வருடத்துக்கு ஆறு மாதம் வரை, மழைக்காலம் ஓய்ந்த பிறகு, மகாராஷ்டிராவின் மராத்வடாவிலுள்ள கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வேலை தேடி கிளம்புவார்கள். “என் தந்தை இதை செய்தார், எனவே நான் செய்கிறேன். என் மகனும் இதை செய்வான்,” என்கிறார் அட்காவோனைசேர்ந்த அஷோக் ராதோட். தற்போது அவர் அவுரங்கபாத்தில் வசிக்கிறார். பஞ்சரா சமூகத்தை (பிற்படுத்தப்பட்ட சாதி) சேர்ந்தவர் அவர். இப்பகுதின் பல கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இத்தகைய விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்தவர்கள்தாம்.
சொந்த ஊரில் வேலைகள் இல்லாததால்தான் இந்த புலப்பெயர்வு நேர்கிறது. மொத்த குடும்பங்களும் புலம்பெயர்கையில் குழந்தைகளால் படிப்பை தொடர முடிவதில்லை.
சர்க்கரையும் அரசியலும் மகாராஷ்டிராவில் பின்னி பிணைந்த விஷயங்கள். ஒவ்வொரு சர்க்கரை ஆலை உரிமையாளரும் நேரடியாக அரசியலில் இருக்கிறார்கள். வாழாதாரத்துக்காக அவர்களை சார்ந்திருக்கும் தொழிலாளர்களை தங்களுக்கான வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறார்கள்.
“ஆலைகள் அவர்களுக்குதான் சொந்தம். அரசாங்கத்தையும் அவர்கள்தான் நடத்துகிறார்கள். எல்லாமுமே அவர்களின் கைகளில்தான் இருக்கிறது,” என்கிறார் அஷோக்.
ஆனாலும் தொழிலாளர் நிலையில் முன்னேற்றம் இல்லை. “அவர்கள் ஒரு மருத்துவமனை கட்டலாம் (...) பருவத்தின் முதல் பாதியில் மக்கள் வேலையின்றி இருப்பார்கள். 500 பேருக்கு வேலை கொடுக்கலாம். (...) ஆனால் செய்ய மாட்டார்கள்,” என்கிறார் அவர்.
இப்படம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கரும்பு வெட்ட புலம்பெயர்வது பற்றியும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் பேசுகிறது.
இப்படம்,
குளோபல் சேலஞ்சஸ் ரிசர்ச் ஃபண்ட்டும் எடின்பர்க் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும்
நிதி நல்கையில் உருவாக்கப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்