“எங்கள் கிராமத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது,” என்கிறார் ஷுக்லா கோஷ். பஸ்சிம் மெதினிபூரில் உள்ள குவாபூர் கிராமத்தை அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “பெண்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் இதை எதிர்த்து போராட விரும்புகிறார்கள்.”

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இளம் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மேற்கு வங்கத்தின் கிராமங்கள், சிறு நகரங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையில் திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களில் கோஷும் குவாப்பூரைச் சேர்ந்த சிறுமிகளும் அடங்குவர்.

2024, செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற எதிர்ப்பு பேரணி மத்திய கொல்கத்தாவின் கல்லூரி தெருவில் தொடங்கி சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் ஷியாம்பஜார் நோக்கி சென்றது.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் விரைவான நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை, கொல்கத்தா காவல் ஆணையர் பதவி விலக வேண்டும் (மருத்துவர்களின் போராட்டங்களின் கோரிக்கையும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது), சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், உள்துறை மற்றும் மலை விவகாரங்கள் ஆகிய துறைகளை வைத்திருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் ஆகியவை அடங்கும்.

PHOTO • Sarbajaya Bhattacharya
PHOTO • Sarbajaya Bhattacharya

இடது: பஸ்சிம் மெதினிப்பூரின் ICDS தொழிலாளர்களுக்கான மாவட்ட செயலாளரான ஷுக்லா கோஷ், அவரது கிராமத்து பெண்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்கிறார். வலது: விவசாயத் தொழிலாளரான மிடா ராய் ஹூக்லியின் நகுண்டாவிலிருந்து கிளம்பி பேரணிக்கு வந்திருக்கிறார்

"திலோத்தமா தோமர் நாம், ஜுர்ச்சே ஷோஹோர் ஜுர்ச்சே கிராம் (திலோத்தமா, உங்கள் பெயரில், நகரங்களும் கிராமங்களும் ஒன்றிணைகின்றன)!" என்பது பேரணியின் முழக்கம். 'திலோத்தமா' என்பது கொடூரமாக கொல்லப்பட்ட 31 வயது மருத்துவருக்கு நகரத்தால் வழங்கப்பட்ட பெயர். இது துர்கா தேவியின் மற்றொரு பெயர். மிகச்சிறந்த துகள்களால் ஆனவர் என்று பொருள். இது கொல்கத்தா நகரத்திற்கான ஒரு அடைமொழியாகும்.

"பெண்களை பாதுகாப்பாக உணர வைப்பது காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு," என்று சுக்லா தொடர்கிறார். "அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிப்பதை சிறுமிகள் பார்த்தால்,  எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்?" என்று கேட்கிறார் பஸ்சிம் மெதினிபூரில் உள்ள ICDS தொழிலாளர்களின் மாவட்டச் செயலாளராக உள்ள அவர்.

"விவசாயத் தொழிலாளர்களான எங்களின் பாதுகாப்புக்காக அவர்கள் (அரசு) என்ன செய்துள்ளனர்?" என்று கேட்கிறார் போராட்டக்காரர் மிதா ரே. கிராமத்தில் பெண்கள் இரவில் வெளியே செல்ல பயப்படுகிறார்கள். அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்காக நாம் போராட வேண்டும். ரே, ஹூக்ளி மாவட்டத்தில் (ஹக்ளி என்றும் உச்சரிக்கப்படுகிறது) நகுந்தாவைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி.

45 வயதாகும் இவர், மலம் கழிப்பதற்கு திறந்தவெளிகளை விட கழிப்பறையை விரும்புவதாக கூறுகிறார். மிதாவுக்கு சொந்தமாக இரண்டு பிகா நிலம் உள்ளது. அதில் அவர் உருளைக்கிழங்கு, நெல், எள் பயிரிடுகிறார். ஆனால் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் பயிரை அழித்துவிட்டது. "எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை," என்று விவசாயத் தொழிலாளியாக நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து ரூ.250 சம்பாதிக்கும் மிதா கூறுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை தனது தோளில் அவர் சுமந்துள்ளார். கணவரை இழந்த அவருக்கு விதவை ஓய்வூதியம் கிடைக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முக்கிய திட்டமான லக்ஷ்மிர் பந்தர் மூலம் அவருக்கு ரூ.1000 கிடைக்கிறது. ஆனால் அது குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை என்று அவர் கூறுகிறார்.

PHOTO • Sarbajaya Bhattacharya
PHOTO • Sarbajaya Bhattacharya

கொல்கத்தாவின் தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுவர் எழுத்துகள்

PHOTO • Sarbajaya Bhattacharya
PHOTO • Sarbajaya Bhattacharya

இடது: தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுவரில், ‘அரசாங்கம் வல்லுறவு செய்தவனை காக்கிறது. எனவே அரசாங்கம்தான் வல்லுறவு செய்கிறது’ என்கிற சுவர் எழுத்துகள். வலது: ‘ஆணாதிக்கம் வீழட்டும்’

*****

"நான் ஒரு பெண் என்பதால் இங்கு வந்துள்ளேன்."

மால்டா மாவட்டத்தில் உள்ள சஞ்சல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான பானு பேவா, வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருக்கிறார். 63 வயதான இவர், உழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியுடன் பேரணியில் இணைந்த தனது மாவட்டத்தைச் சேர்ந்த பிற பெண்களின் கூட்டத்தில் நிற்கிறார்.

"பெண்கள் இரவில் வேலை செய்ய முடியும்," என்று நமீதா மஹதோ கூறுகிறார். மருத்துவமனைகளில் பெண் ஊழியர்களுக்கு இரவுப்பணி வழங்கப்படாது என்ற அரசின் உத்தரவை அவர் குறிப்பிடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வும் இந்த உத்தரவை விமர்சித்துள்ளது.

மூன்று பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், புத்தகக் கடைகள், இந்தியன் காபி ஹவுஸ் உள்ளிட்ட பிற கடைகள் கொண்ட பரபரப்பான பகுதியான கல்லூரி சதுக்கத்தின் வாயில்களுக்கு முன்னால் புருலியா மாவட்டத்தைச் (புருலியா என்றும் உச்சரிக்கப்படுகிறது) சேர்ந்த பெண்கள் குழுவுடன்  நிற்கிறார் வயது ஐம்பதுகளில் உள்ள நமீதா.

கௌரங்டி கிராமத்தைச் சேர்ந்த நமீதா, குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் (மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளது). ஒரு ஒப்பந்தக்காரரிடம் ரங் மிஸ்திரி (பெயிண்ட் தொழிலாளி) வேலை செய்கிறார். அவருக்கு ஒரு நாள் வேலைக்கு ரூ.300-350 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. "நான் மக்களின் வீட்டு ஜன்னல்கள், கதவுகள், கிரில்களுக்கு வண்ணம் பூசுகிறேன்," என்று அவர் கூறுகிறார். விதவையான இவர், அரசு வழங்கும் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்.

PHOTO • Sarbajaya Bhattacharya
PHOTO • Sarbajaya Bhattacharya

இடது: மால்தாவை சேர்ந்த விவசாயத் தொழிலாளரான பானு பெவா (பச்சை புடவை) சொல்கையில், ‘நானொரு பெண் என்பதால் இங்கு வந்திருக்கிறேன்,’ என்கிறார். வலது: புருலியாவிலிருந்து வர்ந்திருக்கும் தினக்கூலி தொழிலாளரான நமிதா மஹாதோ (பிங்க் புடவை), தன் பணியிட பாதுகாப்புக்கு ஒப்பந்ததாரர்தான் பொறுப்பு எனக் கூறுகிறார்

PHOTO • Sarbajaya Bhattacharya
PHOTO • Sarbajaya Bhattacharya

இடது: நீதி கேட்டு ஒரு போராட்டக்காரர் பாடுகிறார். வலது: மேற்கு வங்க விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவரான துஷார் கோஷ், ‘ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்துக்கு எதிரான போராட்டங்கள், உழைக்கும் வர்க்க பெண்களின் தினசரி போராட்டங்களையும் பிரதிபலிக்க வேண்டும்,’ என்கிறார்

இரும்பு தொழிற்சாலையில் பணிபுரியும் தனது மகன், மருமகள், பேத்தியுடன் வசித்து வருகிறார் நமீதா. சொந்த மகளுக்கு திருமணமாகி விட்டது. "உங்களுக்குத் தெரியுமா, அவர் அனைத்து தேர்வுகள், நேர்காணல்களிலும் தேர்ச்சி பெற்றார். ஆனால் அவருக்கு பணியில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் வரவே இல்லை. இந்த அரசு எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை,” என்று அவர் புகார் கூறுகிறார். இந்த குடும்பம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு பீகா நிலத்தில் நெல் பயிரிடுவதோடு, நீர்ப்பாசனத்திற்கு மழையை நம்பி உள்ளது.

*****

தனது பணியிடத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் மருத்துவரின் ஆர்.ஜி.கர் வழக்கு, உழைக்கும் வர்க்க பெண்களின் துயரங்களை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. மீனவப் பெண்களுக்கும், செங்கல் சூளைகளில் வேலை செய்வோருக்கும் கழிப்பறை இல்லாமை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட தொழிலாளர்கள், குழந்தைகள் காப்பகங்கள் இல்லாமை, ஊதியத்தில் பாலின பாகுபாடு ஆகியவை சில பிரச்னைகள் என்று மேற்கு வங்க விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் துஷார் கோஷ் சுட்டிக்காட்டுகிறார். "ஆர்.ஜி.கரில் நடந்த சம்பவத்திற்கு எதிரான போராட்டங்களில் உழைக்கும் வர்க்க பெண்களின் அன்றாட போராட்டங்களையும் முன்னிலைப்படுத்த வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

2024, ஆகஸ்ட் 9 அன்று நடந்த சம்பவத்திலிருந்து, மேற்கு வங்கம் போராட்டங்களால் வெடித்துள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, பொதுமக்கள், இரவு மற்றும் பொது இடங்களை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கியுள்ளனர். அவர்களில் கணிசமானோர் பெண்கள். மாநிலம் முழுவதும் உள்ள இளநிலை மருத்துவர்களின் போராட்டம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மிரட்டல் கலாச்சாரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.  சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், போராட்டங்கள் குறைவதற்கான அறிகுறிகள் இல்லை.

தமிழில்: சவிதா

Sarbajaya Bhattacharya

सर्वजया भट्टाचार्य, पारी के लिए बतौर सीनियर असिस्टेंट एडिटर काम करती हैं. वह एक अनुभवी बांग्ला अनुवादक हैं. कोलकाता की रहने वाली सर्वजया शहर के इतिहास और यात्रा साहित्य में दिलचस्पी रखती हैं.

की अन्य स्टोरी Sarbajaya Bhattacharya
Editor : Priti David

प्रीति डेविड, पारी की कार्यकारी संपादक हैं. वह मुख्यतः जंगलों, आदिवासियों और आजीविकाओं पर लिखती हैं. वह पारी के एजुकेशन सेक्शन का नेतृत्व भी करती हैं. वह स्कूलों और कॉलेजों के साथ जुड़कर, ग्रामीण इलाक़ों के मुद्दों को कक्षाओं और पाठ्यक्रम में जगह दिलाने की दिशा में काम करती हैं.

की अन्य स्टोरी Priti David
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

की अन्य स्टोरी Savitha