“எத்தனை தலைமுறைகள் காட்டிலேயே வசித்தன என எனக்கு தெரியாது,” என்கிறார் மஸ்து (பெயரின் முதல் பகுதியை மட்டும்தான் பயன்படுத்துகிறார்). வன குஜ்ஜார் சமூகத்தை சேர்ந்த இந்த மேய்ப்பர், சகரன்பூர் மாவட்டத்தின் பெகாத் கிராமத்திலுள்ள ஷகும்பாரி மலைத்தொடருக்கு அருகே வசிக்கிறார்.
வடக்கு இந்தியாவின் சமவெளிகள் மற்றும் இமயமலைக்கு இடையே பருவகாலங்கள்தோறும் இடம்பெயரும் நாடோடி மேய்ச்சல் சமூகத்தின் ஒரு பகுதிதான் வன குஜ்ஜார் சமூகம். உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச எல்லையில் இருக்கும் ஷிவாலிக் மலைத்தொடரினூடாக உத்தர்காஷி மாவட்டத்தின் புக்யாலுக்கு மஸ்துவும் அவரது குழுவினரும் பயணிக்கிறார்கள். குளிர்காலம் நெருங்கும்போது அவர்கள் ஷிவாலிக் தொடருக்கு திரும்புவார்கள்.
காடுகளில் வசித்தவரையும் காடுகளை வாழ்வாதாரத்துக்காக சார்ந்திருப்பவரையும் வன உரிமை சட்டம் 2006 பாதுகாக்கிறது. காடுகளில் வசிப்பவர்கள் மற்றும் இச்சமூகத்தினர் ஆகியோருக்கு காட்டின் வளங்கள் மீது இருக்கும் உரிமைகளை இச்சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனாலும் வனகுஜ்ஜார் சமூகத்தினரால் தங்களின் உரிமைகளை பெற முடியவில்லை.
காலநிலை நெருக்கடியின் விளைவுகளும் காடுகளின் நிலையை மோசமாக்குகிறது. “மலைகளில் நிலவும் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. சாப்பிட முடியாத செடிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. நிலப்பரப்புகள் குறைந்து வருகின்றன,” என்கிறார் இமயமலையின் பழங்குடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் சமைப்பின் உதவி இயக்குநரான முனேஷ் ஷர்மா.
“காடுகள் இல்லாமல் போய்விட்டால், கால்நடைகளை நாங்கள் எப்படி வளர்ப்பது?” எனக் கேட்கிறார் சஹான் பீபி. அவரும் அவரது மகன் குலாம் நபியும் மஸ்துவின் குழுவுடன் உத்தரக்காண்டுக்கு பயணிக்கின்றனர்.
இப்படம் அக்குழுவின் பயணத்தையும் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.
தமிழில் : ராஜசங்கீதன்