"வெற்றிலைக் கொடி மட்டும் பிழைத்திருந்தால், எனக்கு குறைந்தது இரண்டு லட்சம் ரூபாயாவது [2023ஆம் ஆண்டில்] வருமானம் கிடைத்திருக்கும்", என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கூறுகிறார் துயூரி கிராமத்தைச் சேர்ந்த 29 வயது விவசாயி. கருணா தேவி பீகாரின் நவாடா மாவட்டத்தில் 2023 ஜூனில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளால் பயிரை இழந்தார். ஒரு காலத்தில் பசுமையான தோட்டமாக இருந்த அவரது பரேஜா, பளபளப்பான புகழ்பெற்ற மகஹி வெற்றிலைகளால் நிரம்பி வழிந்தது. இப்போது அவர் மற்றவர்களின் பரேஜாக்களில் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பல நாட்களாக கடுமையான வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட ஒரு டஜன் மாவட்டங்களில் நவாடாவும் ஒன்று. "லக்தா தா கி ஆஸ்மான் சே ஆக் பராஸ் ரஹா ஹை அவுர் ஹம்லாக் ஜல் ஜாயேங்கே. தோபஹார் கோ தோ காவ்ன் ஏக்தம் சன்சன் ஹோ ஜாதா தா ஜைஸ் கி கர்ஃபு லக் கயா ஹோ [வானத்திலிருந்து நெருப்பு மழை பொழிவது போலவும், நாங்கள் எரிந்து போவது போலவும் தோன்றியது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது போல் பிற்பகலில் கிராமம் முற்றிலும் வெறிச்சோடி காணப்படும்]", என்று அந்த ஆண்டு நிலவிய வெப்பத்தை விவரிக்கிறார். மாவட்டத்தின் வாரிசாலிகஞ்ச் வானிலை மையத்தில் அதிகபட்சமாக 45.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெப்ப அலை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் 100க்கும் மேற்பட்டவர்களைக் பலி வாங்கியது என்று 2023, ஜூன் 18 தேதியிட்ட தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் "நாங்கள் பரேஜாவுக்கு செல்வோம்", என்று கருணா தேவி கூறுகிறார். ஆறு கதா [தோராயமாக ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பங்கு] பரப்பளவில் பரவியுள்ள மகஹி வெற்றிலை பயிரிட ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கியதால் அக்குடும்பம் பெரிய ஆபத்தில் சிக்கவில்லை.
பீகாரில் வெற்றிலை தோட்டம் பரேஜா அல்லது பரேதா என்று அழைக்கப்படுகிறது. இந்த குடிசை போன்ற அமைப்பு மென்மையான கொடிகளை கோடையின் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்தும், குளிர்காலத்தில் கடுமையான காற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. இதற்கு பொதுவாக மூங்கில் குச்சிகள், பனை மற்றும் தென்னை ஓலைகள், கயிறு, நெல் வைக்கோல் மற்றும் துவரைச் செடி தண்டுகளால் வேலி அமைக்கப்படுகிறது. பரேஜாவின் உள்ளே, நீளமாகவும், ஆழமாகவும் உழப்படுகிறது. வேருக்கு அருகில் நீர் தேங்கி செடிகள் அழுகாத வகையில் தண்டுகளை நடவு செய்ய வேண்டும்.
மென்மையான கொடிகளால் மோசமான வானிலையைத் தாங்க முடியாது.
கடந்த ஆண்டு, கடுமையான வெப்பத்தை சமாளிக்க, கருணா தேவியின் கணவர், "நாங்கள் ஒரு நாளைக்கு 2-3 முறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சினோம், நீர்ப்பாசனம் அதிகம் செய்தால் செலவுகளும் அதிகரிக்கும். ஆனால் கடுமையான வெப்பம் நிலவியதால் அவை பிழைக்கவில்லை,” என்கிறார். “கொடிகள் கருகத் தொடங்கி விரைவில் பரேஜா முழுவதும் காலியானது", என்று 40 வயதாகும் சுனில் சௌராசியா கூறுகிறார். அவர்களின் வெற்றிலை சாகுபடி முழுவதும் பறிபோனது. "கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை," என்று கவலையுடன் கூறுகிறார் கருணா.
மகதா பகுதியில் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். " முன்பு இருந்து வந்த சீரான வானிலை இப்போது மாறிவிட்டதை நாங்கள் காண்கிறோம். திடீரென வெப்பநிலை அதிகரிக்கிறது. சில நேரங்களில் ஓரிரு நாட்களுக்கு பலத்த மழை பெய்கிறது," என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானி பேராசிரியர் பிரதான் பார்த்தசாரதி கூறுகிறார்.
1958 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சராசரி வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது என்று 2020ஆம் ஆண்டில் சயின்ஸ் டைரக்ட் இதழில் வெளியிடப்பட்ட 'இந்தியாவின் தெற்கு பீகாரில் சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் நிலத்தடி நீர் மாறுபாடு' என்ற தலைப்பிலான ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. 1990களில் இருந்து பருவமழையின் கணிக்க முடியாத தன்மை தெளிவாகத் தெரிகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
" மகஹி பான் கா கேதி ஜுவா ஜெய்சா ஹை [மகஹி வெற்றிலை சாகுபடி, சூதாட்டத்தைப் போன்று நிச்சயமற்றது]", என்று தேயூரி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான அஜய் பிரசாத் சௌராசியா கூறுகிறார். இப்போது விளிம்பு நிலையில் உள்ள பல மகஹி விவசாயிகளின் சார்பில் அவர் பேசுகிறார். "நாங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வெற்றிலைக் கொடிகள் பிழைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை," என்று கூறுகிறார்.
பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சௌராசியாக்களால் பாரம்பரியமாக வெற்றிலை பயிரிடப்படுகிறது. பீகார் அரசு அண்மையில் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட சௌராசியாக்கள் உள்ளனர்.
நவாடாவின் ஹிசுவா வட்டத்தில் தேயூரி கிராமம் உள்ளது; அதன் மக்கள் தொகை 1,549 (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011), அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலவும் சீரற்ற வானிலையால் இப்பகுதியில் மகஹி வெற்றிலை பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.
2023ஆம் ஆண்டு வெப்ப அலைக்கு முன் 2022ஆம் ஆண்டில் மிக பலத்த மழை பெய்தது. " லக்தா தா ஜெய்ஸே ப்ரலே ஆனே வாலா ஹோ. அந்தெரா சா ஜாதா தா அவுர் லகடர் பார்சா ஹோத்தா தா. ஹம்லோக் பீக் பீக் கர் கேத் மே ரஹ்தே தே. பரீஷ் மே பிக்னே சே தோ ஹம்கோ புகார் பீ ஆ கயா தா [பேரழிவு வருவது போல் தோன்றியது. பகல் இருட்டாக மாறி பலத்த மழை பெய்யும். நாங்கள் தண்ணீரில் நனைந்தபடி வயலிலேயே இருப்போம்]," என்கிறார் ரஞ்சித் சௌராசியா.
55 வயதான அவர் அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், பேரிழப்பை சந்தித்ததாகவும் கூறுகிறார். "எனது கிராமத்தில் உள்ள வெற்றிலைத் தோட்ட விவசாயிகளில் பெரும்பாலானோர் அந்த ஆண்டு நஷ்டத்தை சந்தித்தனர்," என்று அவர் கூறுகிறார். "நான் ஐந்து கதா (சுமார் 0.062 ஏக்கர்) நிலத்தில் வெற்றிலை பயிரிட்டிருந்தேன். தண்ணீர் தேங்கியதால் வெற்றிலை கொடிகள் வறண்டு விட்டது.” ஒடிசாவில் வீசிய அசானி புயலால் 3-4 நாட்கள் கனமழை பெய்தது.
"வெப்ப அலைகள் மண்ணை வறண்டு போகச் செய்து வளர்ச்சியைத் தடுக்கின்றன. திடீரென மழை பெய்யும் போது, தாவரங்கள் வறண்டு போகின்றன," என்று இங்குள்ள மகஹி பான் உத்பதக் கல்யாண் சமிதியின் தலைவராகவும் இருக்கும் ரஞ்சித் கூறுகிறார்.
"செடிகள் புதியவை. புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல அவர்களை கவனிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களின் வெற்றிலைக் கொடிகள் காய்ந்து போயின," என்கிறார் அவர். 2023ஆம் ஆண்டில், தனது தாவரங்கள் கடுமையான வெப்ப அலைகளில் இருந்து தப்பிப் பிழைத்ததாகக் ரஞ்சித் கூறுகிறார். அவர் அதற்கு பல முறை தண்ணீர் தெளித்தார். "நான் அதற்கு பல முறை தண்ணீர் தெளிக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் ஒரு நாளைக்கு 10 முறைக் கூட.
தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை இழப்புகளை எதிர்கொண்டதாக சக மகஹி விவசாயியும், அண்டை வீட்டுக்காரருமான அஜய் கூறுகிறார். 45 வயதாகும் அவர் 2019ஆம் ஆண்டில் நான்கு கதாக்களில் (தோராயமாக ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பங்கு) வெற்றிலை பயிரிட்டிருந்தார். கடும் குளிரால் அது வீணானது. 2021 அக்டோபரில், குலாப் சூறாவளியால் பெய்த பலத்த மழை, இலைகளை முற்றிலுமாக சேதப்படுத்தியது. "இரண்டு ஆண்டுகளிலும் எனக்கு மொத்தம் ரூ.2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது", என்று அவர் நினைவுகூர்ந்தார்.
*****
அஜய் சௌராசியா வெற்றிலைக் கொடிகளை மூங்கில் அல்லது சர்கண்டாவின் மெல்லிய தண்டுகளில் கட்டி அவை கீழே விழாமல் தடுக்கிறார். இதய வடிவிலான பளபளப்பான பச்சை வெற்றிலைகள் கொடியில் கனமாகத் தொங்குகின்றன. அவை சில நாட்களில் பறிக்கத் தயாராகிவிடும்.
பசுமையான கட்டமைப்பில் வெப்பநிலை வெளிப்புறத்தை விட உள்ளே குளிர்ச்சியாக இருக்கும். அதிகப்படியான வெப்பம், குளிர் மற்றும் மழை ஆகியவை வெற்றிலை செடிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் என்று அஜய் கூறுகிறார். சுட்டெரிக்கும் கோடையில், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்தால், அவர் பலமுறை கைகளால் தண்ணீர் தெளிக்க வேண்டும். தோளில் சுமார் ஐந்து லிட்டர் தண்ணீரை சுமந்து கொண்டு ஒரு மண் பானையை வைத்து உள்ளங்கையால் நீரை பரப்பி, கொடிகளுக்கு இடையே மெதுவாக நடக்கும்போது அவர் தண்ணீர் தெளித்துக் கொண்டே செல்கிறார். " வெயில் அதிகமாக இருந்தால் நாங்கள் அதை பல முறை செய்ய வேண்டும். ஆனால் மழை, குளிரில் இருந்து அவற்றைப் பாதுகாக்க எந்த வழியும் இல்லை," என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
" சீரற்ற வானிலைக்கு காலநிலை மாற்றம் எந்த அளவிற்கு பங்களித்துள்ளது என்பது குறித்து எந்த ஆய்வும் இல்லை என்றாலும், மாறி வரும் வானிலை முறைகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறிக்கின்றன" என்று கயாவில் உள்ள தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் புவி, உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் தலைவர் சாரதி கூறுகிறார்.
அஜய்க்கு சொந்தமாக எட்டு கதா நிலம் உள்ளது. ஆனால் அது சிதறிக் கிடக்கிறது. எனவே அவர் மூன்று கதா நிலத்தை ஆண்டுக்கு ரூ.5,000 என குத்தகை எடுத்துள்ளார். மேலும் குத்தகை நிலத்தில் மகஹி வெற்றிலை பயிரிட சுமார் ரூ.75,000 செலவழித்துள்ளார். அவர் உள்ளூர் சுய உதவிக் குழுவிடமிருந்து ரூ.40,000 கடன் பெற்றார். அதை அடுத்த எட்டு மாதங்களில், மாதம் ரூ.6,000 என திருப்பிச் செலுத்த வேண்டும். "இதுவரை, நான் ரூ.12,000 மட்டுமே இரண்டு தவணைகளாக திருப்பி செலுத்தியுள்ளேன்," என்று 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் எங்களிடம் பேசியபோது அவர் கூறினார்.
அஜய்யின் மனைவியான, 40 வயது கங்கா தேவி சில நேரங்களில் வயல்களில் அவருக்கு உதவுகிறார். மற்ற விவசாயிகளின் வயல்களிலும் அவர் விவசாயக் கூலி வேலை செய்கிறார். "இது கடினமான வேலை. ஆனால் எங்களுக்கு தினமும் ரூ.200 மட்டுமே கிடைக்கிறது," என்று அவர் தனது கூலி வேலை பற்றி கூறுகிறார். அவர்களின் நான்கு குழந்தைகள் - ஒன்பது வயது மகள் மற்றும் 14, 13 மற்றும் 6 வயதுகளில் மகன்கள், தெயூரியில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.
மோசமான வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் பயிர் இழப்புகள், வெற்றிலை விவசாயிகளை மற்ற வெற்றிலை விவசாயிகளின் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.
*****
மகஹி வெற்றிலை, மகதாவிலிருந்து அவற்றின் பெயரைப் பெற்றது. அங்கு இது பிரத்தியேகமாக பயிரிடப்படுகிறது. மகதா பகுதி தெற்கு பீகாரின் கயா, அவுரங்காபாத், நவாடா மற்றும் நாளந்தா மாவட்டங்களை உள்ளடக்கியது. "முதல் மகஹி வெற்றிலை எப்படி, எப்போது இங்கு வந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது பல தலைமுறைகளாக வளர்ந்து வருகிறது. முதல் செடி மலேசியாவிலிருந்து வந்தது என்று நாங்கள் கேள்விப்பட்டோம், "என்று விவசாயி ரஞ்சித் சௌராசியா கூறுகிறார். அவர் இலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மகஹி வெற்றிலைக்கு புவியியல் குறியீடு (GI) கிடைக்க விண்ணப்பித்தவர்.
ஒரு மகஹி வெற்றிலை என்பது பிஞ்சுகுழந்தையின் உள்ளங்கை அளவு - 8 முதல் 15 செ.மீ நீளமும் 6.6 முதல் 12 செ.மீ அகலமும் கொண்டது. மணம் நிறைந்தது. தொடுவதற்கு மென்மையானது. இலையில் எந்த நாரும் இல்லாததால் வாயில் மிக எளிதாக கரைகிறது - இது மற்ற வகை வெற்றிலைகளை விட தனித்துவமான உயர்ந்த தரம் கொண்டது. நீண்ட காலத்திற்கு வாடாது. பறித்த பிறகு, அதை 3-4 மாதங்கள் வைத்திருக்கலாம்.
"நீங்கள் அவற்றை ஈரமான துணியில் போர்த்தி குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். மேலும் இலைகள் ஏதேனும் அழுகியுள்ளதா என்பதை தினமும் சரி பார்க்க வேண்டும். அப்படி இருந்தால், நீங்கள் உடனடியாக அதை அகற்ற வேண்டும். இல்லையெனில் அது மற்ற இலைகளுக்கும் பரவிவிடும்," என்கிறார் ரஞ்சித். அவர் தனது வீட்டில் தரையில் அமர்ந்தபடி வெற்றிலை சுருட்டுவதை நாங்கள் பார்க்கிறோம்.
200 இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஹக்சா பிளேடால் தண்டை வெட்டுகிறார். பின்னர் இலைகளை நூலில் கட்டி மூங்கில் கூடையில் போடுகிறார்.
வெற்றிலை செடிகளில் பூக்கள் இல்லாததால் விதைகளும் இல்லை. "ஒரு சக விவசாயியின் பயிர் பொய்த்துப் போகும்போது, மற்ற விவசாயிகள் தங்கள் பயிர்களில் இருந்து வெட்டப்பட்ட கொடிகளை பகிர்ந்து அவர் வயலை மீண்டும் நிறுவ உதவுகிறார்கள். அதற்காக நாங்கள் ஒருவருக்கொருவர் பணம் வாங்குவதில்லை," என்கிறார் ரஞ்சித் சௌராசியா.
இந்த கொடிகள் ஒரு பரேஜாவில் வளர்க்கப்படுகின்றன. மேலும் ஒரு கதாவை (சுமார் 0.031 ஏக்கர்) உள்ளடக்கிய ஒரு பரேஜாவை உருவாக்க சுமார் ரூ.30,000 செலவாகும்; இரண்டு கதாக்களுக்கு ரூ.45,000 வரை செலவாகிறது. மண் நீளமாக, ஆழமாக உழப்படுகிறது. மேலும் மண் சேரும் சால்களுக்கு அருகில் தண்டுகள் நடப்படுகின்றன. இதனால் வேரில் நீர் தேங்காமல், தாவரங்கள் அழுகாமல் காக்கப்படுகின்றன.
மகஹி வெற்றிலையின் ஒரு கொடி அதன் ஒரு வருட வாழ்நாளில் குறைந்தது 50 இலைகளை உற்பத்தி செய்கிறது. உள்ளூர் சந்தைகளிலும், நாட்டின் மிகப்பெரிய வெற்றிலை மண்டியான உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியின் மொத்த விற்பனையிலும் ஓரிலை ஒன்று அல்லது இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மகஹி வெற்றிலைகளுக்கு 2017ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கி கவுரவிக்கப்பட்டது. மகதாவின் புவியியல் பகுதியில் 439 ஹெக்டேரில் பிரத்தியேகமாக வளர்க்கப்படும் இந்த இலைகளுக்கு என புவிசார் குறியீடு பெற்றதால் விவசாயிகள் உற்சாகமும், நிம்மதியும் அடைந்தனர்.
ஆனால், ஆண்டுகள் கடந்தும் தங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். "அரசும் மகஹிக்கு விளம்பரம் செய்யும். இதனால் தேவை அதிகரித்து, எங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை," என்று ரஞ்சித் சௌராசியா எங்களிடம் கூறினார். " துக் தோ யே ஹை கி ஜி.ஐ டேக் மில்னே கே பவ்சூத் சர்க்கார் குச் நஹி கர் ரஹி ஹை பான் கிசானோ கே லியே . [இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், புவிசார் குறியீடு இருந்தும் அரசு, வெற்றிலை விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. வெற்றிலை உற்பத்தியை அரசு விவசாயமாக கருதவில்லை], என்கிறார் அவர்.
"பீகார் அரசு வெற்றிலையை தோட்டக்கலையின் கீழ் வைத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு போன்ற வேளாண் திட்டங்களின் பலன்கள் கிடைக்கவில்லை. "மோசமான வானிலை காரணமாக எங்களது பயிர்கள் சேதமடையும் போது இழப்பீடு மட்டுமே கிடைக்கும் என்பது நன்மைக்குரிய விஷயம். ஆனால் இழப்பீட்டுத் தொகை நகைப்புக்குரியது," என்றும், ஒரு ஹெக்டேர் (தோராயமாக 79 கோட்டா) சேதத்திற்கு ரூ.10,000 இழப்பீடு கிடைக்கும் என்றும் ரஞ்சித் சௌராசியா கூறுகிறார். "நீங்கள் அதை ஒரு கதா அடிப்படையில் கணக்கிட்டால், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு கதா இழப்புக்கு சுமார் ரூ.126 கிடைக்கும்." மேலும் விவசாயிகள் மாவட்ட வேளாண் அலுவலகத்திற்கு பல முறை செல்ல வேண்டியிருப்பதால் அவர்கள் இழப்பீடு கோருவதில்லை என்று அவர் கூறுகிறார்.
*****
2023ஆம் ஆண்டில் கடுமையான வெப்பத்தால் பயிர்களை இழந்த பிறகு, சுனிலும், அவரது மனைவியும் இப்போது மற்ற விவசாயிகளின் பரேஜாவில் வேலை செய்கிறார்கள். " கர சலனே கே லியே மஸ்தூரி கர்னா பத்தா ஹை. பான் கே கேத் மே காம் கர்னா ஆசான் ஹை க்யுங்கி ஹம் ஷுரு சே யே கர் ரஹே ஹைன் இஸ்லியே பான் கே கேத் மே ஹி மஸ்தூரி கர்தே ஹைன் [வீட்டை நடத்த, நான் கூலி வேலை செய்ய வேண்டும். நான் பல ஆண்டுகளாக வெற்றிலை பயிரிட்டு வருவதால் பரேஜாவில் வேலை செய்வது எனக்கு எளிதாக இருந்தது]", என்று அவர் கூறுகிறார்.
சுனில் 8-10 மணி நேரம் வேலை செய்து நாளொன்றுக்கு 300 ரூபாயும், அவரது மனைவி கருணா தேவி 200 ரூபாயும் சம்பாதிக்கின்றனர். இந்த வருமானம் ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு வீட்டை நடத்த உதவுகிறது: இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள், ஒன்று, ஐந்து மற்றும் ஏழு வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர்.
2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 பெருந்தொற்று ஊரடங்கு இழப்புகளை ஏற்படுத்தின. "ஊரடங்கின் போது, சந்தை முதல் வாகனங்கள் வரை அனைத்தும் முடங்கின. என் வீட்டில் 500 டோலி (ஒரு கட்டு 200 வெற்றிலை) வெற்றிலை வைத்திருந்தேன். என்னால் அதை விற்க முடியவில்லை, அழுகிப்போனது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
கருணாதேவி
கூறுகிறார், "நான் அடிக்கடி அவரிடம் வெற்றிலை சாகுபடியை கைவிடச் சொல்வேன்."
இருப்பினும் சுனில், "இது எங்கள் முன்னோர்களின் மரபு. அதை எப்படி கைவிட முடியும்?
அப்படியே விட்டாலும் வேறு என்ன செய்வது?" என்றபடி மனைவியின் கவலைகளை உதறித்தள்ளுகிறார்.
விளிம்புநிலை மக்களின் போராட்டங்களை முன்னெடுத்த பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்கவாதியின் நினைவாக அளிக்கப்படும் மானியப்பணியின் ஆதரவில் இக்கட்டுரை உருவானது.
தமிழில்: சவிதா