாதங்களிலிருந்து மூன்று வருடங்கள் வரை ரேமிங் மாஸ் துறையில் வேலை பார்த்து உயிரிழந்திருக்கின்றனர்.

பணியாட்கள் சுவாசிக்கும்போது சிலிகா தூசு, நுரையீரலின் அல்வியோலர் குழாய்களில் படிந்து, மெல்ல உறுப்பை இறுக்கமாக்கி விடுகிறது. சிலிகாஸிஸின் முதல் அறிகுறி, இருமலும் மூச்சுத்திணறலும். பிறகு உடலின் எடை குறைந்து தோல் கருப்பாகும். மெல்ல, நெஞ்சு வலியும் உடல் பலவீனமும் வரும். இறுதிக் கட்டத்தில் ஆக்சிஜன் உதவி நோயாளிகளுக்கு தேவைப்படும்.சிலிகாசிஸ் நோய் கொண்டவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பார்கள்.

சிலிகாஸிஸ் குணமாக்க முடியாத, பணி நிமித்தத்தில் ஏற்படும் நோய். நிமோகானியாஸிஸின் குறிப்பிட்ட வடிவம் ஆகும். தொழில்ரீதியிலான நோய்களுக்கான வல்லுநர் டாக்டர் குணால் குமார் தத்தா சொல்கையில், “சிலிகாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காசநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் 15 மடங்கு அதிகம்,” என்கிறார். இதை சிலிகோ ட்யூபர்குலோசிஸ் அல்லது சிலிகாடிக் டிபி என்கிறார்கள்.

ஆனால் இத்தகைய வேலைக்குதான் இருபது வருடங்களாக, தொடர்ந்து மக்கள் புலம்பெயர்ந்து சென்று பணிபுரிகிறார்கள். 2000மாம் ஆண்டில், கோல்டாஹா கிராமத்தை சேர்ந்த 30-35 தொழிலாளர்கள், 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குல்தியில் இருக்கும் ரேமிங் மாஸ் உற்பத்தி ஆலையில் வேலைக்கு சென்றனர். சில வருடங்கள் கழித்து மினாகான் ஒன்றியத்தை சேர்ந்த கோல்டாஹா, தெபிதாலா, காரிபியாரியா மற்றும் ஜேய்கிராம் கிராமங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் விவசாயிகள், தத்தாபுகூர் பராசத்திலுள்ள ஆலையில் வேலைக்கு சென்றனர். சந்தேஷ்காலி ஒன்றியங்கள் 1 மற்றும் 2 ஆகியவற்றை சேர்ந்த சுந்தரிகாலி, சரபாரியா, படிடாஹா, அகர்ஹாதி, ஜெலியாகாலி, ராஜ்பாரி மற்றும் ஜுப்காலி கிராமங்களின் விவசாயிகளும் 2005-2006ல் புலம்பெயர்ந்தனர். அதே காலக்கட்டத்தில், இந்த ஒன்றியங்களை சேர்ந்த தொழிலாளர்களும் ஜமுரியாவில் இருக்கும் ரேமிங் மாஸ் உற்பத்தி ஆலைக்கு சென்றனர்.

“குவார்சைட் கல்லை ஓர் அரவை மற்றும் செமோலினா மற்றும் சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு பொடியாக்குவோம்,” என்கிறார் ஜுப்காலியை சேர்ந்த அமோய் சர்தார். “முழங்கைக்கு மேல் பார்க்க முடியாதளவுக்கு தூசு இருக்கும். முழுமையாக என் மீது தூசு படியும்,” என்கிறார் அவர். இரண்டு வருடங்கள் பணிபுரிந்த பிறகு, கடந்த நவம்பர் 2022-ல் அமொய்க்கு சிலிகாஸிஸ் நோய் கண்டறியப்பட்டது. கனமான சுமைகளை தூக்கும் வேலைகளை அவர் செய்ய முடியவில்லை. “குடும்பத்துக்காகதான் வேலைக்கு சென்றேன். ஆனால் நோய் என்னை பிடித்துக் கொண்டது,” என்கிறார் அவர்.

2009ம் ஆண்டு அடித்த ஐலா புயல், சுந்தரவன விவசாய நிலங்களை அழித்த பிறகு புலப்பெயர்வு இன்னும் தீவிரமடைந்தது. குறிப்பாக இளையோர், வேலை தேடி மாநிலம் விட்டும் நாடு விட்டும் செல்ல முயன்றனர்.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: இரு வருடங்கள் பணி செய்த பிறகு அமொய் சர்தாருக்கு சிலிகாஸிஸ் நோய் கண்டறியப்பட்டது. ‘குடும்பத்துக்காக வேலைக்கு சென்றேன். ஆனால் நோய் என்னை பிடித்துக் கொண்டது,’ என்கிறார் அவர். வலது: கீர்த்தனை பாடகராக விரும்பும் மகாநந்தா சர்தார், சிலிகாஸிஸ் வந்ததால் அதிக நேரம் பாட முடியவில்லை

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: சந்தேஷ்காரி மற்றும் மினாகான் ஒன்றியங்களை சேர்ந்த பல சிலிகாஸிஸ் நோயாளிகளுக்கு தொடர் ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. வலது: ஒரு வல்லுநர் எக்ஸ்ரேக்களை பார்க்கிறார். சிலிகாஸிஸ் வேகமாக அதிகரிக்கும் நோய். அவ்வப்போது எக்ஸ்ரேக்கள் எடுத்து கண்காணிக்கப்பட வேண்டும்

மகாநந்தா சர்தார், பாடகர் ஆக விரும்பினார். ஆனால் ஐலா புயலுக்கு பிறகு அவர் ஜமுரியாவில் ரேமிங் மாஸ் ஆலையில் வேலை பார்க்க சென்று சிலிகாஸிஸ் நோய் வந்தது. “இப்போதும் கீர்த்தனைகள் நான் பாடுவேன். ஆனால் சுவாசக்கோளாறு இருப்பதால் தொடர்ந்து பாட முடியாது,” என்கிறார் ஜூப்காலியை சேர்ந்த அவர். சிலிகாஸிஸ் நோய் வந்த பிறகு, மகாநந்தா சென்னைக்கு சென்று கட்டுமான தளத்தில் வேலை பார்த்தார். ஆனால் விபத்து நேர்ந்து மே 2023-ல் திரும்பி விட்டார்.

சந்தேஷ்காலி மற்றும் மினாகான் ஒன்றியங்களை சேர்ந்த பல நோயாளிகள் புலம்பெயர்ந்தாலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெளியேயும் தினக்கூலிகளாக பணிபுரிகின்றனர்.

*****

சீக்கிரமே நோயைக் கண்டறிந்து விட்டால், கையாளுவது சுலபம். இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் இயக்குநர் டாக்டர் கமலேஷ் சர்கார் சொல்கையில், “திறமையாக நோயைக் கையாண்டு, தடுப்பதற்கு, முன்னதாக அது கண்டறியப்பட வேண்டும். நம் விரலிலிருந்து எடுக்கப்படும் ஒரு துளி ரத்தத்தில், சிலிகாஸிஸ் போன்ற பல நுரையீரல் நோய்களுக்கு அடிப்படையான க்ளாரா செல் புரதம் 16 (CC 16) கண்டுபிடிக்க முடியும்,” என்கிறார். ஆரோக்கியமான ஒரு மனித உடலில் CC16-ன் அளவு ஒரு மில்லிலிட்டரில் 16 நேனோகிராம் இருக்கும். ஆனால் சிலிகாஸிஸ் நோயாளிகளுக்கு, இந்த அளவு நோய் அதிகரிக்கும்போது குறையும். இறுதியில் பூஜ்யத்தை எட்டும்.

“சிலிகா தூசு அதிகம் வெளிப்படும் மாசு நிறைந்த தொழில்களில் பணியாட்களின் CC16  அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட அரசாங்கம் உரிய சட்டமுறையைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சிலிகாஸிஸை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும்,” என்கிறார் டாக்டர் சர்கார்.

“பக்கத்தில் மருத்துவமனைகள் இல்லை,” என்கிறார் 2019ம் ஆண்டில் சிலிகாஸிஸ் கண்டறியப்பட்ட ரபிந்திர ஹல்தார். அருகில் இருக்கும் ஒன்றிய மருத்துவமனை, குல்னாவில்தான் இருக்கிறது. அங்கு செல்ல, ஜுப்காலியை சேர்ந்த ரபிந்த்ரா, இரண்டு படகுகளில் பயணிக்க வேண்டியிருக்கும். “சர்பாரியாவில் ஸ்ரமாஜிபி மருத்துவமனை இருக்கிறது. ஆனால் போதிய வசதிகள் இல்லை,” என்னும் அவர் தொடர்ந்து, “ஏதேனும் பிரச்சினை என்றால், நாங்கள் கொல்கத்தாவுக்கு செல்வோம். ஆம்புலன்ஸுக்கு 1,500-லிருந்து 2,000 ரூபாய் வரை ஆகும்.”

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

இடது: ஜூப்காலியை சேர்ந்த ரபிந்த்ரா ஹல்தார், பக்கத்து மருத்துவமனைக்கு செல்ல இரண்டு படகுகளில் செல்ல வேண்டும் என்கிறார். வலது: கோல்டாஹா கிராமத்தை சேர்ந்த சாஃபிக் மொல்லாவுக்கு தொடர் ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது

கோல்டாஹாவிலுள்ள வீட்டில் 50 வயது முகமது சஃபிக் முல்லா, தீவிர சுவாசக் கோளாறால் இரு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். “20 கிலோ எடை குறைந்துவிட்டேன். தொடர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது,” என்கிறார் அவர். “குடும்பம் குறித்து கவலையாக இருக்கிறது. நான் இறந்துவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்?”

பிப்ரவரி 2021-ல் மாநில அரசு அக்குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது. “எங்களின் சார்பாக திரு. சமித் குமார் கார் வழக்கு தொடுத்தார்,” என்கிறார் சாஃபிக்கின் மனைவியான தஸ்லிமா பீவி. ஆனால் பணம் கரைந்துவிட்டது. “வீடு கட்டவும் மூத்த பெண்ணின் திருமணம் நடத்தவும் அத்தொகையை நாங்கள் செலவு செய்து விட்டோம்,” என விளக்குகிறார் தஸ்லிமா.

ஜார்க்கண்டின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார சங்கத்தை சேர்ந்த சமித் குமார் கார், ஜார்கண்டிலும் மேற்கு வங்கத்திலும் (OSAJH India) சிலிகாஸிஸ் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். சமூகப்பாதுகாப்பு மற்றும் நிவாரணத் தொகை கேட்டு வழக்குகள் தொடுக்கிறார்.

மேற்கு வங்கத்தில் 2019-23 வரை சிலிகாஸிஸ் நோய் வந்து இறந்த 23 தொழிலாளர்களுக்கு, OSAJH இந்தியா அமைப்பு தலா 4 லட்சம் ரூபாயும் நோய் வந்த 30 தொழிலாளர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக பெற்று தந்திருக்கிறது. கூடுதலாக, 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்களை மாநில அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

“ஆலைகள் சட்டம், 1948-ன்படி, ரேமிங் மாஸ் மற்றும் சிலிகா பொடி தயாரிக்கும் ஆலைகள் முறைசார் தொழிற்துறையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் குறைந்தது 10 பேருக்கு மேல் தொழிலாளர்கள் மின்சாரத்துடன் வேலை பார்ப்பார்கள். எனவே எல்லா ஆலை மற்றும் தொழிலாளர் சார்ந்த விதிகள் அவர்களுக்கு பொருந்தும்,” என்கிறார் சமித். தொழிலாளர் காப்பீடு சட்டம் மற்றும் தொழிலாளர் நிவாரணச் சட்டம் ஆகியவற்றுக்குக் கீழும் அந்தத் தொழிற்சாலைகள் வருகின்றன. மருத்துவர் நோயாளிக்கு சிலிகாஸிஸ் இருப்பதை கண்டறிந்தால், ஆலைகளுக்கான தலைமை ஆய்வாளருக்கு அவர்கள் சட்டப்படி தெரிவிக்க வேண்டும்.

PHOTO • Ritayan Mukherjee
PHOTO • Ritayan Mukherjee

அனிதா மண்டல் (இடது) மற்றும் பாரதி ஹல்தார் (வலது) ஆகிய இருவரின் கணவர்களும் சிலிகாஸிஸ் வந்து உயிரிழந்தனர். ரேமிங் மாஸ் ஆலைகளில் பல சட்டவிரோதமானவை. பதிவு செய்யப்படாதவை

OSHAJ இந்தியா, கொல்கத்தாவில் மார்ச் 31, 2024 அன்று நடத்திய பயிற்சிப் பட்டறையில், அதிக காலம் மாசு சூழலில் இருந்தால்தான் சிலிகாஸிஸ் வரும் என்கிற வழக்கமான நம்பிக்கையை வல்லுனர் குழு தெளிவாக உடைத்தது. குறைந்த கால அளவு, அத்தகைய சூழலில் இருந்தாலும் நோய் தாக்கும் என நிறுவினார்கள். வடக்கு 24 பர்கானாஸ் பகுதி நோயாளிகளின் விஷயத்திலும் இதுவே உண்மை. எந்த கால அளவில், அச்சூழலில் இருந்தாலும் தூசை சுற்றி திசுக்கள் உருவாகி, ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களின் போக்குவரத்தை தடுத்து, சுவாசக் கோளாறை உருவாக்குமென குழு கூறியது.

சிலிகாஸிஸ், ஒரு தொழில்பூர்வமான நோய் என்றும் அதன் தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெறுவதற்கான உரிமை உண்டு எனவும் கார் குறிப்பிடுகிறார். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் பதிவு செய்யவில்லை. சிலிகாஸிஸ் நோய் கொண்ட தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலைகளை கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பு. மேற்கு வங்கத்தின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு கொள்கையின்படி,  விதி என்னவாக இருந்தாலும் வேலை அளிப்பவர்களிடமிருந்து நிவாரணம் பெறுவதற்கான உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு.

ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது என்கிறார் கார். “பல இடங்களில் மரணத்துக்கு காரணமாக சிலிகாஸிஸை போட நிர்வாகம் மறுப்பதை பார்த்திருக்கிறேன்,” என்கிறார். அதற்கு முன்பே கூட, சிலிகாஸிஸ் நோய் வந்ததும் தொழிலாளர்களை ஆலைகள் வேலையை விட்டு நிறுத்தி விடுகின்றன.

அனிதா மண்டலின் கணவரான சுபர்னா, மே 2017-ல் சிலிகாஸிஸ் வந்து இறந்தபோது, கொல்கத்தாவின் நில் ரதன் சர்கார் மருத்துவமனை கொடுத்த இறப்பு சான்றிதழில், “கல்லீரல் இழைநார் வளர்ச்சி”யை இறப்புக்கான காரணமாக குறிப்பிட்டிருக்கிறது. சுபர்னா ரேமிங் மாஸ் ஆலையில் வேலை பார்த்தவர்.

“என் கணவருக்கு கல்லீரல் நோய் இல்லை,” என்கிறார் அனிதா.   “அவருக்கு சிலிகாஸிஸ் நோய் வந்திருப்பதாக சொன்னார்கள்.” ஜுப்காலியில் வசிக்கும் அனிதா, விவசாயத் தொழிலாளராக வேலை பார்க்கிறார். அவரது மகன் புலம்பெயர் தொழிலாளராக, கொல்கத்தா மற்றும் டைமண்ட் துறைமுக கட்டுமானத் தளங்களில் வேலை பார்க்கிறார். “இறப்புச் சான்றிதழில் என்ன எழுதினார்கள் என எனக்கு தெரியவில்லை. அச்சமயத்தில் பெரும் உளைச்சலில் இருந்தேன். சட்ட நுட்பங்கள் எனக்கு எப்படி தெரியும்? நான் சாதாரணமான கிராமத்து பெண்,” என்கிறார் அனிதா.

இருவரின் வருமானத்தைக் கொண்டு, அனிதாவும் அவரது மகனும் மகளின் உயர்கல்வியை பார்த்துக் கொள்கின்றனர். அவரும் தேர்தல்களை பொருட்படுத்தவில்லை. “கடந்த ஏழு வருடங்களில் இரு தேர்தல்கள் நடந்தன. ஆனாலும் நான் கஷ்டத்தில்தான் இருக்கிறேன். சொல்லுங்கள், நான் ஏன் தேர்தலில் ஆர்வம் கொள்ள வேண்டும்?” எனக் கேட்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்

Ritayan Mukherjee

रितायन मुखर्जी, कोलकाता के फ़ोटोग्राफर हैं और पारी के सीनियर फेलो हैं. वह भारत में चरवाहों और ख़ानाबदोश समुदायों के जीवन के दस्तावेज़ीकरण के लिए एक दीर्घकालिक परियोजना पर कार्य कर रहे हैं.

की अन्य स्टोरी Ritayan Mukherjee
Editor : Sarbajaya Bhattacharya

सर्वजया भट्टाचार्य, पारी के लिए बतौर सीनियर असिस्टेंट एडिटर काम करती हैं. वह एक अनुभवी बांग्ला अनुवादक हैं. कोलकाता की रहने वाली सर्वजया शहर के इतिहास और यात्रा साहित्य में दिलचस्पी रखती हैं.

की अन्य स्टोरी Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan